மெஹருன்னிசா

– எஸ். சுரேஷ் –

அந்தப் பெண் அவனை இறுக்கமாக கட்டிக்கொண்டிருந்தாள். அந்த பையனோ சிரித்துக்கொண்டே ஸ்கூட்டரை வேகமாக ஓட்டிக் கொண்டு போனான். இதைப் பார்த்த பஷீர் பாய், “எப்படி இன்டீசென்ட்டா இருக்காங்க பாரு. இவங்க ஒத்தர ஒத்துரு சீக்கிரமா கைவிட்டுடுவாங்க. ஒத்தர ஒர்த்தரு கைவிடாத ஒரு காதல் கத சொல்றேன். உட்காருங்க,” என்றார்.

“காதல் கதையா?” என்று நான் இழுத்தேன்.

“ஆமாம்டா. உனக்கு எப்போவும் பேய் கததான் வேணும். உட்கார்ந்து இந்தக் கதைய கேளுங்க” என்று உத்தரவிட்டார் பஷீர் பாய். நாங்கள் எல்லோரும் திண்ணையில் அவர் அருகில் உட்கார்ந்தோம்.

“மெஹருன்னிசா எங்க உறவுக்கார பெண். அவ ராகவன்னு ஒரு பையன காதலிச்சா. ராகவன் ஒரு பம்மன். அதிலும் அவன் ஒரு நாமம்தார்,” என்றார் பஷீர்.

“ஐயங்கார்,” என்றான் மோகன். அவன் ஒரு ஐயங்கார். அவனுக்கு ஐயங்கார்களை நாமம்தார் என்று கூப்பிட்டால் கோபம் வரும்.

“உன்னப் போலதான்டா” என்றார் பஷீர் பாய் மோகனைப் பார்த்து.

“இவங்க ரெண்டு பேரு லவ் ஒஸ்மானியா யூனிவெர்சிட்டில டெவலப் ஆச்சு. மெஹருன்னிசா ஆர்ட்ஸ் காலேஜ்ல எம்.ஏ. படிச்சிட்டிருந்தா. ராகவன் எஞ்சினீரிங் காலேஜ்ல எம்.டெக் படிச்சிட்டு இருந்தான். ரெண்டு பேரும் 3E பஸ்ல தினமும் போவாங்க. அங்கதான் லவ் ஸ்டார்ட் ஆச்சு. ரொம்ப டிக்னிபைட் லவ். இப்ப போனாங்களே அவங்கள மாதிரி இல்ல,” என்றார் பஷீர் பாய், ஸ்கூட்டர் போன திசையை நோக்கி.

“அவங்க ரெண்டு பேர பாத்தா லவ்வர்ஸ்ன்னு சொல்ல முடியாது. மெஹருன்னிசா பெரிய அழகி. நல்ல சிவப்பா இருப்பா. ஸ்டைலிஷா டிரஸ் பண்ணுவா. எல்லாம் மாட்சிங்கா இருக்கும். அவள் சிரிப்புக்கு எங்க உறவுக்காரப் பசங்க பல பேர் அடிமையா இருந்தாங்க. ராகவன் அழகும் கம்மி, கலரும் கம்மி. இவன எப்படி மெஹருன்னிசா செலக்ட் பண்ணான்னு எல்லோருக்கும் ஆச்சரியம். ரெண்டு பேரும் சேர்ந்து அந்த பெரிய காம்பஸ் பூரா நடந்திருப்பாங்க. ஆனா யாரும் அவங்க கை கோத்துக்கிட்டு நடந்தத பாத்ததில்ல. ரெண்டு பேரும் பெருசா சிரிச்சி யாரும் பாத்ததில்ல. ராகவன் என்னிக்காவது ஒரு நாள் ஸ்கூட்டர்ல காலேஜ் வருவான். ஆனா அப்பக்கூட அவன் ஸ்கூட்டர் பின்னால மெஹருன்னிசா உட்கார்ந்து யாரும் பார்த்ததில்ல.இப்படி இந்தக் காதல் ஒரு வருஷம் ஓடிச்சி. அப்புறம் ரெண்டு பேரும் அவங்க வீட்ல சொல்லி முடிவு பண்ணாங்க. ஆனா அது ஒரு விசித்திரமான முடிவா இருந்தது,” என்றார் பஷீர் பாய். “இதுபோல நான் கேள்விப்பட்டதில்ல”

“ஓடிப் போயிடலாம்ன்னு முடிவு பண்ணாங்களா?” என்று கேட்டான் புஜ்ஜி. அவன் உறவினர்களில் இருவர் ஓடிப் போய் கல்யாணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

“பேவகூப், அந்த மாதிரி இல்லடா அவங்க” என்று புஜ்ஜியைத் திட்டிவிட்டு தொடர்ந்தார் பஷீர் பாய். “ரொம்ப டிக்னிட்டியோட பிளான் பண்ணாங்க. ஒரு ஞாயிறு சாயங்காலம் ராகவன் மெஹருன்னிசா வீட்டுக்கு வந்தான். அதே சமயம் மெஹருன்னிசா ராகவன் வீட்டுக்கு போனா. அவங்க காதலையும் கல்யாணம் பண்ணிக்கணும் என்ற விருப்பத்தையும் அவங்க வருங்கால மாமனார் மாமியார்கிட்ட சொன்னங்க. சின்ன பசங்க ஐடியா நல்லாதான் போடுவாங்க. ஆனா அவங்களுக்கு பிரக்டிகல்சா என்ன நடக்கும்ன்னு தெரியாது,” – ப்ராக்டிகல் என்பதற்கு பதில் பிரக்டிகல்ஸ் என்று சொன்னார் பஷீர் பாய். அவர் அப்போது தப்பான ஆங்கிலம் பேசுவது வழக்கம்.

