சார்லி காஃப்மான்- உரை சார்ந்து சில குறுங்குறிப்புகள்

பிரசன்னா கிருஷ்ணன் 

முன் குறிப்பு – இக்கட்டுரை சார்லி காஃமான் 30 செப்டெம்பர் 2011 அன்று நிகழ்த்திய உரையினால் உந்தப்பட்டு அதிலிருந்து மேற்கோள்கள் எடுக்கப்பட்டு அதை என்னுள் விவாதித்து எனக்கு தோன்றியவற்றை தங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற அகத் தூண்டுதலினால் எழுதப்பட்டது. https://www.youtube.com/watch?v=eRfXcWT_oFs&t=337s

கட்டுரையின் வடிவம் பெரும்பாலும் கீழ் கண்டவாறு அமைந்திருக்கும்.

> சார்லியின் உரையிலிருந்து ஒரு வாக்கியம் அல்லது சொற்றொடர் எடுக்கப்பட்டிருக்கும்.

> அதை முன்வைத்து என்னுடைய எண்ணங்களும் வாழ்வனுபவங்களும் கேள்விகளும் அகத்தேடல் சார்ந்த மன நிலையும் விரிவாக விவாதிக்கப் பட்டிருக்கும்.

> இதன் மூலம் சார்லியின் உளத்தில் அவர் கூறிய கருத்து எவ்வாறு உதித்திருக்கலாம் என்பதாக முடியும்.

> இங்கு குறிப்பிடப்படும் அநேக கருத்துக்களும் புதிதாக படைப்பியக்க செயல்பாடுகளில் ஈடுபடத் தொடங்கும் அல்லது இன்னும் கலை என்னும் உச்சத்தை அடையாத குழுவிற்கு மட்டுமே. ஒரு கலையில் உச்சத்தை அடைந்த மாஸ்டர்கள் இக்கட்டுரையை வாசித்து குறும்புன்னகையுடன் கடந்து செல்லலாம். 

> இக்கட்டுரை இலக்கியம், நாடகம் மற்றும் திரை துறையை சார்ந்த படைப்பாளிகளை மட்டுமே முன்வைத்து எழுதப்பட்டது.

திரைக்கதை ஆசிரியர்களின் இடம்மேற்கிலும் இந்தியாவிலும்சிறிய ஒப்பீடு

சார்லி காஃமான். அனைவருக்கும் தெரிந்த பெயர் என்று கூறிவிட முடியாது. Being John Malkovich, Eternal Sunshine of spotless mind, Adaptation போன்ற பல படங்களை எழுதியவர். மூன்று படங்களை எழுதி இயக்கியவர். நம் நாட்டில் நமக்கு திரைப்படத்தில் முதலில் தெரிவது கதாநாயகனை. அவர் உயர்ந்த நட்சத்திரமாக இருப்பின் படத்தின் இயக்குனர் நம் கண்ணை விட்டு மறைந்து விடுவார். அடுத்தப் படியாக இயக்குனர். இந்திய சினிமாக்களில் மிகச் சில படைப்புகளில் மட்டுமே திரைக்கதை ஆசிரியர்களும் இயக்குனரும் வேறு வேறாக அமைகின்றனர். கூடுமானவரை இயக்குனரே திரைக்கதை ஆசிரியராகவும்  இருக்கின்றனர்.  ஓர் இயக்குனரின் பெயர் சாதாரண ஒரு சினிமா பார்வையாளனுக்கு தெரிய வேண்டுமென்றால் அவர் நிறைய வெற்றிப் படங்களை கொடுத்திருக்க வேண்டும். தொடர்ந்து ஏதோ ஒன்றை புதுமையாக செய்து கொண்டிருக்க வேண்டும். தொழில் நுட்ப ரீதியாகவும், கதை சொல்லல் வழியாகவும். இந்த நெருக்கடிகளுக்கு இடையே ஒரு தனி நபர் சினிமா துறையில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள எடுக்கும் போராட்டம் சொல்லில் அடங்கா. பொது மக்களின் நினைவில் தங்கிப்போகும் நேரம் வரும் வரை அது போன்ற ஒரு தொடர்ந்த முயற்சியை தற்போதைய இயக்குனர்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. பெரும்பாலும் வணிகப் பட இயக்குனர்களுக்கு இது பொருந்தும். பெருநகரங்களில் இந்த நிலை கடந்த சில ஆண்டுகளில் சற்றே வளர்ந்து சினிமா மீதான கவனம் அதிகம் குவிந்து பெரும்பாலானோர் கதையின் இயக்குனர், ஒளிப்பதிவாளர் என்று கொண்டாடத் தொடங்கி இருக்கின்றனர். ஆனால் இன்றும் ஒரு திரை கதை ஆசிரியரை யாரேனும் நாம் தூக்கி வைத்து கொண்டாடி இருக்கிறோமா என்று நினைவில் இல்லை. அதாவது வெறும் திரை கதை ஆசிரியாராகவே அறியப்பட்ட ஒருவரை வெளிச்சத்துக்கு நாம் கொண்டு வந்து அனைவரிடமும் அவரை சென்று சேர்த்திருக்கிறோமா என்ற கேள்வி என்னுள் இருந்து கொண்டிருந்தது.

