கவியின்கண் – கலையொன்று
– எலிசபெத் பிஷப் –
இழப்புக் கலையில் தேர்ச்சி அடைவது கடினமல்ல;
தொலைந்து போகும் நோக்கம் நிறைந்தவை ஏராளம் உண்டு,
எதையும் இழப்பதால் ஒன்றும் குடிமுழுகிப் போவதில்லை.
தினமும் எதையேனும் தொலைத்திரு. இழந்த சாவிகளின்
சிறு கலவரத்தை, வீணாய்ப் போக்கிய நேரத்தை, ஏற்றுக்கொள்,
இழப்புக் கலையில் தேர்ச்சி அடைவது கடினமல்ல.
இன்னும் பெரிதாய் இழக்க, விரைவாய் இழக்கப் பயில்.
இடங்கள், பெயர்கள், நீ பயணப்படவிருந்தது எங்கோ
அதையும். இது எதனாலும் குடிமுழுகிப் போய்விடாது.
என் அம்மாவின் கடிகாரத்தைத் தொலைத்தேன், பார், கடைசியாய்,
அல்லது அதற்குமுன், நான் நேசித்த வீடுகள் மூன்றில், ஒன்று போனது.
இழப்புக் கலையில் தேர்ச்சி அடைவது கடினமல்ல;
இரு நகர்களைத் தொலைத்தேன், அவை அழகியவை. பெரியவை.
எனக்குரிய சில உலகங்களைத் தொலைத்தேன், இரு நதிகள், ஒரு கண்டம்.
இழப்புக்கு வருந்துகிறேன், ஆனால் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடவில்லை.
-உன் இழப்பும்கூட (சிரிக்கவைக்கும் குரல், நான் நேசிக்கும்
செய்கை) நான் பொய் சொல்லியிருக்க வேண்டியதில்லை. நன்றாய்
தெரிகிறது, இழப்புக் கலையில் தேர்ச்சி அடைவது கடினமல்ல,
வெளிப்பார்வைக்கு (எழுதித் தொலை!) குடிமுழுகிப் போனதுபோல் இருந்தாலும்.
௦௦
ஒரு தெலுங்குப் பழமொழி உண்டு, “ரவிகான்சனி சோட்ட கவி கான்சுனு” கதிரவன் காட்டத் தவறியதைக் கவிஞன் காட்டுவான். உண்மையைச் சரியான கோணத்தில் காட்டுவது மிகச்சிறந்த கவிஞர்களால் மட்டுமே முடியும், எலிசபெத் பிஷப் அப்படிப்பட்ட ஒருவர். இழப்பை மிகவும் மாறுபட்ட கோணத்தில் உணர்த்துக்கிறார்.
கவிதையில் சொல்வது போல், “தொலைந்து போகும் நோக்கம் நிறைந்தவை ஏராளம் உண்டு,/ எதையும் இழப்பதால் ஒன்றும் குடிமுழுகிப் போவதில்லை..” நாம் எத்தனையோ விஷயங்களை நம் வாழ்நாளெல்லாம் தொலைத்துக் கொண்டே இருக்கிறோம் என்பதை மறந்து விடுகிறோம். நாம் தொலைக்கும் பொருட்களைத் திரும்பப் பெற முடியாதபடிக்குத் தொலைக்கவும் செய்கிறோம்.
ஆங்கிலப் பத்திரிக்கைகள் ஒன்றில் பால் சக்காரியாவின் ஒரு பக்கச் சிறுகதை படித்தது நினைவுக்கு வருகிறது. இந்தக் கதையில், விமானத்தில் பயணம் செய்பவன் ஒருவன் அந்த விமானத்தைக் கடத்திச் செல்ல நினைக்கிறான், கேரளாவில் உள்ள தொலைதூர கிராமம் ஒன்றில் விமானத்தை இறக்கச் சொல்கிறான். அந்த இடத்தில் விமான நிலையம் இல்லை என்பதால் அங்கு நான் போக மாட்டேன் என்று பைலட் சொல்கிறான். அப்போது, என் சொந்த ஊரைவிட்டு வரும்போது சீக்கிரம் திரும்பி வந்துவிடுவேன் என்று நினைத்துதான் கிளம்பினேன், என்று சொல்லி கடத்தல்காரன் அழ ஆரம்பித்துவிடுகிறான். வாழ்க்கை அவனை வேறெங்கோ கொண்டு சென்றுவிட்டது, அவன் தன சொந்த ஊருக்குத் திரும்பவே முடியாது.
