ராபின் வில்லியம்ஸ் என்றதும் அவர் நடித்த கதாபாத்திரங்கள் பலதும் கலந்துகட்டி நினைவிற்கு வந்துபோகிறது. துணையெழுத்துகள் உச்சரிப்பை சொல்லிக் கொடுக்காத, ஆங்கிலத் திரைப்படங்கள் பார்க்க ஆரம்பித்த புதுதில் இவருடைய படங்கள் மட்டும்தான் எனக்கு எளிதாகப் புரிந்தன. என்னால் மனம் விட்டுச் சிரிக்க முடிந்தது. ஜுமாஞ்சி ஆகட்டும், ஹுக் (Hook) ஆகட்டும், அலாவுதீன் ஆகட்டும்… எல்லாமே கோமாளித்தனமும் கிறுக்குத்தனமும் சரி பாதி கலந்து ஜாலியாக இருந்தது.
ஒரு முறை, அலுவலின் மதிய நேரத்தில் சாப்பாட்டுக் கடையின்போது பேசுவதற்கு பொதுவான விஷயங்களைத் தேடிக் கொண்டிருக்கும் வேளையில், ‘உனக்குப் பிடித்த சினிமா நடிகர் யார்?’ எனக் கேட்டு வைத்தார்கள். உச்சரிப்பதற்கு எளிமையான பெயர்; அதே சமயம் புகழ்பெற்ற பெயர், எனவே ‘ராபின் வில்லியம்ஸ்’ என்கிறேன். அவர்கள் முகத்தில் அதிர்ச்சியா, குழப்பமா, பயமா எனக் கண்டுபிடிக்க முடியாத அசட்டு உணர்வு. ‘அப்படியா…! உனக்கு வேறு யாருமே கிடைக்கலியா! உனக்கு என்ன பிரச்சினை? சந்தோஷமாகத்தானே இருக்கிறாய்?’ என கரிசனத்துடன் வினவினார்கள்.
அப்பொழுதுதான் ’Bicentennial Man’ வந்திருந்தது. ரோபோக்களுக்கு உணர்ச்சியும் காதலும் இதயமும் இருந்தால் என்ன ஆகும் என்பதையும் மனித உரிமைகளை இயந்திரங்களுக்குத் தரலாமா என்பதையும் மென்மையாகப் பேசிய படம். அதற்கும் கொஞ்சம் நாள் முன்பு ‘What Dreams May Come’ படம் வந்திருந்தது. அதுவும் கொஞ்சம் சோகையான படம். எல்லாம் கொஞ்சம் ராஜ்கிரண் டைப் கதாபாத்திரங்கள்- சோகமான நினைவுகளோடு ஏக்கமாகவும் மனத்தளர்ச்சியுடனும் நடமாடும் நாயகனையா விரும்புகிறாய் என விவாதித்தார்கள்.
ஆனால் எனக்கு ராபின் வில்லியம்ஸை பார்க்கும்போதெல்லாம் அணைக்க முடியாத ஹைப்பர் ஆக்டிவ் மின்மினிப் பூச்சியாக அங்குமிங்கும் பறந்து ஓடியாடித் துள்ளித் திரியும் உயிருள்ள உணர்ச்சிப்பிழம்புதான் தெரிந்தார். சந்திரபாபு போல் முகசேஷ்டை. சந்திரபாபு பாடும்போது ஓரிடத்தில் நிற்க மாட்டார் என்பதற்காக நாலைந்து ஒலிவாங்கிகள் அவரைச் சுற்றி வைத்திருப்பார்கள் என்பார்கள். அந்த மாதிரி ராபின் வில்லியம்ஸ் நடிக்கும்போது அவரைச் சுற்றி ஏழெட்டு கேமிராக்கள் பதிவு செய்ய வைத்திருக்க வேண்டும். மனுஷனின் ஒவ்வொரு தசையும் நடிக்கும், சில சமயம் கட்டுக்குக் கொஞ்சம் அடங்காமலேயே.