சார்லியின் அக உலகம்

சார்லி காஃமான் திரை கதை மட்டுமே எழுதிய காலங்களிலிருந்தே அறியப்பட்டவர். கதாபாத்திரங்களின் சுய தேடலின் வழியாக ஆழமான கதையை சொல்ல முனைந்தவர். Hollywood இல் இதற்கு முன்னும் நிறைய திரைகதை ஆசிரியர்கள் பெரும் புகழையும் செல்வாக்கையும் அடைந்திருக்கின்றனர். நம்மூரில் இப்படி நடக்க சாத்தியம் உண்டா என்றறியேன். இக்கட்டுரையில் பெயர்களை கொட்டித்தள்ளுவதில் எனக்கு உடன்பாடில்லை என்ற போதும் ஒரு சில உதாரணங்களை அங்கங்கே தூவ வேண்டியுள்ளது. தமிழில் பாலச்சந்தர் இயக்கிய நிறைய படங்களில் அனந்துவின் பங்களிப்பு அதிகம் என்று கேள்வி பட்டிருக்கிறேன். K.B. யின் பல கதைகளும் திரைக்கதைகளும் அனந்துவால் எழுதப்பட்டது என்று அறிகிறேன். அப்படியான ஒருவருக்கு கடந்த வருடம் தான் Wikipedia page உருவாக்கப்பட்டிருக்கிறது.

சார்லி காஃமானின் படங்கள் அனைத்திலும் மைய சரடாக ஓரிழை ஓடிக்கொண்டே இருக்கும். தன்னைத்  தேடுதல், அதனூடே தன்னை முன்வைத்தல். அப்பட்டமாக. எவ்வித பயமுமின்றி. அடையாளமின்றி ஒரு மனிதன் இருக்கலாகாது. அந்த அடையாளத் தேடலில் தன்னை இழந்து உருமாற்றிக்கொள்ளும் பலர் சமூகத்தின் முன் பெரும் பெரும் புகழ் அடைந்தவர்களாக இருக்கிறார்கள். ஆனால், தன்னுள் தன்னை இழந்தவர்களாக அவர்கள் உருமாறும் போக்கை அவர்கள் உணர்வதில்லை. அந்த தன்னுணர்வு மேலோங்கி எழுந்து நிற்கும் போது தங்களை “அப்படி எல்லாம் எதுவும் இல்லை. நான் எனக்கு உண்மையாக தான் நடந்து கொண்டிருக்கிறேன்..” என்று சுயசமாதானம் அடைவார்கள். போலியான அச்சமநிலை அவர்களை பாதுகாப்பான கூண்டுக்குள் அடைத்து வைத்திருக்கிறது. தனிமை அவர்களை முற்றிலும் துன்புறுத்தும் ஒன்றாக மாறும். எப்போதும் மனிதர்கள் சூழ தன் அடையாளத்தை பிறரிடம் சரி பார்த்துக்கொள்ள துடித்துக்கொண்டிருப்பர். கலையின் மூலம் புகழையோ, சமூக அங்கீகாரத்தையோ, பணத்தையோ அடையும் ஓர் உயர்ந்த தொழில் நுட்ப தேர்ச்சிப் பெற்ற கலைஞனின் உளவியல் மாறிப்போவதன் விந்தை நாம் காணாதது அல்ல. வரலாற்றில் இது போன்ற எண்ணற்றக் கலைஞர்களை நாம் கண்டுவிட்டோம்.

