பாடல்(அழுக்காக இருக்கிறதா)
–ஃப்ராங்க் ஓ ஹாரா
அழுக்காக இருக்கிறதா
அழுக்காக தெரிகிறதா
அதைப் பற்றிதான் நினைப்பீர்கள் நீங்கள் நகரத்தில்
அழுக்குப்போல தோன்றுகிறதா
அதை பற்றிதான் நினைப்பீர்கள் நீங்கள் நகரத்தில்
சுவாசிக்க மறுப்பதில்லைதானே, நீங்கள்.
யாரோ தீய குணத்துடன் வருகிறார்
வசீகரமாகத் தோன்றுகிறார். நிஜமாகவா. ஆமாம், மிகவும்
அவர் வசீகரமாகயிருக்கிறார், தீய குணத்துடன் இருப்பதால். அப்படியா. ஆமாம்
அதைப் பற்றிதான் நினைப்பீர்கள் நீங்கள் நகரத்தில்
பாசி-படராத மூளையைக் கோதி பாருங்கள்
அது ஒரு எண்ணமல்ல அது கரித்துகள்
ஒருவர்மீதிருந்து நிறைய அழுக்கை அகற்றினால்
அவர் குணத்தின் கேடு குறைகிறதா. இல்லை. அது தொடர்ந்து வளர்கிறது
சுவாசிக்க மறுப்பதில்லைதானே, நீங்கள்.
சந்திப்புள்ளிகளே இல்லாத இந்த கவிதையில் அழுத்தமான ஒரு தாளம் இருக்கிறது. அது நம் எண்ணங்களுடன் இயைகிறது. பெருநகரம் என்பது தொடர்ந்து விரிந்துகொண்டே இருப்பது. அது புழுதியைக் கிளப்பியவாறு இடிந்துகொண்டும் எழுந்துகொண்டும் இருப்பது. நகரத்தின் காற்றுடன் புழுதி கலந்திருக்கிறது.
முதன்முதலில் நகரத்தை எதிர்கொள்ளும் மனம், அதன் அழுக்குகளுடனே மோதுகிறது. நகரம் அதன் தன்னிச்சையான இயக்கத்தினுள் நம்மை இழுத்துக்கொள்ளும்வரை. தெருவோரங்களிலெல்லாம் அப்பட்டமான அழுக்கு குவியல்கள். அவற்றின் நடுவிலேயே வாழும் மனிதர்கள். மூர்க்கமாக இல்லாவிட்டால் நகரில் பிழைக்க முடியாது. ஒருவர் எத்தனைக்கெத்தனை மூர்க்கமாக இருக்கிறாரோ அத்தனைக்கத்தனை சாமர்த்தியமாக இருக்கிறார். பிளாட்பாரக் கடைக்காரர்களிலிருந்து வீட்டு உரிமையாளர், பேருந்து நடத்துனர் என எல்லோரும் சாமர்த்தியமாக இருக்கிறார்கள். அவர்களது அந்த கள்ளத்தனமான சாமர்த்தியம்தான் எத்தனை வசீகரமாக இருக்கிறது. நகரத்தின் குடியுரிமை வேண்டுமென்றால், இந்த சாமர்த்தியத்துடன் போட்டியிடத்தான் வேண்டும். இந்த தெளிவிற்குப் பின், உங்கள் நினைப்பு உங்களது அல்ல. ஒரு நகரவாசியினுடையது. நகரம் உங்கள்மீதும் புழுதியை போர்த்தி, உங்களைத் தனதாக்கிக்கொண்டுவிடுகிறது. இனி, புழுதி என்பது கண்ணிற்கு புலப்படுவது அல்ல. அது உங்கள் சுவாசத்துடனே கலந்திருப்பது. அழுக்கற்றவை என நகரத்தில் எதுவும் இல்லை என்றே நம்ப தொடங்குவீர்கள்.
இக்கவிதையில், ஓ ஹாரா, நகர நெரிசலின் தனிமையில் இருக்கும் தனது வாசகரிடம் மிக மெதுவாக பேசுகிறார். தினமும் பேருந்துகளிலும் இரயில்களிலும் சில மணி நேரங்களாவது பயணிக்கும் வாசகரிடம், அவர் கடந்து சென்றுகொண்டிருக்கும் நகரவெளியைப் பற்றி, அப்பயணத்தின் அசைவமைதியுடன் சொல்கிறார். அந்த கடைசி கேள்வியின் இறுதி நிறுத்தத்தில், ஒரு கணம் நாம் மீண்டும் நகரிலிருந்து அன்னியப்பட்டு மீள்கிறோம்.
One comment