பாவண்ணனின் பயணம்

எம். கோபாலகிருஷ்ணன்

காலச்சுவடு வெளியிடும் பாவண்ணன் சிறுகதை தொகுப்பின்  முன்னுரை

உலகமொழிகளின் மகத்தான இலக்கியங்கள் யாவுமே மனித உறவுகளின் மர்மங்களைக் களையவும் கண்டுணரவுமே தலைப்படுகின்றன. மனித உறவுகளின் ஒளிமிகு வடிவெங்களென தாய்மையும் காதலும் கருணையும் பிரகாசிக்கும்போது அவற்றின் மறுபக்கமாகக் கயமையும் துரோகமும் வன்மமும் அச்சுறுத்துகின்றன. பல சமயங்களில் மேன்மைகளின் முகப்பூச்சுடன் சிறுமைகளே கோலோச்சுகின்றன. மனிதனின் மனம் ஏற்கும் பாவனைகள் பலவும் முன்னுதாரணங்கள் அற்றவை. தனித்துவமானவை. அச்சத்தையும் பயங்கரத்தையும் விதைப்பவை. உறவுகளை அது அணுகும் விதம் வகுத்திட இயலாத சிக்கல்களைக் கொண்டது. மனித மனதின் இருளினூடே எப்போதும் பயணிக்கும் கலை கண்டடைய விழைவது, அந்த இருளில் எங்கேனும் புதைந்திருக்கும் ஒளியின் சிறு துகளையே. அக்கினிக் குஞ்சுபோல மீச்சிறு உரு கொண்டபோதும் அவ்வொளியே இருளைப் போக்கவல்லது. கருணை எனும் அவ்வொளியே மனிதனைப் பிற உயிர்களின்று தனித்துவப்படுத்துகிறது. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் ஆன்மிக ஞானம் அவ்வொளியிலிருந்து பிறந்ததே. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற தமிழ் மெய்யியல் அதிலிருந்து தளைத்ததே.

உலகெங்கிலும் உள்ள மதங்களும் மார்க்கங்களும் ஞானிகளும் ஆன்மிகவாதிகளும் மனித வாழ்வின் உய்விற்கு வழியாக உபதேசித்திருப்பது கருணையின் பல்வேறு விதமான பாதைகளையே. அத்தகைய கருணையின் ஒளிகொண்டு உருவான உறவுகளின் சித்திரங்களே பாவண்ணனின் சிறுகதை உலகம்.

***

1980களில் வேலையின்மை என்பது ஒரு சமூக அடையாளமாகவே இருந்தது. முதல் தலைமுறை பட்டதாரிகள் பலரும் வேலையின்மையின் பொருட்டு இடம்பெயர நேர்ந்தது. குடும்பத்தைப் பிரிவது என்பது அதுவரையிலும் யோசித்திராத ஒன்று. ஆரம்பக்கல்வி முதலே விடுதிகளில் குழந்தைகளை ஒப்படைத்துவிடும் இன்றைய நாகரிகம் தொடங்கியிராத காலம் அது. பசியோடும் வறுமையோடும் போராடி, படித்து, பெரும் போராட்டத்துக்குப் பின் கிடைத்த வேலையில் சேர்ந்து கை நிறைய சம்பளம் வாங்கும் சந்தர்ப்பத்தில் ஆளாக்கிய அப்பாவும் அம்மாவும் அருகிலிருக்க மாட்டார்கள். மொழி அறியாத ஊரில் முகம் தெரியாதவர்களோடு பகிர்ந்துகொள்ளும் அறையின் தனிமையில் மனம் திரும்பத் திரும்ப ஊரையும் உறவுகளையுமே நாடியோடும்.

