தமிழ்ச்சிறுகதையில் இருவேறுபட்ட பரிமாணங்களை மொழிசார்ந்து பரீட்சித்துப் பார்த்தவர் எஸ்.ராமகிருஷ்ணன். எளிமைக்கு மாற்றான ஓர் இறுக்கமான கதைமொழியைக் கொண்ட கதைகளையும் எழுதினார். அதேபோன்று, ஓர் அவசர வாசிப்பில் கூட வாசகன் கதையை உட்கிரகித்துக்கொள்ளும் வகையில் மிக எளிமையான மொழிக் கதைகளையும் அவர் எழுதி இருக்கிறார். எஸ்.ரா. வின் இந்தப் படைப்பு நுட்பம் அவரது வாசகப் பரப்பை விரிவுபடுத்தியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
எஸ்.ராமகிருஷ்ணனின் சமீபத்தியச் சிறுகதைகள் மிக எளிமையான மொழியில் ஆனால் வாழ்க்கையின் ஆழமான பக்கங்களையும், ஆழமான உணர்ச்சிகளையும் பேசும் முனைப்புக் கொண்டவையாக இருக்கின்றன. அதேநேரம் கடந்த காலத்தின் கவனிக்கப்படாமல் தவறிப்போன இந்திய வாழ்க்கையின் வரலாற்றின் ஏதோ ஒரு தருணத்தை மிகைக் கற்பனைகளின்றி, மிகை அலங்காரங்களின்றி இன்றைய வாழ்க்கைக்கும் வாசக இரசனைக்கும் நெருக்கமாக நின்று பேசுகின்றன. அவரது சமீபத்திய சிறுகதையான போயர்பாக் கண்டறிந்த மழைக்கோவில் இந்த இடத்தில் நினைவிற்கு வருகிறது.
ஜேம்ஸ் ஜொய்ஸின் கதைகளில் நிகழும் நாடகீயத்தன்மையும், துயர வெளிப்பாடும் எஸ்.ரா.வின் சில கதைகளில் வெளிப்படுவது கவனிக்கத்தக்க இன்னொரு குணாம்சம். அவரது சமீபத்தியக் கதைகளில் காகிதப்பறவைகள் இலகுவில் கடந்து சென்றுவிட முடியாதபடி இந்தக் குணாதிசயத்தால் நிரம்பி நிற்கும் கதையாகத் தெரிகிறது.
மனவளர்ச்சி குன்றிய, சரளமாகப் பேச முடியாத, திக்குவாய் சிறுமியான ஸ்டெல்லாவின் மனவுலகும் வாழ்வும் பற்றிய ஓர் உயிரோட்டமான சித்திரம் அது. ஸ்டெல்லா வீட்டைவிட்டு வெளியே செல்வதில்லை. தாயற்ற பிள்ளை என்பதால் வீட்டில் சமையலுக்கு உதவியாக இருந்தாள். மனவளர்ச்சி இல்லாததால் பள்ளிக்கூடமும் செல்வதில்லை. வீடே அவளது உலகமாக இருக்கிறது. வீட்டில் வசிப்பவர்களும், வீட்டுக்கு வருபவர்களும் மட்டுமே அவளுக்கான மனிதர்கள். அதற்கு வெளியே அவளுக்கு ஒரு வாழ்க்கை இல்லை. அவளது ஒரே பொழுது போக்கு காகிதப்பறவைகள் செய்வதுதான்.
அவளது தந்தை மார்டின் ஒரு தபால்காரர். தனது பிள்ளைகள் குறித்து மிகுந்த ஏக்கம் கொண்டவர். பலசரக்குப் பொருட்கள் கொடுப்பதற்காக அவள் வீட்டுக்கு வரும் சுபாஷ்தான் அவளது நண்பன். அவளது உலகத்தைப் புரிந்துகொண்டவன். அல்லது புரிய முயற்சிப்பவன். அவன் ஸ்டெல்லா காகிதப்பறவைகள் செய்வதை அருகிலிருந்து பார்த்திருக்கிறான். அவள் செய்யும் பறவைகளை முதலில் வானத்துக்கு காட்டிவிட்டு தன்னோடு வைத்துக் கொள்வாள். சில பறவைகளைக் கொண்டு வீட்டை அலங்கரிக்கவும் செய்வாள். அவள் தன் பறவைகளை தலைமாட்டில் வைத்துக் கொண்டே உறங்கச் செல்வாள். அவள் சாப்பிடும்போது கூட தன்னோடு ஒரு காகிதப் பறவையை வைத்துக் கொண்டாள். அவளது தந்தை மார்டின் தனது வீடு பறவைகளின் ஆலயமாக மாறிவருவதை சுபாஷின் தாத்தாவிடம் சொல்வார்.
