– நரோபா –
“ஏன் நீங்கள் உங்களைப் பற்றி எந்த வரலாற்றையும் வருங்கால சந்ததியினருக்காக விட்டுச் செல்வதில்லை ? “என்று கேட்டேன். அதற்கு அவர், “ நாங்கள் சகஜ முறையை ( எளிய வாழ்க்கையை ) கடைபிடிக்கிறோம் என்பதால் எங்களுக்குப் பின் எந்த சுவடுகளையும் விட்டுச்செல்வதில்லை” என்று சொன்னார். அலைகள் மெல்ல ஓய்ந்து, ஆற்றுப்படுகையில் சிறிய அளவில் நீர் இருந்தது. சேற்றில் சில ஓடங்களை ஒடக்காரர்கள் இழுத்துச் சென்றனர். சேற்றில் ஓடம் தன் தடத்தை விட்டுச் சென்றது. அவர் தொடர்ந்து பேசினார், “ஆற்றின் வெள்ளப் பெருக்கில் மிதக்கும் ஓடம் என்றேனும் தடத்தை விட்டுச் செல்கிறதா? சேற்றில் உழலும் ஒடக்காரர்கள் அவர்களுடைய சிறுமையின் வெளிப்பாடாக நீண்ட தடத்தை மண்ணில் விட்டுச் செல்கின்றனர். இது சகஜ வழியல்ல.”
– க்ஷிதி மோகன் சென், இந்து ஞானம் ஒரு எளிய அறிமுகம், வங்காளத்து பால்கள்.
2012 ஆம் ஆண்டு கவிஞர் தேவதேவனை கவுரவிக்கும் விதமாக கோவையில் நடைபெற்ற விழாவிற்கு வந்திருந்த மலையாள கவிஞர் கல்பட்டா நாராயணன் அவர்களுடன் கவிதை குறித்து நண்பர்கள் அளவளாவுவதைக் கேட்டுக்கொண்டிருக்கும் வாய்ப்பு எனக்கும் கிட்டியது. அப்போது நெடுஞ்சாலை புத்தரின் நூறு முகங்கள் தொகுப்பில் இடம்பெற்றுள்ள மலையாள கவிஞர் கல்பற்றாவின் கவிதைகளை நண்பர்கள் வாசித்து விவாதித்தனர். அந்த informal கூடுகையில் பங்குகொண்ட நண்பர்களுக்கு அது ஒரு மறக்க முடியாத அனுபவம். எனக்கும்கூட. கவிதை குறித்தான புதிய திறப்புகள் சாத்தியமாகின. கல்பட்டாவை எனக்கே எனக்கான கவி என என் அகம் கண்டு கொண்ட தருணம் அது.
கவிதை நமக்களிக்கும் வாசிப்பனுபவத்தை எழுத்தில் புறவயமாக விளக்கி சொல்ல முற்படுவது என்பது படிமத்தை கொண்டு படிமத்தை விளக்குவது போன்றுதான். கால நதியின் ஆழத்து வண்டலிலிருந்து கவிஞன் தியானித்து துழாவி கைக்கொள்ளும் மாய கூழாங்கற்கள் தான் படிமங்கள். நொடிக்கு நொடி உருமாறும் வானளையும் மேகக்கூட்டங்கள் போல் கவிதைகளும் பார்க்கும் கண்களை பொருத்தும் கணங்களைப் பொருத்தும் உருமாறிக் கொண்டே இருக்கின்றன. நெடுஞ்சாலையோரம் காலமாற்றத்தின் சாட்சியாக கிடக்கும் கல்மண்டபம் போல் சொற்கள் படிமங்களை நிலைநிறுத்துகின்றன. அக வெளியில் உருவமற்று மொந்தையாக படிந்திருக்கும் உருவகங்கள் இறக்கை விரித்த தேவதைகளாக உருமாறும் அந்த கணம் நிகழும் வரை வாசகன் தன் இதயத்தை அகல திறந்துவைத்து காத்திருக்கத்தான் வேண்டும்.
நெடுஞ்சாலை புத்தர்
நேற்று நான்
நெடுஞ்சாலையை குறுக்கே கடக்கும்
புத்தனைக் கண்டேன்.
சாயங்காலப் பரபரப்பில்
கடக்க முடியாமல்
இப்பக்கம்
வெகுநேரமாக நின்றிருந்தேன்
ஐம்பதோ
அறுபதோ
எழுபதோ
வருடம் நீளமுள்ள வாழ்வில்
எப்படிப் பார்த்தாலும் ஒரு ஒன்றரை வருடம்
நாம் இப்படி கடக்கமுடியாமல்
காத்து நிற்கிறோம்
என்று எண்ணியபடி.
அப்போது ஒருவன்
சற்றும் தயங்காமல்
மெதுவாக நெடுஞ்சாலையை கடப்பதை கண்டேன்
அவனைப் பின்தொடரத் தொடங்குகையில்
ஒரு வண்டி
குரோதத்துடன் என்னை நோக்கி வந்தது
ஒரு வண்டியும்
அவனுக்காக வேகத்தை குறைக்கவில்லை
இயல்பான
அகன்ற
தனித்த
எப்போதும் அங்கிருக்கும் பாதையில்
அவன் நடந்து மறுபக்கம் சேர்ந்தான்.