“இது மாதிரி பண்ண என்ன தைரியம் இருக்கணும். அதுவும் அந்த பொண்ணுக்கு, தனியாப் போயி ராகவன் அப்பா அம்மாகிட்ட இதச் சொல்ல” என்றான் புஜ்ஜி. “இந்த தைரியத்துக்கே அவங்க சம்மதம் சொல்லியிருக்கணும்”

“டேய். நீ சின்னப் பையன். உங்களுக்கு ஜிந்தகி பத்தி இன்னும் ஒண்ணும் தெரியாது. இவங்க சொன்ன ஒடனே ரெண்டு சைடும் கை தட்டி சபாஷ் சொல்லல.”

“ஒரு பூகம்பம் வெடிச்சிருக்கும்” என்றேன் நான்.

“நீ மட்டமான நாவல் படிக்கற” என்றார் பஷீர் பாய். “அப்படி ஒன்னும் ஆகல. ரெண்டு வீட்லயும் அமைதியா இவங்க சொல்றதைக் கேட்டுக்கிட்டாங்க. மெஹருன்னிசா வீட்ல “எங்க பெண்ணுக்கிட்ட பேசி அப்புறம் முடிவெடுக்கறோம்”ன்னு சொன்னாங்க. ராகவன் வீட்ல எதுவும் பேசாம மெஹருன்னிசாவுக்கு காபி கொடுத்து அனுப்பினாங்க.

“ரெண்டு வீடும் ரொம்ப ஆர்த்தடாக்ஸ் வீடுங்க. அவங்களால இது நெனைச்சுக்கூட பார்க்க முடியாத விஷயமா இருந்தது. இதுல அவங்களுக்கு துளிகூட சம்மதம் இல்லை, இது நடக்கற விஷயமே இல்லைன்னு அவங்க பசங்ககிட்ட சொல்லிட்டாங்க. ஆனா அந்தக் காதல் உடையும் போல தெரியல.

“அப்போதான் இந்த விஷயம் குடும்பத்துல பலருக்குத் தெரிய ஆரம்பிச்சது. இந்த மாதிரி விஷயம்னா நான் விடுவேனா? ஒரு நாள் ப்ரோபசரோட கூட யூனிவெர்சிட்டி போயி இவங்க ரெண்டு பேரையும் பிடிச்சேன். நானும் ப்ரோபசரும் ஆர்ட்ஸ் காலேஜ் முன்னால இருக்கற புல்வெளில உட்கார்ந்து அவங்களோட பேசினோம்.

“ப்ரோபசரும் நானும் என்ன சிக்கல்லாம் வரும்னு அட்வைஸ் பண்ணோம். ஆனா அவங்க ரொம்ப ஸ்ட்ராங்கா இருந்தாங்க. எதாவது சினிமா ஸ்டைல்ல டைலாக் அடிப்பாங்கன்னு பார்த்தேன், ஆனா அவங்க ரொம்ப பேசல. “”மெஹருன்னிசாவ நான் கைவிட மாட்டேன்”ன்னு ராகவன் சொன்னான். அது ஒண்ணுதான் கொஞ்சம் சினிமாத்தனமா இருந்தது.

“ஒரு நாள் மெஹருன்னிசாவோட அப்பா அக்தர் சாப், நம்ப ப்ரொபசர கூப்பிட்டு அனுப்பிச்சாரு. ப்ரொபசர் என்ன கூப்பிட்டாரு. ஏதாவது பிட்டிங் பண்ணனும்னா பஷீர்தான் பெஸ்ட்ன்னு அவர் சொல்லுவாரு. நான் ப்ரோபசரோட மெஹருன்னிசா வீட்டுக்கு போனேன்.

“மெஹருன்னிசா அம்மா நஸ்ரின் எனக்கு தூரத்து உறவு. அக்கா முறை. அக்தர் சாப் பெரிய பணக்காரர். பாரடிஸ் ஏரியால ரெண்டு மூணு கட வெச்சிருக்காரு. பெந்தர்காஸ்ட் ரோட்டில இருக்கு அவங்க வீடு. அது ஒரு பெரிய பங்களா. நுழைஞ்ச உடனே ஒரு சின்ன ரூம். அடுத்தது ஒரு பெரிய ஹால். ஏதோ நிஜாம் காலத்துக்கு வந்த மாதிரி இருக்கும் அந்த ஹாலுக்கு வந்தா. ரெண்டு பெரிய திவான். அதுல ரெண்டு ரெண்டு திண்டு. ரெண்டு டீக் நாற்காலி. நல்ல வேலைப்பாடு அதுல. ரெண்டுத்துக்கும் வெல்வெட் போர்த்தின குஷன். ஹால் நடுவுல காஷ்மீர் கார்ப்பெட், ஒரு டீபா. ஓரத்துல அழகுக்காக ஒரு ஹுக்கா. இன்னொரு கோடில கலர் டீவி. கலர் டீவி வந்த புதுசு அது. சிகந்தராபாத்லயே முதல் கலர் டீவி இவங்க வீட்ல தான். செவுர்ல அவங்க புஸுர்க் படங்க. எப்படி மேயின்டேன் பண்றாங்களோ ஆனா, செவுர் வெள்ள வெளேர்ன்னு இருக்கும். நம்ப வீட்டுக்கெல்லாம் சுண்ணாம்பு அடிச்ச அடுத்த நாளே சுவர் கருப்பா ஆயிடுது” என்று பெருமூச்சு விட்டார் பஷீர் பாய்.