நாம் வாழும் நகர்ப்புறச் சூழலில் பலரும் எதையாவது இழந்துவிடுவோம் என்று பயப்படுகிறார்கள். 90களின் பிற்பகுதியில், தகவல் தொடர்புத்துறை பெருவளர்ச்சி அடைந்தபோது இதை மிகத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. வெளிநாட்டுக்குப் போய் வேலை செய்யும் வாய்ப்பை இழக்க யாரும் விரும்பவில்லை. எனவே, யாரிடமும் சொல்லாமல் வேலை மாறி விடுவார்கள். என் சொந்த அனுபவம் இது: என் ப்ராஜக்ட்டில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவருடன் ஒரு சனிக்கிழமையன்று கிரிக்கெட் விளையாடினேன். ஞாயிற்றுகிழமை அவர் யாரிடமும் சொல்லாமல் அமேரிக்கா போய்விட்டார். இப்படிச் செய்தவர் அவர் மட்டுமல்ல. நீதி நியாயம் என்று எந்த அறவுணர்வும் இல்லாமல் இப்படிச் செய்தவர்கள் பலர். பொன்னான வாய்ப்பு தவறிப் போய்விடுமோ என்ற பயம். அப்போதுதான் என்னுடைய டீமில் இருந்த சகா ஒருவனுக்கு நாற்பது சதவிகிதம் ஊதிய உயர்வும், நிறுவனத்தின் பங்குகளில் கணிசமான அளவு போனசும் கிடைத்தது. ஆனால்கூட அவன் முகத்தில் ஏமாற்றம்தான் தெரிந்தது. “மக்கள் மிக அதிகம் சம்பாதித்துக் கொண்டு மிகவும் வருத்தமாக இருக்கும் காலம் இது,” என்று என் நண்பர் ஒருவர் மிகச் சரியாகச் சொன்னார்.
“உன் கனவைத் துரத்திச் செல்லுங்கள்,” என்று எல்லாரும் இப்போது சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் எனக்கு என்னவோ ஒரு கால்வின் அன்ட் ஹோப்ஸ் கார்டூன்தான் நினைவுக்கு வருகிறது- அதில் கால்வின் கேட்கிறான், “அவன் தன் கனவை துரத்திக்கொண்டு போகிறான் என்றால் அவனுடைய லக்சரி ஷூக்களுக்கு காசு கொடுக்கப் போவது யார்?”, என்று. அல்லது இந்த மாதிரி வேறென்னவோ சொல்கிறான். எல்லாரும் கனவைத் துரத்து, கனவைத் துரத்து என்று சொல்கிறார்களா, மத்திம வயதுக்காரர்களுக்கு ஒரு கவலை வந்து விட்டது- வேலை பார்த்துக் கொண்டிருப்பதில் என் கனவு தொலைந்து போய்விட்டதோ என்னவோ, என்று. வேலைக்கு போனால்தான் பிழைத்திருக்க முடியும் என்பதெல்லாம் அவர்களுக்கும் தெரியும், ஆனால் அத்தனை காசு பார்த்தாலும் ஏதோ ஒரு உறுத்தல் இருந்துகொண்டே இருக்கிறது. நமக்குத் தெரியாமலேயே நாம் ஆட்டத்தில் தோற்றுப் போய்விட்டோமோ என்னவோ என்று. கனவைத் துரத்திச் செல்லத் தவறியதால் இந்த இழப்பு ஏற்பட்டிருக்கலாம், அல்லது கார்ப்பரேட் உலகின் வெற்றிப் படிக்கட்டில் ஏறிக் கொண்டே இருக்க முடியாமல் போனதால் இருக்கலாம். இந்தத் தொடரில் வேறொரு கட்டுரையில் ஏற்கனவே எழுதியிருக்கிறேன், உன் அப்பாவைவிட நீ அதிகம் சம்பாதித்துக் கொண்டிருக்கலாம், ஆனால் ஒரு வெற்றி பெற்ற மனிதனாக உன்னைப் பற்றி நீ நினைத்துக் கொள்ள மாட்டாய்- ஏனெனில் வெற்றியின் அளவுகோல்கள் மாறிவிட்டன. எனவேதான், எதையோ பறிகொடுத்ததைப் போல் பேசிக் கொண்டிருக்கும் மத்திம வயதினர் பலரை நம்மால் எங்கும் பார்க்க முடிகிறது.
