– மாயக்கூத்தன் –
சீனிவாசனுக்கு இது வித்தியாசமாக இருந்தது. இந்த மோனநிலை. இதற்கு முன் இதே போல் உணர்ந்திருக்கிறான் என்றாலும், இந்த முறை வித்தியாசமாகத்தான் இருந்தது. அவள் தன் சொந்தங்களைப் பார்க்கப் போயிருக்கிறாள். மகனும் ஊரில் இல்லை.
ஒவ்வொரு முறை தனித்திருக்கும்போதும் தான் சுதந்திரமானவன் என்று தோன்றும். உடனே, இதெல்லாம் ரெண்டு மூன்று நாட்கள்தானே என்று பிரக்ஞை வராது போகாது. இந்த முறை அவனுக்கு, இந்த மன அமைதி என்றென்றும் நிலைத்துவிடும் என்று பட்டது.
இந்த வீடு வாங்கி இருபது வருடம் ஆகப்போகிறது. சீனு முதன்முதலாக ஆசைப்பட்ட சொத்து இதுதான். கடைசியாக ஆசைப்பட்டதும்கூட. அவன் பணச் சிக்கலைத்தான் எதிர்பார்த்தான். மனச்சிக்கலில் மாட்டிக் கொண்டான்.
அந்தக் குறுக்குத் தெருவில் மொத்தம் ஐந்து வீடுகள். மூன்று வீடுகள் இருந்த பக்கத்தில் இவனுடையது நடுவீடு. அரசாங்கம் பெரிய சாக்கடை கட்டியபோது, இந்தக் குறுக்குத் தெரு மட்டும் அவர்கள் மேப்பில் இல்லை என்று விட்டுவிட்டார்கள். இருபது வருடங்களுக்கு முன் இவன் வீட்டுக்கு பின் பக்க இடம் காலியாகத்தான் இருந்தது. சீனு வீட்டுச் சாக்கடை அங்கேதான் போய்க் கொண்டிருந்தது. ஐந்தாறு வருடங்களுக்குப் பிறகு, இடம் கைமாறி ஒருவர் வீடு கட்டத் தொடங்கினார்.
சீனு அவரிடம் சாக்கடை பற்றிப் பேசினான். தன் வீட்டுச் சாக்கடையை அவர் வீட்டுச் சாக்கடையோடு இணைத்துவிட்டால், அது அந்தப் பக்கமிருக்கும் முனிசிபாலிட்டி ஓடையோடு போய்விடும் என்றான். பின் வீட்டுக்காரர் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. எல்லோரும் செய்வது போல வீட்டுக்கு முன் விட்டுவிடலாம், அது அதன் விதியோடு எங்கோ போய்க்கொள்ளட்டும் என்று அதற்கான வேலைகளில் இறங்கினான்.
தெருக்காரர்களுக்குத் தெரிய வந்தபோது அவர்களும் அதை விரும்பவில்லை. அவன் சாக்கடையை வேறெங்குதான் விடுவான் என்று யாருக்குமே அக்கறையில்லை. அடுத்தவருக்காக அடுத்தவர் ஏன் அக்கறைப்பட வேண்டும்? எதிர்வீட்டு மகாதேவன் பெரியதாக சண்டை போட்டார். ஊரில் இதுவரை கொசுவே இல்லாதது போலவும், இனி கொசு வந்து தன்னைக் கொத்திக் கொண்டு போய்விடும் என்பது போலவும் கத்தினார். ‘வேணும்னா காம்பவுண்டுக்குள்ளேயே சுத்திச் சுத்தி விட்டுக்க வேண்டியதுதானே’ என்றார் அவர் வீட்டு அம்மாள்.
அவனும் கடைசியில் அந்த முடிவுக்குத்தான் வர வேண்டியிருந்தது. வாசலுக்கு வலப்பக்கத்தில் காம்பவுண்டிற்குள், நான்கடி ஆழக் குழி வெட்டி, ஜல்லிக் கற்களைக் கொண்டு நிரப்பினான். கழிவுநீர் எல்லாம் அந்தக் குழிக்குள் போனது. அப்போதைக்கு நிம்மதி.
ஆனால் ஒரு மாதத்தில் நீர் வெளியில் கசிய ஆரம்பித்தது. மகாதேவன் அவர் வீட்டு வாசலில் நின்று கொண்டு யாரையோ திட்டுவது போல இவனைத் திட்டிக் கொண்டிருந்தார். வெளியே தலைகாட்டாமல், கதவுக்குப் பக்கத்தில் நின்று கேட்டுக் கொண்டிருந்தான். சூரியன் உச்சிக்கு வந்தபோது, தெருவில் வழிந்த தண்ணீர் வற்றியது.
அவர்கள் அந்தத் தெருவில் யாரிடமும் பேசுவதில்லை. மகாதேவன் வீட்டுக்கு நாளைக்கு பத்து தரம் போய்க்கொண்டிருந்த பிள்ளையும் போவதை நிறுத்திவிட்டான்.
போனவாரம், தெருவில் கசிந்த நீரை உறிஞ்ச, அப்பனும் மகனும் மண்ணைப் போட்டுக் கொண்டிருந்தார்கள். மகாதேவன் இவர்களை ஒரு சிரிப்போடு கடந்து சென்றார். கொஞ்சமும் இளப்பம் இல்லாத சிரிப்பு. கருணையும் அன்பும் நிறைந்த புன்னகை. சீனு ஆச்சரியப்பட்டான்; இவன் உதட்டை விரிப்பதற்குள் அவர் போய்விட்டார்.
கடந்த மூன்று நாட்களாக மழை பெய்து கொண்டிருக்கிறது. வேகம் குறையவே இல்லை. வெள்ளம் வந்துவிட்டது. இரண்டு படிகள் முங்கிவிட்டன. இன்னும் ஒன்றுதான் பாக்கி. மழைக்கு போக்கிடம் கொண்ட சாக்கடை, போக்கிடம் இல்லாத சாக்கடை என்றெல்லாம் வித்தியாசம் தெரியவில்லை. எல்லாவற்றையும் தெருவிற்கு கொண்டு வந்துவிட்டது.
பதினைந்து நிமிடம், வாசலில் நின்று மழையையே பார்த்துக் கொண்டிருந்தான். சாயங்காலம் வீட்டிற்குள் தண்ணீர் வந்துவிடும் என்று தோன்றியது.
வீட்டிற்குள் சென்று, கீழே இருக்கும் சாமான்களில் பத்திரப்படுத்த வேண்டியதை எடுத்து வைத்தான்.
மீண்டும் வாசலில் வந்து நின்று கொண்டான். மகாதேவன், அவர் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். மழை நீர் மேலே தெறித்தது. என்னவொரு குளிர்ச்சி!
மெதுவாக ஒரு படியிறங்கி, கால் கட்டை விரலைத் தண்ணீர்ல் ஆழ்த்தினான். குளிர்ந்தது.
காலை எடுத்துவிட்டான். நீர் பட்ட இடம் என்னவோ போல் இருந்தது. குனிந்து பார்த்தான்; கட்டைவிரலைக் காணவில்லை. தண்ணீரில் கரைந்துவிட்டது. வலியே இல்லை.
ஏதோ நினைத்தவன், தன் முழு உடம்பையும் நீரில் இறக்கினான்.
கொஞ்சம் கொஞ்சமாக நீரில் கரைந்தான்.
யுகசந்தி.
புகைப்பட உதவி : Musée des Beaux Arts (poem), விக்கிபீடியா
One comment