சு. வேணுகோபாலின் தனிப்பார்வை

எஸ். சுரேஷ்

koonthappanai

என்னிடமுள்ள “கூந்தப்பனை” தொகுப்பில் சு வேணுகோபாலின் நான்கு குறுநாவல்கள் இருக்கின்றன- “கண்ணிகள்”, இதிலுள்ள முதல் குறுநாவல்.

யாருக்கும் தெரியாமல் கிராமத்திலுள்ள தன் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்துவிட வேண்டும் என்று போகும் ஒருவரை நாம் கண்ணிகள் கதையின் துவக்கத்தில் காண்கிறோம்- அவரை யாரோ நன்றாக அடித்திருக்கிறார்கள், அந்த அவமானம் யாருக்கும் தெரியக்கூடாது என்று அவர் நினைக்கிறார். இந்த இடத்தில் துவங்கி, தோல்விகளும் கடன்களும் விழுங்கும் அவரது பின்கதையை விவரிக்கத் துவங்குகிறார் வேணுகோபால். தன் ஆற்றலுக்கு அப்பாற்பட்ட சக்திகளுடன் போராடும் அவர் இறுதியில், கந்துவட்டிக்காரர் ஒருவரிடம் சிக்கிக் கொள்கிறார். அவரது இரும்புப்பிடிகளில் இருந்து தப்பும் முயற்சியில்தான் அவர் கந்துவட்டிக்காரரால் தாக்கப்படுகிறார். இப்படி அடி வாங்கியதால் தன் கௌரவம் கெட்டுவிட்டது என்று குமுறலில் அவர் முழுமையாக நிலைகுலைந்து போகிறார். இப்போது அவரது மானத்தைக் காப்பாற்றி உதவும் கரம் ஒன்று நீள்கிறது. மிகுந்த நம்பிக்கையுடன் அதைப் பற்றிக்கொள்கிறார் அவர். ஆனால் நெருங்கிச் செல்லும்போதுதான் அவருக்கு தான் கொடுக்க வேண்டிய மிகப்பெரிய விலை என்னவென்று தெரிகிறது. குறுநாவல் என்று சொல்வதைவிட இதைச் சிறுகதை என்று சொல்லலாம், ஆனால் இந்தக் கதை நம் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

அடுத்த நாவல் “வேதாளம் ஒளிந்திருக்கும்”. இது நுண்மைகள் நிறைந்த, எண்ணவோட்டத்தின் வழி சொல்லப்படும் கதை. இதில் பெரியவராக மதிக்கப்படும் ஒருவர், ஒன்றுக்கும் உதவாதவன் ஒருவனின் சார்பாக அவனைப் பிரிந்து தன் சகோதரன் வீட்டில் வசிக்கும் அவனது மனைவியிடம் பேச போகிறார். எந்த அளவுக்கு அந்த உதவாக்கரை பற்றி பேசுகிறதோ, அதே அளவுக்கு இந்தப் பெரியவர் குறித்து பேசுகிறது குறுநாவல். உதவாக்கரையின் மனைவியைச் சந்திக்கச் செல்லும் பஸ் பிரயாணமே நாவலின் மையமாக இருக்கிறது. சிற்றூர் பேருந்துப் பயணமும் அதனுள் நிகழும் அனுபவங்களும் நாவலில் விவரிக்கப்படுகின்றன. இந்தப் பயணமும் இதன் முடிவில் உதவாக்கரையின் மனைவியைச் சந்திப்பதும், பெரியவருக்குத் தன் வாழ்வைக் குறித்த புரிதலையும் அளிக்கின்றன. முடிவு மட்டும் சற்றே படிப்பினை புகட்டும் தொனியில் அமைந்திருக்கிறது.

“அபாயச் சங்கு” என்ற அடுத்த குறுநாவல், சுரேந்திரன் என்ற இளைஞனின் வாழ்வின் ஒரு பகுதியை விவரிக்கிறது. அவன் வாழ்வின் கொந்தளிப்பான கணங்களை அடுத்தடுத்து நாம் கடந்து செல்கிறோம்: நன்னம்பிக்கைக்கு இடம் அளிக்கும் அவன் வாழ்வின் நற்போதுகளும், அவனது கட்டுப்பாட்டை இழந்து வாழ்க்கை தறிகெட்டுச் செல்லும் வீழ்ச்சிகளும் அவற்றுக்குரிய உணர்வுகளோடு சித்தரிக்கப்படுகின்றன. அவன் வீட்டுக்கு அருகில் இருக்கும் அவனைவிட வயது முதிர்ந்த ஒரு பெண்ணுடன் அவனுக்கு உறவு ஏற்படுகிறது. முதலில் அதை அவன் வெற்றியாகப் பார்க்கிறான், ஆனால் அந்த உறவு தன் வாழ்வைச் சிதைத்து தன்னை வீழ்த்தியிருப்பதை மெல்ல மெல்லவே உணர்கிறான். தன்னை இருண்மையில் ஆழ்த்தி தன் வாழ்வை நசிக்கும் நச்சுணர்வுகளிலிருந்து விடுபட முடியாத அவன், இறுதியில் அதிர்ச்சி முடிவெடுக்கிறான்.

