பதாகை – “உங்கள் கவிதைகள் எதை உண்மையாகக் கொள்கின்றன, அவை எத்தகைய உண்மைகளை வெளிப்படுத்த முனைகின்றன?”
றியாஸ் குரானா – இப்படி ஒரு கேள்வியைக் கேட்பதற்கு எது உங்களைத் தூண்டியது என்பதை நான் அறிவேன். நீங்கள் மட்டுமல்ல தமிழ் சூழலில் இலக்கியப் பரிச்சயம் இருக்கின்ற அனைவரும் இப்படி அல்லது இதற்கு நெருக்கமான சொற்களால் இந்தக் கேள்வியை கேட்பவர்களாகவே இருப்பர். அந்தக் கேள்விகள் இப்படி இருக்கலாம். எத்தகைய யதார்த்தத்தை வெளிப்படுத்த முனைகின்றன என்றோ எத்தகைய சூழலை பிரதிபலிக்க முனைகின்றன என்றோ இருக்கலாம். அல்லது இப்படி இருக்கவே வாய்ப்புகள் அதிகம். இந்தக் கேள்வி நமது இலக்கிய பெருவெளியின் நெடுங்கால மனச்செயலாக இருக்கின்ற ஒன்றாகும். இலக்கியத்தின் பயன், இலக்கியத்தின் பணி, இலக்கியம் இயங்குவதற்கான ஒரு பொதுத் தடம் போன்றவற்றை விசாரணைக்குட்படுத்தும்போது கண்டடையப்பட்ட ஒன்றாகும். வாழ்தல் வாழ்விலிருந்து பெறுதல் என்ற ஒரு வறண்ட புரிதலில் இருந்து உருவான ஒன்றாகும். அது மாத்திரமல்ல, அந்தப் புரிதலினால்தான் இன்னும் இது காப்பாற்றப்பட்டு புழக்கத்திலிலும் இருக்கிறது.
எனது கவிதைப் பிரதிகள் (கவிதை என எனது பிரதிகளை எல்லோரும் பாவிப்பதைப்போல முன்வைப்பதில்லை) எதையும் உண்மையாகக் கொள்வதில்லை. அதுபோல, அது எந்த உண்மையையும் வெளிப்படுத்துவதும் இல்லை. ஏதாவதொன்றை (மட்டும்) உண்மையாகக் கொள்வதிலிருக்கும் ஆபத்தை ஆழமாக அறிந்திருக்கிறது. அல்லது அதை கவனமாக கையாள நினைக்கிறது. பல வகையான உண்மைகளை அல்லது நாமும் நம்மைப்போல மற்றவரும் உண்மையாக நம்புகின்ற பல உண்மைகள் இருக்கின்றன. ஏதோவொன்றை மட்டும் உண்மையாக உறுதிப்படுத்துவதிலுள்ள வன்முறையை எனது கவிதைப் பிரதிக்கு தெரியும். ஏதாவதொன்றை கட்டாயம் உண்மையாகக் கொள்ள வேண்டிய தேவை எதுவும் கவிதைக்கிருப்பதாக நான் கருதவுமில்லை. அதிரடியாக ஒன்றைச் சொல்வதென்றால், சூழலில் இருக்கும் உண்மைக்கும் கவிதையின் எல்லைக்குள்ளாக இயங்கும் சூழலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அதுபோலதான், உண்மையையோ அல்லது பொய்களையோ நம்பி கவிதைப் பிரதிகள் இல்லை. அப்படி இருக்கவும் முடியாது.
