சித்தப்பா
பின்னால் எரிந்து கொண்டிருக்கிறார்
Tata Sumo-விற்குள் நான்
தம்பியின் கைகளைப் பற்றியபடி
முன் இருக்கையில் அமர்ந்திருக்கிறேன்
பின் பக்கமிருந்து பாட்டியின்
அழுகுரல் கேட்கிறது
“எம் புள்ளைகள தகப்பனில்லாத
அனாதைகளாக்கிட்டு போயிட்டீங்களே”
Driver கூடப் புலம்புகிறார்
“நீங்க அழுதுட்டீங்க
என்னால உள்ளயும் சொல்ல முடியல
வெளியவும் சொல்ல முடியல சார்”
முந்தின தினம் மருத்துவமனையில்
நிகழ்ந்தவை நினைவிற்கு வருகின்றன
தங்கை Car-இல் இருந்து இறங்குகிறாள்
என்னை நோக்கித் திரும்புகிறாள்
“அண்ணா … அண்ணா …
அப்பாவுக்கு என்ன ஆச்சு அண்ணா …
அண்ணா அப்பா எங்கே அண்ணா …”
ஆறுதலுமில்லாமல் மாறுதலுமில்லாமல் நான்
“இனிமேல அப்பாவுக்கு ஒண்ணும் ஆகாது”
“அண்ணா … அண்ணா … Please … Please …
இப்படியெல்லாம் சொல்லாதீங்க அண்ணா …
ஆண்டவா அப்பாவுக்கு எதுவும் ஆகியிருக்கக் கூடாது”
“Office-லையே நேர்மையானவர்னு பேரெடுத்தவருங்க”
“எங்கே போனாலும் நடந்தே சலிப்பாரு”
சித்தியின் தேம்பல் நெஞ்சை அறுக்கிறது
“என் தம்பி கல்யாணத்துல இப்படி ஆகியிருச்சே … ஐயோ …”
‘அமைதியைக் கலைக்காமல் தத்துவத்தை போதிப்பது எப்படி என்பது எனக்குத் தெரியவில்லை’
– ஸ்பினோஸா
உயிரோசை
06.10.2008
Issue No. – 6
ooOoo
இதுவரை நீங்கள் எழுதிய கவிதைகளை எப்படி பார்க்கிறீர்கள்? இனி எப்படிப்பட்ட சவால்களை எதிர்கொள்ள விரும்புகிறீர்கள்?
இந்தக் கவிதையை விளக்கத் தேவையில்லை. இதன் சோகம் உடனடியாகப் புரிந்துவிடுகிறது. இப்படிப்பட்ட கவிதைகளே விரிந்த வாசகர் பரப்பை உருவாக்குகின்றன.
“-[மைனஸ் ஒன்]1” கவிதைத் தொகுதியில், பகடி, தத்துவம், ஹைக்கூ, விஞ்ஞானப் புனைவு, அதீதக் கற்பனை, படிமம், குறியீடு, முரண் நகை, இருண்மை என பலதரப்பட்ட வடிவங்களை முயற்சித்திருக்கிறேன். லிமரிக் மற்றும் வெண்பாக்கள் தான் அதில் இல்லை. புதிர் தன்மை கொண்ட அரூப வடிவிலான இருண்மைக் கவிதைகளின் வசீகரம் என்னை எப்போதும் கவர்ந்ததாகவே இருக்கிறது. ஆனாலும் எளிமையாக, உடனடிப் புரிதலுடன், நேரடி உரையாடல் வகையிலான கவிதைகளையே இப்போது அதிகம் எழுத விரும்புகிறேன். கவிதையின் அடுத்த கட்டம் என்பது ஒரு நீண்ட கட்டுரைக்கான விஷயம். சுயகழிவிரக்க வார்த்தைகளைத் தவிர்க்க இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.