பாரதி என்னும் பற்றுக்கோடு

– கதை: ஸ்ரீதர் நாராயணன்; ஓவியம்: யாத்ரீகன்

yathrigan-agni

 

‘அக்னி அண்ட் அதர் போயம்ஸ் அண்ட் ட்ரான்ஸ்லேஷன்ஸ்….”

கரகரகொரகொரவென அவ்வப்போது அலையடித்து கலைத்துக் கொண்டிருந்த தொலைபேசிக் குரலில் பத்மநாபன் சொல்லிக் கொண்டே இருந்தான்.

‘என்னடா’ என்று நான் சற்று உரக்கவே கேட்டு மூன்று நொடிகள் தாமதத்தில் அவன் காதுக்கு போய் சேர்ந்ததிருக்க வேண்டும்.

மீண்டும் ‘அக்னி அண்ட் அதர் போயம்ஸ் அண்ட் ட்ரான்ஸ்லேஷன்ஸ் அண்ட் எஸ்ஸேஸ் அண்ட் அதர் ப்ரோஸ் ஃப்ராக்மெண்ட்ஸ்… இந்த பொத்தவம்தாம்டே. பாரதி பிரசுராலயம் வெளியீடு. மொத பதிப்பு ஆயிரத்தி தொள்ளாயிரத்து நுப்பத்திரெண்டுல வந்திருக்கு. அங்கன ஏதாச்சும் லைப்ரரில இருக்கான்னு பாருடே. நம்ம பாரதிப் புலவர் அய்யாவோட காப்பிய எவனொ கோண்டுட்டு போயிட்டான்னு ரொம்ப நாளா சொல்லிட்டிருந்தாவ. அங்கதான் அல்லா பளய பொத்தவத்தையும் மைக்ரோ பிலிமில் போட்டு வச்சிருக்கானுவளாமே. அய்யாவுக்கு ஒண்ணு வாங்கிட்டு வாடே’

மேலே சொன்னது முழுவதுமாக எனக்கு போனில் கேட்க முடியாமல் பத்மநாபனின் குரல் துண்டு துண்டாக வெட்டித்தான் கேட்டது. தொலைபேசி இணைப்பக பிரச்னையால் காணாமல் போனவற்றை நானாக இட்டு நிரப்பி புரிந்துகொள்வதற்குள் என் காலிங் கார்டின் இருப்பு தீர்ந்து போய்விட்டதாக அறிவிப்பு வந்து அழைப்பு நின்று போனது.

ஏற்கெனவே திகைப்பும் வியப்புமாக ஒரு பிரமிப்பு நிலையில் இருந்த எனக்கு இப்போது சற்று எரிச்சலும் சேர்ந்து கொண்டது.

ஏற்கெனவே திகைப்பும் வியப்புமாக ஒரு பிரமிப்பு நிலையில் இருந்த எனக்கு இப்போது சற்று எரிச்சலும் சேர்ந்து கொண்டது.
முதல் ஃப்ளைட் போய் உலகவர்த்தக கட்டிடத்தை இடித்ததை சந்தானம்தான் ஏதோ ஒரு நியூஸ்பேப்பர் சைட்டில் படித்துவிட்டு எங்களுக்கு பரபரப்பாக சொன்னான். அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் ஆரவாரமற்ற ஜேஸ்டன்வில் நகரத்தில் அந்த செய்தி எங்களைத்தவிர மற்றவருக்கு அவ்வளவு பரபரப்பாக இருந்திருக்காது என்று நினைத்தேன். ஆனால் மிஸ்டர் பெய்ன்ஸ் மிகவும் தேசபற்று மிக்கவராக இருந்தார்.

