சொற்களாலான மண் – பாலஸ்தீன எழுத்தாளர்கள், ஒரு அறிமுகம்

A Land Made of Words என்ற தலைப்பில் Asymptote தளத்தில் Fakhri Saleh எழுதியுள்ள ஒரு கட்டுரை 

(மஹ்மூத் தார்விஷ் (Mahmoud Darwish) நினைவில்)

பாலஸ்தீன எழுத்தாளர்கள் பலரின் எழுத்துலகின் மையத்தில் பாலஸ்தீனப் பேரழிவு உள்ளது. ஏதிலிகளாக்கப்பட்ட, குடிபெயர்ந்த, ஊனமாக்கப்பட்ட மக்களின் வாழ்வில் விழும் துயரப் பெருநிழலை பல்வகைப்பட்ட இலக்கிய வடிவங்களையும் புனைவு வகைமைகளையும் கையாண்டு உலகின்முன் சித்தரிக்க இவர்கள் முயற்சி செய்திருக்கின்றனர். குறிப்பாக, கவிஞர் (மஹ்மூத் தார்விஷ் (Mahmoud Darwish) (1941-2008), நாவலாசிரியர்கள் கஸ்ஸான் கனாபானி (Ghassan Kanafani) (1936-1972),  ஜப்ரா இப்ராஹிம் ஜப்ரா (Jabra Ibrahim Jabra) (1920-1994), மற்றும் எமில் ஹபீபி (Emile Habiby) (1921-1996), இவர்களில் தனித்து நிற்கின்றனர். இவர்களது தனித்துவம் கொண்ட, புதுவித இலக்கிய நடை தம் மண்ணை இழந்த மக்களின் துயர்மிகுர்ந்த பாலஸ்தீன நக்பாவை (பேரழவு) எழுத்தில் கைப்பற்றுகிறது.,

பாலஸ்தீனத்துக்கு என்று செறிவான இலக்கிய மரபு உண்டு- மிக நுட்பமான இலக்கண வரம்புக்கு உட்படுத்தப்பட்ட கவிதை வடிவங்கள், நாடகங்கள், நாவல்கள் இங்குண்டு. ஆனால் 1948ஆம் ஆண்டு இஸ்ரேல் தோற்றம் பெற்றபோது அதன் இலக்கிய வாழ்வு திடீரென்று துண்டிக்கப்பட்டது. மிகச் சில அச்சுநூல்களும் கைப்பிரதிகளும் மட்டுமே காப்பாற்றப்பட்டன. அதன்பின், பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டிலும் நிலவிய செறிவான இலக்கியம் குறித்த சித்திரத்தை மீளுருவாக்கம் செய்வது வரலாற்று ஆய்வாளர்களின் பணியாயிற்று. இதன் காரணமாகவே, 1948ஆம் ஆண்டுக்குப்பின் படைக்கப்பட்ட பாலஸ்தீன இலக்கியம் புலம்பெயர் இலக்கியமானது. பாலஸ்தீனர்கள் தம் தாய்மண்ணை விட்டு வன்முறையால் விரட்டப்பட்டவர்கள். முதலில் 1948ல் இஸ்ரேலியர்கள் பல பத்தாயிரம் பாலஸ்தீனர்களைப் படுகொலை செய்து நூறாயிரத்துக்கும் மேற்பட்டவர்களை வெளியேற்றியபோது இது நிகழ்ந்தது. இரண்டாம் முறை 1947ஆம் ஆண்டு வெஸ்ட் பாங்க் மற்றும் காஸா ஸ்ட்ரிப் மீது இஸ்ரேல் படையெடுத்தபோது இது நிகழ்ந்தது. அங்கு அதுவரை பெரும்பாலும் அகதி முகாம்களில் வாழ்ந்து கொண்டிருந்த பாலஸ்தீனர்கள் தம் தாய் மண்ணை விட்டு மீண்டுமொரு முறை அகதிகளாய் வெளியற வேண்டியதாயிற்று.  இன்றும் பாலஸ்தீனிய வெளியேற்றம் தொடர்கிறது. நாடு கடத்தல் மட்டுமல்ல, காஸா ஸ்ட்ரிப் மற்றும் வெஸ்ட் பாங்க்கில் சீரழிந்து வரும் சமூக, அரசியல், பொருளாதார நிலையின் காரணமாக சுயவிருப்பத்தின் பேரிலும் மக்கள் வெளியேறுகின்றனர். இஸ்ரேலில் வாழும் பாலஸ்தீனியர்களும் வெளியேறியபடி உள்ளனர்.