அது ஒரு புறமிருக்க, எனது கவிதைப் பிரதிகள் உண்மையை வெளிப்படுத்துவதும் இல்லை. கவிதைப் பிரதிகளால் உண்மையை வெளிப்படுத்த முடியுமா என்ற ஒரு கேள்வியும் இதனுடன் இணைந்தே ஒலிக்கிறது. எனது கவிதைப் பிரதிகள் உண்மையை வெளிப்படுத்த முனைவதாக வெகுளித்தனமாக எப்போதும் அறிவித்துவிடுவதுமில்லை. அந்த அசட்டு நம்பிக்கை எனது கவிதைப் பிரதிகளிடம் சிறிதும் இல்லை. அப்படி என்றால் எனது கவிதைப் பிரதிக்கும் உண்மைக்கும் ஒரு மங்கலான உறவுகூட இல்லை என புரிந்து கொள்ள இது வாய்ப்பளிக்குமே என இந்த இடத்தில் நீங்கள் யோசிக்கலாம். அப்படி அல்ல. உண்மையோடு எனது கவிதைப் பிரதிகளுக்கு தொடர்பிருக்கிறது. அது இரண்டு சந்தர்ப்பங்களில் முக்கியமாக தனது கவனத்தை ஈர்க்கிறது. சூழலில் நிலவுகிற உண்மைகளுக்கும் கவிதைப் பிரதிகளினுள் நிலவுகிற உண்மைகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் வலுக்கும்போது ஒரு முறையும், மாயமான உண்மைகளை பெருக்கும்போது ஒரு முறையும் நிகழ்கிறது.
எதையும் உண்மையாக கொள்ளவுமில்லை, எந்த உண்மையையும் வெளிப்படுத்த எனது கவிதைப் பிரதிகள் பாடுபட்டு உழைக்கவுமில்லை என்றேன். இவைகளிலிருந்து மாறுபட்ட ஒன்றை செய்கின்றது. உண்மைகளை உற்பத்தி செய்கின்றன. உண்மைகளை மேலும் பல்கிப் பெருகச் செய்கின்றன. தற்காலிகமான உண்மைகள், தற்செயலான உண்மைகள், தோன்றி மறையக்கூடிய உண்மைகள், உண்மைபோல் நடித்துக்காட்டக்கூடிய உண்மைகள் என பன்மையான உண்மைகளை பெருக்குகின்றன. இந்த உண்மைகள் பிரதிக்கு புறத்தே உண்மையாக இருப்பதன் தன்மையைக் கொண்டிருப்பதில்லை. அதற்கு (பிரதிக்கு வெளியே உண்மையாக இருப்பதற்கு) வழங்கப்பட்டிருக்கும் இறுக்கமான மாறாத அர்த்தத்தை நிலையாக வைத்திருப்பவையுமல்ல. வேண்டிய நேரத்தில் தூக்கி வீசவும், வேண்டிய நேரத்தில் பொருட்படுத்தவும் போதுமான அளவிலே எனது கவிதைப் பிரதிகள் உண்மைகளை தயாரிக்கின்றன. புறச் சூழலில் உண்மை என்று நம்பும் ஒன்றால் மிக மோசமாக தாக்கப்பட்டிருக்கும் இலக்கிய மனங்களைக் கொண்டவர்கள், உண்மை என்ற ஒன்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீள முடியாத நிலையிலிருக்கும் புரிதலுடையவர்கள் நிச்சயமாக, எனது கவிதைப் பிரதியின் எல்லைக்குள் உருப்பெறும் உண்மைகளை, அவை உண்மைகளே இல்லை என்றே சொல்லுவர். அப்படிச் சொல்ல ஏதுவான இலக்கிய மனவெளியை, கவிதைச் சம்பவங்களின் இயங்கு வெளியை, கற்பனை என்ற மேலதிகச் சிந்தனையை (இது குறித்த கட்டுரை ”மலைகள்” http://malaigal.com/?p=2259 வலையில் உண்டு) பற்றி விவாதிக்க வேண்டிய தேவை இருக்கிறது.