‘இது அமெரிக்க தேசத்திற்கு விடப்பட்ட மிகப்பெரிய சவால். எனக்கு மனசு பாரமாக இருக்கிறது. இன்றைக்கு பணி ஏதும் கிடையாது. நீங்கள் எல்லோரும் பத்திரமாக வீடு போய் சேருங்கள். நாளை சந்திப்போம்’ என்று அறிவித்துவிட்டு அவரும் வீட்டிற்குப் போய்விட்டார். வீட்டிற்கு வந்து ஃபாக்ஸ் செய்தியை போட்டு பார்த்துக் கொண்டே மதுரைக்கு ஃபோன் அடித்து நிலவரத்தை பற்றி சொல்லிவிடலாம் என்று முயன்றால் அத்தனை இணைப்புகளும் பிஸியாக இருந்தன. டிவியில் அப்போது இரண்டாவது ஃப்ளைட் வந்து மோதுவதை படம்பிடித்து தேயத்தேய காட்டிக் கொண்டிருந்தார்கள். பெண்டகனில் இன்னொரு ஃப்ளைட் மோதிவிட்டதாக அடியில் ஃப்ளாஷ் செய்தி வேறு ஓடிக்கொண்டிருந்தது. ஆஃப்கானிஸ்தானின் அமெரிக்க தூதர் செய்திவாசிப்பவருடன் உரையாடும் போது நடுவே போரில்லா சூழலுக்கு வேண்டுகோள் விடுக்க படு சூடாக விவாதம் போய்க்கொண்டிருந்தது.

இந்த களேபரத்திற்கெல்லாம் நடுவில், என்னுடைய விடாமுயற்சியில் மதுரை தொலைபேசி இணைப்பும் கிடைக்க அப்பா ஃபோனில் வந்தார். வேகவேகமாக நியூயார்க் நகரத்தில் நடந்த தாக்குதலை விவரித்துவிட்டு எழுநூறு மைல்களுக்கு அப்பால் நான் பாதுகாப்பாக இருக்கிறேன் என்று ஊர்ஜிதம் செய்துவிட்டு சற்று ஆசுவாசமடைந்த போதுதான் பத்மநாபன் போனை கைப்பற்றி மேற்படி வேண்டுகோளை விடுத்தான்.

பத்து என்கிற பத்மநாபனின் செய்கைகள் எப்போதும் அதிரடியாகத்தான் இருக்கும். கல்லூரி படிப்பு, கம்ப்யூட்டர் கல்வி, ரயில்வேஸ் ரெக்ரூட்மெண்ட், எம்பிஏ நுழைவுத்தேர்வு என்று திரிந்து கொண்டிருந்தவன் திடீரென நாராயணகுரு நற்பணி மன்றத்தின் முழுநேர ஊழியனாகி சமூகசேவைக்கு என்று அர்ப்பணித்துக் கொண்டுவிட்டான். ரோட்டரி சங்கங்கள் மூலம் கண்தான முகாம் நடத்துவது, அறிவொளி இயக்கத்தை பரப்புவது, காந்திய சிந்தனைக் கழக விழாக்கள், திருக்குறள் மேலாண்மை சிந்தனை திரட்டு கருத்தரங்கம், என்று பல நிகழ்ச்சிகளில் பத்து முதன்மையாக நின்றுகொண்டிருந்தான். அசகாய உழைப்பாளி. சிறிய நிகழ்ச்சி என்றாலும் நல்ல கவரேஜ் இருக்கும்படியாக பத்திரிகை உலக தொடர்புகளை பிடித்து வைத்திருந்தான். அதிலொரு சாகசம் இருந்தது அவனுக்கு. பூர்விகம் விளாத்திக்குளம் என்பதால் நெல்லைச்சீமை பாசமும் சேர்ந்து ‘பாரதி கிறுக்கு’ கொஞ்சம் ஜாஸ்தி.

ரோம் பற்றியெரியும்போது நீரோ மன்னன் ஃபிடில் வாசித்த கதையாக, ஃபோனில் இப்படி ஒரு கோரிக்கை வைப்பான் என்று எதிர்பார்க்கவில்லை. அடுத்து இரண்டு வாரங்களுக்கு பத்துவின் கோரிக்கைதான் என் மனதை அரித்துக் கொண்டிருந்தது. இரண்டு வாரங்களுக்கு மேல் அந்த அரிப்பை விட்டுவைக்க தேவையில்லாமல் நானே ஊர் திரும்பும் வேளை வந்துவிட்டது. மதுரையைவிட்டு கிளம்புமுன்னர் தோண்டிப் போட்டிருந்த சாலையெல்லாம் அப்படியே இருக்க, அந்த வெக்கையையும் புழுதியையும் உய்த்துணர்ந்து மண்ணின் மைந்தனாக மாறிய இரண்டாம் நாளே பத்து வீட்டிற்கு வந்துவிட்டான்.

