அன்னிய வானின் கீழல்ல
அன்னிய சிறகுகளின் நிழலில்ல-
இவையனைத்தையும் என் மக்களுடன் பகிர்ந்து கொண்டேன்
இங்கே, தீவினை எம்மைக் கைவிட்ட இடத்தில்
– அன்னா அக்மதோவா
சில நாட்களுக்கு முன்னர் நாம் சுதந்திர தினத்தைக் கொண்டாடினோம். அப்போது ஊடக கட்டுரைகளிலும் சமூக ஊடகச் சிற்றுரைகளிலும் இருவேறு தீவிர குரல்களைக் கேட்க முடிந்தது. ஒரு முனையில், தேசபக்திக் கட்டுரைகள்- நாம் ஏன் உலகின் தலைசிறந்த நாடாக விளங்குகிறோம் என்று. மறுமுனையில், நம்பிக்கையற்றவர்கள்- நமக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டதா என்ற சந்தேகத்துடன், நம் சமூகத்தில் உள்ள தீமைகள் அனைத்தையும் பட்டியலிட்டு இவையே இந்தியாவின் சாதனைகள் என்ற குற்றச்சாட்டு (வழக்கம் போலவே உண்மை இவை இரண்டுக்கும் நடுவில் எங்கோ இருக்கிறது).
ஒரு வகையில் நாம் அதிர்ஷ்டக்காரர்கள் – நம் எதிரி யார் என்பதை நாம் அறிந்திருந்தோம். நம்மை ஆக்கிரமித்திருந்தவர்கள் பிரிட்டிஷார், அவர்களை விரட்டிவிட்டால் சுதந்திரம் கிடைத்துவிடும் என்று நம்பினோம். ஆனால் இதற்கு மாறாக, உலகின் பல நாடுகளும் வேற்று எதிரியை அடையாளம் காண முடியாத காரணத்தால் அடிமைத்தளையில் அவதிப்பட்டன. அவர்களின் எதிரி உள்ளிருந்தான். சர்வாதிகாரி, கொடுங்கோலன், பாசிஸ்டு என்று எப்படி அழைத்தாலும் அவன் அந்நாட்டு குடிமக்களில் மக்களில் ஒருவன். இவர்களில் பலர் மக்களின் ஒருமித்த ஆதரவுடன் ஆட்சியைக் கைப்பற்றியவர்கள். இது போன்ற ஓர் அதிகார அமைப்புடன் கடுமையாகப் போராடினாலன்றி விடுதலை பெறுதல் அரிது..
இந்தக் கட்டுரையில் தன் எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் தண்டிப்பதை வழமையான ஆட்சிமுறையாகக் கொண்டிருந்த ஒரு அரசு அதிகாரத்தின்கீழ் அடிபணியாத ஒரு கவிஞரைப் பற்றி பேசலாம். அன்னா அக்மதோவா 1889ஆம் ஆண்டு பிறந்தவர், தலைசிறந்த கவிஞர், மானுட வரலாற்றின் அரக்க சகாப்தம் என்று ஜோசப் பிராட்ஸ்கியால் அழைக்கப்பட்ட ஸ்டாலினிய காலகட்டத்தில் கடும் ஒடுக்குமுறைக்கு ஆட்பட்டவர். 1910ஆம் ஆண்டு குமிலேவ் என்ற கவிஞரை மணம் புரிந்து, 1912ல் லெவ் குமிலேவ் என்ற மகனுக்கு அன்னையானவர். 1918ஆம் ஆண்டு தன் கணவரை விவாகரத்து செய்தார். புரட்சிக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட குமிலேவ் 1921ஆம் ஆண்டு அரசால் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது அக்மதோவா அவரிடமிருந்து மணமுறிவு பெற்றிருந்தார் என்பது உண்மையெனினும், அவரை மணம் புரிந்த குற்றத்துக்காக வாழ்நாள் முழுதும் அவரும் அவரது மகனும் துன்புறுத்தப்பட்டனர்.
தன் நேசத்துக்குரிய தேசத்தின் எதிர்காலத்தை அவரால் கணிக்க முடிந்தது. தலைசிறந்த கவிஞரான அவர் தெளிவாக எழுதினார்:
நம் நூற்றாண்டு ஏன் பிறவற்றைவிட மோசமாக இருக்கிறது?