வேகமும் அது அளிக்கும் களிவெறியும் மட்டுமே நியதியாக கொண்டவை நெடுஞ்சாலைகள். அங்கே எவருக்காகவும் எவரும் காத்திருப்பதில்லை. புத்தனுக்காகவும் எனக்காகவும் அங்கு எதுவும் அதனுடைய வேகத்தை குறைப்பதில்லை. காலமும் அப்படித்தான். அங்கே அதன் ஒழுங்கிற்கு பொருந்தாத ஜீவன்களுக்கு இடம் இருப்பதில்லை. அந்த லயத்துடன் ஒத்திசையாத ஏதோ ஒன்று அதற்குள் நுழையும்போது அது எல்லாவற்றையும் குலைக்கிறது. மனிதர்கள் ஏதோ ஒரு காலச்சுழலில் நெடுஞ்சாலையை கடக்க எப்போதும் கால்கடுக்க காத்திருக்கிறார்கள். அதன் வேகத்தை விழிகளில் மிரட்சி விரிய கண்டு கொண்டிருக்கிறார்கள்.
நெடுஞ்சாலை நவீனத்துவத்தின் குறியீடும்கூட. வாழ்க்கையின் போக்கிற்காக அச்சமும் தயக்கமும் கொள்வது நவீனத்துவம் மீள மீள பேசிய அக சிக்கல். இறுகிய நியதிகளால் கட்டப்பட்ட நெடுஞ்சாலையை மனம் அஞ்சுகிறது. அதை ஏற்காத, அந்த வேகத்தை தனதாக்கிகொள்ள இயலாத பொருந்தா நிதானம் கொண்டவர்கள் கொள்ளும் சிதைவைத்தான், அவர்கள் முட்டிக்கொள்ளும் சுவற்றைதான் நவீனத்துவம் பேசுகிறது. காஃப்காவின் சம்சா அப்படி ஒரு நெடுஞ்சாலையை கடக்க இயலாதவன் தான். பாதசாரியின் காசியும் ரா.கிரிதரனின் விவேக்கும் கூடத்தான். காமமும், அதிகாரமும், காலமும் தாண்டவியலா பெருஞ்சாலையாகி நிற்கிறது.
நெடுஞ்சாலைக்கு மிக நெருக்கமான படிமம் நதி என்று எண்ணிக்கொண்டேன். நெடுஞ்சாலை நதியாகும்போது படிமம் நவீனத்துவத்தில் இருந்து மரபின் பாதையில் பயணிக்கிறது. நதி வகுத்துக்கொண்ட பாதையில் செல்கிறது ஆனால் அது கட்டற்றதும் கூட. சுவடு பதியா பாதங்கள் கொண்ட, நிழல் விழா பறவையை போன்ற, கணநேர சுகந்தத்தை விட்டு சென்று மட்கும் மலர் போல நிதானத்துடன் மென்மையுடன் நிற்கிறான் புத்தன். அவன் வேறு காலத்தில் வாழ்பவன். அவனுக்கான தனித்த அகன்ற இப்போதிருக்கும் பாதையில் நிதானமாக சாலையை கடக்கிறான். இரைச்சலை மீறி ஒலிக்கும் தூரத்து இசையை போல், இடர்களில் குழைந்து தன் வழியை நிதானமாக ஊர்ந்து கண்டுகொள்ளும் நீரைப்போல் கடக்க முடிகிறது. அவனை பின்தொடரும் முயற்சிகள் எப்போதும் நமக்கு பலனளிக்க போவதில்லை.
பற்றற்ற புத்தன், சமநிலை குலையாத புத்தன், மரபில் போற்றப்படும் ஸ்தித ப்ரஞன் அருகிலேயே நவீனத்துவ இருத்தலியல் சிக்கலில் சாலையை கடக்க முயலாமல் தவிக்கும் சாமானியன்.. மரபும் நவீனத்துவமும் சந்திக்கும் புள்ளியில் பின்நவீனத்துவம் பிறக்கிறது என்று எனக்கு தோன்றுகிறது.
அவன் பறவையாய் பறந்து கடக்கவில்லை, நிலத்தில் காலூன்றி நிதானமாக நடக்கிறான், இதற்கு முன்னர் அவன் சேற்றுப் பரப்பையும், மணல் வெளியையும், முட்காடுகளையும் எப்படி கடந்தானோ அப்படி நெடுஞ்சாலையையும் அவன் கடக்கிறான். அவன் எதையும் அஞ்சி தவிர்க்கவில்லை, எதிலிருந்தும் நழுவிச் செல்லவில்லை, எதிலிருந்தும் விலகிச் செல்லவில்லை. சுவடுகள் பதியாமல் நடக்க அவன் முயல்வதில்லை, பதிகிறதா இல்லையா என்பது குறித்தும் அவனுக்கு எந்த அக்கறையும் இல்லை.
‘எனது மரணம் மனிதர்கள் அறியாமலிருக்கட்டும்
எனது பிணத்தை கழுகுகள் காணாமலிருக்கட்டும்
தனிமையில் இந்த உயிர் பிரியுமென்றால்
இந்த பிட்சுவின் ஆசை நிறைவேறும்
– மில –ரேபா (விஷ்ணுபுரம்)
நெடுஞ்சாலை புத்தரின் நூறு முகங்கள் – மலையாள கவிதைகள்- தமிழாக்கம்: ஜெயமோகன், வெளியீடு- யுனைடெட் ரைட்டர்ஸ் (தமிழினி)
3 comments