பாலஸ்தீன இலக்கியத்தின் மகத்தான ஆளுமைகள் – (மஹ்மூத் தார்விஷ், (Mahmoud Darwish), எமில் ஹபிபி (Emile Habiby), பட்வா டூகான் (Fadwa Touqan), சாஹர் கலிபே (Sahar Khalifeh)- பாலஸ்தீனத்தின் உள்ளிருந்து எழுதினார்கள் என்றாலும், அதன் மக்களின் படைப்புகளில் பெரும்பாலானவை புலம்பெயர்ந்த எழுத்தாளர்களால் எழுதப்பட்டவை- அதாவது, அரேபியா, ஐரோப்பா, அல்லது அமெரிக்காவில் இருந்தவர்களின் எழுத்து. 1948ஆம் ஆண்டுக்கு முன்னர் பாலஸ்தீனத்தில் பிறந்தவர்கள் மங்கலான தங்கள் நினைவுகளைக் கொண்டு தம் தாய்\மண்ணைச் சித்தரிக்க முயற்சி செய்தனர். தொலைவிலிருந்த தாயகத்தைத் தம் தந்தையர், அன்னையர், தாத்தாக்கள், பாட்டிகள் சொன்ன உயிர்ப்பு மிகுந்த கதைகளைக் கொண்டு புலம்பெயர்ந்த மண்ணில் பிறந்தவர்கள் அறிந்து கொண்டனர். அவர்களது பாலஸ்தீனம் இலக்கியத்தில் ஒரு புதிய இருப்பை அடைந்திருக்கிறது- இருபதாம் நூற்றாண்டின் பின்பாதியில் வெவ்வேறு தலைமுறையினரால் எழுதப்பட்ட கவிதைகள், சிறுகதைகள், நாவல்களில் பாலஸ்தீனம் தன்னை நிறுவிக் கொண்டிருக்கிறது. அண்மையில் ஏற்பட்ட பிளவுகள் மற்றும் தடைகளைக் கணக்கில் கொண்டால் பாலஸ்தீன போராட்டத்தின் நம்பிக்கையைத் தக்க வைத்துக் கொள்வதில் முதன்மை முக்கியத்துவம் கொண்டதாக இலக்கியம் இருந்து வருவதை மறுக்க முடியாது- பாலஸ்தீனத்தை அதன் தொலைதூரத்தில் இருந்து மீட்டு, கூட்டுச் சிந்தனையில் அதற்குரிய இடத்தை இலக்கியமே காப்பாற்றிக் கொடுத்திருக்கிறது.