அச்சத்திலும் துயரத்திலும் மூர்ச்சித்த காரணத்தால் அது
அழுகிய தன் ரணத்தில்ல் விரல்களை நனைத்துக் கொண்டதா,
அதன்பின்னும் ஆறுதல் பெற்ற பாடில்லை
மேற்கே சூரியன் சாய்கிறான்,
ஊரின் கூரைகள் அதன் ஒளியில் மிளிர்கின்றன.
கதவுகளில் குறியிடத் துவங்கிவிட்ட மரணம்
காகங்களை அழைக்கிறது, காகங்கள் கிளம்பிவிட்டன
குமிலேவ் சுட்டுக் கொல்லப்படுவதற்கு மூன்றாண்டுகள் முன் எழுதிய கவிதை இது. அவர் எதைக் கண்டு அஞ்சினாரோ, அதுவே நடந்தது.
குமிலேவ் கொலை செய்யப்பட்ட 1921ஆம் ஆண்டு அவர் இதை எழுதினார்:
உன் பலகையைத் துடைத்து விட்டனர்,
பனியால், நீ இன்று இல்லை
இருபத்து எட்டு துப்பாக்கிகளும்
ஐந்து தோட்டாக்களின் துளைகளும்.
இது கசப்பான பரிசு,
காதல், ஆனால் நெய்தவள் நான்.
ரஷ்யா, விவசாயக் கிழவன்,
கறியெடுக்கக் கொல்கிறான்.
ஒப்பு நோக்குகையில் அமைதியான காலகட்டத்தில் வாழும் நம்மைப் போன்றவர்கள் அன்னா அக்மதோவா அனுபவித்த ஒடுக்குமுறையைக் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. அக்மதோவாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் நூலின் முன்னுரையில் டி எம் தாமஸ் இவ்வாறு எழுதுகிறார்: “ஸ்டாலினிய கொடுங்கோன்மை நிகழ்வுகளை எதிர்கொள்பவர்களில் தீரம் நிறைந்த, முழமை வாய்க்கப்பெற்ற கலைஞர்கள் மட்டுமே அமைதியைத் தவிர வேறெந்த வகையிலும் எதிர்வினையாற்ற இயலும்”. எழுத்தாளர்களை ஊமையாக அரசு முயற்சித்தது. அது எழுத்தாளர்கள் ஆபத்தனாவர்கள் என்று கருதியது. அக்மதோவாவின் கவிதைகளைப் பதிப்பிக்க எவரும் முன்வரவில்லை. அவர் பல்வேறுபட்ட ஐரோப்பிய எழுத்தாளர்களின் படைப்புகளை ருஷ்ய மொழிக்கு மொழிமாற்றம் செய்தார். அவர் தன் மகனுடன் ஏழ்மையில் வாழ்ந்திருந்தார். சில காலத்திலேயே அவரது மகனும் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டபின் அவருக்கு வறுமை மட்டுமே துணையாய் இருந்தது.
அன்னா அக்மதோவாவின் சமகாலத்தவர்களின் முடிவும் மோசமானதாகவே இருந்தது. அவராவது உயிர்பிழைத்தார், பிற சக எழுத்தாளர்கள் பலரும் ஸ்டாலினிய அராஜகத்துக்கு பலியாயினர். மாயகோவ்ஸ்கி தன்னைச் சுட்டுக் கொண்டு மாண்டார், ஓசிப் மான்டெல்ஸ்டாம் குலாக் முகாம் அனுப்பப்பட்டார், அங்கிருந்து அவர் திரும்ப மாட்டார். மாரினா ஸ்வெடயேவா தற்கொலை செய்து கொள்ள வேண்டியதாயிற்று, போரிஸ் பாஸ்டர்நாக் நீண்ட காலம் எதுவும் எழுத முடியாதவராக இருந்தார். “அக்மோதோவாவைப் பொருத்தவரை, அவரது வாழ்க்கை போர்க்காலத்தில் ஒப்பீட்டளவில் மகிழ்ச்சியாக இருந்தது, எதிரி யாரென்பது வெளிப்படையாகத் தெரிந்தது, எதிரியுடன் போரிட முடியும். அவரே சொன்னபடி இப்படிப்பட்ட ‘மகிழ்ச்சி’ அக்காலத்தின் மீதான விமரிசனம்!”