இதே காலகட்டத்தில்தான் தமிழ் இலக்கியத்தில் சிறுபத்திரிக்கைகளின் எழுச்சியும் நிகழ்ந்தது. தீபம், கணையாழி தொடங்கி ஏராளமான சிறுபத்திரிக்கைகள் அங்கங்கே தோன்றி மறைந்தபடியே இருந்தன. இங்கே இனி, நிகழ், மீட்சி என நீண்ட பட்டியல் உண்டு. தமிழ்ச் சிறுகதையாளர்களின் வரிசையில் புதிய பெயர்கள் பலவும் இடம்பெறத் தொடங்கியதும் இப்பத்திரிக்கைகளின் வழியாகவே. பம்பாயிலிருந்து நாஞ்சில் நாடனும் ஹைதராபாத்திலிருந்து சுப்ரபாரதிமணியனும் பெங்களூரிலிருந்து பாவண்ணனும் எழுத்தின் வழியே தொலைவையும் இழந்த மனிதர்களையும் மீட்க முனைந்தார்கள். பிறந்து வளர்ந்த ஊரும் அதன் மனிதர்களும் சூழல்களும் வாசனையோடும் நிறங்களோடும் அவர்களின் கதைகளாகின. வேறிடத்தில் வேற்று மனிதர்களின் நடுவில் இருந்து இழந்துபோன உறவுகளை நினைவுகளை எழுத்தின் வழியாக மீட்டெடுக்க முனைந்தனர். ரயில்வே ஸ்டேஷன், ஆலமரம், ஏரிக்கரை, வேலங்காடு, தென்னந்தோப்பு என கிராமத்தில் ஓடியாடிக் குதூகலித்த இடங்களும் சுக்குக்காப்பிக்காரர், ஆப்பக்காரக் கிழவி, குதிரைவண்டித் தாத்தா, தோட்டக்காரப் பெரியவர், ஆசிரியர்கள், அரசியல்வாதிகள், கிராமத்துப் பெரிய மனிதர்கள், எளியவர்கள், ஏழைகள் என்று பல்வேறு தரப்பட்ட மனிதர்களும் வாழ்வில் தாம் கண்டு, அனுபவித்த அவமானங்கள், ஏக்கங்கள், ஏமாற்றங்கள், வறுமை, அகங்காரம், பொறாமை, விரோதம், தடுமாற்றம், தவிப்பு என உணர்வுகளும் மேலெழுந்து கதையுலகை நிறைத்திருந்தன.

***

பாவண்ணனின் முதல் சிறுகதை தீபம் இதழில்  1982ஆம் ஆண்டில் வெளியானது. எந்தத் தொகுப்பிலும் சேர்க்கப்படாத அக்கதையின் பிரதிகூட இப்போது கைவசம் இல்லை. 1987ஆம் ஆண்டில் முதல் சிறுகதைத் தொகுப்பு “வேர்கள் தொலைவில் இருக்கின்றன” காவ்யா வெளியீடாக பிரசுரம் பெற்றது. அவருடைய பதினாறாம் சிறுகதைத் தொகுப்பான ‘பாக்குத் தோட்டம்’ 2014ஆம் ஆண்டில் வெளியாகியுள்ளது. 33 ஆண்டுகால நீண்ட சிறுகதைப் பயணத்தில் பாவண்ணன் எழுதியுள்ள கதைகளின் எண்ணிக்கை 184.

மேலோட்டமாகப் பார்த்தால் இத்தொகுப்பு பாவண்ணனின் 33 ஆண்டுகால சிறுகதைப் பயணத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட தருணங்கள் என்றே பொருள்கொள்ள முடியும். உண்மையில் இது ஒரு தலைமுறையின் பயணம். சிக்கல்களும் புதிர்களும் நிரம்பிய உறவுகளினூடாக நிகழ்ந்திருக்கும் கரடுமுரடான பயணம். இதன் பாதையில் தொடர்ந்து வரும்போது பாவண்ணனின் பயணத்தை மூன்று நிலைகளாக வகுத்துவிட முடியும். ஒன்று, இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவு. நமது வாழ்வின் அதிமுக்கியமான மையமாகிய இந்த உறவிலிருந்து மனிதன் எத்தனை விலகி வந்திருக்கிறான் என்பதையே இன்றைய இயற்கைச் சீரழிவுகளும் புவியியல் மாற்றங்களும் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன. இயற்கையுடனான மனிதனின் உறவு இயல்பானது. தன்னிச்சையானது. எளிமையானதும்கூட. அன்றாடம் நாம் காணும் மரங்கள், செடிகள், பூக்கள், பறவைகள், விலங்குகள், வானத்தின் நிறங்கள், காற்றின் விதங்கள் என்று அனைத்துமே அந்த உறவின் வெளிப்பாடுகளே. இன்று நம் நினைவில் மட்டுமே எஞ்சி நிற்கும் மரங்களின், பறவைகளின், பூக்களின் எண்ணிக்கையை யோசித்துப் பார்த்தாலே இன்றைய வாழ்வு இயற்கையிலிருந்து எத்தனை தொலைவு விலகி வந்துள்ளது என்று நம்மால் புரிந்துகொள்ள முடியும். மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான உறவு என்பது வாழ்வின் ஒரு அம்சமாக இருந்தது என்பதையே பாவண்ணனின் கதைகள் அழுத்தமாகச் சுட்டி நிற்கின்றன. அவரது கதைகளில் இடம்பெறும் நிலமாகட்டும் பறவைகளாகட்டும் தாவரங்களாகட்டும் அனைத்துமே சூழல்களை நிறுவுவதோடு நின்றுவிடாது கதாபாத்திரங்களின் மனவோட்டத்தோடு சேர்த்து அடையாளப்படுத்துமளவுக்கு முக்கியத்துவம் கொண்டுள்ளன. அவரது கதைகள் பலவற்றின் தலைப்புகளுமே இதை அடையாளப்படுத்துகின்றன (ஒற்றை மரம், இரண்டு மரங்கள், நெல்லித்தோப்பு, செடி, தனிமரம்) மண்ணின் மீதான பற்றுதலும் மனிதர்களின்பாலான பந்தமும் இயற்கையுடனான மனித உறவின் நீட்சியே.

