கவிதையின் நகர்வுகள் – இனி என்ன?

றியாஸ் குரானா

பதாகை – நாலடியார், இன்னா நாற்பது இனியவை நாற்பது, கொன்றை வேந்தன், ஆத்திச்சூடி – என்று ஏராளமான நீதி நூல்கள் தமிழ் கவிதை மரபில் இருக்கின்றன. இவற்றை நாம் செய்யுட்கள் என்று வகைமைப்படுத்துகிறோமே தவிர, கவிதைகளாகக் கருதுவதில்லை. இது நம் மரபிலிருந்து நம்மைத் துண்டிப்பதாகாதா? எது கவிதை என்று கேட்பதைவிட, எப்படிப்பட்ட கவிதை என்று கேட்பது நம் புரிதலுக்கு உதவுவதாக இருக்குமா? பாடல்களையும் செய்யுட்களையும் கவிதையல்ல என்று விலக்கி வைப்பதற்கான தேவை என்ன?

றியாஸ் குரானா – உங்கள் கேள்வியை நான் விளங்கிக்கொண்ட வகையில் இதற்கு பதில் முயற்சிக்கிறேன். செய்யுள் மற்றும் பாடல் போன்றவைகள் எல்லாம் கவிதையின் வேறு வகையினங்கள்தான். அதாவது, கவிதைக் குடும்பத்தைச் சேர்ந்தவைதான். கவிதை மரபென்பது, இப்படி பல வகையினங்களை உள்ளடக்கிய ஒன்று. அவைதான் உண்மையில் தமிழ் கவிதையின் தொடர்ச்சி. இன்று புதுக்கவிதை எனச் சொல்லுவதோ அல்லது நவீன கவிதை எனச் சொல்லுவதோ தவிரவும், என்னைப் போன்றவர்கள் இன்னும் சற்று மேலேபோய் நவீனம் கடந்த கவிதை எனச் சொல்லுபவைகளோ தமிழ் கவிதை மரபைச் சேர்ந்தவை அல்ல. ஆயினும், இந்த கவிதைக் குடும்பத்திற்குள் சேர்த்துக்கொள்ளக்கூடிய புதிய வகையினங்கள் இன்று தமிழ் மனதினதும், தமிழ் கவிதை பாரம்பரியத்தினதும், தமிழ் நிலவியலினதுமான உள்ளீடுகளை தனக்குள் அடிப்படையில் வைத்துக்கொண்டு, கவிதைக்கான கற்பனைச் செயலை உலகளாவியதாக ஆக்கிவிட்டிருக்கிறது. இது தனித்துவமும், பன்மைத்துவமும் கவிதை வெளியில் இணைந்து செயற்படுவதாகும்.

ஆனால், இங்கு நீங்கள் கேட்டிருப்பதைப்போல செய்யுள், பாடல் போன்றவை கவிதை அல்ல என்ற ஒரு நவீன பொது உளவியல் படர்ந்திருக்கிறது. இந்தக் கவிதை குறித்த பொது உளவியல் உருப்பெற முக்கிய காரணம், நவீன கவிதை தனது இடத்தை தமிழில் உருவாக்குவதற்கு மேற்கொண்ட போராட்டத்தினடியாக வளர்ந்த ஒரு உப விளைவு மாத்திரமே. உங்களுக்கு தெரியும், இலக்கணத்திற்குட்பட்ட வகையில் எழுதுவது கவிதையை கட்டுப்படுத்துவதாகும் என்ற பிரச்சாரங்களை நீங்கள் அறிவீர்கள். வெளிப்படையான சட்டகங்கள் கவிதைக்கு அப்போது இருந்தன. குறள், வெண்பா என அடுக்கிக்கொண்டே போகலாம். இந்தச் சட்டகங்களுக்கென்று விதிமுறைகளும் இருந்தன. அந்த விதிமுறைகளை மீறாது, குறித்த சட்டகங்களினுள் கற்பனைச் செயலினாடாக கவிதையைக் கொண்டுபோய் பொருத்தி வைப்பது என்பதே கவிதையாக பயன்பாட்டிலிருந்தது. இந்தச் சட்டகங்களை உடைத்துக்கொண்டும், விதிமுறைகளை தகர்த்துக்கொண்டும், சுதந்திரமாக விரும்பிய வகையில் கவிதை தன்னை நிகழ்த்திக் காட்டலாம் என்ற நிலை ஒரு கட்டத்தில் உலகளவில் ஏற்பட்டது. அது தமிழ் மொழிவெளியிலும் தாக்கம் செலுத்தியது. இன்று நிலைபெற்றும் விட்டது. ஆக, இன்று இப்படியான பிரதிகளை கவிதை என முன்வைக்கும்போது, செய்யுள் மற்றும் பா வடிவங்களை கவிதையாக நினைப்பதை தவிர்ப்பதாகவே மாற்றமடைந்துவிட்டது.