“அக்தர் சாப் எங்ககிட்ட சொன்னார், “எனக்கு நீங்க ஒரு உதவி செய்யணும். மெஹருன்னிச்சா அந்த பையன மறந்துடுவான்னு நான் நெனச்சேன். ஆனா ..” என்று இழுத்தார்.

“வேணும்னா ஜாங்கிர் பாய் கிட்ட சொல்லி அந்த பையன ரெண்டு தட்டு தட்ட சொல்றேன். ஜாங்கிர் பாய பாத்தாலே இந்த பம்மன் பசங்க ஒண்ணுக்கு போயிடுவாங்க” என்று சொல்லிவிட்டு சிரித்தேன் நான்.

அக்தர் பாய் முகம் சிவந்தது. ஏதோ திட்டுவதற்கு வாய் திறந்தார், ஆனால் அவர் டிக்னிட்டி பத்தி யோசிச்சிருப்பார். எதுவும் சொல்லாம் வாயை மூடிக்கிட்டார். பிறகு நான் சொன்னதை சட்டை செய்யாம பேச ஆரம்பிச்சார், “அந்த பையன் வீட்டுக்கு நீங்க போகணும். அந்த பையன் நாம ஏதோ இதுக்கு சம்மதம் கொடுப்போம்ன்னு நினைக்கறானோ என்னவோ. நீங்க அவன்கிட்டயும், அவங்க அப்பா அம்மாகிட்டயும் எங்களுக்கு இதுல துளி கூட சம்மதம் கிடையாதுன்னு சொல்லிட்டு வரணும். இது தெரிஞ்ச பிறகாவது நிக்குமா பார்ப்போம்”.

“அந்த சமயம் உள்ளே வந்த நஸ்ரின் தீதி புலம்ப ஆரம்பிச்சா. நான் எத வேணும்னாலும் தாங்கிப்பேன், ஆனா இந்த பெண்கள் புலம்ப ஆரம்பிச்சா தாங்க முடியாது” என்று சொல்லிவிட்டு தன் வீட்டுக்குள் எட்டிப் பார்த்தார் பஷீர் பாய்.

“கொஞ்ச நேரம் தீதி சொல்றத கேட்டுட்டு, “”நீங்க ஒன்னும் பயப்படாதீங்க. நான் இருக்கேன். இந்த ப்ராப்ளம சால்வ் பண்றேன்” என்று சொல்லிவிட்டு ப்ரோபசருடன் வீடு திரும்பினேன்.

“சாயந்தரம் ப்ரோபசரும் நானும் மாரட்பள்ளில இருக்கற ராகவன் வீட்டுக்கு போனோம். ஷெனாய் நர்சிங் ஹோம்கிட்ட இருந்தது அவன் வீடு. இவங்க வீடும் பெரிய வீடு. வெளியிலே “எஸ்.நரசிம்ஹன்”ன்னு ஒரு அழகான நேம் ப்ளேட் இருந்தது. ப்ரோபசரும் நானும் கேட் கிட்ட வரதுக்கு முன்பே வீட்டுக்கதவ திறந்து அந்த நாமம்தார் வந்தாரு. வேஷ்டி கட்டிருந்தாரு. மேல ஒரு ஹாப் கை சொக்கா. கலர் கம்மி. நெறைய எண்ணெய் தேச்சி வகுடெடுத்து வாரி இருந்த தலைமுடி. சிங்கள் லைன் நாமம். கழுகு மூக்கு. எங்க ரஷித் போல ‘உம்’ம்முனு இருந்தாரு. ஸ்டீல் ஃப்ரேம் வெச்ச கண்ணாடி. எங்கள ஏதோ டொனேஷன் கேக்க வந்தவங்கன்னு நினைச்சு கோவமா பாத்தாரு.

“வாட் டூ யூ வான்ட்?” என்று கேட்டாரு. உடனே ப்ரொபசர் இங்கிலிஷ்ல, “ஐ யாம் ப்ரொபசர் முஸ்தபா. ஐ டீச் இங்கிலீஷ் இன் சென்ட்ரல் யூனிவர்சிட்டி’ என்றார்.

இதைக் கேட்டவுடன் அந்த நாமம்தார் தண்டாவாயிட்டாரு. “ப்ளீஸ் கம் இன்” என்றார். நாங்க உள்ளே போறதுக்கு முன்னால நானும் இங்கிலிஷ்ல சொன்னேன், “ஐ யாம் பஷீர். வென் ஐ யாம் ஹியர் டோன்ட் ஃபியர்”. ப்ரொபசர் என்னை முறைச்சார். நான் இங்கிலீஷ் பேசினா அவருக்கு ஜெலசி,” என்று எங்களைப் பார்த்து சிரித்துக் கொண்டே சொன்னார் பஷீர் பாய்.