சார்லி காஃமான் இதற்கு நேர் எதிராக இயங்குகிறார் என்றே தோன்றுகிறது. சுய தேடலில் எப்போதுமே மூழ்கி இருப்பவராகவே அவரை எண்ண முடிகிறது. இவருடைய கதாபாத்திரங்கள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் தங்களை உள்நோக்கி கண்காணித்துக் கொண்டே இருக்கிறார்கள். தங்களின் சரி தவறை அலசிக்கொண்டிருக்கிறார்கள். செயல்களின் தவறை உணரும்போதும் “இது தான் நான்” என்று உரைத்துக் தங்களுக்குள்ளாக கூறிக்கொண்டே இருக்கிறார்கள்.

ஊரடங்கு காலத்தின் போது தொடங்கிய இணைய வழி வகுப்புகள் பரவலாகி பல சிறந்த இயக்குனர்களின் நேர்காணல்கள், அவர்களுடைய கற்றல் முறைகள், பாடங்கள், சறுக்கல்கள் என்று இக்காலத்தில் மலிவாக கிடைக்கின்றன. சார்லியின் இந்த பழைய உரை இணையத்தில் சினிமா பற்றி கற்றுக்கொண்டிருக்கும் அல்லது சினிமாவை முதன்மையாக, கலையூடகமாக மட்டுமே காணும் அனைவருக்கும் உதவும் என்று நினைக்கிறேன்.

இந்த உரையில் சம்பிரதாயமான திரைக்கதை பற்றியே பேச சொல்லி சார்லியை அழைத்திருக்கிறார்கள். ஆனால் இங்கேயும் தன்னை பகுத்துக் கூறு போட்டுக் கொண்டே தான் இருக்கிறார் சார்லி. திரைக்கதை பற்றிய ஒருரையில் இது போன்ற தன்னிச்சையான வித்தியாசமான உரைகள் மிக முக்கியம் என்றே நினைக்கிறேன். வெறும் திரைக்கதைக்கான உரையாக மட்டுமல்லாமல் அனைத்து கலைஞர்களுக்கும் உதவும் படியாக இவ்வுரை அமைய பெற்றிருக்கிறது.

  1. Writer – A label?

தற்போது உரைக்கு வருவோம். தொடங்கும் போதே

“I even feel odd calling myself a writer”

என்று கூறுகிறார். இது போன்ற சந்தேகம் தன் கலையில் இன்னும் சிகரத்தை அடைய முடியாத அல்லது இனிமேல் தான் அடைய வேண்டும் என்ற அதிருப்தி கொண்டிருக்கும் எவரொருவரும் உணரும் மன நிலையே. எழுத்துலகில் இதற்கு நேரெதிரான மன நிலையை அனைவரிடமும் கண்டிருக்கிறேன். குறைந்த ஆக்கங்களை உருவாக்கிய ஒருவன் கூட தன்னை “எழுத்தாளன்” என்று கர்வத்துடன் எண்ணிக்கொள்கிறான். அவனுடைய படைப்புகள் ஒன்றும் பெரிதும் பேசும் படியாக இல்லாவிட்டாலும் அப்படி அவன் தன்னை எண்ணிக்கொள்வதில் அவனுடைய அகங்காரம் குளிர்ந்து போகக் கூடும். இது போன்ற மிதமிஞ்சிய முதிர்ச்சியற்ற ஆணவ எண்ணங்கள் அரைகுறையாக கலையின் நுட்பங்களை தெரிந்து வைத்துக்கொண்டிருக்கும் ஆட்களிடமிருந்தே வருகின்றன என்று எண்ணுகிறேன். ஒரு தேர்ந்த கலைஞன் இந்த அகங்கார வேட்கையிலுருந்து விலகி தன்னை வேறொரு தளத்திற்கு தானே இட்டுச்செல்கிறான்.