தன் மகனைச் சிறையிலிருந்து மீட்க அன்னா அக்மதோவா கடும் முயற்சிகள் எடுத்துக்கொண்டார். தான் வெறுத்த ஆட்சியாளர்களைப் போற்றி கவிதைகள் எழுதவும் செய்தார் (இவை தனது கவிதைத் தொகுப்பில் சேர்க்கப்படுவதை அவர் விரும்பவில்லை). ஸ்டாலின் மறைந்த பின்னரே அவரது ஓரே மகன் விடுதலை செய்யப்பட்டான். அவர் நிகோலாய் புனினுடன் குடும்பம் நடத்தினார், ஆனால் அவரும் கைது செய்யப்பட்டு குலாக் அனுப்பப்பட்டார். (அன்னாவின் கடும் முயற்சிக்கு பிறகு இருவருக்கும் விடுதலை கிடைத்தது. இருவரும் சில ஆண்டுகளுக்கு பின் மறுபடியும் கைது செய்யப்பட்டார்கள். ஸ்டாலின் இறந்த பிறகு அன்னாவின் மகனுக்கு விடுதலை கிடைத்தது. புனின் குலாகில் மரணமடைந்தார்)
தன் மகனும் புனினும் கைது செய்யப்பட்டபின் அவர் எழுதிய சிறந்த நீண்ட கவிதைதான் ‘Requiem’. சிறையிலிருக்கும் மகனைச் சந்திக்க அவர் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டியிருக்கும். ஸ்டாலின் காலம் ரஷ்ய வரலாற்றில் எவ்வளவு மோசமான காலகட்டம் என்பதற்கு அத்தாட்சியாக இந்தக் கவிதை இருக்கிறது.
கவிதையை இந்த முன்னுரையுடன் துவக்குகிறார் அவர்:
“யேஜவ் கொடுங்கோன்மையின் அச்சுறுத்தும் ஆண்டுகளில் நான் லெனின்கிராடின் சிறைச்சாலை வரிசைகளில் பதினேழு மாதங்கள் நின்றிருந்தேன். ஒரு நாள், ஏதோ ஒரு காரணத்தால், ஒருவர் என்னிடம் பேச்சுக் கொடுத்தார். அப்போது என் பின் ஒரு பெண்மணி நின்றிருந்தார், அவரது உதடுகள் குளிரில் நீலம் பாரித்திருந்தன. அவர் என் பெயரை தன் வாழ்நாளில் கேட்டதே கிடையாது. நம் எல்லாருக்கும் இயல்பான மயக்க நிலையிலிருந்து விழித்துக் கொண்டவராக, அவர் என் காதுகளில் கிசுகிசுத்தார் (அங்கு எல்லாரும் கிசுகிசுப்பதுதான் வழக்கம்). “இதையெல்லாம் யாராலாவது விவரிக்க முடியுமா?|” என்று கேட்டார் அவர். “என்னால் முடியும்,” என்று பதிலளித்தேன். அப்போது அதுவரை வெறும் முகமாக இருந்தத இடத்தில் புன்னகை போன்ற ஒன்று கடந்த சென்றது.
அடக்குமுறை காலத்தை அருமையாக விவரிக்கும் கவிதையின் துவக்கம் இது :
இறந்தவ்ர்களே அந்தக் காலத்தில் சிரித்தார்கள்,
ஓய்வு கிடைத்தது என்று மகிழ்ந்தார்கள்;
லெனின்கிராட் நகரம் ஊசலாடியது,
அதன் சிறைச்சாலைகளின் தேவையற்ற இணைப்பாய்,
அந்தக் காலத்தில்தான் ரயில்வே நிலையங்கள்
பைத்தியங்களின் புகலாக இருந்தன.
மிகச் சிறி\ய ரயில்களும்
பிரிவுப் பாடல்களும்
மரண நட்சத்திரங்கள்
உயரே இருந்தன, களங்கமற்ற ரஷ்யா
ரத்தக் கறை படிந்த காலணிகளின் கீழ்,
போலீஸ் ஜீப்புகளின் டயர்களின் கீழ்,
துடித்துக் கொண்டிருந்தது.