தொகுப்பிலுள்ள கடைசி குறுநாவல்தான் புத்தகத்தின் பெயராகவும் அமைந்திருக்கிறது, “கூந்தப்பனை”. ஆண்மையில்லாத ஒருவன் பற்றிய சுவாரசியமான இந்தக் கதையில் அவன் தான் விரும்பிய பெண்ணை மணமுடித்த பின்னரே அவளுக்கு உடலுறவில் நிறைவு அளிக்க முடியாதவனாக தானிருப்பதையும், அது அவளுக்கு அளிக்கும் ஏமாற்றத்தையும் உணர்கிறான். அவளது சோகத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அவன், அவளது தயக்கங்களை மீறி தன் நண்பனுக்கு அவளை ஏறத்தாழ கட்டாய திருமணம் செய்து வைக்கிறான். இது அவன் வாழ்வை மாற்றிவிடுகிறது. இப்போது அவன் தனது ஆண்மையின்மையை ஏளனம் செய்யும் சமூகத்தை எதிர்கொண்டாக வேண்டும். இறுதியில் அவன் வாழ்க்கையில், கொடுத்தல் என்பது மனிதர்களை வாழ வைத்தல் மட்டுமல்ல என்று உணர்கிறான் இதனால் அவனது உணர்ச்சிக் கொந்தளிப்புகள் அடங்கி அவன் அமைதி காணக்கூடும்.

நீங்கள் இந்தக் கதைகளை வாசிக்க வேண்டும் என்று நான் விரும்புவதால்தான் கதைச்சுருக்கங்களை மிக எளிய வடிவில் தந்திருக்கிறேன். இந்தக் குறுநாவல்களில் சொல்லப்படும் கதை என்ன என்பது எந்த அளவு முக்கியமோ, அதே அளவுக்கு அவை எவ்வாறு சொல்லப்படுகின்றன என்பதும் முக்கியம். கதை என்ன என்பது அல்ல, கதை எப்படிச் சொல்லப்படுகிறது என்பதே அதை சு வேணுகோபால் கதையாக்குகிறது.

வேணுகோபாலை ஒரு ஸ்டைலிஸ்ட் என்று சொல்லலாம், அந்த அளவுக்கு சொற்தேர்வில் ஒரு அழகு தெரிகிறது. அவரது வாக்கியங்கள், கதையின் அப்போதைய உணர்வுகளை பொருத்தமான வகையில் வெளிப்படுத்துகின்றன. இந்தக் கதைகள் பலவற்றிலும் அவர் முடிவுக்கு அருகேதான் கதைசொல்லத் துவங்குகிறார், அதன்பின் மெல்ல மெல்ல பின்கதை விரிகிறது. இங்கு நான் சொல்வதைத் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம். மர்மக் கொலை பற்றிய குற்றப்புனைவு எழுதுபவரின் உத்தி போன்றதல்ல இது. பெரும்பாலான குற்றப்புனைவுகள் துவக்கத்திலேயே உச்சகட்டத்துக்கு உரிய பரபரப்புடன் துவங்கி நம்மை உள்ளிழுத்துக் கொள்கின்றன. வேணுகோபால் முடிவுக்கு அருகில் துவங்கினாலும் அதில் பரபரப்பாக எதுவும் இல்லை. என்ன நடந்தது என்று கேட்கச் செய்கிறது, அவ்வளவுதான். அதன்பின் மெல்ல மெல்ல நாயகனின் உணர்வுகளுக்குப் பரிவான வகையில் நாமும் வாசிக்கத் துவங்குகிறோம். இத்தகைய கதை சொல்லும் முறையில் வேணுகோபாலின் பலம், பலவீனம் இரண்டுமே வெளிப்படுகின்றன. முதலில் நினைத்துப் பார்ப்பதாகச் செல்லும் கதை, பின்னர் காலத்தில் முன்னும் பின்னும் பயணித்து ஏதோ ஒரு முடிவை நோக்கிச் செல்கிறது- இந்த முடிவு சில சமயம் திறந்த தன்மை கொண்டதாகவும் இருக்கிறது.

