– ஸ்ரீதர் நாராயணன் –
‘அமெரிக்கன் நோபல்’ என்று பரவலாக அறியப்படும் நூஸ்டாட் சர்வதேச பரிசு, கவிஞர்கள், நாவலாசிரியர்கள், நாடகாசிரியர்கள் என்று எல்லோரும் சமமான வாய்ப்பு பெறும் வெகு சில சர்வதேச பரிசுகளில் ஒன்று.. இவ்வருட நூஸ்டாட் பரிசு போர்ச்சுகீசிய எழுத்தாளர் மியா கோதோவிற்கு வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளாக நூஸ்டாட் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டவர்களில் முப்பது பேராவது நோபல் பரிசை பெற்றிருக்கின்றனர் என்பதால் சர்வதே இலக்கிய வட்டாரத்தில் இது முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட இருபத்தைந்து நாடுகளில் இருந்து பதிமூன்று வெவ்வேறு மொழிகளில் எழுதும் முப்பத்து நான்கு படைப்பாளிகள் பங்குபெறும் நடுவர் குழு இந்த பரிசுக்குரிய எழுத்தாளரை தேர்ந்தெடுக்கிறது.
“தொலைவிலிருக்கும் ஐஸ்லாந்தின் பெரும் எழுத்தாளரால், காஃப்காவின் கனவுகளைச் சேர்ந்த, தனித்துவ ரோஜாப் பாறைகளின் நிலமான, புராண ஓக்லஹாமாவின் இந்தப் பரிசு, இலத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த – புதிரான, ஒதுக்குப்புறமான நாடு ஒன்றின் எழுத்தாளனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இது போன்ற சூழல்கள்தான், இலக்கியத்திற்கான நூஸ்டாட் சர்வதேச விருதை, அதிகம் அறியப்படாத, ஆனால் தகுதி பெற்ற எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் பெரும் சர்வதேச பரிசாக ஆக்குகிறது.” என்று 1972ல் தன்னுடைய ஏற்புரையில் மார்க்குவெஸ் குறிப்பிட்டார்.
அடுத்து பத்தாண்டுகள் கழித்துதான் அவர் நோபல் பரிசுக் குழுவினால் தேர்ந்தெடுக்கப்பட்டு உலகளவில் மிகப்பெரும் வீச்சைப் பெறுகிறார். நோபலும், நூஸ்டாட்டும் உலகளவில் உன்னத எழுத்தாளர்ளிலிருந்து பரிசுக்குரியவர்களை தேர்ந்தெடுத்தாலும், நூஸ்டாட் அடையாளபடுத்தும் விதம் சற்று விரைவாகவும், அதன் அங்கீகாரம் நோபல் தேர்வுக்குழுவினருக்கு உதவிகரமாகவும் அமைகிறது. படைப்பாளிகளின் பரிந்துரைகளில் பல புதியவர்களை இடம்பெறச் செய்தாலும், அதற்காக எவ்வித சமரச அரசியல் வழக்கங்களில் ஈடுபடாமல் முற்றிலும் வெளிப்படைத்தன்மை கொண்ட முறைமைகளை கொண்டிருக்கிறது. ஆனால் அது அவ்வளவு சுலபமானதா? ஒரு பிரபலமானவரை அல்லது புதியவரை பரிந்துரை பட்டியலில் இணைக்கும்போது தேர்வுக்குழுவினரின் சார்பரசியலை எப்படி மட்டுப்படுத்துவது?
இப்பரிசை நிர்வகிக்கும் ‘The world literature today‘ பத்திரிகையின் செயற்குழு இயக்குநரும், ஓக்லஹாமா பல்கலை பேராசிரியருமான டேவிஸ்-உண்டியானோ தன்னுடைய விளக்கத்தில், விமர்சகர்களும், நூல் அறிமுகம் எழுதுபவர்களை விட எழுத்தாளர்களை அதிகம் கொண்ட தேர்வுக்குழு இத்தகைய புறச்சாய்வுகளை பக்குவமாக கையாளுகிறது என்கிறார். படைப்பாளிகள் நிரம்பிய தேர்வுக்குழு தவிர, 800 ஆலோசகர்கள் கொண்ட குழு, உலகளவில் புதிய எழுத்தாளர்களின் வரவைப் பற்றி தொடர்ந்து அறிவுறுத்தல்களை தேர்வுக்குழுவிற்கு சமர்பிக்கிறது. பரிந்துரைக்கப்படும் எழுத்தாளர் உயிருடன் இருக்க வேண்டியது மற்றும், நூஸ்டாட் பரிசை பெற்றுக்கொள்ள ஓக்லஹோமா வரத்தயாராக இருக்க வேண்டும் என்பதே நிர்வாக கமிட்டியின் ஒரே கோரிக்கையாக தேர்வுக்குழுவிடம் வைக்கப்படுகிறது. மற்ற நிகழ்முறைகள் எல்லாமே தேர்வுக்குழுவின் முழு சுதந்திரத்திற்கு உட்பட்டது. கவிஞர்கள், புனைவு எழுத்தாளர்கள், நாடகாசிரியர்கள், அபுனைவு எழுத்தாளர்கள் என்ற பெரிய கலவையின் தேர்வுமுறைகள் மிகவும் கடினமானதாக இருந்தாலும், தொழில்முறை படைப்பாளிகளை கொண்ட தேர்வுக்குழு அதை பிரமாதமாக கையாள்கிறது. இலக்கிய வரலாற்றை மாற்றியமைக்கும் அதிமுக்கிய பரிசுகள் இவை. தங்களுடைய ஆழ்ந்தாராய்வுகளில் எவ்வித விரைவையும் சுருக்குவழியையும் தேர்வாளர்கள் மேற்கொள்ளக் கூடாது என்பதில் நிர்வாகக் குழு மிகக்கவனமாக இருக்கிறது.