சூழல்,யதார்த்தம்,உண்மை இப்படி அழைக்கப்படுகின்ற எதையாவது பிரதிபலிக்க கவிதைப் பிரதியால் முடியுமா என்ன? அதற்கு கவிதைப் பிரதி சந்தோசமாக இடந்தருமா என்ன? ஆனால், நம் ஈராயிரத்திற்கும் மேற்பட்ட இலக்கியச் செயலில் பிரதிபலிக்க முடியும், வெளிப்படுத்த முடியும் என்றுதான் நம்பி வந்திருக்கிறோம். அதற்கான காரணங்கள் பல இருக்கின்றன. அதில் முக்கியமானது எதுவெனில், வெளிப்பாட்டு அம்சமாக கவிதை மாத்திரமே இருந்தது. அல்லது துல்லியமானது என கருதப்பட்டது. மருத்துவம் தொடங்கி இலக்கணம் வரை கவிதை என்று அன்று நம்பப்பட்ட ஒரு வடிவத்திலே வெளிப்படுத்தப்பட்டது. இன்று கவிதையை விடவும், தெளிவாகவும், துல்லியமாகவும் சூழலை பிரதிபலிக்கக்கூடிய தொழில் நுட்பங்கள் வந்துவிட்டன. நாவல், சிறுகதை என விரித்துக்கூறும் வாய்ப்புகளைக் கொண்ட இலக்கிய வடிவங்களும் வந்துவிட்டன. கட்டுரை, செய்தி இப்படி எவ்வளவோ ஏன் சினிமாவைக் கூட இங்கு குறிப்பிடலாம். அப்படியானால், இன்று கவிதைப் பிரதி சூழலை பிரதிபலிக்கின்ற வேலையை செய்யத் தேவையில்லை. அதுவும் மிச்சமின்றி தன்னால் செய்ய முடியாத ஒன்றை தனது தலையில் கவிதைப் பிரதி சுமக்கத் தேவையுமில்லை. அதுவும், எத்தகைய சூழல், எந்தெந்த யதார்த்தம்? எப்படியான உண்மை? போன்ற கேள்விகளை இதன் முன் எழுப்பும்போது மேலும் இவை செயலற்றுப் போவதை நீங்கள் அவதானிக்க முடியும்.
சூழலை, யதார்த்தத்தை, உண்மையை கவிதைப் பிரதி நடித்துக் காட்ட முற்படுவதாகவே இதை எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது, சூழலை மீண்டும் ஒரு முறை நடித்துக் காட்டுதல். ஆமாம், பிரதிபலிப்பதாக தன்னை அறிவித்துக்கொள்ளும் இலக்கியப் பிரதிகள் உண்மையில் நடிகரின் வேலையையே செய்கின்றன. சிலபோது, காமடியனாகவும் மாறிவிட வாய்ப்புண்டு. ஆக, சூழலை பிரதிபலிப்பதற்கு, யதார்த்தத்தை மீள நடித்துக் காட்டுவதற்கு, உண்மையை வெளிப்படுத்துவதற்கு என வெவ்வேறு சாத்தியங்களும், பிரதிகளும் இருக்கும்போது கவிதைப் பிரதியை அந்த வேலைக்கு கட்டாயப்படுத்தவும் தேவையில்லை. இதற்கு மேலும், அவை சாத்தியமென்று கருதுகிறீர்களா என்ன? அப்படி எனில் இன்னும் கொஞ்சம் விரிவாக இதை விபரிக்க முற்படுகிறேன்.
கவிதைப் பிரதியின் எல்லைக்குள்ளாக இயங்கும் யதார்த்தங்களுக்கும், பிரதிக்கு வெளியே நிலவும் புறச்சூழலுக்குமான தொடர்பு எப்படிப்பட்டது. என்பதை கவனிக்கும்போது, இதை இன்னும் இலகுவாகப் புரிந்துகொள்ள வாய்ப்புகளுண்டு. கவிதைப் பிரதியில் இயங்கும் சூழல் முற்றிலும் கற்பனையின் விதிகளாலானது. அசாத்தியங்களின் இருப்புக்களாலானது. பொதுவாகச் சொன்னால் நிலவுகிற புறச்சூழலுக்கு முற்றிலும் வேறான ஒரு வேதியி\யலையும், காலநிலையையும், நிலவியலையும், இயங்கு முறைமைகளையும் கொண்டது. கவிதைப் பிரதியின் அகச் சூழலில் ஒருவர் நிலவில் வசிக்கலாம். சூரியனை உடைக்கலாம். கடலை ஒரு நொடியில் வற்றச் செய்து அதே நொடியில் ஊறவைக்கலாம். நிலவுகிற சூழலில் இவைகள் யதார்த்தமானவையல்ல. உண்மையானவையுமல்ல. இப்படியான ஒரு சூழலை புறத்தில் சந்திக்கவே முடியாது. இவை பிரதிக்குப் புறத்தில் அர்த்தமற்றவைகளாக இருக்கும்போது, கவிதைப் பிரதிகளில் இவைகள்தான் உண்மைகளாக இருக்கின்றன.
