இவ்வுலகை மீண்டும் மாயங்களால் நிறைத்தல்

பீட்டர் பொங்கல்

இவ்வாண்டு ந்யூஸ்டாட் பரிசு பெற்ற மியா கோடோ அளித்த நன்றியுரையின் தமிழாக்கம்

அன்பு நண்பர்களே,

இந்த விருதைப் பெற்றுக்கொள்வதில் நான், எனக்கு மிகப் பெரிய கௌரவம் அளிக்கப்பட்டதாக உணர்கிறேன். ஏதோ ஒரு எளிய சம்பிரதாய மதிப்புக்காக மட்டும் இப்படிச் சொல்லவில்லை. இதை உணர்வுபூர்வமாகச சொல்கிறேன்.

தனிப்பட்ட ஓர் எழுத்தாளனின் படைப்புக்குத் தரப்படுகிறது என்பதற்கும் அப்பால் இந்த விருது முக்கியத்துவம் வாய்ந்தது. நாம் இங்கே ஓக்லஹாமாவில், ஒவ்வொரு வருடமும், கொண்டாடும் விஷயம் இலக்கியத்தோடு நின்றுவிடுவதில்லை. ந்யூஸ்டாட் விருதைக் கொண்டு நாம் நம் உலகின் பண்பாட்டுப் பன்மையைப் போற்றுகிறோம், நம் ஒவ்வொருவரின் உள்ளும் இருக்கும் பன்மைப் பண்பாட்டைப் போற்றுகிறோம். அன்னியர்கள் என்று நமக்கு அடையாளம் காட்டப்படுபவர்களின் அச்சுறுத்தல்களுக்கு எதிரான அரண்களாய் நம் தனிப்பட்ட அடையாளங்களும் தேசிய அடையாளங்களும் கோட்டைகள் போல் எழுப்பப்பட்டு வரும் இவ்வேளையில் பன்மைப் பண்பாட்டைப் போற்றுதல் மிக அவசியம்.

வெவ்வேறு கண்டங்களில் மட்டுமல்ல, வெவ்வேறு கோள்களில் இருப்பது போன்ற நம் உலகங்களுக்கு இடையிலான உறவுகள் மேம்பட இந்தப் பரிசு முக்கியமாக இருக்கிறது. தூதரக, அரசியல் நடவடிக்கைகள் அனைத்துக்குப் பிறகும், மொசாம்பிக் மற்றும் அமெரிக்க மக்கநம் இருவரிடையிலும் குறிப்பிடத்தக்க அளவு பரஸ்பர அறியாமை நிலவுகிறது. தேசங்களின் பூலோக அமைப்பை மனதில் வைத்துக் கொண்டு, நமக்கிடையே உள்ள எட்டாத் தொலைவு இயல்பான ஒன்றுதான் என்று நினைக்கத் தலைப்படுகிறோம். ஆனால் “இயல்பு” என்றும் “சாதாரண விஷயம்” என்றும் நமக்குச் சொல்லப்படும் விஷயங்களை கேள்வி கேட்டாக வேண்டிய காலத்தில் வாழ்கிறோம்.

நாம் இருவரும் ஒருவரையொருவர் அறியாதிருப்பதற்கு பல காரணங்கள் இருக்கவே செய்கின்றன. ஆனால் அவற்றுக்கும் புவியியலுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. விடுதலை, மக்களாட்சி, சுயாட்சி போன்றவற்றுக்கான போராட்டம் நம்மிருவருக்கும் பொதுவான ஒன்று. அநீதிக்கும் நிறவெறிக்கும் எதிரான போராட்டம், ஒரு வரலாறாகவும் நிகழ்கணமாகவும் நம்மிருவருக்கும் உரித்தாய் உள்ளது. ஆனால் நம் தேசங்கள் தனித்தன்மை கொண்டவை என்பதை நிறுவும் வேட்கையில், நாமறியாமலே நம்மைப் பற்றியும் பிறரைப் பற்றியும் மிகவும் எளிய, நுண்மைகளற்ற ஒரு கருத்தை உருவாக்கிக் கொண்டு விட்டோம். பல வண்ணங்கள் கொண்ட மெய்ம்மையை நாம் குறுகிய, பழக்கப்பட்ட வடிவில் காண்கிறோம். கலாசார யதார்த்தத்தின் ஒற்றைப் பரிமாணத்தை மட்டுமே நம்மால் அடையாளம் கண்டு கொள்ள இயல்கிறது. அவ்வளவு அழகாக நைஜீரிய எழுத்தாளர் சிமமண்டா அடிச்சி எந்த “ஒற்றைப் பெருங்கதை” குறித்து எச்சரித்தாரோ, அந்த ஒற்றைப் பெருங்கதையின் வசீகரத்துக்கு நாம் பலியாகி விட்டோம்.