பாவண்ணனின் சிறுகதை உலகின் அடுத்த படிநிலை மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவு. கிராம அமைப்பு என்பதே ஒருவர் மற்றொருவரைச் சார்ந்து அல்லது அனுசரித்து வாழும் ஒரு முறையை வகுத்திருந்தது. மனிதர்களுக்கு இடையேயான உறவு இன்றியமையாத ஒன்றாக இருந்தது. இதிலிருந்தே சமூகத்தின் பல மதிப்பீடுகள் கிளைத்தன. சமூகத்தின் எளிய மனிதர்களைக் கரிசனையுடன் காணும் பார்வை இத்தகைய உறவின் ஊற்றிலிருந்தே உருவாகிறது. இயற்கையுடனான உறவிலிருந்து விலகி வந்துவிட்டது போலவே இன்று சக மனிதனுடனான உறவிலிருந்தும் நாம் மெல்லமெல்ல விலகி நம்மை நாம் தனிமைப்படுத்திக் கொண்டோம். ‘பசிக்குதுப்பா’ என்று உடல் வளைத்துச் கெஞ்சலுடன் யாசித்து நிற்கும் மூதாட்டியையோ சிறுமியையோ சிறிதும் பொருட்படுத்தாது சிக்னல் விளக்கில் கண்வைத்துக் காத்திருக்கும் சுரணையற்ற தன்மையை நாம் அடைந்துவிட்டோம்.

மனித உறவுகள் ஒவ்வொன்றும் தனித்துவம் கொண்டவை. தீராத மர்மங்களையும் திகைப்பூட்டும் சமரசங்களையும் உலகின் நிருபிக்கப்பட்ட சமன்பாடுகளுக்குள் சிக்காத விநோதங்களையும் தொடர்ந்து முன்வைத்தபடியே இருப்பவை. பாவண்ணனின் பல கதைகளும் உறவின் சிக்கல்களையும் சிடுக்குகளையும் உள்ளீடாகக் கொண்டவை (பலி, கையெழுத்து, வரிசை, வதை, அடுக்கு மாளிகை, உறவு, முள், கூட்டாளிகள், மரம், கழிமுகம்) விசாலமான பார்வையும் ஈரமான அணுகுமுறையுமே புறவுலகின் ஒவ்வொரு அசைவையும் அர்த்தப்படுத்துபவையாக இருக்கமுடியும். முன்முடிவுகள் இல்லாத, எவர்பொருட்டும் சாய்வற்ற பார்வையைக் கொண்டு அணுகும்போதே உறவுகளின் பரிமாணங்களை அவற்றின் எல்லா சாத்தியங்களுடனும் கண்டடைய முடியும். கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றுக்கும் தம்மளவிலான நியாயங்களை முழுமையாக முன்வைப்பதன் மூலமே பூரணமான புரிதலை அடையமுடியும்.

