செகாவ் தன் சகோதரருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் ஒரு நல்ல சிறுகதையின் ஆறு இயல்புககளாய் இவற்றைச் சொல்கிறார்:
1. அரசியல், சமூகம், பொருளாதாரம் குறித்து நீண்ட விவரணைகள் இல்லாமை
2. முழுமையான புறவயப்பட்ட பார்வை
3. மனிதர்கள் மற்றும் பொருட்களின் மெய்ம்மைச் சித்தரிப்பு
4. மிகக் கச்சிதமான வடிவம்
5. துணிச்சலும் புதுமையும்: ஸ்டீரியோடைப்புகளைத் தவிர்ப்பது
6. கருணை
செகாவ் கதைகள் குறித்த நீண்ட ஒரு விவாதம் இங்கிருக்கிறது. இதில் மேற்கண்டவிஷயங்கள் குறிப்பிடப்படுகின்றன. தன் கதைகளில் அன்றாட வாழ்வை விவரிப்பதில் தீர்மானமாயிருந்தார் செகாவ் என்று எழுதும் கட்டுரையாளர் கிறிஸ்டினா வார்ட்-நிவென், செகாவ் உண்மையாகவும் புதுமையாகவும் எழுத விரும்பியதால் அவரது புனைவில் உள்ள அன்றாடக் காட்சிகள் வினோதத்தன்மை கொண்டிருக்கின்றன என்கிறார்- “நமக்குப் பழக்கப்பட்டசூழ்நிலத்தில் வினோதத்தன்மையை அனுமதிப்பதால், நாம் வாசகர்களை ஆச்சரியப்படுத்தி, அவர்கள் சற்று தாமதித்து, கவனம் செலுத்தச் செய்யலாம் – அப்போது ஒருவேளை அவர்கள் தமக்குப் பழக்கப்பட்ட ஒரு மானுட உண்மையை புதிய வெளிச்சத்தில் கண்டு கொள்ளக்கூடும்“.
oOo
மாயக்கூத்தனின் ‘பாராமுகம்‘ நானூற்றுக்கும் குறைவான சொற்கள் கொண்ட குறுங்கதை. அதன் மையம், கதையின் மத்தியில் வருகிறது – “போன வாரம், தெருவில் கசிந்த நீரை உறிஞ்ச, அப்பனும் மகனும் மண்ணைப் போட்டுக் கொண்டிருந்தார்கள். மகாதேவன் இவர்களை ஒரு சிரிப்போடு கடந்து சென்றார். கொஞ்சமும் இளப்பம் இல்லாத சிரிப்பு. கருணையும் அன்பும் நிறைந்த புன்னகை. சீனு ஆச்சரியப்பட்டான்; இவன் உதட்டை விரிப்பதற்குள் அவர் போய்விட்டார்.”
சீனிவாசன் கட்டிய வீட்டிலிருந்து கழிவு நீர் வெளியேற வழியில்லை- இவர்கள் இருந்த குறுக்குத் தெரு அரசு வரைபடத்தில் விட்டுப் போயிருந்ததால் இவர்களுக்குச் சாக்கடை இணைப்பு கிடைக்கவில்லை. கழிவு நீர் வெளியேறினால் மகாதேவன்கள் சண்டைக்கு வருகிறார்கள் – “ஊரில் இதுவரை கொசுவே இல்லாதது போலவும், இனி கொசு வந்து தன்னைக் கொத்திக் கொண்டு போய்விடும் என்பது போலவும் கத்தினார்“. அக்கம் பக்கத்தில் எல்லாரும் பகை. மகாதேவன் வீட்டு அம்மா சொன்னது போல் வீட்டுக்குள்ளேயே கழிவு நீர் சுற்றி வந்து ஒரு குழிக்குள் வடியும் வகையில் ஏற்பாடு செய்கிறார்கள், ஆனாலும் அவ்வப்போது குழி நிறைந்து நீர் தெருவில் கசிகிறது.
அப்படியான ஒரு சமயம்தான் மகாதேவன் இவர்களைப் பார்த்து நட்பாக புன்னகைக்கிறார்- நடக்காத ஒன்று நடக்கும்போது பேச்சு வழக்கில் சொல்வது போல், மழை பெய்வது மட்டுமல்லமட்டுமல்ல, உலகமே அழிந்து விடுகிறது. அப்போது பிடித்துக் கொள்ளும் மழை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது, வீட்டுக்குள் வெள்ளம் வந்து விடும் போலிருக்கிறது. சீனிவாசன்,
“மெதுவாக ஒரு படியிறங்கி, கால் கட்டை விரலைத் தண்ணீரில் ஆழ்த்தினான். குளிர்ந்தது.
“காலை எடுத்துவிட்டான். நீர் பட்ட இடம் என்னவோ போல் இருந்தது. குனிந்து பார்த்தான்; கட்டைவிரலைக் காணவில்லை. தண்ணீரில் கரைந்துவிட்டது. வலியே இல்லை.”
இதற்கப்புறம் சீனிவாசன் செய்வது இந்த உலக வாழ்க்கையின் உக்கிரத்தை மிக எளிமையாக, ஒரு சொல் இல்லாமல் உணர்த்துகிறது. கதை கச்சிதமான முடிவுக்கு வருகிறது.
ஆனால் அதற்கப்புறம் ‘யுகசந்தி‘ என்று ஒரு வார்த்தை, அதன் உறுத்தலுடன் நெருடுகிறது. அது இல்லாமல் கதையின் உலகம் முடிவுக்கு வருவதில்லை என்பதால் தவிர்க்க முடியாத வார்த்தைதான். ஆனால், அது நம்மைக் கதையிலிருந்து வெளியே கொண்டு வந்துவிடுகிறது. இது சரியா தவறா என்று எப்படிச் சொல்ல முடியும்?