இந்தக் கவிதை அவரது மனநிலையைத் துல்லியமாக விவரிக்கிறது-
மெல்லச் செல்கிறது, மெல்லிய டான் நதி,
விளிம்பு தாண்டிக் குதிக்கிறது மஞ்சள் நிலவொளி
விளிம்பு தாண்டிக் குதித்து, திகைக்கிறது
நிழலைக் கண்டு
நோயுற்ற பெண்ணொருத்தி படுத்திருக்கிறாள்
நீண்டு நெடிது படுத்திருக்கிறாள்
விலங்கு பூட்டப்பட்ட மகன்,
மண்ணாய்ப் போன கணவன்,
வேண்டிக் கொள், வேண்டிக் கொள்.
இவ்வளவு தீவிரமான கவிதை ரஷ்யாவில் பதிப்பிக்கப்பட நீண்ட காலம் ஆனது. ரஷ்யாவுக்கு வெளியில் பதிப்பிக்கப்பட்ட இந்தக் கவிதை அவரது படைப்புகளின் தொகுப்பில் 1987ஆம் ஆண்டுதான் ரஷ்யாவில் வெளிவந்தது.
அக்மதோவா ஏன் வேறு நாட்டுக்குச் செல்லவில்லை? ரஷ்யாவைவிட்டு வெளியேறுபவர்களுக்கு விடை கொடுக்க ரயில் நிலையம் செல்லும் ஒவ்வொரு முறையும், அங்கு அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் பிரிந்து செல்லும் கலைத்துறை அல்லது பண்பாட்டுத் துறையைச் சார்ந்த எவரேனும் ஒருவரைச் சந்தித்ததாக எழுதுகிறார் அக்மதோவா. “தன் வாழ்வை வாழ யார் மறுப்பார்கள்?” என்று அகமதாவோவே சொல்லியிருக்கிறார் என்று குரிப்புகளுண்டு.
தன் கலை வாழும், தன் படைப்புகளுக்குத் தடை போட்டவர்களின் பெயர்கள் வரலாற்றுப் பக்கங்களிலிருந்து அழிக்கப்படும் எனபதை அவர் அறிந்திருந்தார் என்பது ஒரு காரணமாக இருக்கலாம். புஷ்கின் பற்றி அக்மதோவா இவ்வாறு சொல்கிறார் என்று பதிவு செய்கிறார் டி. எம். தாமஸ் தன் முன்னுரையில்:
“அந்தக் காலம் முழுமையும், சிறிது சிறிதாக, புஷ்கின் காலம் என்று அழைக்கப்படலாயிற்று. அரசவையில் மதிக்கப்பட்டவர்கள் அனைவரும், அதன் மந்திரிகள், தளபதிகள், தளபதி அல்லாதவர்கள், புஷ்கினின் சமகாலத்தவர்கள் என்று குறிப்பிடப்படத் துவங்கினர், அதன் பின் அவரது எழுத்து பற்றிய ஆய்வுக்கு உதவும் பெயர்ப்பட்டியல்கள் மற்றும் அட்டவணைக் குறிப்புகளில் அடக்கம் செய்யப்பட்டனர்”.
சமுதாயத்தில் எழுத்தாளரின் இடம் என்ன எனபதை அன்னா அறிந்திருந்தார். ஸ்டாலின் இறந்தபின், அன்னாவின் புகழ் அதிகரித்தது, ரஷ்யாவின் மாபெரும் கவிஞர்களில் ஒருவராக அவர் ஏற்றுக் கொள்ளப்பட்டார். அவர் ரஷ்யாவைவிட்டு வெளியேறவில்லை என்ற காரணத்துக்காக ரஷ்ய மக்கள் அவரை நேசித்தனர். சாதாரணர்களில் ஒருவராக அவரும் ரஷ்யாவில் துன்பப்பட்டார். எனவேதான் 1965ஆம் ஆண்டு அவர் இறந்தபோது அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் மாபெரும் கூட்டமாய் மக்கள் திரண்டு நின்றனர்.