“I write screenplays for a living but it is not what I am. When I was young I really wanted that label…. “

“I am a painter but I work in a restaurant. I am an actor and I work in an office..”

என்று தொடர்கிறார். ஒருவன் தன்னை தகவல் தொழில்நுட்ப துட்ப துறையில் வேலை பார்ப்பவன் என்றோ, வங்கி ஊழியன் என்றோ, சமூக சேவகன் என்றோ, பத்திரிகை ஆசிரியன் என்றோ…. கூறிக்கொள்ள முடியும். சமூகத்தில் இன்னதாக அறியப்பட்டுக்கொண்டிருக்கிறோம். அதுவே நம் தொழில். இந்த வேலைகளின் மூலம் பணம் சம்பாதித்து அதை செலவு செய்து ஒரு சமூகத்தின் பொருளாதார சுழற்சியில் நாம் பங்கு வகிக்கிறோம். கலையின் மீது ஆர்வம் கொண்டு அதை முழு நேரமாக செய்யத்துணியும் ஒருவன் இது போன்று கூற முடியுமா? பெருநகரங்களில் பலர் அரைத்த மாவை அரைக்கும் வேலையை செய்துகொண்டிருந்தாலும் வார இறுதிகளில் சிறு வயதிலிருந்தோ அல்லது வாழ்வின் எதிர்பாரா சந்தர்ப்பதினாலோ தாங்கள் முழுதாக ஈர்க்கப்பட்ட ஒரு கலை வடிவத்தை தேர்ந்தெடுத்து கொண்டு அதில் முன்னேற முனைகிறார்கள். ஆனால், பெங்களூரில் உள்ள பெருவாரியான மக்கள் இது போன்ற வார இறுதி கலை சேவையை எல்லாம் அலுப்பு நிறைந்திருக்கும் வாழ்வை ‘தள்ளுவதற்காகவோ’, நிறைய மக்களை அறிவதற்காகவோ, புகழை அடைவதற்காகவோ முனைந்து செய்கின்றனர் என்றே நான் கணித்திருக்கிறேன். சார்லி இங்கு குறிப்பிடுவது மிக உக்கிரமான கேள்வியாகவே தோன்றுகிறது. பணம் என்ற ஒன்றை பெற்றுக்கொண்டு நாம் செய்யும் செயல்கள் ஆத்மார்த்தமாக அமைய வாய்ப்புண்டா? உலகில் பல கலைஞர்கள் தங்களுடைய பொருளாதார நிலை தாங்கள் உருவாக்கும் கலை படைப்புகளை சாராது இருக்க வேண்டும் என்று முனைப்புடன் இருந்திருப்பதை நான் அறிவேன். ஏதோ ஒரு வகையில் நாம் வாழ்வதற்காக பொருள் ஈட்டும் வேலையை நாம் அலுப்பாகவே எண்ணத் தொடங்குகிறோம்.