“நான் செய்த பறவைகள் என்னைப் போலவே வாய் பேசாது” என்பாள் சுபாஷிடம் தன் திக்குவாயால். இந்தத் தருணம் ஒரு துயரார்ந்த வாழ்வின் மீதான மன அதிர்வையும், கவனத்தையும் ஏற்படுத்தும் ஒரு கட்டம். ஜேம்ஸ் ஜொய்ஸ் உருவாக்கும் ஒரு துயரார்ந்த தருணத்தை ஒத்தது இது.
ஸ்டெல்லா 15 வயதாகியும் பூப்பெய்தவில்லை. ஆளும் மெலிந்து கழுத்து எலும்புகள் துருத்திக்கொண்டிருக்க சிக்குப்பிடித்த தலையோடு இருந்தாள். இந்த விவரணை வெறுமனே மனவளர்ச்சியற்ற சிறுமி குறித்த ஒரு தாழ்வான சித்திரத்தை அளிக்கக்கூடியதுதான். ஆனாலும் கதையின் மையமாக அவள் இருப்பதால் உடல்சார்ந்த இந்த விவரணம் அவளது வாழ்வு குறித்து எஸ்.ரா. ஏற்படுத்த விரும்பும் சமூக அக்கறைக்கு மிகத்தேவையான ஒன்றாக இருக்கிறது.
அதேநேரம், ஸ்டெல்லாவின் தங்கை மரியாவுக்கு அவளைப் பிடிக்காது. அவள் இந்த சமூகத்தில் எதிர்கொண்ட முதல் புறக்கணிப்பு அது. ஆனால் மரியாவோ திருடும் பழக்கம் கொண்டவளாக இருக்கிறாள். வீட்டிலும், வீட்டுக்கு வெளியிலும், பாடசாலையிலும் என அவள் சிறு சிறு திருட்டுக்களை செய்வாள். தன் பிள்ளைகள் ஏன் இப்படி என மார்டின் அடிக்கடி அழுவார்.
ஆனால் கதையில் மரியாவின் இந்தப் பழக்கக் குறையை விடவும் ஸ்டெல்லாவின் உடல்குறைதான் கனத்த துயரமாகவும், பெரும் வலியாகவும் சித்தரிக்கப்படுகிறது. ஸ்டெல்லாவை தமக்கொரு சுமை என அவளது தந்தை கருதினார். மார்டின்களுக்கு ஸ்டெல்லாக்கள் சுமையாகும் போது அது ஒரு விளிம்புநிலை மனிதனின்/ மனுஷியின் மீட்சியற்ற துயரமாக மாறுகிறது. இதிலிருந்து ஸ்டெல்லாக்களையும், மார்டின்களையும் மீட்பதற்கான ஒரு அந்தரங்க எதிர்பார்ப்பு எஸ்.ராவுக்குள் இருக்கக்கூடும். வாசகனுக்குள் அந்த உணர்வு மேலிடுவது அந்த படைப்பின் கலைக்கு அப்பாலான வெற்றியாக இருக்கிறது. காகிதப்பறவைகளில் அந்த வெற்றியை நோக்கி எஸ்.ரா. நகர்ந்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.
