தமிழ் கவிதை வடிவம்

றியாஸ் குரானா

பதாகை – தமிழில் நீண்ட கவிதைகளைப் பார்ப்பது அரிதாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக கதை சொல்லும் கவிதைகளைப் பார்க்க முடிவதில்லை. ஒரு காலத்தில் எல்லா கதைகளும் செய்யுள் வடிவில்தான் வந்திருக்கின்றன, இப்போது அப்படி ஒரு கவிதை எழுதப்பட வாய்ப்பே இல்லை போலிருக்கிறது. ஆங்கிலத்தில்கூட விக்ரம் சேத் மரபார்ந்த sonnet வடிவ கவிதைகளைக் கொண்டு கதை சொன்னார், சில ஆண்டுகளுக்கு முன்பு. இனி கதைகள் கவிதை வடிவில் சொல்லப்படும் சாத்தியமிருக்கிறதா? தற்போதைய தமிழ் அழகியலில் இதற்கும் இடமுண்டா?

றியாஸ் குரானா –ஒற்றைக் கேள்விபோல தோற்றமளிக்கும் பல கேள்விகளின் கூட்டிணைவான கேள்வியே இது. ஆயினும் இந்தக் கேள்வி கடந்து வந்த தமிழின் குறித்த ஒரு இலக்கிய மனநிலையை கவனப்படுத்துகிறது. வரலாற்றின் ஏதோவொரு கட்டத்தில் தமிழ் இலக்கியம் தன்னை இயக்கத்தில் வைத்திருந்த கவிதை மனம் என்ற ஒரு முறைமையை பற்றி, அதைக் கடந்து வெகுதாரம் கடந்துவந்த நிலையில் சிந்தித்துப்பார்க்க தூண்டுகிறது. இப்படியான தூண்டுதல்களைத் தரும் கேள்விகளை உருவாக்கி அதற்கு பதில் சொல்ல முயற்சிக்காது போனால், நமது கவிதையை எப்படி வழிநடாத்திச் செல்லுவது என்ற சிக்கலில் விழுந்துவிட வாய்ப்புண்டு. கவிதை குறித்து விவாதிக்க வேண்டிய தேவையை இந்தக் கேள்வி உருவாக்கிவிடுகிறது. இந்தக் கேள்வி தனிப்பட்ட ஒருவரின் தற்செயலான ஒரு கேள்வி என்று எடுத்துக்கொள்ளும் நிலையைக் கடந்திருக்கிறது. அனேகமாக இன்றுள்ள அனைவரும் பெருகியிருக்கும் நமது கவிதைகளிடத்திலிருந்து தப்பிக்கவே விருமபுகின்றனர். அவ்வளவு சலிப்பை நமது இன்றைய நவீன கவிதைகள் ஏற்படுத்தியிருக்கின்றன.

ஆம், நவீன கவிதை என்ற ஒரு வகையினத்தைப் பற்றி தமிழின் பொதுமனம் பேசத்தொடங்கியே 100 ஆண்டுகளைக் கடந்திருக்கின்றன. இந்த நூறாண்டுகளில் கவிதை எனப் பயிலப்பட்டவைகளின் வகைமைகள் மிக குறைவே. கவிதைக் கற்பனை மற்றும் எடுத்துரைப்பு முறைமைகள் போன்றவற்றில் அதிக வகைமைகள் இல்லை. இதை இப்படி விபரிக்கலாம். தமிழ் கவிதைள் அனேகமான வற்றின் கீழ் இருக்கும் கவிஞர்களின் பெயரை அழித்துவிட்டால் அது யாருடைய கவிதை என கண்டுபிடிப்பதில் சிக்கலை உருவாக்கிவிடும். அது மட்டுமல்ல, ஒரு கவிதையின் கீழ் யாருடைய பெயரைப் போட்டாலும் அவருடைய கவிதையாக மாறிவிடும். இதுதான் கவிதையின் நிலைப்பாடு. இன்னாருடைய கவிதை இது என அடையாளப் படுத்துமளவிற்கு தனித்துவங்கள் நிறைந்த்தாக கவிதை வகைமைகள் அதிகம் இல்லை என்பதே இதன் சுருக்கமாகும். இந்த நிலையில், ஒரேவகையான கவிதைக் கற்பனைகளும், ஒரேவகையான எடுத்துரைப்புகளும், ஒரேவகையான கவிதைச் செயல்முறை தொழில் நுட்பங்களும் பெருகி சலிப்பைத் தருகிண்ற தருணங்களில் கவிதைக்கான மாற்று குறித்து சிந்திப்பது நிகழும் ஒன்றுதான். அப்படி ஒரு நிலையில் கேட்கப்படும் ஒரு கேள்வி இது என்று நினைக்கிறென். அல்லது, அப்படி ஒரு எடுகோளை கருத்திற்கொண்டே இந்தக் கேள்வியை அணுக முயற்சிக்கிறேன்.