‘அம்புட்டுதூரம் சொல்லியிருந்தும் பொத்தவம் வாங்கியாரலயா நீயு? அதாம் லைப்ரரி வ்லாசம் மொதக்கொண்டு சொல்லிருந்தேனே. காரெல்லாம் வச்சிருந்திப்பீயளே அங்க… ஒரு அழுத்து அழுத்திட்டு போயிருக்கப்படாதா?’

‘இங்க கெடக்காத பாரதியார் புக்கா அங்க கிடைக்கப் போகுது? எந்த ஊர்ல இருக்குன்னு சொன்ன நீயு? ஃபோன்ல பாதி குரல் கேக்கவேயில்ல.’

‘சிகாகோவாம். அங்ஙனதான் மைக்ரோஃபிலிம்ல சேகரிச்சு வச்சிருக்காவளாமே’

‘என்னத்த காரில் ஏறி அழுத்தறது… நிறுத்தாமப் போனாலும் சிகாகோவிற்கு போக ஒண்ணர நாளு ஆகும்டா. நானிருந்த இடமே வேற’

‘ஒண்ணர நாளு ஆனா ஆயிட்டுப் போகட்டுமே. பாரதிப் புலவர் அய்யா வருசக்கணக்கா அலஞ்சி திரிஞ்சி பொஸ்தவம் சேத்திருக்காருடே…’

பாரதிப் புலவர் என்றழைக்கபபடும் இரத்தனசாமி ஐயா, நான் படித்த பள்ளியில் தமிழாசிரியராக இருந்து ரிடயர் ஆனவர். திருமணமே செய்து கொள்ளாமல் தமிழ்ப்பணியே போதும் என்றிருந்துவிட்டார். பத்துவும் அவரும் பாரதியைப் பற்றி பேச ஆரம்பித்தால் தனி தியான நிலைக்கு சென்றுவிடுவார்கள்.

‘உனக்கு விவஸ்தையே கிடையாது. அங்க ஊரே அல்லோலகல்லோலப்பட்டு கிடக்கு. உனக்கு நியூயார்க் லைப்ரரில போய் புக்கு தேடவா எனக்கு நேரம் கிடக்கு?’

‘அதில்லடே. அன்னிக்கு பாரதி நினைவு விழான்னு எட்டயபுரம் போயிருந்தோம். நாங்க நாலு பேத்த தவித்து ஒரு குஞ்சு குளுவானக்கூட காணோம்டே. மனசு சங்கட்டமாப் போச்சு. அய்யாவும் சோந்து போயிட்டாரு. இங்கதான் நம்ம ஊட்ல வண்டிய விட்டுட்டு பழங்காநத்தத்திலிருந்து பஸ்ஸப் புடிச்சுப் போயிருந்தோம்., வண்டிய எடுக்க திரும்பவரும்போது உன் போனு வந்துச்சு. அதான் ஐயா கனகாலமா தேடிட்டிருந்த புக்கப் பத்தி கேட்டு வைக்கலாம்னு… அடுத்து நீ எப்ப நியூயார்க்கு போவ?’

முதலில் இங்கிருக்கும் பெங்களூரு போய் ஒப்புக்கொண்ட வேலையை ஒழுங்காக கவனிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பவனிடம் இப்படியொரு கேள்வியா என்று கடுப்பாக இருந்தது. பத்துவிற்கு எப்படி விளக்கினாலும் புரியப்போவதில்லை.

‘பாரதி பிரசுராலயம்னா இங்கேயே கிடைக்குமேடா. எதுக்கு அமெரிக்கா ஆப்பிரிக்கான்னு என்னய துரத்தற?’