அடுத்தவர் மீதான கரிசனத்தை வைத்தே அன்றாட பாடுகளுக்காக மனிதர்கள் ஏற்கும் பாரங்களை நம்மால் புரிந்துகொள்ளமுடியும். எளிய மனிதர்கள் ஒவ்வொரு பொழுதுக்கும் வாழ்வைக் கடத்த மேற்கொள்ளும் பிரயத்தனங்கள் சொல்லி மாளாதவை. அடைக்கலம், வெளியேற்றம், வண்டி, பயணம், சாயா, வழி, நொண்டிப் பறவைகள், வதைபடும் தினங்கள், சிலுவை, மீரா, சாட்சி, கீரைக்காரி, சட்டை, முடியவில்லை, பாம்பு, நெருப்பு வளையங்கள் உள்ளிட்ட கதைகளின் வழியே அவ்வாறான சில அபூர்வமான சித்திரங்களைப் பாவண்ணன் நுட்பமாகக் காட்சிப்படுத்தியுள்ளார். வெறுமனே வேடிக்கை பார்ப்பவனின் சித்தரிப்பாக நின்றுவிடாமல் அவர்களது வலியையும் இருப்பையும் உள்ளார்ந்த அக்கறையுடன் புரிந்துகொள்ளும் முனைப்பு இக்கதைகளைச் செறிவாக்கித் தந்துள்ளன.

மூன்றாவது நிலை இயற்கையுடனான உறவிலிருந்தும் மனிதர்களுடனான உறவிலிருந்தும் தன்னைத் துண்டித்துக்கொண்டு தனிமனிதனாக மட்டுமே சுருக்கிக்கொண்டிருக்கும் நிலை. நம்மைச் சுற்றி நாம் காணும் பெரும்பான்மை வாழ்வு தனிமனிதனை மையப்படுத்தியதே. தன்னைச் சுற்றி நிகழும் உலகைக் கவனிக்கத் தேவையுமில்லை, பொழுதுமில்லை. மதிப்பீடுகளையும் விழுமியங்களையும் தொலைத்துவிட்டு சுயநலத்துடன் இன்றில் இப்பொழுதில் மட்டுமே ‘இருந்து’கொண்டிருக்கும் நவீன வாழ்வின் அவசரச் சித்திரங்களாய் அமைந்த கதைகள் அடையாளம், பாதுகாப்பு, அடைக்கலம், மீரா, காலத்தின் விளிம்பில் போன்றவை.

அடுத்தவர் மீதான அக்கறையில்லாத வாழ்வு என்பது அனைவரின் மீதும் இன்று நிர்ப்பந்திக்கப்பட்ட ஒன்று. நவீன தொழில் நுட்ப வசதிகளும் அனைத்துத் தனி அடையாளங்களையும் பொது அடையாளங்களுக்குள் கரைத்துவிடும் உலகளாவிய போக்கும் நம்மை அப்படி வழி திருப்புகின்றன. இருப்பினும் சிலர் தனித்துவத்துடன் உலகின் அனைத்துப் போக்குகளுக்கு நடுவிலும் தமக்கான குணம் மாறாமல் இருக்கவே செய்கிறார்கள். அத்தகையோர் அபூர்வமானவர்கள். பிரயாணம், கூடு, வைராக்கியம் போன்ற கதைகளில் நாம் சந்திக்கும் ஒவ்வொருவரும் அப்படிப்பட்ட தனித்துவங்களுடன் உலகப் பொது நியதியிலிருந்து தம்மை விலக்கிக்கொண்ட மனிதர்கள். இப்படிப்பட்டவர்களை நம்மால் ஒருகணம் வியப்புடன் பார்க்கவும் நம்மால் இப்படியெல்லாம் இருக்க முடியாதுப்பா என்று அவசரமாய் விலகிவிடவுமே முடிகிறது.