அந்த வகையில், பாலஸ்தீன இலக்கியம் புலம்பெயர் இலக்கியம், விரோத உலகில் அடையாளத்துக்கான தேடல், சிதறுண்ட வாழ்க்கை அனுபவங்களாலும் இடம் மாறிய நம்பிக்கைகளாலும் படைக்கப்பட்ட எழுத்து, மானுட துயரத்தின் ஆவணம். பாலஸ்தீனியனின் ஆகச்சிறந்த அடையாளம் அந்நிய மண்ணில் வாழ்பவன்- புலம்பெயர்ந்த ஜீவன். ஆப்டர் த லாஸ்ட் ஸ்கை (After the Last Sky) என்ற நூலில் எட்வார்ட் சைத் (Edward Said) (1935-2003), பாலஸ்தீனத்தின் தனிமனிதர்கள் மற்றும் தொலைவில் சிதறுண்டு வாழும் ஏதிலிச் சமூகங்களின் ஆன்மீக வாழ்வுச் சித்திரங்களை அளிக்கிறார். அவர்களின் ஆழ்ந்த அன்னிய உணர்வுக்கும் பாதுகாப்பின்மைக்கும் குரல் கொடுக்கிறார். “பூகோளத்தின் உறுதிப்பாடும் மண்ணின் தொடர்ச்சியும்- என் வாழ்விலிருந்தும் அத்தனை பாலஸ்தீனர்களின் வாழ்விலிருந்தும் முழுமையாய் தொலைந்து போய்விட்டன. நாங்கள் எல்லைகளில் தடுத்து நிறுத்தப்படாதபோது, அல்லது புதிய முகாம்களுக்கு மந்தை மந்தைகளாகக் கொண்டு செல்லப்படாதபோது, அல்லது திரும்பி வரவும் குடியிருப்பு பெறவும் அனுமதி மறுக்கப்படும்போது, அல்லது ஓரிடத்தில் இருந்து வேறிடம் செல்லத் தடை விதிக்கப்படும்போது, எங்கள் மண்ணில் இன்னும் சிறிது பறிக்கப்படும்போது, வரைமுறையின்றி எங்கள் வாழ்வில் குறுக்கீடு ஏற்படும்போது, எம் குரல்கள் ஒருவரையொருவர் சென்று சேராமல் தடுக்கப்படும்போது, வாழ்வதற்கு கடினமான சூழமைவில் வாழும் சிறு அச்சத்தீவுகளாக எங்கள் அடையாளம் குறுகிப் போகிறது”. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, பாலஸ்தீன இலக்கியம் இந்த உணர்வையே வெளிப்படுத்துகிறது. இழப்பின் தீவிர வலிக்கு அது குரல் கொடுக்கிறது, அமைதியின்மையும் பாதுகாப்பின்மையும் உணர்வு வெளிப்பாடு காணும் வகையில் அது பேசுகிறது. ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் “உள்ளூர்-அகதிகளாய்” வாழும் பாலஸ்தீனர்களால் எழுதப்பட்டதானாலும் சரி, புலம்பெயர்ந்த மண்ணின் அகதி முகாம்கள் அல்லது கெட்டோக்களில் வாழ்பவர்களால் எழுதப்பட்டாலும் சரி, அவற்றின் உணர்வுகள் இவையே.

புலம்பெயர்தல் ஒரு பிணையாகவும் அடையாள அழிப்பாகவும் இருப்பதை பாலஸ்தீன இலக்கியத்தில் மீண்டும் மீண்டும் காண முடிகிறது. “பாலஸ்தீனக் காதலி” என்ற கவிதையில் மஹ்மூத் தார்விஷ் புலம்பெயர் உணர்வை மறைமுகமாக வெளிப்படுத்துகிறார். ஒரு காதல் கதையின் விவரணையைக் கொண்டு புலம்பெயர்தலின் படிமத்தை அவர் உருவாக்குகிறார். அவர் தன் காதலியைப் பற்றி பேசுகிறாரா அல்லது அவரது அவல உணர்வுகளையும் ஆழமாய் உணரப்படும் பேரச்சத்தையும் பேசுகிறாரா? 1972ஆம் ஆண்டு அரேபிய உலகை விட்டுப் பிரியும்முன் பாலஸ்தீனத்தில் இருந்த காலத்தில் இந்தக் கவிதை எழுதப்பட்டிருந்தாலும், கவிதையின் குரலுக்குரிய “நான்”, வெளியேற்றப்பட்டு உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் விளிம்பு நிலை பாலஸ்தீனியர்களின் கூட்டுக்குரலின் குறியீடாக எடுத்துக்கொள்ளப்பட இயலும். நாடிழத்தல், அந்நிய மண்ணில் வாழும் உணர்வு, அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட அடையாளம்- இவை மிகச் சிறந்த இந்தக் கவிஞரின் புகழ் பெற்ற இந்தக் கவிதையில் மகோன்னதமான முறையில் வெளிப்பாடு காண்கின்றன-

உன் சொற்கள் ஒரு பாடல்.