நீங்கள் ஒரு கேள்வியை கவிதை குறித்து முன்னெடுத்திருக்கிறீர்கள். எது கவிதை என்பதைவிட, எப்படிப்பட்ட கவிதை என்பதாக. நான் இந்தக் கேள்வியை சற்று மாற்றிக் கேட்க விரும்புகிறேன். அப்படிக் கேட்பதினாடாக மேலும் எனது பதிலை விரிவாக நகர்த்த முடியும் என நம்புகிறேன். அந்தக் கேள்வி இதுதான். ” ஒரு பிரதியை கவிதையாக எது மாற்றுகிறது? அல்லது கவிதையாக நம்பச் செய்வதற்கு எவை தேவைப்படுகிறது?” ஆம், இந்தக் கேள்வி மிக சிக்கலான கேள்விதான். நாம் பேச முற்படும் விசயத்தை இது மேலும் சிக்கல் நிறைந்ததாக மாற்றியிருக்கிறது. எனினும் மிகப் பொருத்தமாகவும் இருக்கிறது.

இந்தக் கேள்வி நமக்கு முக்கியமான ஒரு பதிலைத் தன்னுள் கொண்டிருக்கிறது. ஒரே வகையான பிரதியை, அனைவரும் கவிதையாக ஏற்பதில்லை. அனைத்து மொழிகளும் ஒரே வகையான பிரதியை கவிதையாக நம்புவதில்லை. இப்படி, கலாசாரம், நாடுகள், இனங்கள், குழுக்கள், என விரிவுபடக்கூடியது அதனுள் பொதிந்திருக்கும் பதில். அவை குறித்து பேசுவதற்கு முன், இன்று நவீன கவிதை என நம்பப்படும் ஒன்று எப்படியான வழிகளில் கவிதையாக அடையாளம் காணப்படுகிறது என்பதை சற்று யோசித்துப் பார்ப்போம். அது அனேகமாக, கவிதைச் செயலுக்கு புறம்பான பல அம்சங்களால் தன்னை கவிதையாக அறிவிப்பதை உங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

தாளின் அச்சுறுத்தும் வெற்றிடங்களின் நடுவே வரி வரியாக உடைத்து ஒரு வசனம் எழுதப்பட்டிருந்தால் அதை கவிதை என எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. வரிவரியாக உடைத்துக் அடுக்கப்பட்டிருக்கும் பெட்டிக்கடை விலைப் பட்டியலை தொலைவில் நின்று பார்க்கும்போதுகூட கவிதை என நினைக்க வேண்டிவருகிறது. இந்த வரிவடிவம் ஒரு எழுதாத விதியாக, கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டிய இலக்கணமாக நவீன கவிதையைப் பீடித்திருக்கிறது. மற்றது இலக்கிய இதழ் என நம்பப்படும் ஒன்றில் கவிதைகள் பிரசுரிக்கும் பகுதியில் அச்சிடப்பட்டிருப்பதால் அவைகள் கவிதைகள்தான் என நம்மை நம்பச் செய்ய முயற்சிக்கின்றன.