தெருவில் கூடிவிளையாட முடியாத ஒரு தலைமுறைதான் அடுத்த வீட்டுக்காரனைப் பற்றிய குறைந்தபட்ச அக்கறையில்லாமல் தான், தன் சுகம் என்று ஓடிக்கொண்டே இருக்கிறது. விளையாட்டும் வேடிக்கையும் துள்ளலும் மிக்க சிறுவர்களின் உலகம் மிக எளிமையானது. ஒப்பனைகளற்றது. அன்றாடங்களின் நெருக்கடிகளிலிருந்தும் அவஸ்தைகளிலிருந்தும் நம்மை நாம் ஆசுவாசப்படுத்திக்கொள்வது சிறுவயது நினைவுகளின் நிழல்களிலேயே. உப்பு, கூண்டு, சின்னம், ராஜண்ணா, வெளியேற்றப்பட்ட குதிரை போன்ற கதைகளில் கோலி, பம்பரம், கிட்டிப்புள், சடுகுடு, தாயம், சுங்கரைக்காய், ஏழாங்காய், பல்லாங்குழி போன்ற எண்ணற்ற  சிறுவயது விளையாட்டுக்கள் பலவற்றையும் நினைவுபடுத்துகின்றன. இன்றைய சிறுவர்களின் உலகம் இழந்துவிட்ட புறவுலகின் அழகுகளை, தோழமையின் ஆழங்களை இக்கதைகள் ஏக்கத்துடன் சுட்டி நிற்கின்றன.

இந்த மூன்று நிலைகளையும் கடந்து நிற்கும்போது ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள மதிப்பீடுகளையும் முறைமைகளையும் மறுபரிசீலனைக்கு உட்படுத்தவேண்டியுள்ளது. இந்த மதிப்பீடுகளுக்கும் அறங்களுக்கும் உதாரணமாகக் காட்டப்படும் காவிய மாந்தர்களை, சரித்திரச் சம்பவங்களைப் புதிய கோணத்தில் அணுகி விமர்சிக்கவேண்டிய தேவையும் உருவாகிறது. கடந்த காலம் மீள்பார்வைக்கு உட்படுகிறது. நாம் நன்கறிந்த புராண மாந்தர்களையும் இதிகாச நிகழ்வுகளையும் இன்றைய பார்வையில் அணுகும்போது புதிய திறப்புகளும் புரிதல்களும் சாத்தியமாகின்றன. அன்னை, கண்கள், வெள்ளம், தங்க மாலை, திரை, புதிர், ஏவாளின் இரண்டாம் முடிவு, ஏழுலட்சம் வரிகள்அல்லி, ரணம், சுழல், வாசவதத்தை, முற்றுகை ஆகிய கதைகளின் வழியாக பாவண்ணன் காட்டும் சரித்திர நிகழ்வுகள் புதிய கேள்விகளுடன் முன் நிற்கின்றன. காவியங்களும் இதிகாசங்களும் எப்போதும் புதிய வாசிப்புக்கும் பொருள்படுத்தலுக்கும் விமர்சனங்களுக்கும் விரிவான அளவில் இடம் தருபவை. காலம் தாண்டியும் தம்மளவில் அவை கொண்டிருக்கும் செறிவும் இடைவெளிகளுமே அத்தகைய பார்வையை சாத்தியப்படுத்துகின்றன.

சமூகத்தின் ஓர் அங்கமாக இருந்த மனிதன் அனைத்திலிருந்தும் தன்னைத் துண்டித்துக்கொண்டு தனித்தவனாக, தனக்கான உலகத்தில் தான் மட்டுமே இருக்கும்போது அவன் மீது இரண்டுவிதமான அழுத்தங்கள் உருவாகின்றன. தனது கடந்த காலம் அவனுள் உருவாக்கி வைத்துள்ள வாழ்க்கை சார்ந்த பார்வையை, மதிப்பீடுகளை அவனால் முற்றிலும் உதறிவிட முடியவில்லை. அதேசமயத்தில் இன்றைய நவீன வாழ்வின் நிர்ப்பந்தங்களுக்கேற்ப எதையும் பொருட்படுத்தாதவனாக தன்னை நிறுவிக்கொள்ள வேண்டிய தேவைக்கும் ஆட்பட்டிருக்கிறான். இந்த இரண்டுக்கும் நடுவில் சரிகளும் தவறுகளும் இடம் மாறி குழப்பமான ஒருநிலைக்குத் தள்ளப்படுகிறான். இந்த அழுத்தம் அவனை நோய்மையில் கொண்டு தள்ளுகிறது.

