ஆதவனின் ‘கறுப்பு அம்பா கதை’ குறித்து வெ. சுரேஷ்

வெ. சுரேஷ்

90களின் மத்தியில் பாலகுமாரன்  ஒரு நேர்காணலில் சொன்னார், பணியிடமும் பணியும் குடும்ப வாழ்க்கையில் ஏற்படுத்தும் விளைவுகளை முதன்முதலாக தமிழின் புனைகதை பரப்புக்குள் கொண்டு வந்த எழுத்தாளன் தான்தான் என்று. மெர்க்குரிப்பூக்கள், இரும்புக் குதிரைகள், தாயுமானவன், முதலிய   படைப்புகளை வைத்து  அவர் அப்படிப் பேசியிருக்கக்கூடும். ஆனால், தமிழின் தீவிர இலக்கிய பரப்பினில் பாலகுமாரனுக்கு முன்பே அவை பதிவாகியுள்ளன. முக்கியமாக, பணிச்சூழல் நம் மீது செலுத்தும் தாக்கத்தை அதிகம் தன் சிறுகதைகளில் பதிவு செய்தவர் ஆதவன்.

வாழ்க்கை வேறு, அந்த வாழ்க்கையை வாழ்வதற்கு தேவையான பொருள் மட்டுமே ஈட்டும் பணி, அது சார்ந்த சூழிடம் வேறு என்ற நிலை இந்தியாவில் 20ம் நூற்றாண்டிலேயே பரவலாக காணப்படத் துவங்கிவிட்டது. பணிச்சூழல் ஒரு’ குடும்பத்தில் கணவன், மனைவி, குழந்தைகள் என்று ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது குறித்து ஆதவனின் பல சிறுகதைகள் பேசினாலும், மிகச் சிறப்பான ஒன்றாக நான் கருதுவது, அவரது ‘கருப்பு அம்பா கதை’.

பகலெல்லாம் தன்  பிழைப்புக்காக, ஒரு நிறுவனத்திடம் தன் உழைப்பை விற்று, ஏறத்தாழ அடிமைப் பணி செய்து, தன் சுயமிழந்து, பல்வேறு அநியாயங்களை கண்டும் காணாமலும் வாழ்க்கை நடத்தும் கோடிக்கணக்கான நடுத்தர வர்க்க பிரதிநிதியான சங்கரனுக்கு இரவில் எப்போதும் ஒரு முக்கியமான வேலை, தன்  மகள் மாலுவுக்கு கதை சொல்லித் தூங்க வைப்பது. அந்தக் கதைகள் எப்போதும் அவர்களது வீட்டைச் சுற்றியுள்ள மாடுகள், மாலுவின் மழலை பாஷையில், ‘அம்பா’ பற்றியதுதான். அதுவும், கறுப்பு அம்பாதான், அதாவது, எருமை மாடுகள்தான் விசேஷம்.

கதை நடக்கும் நாளிலும் அதே மாதிரி ஒரு கறுப்பு அம்பா கதைதான் சொல்கிறான் சங்கரன். அன்றைக்கு கருப்பு அம்பாவுக்கு ஜலதோஷம். ஏனென்றால், சங்கரனுக்கு ஜலதோஷம். அதற்காக, டாக்டரிடம் போகிறது கருப்பு அம்பா. அங்கே ஏகப்பட்ட கூட்டம். டாக்டரின் வீட்டில் காத்திருக்கும் மிருகங்களின் விவரணையில்தான் கதை விரிகிறது., ஸலாம் போட்டே தும்பிக்கை இழந்த யானை, கிளைக்கு கிளை தாவி, கை சுளுக்கிக் கொண்ட குரங்கு, கத்திக் கத்தி தொண்டையைப் புண்ணாக்கிக் கொண்ட கழுதை, எவ்வளவு சுமை என்றாலும் வாயைத் திறக்காமல் சுமந்து கழுத்தில் புண் வந்த வண்டி மாடு,, எதையும் செய்யாமலேயே சுற்றிச் சுற்றி வந்ததனால் கால் வலி கண்டு வரிசையில் எப்படியோ எல்லோரையும் விட முன்னால் சென்று அமர்ந்திருக்கும் நரி, என்று பல விலங்குகள் வரிசையில் காத்திருக்கின்றன, அவர்களுடன் கறுப்பு அம்பாவும் சேர்ந்து கொள்கிறது. வரிசை மிகவும் மெதுவாக நகர்கிறது. புதிதாக வந்த மிருகங்களெல்லாம் எப்படியோ, கம்பவுண்டரைத் தாஜா செய்து உள்ளே போய்விட, கறுப்பு அம்பா அதே இடத்தில் உட்கார்ந்திருக்கிறது. காலெல்லாம் ஒரே வலி. அந்த சமயத்தில் உள்ளே வரும் குள்ள நரி ஒன்று கம்பவுண்டருக்கு காட்பரீஸ்  சாக்லேட்  கொடுத்து வரிசையில் முன்னே செல்லவும் கறுப்பு அம்பாவுக்கு கோபம் வந்து விடுகிறது. ஒரே முட்டு,  நரியை. நரி அலற, சங்கரனுக்கு சுய நினைவு வருகிறது. குழந்தையின் புரிதல் திறனை தாண்டிப் போய்விட்டதோ கதை என்று மாலுவைப் பார்க்கிறான். அவள் அயர்ந்து தூங்கிவிட்டிருக்கிறாள். கறுப்பு அம்பா க்யுவில் சேர்ந்தபோதே தூங்கியிருக்க வேண்டும்.