தமிழ் கவிதையின் நீண்ட மரபில் வெளிப்பட்டிருக்கும் பண்பு ”ஏக்கம்” குறித்த அல்லது அதற்கு சாய்வுடைய ஒரு பொதுமனமே உருவாகி வந்திருக்கிறது. நவீன கவிதை என பயிலப்படத் தொடங்கி இன்றுவரை இந்த ஏக்கத்தை பெருக்கியிருக்கின்றன. மிக அதிகளவில் ஒப்பாரி வைத்தும், அந்த ஒப்பாரிக்கான இரக்கத்தை கோரியதும் தமிழின் நவீன கவிதைதான். இதுதவிர வேறு பிரதான செயல்கள் அதற்கிருக்கவில்லை.

தமிழில் நீண்ட கவிதைகளை பார்ப்பது அரிதாக இருப்பதாக சொல்கிறீர்கள். நீண்ட கவிதைகள் வெளிவந்திருக்கின்றன. நுண்காவியம் என்று பல நீள் கவிதைத் தொகுப்புகள் ஈழத்தில் வெளிவந்திருக்கின்றன. இது மிக அண்மைக்கால வரவுகளாகவும் சொல்ல முடியும். ஆனால், ஈழத்து இலக்கிய முயற்சிகள் அனேகமாக தமிழ் நாட்டில் கவனத்திற்குட்படுவதில்லை. வாசித்திருக்கவும் வாய்ப்புகள் குறைவு. உதாரணத்திற்கு சில தொகுப்பகள். நிலாந்தனின் ஓ யாழ்பாணமே, ஓ யாழ்பாணமே, மண்பட்டினங்கள், வன்னி மாண்மியம். றஸ்மியின் ஆயிரம் கிராமங்களைத் தின்ற ஆடு. மஜீதின் சுள்ளிக்காடும் செம்பொடையனும், புலி பாய்ந்தபோது இரவுகள் கோடையில் அலைந்தன. மு.பொன்னம்பலத்தின் பொறிக்குள் அகப்பட்ட தேசம். றியாஸ் குரானாவின் ஆதி நதியிலிருந்து கிழக்குப் பக்கம் பிரிகிறது ஒரு கிளை, வண்ணத்துப் பூச்சியாகி பறந்த கதைக்குரிய காலம். இப்படி நுண்காவியங்களாக அதுவும் பின்நவீன கவிதையாக்கங்களையும் வாசிப்புகளையுத் தனது உள் இயக்கத்தில் கொண்டிருக்கும் பல தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன. தமிழ் இலக்கியத்தை தமிழ் நாட்டை மய்யப்படுத்தி சிந்திக்கும்போது மாத்திரமே நீளமான கவிதைகள் அரிதாக கிடைப்பதாக ஒரு தோற்றப்பாடு வந்துவிடுகிறது. நிற்க,