‘அய்யாவோட அருஞ்சேகரிப்புல அந்த முதல் பதிப்பு இருந்ததாம்டே. எவனோ ஆக்கங்கெட்ட கூவை கெளப்பிட்டு போயிட்டானாம்’

‘மைக்ரோஃபிலிம் காப்பியெல்லாம் கிடைக்கும்டா. ஆனா அதெல்லாம் ரெஃப்ரென்ஸ் எடுக்கத்தான் நல்லாருக்கும். பணம் கட்டி ப்ரிண்ட் வாங்கினாலும் புக்கு மாதிரி வருமா? இங்கேயே நிறய பேரு வச்சிருப்பாங்க. பாரதி பிரசுராலயம் நடத்தின பாரதியாரோட தம்பி குடும்பம் இங்கதான் மானாமதுரைல இருக்காங்க’ சொல்லிமுடிக்கும் முன்னர் பத்து பிடித்துக் கொண்டான்.

‘தெரியும்டே. விஸ்வநாத ஐயர்தானே. அவரோட ரேடியோ பேட்டியெல்லாம் கேட்டிருக்கேன்’

எனக்கும் திருச்சி வானொலியில் அவருடையே பேட்டி கேட்டது தேசலாக நினைவில் இருந்தது. வெகு சிறிய வயதில் இரண்டொரு முறை அவரை நேரிலே பார்த்திருக்க்றேன். விஸ்வநாத ஐயர் மதுரைக்கு வரும்போதெல்லாம் எங்கள் தாத்தாவை சந்திக்காமல் போகமாட்டார். அவ்வளவு நெருக்கமான உறவு.

பத்து தீவிர பாரதி பைத்தியம் என்றால், மறுபுறம் பாரதி என்னும் பிரபலத்தின் வெளிச்சத்தில் நனைய அலட்டலாக பேசிக் கொண்டிருக்கும் நுனிப்புல் கூட்டம் ஒன்று இருக்கும். என்ன படித்திருக்கிறார்கள் என்று கொஞ்சம் ஆழம் பார்த்தால் போதும். அலட்டல் எல்லாம் கலைந்து கோபமாகி சண்டைக்கு நிற்பார்கள். படிக்கப் படிக்க தீராத படைப்புகளை கற்று அனுபவிக்க மாட்டாமல் இப்படி ஒரு கூட்டம்.

பத்துவிற்கென பாரதி பற்றி விதந்தோத புதுசுபுதுசாக ஏதாவது கிடைக்கும்.

‘ந்தா… இங்க மேலமாசிவீதிலதான் மகாத்மா காந்தி வந்து தங்கியிருந்த வீடுன்னு போட்டு வச்சிருக்காங்க. இங்கத்த மனுசங்களப் பாத்திட்டு மேல்சட்டய துறந்திட்டாராம். எப்பம் துறந்தாராம்? பாரதி இறந்த பத்தாம் நாளு. அவன் என்னிக்கோ ‘கண்ணற்ற தீவினில் தனிக்காட்டில் புழங்குகிறவர்னு’ கண்ணீர் விட்டு அழுதிட்டு போயிட்டாம். அதாண்ம்டே கவி மனம்கிறது. காணாமலே கண்ணீர் கொட்டும்கிறது. அந்த பாட்ட ‘தேயில தோட்டத்திலே’ன்னு மாத்தி ஈழத்து மலையக தமிழர்களுக்குன்னு பாடி அப்பமே ரெக்கார்டெல்லாம் விட்டா தெரியுமா.’ என்பான்.

‘சரி. நீ மறுக்கா ஊருக்கு போறதுக்கு முன்னாடி ஒரு நட வந்து அய்யாவோட அருஞ்சேகரிப்பை பாத்துட்டுப் போ. அப்படியே நல்லபடியா நாலுபேத்துக்கு நீயும் தெரியப்படுத்தனும்’ என்று விரட்டிப் பிடித்து இழுத்துக் கொண்டு சம்பந்தமூர்த்தி தெருவின் மேற்கு முனையில் இருந்த இரத்தனசாமி ஐயாவின் வீட்டிற்கு இட்டுச் சென்றான்.

மாணவர்களும் ஆசிரியர்களும் ஒரு கட்டத்திற்கு அப்புறம் சந்திக்கும் போது ஒரு அசௌகரிய சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது. அடர்ந்த மீசையும், விரிந்த மார்புமாய் தெரிந்த இரத்தினசாமி ஐயா, இப்போது ஒடுங்கி சிறுத்துப் போனவராய் விழித்துப் பார்த்தார் அவனை.

