வான்மதி செந்தில்வாணன்
எனதறைச் சுவர்கள்
கரிக்கோல் மற்றும் வண்ணக்கோல் கொண்டு
பிஞ்சுவிரல்களால் அலங்கரிக்கப்பட்டவை.
எனக்கு மிக பிடித்தமானவை.
எவ்வளவு குமுறலுடன் நுழைந்தாலும்
ஆற்றுப்படுத்தலை
மிகவும் கெட்டிக்காரத்தனமாகச் செய்து வருபவை அவை.
எப்போதும் எனதறைச் சுவரோவியம் குறித்த
ஒரு மிதகர்வம் எனக்குண்டு.
நேற்று
இரயில்வே ஸ்டேஷனை ஒட்டியிருந்த
பொட்டல் வெளியில்
நான்கு குச்சிகள் நட்டு
சுற்றிலும் துண்டுச் சீலைகளைத் தொங்கவிட்டவாறு
குடியமர்ந்திருந்தன
சில குடும்பங்கள். குழந்தைகள் உட்பட.
நடுவயதுப் பெண்ணொருத்தி
கற்கள் கூட்டி அடுப்பு மூட்டி
அதன்முன் அமர்ந்திருந்தாள்.
கரித்துண்டைக் கையிலேந்திய பிஞ்சுகள்
அவளது வெண்முதுகில்
ஓவியம் தீட்டியபோது
எனதறைச் சுவர்கள் என் காதில்
மெல்ல கிசுகிசுத்தன,
“சுவர் மட்டுமே சுவரல்ல”.
oOo
என் தனியறைச் சுவர்கள் மிகவும் அச்சுறுத்துகின்றன.
பெரும்பாலும்,
என்னுடன் நேரம் செலவிடவே
பெரிதும் விரும்புகின்றன.
ஆம். என்னுடன் மட்டுமே.
தவிர, அறைத்தோழர்களுடன்
கலகலப்பாய் பேசிச்சிரிக்கையில்
சுவரின் மொத்த வெறுப்பும்
என்மீது படிகிறது.
இப்படித்தான்
ஒரு பகல் அலுவல் முடித்து
ஓய்வெடுக்கும் பொருட்டு
அறையினுள் திடுமென பிரவேசித்தபோது
நான்கு சுவர்களும் மெல்ல மெல்ல நகர்ந்து
எனை நெருக்கி
தம்மைத்தானே அதிபலத்துடன் பூட்டிக்கொண்டுவிட்டன.
எனக்கே தெரியாமல், இவ்வளவு நாள்
மரணத்துடன்தான் வாழ்ந்து கொண்டிருந்தேன் என்பதை
முதன்முறையாக உங்களிடம்தான் பகிர்கிறேன்.