ஒரு கலைஞன் தன் படைப்புகளில் சிருஷ்டிக்கும் மனிதர்கள் வெறுமனே கதையோடு முடிந்துவிடுபவர்களல்ல. கதைக்கு அப்பாலும் அவர்களது வாழ்க்கை நீட்சி பெறுகிறது. விளிம்பில் இருப்பவர்களின் துயரம் என்பது சமூகத்தின் கூட்டு மனச்சாட்சி மீது எழுத்தாளன் படிய விடும் ஒரு குற்றவுணர்ச்சியாகத் திரள்கிறது. அவர்களை ஏதாவது செய்வதற்கு உந்துகிறது. அதுவே ஒரு கலைஞன் தன் படைப்பு குறித்துக் கொண்டிருக்கும் அந்தரங்கமான எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. அவன் சமூகத்திடம் முன்வைக்கும் கோரிக்கையாகவும், கையளிக்க விரும்பும் பணியாகவும் இருக்கிறது. துயர்படிந்து இழிவடையும் வாழ்க்கையை கலையாக மாற்றி வாசகனின் இரசனைக்கு முன்னால் நிறுத்துவது மட்டுமே ஒரு எழுத்தாளனின் நோக்கமாக இருக்க முடியாது. அதற்கு அப்பால் அந்த வாழ்வையும் வலியையும் தன்னில் உணரும் ஒரு சமூகவெளி குறித்த ஒரு மறைமுக எதிர்பார்ப்பு ஒரு படைப்பாளிக்கு இருக்கிறது. ஸ்டெல்லாக்களினதும், மார்டின்களினதும் கண்ணீரைத் துடைப்பதற்கு அதிலிருந்து கரங்கள் எழுந்து வரும் என்ற பிரமாண்டமான ஒரு கனவும் ஒரு படைப்பாளியை உள்ளிருந்து இயக்கும் ஒரு விசையாக இருக்கிறது.
இக்கதையினூடே எஸ். ரா. விடமும் இந்தக் கனவும் எதிர்பார்ப்பும் இருப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது. மனிதர்கள் என்ற வகையில் அவரவருக்கான கனவுகளுக்கும் இருப்புக்குமான வெளி உருவாக்கிக் கொடுக்கப்பட வேண்டும் என்பதுதான் கதையின் மய்யப் புள்ளியாகத் தெரிகிறது.
மனித வாழ்க்கையை கூர்ந்து நோக்கி அதன் வளமான பக்கங்களைக் கொண்டாடும் ஒரு படைப்பாளி அதன் துயரமான பக்கங்கள் குறித்த புகார்களையும், ஒவ்வொரு மனிதனின் இருப்புக்குமான குரலையும் தனது கதாபாத்திரங்களின் வழியே எழுப்பிக்கொண்டே இருக்கிறான். ஒவ்வொரு வாழ்வுக்குமான அர்த்தத்தையும் அதன் வழியே வாசகன் புரிந்து கொள்கிறான். ஒரு படைப்பில் கதாபாத்திரங்களின் வழியே மனிதர்களின் வெவ்வேறுபட்ட அகவுலகத்துக்குள்ளும், வித்தியாசமான கனவுகளுக்குள்ளும் சஞ்சரித்து மொத்த மனித இயல்பையும், இருப்பையும் புரிந்துகொள்வதற்கான இயலுமையை வாசகன் வளர்த்துக் கொள்கிறான். காகிதப்பறவைகளிலும் இந்த அனுபவம் நமக்குக் கிடைக்கிறது.
ஸ்டெல்லா மனவளர்ச்சி இல்லாதவள் என்பதால் புற உலகு குறித்து பெரியளவு எதிர்பார்ப்புகள் அவளிடம் இல்லை. மாறாக வாழ்க்கையை அதன் போக்கிலேயே விட்டுவிடுபவளாக இருக்கிறாள். வாழ்வு குறித்து மனிதர்களுக்கு இருக்கும் கனவுகளும், புகார்களும் அவளிடம் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு குழந்தையின் உலகுக்கும், அவளது உலகுக்குமிடையில் அவ்வளவு பெரிய இடைவெளிகள் இல்லை. எதிர்பார்ப்புகள் தரும் வலியிலிருந்தும், மன உளைச்சல்களிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்ட ஒரு சுதந்திர உணர்வுடன் இருத்தல் என்பது மட்டுமே வாழ்வு பற்றிய அவளது பிரக்ஞையாக இருக்கிறது. இது அவளுக்கு உரித்தான நிஜம் என்றால், அவளுக்கு வெளியேயான பிற மனிதர்களால் அவளுக்காக கட்டமைக்கப்படும் வாழ்வும், உலகும் முற்றிலும் வேறான நிஜத்தைச் சார்ந்ததாக இருக்கிறது. அவளது தந்தையான மார்டின், அவளது தங்கையான மரியா போன்ற அவளுக்கு மிகநெருக்கமானவர்களுக்கு ஸ்டெல்லாவின் வாழ்வு ஒரு பொருட்டாகவோ, அல்லது இயல்பானதாகவோ எடுத்துக்கொள்ள முடியாததாக, மிக மிகச் சுமையானதாக இருக்கிறது.
