பத்து புத்தகங்கள் – எஸ் சுரேஷ் பட்டியல்

 
 
அண்மையில் பல நண்பர்கள் குறிப்பிடத்தக்க பத்து புத்தகங்கள் என்று ஒரு பட்டியலை பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டனர். நண்பர் ஸ்ரீதர் நாராயணன் எனக்கும் அழைப்பு விடுத்திருந்ததால் நானும் பட்டியலிட்டேன்.  “போரும் அமைதியும்”, “குற்றமும் தண்டனையும்” போன்ற இலக்கிய உச்சங்களைத் தொட்ட நாவல்களைதான் அதில் பேச வேண்டியிருந்தது. இது போன்ற பட்டியல்களில் ஒரு சிக்கல், நாம் சொல்லும் எல்லா புத்தகங்களும் எல்லாருக்கும் சுவையாக இருக்காது என்பதுதான். என்னா ஆனாலும், எல்லாரும் “போரும் அமைதியும்”, அல்லது, “யூலிஸ்சஸ்” நாவலை எடுத்துப் படித்து முடிக்கப் போவதில்லை. பட்டியலில் உள்ள பல புத்தகங்களின் பெயர்களைப் பார்த்ததுமே இலக்கியப் படைப்புகள் என்றால் கனமாக இருக்கும், போர் அடிக்கும், பொறுமை இருந்தால்தான் படிக்க முடியும் என்ற எண்ணம் எழுகிறது. இலக்கியம் வாசிப்பதில் நாட்டம் இருப்பவர்களுக்கு இந்தப் புத்தகங்கள் சுவாரசியமாக இருக்கலாம், ஆனால் மற்ற அனைவருக்கும் இதை எல்லாம் படித்து முடிப்பது ஒரு கடமை போலதான் இருக்கும் என்று நினைக்கிறேன். எனவே, நான் இந்தப் பட்டியலைத் தொகுக்கும்போது இது விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டேன் – இவை இலக்கியமாக ஏற்றுக்கொள்ளப்படும் படைப்புகள், அதே சமயம் புதுமையானவை, சுவாரசியமானவை. என் ரசனையும் உங்கள் ரசனையும் வேறுபடலாம், எனக்கு நன்றாக இருப்பது உங்களுக்கு நன்றாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால் அளப்பரிய பொறுமைக்கான அவசியம் இல்லாமல், கொஞ்சம் பொறுமையாகவும் ஓரளவு ஆர்வமாகவும் இவற்றை நீங்கள் வாசிக்க நேர்ந்தால், நிச்சயம் இந்தப் புத்தகங்களைப் பாராட்டுவீர்கள்.
 
என்ற சிறு முன்னுரையோடு, என் பரிந்துரைப் பட்டியலை அளிக்கிறேன்:

 
1 Embers by Sandor Marai:
 
வெகுகாலத்துக்கு முன் டேவிட் டேவிடார் ஹிந்து நாளிதழில் அவர் எழுதிக் கொண்டிருந்த பத்தியில் இந்தப் புத்தகத்தை பரிந்துரைத்தார். ஏதோ ஒரு சிறப்பு வெளியீடாக, பெங்குவின் வெளியிட்டிருந்த நான்கு புத்தகங்களில் இதுவும் ஒன்று.  Sandor Marai ஒரு ஹங்கேரிய எழுத்தாளர், அவர் எழுதியுள்ள புத்தகங்களில் இந்தியாவில் கிடைக்கும் வெகு சிலவற்றுள் இது ஒன்று. இந்த நாவலின் துவக்கத்தில் ஒரு முதியவர் தன் நண்பரின் வருகைக்காகக் காத்திருக்கிறார், அவர் தன் நண்பரைச் சந்தித்து வெகு காலமாயிற்று. இந்தக் காத்திருப்பில், மிக நெருக்கமான நட்பையும் முக்கோணக் காதலையும் துரோகத்தையும் விசுவாசத்தையும் வெளிப்படுத்தும் சித்திரமொன்று விவரிக்கப்படுகிறது. கதை சொல்லப்படும்விதமதான் நாவலின் சிறப்பம்சம்: ஒவ்வொரு திரையாக விலக்கப்பட்டு, மேலும் மேலும் ஆழமான உண்மைகள் வெளிபப்டுகின்ர்ணா, ஆனால் மிக இனிய, இன்னதென்று சொல்வதற்கில்லாத ஒரு முடிவுடன் நாவல் நிறைவடைகிறது.
 