பண்பாடுகளுக்கு இடையே உரையாடலை ஊக்குவித்த பெருமை, தொலைவுகளுக்கு இடையிலும், அதனைக் காட்டிலும் மோசமான அலட்சிய நிலைக்கு அப்பாலும், இணைப்புகளை உருவாக்கிய பெருமை ந்யூஸ்டாட் விருதுக்கு உண்டு.

தொழில்நுட்பத் தீர்வுகளைக் கொண்டு பண்பாடுகளுக்கு இடையில் நெருக்கத்தை உருவாக்க முடியும் என்ற கற்பனையில் இந்த உலகம் இருக்கிறது. இங்கு, கதைகளைக் கொண்டு நம்மை அக்கம்பக்கத்தினராய் ஆக்க இலக்கியம் உதவுகிறது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

அன்பு நண்பர்களே,

போர்ச்சுகல் அரசின் பாசிஸ்ட் ஆட்சியிலிருந்து தப்பும் முயற்சியில் புலம் பெயரும் கட்டாயத்துக்கு உட்படுத்தப்பட்ட போர்ச்சுகீசிய தம்பதியரின் இரண்டாம் மகன் நான். தினமும் எனக்கு என் அம்மாவும் அப்பாவும் கதை சொல்வார்கள். எங்களைத் தூங்கச் செய்வதாக அவர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் உண்மையில், அவர்கள் எங்களுக்கு மரணமற்ற, இரண்டாம் பிறப்பை அளித்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்கள் சொன்ன கதைகளில் என்னை வசீகரித்தது எது என்று கேட்டால், உள்ளடக்கத்தில் எதையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. உண்மையில், அந்தக் கதைகளில் ஒன்றுகூட எனக்கு இப்போது நினைவில்லை. ஆனால் நான் முதன்மையாக எதை நினைவில் வைத்திருக்கிறேன் என்றால், என் பெற்றோர்கள் அந்தச் சமயத்தில் எனக்கு மட்டுமாய் இருந்தார்கள், என் படுக்கையின் பக்கத்தில், என் கனவுகளுக்கு அருகில்.

அந்தக் கதைகளைக் கோர்ப்பதில் அவர்கள் எவ்வளவு தீவிரமான படைப்பூக்கத்தைக் கண்டடைந்தார்கள் என்பதைத்தான் நான் வேறெதையும்விட நன்றாக நினைவில் வைத்திருக்கிறேன். அத்தனை தீவிர ஆனந்தத்துக்கும் ஒரு காரணம் இருந்தது: சொற்களைக் கொண்டு பயணித்து, தாம் தொலைத்த தாயகத்தை அவர்களால் சென்றடைய முடிந்தது. காலத்தையும் தொலைவையும் அவர்களால் போக்க முடிந்தது. மிகவும் பழகிப்போன, வீட்டுச்சூழலுக்கே உரித்தான அந்தக் கணத்தில், எது இலக்கியமோ, அதன் சாரம் இருந்தது: நம்மிடமிருந்து பெயர்ந்து செல்லும் வாய்ப்பு, நமக்குள் இருக்கும் பிறராய் மாறும் வாய்ப்பு, உலகை மீண்டும் மாயங்களால் நிறைக்கும் வாய்ப்பு. இலக்கியம் நம் இருப்பை நிறுவும் வழி மட்டுமல்ல, அது நாம் மறையவும் அனுமதிக்கிறது, இல்லாதது போலிருப்பவர்களின் இருப்பையும் அனுமதிக்கிறது.

ஆப்பிரிக்கர்களாகிய நாங்கள், எங்கள் தேசங்களையும் எங்கள் தனி அடையாளத்தையும் சொல்லுமிடத்து நீண்ட, வலிமிகுந்த கதையினூடாக வருகிறோம். வரலாற்றுத் தேவைகள் இருப்பினும், எங்கள் தேசிய கதையாடல் ஒரு சுமையாகி விட்டதென்று அஞ்சுகிறேன்- பன்மைத்தன்மை கொண்டவர்களாக, பிறருக்கு அண்மையானவர்களாக, பிறர் வாழ்வினுள் பயணிக்கக் கூடிவர்களாக இருக்க விடாமல் அது எங்களைத் தடுத்து நிற்கிறது. ஆனால் இந்த அண்மைத்தன்மையே இலக்கியத்தின் சாரம். அதுவே நம் மானுடத்தின் சாரம்.