ஒரு எழுத்தாளரிடம் எதை எதிர்பார்க்க முடியுமோ, அதைச் செய்தார் அன்னா அக்மதோவா: அவர் சமூக மனசாட்சியாக இருந்தார். தான் எழுதிய பல ஆக்கங்களைத் துவக்க காலங்களில் அவரால் பதிப்பிக்க முடியாமல் போனாலும், அவற்றைக் காத்திருந்து பதிப்பித்து அன்னா அக்மதோவா தான் சமரசங்கள் செய்து கொள்பவரல்ல என்பதை உணர்த்தினார். ஸ்டாலினிய நாட்களின் கொடூரங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வரும் கவிதைகள் அவை, ரஷ்ய மக்களின் துயர்களின் குரலாய் ஒலிக்கும் கவிதைகள் அவை. புஷ்கின் போல் அவரும் அரசு அதிகாரிகளைக் கடந்து வாழ்கிறார். அக்மதோவா, மாண்டல்ஸ்டாம், பாஸ்டர்நாக், த்ஸ்வெதேவா முதலானோர் குறித்து டி எம் தாமஸ் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “ஸ்டாலினின் ஒற்றை முகம் கொண்ட குன்றாய் நிமிர்ந்து நின்ற ஸ்டாலின் அரசின் அதிகாரிகள் ரஷ்ய கவிஞர்களின் படைப்புகளின் அட்டவணைக் குறிப்புகளில் அடக்கம் செய்யப்படுகிறார்கள். இது எவ்வளவு பெரிய விஷயம். அழிவற்ற உண்மைக்கும் மனிதனுக்குரிய மரியாதைக்கும் ஆதரவாகப் போரிடத் தகுந்த சிறந்த கவிஞர்களை அடையாளம் காணப்பட்டது மிக மோசமான காலகட்டத்தில் என்பது ஒரு உடன்நிகழ்வாக இருக்குமா என்ன?” ஆம், ஒவ்வொரு கலைஞனும் இவ்விரு விழுமியங்களுக்கே போராட வேண்டும்: அழிவற்ற உண்மை, மனிதனுக்குரிய மரியாதை.
சுதந்திரமும் விடுதலையும் ஒரு நாள் விவகாரங்கள் அல்ல. நம் சுதந்திரம் பறி போகாதிருக்க எப்போதும் கலைஞன் விழிப்பு நிலையிலிருக்க வேண்டும். தேவைப்பட்டபோது அதிகார அமைப்புடன மோதும் சமூக மனசாட்சியாக அவன் இயங்க வேண்டும். சுதந்திரம் கிடைத்துவிட்டது என்று ஓய்வதற்கில்லை. புறப்பரப்பில் சுதந்திரம் அனுமதிக்கப்பட்டாலும், அடியாழத்தில் நம் சுதந்திரங்களைக் கட்டுப்படுத்த விரும்பும் சக்திகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. நம் சுதந்திரத்துக்கு எதிரான தாக்குதல் அரசு வழி வரலாம், அல்லது தொழில்துறை அமைப்புகள் அதன் முகங்களாக ஆகலாம், சமயம், சாதி என்று எதுவும் அதன் கருவியாகலாம். உண்மையில், ஒவ்வொரு அடையாளமும் பிற அடையாளங்களை அழிக்கவே முற்படுகின்றன (சிரியா, இராக்கில் ஐஎஸ்ஐஎஸ் கைப்பற்றும் நிலப்பரப்புகளின் நிகழ்வுகள் நடப்புச் சான்று).. கலைஞனே நினைவழிப்பை நோக்கமாகக் கொண்ட அடக்குமுறைக்கு எதிரான வலுவான தடையாக விளங்கக்கூடியவன். அவன் உண்மையில் நாட்டம் கொண்டிருந்தால், தன் சமூக மனசாட்சியாக இயங்கும் துணிவு பெற்றிருந்தால், அவனுக்கு, அல்லது அவளுக்கு, மரணமில்லை- தான் கட்டிக் காக்க முனைந்த சமுதாயத்துக்கும் அதன் சிதைவுகளிலிருந்து தன்னை மீட்டுக் கொள்ளும் ஆற்றலை அளித்துச் செல்பவள் அவள்.