“அவங்க ஹால் ரொம்ப பெருசா இருந்தது. ரெண்டு ரூம் சைஸ் இருக்கும். உள்ள நுழைஞ்ச உடனே கண்ல படறது அந்த ஊஞ்சல்தான். நல்லா பெருசா இருக்கும். எனக்கு அதுல உட்காரணும்னு ஆச. ஆனா ப்ரொபசர் திட்டுவார்ன்னு அதுல உட்காரல. ரூமுக்கு ஒரு கோடில பெரிய கண்ணாடி ஷோகேஸ். அது மேல சில போட்டோக்கள். நாமம்தார் ஏதோ அவார்ட் வாங்கறாரு. சில கப்பு. ஏதோ போட்டில பையன் ஜெயிச்சிருப்பான் போல. ஒரு கருப்பு வெள்ளை போட்டோ. நமம்தாரும் அவர் மனைவியும். ஒரு செவுர்ல பெரிய தஞ்சாவூர் கிருஷ்ணன் படம். இன்னொரு சுவர்ல சங்கு, சக்கரம் மாட்டிருந்தாங்க. சோபா செட் ரொம்ப க்ளீனா புதுசா இருந்தது. எனக்கு ஒக்காரவே பயமா இருந்தது. அவ்வளவு கிளீன். இவங்க வீட்லயும் கலர் டீவி. ஒரு ஓரத்துல பெரிய குத்து விளக்கு.

“நாங்க சோபாவில் உட்கார்ந்தோம். எங்க எதிரில் இருந்த ஒரு நாற்காலியில் நாமம்தார் உட்கார்ந்தார். “வாட் கேன் ஐ டூ பார் யூ?” என்று கேட்டார்.

“ப்ரொபசர் தயக்கத்துடன் சொன்னார், “நான் மெஹருன்னிசாவுக்கு உறவு. அந்த விஷயத்த பத்தி பேசலாம்ன்னு வந்தேன்”

“நாமம்தார் மூஞ்சி கொஞ்சம் சின்னதாச்சு. சைலேண்ட்டா இருந்தாரு. அந்த மௌனத்தை கலைச்சிட்டு அவர் மனைவி வந்தாங்க. ப்ரொபசர பாத்து, ‘ஆதாப் அர்ஸ் ஹை” என்றாங்க.

“ப்ரோபசரும் நானும் ஆடி போயிட்டோம்.

“அதப் பாத்து அவங்க சிரிச்சாங்க. “நான் ஹைதராபாத் பொண்ணுதான். இவர்தான் திருச்சி”

“”ஸ்ரீரங்கம்” என்றார் நாமம்தார்.

“”அவாளுக்கு ஸ்ரீரங்கம்ன்னா தெரியுமோ தெரியாதோன்னு திருச்சின்னு சொன்னேன்” என்றார் அவர்.

“மாமி ரொம்ப யங்கா இருந்தாங்க. நைன் யார்ட் சாரி கட்டிக்கிட்டு இருந்தாங்க, அத ஒரு மாதிரி கட்டுவாங்களே. அதுக்கு ஏதோ பேரு சொல்லுவீங்களே?” என்று என்னையும் மோகனையும் பார்த்துக் கேட்டார் பஷீர் பாய்.

“மடிசார்” என்றேன் நான்.

“அதான். மடிசார். மாமி நல்ல கலரு. பாடிய நல்ல மையின்ட்டேன் பண்ணி இருக்காங்க. மூக்குத்தி போட்டிருந்தாங்க. சூப்பரா இருந்தாங்க” என்று எங்களைப் பார்த்து கண் சிமிட்டினார் பஷீர் பாய். “அவங்களுக்கு சிரிச்ச முகம். இந்த ஆளுக்கா இந்த மாதிரி மனைவின்னு நமக்கு தோணும்”

“ஊஞ்சல்ல உட்கார்ந்துகொண்டு, “நீங்க மெஹருன்னிசாவுக்கு என்ன உறவு?” என்று கேட்டார் அவர் மனைவி.

“”எனக்கு அவங்க அப்பா அம்மா ரெண்டு பேருமே தூரத்து உறவு. நான்தான் மெஹருன்னிசாவோட அம்மாவ ஹாஸ்பிடல்ல சேர்த்தேன், அவ மேஹருன்னிசாவ டெலிவரி பண்ணப்போ. அப்போ இருந்தே அந்தப் பெண்ணை தெரியும்” என்றார் ப்ரொபசர்.

“”நீங்க?” என்று என்னை பார்த்து கேட்டார் நாமம்தார்.

‘”எனக்கு மெஹருன்னிசா அம்மா நஸ்ரின் அக்கா முறை வேணும்” என்றேன்.

“”அவங்க வீட்ல இதுக்கு சம்மதம்தானே?” என்று கேட்டார் மாமி

“”இல்ல இல்ல. அவங்களுக்கு இதுல சம்மதம் இல்ல. அத சொல்லதான் நான் இங்க வந்தேன்” என்றார் ப்ரொபசர். “உங்களுக்கு சம்மதமா?”