அனுபவம் தவிர நிறைய காலம் போனபின்தான், நாம் ஆசைப்பட்ட அததனையும் அடைய முடியாது என்றும் என்றும் மீட்க முடியாத இழப்புகள் இருக்கத்தான் செய்யும் என்றும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. பலராலும், காலம் கொண்டு போகட்டும் என்று விட்டுவிட முடிவதில்லை. அன்று நடந்த ஒரு சம்பவம் எனக்கு பதவி உயர்வு கிடைக்காமல் செய்துவிட்டது, வேறொரு நிறுவனத்துக்குப் போனது தப்பு, கொடுத்த பொறுப்பைத் தட்டிக் கழித்திருக்கக் கூடாது, இப்படி எத்தனையோ வருத்தங்கள். இழப்பின் வலி அவர்களைத் தொடர்ந்து அரித்துக் கொண்டே இருக்கிறது, நான் பார்த்த அளவுக்கு கசந்து போன மனிதர்களை நீங்களும் பார்த்திருப்பீர்கள். ஏனோ சிலரால் சில விஷயங்களை மறக்க முடிவதில்லை, இது அவர்கள் வாழ்வை நிச்சயம் பாதிக்கிறது.
ஆனாலி இப்படிப்பட்ட இழப்புகளைப் பேசவில்லை கவிஞர். தன் வேறொரு பிரத்தியேக, அந்தரங்க இழப்பைப் பேசுகிறார். வீட்டை இழந்ததும், நகரை இழந்ததும், குழந்தைமையை இழந்ததையும் பேசுகிறாராய் இருக்கலாம், பதின்ம பருவத்தின் இழப்பின் வருத்தங்கள் இருக்கலாம். அவர் சொல்வது போல், சில விஷயங்களை இழப்பதைத் தவிர வேறு வழியில்லை. இயல்பாகவே நாம் இவற்றை இழக்கிறோம். சில உங்கள் பழைய வீடு, அல்லது பழைய ஊர் போன்றவை- இதைவிட நல்ல வாழ்க்கை வேறொரு இடத்தில் இருக்கிறது என்ற நம்பிக்கையில் நாமாகவே முன்வந்து இவற்றை இழக்கிறோம். இழப்பே வாழ்க்கை என்கிறார் கவிஞர். ஆனால் நாம் சிலவற்றை இழந்து வேறு சிலவற்றைப் பெறுகிறோம் என்பதை அவர் சொல்வதில்லை (அவற்றையும் நாம் இழக்கக்கூடும்). புதிய வீடு கிடைக்கிறது, புதிய நண்பர்கள் கிடைக்கிறார்கள், புதிய ஊருக்குச் செல்கிறோம், புதிய கண்டத்தை நமதாக்கிக் கொள்கிறோம். இழக்கும் கலை பயில என்றும் என்று அவர் சொல்வது, இழப்பை ஏற்றுக் கொள்ளும்போதுதான் நமக்குக் கிடைத்திருப்பதன் மதிப்பை உணர முடியும் என்பதால்.
வெற்றி தோல்விக்கு இடைப்பட்ட தொடர் போராட்டமே வாழ்க்கை. ஒரு மனிதனின் ஆன்மீக வளர்ச்சியின்போது, அவனோ அவளோ, வெற்றி தோல்வியின் தொடர் ஊடாட்டத்தை, எந்த ஒன்றையும் பெரிதுபடுத்தாமல் கண்டுணர முடிகிறது. இதைச் சாதிப்பது மிகக் கடினமான காரியம், ஆனால் இந்த சமநிலைத்தன்மையை நோக்கியே இந்து சமய ஆன்மிகம் நம்மைக் கொண்டு செல்கிறது. இன்பதுன்பங்களை கலக்கமில்லாமல் எதிர்கொள்ளப் பயிற்றுவிக்கும் பாதை.