அதே சமயம் நாகேஷ் போல் குணச்சித்திர வேடங்களையும் லாவகமாக செய்தார். நல்ல நடிகர் என்பவர் இதைத்தான் பொருத்தமாகச் செய்வார் என்றில்லாமல், கிடைத்த வேடத்தில் எல்லாம் வித்தியாசப்படுத்துவார் என்பதற்கு ராபின் வில்லியம்ஸ் நல்ல உதாரணம். தமிழில் ‘அவ்வை சண்முகி’யாக மொழியாக்கம் பெற்ற அசல் ‘மிஸஸ் டவுட்ஃபைர்’ல் அந்தக்கால நாரிமணியாகவே மாறியிருப்பார்.
ஆங்கிலப் பேராசிரியராக (டெட் பொயட்ஸ் சொஸைட்டி) நடித்தாலும் சரி, உளவியல் வல்லுநராக (குட் வில் ஹண்டிங்) வந்தாலும் சரி, எல்லாவற்றிலும் கொஞ்சம் கருணை இருக்கும். கண்கள் கனிவாக உலகத்தைப் பார்க்கும். சோர்ந்த உள்ளத்தைத் தொட்டு ஆதுரத்துடன் தலை நிமிர்த்தும். மனிதம் இதுதான் என்பது புரியக் கொடுக்கும்.
எங்கே பார்த்தாலும் அதே உற்சாகம் அவரிடம் இருந்தது. தொலைகாட்சிப் பேட்டியில் குட்டிப் போட்ட பூனை போல் குதிப்பார்; ஓடுவார்; சாடுவார். நேரடி நகைச்சுவை நிகழ்ச்சியில் அவ்வப்போது நடக்கும் விஷயங்களை வைத்தே பார்வையாளர்களைக் குஷிப்படுத்துவார். சாமர்த்தியமும் சமயோசிதமும் சூட்சும புத்தியும் குறுகுறு உடலும் ஒருங்கே ஒருவரிடத்தில் அமையப் பெற்றவர் ராபின் வில்லியம்ஸ். அதனால்தானோ என்னவோ, எப்பொழுதுமே இவர் இருக்கும் இடம் கலகலப்பாக இருந்தாலும், கொஞ்சம் அதிக சத்தமாகவே காணப்படும். இதை உரத்த கூச்சலாகக் கருதியவர்கள் அவரின் சேஷ்டைகளை ரசிக்கவில்லை.
இப்படி இருந்தவர் சென்ற திங்கட்கிழமையன்று 63 ஆண்டுகள் வாழ்ந்ததே போதும் என்று தனது வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துக் கொண்டார். அவர் கடுமையான மனச்சோர்வால் அவதிப்பட்டதுதான் தற்கொலைக்கு காரணம் என்று முதலில் செய்திகள் வெளியாயின – நூற்றுக்கு நான்கு பேர்தான் டிப்ரஷன் காரணமாக தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆனால், இரு நாட்கள் முன்னர் அவருக்கு பார்க்கின்சன்ஸ் நோய் இருப்பதாகக் கண்டறியப்பட்ட செய்தியை அவரது குடும்பத்தினர் வெளியிட்டனர். காரணம் எதுவாக இருந்தாலும், அவரது மரணச் செய்தி அனைவருக்குமே எதிர்பாராத அதிர்ச்சியாகதான் இருந்தது.
தமிழ்த் திரையுலகில் தற்கொலை செய்துகொண்டவர்களைப் பட்டியலிட்டால் நடிகைகள் எக்கச்சக்கமாய் இருப்பார்கள். சிறந்த நடிகை விருது பெற்ற ஷோபா, கமல் ரஜினி என்று எல்லோருடனும் எல்லாப் படங்களிலும் டூயட் கட்டிய சில்க் ஸ்மிதா, படாபட் ஜெயலட்சுமி, மோனல், ஜியா கான் என மிக நீண்ட பட்டியல். எல்லோருக்கும் முன்னோடியாய் மர்லின் மன்ரோ ஹாலிவுட்டில் இருக்கிறார். இவர்கள் அனைவருமே இளம்வயதிலேயே தங்கள் வாழ்வை முடித்துக் கொண்டுவிட்டார்கள்.