இந்தத் தருணம் கதையில் ஓரிடத்தில் ஸ்டெல்லா சுபாஷ் உரையாடலில் வெளிப்படுத்தப்படுகிறது-
“நிஜப்பறவைகளை உனக்குப் பிடிக்காதா“ என்று சுபாஷ் அவளிடம் கேட்டான்.
“நிஜப்பறவைகள் மனுஷங்களைப் பார்த்தா பயப்படும். சப்தம் போடும். எனக்குப் பயப்படுற பறவையைப் பிடிக்காது“ என்றாள்.
அவளது நிஜத்துக்கும்- மற்ற மனிதர்களின் நிஜத்துக்குமிடையிலான இடைவெளியை வாசகன் உணர்ந்துகொள்ளும் தருணமாக அது இருக்கிறது.
மேலும், அவள் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த மிகப் பெரும் சமூகத்தளம் அவளது அந்த சின்ன உலகுக்கும், கற்பனையான வாழ்க்கை்குமான இடத்தை ஒருபோதும் வழங்கவே இல்லை. அவளை அங்கீகரிக்கவுமில்லை. இயல்புக்கு மாற்றான எதனது இருப்பையும் சகித்துக் கொள்ள முடியாத சமூக சூழலின் அவலத்தை எஸ்.ரா. சித்தரித்துக் காட்டுகிறார்.
ஆனால், ஸ்டெல்லா புற உலகை தனக்கு ஒரு சுமையாக ஒருபோதும் எடுத்துக்கொள்வதே இல்லை. யாரும் திட்டினால் அதற்கு எதிர்வினையாக சிரிக்க மட்டுமே செய்கிறாள். அப்போதுதான் வலி தெரியாது என்கிறாள். அவளது தங்கை மரியா ஸ்டெல்லாவைக் கடுமையாக வெறுப்பவள்.
“ஸ்டெல்லா செய்யும் பறவைகளை அவளது தங்கை மரியாவிற்குப் பிடிக்கவே பிடிக்காது. பலமுறை அவற்றைக் கிழித்துப்போட்டிருக்கிறாள். ஆனால் அதற்காக ஸ்டெல்லா வருத்தம் கொண்டதில்லை. மௌனமாக அவள் முன்னால் சிலுவை குறி போட்டு கர்த்தர் உன்னைப் பார்த்துக் கொள்வார் என்பது போலக் கடந்து போய்விடுவாள்”.
இதுதான் அவள் தனக்கென உருவாக்கிக் கொண்ட ஒரு வாழ்க்கை ஒழுங்கு. சாதாரண மனிதர்களால் நெருங்க முடியாத விசித்திர உலகம் அது. சாதாரண மனிதர்களே அவள் முன்னால் தோற்றுப் போகும் ஒரு விசித்திரத் தருணம் அது.
கதையில் ஓரிடத்தில் மரியா ஸ்டெல்லாவை கத்தரிக்கோலால் கன்னத்தில் குத்திவிடுவாள். அது பாரதூரமானதாக இருந்ததால் ஒரு மாதமளவில் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற வேண்டி வந்துவிட்டது. இந்த நிகழ்வின் பின்னர், மரியா கொடைக்கானலிலுள்ள அவளது அத்தையின் வீட்டில் தங்க வைக்கப்படுகிறாள். ஆனால் ஸ்டெல்லா சிகிச்சை முடிந்து வைத்தியசாலையிலிருந்து வீட்டுக்கு வந்தத பின் யாருடனும் பேசவில்லை. மௌனமாகவே இருக்கிறாள். அவளது மௌனம் அந்த வீடு அவள் வாழ விரும்பிய வாழ்க்கைக்கும், அவளது கனவுகளுக்கும் உரிய இடமல்ல என்பதை அவள் முதன் முதலாக உணரும் தருணமாக இருக்கிறது.