கிட்டத்தட்ட ஒருநூறு ஆண்டுகளுக்கு முன்பு ”இலக்கியம்” என்றால் கவிதை மட்டுமாகவே இருந்தது. ஜோதிடம், கதை, இலக்கணம், மருத்துவம் இப்படி எதை மொழியில் வெளிப்படுத்துவதெனினும் அதற்கு கவிதையே பயன்பட்டது. கவிதைக்கு மாற்றான ஒரு மொழி வடிவம் அப்போது இல்லை. அதனால்தான், கதைகளைக்கூட கவிதையில் சொல்ல வேண்டி ஏற்பட்டது. கதைகளை கவிதையில் சொல்வது என்பது ஒரு கட்டாய கவிதை விதியுமல்ல என்பதை நாமறிவோம். கதைகளை வெளிப்படுத்துவதற்குரிய கவிதை தவிர்ந்த இலக்கிய வடிவங்கள் இன்று உருவாக்கப்பட்டிருக்கின்றன. அப்படியான ஒரு நிலையில் கதையை கவிதையில் சொல்ல வேண்டிய முக்கியத்துவம் ஏதும் இன்றிருக்கிறதா? என்ற ஒரு மறைமுகக் கேள்வியும் இங்கு வந்துவிடுகிறது. சரி இவைகளை எல்லாம் விவாதிக்காமல் நிறுத்திவிட்டு, இந்தக் கேள்வியை அதன் போக்கிலே ஏற்றுக்கொண்டு சிந்தித்துப்பார்க்கலாம். அது இப்படி இருக்கும்.

தமிழ் கவிதை பெரியளவான மூன்று மாற்றங்களுக்குள்ளாகி இருக்கிறது. அந்த மாற்றம், கவிதையின் எடுத்துரைப்பு பண்புகளில் நிகழ்ந்ததாகும். 1. கதையை கவிதையாக சொன்னது. 2. வசனங்களை முன்தள்ளி கதையை மறைபொருளாக்குவதாகும் (வரிகளைச் சொல்லாது இங்கு கவிதைகளை அடைய முடியாது. நவீன கவிதை எனபதே இதுதான்) 3. கவிதையை கதையாகச் சொல்லுவதாகும் (இது நவீனம் கடந்த தமிழ் கவிதையின் நிலவரம்).

கதையை கவிதையாக சொல்லுதல் என்பதை நன்கு அறிவோம். நமது காப்பியங்களே இதற்கு பெரும் சாட்சி. ( நவீன கவிதை காலாவதியாகிவிட்டது. என்ற எனது கட்டுரையை இங்கு வாசிக்கலாம்) இந்த வகை கவிதை எடுத்துரைப்பிற்கு கதை என்ற ஒன்று மிக அவசியமானதாகும். கதை இன்றி இது கவிதையாக தன்னை நிகழ்த்திக்காட்ட முடியாது. அதாவது, கதை என்ற ஒன்று இல்லாது கவிதை என்ற ஒன்று இங்கு இல்லை. கவிதை தன்னை நிலை நிறுத்துவதெனில் அது கதையில் தங்கி இருக்க வேண்டும் என்பதும் இதில் மேலெழும் ஒரு விசயமாகும்.

அடுத்து வசனங்களை நம்பி கவிதை அமைந்தது. காட்சியோ, கதையோ, சம்பவங்களோ எதுவெனினும், இறுக்கமான, கவித்துவமான வார்த்தைகளால் சுருக்கமாக வெளிப்படுத்துதல் என்றானது. அதாவது, இந்த வசனங்களே முதன்மையான ஒன்றாக வெளியில் துருத்திக்கொண்டு நின்றன. அதன் மறைவில் கதைகளோ , சம்பவங்களோ இருக்க வேண்டிய தேவை இருந்தது. இதன் தாக்கம் மிகப் பிரபலமான ஒன்று. இன்றும் சொல்லுவார்களே, ” இந்த வரிகள் அற்புதமானவை” என்றோ, ”இந்தக் கவிதையில் சில வரிகளில் கவித்துவம் நிரம்பியிருக்கின்றன” என்றோ. ஆம், இதுதான் கவிதை என்ற ஒரு முழுமையான பிரதியின் சில வரிகளை மட்டும் உருவி அந்தக் கவிதையைப் பற்றி விமர்சிப்பதை ஊக்குவித்தது.