அதை நானும் பாட நினைத்தேன்;

ஆனால் வேனிலின் இதழ்களைத் துயரம் சூழ்ந்தது.

குருவியைப் போல் உன் சொற்கள் பறந்து போயின.

நம் வீட்டுக் கதவும் வேனிலின் வாயிலும் புலம்பெயர்ந்தன,.

உன்னைத் தேடி, ஏக்கம் செல்லுமிடமெங்கும் தொடர

நம் கண்ணாடிகள் நொறுங்கின,

நம் துயரங்கள் ஆயிரம் மடங்கு பெருகின.

ஒலிச் சிதறல்களை ஒன்று கூட்டினோம்,

நம் தாயகத்தின் துயரப்பாடல் மட்டும் பயின்றோம்!

ஒரு யாழின் இதயத்தில் அதை நாம் விதைப்போம்,

நம் துயரத்தின் கூரைகளில் அதை இசைப்போம்-

சிதறுண்ட நிலவுகளும் கற்களும் கேட்கட்டும் என்று..

ஆனால் நானே மறந்து விட்டேன், கேட்டிராத குரலுக்குரிய உன்னை:

என் யாழ் அறுபட்டது உன் பிரிவாலா, அல்லது என் மௌனத்தாலா?

இந்த உலகுக்கோர் அந்நியனாய் வாழ்வதையும் எங்கும் உரியனாய் அல்லாத உணர்வையும் பாலஸ்தீனனால் இழக்க இயலாது. இந்தச் சோகம் நிறைந்த வாழ்வு உலகில் எங்கிருப்பினும் பாலஸ்தீனர்களின் எழுத்தில் உறுதிப்பாடு கண்டிருக்கிறது. எட்வார்ட் சைத், புலம்பெயர் வாழ்வு குறித்த அவரது எண்ணங்களை எழுதும்போது, பாலஸ்தீன அனுபவத்தின் சரடுகளை இனம்காண முயற்சி செய்கிறார். தன் துயரத்திலிருந்தும் அன்னியப்பட்ட உணர்விலிருந்தும் விலகி, அவர் புலம்பெயர்தல் சிந்திப்பதற்குரிய வினோத “வசீகரம்” கொண்டிருப்பதாய் விவரிக்கிறார். ஆனாலும் சந்தேகத்துக்கு இடமின்றி அது ஒரு “பயங்கர அனுபவமாகவே” இருக்கிறது:

“…மனிதனுக்கும் அவன் பிறந்த இடத்துக்கும் இடையில் வலுக்கட்டாயமாய் ஏற்படுத்தப்படும் ஆறாப்பிளவு, அகத்துக்கும் அதன் மெய்யான பிறப்பிடத்துக்கும் இடையிலான பிளவு. அதன் அடிப்படைத் துயரம் மீட்சியற்றது. இலக்கியமும் வரலாறும் புலம்பெயர்ந்தவனின் வாழ்வில் நாயகத்தன்மை கொண்ட, கற்பனாதீதமிக்க, மகத்தான, ஏன் மாபெரும் வெற்றிகள் கொண்ட நிகழ்வுகளை விவரிக்கின்றன என்பது உண்மைதான் எனினும்; இவை பிரிவாற்றாமையின் முடக்கத் துயரை வெல்லும் முயற்சிகள் அன்றி வேறல்ல. புலம்பெயர்தலின் சாதனைகள் அனைத்தும் என்றென்றும் விட்டுச் செல்லப்பட்ட ஏதோவொன்றின் இழப்பால் நிரந்தர தோல்வி காண்கின்றன”

