மிக நீண்ட திட்டமிட்ட நினைவு
அவரைத் திருப்பிக்கொண்டு வந்து தந்ததும்
எத்தனை முறை தொலைத்தாலும்
அவரைக் கண்டுபிடிக்க முடியுமென்று நினைத்தேன்
இந்தக் கட்டத்தில்,
எனது மதியத் தூக்கம்
சொர்க்கத்தில் தொடங்கியது
நினைவைக் கூடாரம்போல் சுருட்டும்போது
அதன் மடிப்புகளில்,
குழந்தைகளைப்போல் ஒரு பியானோ
வீறிட்டுக் கத்தத் தொடங்கியது
வெருண்ட சில குருவிகள்
உள்ளிருந்து கிளம்பிப் பறந்தன
மழையா வெயிலா மப்பும் மந்தாரமுமா
தேர்வு செய்வதில் எப்போதும்
வானத்தில் ஒரு குழப்பம் இருக்கிறது
அந்தக் குழப்பத்தை நினைவு
பின்தொடரவே கட்டாயப்படுத்துகிறது
நினைவை விரிக்க விரிக்க
இப்படித் தொடர்பற்ற சம்பவங்கள்
வந்து குவிந்தபடி இருக்கின்றன
என் மகனை கடைசியாகப் பிரியும்போது
அவன் சொன்ன கனவும் இதுபோலதான்
திட்டமிட்டபடி
இத்தோடு நினைவு முடிவடைகிறது.
நினைவுக்கு தேன் கூட்டை ஒப்பிடுவதுதான் மிகச் சரி
எங்கெல்லாம் இருந்து எடுத்து வந்து தேனை
சேகரித்து வைக்கிறது.
யாராவது அதைக் கலைத்தால்,
பல்லாயிரம் குழவிகள் கொட்டி
துடிதுடித்து வலியில் தவிக்கிறது.
One comment