“மாமி எதுவும் சொல்வதற்குள் நாமம்தார் சொன்னார், “இல்ல. இல்லவே இல்ல. எங்களுக்கு இதுல துளி கூட சம்மதம் இல்ல”

“”அவங்களுக்கு ஏன் சம்மதம் இல்லையாம்?” என்று கேட்டார் மாமி.

“நாங்க பதில் சொல்றதுக்கு முன் நாமம்தார் சொன்னார், “அதெல்லாம் வெறும் பொய். அவங்களுக்கு என்ன எதிர்ப்பு இருக்க முடியும்? பையன் இன்ஜினியர். நல்ல வேல கிடைக்கும். நல்ல குடும்பம். பையன் தங்கமானவன். இவன போல இன்னொரு பையன் கிடைக்க மாட்டான். பொண்ணு இவன கைக்குள்ள போட்டுண்டுட்டா. ஏதோ மயங்கிட்டான். கொஞ்ச நாள்லயே புத்தி வந்துடும்.”

“”அந்த பொண்ணு நல்ல பொண்ணான்னா இருக்கா, உங்க மனுஷாளே நிறைய பேர் அவள கல்யாணம் பண்ணிக்க ரெடியா இருப்பாளே?” என்று கேட்டார் மாமி. மாமி ரொம்ப நைசா விஷயத்த எங்ககிட்டேந்து பிடுங்கப் பார்த்தாங்க.” என்றார் பஷீர் பாய்.

பிறகு என்னை பார்த்து, “உங்க வீட்டு லேடீஸ் இந்த விஷயத்துல கில்லாடிங்க” என்றார் அவர்.

“”ஆமாம். நிறைய பேரு லைன்ல இருக்கா” என்றார் ப்ரொபசர். அவருக்கு மாமியோட அப்ரோச் புரியல.

‘”அப்போ அவங்கள்ல யாரையாவது ஒருத்தர பண்ணிக்க வேண்டியதுதானே. என் பையன எதுக்கு செலக்ட் பண்ணா?” என்று கோபமாகக் கேட்டார் நாமம்தார். “இவ்வளவு காலமும் அவன் நாங்க சொன்ன பேச்ச தட்டினதில்ல. அவனுக்கு இருக்கற அறிவுக்கு ஐ.ஐ.டில அவனுக்கு கிடைச்சிருக்கும். ஆனா அவன் எங்க கூட இருக்கணும்னு இங்கயே இன்ஜினியரிங் சேர்ந்தான். அதுதான் தப்பா போச்சு. அந்த பொண்ணு அதே ஒஸ்மானியா யூனிவர்சிட்டில எம்.ஏ. பண்ண வருவான்னு யார்க்கு தெரியும். எல்லாம் தலைவிதி”

“”அவாளும் அப்படியே நினைப்பா இல்லையா?” என்றாள் மாமி என்னை பார்த்துக்கொண்டு. “எனக்கென்னவோ நாம்பதான் ரொம்ப எதிர்க்கறமோன்னு இருக்கு,” மாமி மறுபடியும் எங்க ரியாக்ஷன் எப்படி இருக்குன்னு பார்த்தாங்க.

“”இல்லை. மெஹருன்னிசா வீட்ல அவங்களுக்கு துளி கூட இதுல இஷ்டம் இல்லை. அவங்க இத முடிவுக்கு கொண்டு வரணும்ன்னுதான் பார்க்கறாங்க” என்றார் ப்ரொபசர். மாமி முகத்தில் சந்தோஷம் கூடியது போல தெரிஞ்சுது எனக்கு.

“”முடிஞ்சா அந்த பெண்ணுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணிடலாமே?” என்றார் மாமி.

“”பையனுக்கு பண்ணலாமே?” என்றார் ப்ரொபசர்.

“”ரெண்டு பேருக்கும் ஒரே சமயத்துல பண்ணா?” என்று கேட்டேன்
நான். ப்ரொபசர் முறைத்தார்.

“”ப்ரொபசர் சாப். நாங்க தெளிவா இருக்கோம். எங்க பையனுக்கும் அந்த பெண்ணுக்கும் எந்த உறவும் இருக்கக் கூடாது. அவா ரெண்டு பேரும் ஒருத்தர் ஒருத்தர் பாக்காம இருந்த நல்லா இருக்கும். அதுக்குன்னு பையன வீட்ல பூட்டி வெக்க முடியுமா. நல்ல முடிவா எடுப்பான்னு நம்பி தான் விடணும். அவன் மேல எனக்கு இன்னும் அந்த நம்பிக்கை இருக்கு” என்றார் நாமம்தார்.

“இதுக்கு மேல என்ன பேசறதுன்னு எங்களுக்கு தெரியல.

“மாமி, “இருங்கோ. காபி குடுக்கறேன்” என்று சொல்லிட்டு சமையலறைக்கு போனார். காபி வந்தது. அற்புதமா இருந்தது.”

இங்கே பஷீர் பாய் என்னைப் பார்த்து, “தமிழ்க்காரங்க வீட்ல காபி அருமையா இருக்கும். ஆனா உங்களுக்கு டீ போட தெரியாது” என்று
சொன்னார்.