இதே சிந்தனை எமில் ஹபிபியின் எழுத்திலும் ஒரு சரடாய் உள்ளோடுகிறது. அவரது மிகச் சிறந்த படைப்பான, “தி சீக்ரட் லைப் ஆப் சைத்: தி பெஸ்ஸாப்டிமிஸ்ட்” (The Secret Life of Said: the Pessoptimist) (1974), சரித்திர பாலஸ்தீனத்தில் இஸ்ரேலிய ஆட்சியின்கீழ் வாழும் பாலஸ்தீனர்களின் வாழ்வை ஆவணப்படுத்துகிறது..தம் தாய் மண்ணிலேயே பாதுகாப்பற்ற பாலஸ்தீனர்களின் இருப்பை இது பகடி செய்கிறது; இஸ்ரேலிய பாலஸ்தீனனின் வாழ்வு புலம்பெயர்ந்தவனின் வாழ்வாகவே இப்பொதும் இருக்கிறது. அந்த வகையில் அது புலம்பெயர்ந்த சக பாலஸ்தீனர்களின் அனுபவங்களைப் பிரதிபலிக்கிறது. இதிலும், இதற்குரிய அதே சமூக, அரசியல் சூழலில் உருவான பிற நாவல்களிலும் ஹபிபி வரலாற்றுக்குரிய பாலஸ்தீனத்தில் வாழும் பாலஸ்தீனர்களின் துயரங்களைப் பேசுபவராகிறார்- பாலஸ்தீனனாக இருந்தும் பாலஸ்தீனத்துக்கு உரியவனாக இல்லாத இரட்டை நிலை, இஸ்ரேலியாக இருந்தும் இஸ்ரேலியனுக்குரிய உரிமைகள் இல்லாத இரட்டை நிலை. ஹபிபியின் படைப்பில் உள்ள இருத்தலியல் நோக்கிய குவியம் தவிர, அவர் அரேபிய கலாசாரத்தின் இலக்கிய வகைமாதிரியாக நாவலுக்கு ஒரு புரட்சிகரமான வடிவம் கொடுத்தார்- மேற்குலகுக்கு உரிய தனித்துவம் கொண்ட கதைசொல்லல் வடிவங்களை மகாமா (Maqama), ஆயிரத்து ஒரு இரவு கதைகள், கவிதை வாசிப்புகள் போன்ற மரபார்ந்த அரேபிய வடிவங்களுடன் ஒருங்கிணைத்தார். இப்படிப்பட்ட எழுத்து- மேற்கத்திய, அரபு வடிவங்களின் கலவை-, ஹபிபியின் அரபு-இஸ்ரேலிய பாத்திரங்களின் ஆழ்ந்த பிளவுக்கு ஒரு மருந்தாகவே ஆகிறது. பாலஸ்தீனத்தின் ஜியானிசேஷனுக்கு எதிர்வினையாற்றும் வல்லமை கொண்ட எழுத்து இது.