உலகின் மிக ஏழை தேசங்களில் ஒன்றாகக் கருதப்படும் தேசத்திலிருந்து நான் வருகிறேன். ஏழ்மை எவ்வாறு கணிக்கப்படுகிறது என்று எனக்குத் தெரியாது, ஆனால் என் தேசத்தில் பேசப்படும் பல ஆப்பிரிக்க மொழிகளிலும், “ஏழை” என்று பொருள்படும் தனிச்சொற்கள் கிடையாது. ஒருவனை ஏழை என்று குறிப்பிட, “சிஸ்ஸிவானா” என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். அந்தச் சொல், “அநாதை”, என்று பொருள்படும். குடும்பமே இல்லாமல், நண்பர்களே இல்லாமல் வாழ்பவன்தான் ஏழை. ஒன்றுபட்ட உணர்வின் பிணைப்புகளை இழந்தவன் அவன்.

இந்த இன்னொரு ஏழ்மை, தனிமையில் தோன்றிய ஏழ்மை, நாம் நினைப்பதைவிட பரவலாக உள்ள ஒன்று. இதற்கு முன் எப்போதும் இந்த உலகம் இவ்வளவு சிறியதாக, இவ்வளவு சமகணத்தன்மை கொண்டதாக, இவ்வளவு உடனடித்தன்மை கொண்டதாக இருந்ததில்லை. ஆனால் இந்த வேகம் நம் தனிமையைப் போக்கத் தவறிவிட்டது. இதற்கு முன் எப்போதும் இத்தனை சாலைகள் இருந்தது கிடையாது. இதற்கு முன் எப்போதும் நாம் இவ்வளவு குறைவாக பிறரைக் காணச் சென்றது கிடையாது. கதை சொல்லவும் கதை கேட்கவும் தூண்டும் வேட்கையே நம்மைப் பிணைக்கும் சக்தியாக இருக்க முடியும்.

எழுத்துக் கலைக்கு பல மறைவான பரிமாணங்கள் இருக்கின்றன. ஓர் எழுத்தாளனாக நான் என்ன செய்கிறேன் என்பதற்கு வேறொரு பொருளை உணர்த்திய நிகழ்வு ஒன்றை சில ஆண்டுகளுக்கு முன்னர் எதிர்கொண்ட அனுபவம் ஒன்றுண்டு.

2008ஆம் அண்டு இது நடந்தது. வடக்கு மொசாம்பிக்கில், பால்மா என்ற கடலோர கிராமம் ஒன்றில் இப்படி நடந்தது. நகரிலிருந்து வெகு தொலைவில் உள்ள இடம் அது, அங்கு தண்ணீர் கிடையாது, மின்சாரம் கிடையாது, சவன்னாவின் மையத்தில் இருக்கும் இடம். உயிரியலாளனாக நான் என் அன்றைய கடமையை முடித்து விட்டிருந்தேன். அதன்பின் என் கூடாரத்தின் நிழலில் இருந்தேன். அப்போது ஒரு விவசாயி அங்கு வந்தார், அவர் என்னை அழைத்தார்.

இங்கே வா, என்று அழைத்தார் அவர். இங்கே வா, கொலை செய்யப்பட்ட ஒருவனைப் பார், என்றார். அவருடன் நான் இருளினுள் சென்றேன், காட்டின் மையத்துக்குச செல்லும் பாதையில் அந்த முதியவருடன் நடந்து சென்றேன். அவன் எப்படி செத்தான்?, என்று கேட்டேன். ஒரு சிங்கம் அவனைக் கொன்று விட்டது, என்று அவர் பதில் சொன்னார். அந்தச் சிங்கம் இன்னும் இந்தப் பக்கம்தான் சுற்றிக் கொண்டிருக்கிறது. அவனது உடலில் மிச்சம் இருப்பதைக் கொண்டு செல்ல அது திரும்பி வரப் போகிறது. நான் அவசர அவசரமாக என் கூடாரத்துக்குத் திரும்பி விட்டேன், அவர் எனக்கு எதைக் காட்டுவதாக இருந்தாலும் அதைப் பார்க்கும் ஆசை எனக்கில்லை.

நான் கூடாரத்தின் ஜிப்பை இழுத்து மூடினேன், என்னைப் பாதுகாக்க இது போன்ற செய்கைகள் கொஞ்சமும் உதவாது என்று நன்றாகவே தெரிந்தது. நான் இருக்கும் இடத்திலிருந்து சற்று தொலைவில், ஒரு சிங்கத்தால் கடித்துக் குதறப்பட்ட ஒரு பிணம் இருக்கிறது, கொலைவெறி கொண்ட ஒரு நிழலாய், காட்டு விலங்கொன்று அருகில் சுற்றிக் கொண்டிருக்கிறது. என் தொழில்முறை வாழ்வில், இன்றும் அபாயகரமான விலங்குகளாக உள்ளவை இருந்த பகுதிகளில் பல ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறேன். ஆனால் இது போன்ற ஒரு சூழ்நிலையை எப்படி சமாளிப்பது என்று எனக்கத் தெரியவில்லை.