நிறைய உழைப்பும் கவனமும் செலவிட்டு ஒவ்வொரு கதையையும் வேணுகோபால் செய்திருக்கிறார், ஆனால் தெளிவான நடையும், வேகமான உணர்வுகளும் கதையை நகர்த்திச் செல்வதால் இதன் பின்னுள்ள சிந்தனை வெளியே தெரிவதில்லை, இயல்பாக, மனதுக்குத் தோன்றியதையெல்லாம் எழுதிய உணர்வு கிடைக்கிறது. கதைகளின் கவனமான கட்டமைப்பில் அவரால் மிக இயல்பான வடிவில் கதை சொல்ல முடிகிறது. நிகழ்வுகளும் அவை குறித்து உள்நோக்கிக் குவியும் எண்ணவோட்டங்களும் கச்சிதமாய் கதைசொல்லலில் கைகூடுகின்றன- வேறொரு எழுத்தாளர், இதே நிகழ்வுகளைக் கொண்டு பரபரப்பான ஒரு கதையாகவோ, அல்லது இதே உணர்வுகளையும் அவை சார்ந்த எண்ணங்களையும் கொண்டு அலுப்பூட்டும் அளவு தொய்வுள்ள புத்திப்பூர்வ கதையோ எழுதியிருக்கக்கூடும், ஆனால் வேணுகோபால் எழுத்தில் சமநிலை குலையாத, நிகழ்வுகளும் உணர்வுகளும் ஒருங்கிணைந்த ஒரு நல்ல குறுநாவலைப் படித்த உணர்வு நமக்குக் கிடைக்கிறது..

சுரேந்திரனின் கனவு போன்ற மனநிலையை விவரிக்கையிலும் அவன் தன்னை வாதிக்கும் நினைவுகளை எதிர்கொள்கையிலும் வேணுகோபாலின் மொழி நுட்பமான வகையில் வேறொரு தொனியில் ஒலிக்கிறது. சுரேந்திரனும் ரத்னம்மாளும் கூடும்போது வேணுகோபால் அளிக்கும் கவித்துவ விவரணைகள் எனக்குச் சற்றே செயற்கையானவையாக ஒலித்தன. பொதுவாக நேரடியாகக் கதை சொல்லும் வேணுகோபால் இது போன்ற இடங்களில் சற்றே வேறுபட்ட உயர்கவித்துவ மொழிக்கு மாறுகிறார். இதை ரசிக்க முடியும் என்றாலும் பொதுவான கதைப்போக்கில் இது போன்ற இடங்கள் தனித்து தம்மை வெளிப்படுத்திக் கொள்வது, கதையின் சீர்மையைக் குலைப்பதாக நினைக்கிறேன்.

வேணுகோபாலின் இந்தக் குறுநாவல்களில் காணப்படும் பாத்திரங்கள் அனைவரும் சாதாரணமானவர்கள். ஏன், இன்னும் ஒருபடி மேலே போய், இவர்கள் எல்லாம் எந்த ஒரு தனித்திறமையும் இல்லாதவர்கள் என்று சொல்லலாம். தம் குறைபட்ட திறமைகளைக் கொண்டு காலம்தள்ளப் பார்ப்பவர்கள். இவர்கள் அனைவரும் தத்தம் சமூகப் பின்புலத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கின்றனர்- இவர்களுக்கு என்று எந்த ஒரு தனிப்பட்ட தேடலோ இருத்தல் குறித்த சிக்கல்களோ இருப்பதாகத் தெரியவில்லை என்ற பொருளில் இதைச் சொல்கிறேன். இவர்கள் தம் தனி ஆளுமையின் சுதந்திரத்தைப் பற்றிக் கொள்வதுமில்லை, அதற்குரிய இருப்பியல் சிக்கல்களை எதிர்கொள்வதுமில்லை. இவர்கள் இருக்கும் சூழலில் எதிர்ப்படும் தடைகளில் முட்டிக் கொண்டு நிற்பவர்கள். அதன் கேள்விகளும் அவற்றுக்கு விடை காண இயலாத போதாமையுமே இக்கதைகளின் முக்கிய சிக்கல்களாகின்றன.

