வந்தனா பஸ்ஸில் ஏறிய போது பாதி பஸ்தான் நிரம்பி இருந்தது.
நாலைந்து அமெரிக்கர்கள். ஏழெட்டு இந்தியர்கள். சொற்பமாய் சீனத்து முகங்கள். அன்றாடம் பஸ்ஸில் ஏறும்போதெல்லாம் அவளுக்குப் பெருமை நெஞ்சில் பொங்கி வழிவதைத் தவிர்க்க முடிவதில்லை. எல்லோரையும் போல நானும் தினமும் வாஷிங்டன் டி.சிக்கு வேலைக்குச் செல்பவளாகி விட்டேன்.
ஆனால் கண்ணனுக்கு மட்டும் இன்னும் மனக்குறை தீரவில்லை.
கண்ணன் டி.சியில்தான் ஒரு மத்திய அரசு அலுவலகத்தில் மென்பொருளாளனாக இருக்கிறான். வர்ஜீனியா, மேரீலாண்ட் பகுதிகளில் வசிக்கும் இந்தியர்கள் பெரும்பாலும் அவனைப் போலவே ஏதாவதோர் அரசு அலுவலகத்தில் ஒப்பந்தப் பணியாளராகவோ, நிரந்தர ஊழியராகவோ இருப்பார்கள்.
இந்த இடத்துக்கு முதன் முதலில் அவன் கூட்டி வந்தது நினைவிருக்கிறது. அப்போது அவளுக்கு அமெரிக்கா புதிது. வாஷிங்டன் டி.சி புதிது. ஒயிட் ஹவுஸ் பார்க்க ஆசைப்பட்டாள்.
“என் ஆபிஸ் பக்கத்தில்தான் ஒயிட் ஹவுஸ் இருக்கு. நான் ஆபிஸ் போறப்போ என் கூடவே பஸ்ஸில் வா! டி.சி நகரத்தை சுத்திப் பார்த்துட்டு சாயந்தரம் ஒரே பஸ்ஸில் ரெண்டு பேரும் திரும்பி வந்துரலாம்.”
வீட்டிலிருந்து எட்டு நிமிஷ கார் பயணத்தில் அந்த இடத்துக்கு வந்தார்கள். குட்டி பஸ் ஷெல்ட்டருக்குப் பின்னால் பெரிய பார்க்கிங் லாட் இருந்தது. அதில் இரண்டு கார்களுக்கு நடுவே சொருகி நிறுத்தினான் கண்ணன்.
“கார்லயே டி.சி போக முடியாதா?”
கண்ணன் புன்னகைத்தான். “டி.சி மாதிரி பெரு நகரங்களில் டிராபிக்கை கட்டுப்படுத்த ஹெச் ஓ வி-ன்னு ஒரு சிஸ்டம் இருக்கு வந்தனா.”
“ஹெச் ஓ வியா?”
“ஹை ஆக்குபன்சி வெஹிகிள். ரஷ் ஹவர்ல கார்ல யாரும் தனியா போகக் கூடாது. போனா ரெண்டாயிரம் டாலர் வரைக்கும் அபராதம் தீட்டிருவாங்க. மூணு தடவைக்கு மேல அந்தத் தப்பை செஞ்சா லைசன்ஸைக் கூட பறிச்சிருவாங்க. ரெண்டு மூணு பேர் சேர்ந்துதான் காரில் போக முடியும். அதுக்கு கார் பூல்ன்னு பேர். ரொம்ப கோ- ஆர்டினேஷன் வேணும். மத்தவங்களுக்காக காலையும், மாலையும் காத்திருந்து வெறுத்துப் போய்த்தான் இப்படி பஸ்ஸில் போக ஆரம்பிச்சேன்.”
“ஓ…”
“இந்த இடத்துக்கு பார்க் அண்ட் ரைடுன்னு பேர். காரை இந்த பார்க்கிங் லாட்டில் இலவசமா பார்க் பண்ணிட்டு பஸ் பிடிச்சுப் போயிரலாம்.”
இப்படித்தான் அமெரிக்கா வந்ததிலிருந்து சின்னச் சின்ன விஷயங்களையும் குழந்தை மாதிரிக் கேட்டுக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது. கண்ணனும் சலிக்காமல் சொல்லிக் கொடுப்பான்.
ஆனால் அவன் சொல்லிக் கொடுக்கிற எல்லாமேவா மண்டையில் ஏறித் தொலைக்கிறது. சில விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடியாமல் திணறுகையில் வந்தனா இயலாமையால் அழுத கணங்கள் ரொம்ப அதிகம்.
ஊரில் செல்லமாய் வளர்ந்த பெண். அவள் அப்பா கொஞ்சம் பழமைவாதி. இந்த முன்னேறிய காலகட்டத்திலும் கல்யாணம் பண்ணி வைப்பதற்காகவென்றே அவளைப் பொத்திப் பொத்தி வளர்த்தி கண்ணனின் தலையில் கட்டி வைத்து விட்டார். பேருக்கு காலேஜ். பேங்க் தெரியாது. போஸ்ட் ஆஃபிஸ் தெரியாது. தட்டுத் தடுமாறும் ஆங்கிலம்.