முதல் வேலையாய் நான் என் டார்ச்லைட்டை ஒளிரவிட்டு, குறிப்பேட்டில் எழுதத் துவங்கியது நினைவிருக்கிறது. அதில் அப்போதுள்ள நிலையை நான் விவரிக்கவில்லை, காரணம், எனக்கு அது எதுவும் தெரியாது, என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளும் விருப்பமும் எனக்கு இல்லை. உண்மையைச் சொன்னால், என் அச்சத்தை வெல்ல விடியும்வரை எழுத்தில் ஈடுபட்டிருந்தேன்.

அந்த அச்சம் ஓர் ஆதி உணர்வு. அது வேறொரு காலத்தின் நினைவு, அதில் நாம் எவ்வளவு வலிமையற்றவன் என்பது தெளிவாக வெளிப்பட்டது. நான் நகரைச் சேர்ந்தவன், நவீனத்தில் பிறந்து வளர்ந்தவன். மானுடத்தைக் காட்டிலும் தொன்மையான அச்சத்துக்கு எதிராய் என்னிடம் அரண்கள் இல்லை. சிங்கங்கள் அல்ல காட்டு விலங்குகள் என்று மெல்ல மெல்ல உணர்ந்தேன், நூற்றாண்டுகளாக நம்முள் வாழும் ராட்சதர்களே அவை.

பின்னரே இதை உணர்ந்தேன்; நான் அடைக்கலம் புகுந்தது என் கூடாரத்துள் அல்ல. நான் என் புனைவில்தான் அடைக்கலம் புகுந்திருந்தேன். தான் வாழ்வதற்கான வீட்டைக் கட்டிக் கொள்ளும் ஒருவனைப் போல் நான் கதை கட்டவில்லை, நிஜத்தை அழிப்பதற்கான கதையை உருவாக்கிக் கொண்டிருந்தேன். அப்போது எனக்குத் தெரியாது, ஆனால் நான் “பெண் சிங்கத்தின் வாக்குமூலம்” என்ற நாவலை அன்றுதான எழுத ஆரம்பித்திருந்தேன்.

ஆனால் இந்தப் பரிசுக்கு என்னைத் தேர்வு செய்ய என் நாவல்களில் வேறொன்றுதான் காரணமாக இருந்திருக்கிறது, டெர்ரா சோனாம்புலா என்ற நாவல் (“தூக்கத்தில் நடக்கும் மண்”). மொசாம்பிக் வரலாற்றின் திருப்புமுனைத் தருணம் ஒன்றை இந்தப் புத்தகம் பேசுகிறது. பதினாறு ஆண்டுகளாக உள்நாட்டு யுத்தத்தின் அவதியால் நாங்கள் துயருற்றோம், அது எங்கள் பொருளாதாரத்தை அழித்து தேசத்தை ஊனமாக்கியது. அந்தப் பதினாறு ஆண்டுகளில், 180 லட்சம் பேர் கொண்ட மக்கள் தொகையில் பத்து லட்சம் பேர் மாண்டிருந்தனர்.

வன்முறை அதன் அடிப்படை நோக்கத்தில், கதை சொல்லும் கலைக்கு எதிரானது, நம் மானுடத்தை நசிக்கும் நோக்கம் கொண்டது. இந்த மானுட நசிவு பல வழிகளில் ஏற்படுகிறது. நம்பிக்கைக்கு இடமற்ற முழுமையான தனிமையில் வாழ்வது போன்ற நிலையில் நாங்கள் இருந்தோம். எங்கள் நடப்பு காலத்தை, கதைகள் பல கொண்ட புதையல் பேழையாய் மாற்றும் வல்லமை எங்களுக்கு இல்லாமல் போனது. நாங்கள் தனிமையில் இருந்தோம், இறந்தவர்களும் வாழ்பவர்களும். கடந்த காலம் என்று ஒன்று இல்லாமல், எதிர்காலம் என்று ஒன்று இல்லாமல், கதைகள் எதுவும் இல்லாமல் இருந்தோம். நிகழ்காலத்தின் மதிப்பு, அது மறக்கப்படுவதற்காகப் பிறக்கிறது என்ற அளவில் மட்டுமே இருந்தது.

நான் எழுதிய புத்தகங்களில் எனக்கு வலி மிகுந்த அனுபவமாய் இருந்தது “டெர்ரா சோம்னாம்புலா”, நாவலை எழுதிய அனுபவம்தான். ஏனெனில் அது யுத்தகாலத்தில் எழுதப்பட்டது, விரக்தி மிகுந்த காலத்தில் நான் அதை எழுதினேன்.

