மகா நிர்வாணம்
யாருமில்லா பெருவெளியில்
கொட்டிக்கவிழ்த்த இரவாய்
எங்கும் வியாபித்திருக்கிறது
மௌணம்.
கண்ணாடியில் விழுந்த
நீலநிற பிம்பத்தில் தெரிவது யாரோ?
சதைகளின் பெருக்கத்தில்
முகத்தின் தழும்பில்
எனக்கான சாயல் உண்டு
ஆடைகளற்ற நிர்வாண
ஸ்ருதியில் எனக்கும் உள்ளது
சிரிக்கும் புத்தனின் சாயல்
ஒரு கைகுலுக்கலில்
கடத்தப்பட்ட காமம்
பலிபீடத்தில் வதைபடுகிறது
என்னையேற்றிய பலிபீடத்தில்
சிதறிய ரத்தம்
ஈக்களுக்கு உணவாய்
அருபமாய் அரூபமாய்
அருபடுகிறது அறுபடுகிறது வேர்
புல்லின் நுனியில்
காத்திருக்கும் தனிமை
தேவகணத்தில்
அபூர்வ மழை
தூரத்தில்
படிமமாய் கடவுள்
இன்றோடு மறையட்டும்
நாணம்.
சாத்தான்
நீங்கள் இதுவரை சாத்தானை
கண்டிருக்க மாட்டீர்கள்
உங்கள் எல்லோருக்கும்
சாத்தானைப் பற்றிய அறிதல் உண்டு
ஆதாமும் ஏவாளும்
ஆதியில் அவனை அறிந்தவர்கள்
தோற்றத்தில் அவன் என்னை ஒத்திருப்பான்
பேரறிவில் அவன் உங்களுக்குச் சமமான,
அல்லது உங்களைவிட மேலானவன்
நீங்கள் நெடுங்காலம் பயணம் செய்த வழியில்
ஒருவேளை அவனைச் சந்திக்கக்கூடும்
சட்டென்று இறந்தகாலப் புனைவில்
உங்களை ஆழ்த்த எத்தனிக்கலாம்
நீங்கள் மறக்க நினைக்கும்
ஒன்றை ஞாபகப்படுத்தலாம்
ஒரு தேவகணத்தில் நீங்கள்
அவனை உணர்ந்து கொள்ளக்கூடும்
ஞானத்தில் விழித்த பேரமைதி
உங்களைச் சூழ்ந்து கொள்ளலாம்
நினைவு தப்பிய குடிகாரன் போல்
அவனைப்பற்றியே சிந்திக்ககூடும்.
யாருமற்ற வெட்டவெளியில்
நடனமாடத் தோன்றும்
ஒரு நீண்ட புணர்ச்சிக்கு தயாராவீர்கள்
பின் நீங்களும் சாத்தானாகிவிடுவீர்கள்
எச்சரிக்கையாக இருங்கள்
சாத்தான் அவன் வழியே போகட்டும்
கானகம்
அற உணர்ச்சியின் விசும்பல்
எல்லா தெருக்களின்
கடைசிவரை
கேட்கின்றது
நிச்சலணங்களை
ஒதுக்கி வைத்துவிட்டு
கூடுகட்டத் தயாராகிறது
ஒரு பறவை
அன்றைய கனவில்
வந்தமர்ந்த
நெடுங்காலத்திற்கு முன்
பத்திரப்படுத்திய
இறந்த பறவையின்
ஒற்றைக் சிறகு.
ஆசிர்வதிக்கப்பட்ட
குழந்தைகளிடம்
முத்தங்களைப் பகிர்கின்றேன்
சிறிய பறவையின் அலகில்
கணத்த கனத்த மழை
சூல் கொள்கிறது
மானுடத்தின்
மொத்த பிரியத்தையும்
இறக்கி வைத்திருக்கிறேன்
பறக்கும் இடைவெளியில்
பற்றி எரிகிறது கானகம்