‘இவந்தான்யா, அமெரிக்காலேந்து உங்களுக்கு பொத்தகம் வாங்கிட்டு வர்றேன்னுது. நம்ம ஸ்கூல்தான். எனக்கு அஞ்சு வருசம் சூனியர்’ என்று அறிமுகப்படுத்தினான்.

‘வாங்க, வாங்க. ஏதும் டீ காப்பி குடிக்கிறீயளா? இங்க இப்ப காப்பிப் போட ஆளு இல்ல. நம்ம தெய்வான பொண்ணு காலைல வந்து காப்பி பலகாரம் கொடுத்திட்டு போகும். அப்புறமா மாலைதான் சாப்பாடு. அதும் அதுதான் வந்து கொடுத்திட்டு போகும்’ முதுமையின் காரணமாகவோ, தனிமையின் பாதிப்பாலோ ஐயாவின் குரல் மிகவும் குழைந்து போயிருந்தது.

‘தோ… பேசிட்டு இருங்க. நா போய் கூல்ட்ரிங் வாங்கிட்டு வந்திடறேன்’ என்று பத்து கிளம்பினான். எனக்கு அவனுடைய இந்த குற்றேவல்கள் மிகவும் கூச்சமாக இருந்தது.

‘இருக்கட்டும்டே, எல்லாம் ஐயாவோட திருப்திக்கு’ என்று ஜாடை காட்டிவிட்டுப் போய்விட்டான்.

‘மன்னிக்கனும். எனக்கு முகமெல்லாம் அவ்வளவு சுலபமா நினைப்பில் இருக்கறதில்ல. பெயர்கள்லாம் சுத்தமா மறந்திட்டுது’

‘அதுல என்ன ஐயா… நாங்கள்லாம் உங்க மாணவர்கள்தானே எப்போதும். மரியாதைல்லாம் எதுக்கு ஐயா’ என்று சங்கோஜமாக நெளிந்தேன்.

‘அதது அப்படியப்படி நடக்கனும்னு இருக்குல்லா’ என்று மீசையை நீவிவிட்டுக் கொண்டவர்,

‘தம்பிக்கு மதுரைல எந்தப் பக்கம்?’ என்று உரையாடலை ஆரம்பித்தார்.

‘இப்ப ஆரப்பாளையம் பக்கம் வீடு. ஸ்கூல் படிக்கும்போது சிம்மக்கல் பக்கம் இருந்தோம்’ என்றேன். நெற்றியை சுருக்கி யோசித்தவர்,

‘அங்க கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தின்னு ஒருத்தர் இருந்தாரே. அது பக்கமா? ஒரு ஆஸ்பத்திரி கூட இருக்குமே’ என்றார்.

‘ஆமாம் ஐயா. அது பக்கம்தான் எங்க தாத்தா வீடு’

‘அட, அங்கதானே பாரதியோட சம்பந்தக்காரவுக இருந்தாக. அவரு தம்பி விசுவநாதய்யரோட பேத்திய அவுக வீட்டுலதானே கெட்டிக் குடுத்திருக்கு.’ என்றவாறே கைகளை இழுத்துப் பிடித்துக் கொண்டார்.

வீட்டின் வாசப்பக்கமாக கையைக் காட்டி,

‘தோ எதிர்வரிசைல கிழக்கால பச்சைக்கம்பி போட்ட வீடு இருக்கே. அது விசுவநாதய்யரோடதுதான். இங்கிட்டு வாடகை வாங்க வரும்போதெல்லாம் நம்மூட்டுக்கும் வந்து இருந்ந்து பேசிட்டு போவாரே. பாரதி பாடல்களை நாட்டுடமை ஆக்கினப்போ நானும் அவர்கிட்ட சொல்லி ஒரு புக்கு கொண்டாந்திருக்கேனே. ஷெல்லிங்கான், கீட்ஸ்ங்கான்… நம்மாளு செய்யாதது எதை அவங்க செய்திருக்காங்கன்னேன். .’

