ஜன்னலைத் திறந்தவுடன் சூரிய ஒளி
அவர் மேல் படர்கிறது
அவர் மெதுவாக முனகுகிறார்
ஒளியின் பாரத்தை தாங்கமுடியாத அளவு
புற்றுநோய் அவர் உடலைத் தின்றிருக்கிறது
முதலில் அவர் வலியில் முகம் சுளிக்கும்பொழுது
எங்களுக்கும் வலித்தது, அவர் முனகியபொழுது
எங்கள் கண்ணோரத்தில் ஈரம் கோர்த்தது
வலி தொடரத் தொடர எங்கள் காதுகளையும் கண்களையும்
எங்களை அறியாமல் எங்கள் அறிவு பொத்திவிட்டது
இப்பொழுது சிறு முனகல்கள் எங்களுக்கு கேட்பதில்லை
முக கோணல்களை எங்கள் கண்கள் பார்ப்பதில்லை
படுக்கையில் ஒருவர் இல்லை என்று நினைத்துக்கொண்டே
அறை முழுவதும் சுற்றுகிறோம்
மறுத்தும் மறந்தும் தினம் வாழ்கையை ஓட்டுகிறோம்
ஆனால் அந்தக் கட்டிலை சுற்றிதான் எங்கள் உலகம்
மீறிச் செல்ல நினைத்தாலும் கட்டில் எங்களை விடுவதில்லை
வேறெங்கோ பார்த்தபடி கட்டில் அருகில் நிற்கிறோம்
காலை வெளிச்சத்தில் வற்றிவிட்ட தேகத்தின் வலியை
தெளிவாக உணர்கிறேன்
மரணம்தான் ஒரே தீர்வு என்று நான் நினைக்கையில்,
வலி தோய்ந்த குரலில், “ஏன் காபி இன்னும் குடுக்கல?”
என்று அவர் கேட்கிறார்
ஒளிப்பட உதவி – Susana Weber