‘காபி குடிச்சிட்டு வெளியே வந்தோம். நான் ஸ்கூட்டர் ஸ்டார்ட் பண்ண இருக்கறப்போ, வேற ஒரு ஸ்கூட்டர்ல ரெண்டு பசங்க வந்தாங்க. பின்னால ராகவன் உட்கார்ந்திருந்தான். மாமிய பாத்து, “அம்மா, நான் சங்கீத் வரைக்கும் போயிட்டு வரேன்” என்றான்.

“அவள் பதில் சொல்வதற்கு முன் ஸ்கூட்டர் வேகமா போயிடுச்சு. மறுபடியும் என் மனசுல நினைச்சுக்கிட்டேன், “மெஹருன்னிசா பக்கத்துல நின்னா ஜோடி பொருந்தாது.” அவ அவ்வளவு அழகு. இவனோ ரொம்ப அன்இம்ப்ரெஸ்ஸிவ்வாக இருந்தான்.

“திரும்பி வரப்போ பின்னாடி உட்கார்ந்திருந்த ப்ரொபசர் கேட்டார், “என்ன சொல்ற பஷீர்?”

“”காபி நல்லா இருந்தது”.

“”நான் காப்பிய பத்தி கேக்கல”.

“”மாமியும் நல்லா இருந்தாங்க”

“என் தலையில் ஒரு தட்டு தட்டினார் ப்ரொபசர், சிரித்துக்கொண்டே.

“”எனக்கு இவங்க விட்டு கொடுப்பாங்கன்னு தோணல. அக்தர் சாபும் விட்டுக் கொடுக்க மாட்டார். இது எங்க போயி முடியுமோ தெரியலை” என்றேன் நான்.

“இதுல தமாஷ் என்னனா ரெண்டு குடும்பமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருந்தது. அப்பா ரெண்டு பேரும் ஒரே மாதிரிதான் இருந்தாங்க. ரெண்டு பேரும் ஆர்த்தடாக்ஸ், ரெண்டு பேரும் பணக்காரங்க, ரெண்டு பேருக்கும் ஒரே குழந்தை, ரெண்டு பேருக்கும் தங்களோட பிள்ளைகள நல்லா படிக்கவெக்கணும்னு ஆசை. ரெண்டு பேரும் டிக்னிடியோட நடந்துப்பாங்க. ஆனா மஜப் வேற ஆயிட்டதுனால இந்த ப்ராப்ளம் எல்லாம்”, என்று ஒரு லெக்சர் கொடுத்தார் பஷீர் பாய்.

“கடைசியில நான் நினைச்ச மாதிரிதான் நடந்தது. ரெண்டு பேரும் அவங்க வீட்டு மனுஷங்க சம்மதத்துக்கு வெயிட் பண்ணாங்க. ஆனா அது வரல. ரெண்டு பேரும் படிப்ப முடிச்சிட்டாங்க. ராகவனுக்கு ரூர்கேலா ஸ்டீல் ப்ளாண்ட்ல வேல கிடைச்சது. இனி வெயிட் பண்ணி லாபம் இல்லைன்னு ரெண்டு பேரும் ரெஜிஸ்டர் மாரேஜ் பண்ணிக்கிட்டாங்க. ரெண்டு பேரும் ரூர்கேலா போயிட்டாங்க”

“அங்க போன பிறகு அவங்க அவங்க வீட்டுக்கு கடிதம் போட்டாங்க. எந்த பதிலும் இல்லை. டெலிபோன் பண்றது எவ்வளவு கஷ்டம். அவங்க ட்ரங்க் கால் புக் பண்ணி இவங்களோட பேசணும்ன்னு பார்த்தா, இவங்க கால் அக்செப்ட் பண்ண மாட்டாங்க. அவங்களும் விடாம கடிதம் போட்டிட்டுதான் இருந்தாங்க. இவங்களும்
கிழிச்சி போட்டிட்டுதான் இருந்தாங்க.

“நம்ப மனுஷங்க மரியாதையா கேட்டா ஒத்துக்க மாட்டாங்க. எதாவது சென்டிமென்டா நடக்கணும். அப்போதான் ரியாக்ட் பண்ணுவாங்க. அது போலதான் ஒரு சம்பவம் நடந்தது. மெஹருன்னிசாவுக்கு அபார்ஷன் ஆச்சு” என்றார் பஷீர் பாய்.

“”அபார்ஷன்னா என்ன பாய்?” என்று கேட்டான் மோகன்.

“”நீ வீட்டுக்குப் போ” என்றார் பஷீர் பாய்.

“‘நான் அப்புறம் சொல்றேன் உனக்கு” என்றேன் நான் மோகனிடம்.

“”இது எங்க நஸ்ரின் தீதிக்கு தெரிஞ்சுது. அன்னிக்கி பூரா ஒரே அழுக, புலம்பல். எங்க சொந்தக்கார லேடீஸ் மூணு நாலு பேரு வேற சேர்ந்துட்டாங்க. கேக்கணுமா? ரொம்ப ஸ்டெடியா இருந்த அக்தர் பாய்கூட நஸ்ரின் தீதிய ரூர்கேலா அனுப்ப ஒத்துக்கிட்டாரு. அவருக்கும் பெண்ணுக்கு இப்படி ஆகிட்டதே என்று கஷ்டமா இருந்திருக்கும்.