ப்ரொஃபஷனல் கல்யாண ப்ரொஃபைல் ஃபோட்டோ டிரிக்கில் விழுந்து, ஒரு மாசம் இமெயிலில் பரிபாஷித்து (ஃப்ரெண்ட் எழுதிக் கொடுத்தாளாம்! முதலிரவு முடிந்து மூன்றாம் நாள் தெரிந்து கொண்டான்) பத்து நாள் லீவில் போய்த் தாலி கட்டி – டிப்பண்டண்ட் விசா வாங்கிக் கொடுத்துக் கூட்டி வந்த டிபிகல் என் ஆர் ஐ தமிழன் கண்ணன்.
அவள் வந்து மூன்றே மாதத்தில் தருணம் பார்த்துக் கனிந்து விழும் ஆப்பிள் போல் க்ரீன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் தகுதி கண்ணனுக்கு வந்து சேர்ந்தது. ஃபேஸ்புக்கில் அரட்டை அடித்துக் கொண்டு, திருட்டு விசிடி டாட் காமில் முந்தாநாள் ரிலீசான புதுப்படம் பார்த்துக் கொண்டு ஜாலியாய்ப் பொழுதைக் கழித்து வரும் ஹெச்4 மனைவிகளுக்கெல்லாம் அங்கேதான் தேனிலவு முடியும். அதிலிருந்துதான் சனி தசை ஆரம்பிக்கும்.
வேலைக்குப் போகும் தகுதி அவர்களுக்கு வந்து விடுவதால் – க்வாலிட்டி அஷ்யூரன்ஸ் படி, பிசினஸ் அஸிஸ்டெண்ட்டாக முயற்சி செய் என்று தொந்தரவு செய்ய ஆரம்பிப்பார்கள். வருஷத்துக்கு ஒரு ஹண்ட்ரட் கே கூடுதலாக வரும்படி வருமென்றால் லோன் போட்டு பெரியதாய் ஒரு வீடு வாங்கலாம் இல்லை டொயோட்டா கேம்ரியை விற்று விட்டு பிஎம்டபுள்யூ-வுக்கு அடிப் போடலாம் என்பதாகக் கணக்குப் போடத் துவங்குவார்கள்.
கண்ணனும் விதி விலக்கல்ல. க்யூ ஏ பயிற்சிக்கு அனுப்பினான். இரண்டாயிரம் டாலர் கிணற்றில் போட்ட கல் ஆனது. வந்தனாவுக்கு கம்ப்யூட்டர் சமாசாரங்கள் எதுவும் விளங்க மாட்டேனென்றது.
“ஸார், இவங்க வாயைத் திறந்து பேசலைன்னா ப்ராஜெக்ட்ல நுழைக்கறது ரொம்பக் கஷ்டம். மாக்கப் இண்ட்டர்வியூ நிறைய குடுத்துப் பார்த்துட்டோம். ஒரு இன்ச் கூட முன்னேற மாட்டேங்கிறாங்க.”
அவனுடைய நண்பர்களின் மனைவிகளெல்லாம், அங்கே வேலை கிடைத்தது இங்கே வேலை கிடைத்தது என்று ட்ரீட் தரும்போதெல்லாம் கண்ணனுக்கு உள்ளுக்குள் ஒரு பாய்லர் கொதித்தது.
“நான் வேணா ஜயண்ட் சூப்பர் ஸ்டோர்ல முயற்சி பண்ணிப் பார்க்கறேங்க. ஏதாவது பில்லிங் ஜாப் மாதிரிக் கிடைச்சதுன்னா…”
அவளை கேவலமாக ஒரு பார்வை பார்த்தான். “எட்டு மணி நேரம் கால் கடுக்க நிக்கணும். உன்னால முடியுமா? அப்படிக் கஷ்டப்பட்டாலும் மணிக்கு இருபது டாலருக்கு மேல தேறாது. பில்லிங், ரெஸ்டாரெண்ட், ஸ்கூல் அசிஸ்டெண்ட் இந்த மாதிரி நொச்சுப் பிடிச்ச வேலைகளையெல்லாம் மறந்துடு. சாஃப்ட்வேர்தான் பெஸ்ட் வந்தனா. மர மண்டைகளெல்லாம் என் கூட ஆபிசில் வேலை பார்க்கிறாங்க. நீ ஏன் பண்ண முடியாது?”
நான் மர மண்டையிலும் – ஈரத்தில் ஊறிய – அவ்வளவு சுலபத்தில் எதுவும் பற்றிக் கொள்ளாத மந்தமான மர மண்டை என்று அவனிடம் சொல்ல பயமாயிருந்தது. எப்படியோ கார் ஓட்டக் கற்றுக் கொண்டதே அவளைப் பொறுத்த வரை பெரும் சாதனை.
ஆனால் கண்ணனுக்கோ அது வெகு சாதாரணம். “அமெரிக்கா வந்துட்டா பெண்களெல்லாம் வண்டி ஓட்டக் கத்துக்கிட்டே ஆகணும். ஆண்களெல்லாம் சமைக்கக் கத்துக்கிட்டே ஆகணும்.”