எனக்கு தெறிந்த பலர் ஆர்வ கோளாறினால் திரைதுறைக்கோ, சமூக சேவைக்கோ சென்று அதில் எண்ணற்ற சிக்கல்களை அடைந்து தோல்விகள் பலவற்றை சந்தித்து, சுய கேள்விகளின் நச்சரிப்புகளாலும், தங்கள் முடிவின் மீதான சந்தேகத்தாலும், கலைச்செயல் என்று நாம் நம்பி வந்தது இங்கில்லை என்று தெளிந்து மீண்டும் பழைய தொழிலுக்கே திரும்புபவர்களை காண நேர்கிறது. அதே சமயம், வெளிச்சத்திற்கு வந்த பலரும் நம் கண் முன் இருக்கின்றனர். அவர்களும் தங்களின் வாழ்வில் ஏதோ ஒரு புள்ளியில் ஓர் அதிரடி முடிவிற்கு தள்ளப்பட்டு அனைத்தையும் துறந்துவிட்டு கலை சம்பந்தப்பட்ட வேலையில் நுழைந்து அதில் தேர்ச்சியும் பெற்று வென்றிருக்கின்றனர். ஆனால், அனைவருக்கும் அது சாத்தியப்படாததற்கு முக்கிய காரணமென நான் ஒன்றை எண்ணுகிறேன். ஒரு வேலையை நாம் வாழ்வதற்கான தொழிலாக எண்ணுகிறோமா அல்லது நம் மன நிறைவிற்காகவா என்று நம்முள் ஆராய்ந்து முடிவெடுக்க இயலாததால் நிகழ்வது என்று கருதுகிறேன். உதாரணமாக, ஒருவன் நாடக நடிகனாக ஆக வேண்டுமென்று முனைகிறான். அது கொடுக்கும் கண நேர உத்வேகத்துக்கும், உணர்வெழுச்சிக்கும் ஆட்பட்டு அவன் அதில் முழுதாக குதிக்க முடிவெடுக்கிறான். அவன் பரிசீலனை செய்ய வேண்டிய முக்கியமான ஒன்று, அதை தினந்தோறும் செய்து அதில் பணம் சம்பாதிக்க தயாரா என்பது. வாழ்வதற்கு, பொருளீட்டும் தொழிலாக அதை செய்ய மனம் உந்தப்பட்டுள்ளதா என்று அறிய வேண்டும். வெறும் உணர்வெழுச்சி மட்டுமே அடைந்து தான் ஒரு கலைஞனாக அறியப்பட வேண்டும் என்ற உந்துதலினால் ஒருவன் உள்ளே நுழைந்தால் அதனால் மிஞ்சுவதென்பது பெரும்பாலும் தோல்வி மட்டுமே. இறுதியில் தான் நம்பி வந்த கலை தன்னை ஏமாற்றிவிட்டதாகவோ, தன் எதிர் பார்ப்புக்கு ஏற்ப இந்த கலை சம்பந்தப்பட்ட வேலைகள் இல்லை என்றெல்லாம் நம்பத் தொடங்குவான். நாட்கள் கடக்கையில் அக்கலையை வெறுக்கும் அளவுக்கு கூட செல்வதுண்டு. ஒரு புள்ளியில், தான் இந்த கலைக்கு ஏற்றவன் அல்ல என்ற மன நிலைக்கு சென்று அகங்கார சீண்டல்களும் நடக்க வாய்யப்புண்டு.

சார்லி இங்கு குறிப்பிடுவதும் அதே போன்ற ஒன்று தானோ என்றெனக்கு தோன்றுவதுண்டு. தகவல் தொழில் நுட்ப துறையில் வேலை பார்த்துக்கொண்டு வார இறுதியில் வேறொரு படைப்பு செயலை செய்யும் ஒவ்வொருவனும் அந்த படைப்பு செயலை முன் வைத்தே தன் அடையாளத்தை மற்றவரிடம் நிறுவுவான். சார்லி தன்னை Screenplay writer என்று கூறிக்கொள்ள சந்தேகம் கொள்கிறார். ஆம், அது தான் அவருக்கு உணவு, தங்குவதற்கு இடம், பணம் என்றனைத்தும் கொடுத்திருக்கிறது. அதனாலேயே Screenplay writing என்பது அவருக்கு தொழில்முறையான வேலையாக மாறிப்போனது.