“இனி எப்போதும் நிகழாது என்று நாங்கள் நினைத்திருந்த போர்சூழல் மீண்டும் மொஸாம்பிக்கில் தொடங்கியிருக்கும் இந்த சோக காலகட்டத்தில், நூஸ்டாட் பரிசு என்னும் நற்செய்தி எனக்கு ஆறுதலாக அமைந்திருக்கிறது’ என்று மகிழும் மியா கோதோவைத்தான் 2014ம் வருடத்து வெற்றியாளராக ஜூரர்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். எதிர்மறையான மற்றும் பலியாக்கப்பட்ட விழுமியங்களாலேயே குறிப்பிடப்படும ஆப்பிரிக்க நாடுகளுக்கான தேய்வழக்கை மறுத்து தங்களுடைய தனித்துவத்தை கண்டடையும் நாடான மொஸாம்பிக்கை சேர்ந்தவன் என்று கூறிக்கொள்ளும் மியா, போர்ச்சுகீசிய வம்சாவளி பெற்றோருக்கு பிறந்தவர். மொஸாம்பிக்கின் சமகால அரசியல் பின்னடைவில், மியா கோதாவின் இலக்கிய செயல்பாட்டிற்கான இந்த அங்கீகாரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.
முப்பது வருடங்களாக வருடத்திற்கு ஒரு புத்தகமாக வெளியிட்டுக் கொண்டு வரும் படைப்பூக்கம் மிக்க எழுத்தாளராக அறியப்பட்ட மியா தன்னுடைய ஆதர்சமாக பிரதானமாக பிரேசிலிய எழுத்தாளர்களையும், பிற இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களையும் சொல்கிறார். மொஸாம்பிக்கின் சுதந்திர போராட்ட வரலாறும், அதனால் பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றியுமான பதிவுகளை அவருடைய நூல்களில் பரவலாக காணமுடிகிறது. 1992ல் வெளியிடப்பட்ட ‘தூக்கத்தில் நடக்கும் நிலம்’ (Terra Sonâmbula) ஆரவாரத்துடன் வரவேற்கப்பட்டது.
மொஸாம்பிக்கின் உள்நாட்டு கலகத்தின் பின்னணியில் உருவாக்கப்பட்ட இந்த நாவல், அகதி முகாமில் இருந்து தப்பித்து செல்லும் துஹாஹிர் என்னும் கிழவரும், தன்னுடைய குடும்பத்தை தேடிச்செல்லும் ம்யுதிங்கா என்னும் இளைஞனும் எரிந்து போன பேருந்து ஒன்றில், இறந்த பிரயாணியின் குறிப்புப் புத்தகத்தை கண்டடைவதாக விரிந்து செல்கிறது. மொஸாம்பிக்கின் சுதந்திர போராட்டங்களும், அதைத் தொடர்ந்து நிலைத்தன்மைக்கான அதன் தத்தளிப்புகளைப் பற்றியும் அந்த குறிப்புப் புத்தகம் வாயிலாக விவரிக்கிறது. பெரும் போராட்டமான அந்த பயணத்தின் இறுதியில் இருவரும் பாழடைந்த நாட்டின் ‘தூக்கமிழந்தவர்களாக’ (Somnambulists) ஆகிவிடுகின்றனர். இந்த நாவல் தெரசா பிரதாவின் இயக்கத்தில் திரைப்படமாக எடுக்கப்பட்டு விருதுகளையும் பெற்றது.
‘பதினாறு வருடப் போருக்கு பின்னர், கலை என்பது (முக்கியமாக கவிதையும் இலக்கியமும்) எதிர்ப்பின் ஒருவகைமையாயாக இருக்கிறது என்பது எனக்கு தெளிவாகிறது. போரின் முதல் நோக்கமே மனிதத்தை அழிப்பதுதான். இம்மாதிரியான சூழல்களில் கலை மொழி என்பது மனிதத்தை மீள் உருவாக்கும் தெளிவான வழியாக அமைகிறது’ என்ற மியோவின் கூற்றை உலகிற்கு எடுத்து சொல்லும் நிகழ்வாக இந்த பரிசு அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
மனிதத்தை பண்படுத்துவதே இலக்கியத்தின் தேவையாக அன்றும், இன்றும், என்றும் இருக்கிறது. நூஸ்டேட்டின் பரிசு அதை மேலும் உறுதிபடுத்துகிறது.
மியா கோதோவின் நூஸ்டாட் பரிசு ஏற்புரை – இவ்வுலகை மீண்டும் மாயங்களால் நிறைத்தல்
மியா கோதோவின் சிறுகதை – காலத்தின் கடைக்கோடியில் தோட்டமும் ஒரு கிழவனும் –