தனது வாழ்வு பிறருக்கு சுமையாக இருப்பதை உணரும் தருணத்தில் ஸ்டெல்லா ஒரு புன்னகை போன்று அல்லது காற்றில் ஒரு சிலுவைக்குறி இடுவதைப் போன்று மிக எளிமையாக வீட்டிலிருந்தும் காணமல் போய்விடுகிறாள். யாராலும் அவளைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. விரிந்து பரந்த இந்தப் பெருவெளியில் எங்கே போய் ஒளிந்து கொண்டாள் என்று மார்டினால் கண்டறியவே முடியவில்லை. வீட்டிலிருந்து அவள் காணாமல் போனாலும் கதையிலிருந்து அவள் காணாமல் போவதில்லை. ஓர் அரூபச்சித்திரமாக கதையிலும் வாசக மனதிலும் நெளிந்துகொண்டிருக்கிறாள். ஒரு கனத்த துயரமாக மனதை அழுத்தத் தொடங்குகிறாள்.
அவள் காணாமல் போனதை, “ஒரு மனிதன் வீட்டிலிருந்து விடுபட்டுப் போய்விட்டால் உலகில் அவனைக் கண்டறிவது எளிதானதில்லை“. என்று எழுதுகிறார் எஸ்.ராமகிருஷ்ணன். எஸ். ரா. தன் கதையின் வழியே கண்டடைந்திருக்கும் இந்தப் புள்ளி மிக எளிமையானதல்ல. விளிம்பு வாழ்க்கை குறித்த மிக ஆழமான தத்துவம் அது. தன் வீடு தனக்கான உலகம் அல்ல என மனிதர்கள் உணரும் போது அவர்கள் தங்களுக்கான இன்னொரு உலகை நோக்கி சென்றுவிடுகின்றனர். ஸ்டெல்லாவும் அத்தகையதொரு உலகை நோக்கியே சென்றிருக்கிறாள். ஆனால் அந்த உலகம் எங்கே இருக்கிறது? என்பதுதான் வாசகனை உறுத்தும் கேள்வியாக எழுகிறது.
ஆனால் வீடு இப்போது மரியாவைக் கொண்டு ஸ்டெல்லாவின் வெற்றிடத்தை நிரப்பிக் கொள்கிறது. மரியாவும் திருந்தி தனக்குள் ஸ்டெல்லா இல்லாத வெற்றிடத்தை ஸ்டெல்லாவைப் போன்றே தன்னைப் பாவித்துக் கொண்டு காகிதப்பறவைகள் செய்வதன் மூலம் கடக்க விரும்புகிறாள்.
ஆனாலும் எத்தகையதொரு வாழ்வையும், எத்தகையதொரு மனிதனையும் தன்னுடையதாக உணரவும், நினைத்து ஏங்கவும் என இன்னும் மனிதர்கள் இருந்துகொண்டே இருக்கிறார்கள் என்பதும் எஸ்.ரா. வின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது. அவரது இந்த நம்பிக்கையின் பிரதிநிதியாக சுபாஷ் வருகிறான். கதையின் முடிவில் வரும் விவரணம் இந்த நம்பிக்கையை அழுத்தமாகச் சொல்கிறது-
“சில நாட்கள் சுபாஷ் பாலத்தின் அருகே சைக்கிளை நிறுத்திவிட்டு தூரத்து தேவாலயத்தைப் பார்த்தபடியே இருப்பான்.
அந்திக் கருக்கலில் தனியே செல்லும் கொக்கினைக் காணும் போது ஸ்டெல்லாவை நினைத்துக் கொள்வான்.
அவளது சிரித்த முகம் மனதில் தோன்றி மறையும் போது அவனை அறியாமல் கண்கள் கலங்கவே செய்யும்“
000