இவர் தவிர இரு சிறந்த எழுத்தாளர்கள் இருக்கின்றனர்- பாலஸ்தீன பெருஞ்சோகத்தை புலம்பெயர்தலின் உயர்பார்வையில் காண்பவர்கள் இவர்கள். கஸ்ஸான் கானாபானி ஒரு நாவலாசிரியர்., சிறுகதைகள் எழுதுபவர், நாடகாசிரியர், கல்விப்புலத்துக்கு உரியவர். 1948ஆம் ஆண்டு அவரது குடும்பம் சிரியாவிலிருந்து வெளியேறியது (அவர் பெய்ரூட்டில் இருந்த காலத்தில் அவரது கார் இஸ்ரேலியர்களின் குண்டு வீச்சு தாக்குதலுக்கு உள்ளானது). பாலஸ்தீன அகதிகளின் துயரங்களை இவர் சித்தரிக்கும் அதே சமயம் தேசிய உணர்வை வளர்க்கவும் தன் மக்களின் விடுதலைக்கு வழி காணவும் முயற்சி செய்கிறார். பாலஸ்தீனர்களின் அனுபவமான துரோக உணர்வை வெளிப்படுத்தும் வகையில், பாலஸ்தீன இடர்ப்பாடு சக்திவாய்ந்த படிமங்களிலும் குறியீடுகளிலும் சொல்லப்படுகிறது. அவரது “மென் இன் தி சன்” (Men in the Sun) (1963) மற்றும் “ஆல் தட் இஸ் லெப்ட் டு யூ” (All That’s Left to You) (1966) ஆகிய இரு நாவல்களும் 1948ஆம் ஆண்டின் பாலஸ்தீன பேரழிவைத் தொடர்ந்த பாலஸ்தீன வெளியேற்றம் மற்றும் அதன் துயரத்தின் குறியீடாகின்றன. இந்த நாவல்கள் தவிர இவர் நான்கு சிறுகதை தொக்குப்புகளும் மூன்று நாடகங்களும் எழுதியிருக்கிறார். இவற்றில் அவர் தனது மக்களின் மானுட துயரங்களையும் அக கொந்தளிப்புகளையும் கருப்பொருளாய் கொள்கிறார். மஹ்மூத் தார்விஷ் போலவே கானாபானி, பாலஸ்தீனத்தையும் பாலஸ்தீனர்களையும் மானுட நிலையின் குறிகளாகக் கொள்கின்றார்- இவர்கள் இருவரும் பாலஸ்தீனத் துயரை மானுட அவலமாகச் சித்தரிக்கின்றனர்.

ஜப்ரா இப்ராகிம் ஜப்ரா, மற்றுமொரு முன்னிலை பாலஸ்தீன நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர், இலக்கிய விமரிசகர், ஆங்கில மொழியிலிருந்து அரேபிய மொழியாக்கம் செய்பவர். இவர் தன் படைப்புகளில் புலம்பெயர் சமூகங்களின் மையத்தில் உள்ள பாலஸ்தீன தனிமனித வாழ்வை எழுதுகிறார். சிதைவையும் அடையாள அழிப்பையும் எப்போதும் எதிர்கொள்ளும் பாலஸ்தீனர்களின் குழப்பத்தை இவரது எழுத்து வெளிப்படுத்துகிறது. ஜப்ராவின் கவிதையிலும் புனைவிலும் இந்த முற்றுகை உணர்வு மேலாதிக்கம் செலுத்துகிறது. இந்த முற்றுகையுணர்விலிருந்து உடைத்துக் கொண்டு வெளியேறுதலின் அவசியத்தை விவரிப்பதே பாலஸ்தீன புலம்பெயர் வாழ்வையும் நவீன மானுட புரிதலையும் ஒருங்கிணைப்பதில் வெற்றி கண்ட இந்த மகத்தான அரேபிய எழுத்தாளரிடம் காணப்படும் முக்கியமான் இயல்பு,. ஜப்ராவின் நாவல்கள்- —”ஹன்டர்ஸ் இன் எ நாரோ ஸ்ட்ரீட்” (Hunters in a Narrow Street) (1960), “தி ஷிப்” (The Ship) (1969), மற்றும் “தி சேர்ச் பார் வாலித் மசூத்” (The Search for Walid Massoud) (1978) – தாய்மண்ணிலும் புலம்பெயர் வாழ்விலும் உள்ள பாலஸ்தீன மக்களின் விடுதலையையும் நவீனத்தையும் ஒருங்கிணைக்கிறது.

 நன்றி – Asymptote 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.