  1. In the mood for “Art”

“I think it was Thomas Mann who said that a writer is someone for whom the writing is harder than it is for other people”

“If you take it seriously, its a struggle”

“I sit at my desk and don’t know what to do…”

இது ஏற்கனவே பல்வேறு விதமாக பல புத்தகங்களில் ஆராயப் பட்டது தான். பெரும்படைப்பாளிகள் தங்களுக்கான கலையை அதை உருவாக்கும் தொழில் தேர்ச்சியை அடைந்து சொகுசாக உள்ளனர். அவர்களுக்கு இது போன்ற வாக்கியங்களை கடந்த மனநிலை வாய்த்திருக்கலாம். வளர்ந்து வரும் அல்லது இன்னும் கலைப் பாதையில் தனக்கான வழியை தேடிக்கொண்டிருக்கும் அனைத்து படைப்பாளிகளுக்கும் கீழ் வரும் சிந்தனைகள் ஒத்திசைந்து போகும் என்று நம்புகிறேன்.  கலை என்ற ஒன்றை அப்படியெல்லாம் வலிந்து உருவாக்கிவிட முடியுமா? மாபெரும் கலையை இயற்றிய ஒருவரை கேட்டால் “அது எனக்குள்ளே அதுவா நிகழ்ந்துடுச்சு” என்றே கூறுவார். விளக்கமுடியாத ஒரு துளி உந்துதல் அவர்களை பித்துப் பிடித்தார் போல ஆக்கி அந்த ஆக்கத்தை படைக்க வைத்துவிடும் மர்மத்தை பலரும் பல்வேறு விதமாக உணர்வர். சிலருக்கு அந்த உந்து சக்தியை கடவுள் கொடுத்த வரம் என்று கூறுவதுண்டு. உச்ச நிலையில் எழுதபட்ட எந்த ஆக்கமும் மறுமுறை அதே எழுத்தாளரால் எழுதி விட முடியாது என்றே தோன்றுகிறது. ஆக, இங்கே ஒரு முக்கியமான கேள்வியும் எஞ்சி நிற்கிறது. இதுவும் படைப்பியக்க சூழலில் வெகுவாக விவாதிக்கப்பட்ட ஒன்று தான். ஓர் எழுத்தாளன் அல்லது கலைஞன் என்று தன்னை உணர்பவன் அக்கலைக்கான தருணம் வரும் வரை காத்திருக்க வேண்டுமா? அல்லது வலிந்து தினமும் ஏதேனும் ஒன்றை எழுதிக்கொண்டோ, அந்த எழுத்து பயிற்சியின் மூலம் தன்னை மேம்படுத்திக்கொள்ள வேண்டுமா? Charles Bukowski போன்ற கற்பனாவாத கவிஞர்கள் ஒட்டுமொத்த எழுத்து வேலையையே புனிதமாக்கி கொண்டாடுகின்றனர். “Don’t do it ” அவரது கல்லறையில் பதிக்கப்பட்டிருக்கும் மிகவும் பிரபலமான வாசகங்களுள் ஒன்று. இன்னொரு புறம் தன்னை முழு நேர எழுத்தாளனாகவோ படைப்பியக்கவாதியாகவோ உணர்பவன் தினமும் எழுதுகிறான். தருணம் வரும் வரை காத்திருத்தல் என்பது அவனுக்கு ஒவ்வாத ஒன்று. இன்னும் குறிப்பிட்டு சொல்லப் போனால், எழுதுவதை தவிர அவனுக்கு செய்ய வேறொன்றும் இல்லை என்றே கூறலாம். வாழ்வின் மொண்ணை பொழுதுகளை வெட்டி தள்ள எதையோ கிறுக்கிக்கொண்டிருத்தல் மட்டுமே அவனுக்கு உகந்ததாக இருக்கிறது.