யுத்தத்தில் இறந்த நண்பர்களும் சகாக்களும் வருகை புரிந்த உறக்கமற்ற இரவுகளாய் பல மாதங்கள் கழிந்தன. என் உறக்கமின்மையின் கதவை அவர்கள் தட்டிப் புகுந்தது போன்றிருந்தது. பொய்களாகவே இருந்தாலும், கதைகளில் தாங்கள் வாழ வேண்டும் என்று அவர்கள் இறைஞ்சியது போலிருந்தது, அல்லது எனக்குத் தூக்கம் வருவதற்கான ஒரு வழியாக அதை எழுதினேன் என்றும் சொல்லலாம்.

ஒருமுறை, இப்படிப்பட்ட உறக்கமற்ற இரவுகள் ஒன்றின் பின்னர், நான் வேலை செய்துகொண்டிருந்த உயிரியல் கூடத்தின் கட்டிடத்தை விட்டு வெளியே வந்து கடற்கரையில் அமர்ந்திருந்தது நினைவிருக்கிறது. அப்போது, அங்கே, உடைந்து தெறிக்கும் அலைகளுக்கு வெகு அருகே, கடற்கரையில் ஒதுங்கி மரணத்தைத் தழுவ முடிவெடுத்த ஒரு திமிங்கலமும் இருந்ததை உணர்ந்தேன். சிறிது நேரத்தில் வேகவேகமாக மக்கள் கடற்கரைக்கு வந்து கூடுவதையும் பார்த்தேன்.

இறந்து கொண்டிருக்கும் அந்த விலங்கை பாளம் பாளமாக வெட்டியெடுக்க அவர்கள் விரைந்து வந்தார்கள். நூற்றாண்டுகளாய் நீடித்திருந்த பசியின் பேராசையில் துண்டம் துண்டமாக அது கிழிக்கப்பட்டது. திமிங்கலம் இன்னும் இறந்திருக்கவில்லை, ஆனால் அதற்குள் அதன் எலும்புகள் சூரிய ஒளியில் பளபளத்தன.

மெல்ல மெல்ல நான் என் தேசமும், பெருவலியால் பீடிக்கப்பட்டு மரணிக்க கடற்கரையில் ஒதுங்கும் திமிங்கலங்களில் ஒன்று என்று நினைக்க ஆரம்பித்தேன். மரணம் இன்னும் வரவில்லை. ஆனால், அதைப் பாளம் பாளமாக ஆயுதங்கள் கவர்ந்து செல்லத் துவங்கிவிட்டன. ஒவ்வொரு மனிதனும் தன்னால் எவ்வளவு எடுத்துச் செல்ல முடியுமோ அவ்வளவு எடுத்துச் செல்கிறான். அது மட்டுமே கடைசி மிருகம் என்பது போல், உணவு கிட்டும் கடைசி வாய்ப்பு என்பது போல்.

குணப்படுத்த முடியாத ஒரு சோகத்தின் எடை என்மேல் கவிந்திருக்க நான் என் அறைக்குத் திரும்பினேன். அன்று அதிகாலை, என் நாவலின் கடைசி அத்தியாயத்தை எழுதினேன். இரண்டு மாதங்களுக்குப் பின் அதை நான் என் பதிப்பாளரிடம் தரும்போது, அமைதி ஒப்பந்தம் பற்றிய செய்தி வந்தது.

1992ஆம் ஆண்டு அமைதி ஒப்பந்தம் கையெழுத்து இடப்பட்டபோது, வஞ்சம் தீர்க்கும் காலமும் பழி வாங்கும் படலமும் விரைவில் துவங்குவதைத் தவிர்க்க முடியாது என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் அது போல் நடக்கவில்லை. மக்கள் அனைவரும் ஒட்டுமொத்த நினைவிழப்பு போன்ற ஒன்றை மேற்கொள்ள முடிவெடுத்தனர். வன்முறையின் எச்சங்கள் மறதியின் குழிகளில் வீசப்பட்டன. இந்த மறதி பொய்யானது என்பதை அறிந்திருந்தோம். யுத்தம் மறக்கப்பட முடியாதது. ஆனால், யுத்தம் எங்களை மறக்க வேண்டும் என்று விரும்பினோம்.