கொச்சிக்காய் உறைக்கும் என்பது உண்மையாக இங்கு நம்பப்படுகின்றபோது, கவிதைப் பிரதியில் இருக்கின்ற சூழலில் புளிக்கும், துவர்க்கும், இனிக்கும் அதுபோல உறைக்கவும் செய்யும். சுதந்திரமாக கொச்சிக்காய் என்னவெல்லாம் செய்ய விரும்புகிறதோ, எந்தவகையான தன்மைகளில் மாற விரும்புகிறதோ அனைத்தும் அங்கு சாத்தியமாகிவிடுகிறது. ஆக, கொச்சிக்காய் என்பது, கவிதைப் பிரதிக்குள் உங்களுக்குத் தெரிந்த ஒரு சாதாரணமான ஒன்று அல்ல. குறித்த எந்த அடையாளத்தையோ உண்மையையோ அதன்மீது சுமத்த எந்த வாய்ப்பையும் தராத ஒரு பொருள். இப்போது சொல்லுங்கள், சூழலை கவிதைப் பிரதி பிரதிபலிக்கும் என்பதை எப்படிப் பார்க்கலாம். நீருக்குள் வசிப்பதென்றாலே மனிதனுக்கு எத்தனையோ ஏற்பாடுகள் தேவைப்படுகின்றன. அதுபோல கவிதைக்குள்ளும் இந்த உண்மைகளை வசிக்கச் செய்வதற்கான சூழலை கட்டமைக்க முடியுமென்று சொல்லக் கூடும். ஆம் அப்படி மாற்றினால் உண்மையில் அது கவிதைப் பிரதியின் சூழல் அல்ல. ” அவள் நிலவுபோல அழகானவள்” இப்படி ஒரு வாக்கியம் கவிதைப் பிரதியினுள் இருந்தால், நாம் எவரும் உண்மையில் அவள் அழகானவளா என சோதித்துப் பார்க்க விரும்புவதில்லை. அழகானவள் என அது சொல்லும் இடத்திலிருந்துதான் நகருவோம். புறச் சூழலில் அவள் அழகானவள் என்று சொன்னால், கவிதைப் பிரதியினுள்ளிருந்த வாக்கியத்தை நம்பியதைப்போல எடுத்தக் கொள்வதில்லை. அது தொடங்குமிடத்திலிருந்துதான் காலம் ஆரம்பிக்கின்றது.