2. Chronicle of a Death Foretold by Gabriel Garcia Marquez:
 
மிகவும் மதிக்கப்படும் எழுத்தாளர் ஒருவரின் நாவல் இத்தனை சுவாரசியமாகை இருக்க முடியுமா என்ற ஆச்சரியத்தை என் நண்பர்களில் ஒருவர் டிவிட்டரில் வெளிப்படுத்தினார். ஒரு முறை பங்களூருவிலிருந்து திருப்பத்திக்கு ரயில் பயணம் செய்து கொண்டிருந்தபோது ஓரே மூச்சில் இதை வாசித்து முடித்தேன். காதல், நாடகீய உச்சங்கள், கௌரவம் போன்ற விழுமியங்கள், குறைகள் மிகுந்த நீதி என்ற விபரீத கலவை இந்த நாவல். என் அனுபவத்தில் மார்க்கேஸ் வாசிப்பதற்கு மிகச் சுவாரசியமான எழுத்தாளராகவெ இருக்கிறார், ஆனால் சிலருக்கு இதில் மாற்றுக் கருத்து உண்டு. ஆனால் அவர்களும்கூட இந்த நாவல் சுவாரசியமாக இருக்கிறது என்பதை மறுக்க மாட்டார்கள். 
 
3. Carvalho by Poornachandra Tejaswi :
 
‘சிதம்பர ரகசியம்’ நாவலை இந்தப் பட்டியலில் சேர்க்க ஆசைப்பட்டேன், ஆனால் இந்த நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு எளிதாகக் கிடைக்கிறது. ஒரு விஞ்ஞானியின் ஆய்வு குரித்ட கதை இது, அவன் பறக்கும் பல்லி ஒன்றைத் தேடிச் செல்கிறான். வழக்கம் போலவே தேஜஸ்வி நகைச்சுவை நிறைந்த சம்பவங்களின்வழி கதையைக கொண்டு செல்கிறார். பல பாத்த்ரங்கள் மறக்க முடியாதவர்கள். வழக்கம் போலவே இதிலும் நாம் அறிவியல் அணுகல் இல்லாதிருப்பதையும் சுற்றுச்சூழல் சீரழிவையும் தேஜஸ்வி விமரிசிக்கிறார். நகைச்சுவையும் பாத்திரங்களும் நம் ஆர்வத்தைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்கின்றன.
 
4. Aunt Julia and the Scriptwriter by Mario Vargas Llosa : 
 
இந்த நாவலைப் படிக்க ஆரம்பித்தால் முடிக்காமல் கீழே வைக்க முடியாது, என்று நண்பர் கவிராஜன் கூறியிருந்தார். சரியாகத்தான் சொன்னார். கற்பனை வளம் மிகுந்த நாவல் இது, பிரதான காதல் கதையோடு சில ஆச்சரியமான கிளைக்கதைகளும் சொல்லப்படுகின்றன. திரைக்கதை எழுதுபவரின் கதைகள் இணைவது மிக உயர்ந்த கற்பனை. இந்த நாவலில் இரு திரிகள்- நாயகனுக்கு ஜூலியா அத்தனை மீதான அன்பு, திரைக்கதை எழுதுபவரின் ரேடியோ நாடகங்கள். மிக மென்மையான காதல் கதையாகவும் இதை வாசிக்கலாம், திரைக்கதை எழுதுபவரைப் பற்றிய பைதியக்காரத்தனமான கதையாகவும் இதை வாசிக்கலாம். லோசாவின் வேறு நாவல் எதையும் நான் வாசித்ததில்லை- லோசாவின் வழமையான கதையல்ல இது என்று சொல்கிறார்கள், 
 
