என் வீட்டின் எல்லா மூலைகளிலும்
பதுங்கி இருக்கிறது
யாரும் விரும்பாத மரணம்
எல்லாவற்றின் முடிவையும்
அது நுட்பமாய் அறிந்து வைத்திருக்கிறது
கனவுகளிலிருந்து அது என்னைத் தூரப்படுத்துகிறது
ஒரு பெண்ணை நேசிப்பதிலிருந்தும்
கலவியிலிருந்தும் அது என்னை தள்ளிவைக்கிறது
மரணம் பதுங்கி இருக்கும்
வீட்டு மூலைகளுக்குள்ளிருந்து
அதை ஓலத்துடன் விரட்ட முனைகிறேன்
ஜன்னல்களைத் திறந்து வைக்கிறேன்
கதவின் சாவித்துவாரங்களிலிருந்து
சாவிகளைக் கழற்றி வைக்கிறேன்
சுவர்க்கண்களின் திரைச்சீலைகளை விலக்கி வைக்கிறேன்
மரணத்தை அச்சுறுத்தும் சமிக்ஞைகளை
இடைவெளியின்றி எழுப்புகிறேன்
வீட்டின் வளர்ப்புப் பிராணிகளை
கலவரம் செய்யத் தூண்டுகிறேன்
பிரார்த்தனைக் கூடத்தை நிரந்தரமாகத்
திறந்து வைக்கிறேன்
எல்லா சுவர்க்கண்களிலும்
ஊதுபத்திகள் எரிகின்றன
உச்சாடனங்களை இடைவிடாது முணுமுணுக்குமாறு
சுவர்ப்பல்லிகளிடம் கேட்கிறேன்
அது யாரையும் வெளியேற்றும் நுட்பத்துடன்
வீட்டின் சுவர்களில்
சிமென்ட் கலவையாய் ஒட்டியிருக்கிறது
மூலைகளில் இன்னும் பதுங்கித் திரிகிறது
நான் உன்மத்தம் பிடித்தவனாகி
என்னில் மீந்திருக்கும் அச்சத்தால்
என் காலத்தையும் தடுமாறச் செய்கிறேன்
மரணம் என்னை நெருங்காமலே
உன்மத்தம் கொண்டு நான் மரணத்தை நெருங்குகிறேன்