அமைதி நிலையை உருவாக்குவதில் இலக்கியம் எததகைய நேரடிப் பங்காற்ற முடியும் என்பதை மொசாம்பிக்கின் அனுபவம் காட்டிற்று. கதைகளும் கவிதைகளும் துப்பாக்கிகளை ஊமையாக்குவதில்லை. ஆனால், கடந்த காலத்துடன் நாம் சமாதானம் ஏற்படுத்திக் கொள்ளச் செய்கின்றன அவை, அந்த அனுபவங்கள் எவ்வளவு துயர்மிகுந்ததாக இருந்தாலும் சரி. புனைவும் கவிதையும் அக அமைதியை நாம் மீண்டும் வென்றெடுக்கவும் பிறருடன் சமாதானம் ஏற்படுத்திக் கொள்ளும் நிலையை உருவாக்கிக் கொள்ளவும் உதவுகின்றன. கதைகளைக் கொண்டு, பிறராகியவர்கள் ராட்சத நிலையிலிருந்து விடுவிக்கப்படுகின்றனர். என் தேசத்தில் மனிதத்தை மீண்டும் உருவாக்க கவிஞர்களும் எழுத்தாளர்களும் உதவினார்கள் என்று நான் பெருமையுடன் சொல்ல முடியும்.

துரதிருஷ்டவசமாக, மானுட ஒருமைப்பாட்டை உருவாக்க கதைகள் மட்டும் போதாது, என்பதையும் சொல்ல வேண்டும். அனைத்து தேசங்களிலும், அனைத்து கண்டங்களிலும் நம்மை ஒன்றுபடுத்துவது, பிற அனைத்தைக் காட்டிலும் அச்சம்தான். கைவிடப்பட்ட உணர்வும் பாதுகாப்பின்மையும் கூடிய அதே உணர்வுதான் நம்மை எங்கும் ஒன்றுபடுத்துகிறது. பெரிதோ சிறிதோ, அச்சம் தொட முடியாத இடத்தில் எந்த தேசமும் இல்லை.

வேற்றார் பகைவராய் உருமாறுதலை எதிர்கொண்ட பெருந்துயரில் நாமும் வாழ்கிறோம். மெய்யோ பொய்யோ, நம்மைத் தின்னும் விருப்பத்தில் ஒரு விலங்கு நமக்காக இருளில் காத்திருக்கிறது என்ற அச்சுறுத்தலில் நாம் அனைவரும் ஒரே சிறிய கூடாரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம் மீது ஆட்சி செலுத்தும் அச்சம் பெருமளவில், ஒருவரையொருவர் குறித்து நமக்கிருக்கும் ஆழ்ந்த அறியாமையால் வளர்த்தெடுக்கப்படுகிறது. அச்சத்தையும் அவநம்பிக்கையையும் உத்பவிப்பதற்கான அழைப்பை மறுக்கும் எதிர்வினையாக இலக்கியம் இருக்க முடியும். இலக்கியமும் கதைசொல்லலும் அளவற்ற வேற்றுமையிலும் நம்மை உறவினர்களாகவும் அக்கம்பக்கத்தினராகவும் உறுதி செய்கிறது.

அன்பு நண்பர்களே,

இந்தப் பரிசை அடுத்து பெறவிருப்பவரும் ஒரு ஆப்பிரிக்கர் என்பதை அறிய மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது (ஆசிரியர் குறிப்பு: 2015ஆம் ஆண்டு குழந்தை இலக்கியத்துக்கான என்எஸ்கே ந்யூஸ்டாட் பரிசு மேஷாக் ஆசாரேவுக்கு வழங்கப்படவிருக்கிறது). ஓர் எழுத்தாளர் எங்கு பிறந்தார் என்பது ந்யூஸ்டாட் பரிசு அளிக்கப்படுவதைக் கட்டுப்படுத்தாது என்பது நமக்குத் தெரியும். அவரது படைப்பின் தரம் மட்டுமே முக்கியமாக இருக்கிறது. எனவே, அடுத்து இந்தப் பரிசைப் பெறவிருப்பவரும் ஒரு ஆப்பிரிக்கர் என்பது, எந்த ஒரு பெருந்தன்மையான சலுகையும் பெறாமல் ஆப்பிரிக்கர்கள் உலக அரங்கில் தம்மை நிறுவிக்கொள்கிறார்கள் என்று பொருள்படுகிறது.

உண்மையில், கடந்த சில ஆண்டுகளாகவே, தனித்துவ அடையாளத்தை நிறுவிக் கொள்ளும் வேட்கையால் உந்தப்பட்ட இலக்கியத்திலிருந்து ஆப்பிரிக்க எழுத்தாளர்களாகிய நாங்கள் எங்களை விடுவித்துக் கொண்டிருக்கிறோம். எங்களாலும் பிறர் அளவுக்கு திறமையை வெளிப்படுத்த இயலும் என்பதைச் சாதித்துக் காட்டும் வரலாற்று, உளவியல் தேவைகள் எங்களுக்கு இருந்ததாக முன்னர் உணர்ந்தோம். நூற்றாண்டுகளாகத் தொடர்ந்த கலாசார, வரலாற்று நிராகரிப்புக்குப் பிற்பட்ட காலகட்டத்தில் இத்தகைய நிறுவுதல் அர்த்தமுள்ளதாக இருந்தது. ஆனால் இன்று, வேற்றாராய் இருக்க வேண்டிய பணியை நிறைவேற்றிக் கொள்ளும் அவசியமில்லாமல் இன்னும் சுதந்திரமாய் நம்மால் செயல்பட முடியும்.