5. Vaadivasal by Chellappa:
 
கிராம அமைப்பில் உள்ள சாத்தியம் போன்ற பல உள்ளுறைகளைக் கொண்ட நாவல் இது என்று ஆக்ஸ்போர்டு பிரஸ் ஆங்கில மொழிபெயர்ப்பு பதிப்பின் முன்னுரை குறிப்பிடுகிறது. மனிதனுக்கும் மிருகத்துக்கும் இடையிலான போராட்டம் என்று நேரடியாகவே வாசித்து ரசிக்கக்கூடிய கதை இது. இப்படிப்பட்ட ஒரு எளிய வாசிப்பே ஒரு கிளாசிக்கை வாசித்த திரைவை அளிப்பதாக இருக்கும். காரணம், செல்லப்பாவின் விவரணைகள் இதுவரை அடக்கப்படாத காளைக்கும் அதனால் கொல்லப்பட்டவனின் மகனுக்கும் இடையில் நடக்கும் போராட்டத்தை அற்புதமாகச் சித்தரிக்கின்றன. பழிக்குப் பழி வாங்கும் வீர சாகசக்கதை என்றுகூடச் சொல்லலாம். இதை கல்யாணராமன் மிகச் சிறப்பாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.
 
6. French Lieutenant’s Woman by John Fowles:
 
முதலில் சொல்லப்பட்ட எம்பர்ஸ் என்ற நாவலைப் போலவே இதிலும் கதை மெல்ல மெல்லவே விரிகிறது, ஒவ்வொரு அடுக்காக. இந்தக் கதையின் நாயகனுக்கு திருமணம் நிச்சயமாகி இருக்கிறது. நிச்சயமான பின்  வேறொரு பெண்ணைக் காதலிக்கிறான். கதையில் வெளிப்படும் ஒவ்வொரு அடுக்கும் இந்தப் பெண்ணின் மர்மத்தின் திரையை விலக்கி இன்னொரு முகத்தைக் காட்டுகின்றன. இதை வழக்கமான ஒரு காதல் கதையாகப் படிக்கலாம்- ஒரு பெண் மரபார்ந்த, அலுப்பூட்டகூடிய சாதாரணப் பெண், இன்னொருத்தி மர்மம் நிறைந்தவள், ஆர்வத்தைத் தூண்டுபவள்- கதை சொல்லப்பட்ட விதத்தில் இதன் சுவாரசியம் இருக்கிறது.
 
7. Catch 22 by Joseph Heller:
 
நகைச்சுவையாக எழுதும் ஏறத்தாழ எல்லா எழுத்தாளர்களையும் சாதாரணமானவர்களாக நினைக்கச் செய்த நாவல் இது. இருண்ட நகைச்சுவை நிறைந்த, போருக்கு எதிரான இந்த நாவல் போரில் அபத்தத்தைப் பேசுகிறது. போருக்கு எதிரான, Erich Maria Remarqueன் ‘All Quite on the Western Front’ ஹெமிங்வே எழுதிய  ‘Farewell to Arms’ முதலிய மிகச்சிறந்த நாவல்களும் உண்டு, இவை போரைத் தீவிரமாக எடுத்துக் கொண்டு அதற்கு எதிரான ஒரு தரப்பை உருவாக்குகின்றன. ஆனால் போர் அபத்தமானது என்ற உணர்வை உருவாக்கி போரை நிராகரிக்கும் நாவல் இது. காட்ச்-22 என்று இப்போது எல்லாரும் பேசுகிறார்கள், ஆனால் நாவலைப் படித்தால்தான் இதன் முழுப்பொருள் விளங்கும்.
 
8. Pedro Paramo by Juan Rulfo:
 
படிப்பவர்கள் பலரும் கதை புரியவில்லை என்று சொல்வார்கள் என்பதால் இந்தப் பட்டியலில் இதைச் சேர்க்க சிறிது தயக்கமாக் இருக்கிறது. ஆனால் புரிந்து கொள்பவர்களுக்கு இதில் நிகழ்த்தப்பட்டிருக்கும் பிரமிக்க வைக்கும் சாதனை ஒரு நல்ல வாசிப்பு அனுபவமாக இருக்கும். கனவு போன்ற இந்த நாவலைப் படித்து முடித்ததும் நாம் களைப்பு நிறைந்தவர்களாக எங்கே இருக்கிறோம் என்ன செய்கிறோம் என்று குழப்பமூட்டும் களைக்க வைக்கும் நாவல். மார்க்கேஸ் மற்றும் பலரின் மாய எதார்த்தத்தின் முன்னோடி என்று இதைச் சொல்கிறார்கள். அவரும் பிற தென்னாப்பிரிக்க எழுத்தாளர்களும் இவரை ஏன் இந்த அளவுக்கு போற்றுகிறார்கள் என்பதை இந்த நாவல் உணர்த்துகிறது
 