சரி, இன்னுமொரு விசயத்தையும் இங்கு பார்க்கலாமென்று நினைக்கிறேன். கவிதைப் பிரதிக்குள் காலம் எப்படி இயங்குகின்றது என்பது இன்னும் முக்கியமான ஒன்று. புறச் சூழலில் காலத்தின் செயற்பாடும் தன்மைகளும் உங்களுக்கு தெரிந்ததுதான். அதன் ஒழுங்கு, ஒரு தொடர்ச்சி மிக அவசியமானது. வரலாறு மற்றும் புறத்தில் எதுவும் நிகழ்வதற்கான இயக்கமே இந்த காலத் தொடர்ச்சியிலே இருக்கிறது. கவிதைப் பிரதிக்குள் அப்படி ஏதுமில்லை. உதாரணமாக ஒன்றை இங்கு சுட்டிக்காட்டுகிறேன். ” நாளை பூந்தோட்டத்திற்கு வா, தேனீர் அருந்துவோம்.” இப்படி யாரும் சொன்னால், நாம் நாளை அங்குபோனால் தேனீர் அருந்தலாம். அல்லது அருந்தாமலும் போகலாம். ஆயினும் இதற்கொரு காலம் நிச்சயமாக இருக்கிறது. அதாவது, இந்த வாக்கியத்தை சொன்ன அடுத்த நாள் என்பது நிச்சயமான ஒன்று. கவிதைப் பிரதியில் இந்த வாக்கியமிருக்கிறது என வைத்துக்கொள்ளுங்கள். அதைப் படிக்கும் அடுத்த நாள் வெளிக்கிட்டு பஸ் பிடித்து அதை எழுதியவரின் வீட்டுக்கு வாசித்த அனைவரும் போய் நிற்பார்களா என்ன? எப்போது எழுதப்பட்டது? எத்தனை வருடங்களுக்கு முன் இந்த அழைப்பு வந்தது? ஏதும் தெரிவதே இல்லை. ஆக, கவிதைப் பிரதி எப்போதும் காலத்தை குழப்பிவிடுகிறது. அதாவது, கவிதைப் பிரதியினுள் இயங்கும் சூழல் என்பது, காலத்தை பொருட்படுத்துவதே இல்லை. அதை கவிதையின் விளையாட்டுக்கான ஒன்றாகவே கருதுகிறது. விளையாட்டு என்று கவிதை சொல்லுவதுதான் அதன் சீரியசான இயங்குதளம். ஆக, காலமும் இங்கு நிலவுகிற அர்த்த்திலோ, தன்மையிலோ பண்பிலோ கவிதைப் பிரதியினுள் இருப்பதில்லை. ஏன் மொழிகூட இங்கு செயற்படுவதைப் போலவோ, அல்லது இயங்கும் விதிகளைப் பின்பற்றியோ கவிதைப் பிரதியினுள் இயங்குவதில்லை. இங்கு எப்படி அறிதல் வழிநடத்தப் படுகிறதோ அப்படி கவிதைப் பிரதியினுள் இருக்கும் சூழல் இல்லை. முற்றிலும் கற்பனையின் விதிகளால் நடந்தேறுகிறது. இதற்கு கட்டுப்பாடுகள் இல்லை. வரையறைகள் இல்லை. என்றைக்குமான நிலையான செயல் ஒழுங்கு இல்லை. கவிதைச் சம்பவங்கள், அவற்றிடையான எதிர்கொள்ளுதல்கள், அதிலிருந்து வெளிப்படும் கருத்து நிலைகள் என தற்காலிக, தற்செயலான, அடிக்கடி உருமாறக்கூடிய செயல்களாலும், உண்மைகளாலும், தனது சூழலை அமைத்திருப்பதுதான் கவிதைப் பிரதியாகும். அது, எந்தச் சூழலையோ, யதார்த்தத்த்தையோ, உண்மையையோ பிரதிபலிப்பதுமில்லை. வெளிப்படுத்துவதுமில்லை. ஆனால், பிரதிக்கு வெளியே புறச் சூழலில் நிலவுகிற உண்மையை சந்தேகிக்கவும், புதுப்பிக்கவும், தடுமாறச் செய்யவுமான வழிமுறைகளை எண்ணற்ற உண்மைகளை உருப்பெறச் செய்து நக்கலடிக்கிறது.
சிந்திப்பதற்கான பதிலிகளை உருவாக்குவதற்கான மனத் தயார்படுத்தலை பரிந்துரைக்கிறது. இதை எனது கவிதைப் பிரதி அறிந்து வைத்திருப்பதால், உண்மைகள் பற்றி சிறிதும் அலட்டிக் கொள்வதில்லை. அனேகமாக, உங்கள் கேள்விக்கான பதிலை, வேறுதிசைகளில் பயணித்தும் சொல்லியிருப்பதாகவே நினைக்கிறேன்.
One comment