இந்தக் குறுநாவல்களில் உள்ள ஒவ்வொரு பாத்திரத்தையும் சமூகச் சுமை அழுத்துகிறது, அதிலிருந்து விடுபடும் வழி தெரியாத இவர்கள் தம்மாலியன்ற சமரசம் செய்து கொள்கின்றனர். எக்காலத்துக்கும் உரிய உண்மை என்பது போன்ற தேடல்கள் எதுவும் இவர்களுக்கு இல்லை. ரத்தமும் சதையுமான இவர்களது மானுடம் உறுதியானது, உடல் மற்றும் உறவுகளையோ அவை சார்ந்த உணர்வுகளையோ கடந்து செல்ல வேண்டும் என்ற ஆன்மீகத்துக்குரிய விடுதலை ஏக்கமோ, தம்மைக் காட்டிலும் உயர்ந்த ஒன்றில் தம்மைக் கரைத்துக் கொள்ளும் லட்சியவாதமோ இவர்களின் தேடலை வெளிச்சமிடுவதில்லை. நம்மைப் போன்ற சாதாரணர்களான இவர்களும் கௌரவமாக வாழ விரும்புகின்றனர், தம் குழந்தைகள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். முதல் கதையில வரும் விவசாயி ரங்கராஜன் இதற்கு நல்லதொரு உதாரணம். இதிலுள்ள அனைத்து கதைகளிலும் இப்படிதான். உதவாக்கரை விஸ்வநாதனின் மனைவிக்கு அவன் குடித்துவிட்டு வந்து தன்னை அடிப்பது கௌரவக் குறைச்சலாக இருக்கிறது, அதை அவள் இழிவாகக் கருதுகிறாள். கூந்தப்பனை சதீஷ் தன் ஆண்மையின்மை குறித்த செய்தி வெளியில் பரவத் துவங்கும்போது தனக்குரிய மரியாதை குறைவதாக உணர்கிறான். சமூக வெளியில் தலை நிமிர்த்தி நடக்கவே அனைவரும் விரும்புகிறார்கள், ஆனால் வாழ்வின் சுமை அவர்கள் தோள் விட்டு இறங்காத சிலுவையாய் அவர்களை அழுத்துகிறது.

இந்தக் குறுநாவல்களின் களம் சிறுநகரங்கள். அவற்றின் தனித்தன்மையை மிக அருமையாகக் கைப்பற்றி விவரித்திருக்கிறார் வேணுகோபால். ஒவ்வொரு விவரணையிலும் எழுத்தாளரின் வாழ்வனுபவம் புலப்படுகிறது என்பதால் இவர் விவரிக்கும் புறச்சித்திரங்கள் தம்மளவிலேயே நம்பகத்தன்மை கொண்டவையாய் இருக்கின்றன. இவை சிற்றூர்களாய் இருந்து, நகரமயமாக்கத்தின் விசை காரணமாக சிறுநகரங்களாக வளர்ந்து வருபவை. விவசாயம் செய்ய ஆள் பற்றாக்குறை, விவசாயிகளின் கடன்சுமை, வேலையின்மை, மதமாற்றம் என்று சிறுநகரங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் இதிலுள்ள குறுநாவல்களில் ஆவணப்படுத்தப்படுகின்றன. இன்னும் சிற்றூர்களுக்குரிய ஒழுக்க நியாயங்களும் பழக்க வழக்கங்களும் மாறவில்லை, அவை இவர்களை இயக்கம் உந்துவிசையாய்ச் செயல்படுவதும் மாறவில்லை. தன் சகோதரனுக்கும் சகோதரிக்கும் தான் ஒரு சுமையாய் இருக்கக்கூடாது என்று விசுவநாதனின் மனைவி திரும்பவே செய்கிறாள்- அவள் எதிர்கொள்ளும் சூழலில் அவளது சமரசம் தவிர்க்கப்பட இயலாதது. உயர்கல்வி படித்த சுரேந்திரனுக்கு குமாஸ்தா வேலை கிடைக்கிறது, பின்னர் அதை இழந்து வேறு வேலையின்றி தவிக்கிறான், நகரங்கள் அளிக்கும் வாய்ப்புகள் சிறுநகரங்களில் இல்லை.- குறிப்பாக, வேணுகோபால் இக்கதையை எழுதிய காலங்களில். சிறுநகரச் சித்தரிப்பு மிகச் சிறப்பாக வெளிப்படுவது பெரியவரும் விசுவநாதனும் மேற்கொள்ளும் பஸ் பிரயாணத்தில்தான். உலர்ந்த நகைச்சுவை விரவியுள்ள இந்தப் பயணமும் பெரியவரும் விசுவநாதனும் பேசிக் கொள்வதும் ஒரு சிறுநகரின் ஆன்மாவை எவ்வளவு அழகாகவும் கச்சிதமாகவும் உணர்த்த முடியும் என்பதற்கு மிகச் சிறந்த எடுக்காட்டுகளாய் அமைகின்றன.