நவீன மருத்துவத்தின் வளர்ச்சிக்கும் சாதனைகளுக்கும் இணையாக அதன் அசுரத்தனமும் நோய்களின் பெருக்கமும் பெரும் சவால் விடுத்தபடியேதான் உள்ளன. மரணத்தை வெல்லும் முனைப்பும், முடியாதபோது அதை ஒத்திப்போடும் முயற்சியுமே மருத்துவத்தின் சாத்தியம். எல்லாவற்றையும் தாண்டி விடைகாண முடியாத புதிரென மரணம் பல புதிய நோய்களின் வழியாகத் தன்னைப் புதிய வடிவில் வெளிப்படுத்திய வண்ணமே உள்ளது. பூனைக்குட்டி, நித்யா, அழைப்பு உள்ளிட்ட கதைகளில் காணும் நோய்மையின் விநோதங்கள் நவீன வாழ்வைக் குறித்த கேள்விகளை எழுப்புகின்றன.

***

பாவண்ணனின் ஆரம்பகாலக் கதைகள் பலவும் உறவுகள், சகமனிதர்கள், நண்பர்கள், அன்றாட வாழ்வின் சுமைகள் அதன் வலிகள் என்று அன்றைய காலகட்டத்தின் கறுப்பு வெள்ளைப் படங்களாக அமைந்துள்ளன. சொந்தங்களை சொந்த மண்ணை நீங்கிய மனம் அவற்றின் ஒவ்வொரு அங்கத்தையும் மன அடுக்கிலிருந்து ஒவ்வொன்றாய்த் தொட்டெடுத்து மீட்டிப் பார்க்கும் பேரனுபவமே கதைகளாகியுள்ளன. வேர்கள் தொலைவில் இருக்கின்றன, வெளியேற்றம், நேற்று வாழ்ந்தவர்கள் என்று தலைப்புகளே துயரம் சுமந்து நிற்கின்றன. ஆனால் காலம் மெல்ல மெல்ல இந்தப் பார்வையை முன்னகர்த்துகிறது. தொலைந்துபோன அல்லது தொலைவும் வேறிடமும் பிரித்து வைத்திருக்கும் உறவுகளை அருகிலிருக்கும் மனிதர்களிடம் கண்டடைய முனைகிறது மனம். உறவுகளிடம் தளையத் துடிக்கும் மனம் பற்றுகோல் தேடி அலைந்து எல்லா உறவும் எமதுறவே எனும் பேரனுபவத்தை அடைகிறது. நவீன வாழ்க்கை நமக்குள் ஏற்படுத்திய மாற்றங்களை அதன் விளைவுகளைக் காட்சிப்படுத்தத் தொடங்குகிறது. உறவுகள் சார்ந்தும் மதிப்பீடுகள் சார்ந்தும் வாழ்வின் பார்வை மாற்றம் பெறுகிறது.

உடைபடும் உறவுகள், சீர்கெட்ட மதிப்பீடுகள், எல்லைகள் வகுத்த பிரிவுகள், இயற்கையிலிருந்து முற்றிலுமாக விலகிய இயந்திரமயமான வாழ்வு என எத்தனையோ சங்கடங்களும் சந்தர்ப்பங்களும் எல்லாவற்றையும் கடந்து ஓடிக்கொண்டே யிருக்கின்றன. ஆனால் இத்தனைக்கும் நடுவில் நம்பிக்கையுடன் ஒன்று மட்டும் தீவிரத்துடன் அதிர்ந்தபடியே உள்ளது. இப்பயணம் முழுக்க அது தன் வலிமையை இழக்கவில்லை. தடம் மாறவில்லை; தடுமாறவுமில்லை. சக மனிதர்களின் மீதான அக்கறையும் இயற்கையின் மீதான கரிசனமும் கூடிய ஆன்மிகமே அது. அந்தப் பிரதேச எல்லைகளையும், மொழி வேற்றுமைகளையும் இன பேதங்களையும் கடந்த அந்த ஆன்மிகத்தின் குரல் பாவண்ணனின் கதை உலகம் முழுக்கத் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கிறது. இத்தனை இழிவுகளுக்கும் அழிவுகளுக்கும் பிறகும் இவ்வுலகம் வாழத்தகுந்ததாக அமையும், அதற்கான சாத்தியங்கள் மனித மனத்தில் குடிகொண்டிருக்கின்றன என்ற பலத்த நம்பிக்கையை மனிதனுக்குள் மனிதனை மட்டுமே காணும் தூய ஆன்மிகத்தின் வழியாக பாவண்ணனின் கதைகள் அழுத்தமாகப் பறைசாற்றியபடியே உள்ளன.

கோவை, எம்.கோபாலகிருஷ்ணன்

10.08.2015

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.