இவ்விருவேறு சிந்தனைகளுமே முக்கியம் என்று கருதுகிறேன். வரலாற்றில் மிகவும் குறைந்தவற்றை எழுதி மிகப்பெரிய புகழும் செல்வாக்கும் பெற்றவர்கள் இருக்கிறார்கள். தமிழில் மௌனியை சொல்லலாம். ஆனால், இந்த சிந்தனை தளம் அண்மை காலங்களில் உண்டாகியிருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் வாழ்க்கை முறை மாறுதலின் காரணமாக செறிவான ஒன்றை படைக்க உதவுமா என்பது முக்கியமான வினா. பலர் இந்த கலை தருணம் அல்லது “மூட்” அல்லது “மைண்டஸட்” வரும் வரை காத்திருப்பர். வந்த பின் சிறிது நேரத்திற்குள்ளே அவர்களின் மொழி அவர்களை கைவிட்டுவிடும். ஏனென்றால் தொடர்ந்த எழுத்து பயிற்சி இல்லாததனால் உண்டாகும் வெற்றிடம் எளிதில் மனதில் குடிபுகும். இதற்கு நேர்மாறாக, தினமும் எதையாவது வலிந்து படைப்பவர்கள். இவர்கள் தொடர்ந்து பத்திரிக்கைகாகவோ அல்லது காலக்கெடுவுக்குள் எழுதும் எழுத்தாளர்களாகவோ இருப்பார்கள் என்று கருதுகிறேன். தொடர்ந்து எழுதி தன் மீது வெளிச்சம் பட காத்திருப்பவர்கள் சிலரையும் பார்த்திருக்கிறேன். சார்லி முன்னர் இவ்வுரையில் கூறியது போல் “I needed that label” என்பது காரணமாக இருக்கலாம். ஆனால், என்னுடைய ஆசான்கள் அனைவரும் தொடர்ந்து எழுதக்கூடியவர்களாகவே இருக்கின்றனர். இடைவெளி அவ்வப்போது உருவானாலும் எழுத்தின் தீவிரம் குறையாமல் எழுதுகின்றனர். “எழுத்தின் ரகசியத்தை எழுதி தான் தெரிந்துகொள்ள வேண்டும்” என்பது பல ஆசான்கள் நமக்குச் சொன்ன ரகசிய மந்திரம்.

என்னை பொறுத்தவரையில் வலிந்து உருவாக்கப்படும் எந்தவொரு படைப்புக்கும் காலத்தில் இடமில்லாமல் போகும். கலைஞனாக ஆகவேண்டும் என்ற தன்முனைப்போடு மட்டுமே இயங்குபவர்கள் அனைவரும் ஒரு புள்ளியில் திரும்பி செல்கின்றனர் என்றே நினைக்கிறேன். அப்படியானவர்களின் மனதில் செயற்கை மொழியும் உணர்வுகளும் சிரமம் ஏதுமின்றி அமைந்துவிடுகிறது. படைப்பு செயற்ப்பாட்டை புரிந்துக்கொள்ளவே பெரும்பாலான கலைஞர்கள் முட்டி மோதுகின்றனர். அனுதினமும் தங்களுக்குள் உந்துசக்தி விளைவிக்கும் ஒரு மாயையை தேடி கொண்டிருக்கின்றனர். அளவில் எழுதி குவித்த பெரும்பாலான எழுத்தாளர்களின் ஒரு சில படைப்புகளே பெரிதாக பேசப்படுகின்றன. மற்றவைகள் பின் தள்ளப்படுகிறது. செயலூக்கம் கொண்ட படைப்பு நிலை அலுப்பு தட்டாது தினமும் அரங்கேற ஒவ்வொரு எழுத்தாளரும் வெவ்வேறு முறையை பின்பற்றுகின்றனர். சிலர் பயணம் மேற்கொள்கின்றனர். சிலர் உறவுகளை அணுகுகின்றனர். சிலர் வலிந்து சிக்கல்களை உருவாக்கிக்கொண்டு அதிலேயே உழன்று அதன் மூலம் கிடைக்கும் பதட்டத்தை முதலீடாக வைத்து படைப்பை உருவாக்குகின்றனர். இது தான் சிறந்த வழி என்று எந்த ஆசானாலும் கூறிவிட முடியாது. ஆன்மீக பாதை போல், குரு காட்டும் வழியை குறிப்பிட்ட தூரம் கடந்து, பின் நமக்கான பாதையை அல்லது சமன்பாட்டை தெரிந்துகொள்வதே மிகச்சிறந்த வழி என்று நினைக்கிறேன்.

  1. Make someone to feel less lonely

“I think I wanted to do something true and I wanted to do something helpful”

“I also struggle with wanting you to like me..”