‘நன்மையும் அறிவும்
எத்தியசை தெனினும், யாவரே காட்டினும்
மற்றவை தழுவி வாழ்வீராயின்
அச்சமொன்றில்லை’

குரல் தழுதழுத்திருந்தாலும் கம்பீரம் குறையவில்லை. கண்களில் இயல்பாக சுரந்து கண்ணீர் கன்னங்களில் கோட்டிட்டிருந்தது. எனக்கு தாத்தாவின் நினைவு வந்ததால் மனசு சற்று கனத்துப் போயிருந்தது.

‘நல்லாச் சொல்லுங்கய்யா. எங்கேயோ போயி ஏதேதோ படிக்கேங்கான். இந்தால இருக்கு அம்புட்டு சமுத்திரமும். அள்ளிக் குடிடே’ என்றவாறே டொரினோ பாட்டிலுடன் பத்து மீண்டும் பிரசன்னமானான். அவனைப் பார்த்து புன்னகைத்தவாறே இரத்தினசாமி ஐயா மீசையை நீவி விட்டுக் கொண்டார்.

“நம்மாளு எழுதியிருக்கற ஒரு முழு ரவுண்டு வந்தாக்க போதும். வெண்பா, விருத்தம், கலித்துறை, காவடிசிந்து, நொண்டிசிந்து அத்தனையையும் தாண்டி நவீனத்துவமும் சாதிச்சிருக்காரே. விடுதலை முத்தம்மான்னு ஒரு கதை வாசிச்சிருக்கீங்களா. பிரதிக்குள் பிரதி வச்சு பண்ற நுட்பமெல்லாம் செஞ்சிருக்காரு. இருங்க நம்மோட சேகரிப்பை நீங்க பாக்கனும்” என்று உற்சாகமாக காட்ட ஆரம்பித்தார்.

பழைய ‘இந்தியா’ இதழ்களின் தலையங்கங்கள், பாரதி ஆசிரமத்தின் முதல் வெளியீடான ‘கண்ணன் பாட்டு’ முதல் வெளியான பாரதியின் அத்தனை படைப்புகளையும் வெவ்வேறு பதிப்புகளையும் காலக்கிரமமாக சேர்த்து வைத்திருந்தார். பாரதி பிரசுராலயத்தின் ஆங்கில வெளியீடுகள், கல்கியில் வந்த பாரதி மணிமண்டபத்திற்கான செய்தி கட்டிங்குகள், கையெழுத்து பிரதியின் போட்டோ காப்பிகள், பாரதியும் ஷெல்லியும் ஒப்பிட்டு ஐயா எழுதி கலைமகளில் வெளிவந்த கட்டுரைகள், மணி மண்டப விழா, நூற்றாண்டு விழா, நூற்றிருபத்தைந்தாண்டு விழா மலர்கள், புகைப்படங்கள் என்று நிறைய இருந்தன. பொக்கிஷமாக பாதுகாக்கப்பட வேண்டியவை எனத் தோன்றியவை எல்லாம் சாதாரணமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

“நெருப்புக்கு இரண்டு முகம் உண்டு தம்பி. ஒண்ணு சுடர் முகம். நின்னு எரியறதைப் பாத்திட்டே இருக்கலாம். இன்னொண்ணு ஆழிப்பெருந்தீ. அத என்னத்த வெளில நின்னுட்டு பாக்கிறது. அதுக்குள்ள நாமளே போய் விழுந்திடனும். அப்புறம் பேச என்னக் கிடக்குங்கிறேன்… எப்பவோ நெருப்புக்கு ஒப்புக் கொடுக்கத்தான் போறோம். அத இப்பமே செய்திட வேண்டிதான.” தன்னுடைய சேகரிப்புகளைப் பார்த்தவாறே அவர் சொல்லிக் கொண்டிருந்தார்.

பத்து பையிலிருந்து எடுத்து வைத்த பழங்களைப் பார்த்தவர், ‘நானே தனிமையை ஆகாராமாக்கிக்க பழகிட்டிருக்கேன். இதெல்லாம் எதுக்குப்பா’ என்றுவிட்டு சிரித்தார்.