கவிதை என்பது பல சொற்களையும், பல வாக்கியங்களையும் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் ஒரு பிரதி என எடுத்துக்கொண்டால், அதில் சில வாக்கியங்களை மாத்திரமே உருவி எடுத்து அந்தக் கவிதையை பேசும் அபத்தம் இங்கிருந்துதான் ஆரம்பித்தது. இது தமிழின் ஒரு நிலைப்பாடு என்று நான் சொல்லவில்லை. நவீன கவிதையின் நிலைப்பாடாக வளர்ந்துவிட்ட ஒன்றே. இந்த வகை கவிதைகளில், கதைகள் முக்கியமல்ல. அது குறித்த பேச்சுக்கள் மிகக் குறைவு. ஆனால், குறித்த கதையை இப்படி வெளிப்படுத்தியிருக்கிறது இந்த வசனங்கள் என்றுதான் கூற படுகிறார்கள். அதாவது, கதை பிரச்சினையில்லை. அக்கதையின் சில தருணங்கள் கவர்ச்சிகரமான வசனங்களால் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இப்படிச் சொல்லுவதற்கு உதவுவதாகவே நவீன கவிதைகள் இருந்தன.

அடுத்த மாற்றம். ஆம், அது இன்றைய மாற்றம். அதிகம் விவாதிக்கப்படாத மாற்றமும் கூட. கவிதையை கதையாகச் சொல்லுதல் என்பதாகும். இங்கு கவிதை முதன்மைப் படுத்தப்பட்டு, கதை என்பது, கவிதையை சொல்லவும் நிகழ்த்தவுமான ஒரு தளமாக மாற்றப்பட்டிருக்கிறது. முன்பு கதையில்லாமல் கவிதை இல்லை என்ற காப்பியகாலத்தை நினைவுபடுத்திப் பாருங்கள். இன்று கதை என்பது, கவிதையை வெளிப்படுத்தவும், நிகழ்த்திக்காட்டவுமான உத்திகளில் ஒன்றாக மாற்றமடைந்திருக்கிறது. அதுபோல, வசனத்தின் முக்கியத்துவமும் மறைந்து. கவிதைக் கதையாடல் என்ற ஒரு புலம் விரிந்திருக்கிறது. அதுமட்டுமல்ல, சம்பவங்கள் என்று நவீன கவிதை பாவித்த அம்சங்களை, கவிதைச் சம்பவங்களாக தெளிவாக மாற்றியிருக்கின்றன. நவீன கவிதையில் வரும் சம்பவங்கள் ஏதோவொரு உண்மையாகவும், அல்லது வரலாற்று யதார்த்தமாக பார்க்கப்பட்ட நிலையிலிருந்து ”சம்பவங்கள்” எனப்படுவனவற்றை ” கவிதைச் சம்பவங்கள்” என அவைகளின் பண்பை மாற்றியிருக்கின்றன. முழுக்க முழுக்க பிரதியின் புனைவு விதிகளுக்கும், புனைவு எல்லைகளுக்குமாக இடம்மாற்றியிருக்கிறது. ஆமாம், கவிதையை கதையாக சொல்லும் கதையாடல்தான், தமிழின் நவீனம் கடந்த கவிதைகளின் நிலவரம். அது மட்டுமல்ல என்பது வேறு விசயம். அது இங்கு தேவையில்லை என்பதால் பேசவில்லை.

கவிதையை கதையாக சொல்லுவதற்கு சிறு உதாரணம் ஒன்றை இங்கு தரலாம் என நினைக்கிறேன். ”அவனுடைய கதைக்குள் நுழைந்தேன். பெரிய மலை ஒன்று இருந்த்து. அதற்கு அருகில் ஒரு மரம். அந்த மரத்தில் மட்டும் படும்படி மழை பொழிகிறது. சிறிது நேரத்தில் மரம் கரைந்து இருந்த தடயமின்றிப்போய்விட்டது. கதைப்படி மரத்தில் அமரவென்று பறந்து வந்த பறவைகள் மரத்தை காணாமல் தவிக்கின்றன. நான் மரமாகி கிளை பரப்பினேன். பறவைகள் அமரந்து சிறகுலர்த்தி பாடின. என்னைச் சந்திக்க கதைக்குள் வந்த எனது காதலி என்னைக் காணாது கதை எங்கும் அலைகிறாள். பொய்யென்றால் அவனுடைய கதையைப் படித்துப் பாருங்கள்” இப்படி அது.