கூர்மையான அவதானிப்பு, தனக்கென்றொரு தனிப்பாணியில் அமைந்த நடை, விலகல் தொனி கதைசொல்லல், பாத்திரங்களின் சராசரித்தன்மை- இவை வேணுகோபாலின் எழுத்தை அசோகமித்திரனுடன் ஒப்பிடச் செய்கின்றன. வட்டார வழக்கில் எழுதுகிறார் என்ற மேம்போக்கான வேறுபாடு தவிர ஆழமான வேறொரு அடிப்படை வேறுபாடு இருக்கிறது. அசோகமித்திரன் எப்போதும் ஒரு பார்வையாளராகவே இருக்கிறார். அவர் நிகழ்வுகளைப் பதிவு செய்வதோடு சரி, அது குறித்த தன் பார்வையை வெளிப்படுத்துவது மிக அரிது. ஆனால் வேணுகோபால் சமூக உறவுகளின் சித்தரிப்பில் ஒரு லட்சியவாதியாய் தெரிகிறார். நான் சொல்வது மிகவும் பொதுமைப்படுத்துவதாக இருக்கலாம்- இதிலுள்ள நான்கு குறுநாவல்களில் இரண்டு துயரில் முடிகின்றன. ஆனால் இந்த நாவல்கள் முழுவதிம் வேணுகோபால் விலகிய தொனியில் விவரணைகளை அளித்தாலும்கூட, அவர் இந்தச் சாதாரணர்கள் தரப்பில் பேசுவதை உணர முடிகிறது. இவர்களுடைய போராட்டங்களை வேணுகோபால் மிக நன்றாக அறிந்திருக்கிறார், புரிந்துணர்வோடு அவற்றைப் பதிவு செய்கிறார்.

எவ்வளவு சாதாரணமானவனாக இருந்தாலும் சரி, அவன் தன் குறைகளை ஏற்றுக்கொள்வதன்வழி அவற்றைக் கடந்து, தான் வாழும் சமூகத்தில் ஒரு சிறு தாக்தையாவது ஏறபடுத்த முடியும் என்று வேணுகோபால் நம்புவதாகத் தோன்றுகிறது. இதனால்தான் கூந்தப்பனை அவ்வளவு அழகிய கதையாகிறது, வேதாளம் காத்திருக்கும் என்ற குறுநாவலின் செய்தி சற்றே துருத்திக் கொண்டு நிற்கிறது. எந்த ஒரு எழுத்தாளனும் தன் கதைகளைக் கொண்டு அவற்றைவிடப் பெரிய செய்தி ஒன்றைச் சொல்ல முயற்சி செய்வதில் இந்த ஆபத்து இருக்கவே செய்கிறது. வேணுகோபாலின் பாத்திரங்கள் அரசியல் சார்பற்றவர்கள், அவரது கதைகளில் அரசியல் இல்லை, ஆனால் அரசியல்படுத்த விரும்புபவர்களுக்கு முதல் கதையில் விஷயம் கிடைக்கலாம். ஆனால் வேணுகோபாலுக்கு ஓர் அரசியல் சாயம் பூச வேண்டியது அவசியம் என்று நீங்கள் நினைத்தால், முதலும் முடிவுமாய் மானுடத்தை நேசிப்பவர் அவர் என்று சொல்வதே சரியாக இருக்கும்- வேறெதையும்விட உயிர் வேட்கையே அவருக்கு முக்கியமாக இருக்கிறது, அவரது கதைகளில் அது உறவுகளின் ஊடாட்டத்தில் வெளிப்படுகிறது.

இத்தனை எழுதுவதும் அவரது நான்கே நாக்கு குறுநாவல்களை படித்துவிட்டுதான். வேறு படைப்புகளைப் படிக்கும்போது இந்த என் கருத்து மாறலாம். ஆனால் அப்போதும்கூட உறவுகளைப் பேசுவதில் அவரது லட்சியவாதமும் சமூகத்தைப் பேசுவதில் அவரது மானுட நேசமும் எப்போதும் மாறாது என்று தோன்றுகிறது. சாதாரணர்கள் தம் குறைகளால் குறைபட்டவர்களாய் நில்லாமல், அவற்றைக் கடந்து தம் சமூகத்துக்கு தம்மாலியன்ற ஒரு சிறு பங்களிப்பு செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் வேணுகோபாலின் லட்சியவாதமும் மானுடநேயமும் இணைகின்றன என்று நினைக்கிறேன்.

One comment

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.