9. Jeevichirikkunnavarkku Vendiyulla Oppees by Johny Miranda:
 
போர்ச்சுகீசிய பின்னணியில் கிறித்தவ சமூக நிலையை விவரிக்கும் இந்த மலையாள நாவல் புதுமையான கதைசொல்லலைக் கையாள்கிறது. மணலில் புதைக்கப்பட்ட பன்றி போன்ற சில காட்சிகள் நாவலை முடித்து வெகு காலம் ஆனபின்னும் நம் மனதில் நிற்பவை. விளிம்பு நிலையில் இருப்பவர்களின் வாழ்வை விவரிக்கும் இந்த நாவல் ஒரு சமூக ஆவணம் என்று சொல்லத்தக்க சிறந்த கதை. தொன்மம், நம்பிக்கை மற்றும் மரபை சம அளவில் விவாதிக்கும் மிகச் சிறந்த குறுநாவல் இது. மூல நூலுக்குரிய சூழலை ஆங்கிலத்தில் உருவாக்கும் வகையில் சஜய் ஜோஸ் நாவலை மொழிபெயர்த்திருக்கிறார்.   
 
10. Sophie’s World by Jostein Gaarder:
 
இது புனைவல்ல என்பதால் இலக்கியப் பட்டியலில் இடம் பெறக்கூடாது என்பது உண்மைதான். ஆனால் நீங்கள் வாசிக்கக்கூடிய சுவாரசியமான புத்தகங்களில் இதுவும் ஒன்று என்பதால் இதை இந்தப் பட்டியலில் சேர்க்கிறேன். கிறிஸ்டோபர் நோலன் இன்சப்ஷன் என்ற திரைப்படம் எடுப்பதற்கு வெகு காலம் முன்னரே Jostein Gaarder இந்தப் புத்தகத்தை எழுதிவிட்டார். மேற்குலக தத்துவத்தைப் பேச கனவுக்குள் கனவு என்ற உத்தியை இந்த நூல் கையாள்கிறது. படத்தில் கனவுக்குள் கனவு என்பது நம் ஆர்வத்தைத் தூண்ட பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இங்கு வெவ்வேறு தத்துவங்களைப் பேச பயன்படுத்தப்படுகிறது. எல்லா தத்துவங்களும் எது உண்மை எது பொய் என்றுதான் ஆய்வு செய்கின்றன. இந்தப் பருண்ம உலகம் மெய்யானதா என்பது போன்ற கேள்விகள் தத்துவங்களில் முக்கியமானவை. எனவே தத்துவத்தை அறிய இந்த நூலின் அணுகுமுறைதான் சரியானது என்று தோன்றுகிறது. எனக்கு தத்துவம் தெரியாது, எனவே வெவ்வேறு தத்துவங்கள் எவ்வளவு சரியாக விவரிக்கப்படுகின்றன என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால் சுவாரசியமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
 
(குறிப்பு: Maj Sjowall – Per Wahloo, Raymond Chandler, Josephine Tey போன்றவர்களின் துப்பறியும் கதைகள் Le Carre எழுதிய உளவுக் கதைகள் போன்றவற்றை இங்கு பட்டியளிடவில்லை. இவற்றையும் கிளாசிக் இலக்கியங்கள் என்றுதான் நான் கருதுகிறேன், ஆனால் கதை காரணமாகவே இவை சுவாரசியமாக இருக்கின்றன. அதனால்தான் Phantom of the Opera’, ‘Riddle of the Sands’, ‘Moonstone’ போன்றவையும் பட்டியலில் இடம் பெறவில்லை)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.