கடைசியாக ஒன்று, இன்று என்றும் அன்று என்றும் தமிழின் அழகியலை பிரித்துப் பார்க்க நினைத்தால் பெரும் ஏமாற்றம்தான் மிஞ்சும். தமிழ் அழகியல் என்று சொல்லுவதெல்லாம் சும்மா நமது மனதை ஆசுவாசப்படுத்தும் வார்த்தைகளே அன்றி வேறில்லை. தனியாக தமிழின் அழகியல் குறித்து இங்கு யாரும் பேசியிருக்கவுமில்லை. நவீன கவிதைகளின் எல்லையில்லாப் பெருக்கம் தந்த அயர்ச்சி, கவிதையில் ஏதும் புதிதாக சிந்திக்க முடியாதா என்ற எல்லைவரை நம்மை அலைக்கழிக்கிறது. அதற்காக மிகவும் பழைய ஒரு கவிதை எடுத்துரைப்பு முறையை தூசிதட்டி புதிப்பிக்க வேண்டிய அவசியமில்லை. மிக கவனமாகவும், ஆழமாகவும் கவிதைகளைப் பயின்றால், இன்றைய தமிழ்க்கவிதை பெரும் மாற்றத்தை நிகழ்த்தியிருக்கிறது என்பதை அவதானிக்க முடியும். கவிதையை கதையாகச் சொல்லும் ஒரு புதிய எடுத்துரைப்பு பண்பை தனது இயங்கு முறையாக முன்வைத்திருக்கிறது. இந்த முறைமையை விவாதிப்பதும், உரையாடுவதும் மிக அவசியமான ஒன்று. ஆயினும், நவீன கவிதை அதிகம் பொருட்படுத்திய பல அம்சங்களை புதுப்பிக்காமலும், பிரக்ஞை இன்றியும் இந்தக் கவிதை எடுத்துரைப்பு முறைமை கையேற்கப்பட்டிருக்கிறது.

உதிரிப் பாகங்கள் இருக்கின்றன. அவைகளை இணைத்து ஒன்றை உருவாக்கும் முறையும் கைவந்திருக்கிறது. அப்படி ஒன்றை உருவாக்கிவிட்டு, அதை புதிதாக சோடிக்கவும் முடிகிறது. இதுதான் இன்றைய தொழில் நுட்ப அரிச்சுவடி. இதையே கவிதை உருவாக்கத்திற்கும் பயன்படுத்துகிறார்கள். அதுதான் துயரம். நான் சொல்லும் தொழில்நுட்பங்கள் இதிலிருந்து வேறு. உதிரிப்பாகங்கள் மாத்திரமல்ல, அதன் வடிவமைப்பு, அதன் இயங்கு பண்பு, அதன் தொழில் பாடு, வடிவமைப்பு என அனைத்தையும் புதிதாக கண்டுபிடித்து ஒரு கவிதையை உருவாக்குங்கள் என்பதே எனது வேண்டுகோள்.

இங்கு பத்துக் கவிதையைப் படித்துவிட்டு பதினோராவது கவிதையை தான் உருவாக்குவதே பரிதாபமான நிலை. கண்கண்டால் கை செய்யும் என்பது நமது வழக்கு. புதிதாக ஒன்றை கண்டுபிடிப்பதற்கான உழைப்பும் கற்பனை பரீட்சயமும் இங்கு இல்லை. அதை பல கவிஞர்கள் வெட்கமாக கருதுவதுமில்லை என்பதே பரிதாபத்திற்குரிய ஒன்று.

One comment

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.