பலராலும் நவீன கவிஞர் என பேசப்படும் ஒருவரின் பெயர், இந்த அடுக்கப்பட்ட சிறிய வரிகளின் கீழ் எழுதப்பட்டிருந்தாலோ அல்லது அப்பிரதிக்கு உரிமை கோரியிருந்தாலோ அதை கவிதை என நம்ப வேண்டிவருகிறது. சரி, புத்தகம் தொகுக்கும்போது, உள்ளே கவிதைத் தொகுதி என அழைக்கப்படும் ஒரு செய்தியே , இந்தப் புத்தகத்தினுள் இருப்பவை கவிதைகள்தான் என சாட்சியம் கூறுகிறது. அல்லது பரிந்துரைக்கிறது. அதனாலும் நாம் அவைகளை கவிதை என நம்ப வேண்டிவருகிறது. ஒரு பிரதியை கவிதையாக ஆக்குவதில் இவைகளின் இந்தப் பங்களிப்புக்கள்தான் இன்று பிரதானமான ஒன்றாக இருக்கிறது என்பதை நீங்கள் மறுக்கவே முடியாது.

சரி இது தவிரவும் நவீன கவிதைகளுக்கு ஒரு இறுக்கமான வடிவமிருக்கிறது. (நான் அவைகளை ஏற்று கவிதை செய்வதில்லை) வரிவரியாக அடுக்கப்படும் சொற்களினாடாக ஒரு செய்தியை கவித்துவமாக நகர்த்தி வந்து கடைசியில் ஒரு அதிரடிப்பை செய்து நிகழ்த்துவது. அந்த அதிரடிப்பு அதை நவீன கவிதையாக மாற்றுவதாக இங்கு ஒரு நம்பிக்கை உண்டு. ஒரு இடத்தில் ஆரம்பித்து நகர்ந்து வந்து கடைசியில் ஒரு சாக் (அதிரடிப்பு) தருவது. இவ்வளவுதான் நவீன கவிதையின் விதிமுறை. அல்லது இவ்வளவையும்தான் இங்கு கையேற்று செய்துகொண்டிருக்கிறார்கள். அதன் உள்ளடக்கம் எப்படி இருக்க வேண்டுமென்று சொல்லத் தேவையில்லை. அது மட்டும் மாறவில்லை. சங்ககாலம் தொடங்கி இன்றுவரை சூழலைப் பிரதிபலித்தல் அல்லது எதார்தத்தை பதிவுசெய்தல் இவ்வளவுதான்.

இங்கு ஒரு விசயம் முக்கியமானது. அதாவது, கவிதைக்குப் புறம்பான காரணிகள் கூட ஒரு பிரதியை கவிதையாக ஆக்கிக் காட்டுவதற்கு உதவுகிறது என்பதுதான் ஆச்சரியமானது. இந்த அரசியலை கவனமாக செயல்படுத்துவதினாடாக கவிஞர்களாக தம்மை ஆக்கிக்கொண்டவர்கள் இங்கு அதிகம்.

ஒரு சமூகம் எதைக் கவிதை என கருத விரும்புகிறதோ, அவைகளை தனது சமூகவெளியில் கொண்டாடுவதினூடாக அவை கவிதைகளாக ஆக்கப்படுகின்றன. ஒரு குழு, அதாவது இலக்கியத்தில் பிரபலமாகவும், செல்வாக்கு மிக்கதாகவும் கருதப்படும் ஒரு குழு, அதுபோல், செல்வாக்கு குறைந்த ஒரு குழு எதை கவிதையாக கருதுகிறதோ அவைகள் அந்தந்த இடத்தில் கவிதையாக கருதப்படவும் வாய்ப்புகள் அதிகம். ஈழத்தைப் பொறுத்தமட்டில் ஒரு காலத்தில் ஒரு அரசியல் செய்தி மற்றும் ஒரு பிரதியில் ”துப்பாக்கி” என்ற சொல் வந்தாலே அது கவிதையாக பேசப்பட்ட துயரமெல்லாம் நடந்துதான் இருக்கிறது. நான் சொல்லுவது பொய் என்றால்” மரணத்துள் வாழ்வோம்” என்ற தொகுப்பை படித்துப்பாருங்கள்.