இதற்கு அடுத்த வரிசையில் பார்த்தால் தவறுதலாக மரணம் அடைந்தவர்கள் இன்னொரு பட்டியலில் வருகிறார்கள். மைக்கேல் ஜாக்சனும் மர்லின் மன்றோவும் கூட இப்படித்தான் சந்தேகமான சூழ்நிலையில் இறந்தார்கள். விட்னி ஹூஸ்டன் – போதை மாத்திரை அதிகமாக உட்கொண்டதால் மரணம். இதே போல், தனிமையில், குடிபோதையும், போதை மருந்துகளும் அதிகமானதால் இறந்தவர்கள் நிறைய பேர். பாட்மன் படத்தில் வில்லனாக நடித்த ஹீத் லெட்ஜர், ஆஸ்கார் விருதுகள் வென்ற ஃபிலிப் செய்மூர் ஹாஃப்மன், ராக் இசையில் மகிழ்வித்த ஜிம் மாரிசன், இன்னொரு இசை மேதை ஜிமி ஹெண்ட்ரிக்ஸ், பாடகி ஏமி வைன்ஹவுஸ் என இங்கும் நிறைய பேர் நினைவிற்கு வருகிறார்கள்.
செய்தித்தாள், தொலைகாட்சிகளைப் பார்க்கும்போது அமெரிக்காவில் fatalities என்று சொல்லப்படக்கூடிய விதிவச இறப்புகள் சகஜம் என்றுதான் சொல்ல வேண்டும். தினந்தோறும் துப்பாக்கிச் சூட்டில் இறக்கிறார்கள். போருக்குச் சென்று இறக்கிறார்கள். புற்றுநோய், இதய நோய், எயிட்ஸ் என்று சிகிச்சை இல்லாத நோய்களுக்கு பலர் இறக்கிறார்கள். 63 வயதில் உளச்சோர்வு தாங்க இயலாமல் தூக்கு மாட்டிக் கொண்டு இறந்துவிட்டார் ராபின் வில்லியம்ஸ். எர்னஸ்ட் ஹெமிங்வேகூட தற்கொலை செய்து கொண்டவர்தான்.
எது இவர்களை இப்படி ஒரு முடிவுக்குக் கொண்டு தள்ளுகிறது?
ராபின் வில்லியம்ஸ் போன்ற பூரணத்துவம் கொண்ட அதிகலைஞர்களுக்கு ஒன்றை முடித்தவுடன் அடுத்த கட்டத்திற்கு மனம் ஏங்குகிறது. தற்போது ’தி கிரேஸி ஒன்ஸ்’ தொலைக்காட்சித் தொடர் செய்து கொண்டிருந்தார். தொலைக்காட்சியில் வாராவாரம் ஒளிபரப்பாகும். அதற்காக நாள்தோறும் படப்பிடிப்பும் இன்ன பிற வேலைகளும் இருக்கும், தொடர்ந்த ஈடுபாடும் ஒத்துழைப்பும் தேவைப்படும். அதாவது காலை ஒன்பது மணிக்கு சென்றுவிட்டு, மாலை ஐந்து மணிக்கு திரும்புகின்ற சராசரியான வேலையல்ல. ராபின் வில்லியம்ஸ் போன்றோர் எளிதில் சலிப்புக்கு உள்ளாகுபவர்கள். அவர்களுக்கு இந்த மாதிரி ஒரே மாதிரியான கதாபாத்திரம், தொடர்ச்சியான கதையமைப்பு எல்லாமே வெகு விரைவில் அலுத்துவிடும்.
ஏற்கனவே மன அயற்சிக்கு உள்ளாகி அதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தவர். இவரிடம் போய், ‘வயசாயிடுச்சு… மாறிவிடு; ஓய்வெடு!’ என்று சொன்னால் இயலாமையும் கழிவிரக்கமும் தலைதூக்கும். அவருக்கே இது தெரிந்து இருந்தது. ஒரு பேட்டியில் சொல்கிறார்: ‘தற்கொலைத் தடுப்பாளர்களை தொலைபேசியில் அழைத்தேன். “வாழ்க்கை என்பது எல்லோருக்குமானதல்ல!” என்றார்கள். ’ இவ்வாறு தொடர்ந்து வெளிப்படையாக தன்னுடையப் பிரச்சினைகளையும் மனத்தளர்ச்சியையும் வெளிப்படையாக பேசியவருக்கு, அந்த சிந்தனையே அரணாக, தற்கொலையிடமிருந்து பாதுகாத்திருக்க வேண்டாமோ?