புதிய தலைமுறை ஆப்பிரிக்கர்களுக்கு உலக இலக்கியம் படைப்பவர்களாய் இயங்கும் சுதந்திரம் மேலும் மேலும் வளர்ந்து வருகிறது. தாங்கள் தேர்ந்தெடுத்த எந்த மொழியிலும், எதைப் பற்றியும் எழுதும் சுதந்திரம் தங்களுக்கு இருப்பதை அவர்கள் உணர்ந்திருக்கின்றனர். மெய்ம்மையின் எதார்த்தச் சித்தரிப்பு அல்ல என்ற குற்றச்சாட்டையும், “மரபை” மதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் கண்டு இவர்கள் முன் அளவுக்கு அஞ்சுவதில்லை. பிறர் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு கடவுச்சீட்டாய் எங்கள் ஆப்பிரிக்கத்தனத்தை வெளிப்படுத்த வேண்டிய தேவை இல்லாத சுதந்திரமான ஒரு இலக்கியத்தை நாம் படைத்து வருகிறோம்.

தற்கால அரசியல் தலைவர்கள் சிலரின் ஆணவத்தை, ஊழலை, உறவினர்களுக்கு மட்டும் உதவும் போக்கைக் கண்டனம் செய்ய எங்கள் இளம் எழுத்தாளர்களில் பலர் இலக்கியத்தைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் அதைவிட, அவர்கள் சிறந்த இலக்கியத்தைப் படைப்பதில் தீவிரமாக இருக்கின்றனர்.

எத்தனை எழுத்தாளர்கள் இருக்கின்றனரோ அந்த அளவுக்கு ஆப்பிரிக்கர்கள் இருக்கின்றனர் என்பதையும், அவர்கள் தங்கள் அகத்தினூடாக புதிய புதிய கண்டங்களைப் படைத்துக் கொண்டிருக்கின்றனர் என்பதையும் இந்த எழுத்தாளர்கள் அறிந்திருக்கின்றனர். ஆப்பிரிக்கர்களாக, எங்களுக்கு மட்டுமே உரிய ஒரு வேட்கையல்ல இது. எளிதில் வசப்படாத பல்வேறு அடையாளங்களில் தன் அடையாளத்தைத் தேடிக் கண்டடையும் தேவையை உணராத எழுத்தாளர் எவரும் இன்றைய உலகில் கிடையாது. ஒவ்வொரு கண்டத்திலும், பல்வேறு தேசங்களைத் தன்னுள் கொண்ட தேசமாய் நாம் ஒவ்வொருவரும் இருக்கிறோம்.

அன்பு நண்பர்களே,

ந்யூஸ்டாட் பரிசு இவ்வாறு வழங்கப்படுகிறது (மேற்கோள் காட்டுகிறேன்): “யுனைட்டட் ஸ்டேட்ஸில் வழங்கப்படும் முதல் உலகளாவிய இலக்கிய விருது இது. கவிஞர்களும் நாவலாசிரியர்களும் நாட்காசிரியர்களும் சம அளவில் விருது பெரும் தகுதி கொண்ட உலக பரிசுகள் மிகச சிலவற்றில் இதுவும் ஒன்று”

இந்த முன்னெடுப்பில் புலப்படும் திறந்த, அனைவரையும் அணைத்துக் கொள்ளும் நோக்கத்துக்காக, ந்யூஸ்டாட் குடும்பத்தினர், ஒக்லஹமா பல்கலைக்கழகம் மற்றும் வர்ல்ட் லிடரேசர் டுடே என்று அனைவருக்கும் நன்றி கூற விரும்புகிறேன். இந்த நிகழ்வு வெறுமே ஒரு பரிசு விழாவாக மட்டும் அமைந்துவிடக் கூடாது என்ற அக்கறை, இந்தக் கொண்டாட்டங்களின் நிரல் அமைப்பில் வெளிப்படுகிறது. இவ்வாறாகவே, எழுத்தாளர்களைக் காட்டிலும் புத்தகங்களே முக்கியமானவை என்ற கோட்பாட்டுக்கு நியாயம் செய்யப்படுகிறது.