சங்கரனுக்கு சந்தேகம் இந்தக் கதையை தான் யாருக்கு சொன்னோம் என்பதில். விலங்குகளின் வரிசையெல்லாமே, அவனது அன்றாட வாழ்வில் தினமும் சந்திக்கும் மனிதர்கள்தாமா? பொறுமையாக தன் முறை வரட்டும் என்று உட்கார்ந்திருப்பது கறுப்பு அம்பாவா அல்லது தானேதானா? சுய இரக்கத்தோடு படுத்திருக்கிறான் சங்கரன். இங்கே இந்த கதை முடிந்திருந்தால், அவ்வளவு சிறப்பாக இருந்திருக்காது. அப்போது கையில் பால் டம்ளருடன் வரும் சங்கரனின் மனைவி விஜி, குழந்தைக்கு பகலில் தான் சொல்லும் வெள்ளை அம்பா கதை கூறுவதில்தான் இந்தக் கதை  முழுமை அடைகிறது.

அவளின் கதையில், வெள்ளை அம்பாவுக்கு நாள் பூராவும் இடுப்பொடிய வேலைகள், அதற்குமேல் அதிலேயே புகார்கள், குற்றம் குறைகள். ஆனால் கறுப்பு அம்பாவுக்கு இதொன்றும் தெரியாது. நாளெல்லாம், ஜாலியாக வெளியில் போகும், வரும். வீட்டிலே இருக்கும்போதெல்லாம் ஹாயாக எப்போதும் படுத்துக் கொண்டிருக்கும்.

Alvin Toffler தனது Third Wave எனும் நூலில், தொழிற்புரட்சிக்குப்பின் தோன்றிய நகர வாழ்க்கை, காலையிலிருந்து மாலைவரை, ஆண்களை தொழிற்கூடம்/ அலுவலகம், படிக்கும் வயது வந்த சிறுவர் சிறுமிகளை பள்ளிக்கூடம், பெண்களை வீடு/ தொழிற்கூடம்/ அலுவலகம் என்று பிரித்து அனுப்பியதன் விளைவுகளைக் குறிப்பிடுகிறார். அது மட்டுமல்லாமல், இன்றைய உலகின் மிக இயல்பான ஒரு நிகழ்வு அது என்று அவர்களை நம்பச்செய்து, அதை மீற முடியாத நடைமுறை யதார்த்தமாக்கி, அதற்கான உணர்வுகளையும் நம்பிக்கைகளையும் நெறிகளையும் உருவாக்கித் தந்து, அதை என்றுமிருந்த நிலைபெற்ற ஒன்றாக நம்பவைப்பதில் வெற்றிகொண்டது என்கிறார் அவர். அதையும் அதைச் சார்ந்த இன்னும் சில விஷயங்களையும் அவர் Indust-reality என்ற சொல்லினால் குறிக்கிறார். அந்த Indust-reality என்ற சொல்லுக்கு இலக்கணம் போல அமைந்த ஒன்றுதான், கறுப்பு அம்பா கதை, அந்தப் பெரிய நிறுவனங்களுக்கு முன் சிறுத்துப் போய் நியாய அநியாயங்களை எதிர்க்கவோ, அடையாளம் காட்டவோ துணிவின்றி,தன உரிமைகளையும் கூட அதட்டிக் கேட்டாக தெரியாமல், தன் குடும்பம் எனும் சிறு  வளைக்குள்ளேயே ஒடுங்கி, புலம்பும் ஒரு ஆணின் மன அவசங்களைக் காட்டுகிறது. , அதே சமயம், மற்றொரு   கோணமாக, அவன் எந்த அளவுக்கு அதே வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் தன் சக ஜீவனான மனைவியின் உலகைப்பற்றி அறியாமலேயே இருக்கிறான் என்பதையும் அனாயாசமாகக் காட்டுகிறது.