நகைச்சுவைக் கலைஞன் தன்னுடைய அகங்காரத்தை கிண்டலும் கேலியுமாகப் பார்ப்பது நம்மை மனம் விட்டு நகைக்க வருகிறது. தற்கொலை என்னும் எண்ணம் வரும்போது, அதே எள்ளல், சுயவெறுப்பாக தன்னை நிறைந்திருப்பது அறியாமல், தன்னுடைய குழந்தைகளையும் மனைவியையும் மறக்கவும் வைக்கவைத்து விடுகின்றன.
ஒரே படத்தில் பத்து வேஷம் கட்டுபவர்களை விடுங்கள். ஒரே காட்சியில் பத்து விதமாய் நடிப்பவர் ராபின் வில்லியம்ஸ். வசனத்தின் ஆரம்பத்தில் தொண்டுக்கிழவியாய் ஒலிப்பார். அடுத்த வசனத்தில் குழந்தையாய்க் குழறுவார்; கொஞ்ச நிமிஷத்தில் அப்படியே ஜனாதிபதி மிடுக்குடன் சொற்பொழிவார்; அப்படியே இரானிய உச்சரிப்புக்குத் தாவுவார்; இந்த மாதிரி ஓரிரண்டு படங்கள் அல்ல, தோன்றும்போதெல்லாம் சமயத்திற்கேற்ப, புத்திசாலித்தனமும் பிறரை அணுக்கமாக கவனிக்கும் தன்மையும் செய்ததையே திரும்பச் செய்யாத குணமும் கொண்டு பச்சோந்தியாக மாறிக் கொண்டேயிருப்பார்.
‘குட் மார்னிங் வியட்நாம்’ படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் சொந்தமாகப் பேசுவது போல் வானொலி வருணணையாளராக சண்டமாருதமெனப் பொழிவார். சொல்வனத்தில் கொன் சதோஷ் பற்றிய குறிப்பில் ஜப்பானிய இயக்குநருக்கு திரைப்படங்களைவிட அசைபடங்கள் ஏன் பிடித்துப் போயின என்று சொல்கிறார்: ‘ஒரு விஷயத்தைக் காட்ட இங்கே நொடிக்கு 25 ஃப்ரேம் என்று பல நிமிஷங்கள் வீணாகிறது. அதே இருபத்தைந்து ஃப்ரேமிற்குள் கடகடவென்று சொல்லிச் செல்ல அனிமேஷன் உதவுகிறது!’ ராபின் வில்லியம்ஸின் அசுரவேக வசன உச்சரிப்பை பார்த்துதான் இந்தக் கருத்து உருவாகி இருக்கும் என்பது என் நம்பிக்கை.
நரம்புகளைத் தாக்கி, உடலை உறைநிலைக்குக் கொண்டு செல்லும் பார்க்கின்சன்ஸ் நோயை அவர் அஞ்சியிருக்கலாம். அல்லது, அதற்காக அவர் உட்கொண்ட மருந்துகள் மனச் சோர்வை அதிகரித்திருக்கலாம். எங்காவது யாராவது அதிவேகமாகப் பேசினாலோ, ‘ஜிகிர்தண்டா’ படத்தில் நடிப்பு சொல்லிக் கொடுக்கும் குரு சோமசுந்தரம் போன்ற கதாபாத்திரங்களைப் பார்க்கும் போதோ, யாராவது மனிததன்மையோடு நேசமுறு செயல் புரியும்போதோ நிச்சயம் ராபின் வில்லியம்ஸின் ஏதாவதொரு குணச்சித்திரம் மின்னலடித்துக் கொண்டேயிருக்கும்- ஒரு ஹைப்பர் ஆக்டிவ் மின்மினிப் பூச்சியாகவே தன் நினைவை விட்டுச் செல்கிறார் ராபின் வில்லியம்ஸ்.