கரும்புனல் குறித்த சிறிய குறிப்பு

பாஸ்கர் லக்ஷ்மன்

இந்தப் புனைவைப் படிக்கத் தொடங்கியவுடன் 1980 களில் மேற்கொண்ட பீகார் மற்றும் உத்திரப்பிரதேச பயணம் தான் நினைவில் வந்தது. துப்பாக்கியை தோளில் மாட்டிக் கொண்டு சாதாரணமாக திரிந்து கொண்டிருந்த குண்டர்களை பாட்னா இரயில் நிலையத்தில் காண நேர்ந்ததை இன்று நினைத்தாலும் மனம் பதறுகிறது. ஆனால் அதெல்லாம் சகஜம் போல அங்கிருந்தவர்களின் நடவடிக்கைகள் இருந்தன. வாரணாசி கடைத்தெருவில் ஒரு குண்டா ஐந்தாறு பேர்களுடன் வருவதைப் பார்த்து எல்லாக் கடைகளும் மூடப்பட்டன, அவர்கள் கடந்து சென்றவுடன் மீண்டும் திறந்தார்கள். அப்போது தான் தமிழ்நாட்டில் எவ்வளவு பாதுகாப்பாக வாழ்கிறோம் என உணர முடிந்தது.

தன் பீகார் அனுபவத்தை மையமாகக் கொண்டு நாவலாசிரியர் ராம்சுரேஷ் தன் புனைவை கனகச்சிதமாக எழுதியுள்ளார். மிக எளிமையான, சரளமான நடை. சிக்கலில்லாத, திட்டமிட்டு அமைக்கப்பட்ட கதைக்களம். இந்தியாவில் ஊழல், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஜாதியம் மூன்றும் தான் அரசாங்கம், அதிகாரவர்க்கம் மற்றும் மக்கள் எனும் முக்கோணப் புள்ளிகளை இணைக்கும் கண்ணிகளாக இருக்கின்றன. அதிலும் பீகாரில் கேட்கவே வேண்டாம். இதனுடைய ஓர் அனுபவப் புனைவு தான் கரும்புனல் எனலாம்.

வக்கீலான சந்துரு பீகாரில் நிலக்கரி சுரங்கத்திற்காக 20 வீடுகள் கொண்ட கிராமத்தை கையகப்படுத்தும் பணியில் அனுப்படுகிறான். முதல் இரயில் மற்றும் பஸ் பயண அனுபவத்திலேயே பீகாரில் நிலவும் அடிப்படை வசதிக் குறைவுகள், மக்களின் ஏழ்மை முதலியவற்றை உணர்ந்து வருந்துகிறான்.

பீகாரின் ஜாதிய அடுக்குகளில் இருக்கும் சிக்கல்களை அறியாத ஒரு நபர் கீழ்த்தட்டு கிராம மக்களுடன் தீர்வு பேசி அவர்களை வேறு இடத்திற்கு இடம்பெயரச் செய்ய வேண்டும் என்பதற்காகவே தமிழ்நாட்டைச் சேர்ந்த சந்துரு தேவைப்படுகிறான். சந்துருவுக்கு ஊழலைவிட ஜாதிய வெறி எந்தளவு வர்மாக்களிடமும் பானர்ஜிகளிடமும் இருக்கிறது என புரிவதற்கே சில காலம் பிடிக்கிறது. சந்துரு முன்வைக்கும் இறுதித் தீர்வு அதிகாரவர்க்க ஊழலுக்கும், கிராம மக்களுக்கு நல்ல விவசாய மாற்று நிலம் கிடைக்குமாறும் இருந்தாலும், ஜாதியின் உச்சபட்ச பழிவாங்கல் தவிர்க்க முடியாதாகிறது.

இந்த வறண்ட, கருமை சூழ்ந்த கதைக்களனுக்கு சிறிது பசுமை சேர்க்கும் விதமாக ராம்சுரேஷ் இழையோட விட்டிருக்கும் சந்துரு- தீபா காதல், கதையோடு ஒட்டாமல் தேவையற்றதாகவே தோன்றுகிறது. அதை நிச்சயம் தவிர்த்திருக்கலாம்.

ஊழல் மற்றும் சாதியச் சுரண்டல்களினால் சில பாத்திரங்கள் சந்திக்கும் துன்பங்களை ஆசிரியர் மேலோட்டமாகவே சொல்லி இருந்தாலும், அவற்றின் தாக்கம் புரியுமளவு இருக்கின்றது. சாதியக் கொடுமைகளால் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மிக ஆழமாகவும், நுண்மையாகவும் எழுதி இருந்தால் ஒரு நல்ல இலக்கிய வாசிப்பு அனுபவமாகவும் இருந்திருக்கும். நூல் முன்னுரையில் வெங்கடேஷ், “இந்நாவல், பல விஷயங்களை விவாதிப்பதற்கான களத்தை அமைத்துத் தந்திருக்கிறது. இதில் எழுதப்பட்டதை விட, வெளியே இருக்கும் செய்திகளும் வலிகளும் அதிகம்” எனக் கூறியுள்ளது முற்றிலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியது என்பதில் சந்தேகமில்லை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.