“நஸ்ரின் தீதி ரூர்கேலா போனா. ரெண்டு மாசம் அங்க இருந்துட்டு திரும்பி வந்தா. வந்த பிறகு யார பார்த்தாலும் பெண் மாப்பிள்ளை புராணம்தான். அவங்க வீட்டு பக்கம் போகவே எல்லோரும் பயந்தாங்க. நான்கூட ஒரு தடவ ஜெனரல் பஜார் போனப்போ தூரத்துல தீதிய பாத்தேன். ஒரு சந்துல பூந்து திரும்பி வந்துட்டேன்.

“அப்புறம் சில மாசம் கழிச்சி மெஹருன்னிசா மறுபடியும்
ப்ரெக்னன்ட் ஆனா. தீதி கிளம்பி போனா. மெஹருன்னிசாவுக்கு பையன் பிறந்தான். பையனுக்கு மூணு மாசம் ஆனபிறகு மெஹருன்னிசா, குழந்தை, எங்க நஸ்ரிரீன் தீதி எல்லோரும் சிகண்டிரபாத் திரும்பி வந்தாங்க. குழந்தைய ராகவனோட அப்பா அம்மா கிட்ட காமிச்சா அவங்க எல்லாத்தையும் மறந்து தன்ன ஏத்துப்பாங்கன்னு மெஹருன்னிசாவுக்கு ஒரு ஆசை. ராகவன் வேணாம்னுதான் சொல்லி அனுப்பிச்சான். ஆனா மெஹருன்னிசா அவங்கள போயி பாக்கணும்னு பிடிவாதமா இருந்தாள். லேடீஸ் சொன்னா கேப்பாங்களா?” என்றார் பஷீர் பாய்.

“மெஹருன்னிசாவும் நஸ்ரின் தீதியும் குழந்தைய எடுத்துக்கிட்டு ஒரு ராத்திரி மெஹருன்னிசா மாமனார் வீட்டுக்கு போனாங்க. அந்த பம்மனுக்கு இவங்க வராங்கன்னு எப்படி தெரிஞ்சிதோ, கதவையே திறக்கல. ஜன்னலேர்ந்து பாத்து, “இங்க எதுக்கு வந்தீங்க. எங்க பையன்தான் உங்ககிட்ட இருக்கானோல்லியோ அப்புறம் இன்னும் என்ன வேணும்?”னு சத்தம் போட்டார்.

“”உங்க கிராண்ட்சன் ..”

“”எனக்கு பிள்ளையே இல்ல. இதுல பேரன் வேறயா? இங்க நிக்காதேங்கோ. கிளம்புங்கோ” என்று உரக்க கத்த ஆரம்பிச்சார். பக்கத்து வீட்ல இருக்கறவங்க ஜன்னல் வழியா பார்க்க ஆரம்பிச்சாங்க. இவங்க அதுக்கு மேல அங்க இருந்தா இஜ்ஜத் போயிடும்னு பயந்து திரும்பி வந்துட்டாங்க.

“”அடுத்த நாள் காலை ஒரு அஞ்சு மணி இருக்கும். நாமம்தார் மேல இருக்கற அவர் ரூம்ல உட்கார்ந்து சுப்ரபாதம் கேட்டுட்டு இருந்தாரு. இந்த பம்மன்லாம் சீக்கிரமே எழுந்துடறாங்க” என்று புஜ்ஜியைப் பார்த்து சொன்னார் பஷீர்.

“திடீர்னு பார்த்தா அவர் முன்னாடி ராகவன் நிக்கறான். “நேத்தி எதுக்கு மெஹருன்னிசாவ திட்டி அனுப்பிச்சீங்க?” ன்னு கேக்கறான் அவன்.

“நாமம்தார் ரொம்ப டஃப் மனுஷன். ஒண்ணுமே பேசல. ராகவன் கேள்வி மேல கேள்வி கேட்டான். அவரு மெஹருன்னிசாவ ஏத்துக்கணும்னு சொன்னான். ஆனா நாமம்தார் அசையவே இல்லை. ஒரு வார்த்தை அவர் வாய விட்டு வரல. இதுக்கு மேல ஒண்ணும் பண்ண முடியாதுன்னு ராகவன், அங்கேந்து கிளம்பிப் போயிட்டான். நாமம்தார் எதுவும் நடக்காதது போல சுப்ரபாதம் கேட்டுக்கிட்டிருந்தார்.

“ராகவன் கீழ இறங்கி அஞ்சி நிமிஷம் ஆகியிருக்கும், “என்னண்ணா, நம்ப பையன்! இங்க வாங்கோ… நம்ப பையன்….” என்று மாமி உரக்க கத்தினாள். திடுக்கிட்டு கடகடவென்று கீழே இறங்கி வந்தார் நாமம்தார். மாமி போன் ரிசிவர கைல வச்சிருந்தா. நாமம்தார பார்த்தவுடனே, “நம்ப பையன், நம்ப பையன் போயிட்டாண்ணா” என்று கதறினாள்.

“நாமம்தாருக்கு ஒண்ணும் புரியல. ஜன்னல் வழியா பார்த்தாரு. வாச கேட் பூட்டி இருந்தது. “பின்னே ராகவன் எப்படி உள்ளே வந்தான்?”