‘ஐயா, நீங்க முன்னாடி எழுதியிருந்த வேதபுரத்து கோமாளிகள் நாடகம் இவனுக்கு காட்டுங்கய்யா. என்னவோ இப்பல்லாம் இண்டெர்நெட்டுலதான் பாரதிக்கு நிறய மரியாதங்கான். நீங்க செய்யாததையா இந்த விடலப்பசங்க செய்திடப்போறாங்க.’

பத்து சொல்வதை புன்முறுவலோடு கேட்டுக் கொண்டவர். ‘அந்த காப்பி எங்கிட்டயே இல்லயே. மூணு வருசம் ஸ்கூல்ல நாடகமாப் போட்டோம். அப்புறம் அதுக்கு பெருசா வரவேற்பு இல்லாமப் போச்சே’

‘குட்டிக்கரணம் போட்டே வீரனான அந்தரடிச்சான் சாகிப், புரட்சியாளர் வேணு முதலி, மிளகாய்ப்பழ சாமியார், காளிதாசன்ன்னு பல கேரக்டர்கள்டே. எல்லாம் பாரதியோட படைப்புகள். அப்படியே அய்யா அதுகள உருவாக்கி மேடயில உலவவிட்டிருப்பாரு’ பெருமை பேசுவதில் பத்துவிற்கு நிகர் அவன்தான்.

‘முன்ன மாதிரி எல்லாம் முனைப்பா சேகரிக்க முடியல தம்பிகளா. நுப்பத்தேழாம் வருசத்து திரிவேணி பத்திரிகை ஒண்ணு. அதில பாரதியோட தமிழ்மொழியின் மூடநம்பிக்கையை சாடிய கட்டுரைப் பத்தி சீனுவாசன்னு ஒர்த்தர் விமர்சனம் எழுதியிருக்கார். எப்போ? நுப்பத்தியேழுல. அதுக்கு இருவது வருசம் முன்னாடியே பாரதியார் அந்தக் கட்டுரைய பத்திரிகைல வெளியிட்டிருக்கார்.  நினச்சுப் பாருங்க. இதெல்லாம் இப்படி தொகுப்பா வச்சு பாக்கும்போதுதான் அதோட வீச்சு புரியுது நமக்கு’

பத்து என்னைப் பார்த்து கண்ணைக் காட்ட நான் மிகவும் பிரயாசையுடன் தொண்டையை கனைத்துக் கொண்டு

‘ரொம்ப மகிழ்ச்சியா இருக்குய்யா. உங்க அருஞ்சேகரிப்பை பாதுகாக்கவாச்சும்… நீங்க எங்கள தப்பா எடுத்துக்கிடாம, இத ஏத்துக்கிடனும்’ என்று சிறிய கவரில் இட்ட ஒரு தொகையை அவரிடம் கொடுக்க முனைந்தேன்.

லேசாக அதிர்ச்சியடைந்தவராக நிமிர்ந்து பார்த்தவர் ‘இதிலென்ன அருஞ்சேகரிப்பு பெருஞ்சேகரிப்புல்லாம். பத்தி எரியற நெருப்புல ஒரு கரண்டி தனியா எடுத்து இந்தப் பக்கம் வச்சா இரத்தினசாமி நெருப்புன்னு ஆயிடுமா’ என்றார்.

அவருடைய ஆரம்பநேர உற்சாகம் வடிந்துவிட்டது போலிருந்தது.

அங்கே மேஜை மேல் கவரை வைத்துவிட்டு நாங்கள் விடைபெற்றுக் கொண்டோம்.  இரத்தினசாமி ஐயா மௌனமாக தலையசைக்க, விடைபெற்றுக் கொண்டு கிளம்பினோம். பரந்து எரியும் நெருப்பை சிறிய ரொக்கத்தைக் கொண்டு அளந்து பார்க்க முடியுமா என்ன. அந்த கவரை ஐயா எடுத்திருப்பாரா இல்லையா என்று யோசனையாக இருந்தது. இரண்டில் எது நடந்திருந்தாலும் ஏதோ ஒன்று இழந்தது போலத்தான் இருந்தது எனக்கு. பத்து தன்னுடைய எளிமையான கணக்கினால் உற்சாகம் பெற்றவனாக இருந்தான். மதிய வேளையின் வெம்மை கூடி வந்து கொண்டிருக்க தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தோம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.