ஆக, கவிதை என்ற ஒரு விசயத்தை தீர்மானிக்கும் இந்தக் காரணிகளை இனம்கண்டு விவாதிப்பதினாடாகத்தான் தமிழ்க்கவிதை அடுத்த கட்டத்திற்கு நகரும் ஒரு பொதுச் செயற்பாட்டை உருவாக்க முடியும். இல்லாவிட்டால் என்ன, நாங்கள் எங்கள் செயலை தொடர்ந்து கொண்டுதான் இருப்போம்.

இது தோட்டக்காரர்களின் உதாரணத்திற்கு ஒப்பானது. தனது தோட்டத்தில் எது வளரக்கூடாது என விரும்புகிறானோ அவைகளை ”களை” என பிடுங்கி வீசுவதைப் போன்றது. கத்தரி செய்பவனின் தோட்டத்தில் இடையிடையே கொச்சி முளைத்திருந்தால் ”கொச்சி” பெறுமதியற்றதாக மாறிவிடுகிறது. அதாவது களையாக ஆகிவிடுகிறது. இதுபோலதான், சமூகம், இனம், கலாச்சாரம், மொழி, குழுக்கள், அரசியல் சார்புகள், நாடுகள் என அனைத்தும் தாங்கள் எதை கவிதை என நம்புகிறார்களோ அவை தவிர பிறதை கவிதையல்ல என ஒதுக்கி வைக்கவும், அழித்துவிடவும் முயற்சிக்கிறார்கள்.

கவிதை குறித்த அனைத்து வகையினங்களும் புளங்கும் ஓர் இன்றியமையாத வெளியாக மொழிப்பரப்பு பாதுகாக்கப்பட வேண்டும். அனைத்துக்குமான பார்வையாளர்கள் இருக்கிறார்கள். செய்யுள் பாடல் போன்ற வகையினங்களைவிட மிக மோசமான பின்னடைவை நவீன கவிதைகள் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. நவீன கவிதைகள் அவைகளைவிட கவர்ச்சி குறைந்துவிட்டன. நவீன கவிதையை கைவிட்டுவிட்டு அதைக் கடந்து போக முயற்சிக்க வேண்டும். அல்லது மரபுக் கவிதைக்கே கொஞ்ச காலம் திரும்பிவிடலாம்.

நவீன கவிதைகளுக்கென உருவாகியிருக்கும் நிர்ப்பந்தமற்ற இந்த இலக்கணங்கள், அதன் அங்கமாக மாறியிருக்கின்றன. அவைகளை கைவிட்டுவிட்டு பரிசோதனைக் கவிதை முயற்சியில் இறங்க வேண்டும். இல்லாவிட்டாலும், குறைந்தபட்சம் பரிசோதனை முயற்சியில் ஈடுபடுபவைகளையாவது ஊக்குவிக்க வேண்டும். சரி தோழர் நானே ஒரு கேள்வியை குறுக்கீடாக உருவாக்கி இந்தப் பதிலை வளர்த்து கொண்டு வந்துவிட்டேன். எனினும், உங்கள் கேள்வியில் மறைந்திருந்த எதிர்பார்ப்பும் இது என்றே நினைக்கிறேன். சிறிய ஒரு குழப்பத்தினால் பதில் தாமதமாகிவிட்டது என்பதை இருவரும் பகிரந்துகொண்டோம். அது எனக்கு பிடித்திருந்தது. மிக்க அன்பு.

One comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.