“”அய்யய்யோ, அங்க என்ன பாக்கறேள். நம்ப ராகவனுக்கு ஆக்சிடென்ட் ஆயிடுத்தாம். லைன்ல மெஹருன்னிசா அப்பா இருக்காரு. என்னன்னு கேளுங்கோ” என்று மாமி கதறினாங்க. ஒன்றும் புரியாத நமம்தார் ரிசிவர கையில எடுத்தார். அக்தர் சாப் சொன்னார், “தாமாதுக்கு இப்போதான் ஸ்கூட்டர் ஆக்சிடென்ட் ஆயிடுச்சு. நாங்க இப்போவே ரூர்கேலாவுக்கு கிளம்பறோம். ரொம்ப சீரியஸ்” என்று சொல்லும்போதே அக்தர் சாப் குரல் உடைந்தது.

“நாமம்தார் ஏதோ பேய் பாத்தவன் போல நாற்காலில உட்கார்ந்துட்டாரு. “என்ன ஆச்சுண்ணா உங்களுக்கு, என்ன ஆச்சு”ன்னு மாமி பதறிட்டாங்க. அவர் சுயநினைவுக்கு வர ஒரு அரை மணியாச்சு. ஒரு மாதிரி சுதாரிச்சபிறகும் அவர் யாருக்கும் எதுவும் சொல்லலை. இந்த ரகசியத்தை அவர் மனசுக்குள்ளயே பூட்டி வச்சுக்கிட்டார்”

“ராகவன் பிழைக்கல. மெஹருன்னிசாவையும் குழந்தையையும் நாமம்தார் அவர் வீட்டுக்கு அழைத்து வந்துட்டாரு. அக்தர் சாபுக்கு தன் பெண் தன்னோட இருக்கணும்னு ஆசை. நாமம்தார் கண்டிப்பா சொல்லிட்டார், “மெஹருன்னிசா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கணும்னு இருந்தா எனக்கு ஒரு அப்ஜெக்சன் இல்லை. தாராளமாக செஞ்சிக்கட்டும். ஆனா அவ கல்யாணம் வேண்டாம்னா எங்க வீட்லதான் இருக்கணும். அவ எங்க பொண்ணு.”

“மெஹருன்னிசா இன்னொரு கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டா. நாமம்தார் வீட்டுக்கு வந்துட்டா.”

“அவளும் மடிசார் கட்டிண்டு ராகவன் அம்மாக்கிட்ட ரொம்ப அன்பா இருக்காளா?” என்று மோகன் கேட்டான்.

“நீங்க ரொம்ப சினிமா பாக்கறீங்கடா. அதெல்லாம் சினிமாலதான் நடக்கும். எவ்வளவு நல்லவங்களா இருந்தாலும் மாமியாரும் பஹுவும் சண்ட போட்டிட்டுதான் இருப்பாங்க. அன்னிக்கொரு நாள் மெஹருன்னிசாவ மோன்டா மார்க்கெட்ல பாத்தேன். மாமியார் பத்தி பொலம்பி தள்ளிட்டா. அப்போதான் புரிஞ்சுது, அவ அவங்க வீட்ல ஒருத்தியா ஆயிட்டான்னு. காதல்னா இப்படி இருக்கணும். ஒரு பொண்ணு உன் மஹபூபா ஆயிட்டா நீ அவள கைவிடவே கூடாது” என்று முடித்தார் பஷீர் பாய்.

“பஷீர் பாய். உங்க மெஹபூபா வராங்க பாருங்க” என்றான் மோகன்.

தூரத்தில் பஷீர் பாய் மனைவி நடந்து வந்து கொண்டிருந்தார்.

“சலோ நிகலோ யாஹன் சே, ஜல்தி!” என்று எங்களை அங்கேவிட்டு விரட்டினார் பஷீர் பாய்.

நாங்கள் திரும்பி வரும்பொழுது புஜ்ஜியின் கண்கள் கலங்கியிருந்தன. “ஒ பச்சி பாப் ஹை ரே” என்று மெஹருன்னிசாவுக்காக கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தான்.

“எப்போ பாரு அழுகைடா உனக்கு” என்று மோகன் அவனிடம் சொன்னான்.

எப்பொழுதும் போல் குமார்தான் லாஜிக்கலாக யோசித்தான். “டேய். அந்த நாமம்தார் பஷீர் பாயோட பேசல. அப்புறம் பஷீர் பாய்க்கு ராகவன் வந்தான்னு எப்படி தெரியும்? அவர் யாருக்கும் சொல்லலேன்னு வேற பஷீர் பாய் சொல்றார். அப்படி சொல்லி இருந்தாக்கூட, பேய் பிசாசுல்லாம் கிடையாதுன்னு நமக்கு தெரியும். அந்த நாமம்தாருக்கு ஏதோ சைகாலஜி ப்ராப்ளம், பஷீர் பாய் ரீல் விடறாரு”.

“பேய் இருக்குடா” என்று புஜ்ஜி ஆரம்பித்தான்.

அதற்குள் நான், “பேய் இருக்கோ இல்லையோ, இந்த கதைல அதாண்டா ஹைலைட். சும்மா சைகாலஜி ப்ராப்ளம்னா கதை போர் அடிக்கும்” என்று கூறி விவாதத்தை முடித்து வைத்தேன்.

One comment

  1. It begun really well and was captivating as the story unfolded. It really set up very high expectations for the ending or how the pair got out of the tangle. The abrupt end on typical lines and some cliches towards the end part took the story down from the heights it set itself on.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.