“ஹாய்… குட்மார்னிங்! என்ன பலமான சிந்தனை?”
தினந்தோறும் பஸ்ஸில் வரும் அந்த அமெரிக்கன் அவள் தோளைத் தட்டிக் கேட்டதும் – சட்டென சுய நினைவுக்கு வந்தாள் வந்தனா.
“ஓ நத்திங்.”
“ஐ நோ… யூ ஆர் வொர்ரீட் அபவுட் தி ரைஸ் சிப்ஸ் டிரையிங் ஆன் யுவர் டெக், ரைட்? இந்தியப் பெண்களின் ஒரே கவலை அது ஒண்ணுதான்னு படிச்சிருக்கேன்.”
வந்தனா சிரித்து விட்டாள். இந்த மாதிரி சில பஸ் பிரயாணிகள்தான் இப்போதெல்லாம் அவள் வாழ்க்கையை சுவாரஸ்யமாக்குகிறார்கள். அவளும் பஸ்ஸில் ரெகுலராய் வரும் பல பேரிடம் பேசிப் பார்த்து விட்டாள். சைனீஸ் தாத்தா, மெக்சிகன் பெண்மணி, ரஷ்ய அழகி, இட்டாலியன் குட்டைப் பாவாடைக்காரி, எல்லோரும் சாஃப்ட்வேர் துறையில் இல்லை. இந்த இந்தியர்கள் மட்டும் ஏன் அது ஒன்றுதான் உலகம் என்கிற மாதிரி ஒரேடியாய்க் குதித்துக் கொண்டிருக்கிறார்கள்? அத்தனை இந்திய மனைவிகளையும் அடித்துப் புகை போட்டுப் பழுக்க வைத்து இந்தத் துறைக்குள் ஒட்ட வைத்தே ஆக வேண்டுமா?
அவள் இப்போது தேடிப் பிடித்திருப்பது ஐ.டி வேலை இல்லை. மற்றவர்களிடம் சொல்லிப் பெருமை பீற்றிக் கொள்ள முடிவதில்லை. அதுதான் கண்ணனின் பெரிய மனக்குறை.
பஸ் கிளம்பிய போதும் நிறைய இருக்கைகள் காலியாகவே இருந்தன. இது எட்டு மணிக்குப் புறப்படும் கடைசி பஸ். டி.சி நகரத்துக்குள் நுழையும்போதே ஒன்பது இருபது ஆகி விடும். ஒவ்வொரு நிறுத்தமாய்க் கடந்து இலக்கை அடையும் போது மணி பத்து ஆகி விடும். ஒன்பது மணிக்கு முன்னால் ஆபிசில் இருக்க வேண்டியவர்களுக்கு இந்த பஸ் உகந்தது இல்லை.
பஸ்ஸில் இருக்கும் பெரும்பாலானவர்கள் ஃப்ளெக்ஸிபில் உத்தியோகங்களில் இருப்பவர்கள்தான். பஸ் கிளம்பியதுமே பலர் லேப்டாப், ஸ்மார்ட் ஃபோனைக் குடைய ஆரம்பிக்க – சொற்பம் பேர் கண்ணசந்து தூங்க ஆரம்பிப்பார்கள். வந்தனாவுக்கு சின்ன வயசிலிருந்தே எந்தப் பிரயாணத்திலும் தூங்கிப் பழக்கமில்லை. இரவு நேர ரயில் பயணத்தில் கூட ஜன்னலில் கும்மிருட்டை கொட்டக் கொட்ட வேடிக்கை பார்த்துக் கொண்டு வருவாள்.
இந்த பஸ்ஸிலும் கண்ணுக்கு எட்டிய வரை யார் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்பதே அவள் பொழுதுபோக்கு.
பஸ் டல்லஸ் டோல் ரோடு வழியே விரைந்து – நெடுஞ்சாலை அறுபத்தியாறில் நுழைந்து சரியாய் ஒண்ணேகால் மணி நேரத்தில் வாஷிங்டன் டி.சியைத் தொட்டு விட்டது.
டி.சியில் இன்னும் டிராஃபிக் குறைந்தபாடில்லை. அது வரை சீறிப் பாய்ந்த பஸ் நகர நெரிசலில் மெல்ல மெல்ல ஊர்ந்து ஒரு வழியாய் டெப்போ அருகில் வந்து விட்டது. கடைசி ஸ்டாப்பில் இறங்க வந்தனா உட்பட மொத்தம் ஆறே பேர்கள்தான்.
அவர்கள் எல்லோருமே வந்தனாவுக்கு, “தேங்க்யூ, ஹேவ் ஏ குட் டே!” என்று சொல்லி விட்டுப் போக – வந்தனா கியரை பார்க்கிங்கில் போட்டு எஞ்சினை அணைத்து விட்டு – பஸ்ஸை விட்டு இறங்கிச் சென்றாள்.
ஹஹஹ்ஹஹ, எதிர்பார்க்காத முடிவு, அருமை
நன்றி.
Your thought sense is appreciated Sathyaraj Kumar !! Keep going !!!
@Sambath Kumar
Thank you!