இலக்கியத் தரம் குறித்த அக்கறைகள் மட்டுமே இந்த விருதுக்கான மதிப்பீட்டு அளவைகளாய் வழிகாட்டியிருக்கின்றன என்பது இந்தப் பரிசின் பெருமைகளுள் ஒன்று. ஒரு இடத்தின் பிரதிநிதியாகவோ, ஒரு கோட்பாடு அல்லது ஒரு சமயத்தின் பிரதிநிதியாகவோ நான் இங்கு உங்கள் முன்வந்து நிற்கவில்லை. ஆனால், என் எழுத்துக்குப் பொருள் தந்த என் தேசத்தின் முகமற்ற மக்களை நான் எந்நாளும் மறக்க முடியாது. அந்த மொசாம்பிக்கர்களில் சிலர்- அவர்களும் என்னோடு என் புத்தகங்களின் ஆசிரியர்ர்கள்தான்-, எழுதத் தெரியாதவர்கள். பலர் போர்ச்சுகீசிய மொழியில் பேசக்கூடத் தெரியாதவர்கள். ஆனால் அவர்கள் தங்கள் அன்றாட வாழ்வில், என் எழுத்தில் வெளிச்சம் பாய்ச்சி, என் இருப்புக்கு இன்பம் சேர்க்கும், ஒரு மாயத்தன்மை பொருந்திய, கவித்துவ பரிமாணம் கொண்ட உலகின் காவலர்கள்.

இங்கே நான் இப்பொது இருப்பதற்கு துணை நின்றவர்களைக் குறிப்பிடத் தவறுவது ஓர் அநீதியாக இருக்கும்: இவர்களில் முதன்மையானவர், இந்தப் பரிசுக்கு என்னைப் பரிந்துரைத்த குழுவின் உறுப்பினர் காப்ரியல்லா கென்னாண்டி. அவர் இல்லாமல் நான் இங்கு வந்திருக்க முடியாது. நீண்ட காலமாக என் எழுத்தை மொழிபெயர்த்து வரும் டேவிட் பரூக்ஷா இல்லாமல் நான் இங்கு வந்திருக்க முடியாது. மொழிபெயர்ப்பாளர் என்பவர் சக ஆசிரியர், அவரது பெயரும் புத்தகங்களின் முகப்பில் இடம் பெற வேண்டும். இந்தப் பரிசு விழாவுக்கு அவரை அழைத்திருப்பது மிகவும் பொருத்தமானது. என்னோடிருக்கும் என் மனைவி பாட்ரிசியா, என் முதன்மை ஊக்கமாக இருக்கிறார். அவரே என் முதல் வாசகரும்கூட. எங்களோடு இருக்கும் என் மகள் லூசியானா, என் பிற குழந்தைகளான மாத்யோ மற்றும் ரிடாவின் சார்பில் இங்கிருக்கிறார். நம் குழந்தைகளாக நாமே பிறப்பதில் நாம் அடையும் ஆனந்தத்துக்கு எந்தப் பரிசும் ஈடாகாது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் நான் எழுதிய ஒரு கவிதையை வாசித்து என் உரையை நிறைவு செய்து கொள்கிறேன். இந்தப் பரிசின் இலச்சினை கழுகின் சிறகு எனபதைக் கண்டபோது எனக்கு இந்தக் கவிதை நினைவுக்கு வந்தது. இந்தக் குறியீடு, சிறகுகளின் லகுத்தன்மையைத் தேடும் எழுத்தின் படிமமாக இருக்கிறது. டேவிட் பரூக்ஷா தன் மொழிபெயர்ப்பில் இதை வாசிக்குமாறு அவரை மேடைக்கு அழைக்கிறேன்-

வேறொரு வாழ்வில் நான் பறவையாய் இருந்தேன்

பரந்து விரிந்த சூழ்நிலங்களையும்
பறத்தலில் தொட்டுச் சென்ற சரிவுகளையும்
பாதுகாத்து நான் நினைவில் வைத்திருக்கின்றேன்.
ஒற்றை மேகமும் அதன் அலட்சிய வெண்தடமும்
மண்ணோடு என்னைப் பிணைத்திருக்கின்றன.
ஒரு பறவைச் சிறகின் இதயத்துடிப்பாய் வாழ்ந்து,
மண்ணைப் பசித்து வீழும் மின்னலாய் வீழ்கிறேன்.
தன் நினைவைக் காலத்தில் காப்பவன் போல்,
என் இதயத்தில் எஞ்சி நிற்கும் அந்தச் சிறகை
பத்திரப்படுத்தி நான் வைத்திருக்கின்றேன்.
வேறொரு வாழ்வில் நான் பறவையாய் இருந்தேன்,
வேறொரு பறவையில் நான் உயிராய் இருந்தேன்.

போர்ச்சுகீசிய மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தவர் பால் ஃபாவே

நன்றி – World Literature Today

One comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.