“I know you want to be entertained and so for me to calculatedly not entertain you in order to be true”

முரணான சிந்தனைகள் படைப்பாளிக்கு வெகுவாக வருவது என்பது வழமை. சார்லி இங்கு கூறுவது அவருடைய உரையை வைத்து தான் என்றாலும் அனைத்து படைப்புகளுக்கும் இது தகும் என்றே கருதுகிறேன். ஒன்றை இயற்றும் போது அது எந்தளவுக்கு நமக்குள் உள்வாங்கப்பட்டிருக்கிறது என்பதை தாண்டி அதை நாம் முழுதாக நேர்மையுணர்வுடன் படைத்திருக்கிறோமா என்று கேட்டுக்கொள்ள வேண்டும். “Be honest to your creation ” என்பது நேற்று எழுத வந்த துக்கடா எழுத்தாளன் கூட எளிதில் சொல்லி விட முடியும். ஆனால், அப்படி இருக்க எளிதில் மானுட மனம் சம்மதிக்காதென்பது நாம் நம்ப மறுக்கும் ஓர் ஆழ்மன நிழலுண்மை. ஒன்றை முழு விசையுடன் படைக்கும் முன்பே நம் மனக்கண் முன் அதை வாசிக்கப்போகும் நமது நண்பர்கள் அல்லது வாசகர்கள் அல்லது பதிப்பாளர்கள் நிரையாக வந்து செல்வர். நம் நேர்மை இது போன்ற கவனச்சிதறலுக்கு அப்பால் சென்று நிலைத்து நிற்கும் என்றால் நல்லதொரு படைப்பு கைகூடி வருமென்று நினைக்கிறேன்.  சுருக்கிக் கூறுவதென்றால், ஒன்றை படைக்க இயல்பான உந்துதல் பெற்று, அப்படைப்பை நுகர்பவர்களை மனதில் வைத்துக்கொண்டு படைப்பை சற்றே வளைந்து கொடுக்க முனைந்து, பின் அச்சிந்தனைக்கு எதிராக சென்று தன் நேர்மையை நிறுவ முயன்று… மொத்தத்தில் மொத்த படைப்பும் அலங்கோலமாக போகுமென்பது இங்கு புரிந்துகொள்ள பட வேண்டும்.

“Say who you are. Really say it in your life and in your work..”

“Tell someone out there who is lost, someone not yet born, someone who wont be born for 500 years”

“Your writing will be a record of your time you can’t help but be. More importantly if you’re honest about who you’re, you will help that person be less lonely in their world because that person will recognize him/herself in you and that will give them hope….”

“….give that to the world rather than selling something to the world. Don’t allow yourself to be tricked into thinking that the way things are, is the way the world must work and that in the end selling is what everyone must do, try not to..”

பெருகி வரும் பெரும்பாலான குப்பையான படைப்புகளை சார்லி மிகவும் அடங்கிய தொனியுடன் “don’t try to sell things..” என்கிறார். சமீப காலங்களில் Netflix, Prime, Youtube போன்ற இணைய புரட்சியில் விளைந்த தளங்களில் கொட்டிக் குவிந்து கொண்டே இருக்கும் அனைத்தும் நுகர்வு பொருட்களாக மாறி இருப்பதாகவே எனக்கு படுகிறது. சந்தைக்கு ஏற்ற நுகர்வு பொருளை தயாரிக்க எழுத்தாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் பெருகிக்கொண்டிருக்கின்றனர். மாநகர மக்களின் ரசனைக்கு ஏற்ப ஒரு சமன்பாட்டை கண்டுபிடித்து கதை மற்றும் திரைக்கதை அமைத்து எந்தவிதத்திலும் அலுப்பு மீட்டாத ஒரு படைப்பை தர முயல்கின்றனர். சமீபத்தில் (என் காதுக்கு எட்டியவரை) இது போன்ற பெரு நிறுவனங்கள் ஈடுபடும் போது அவர்களுடைய ஆலோசனைகளும் படைப்பின் உள்ளடக்கத்தில் இடம்பெறுவதாக உள்ளது. இது எந்த விதத்திலும் தனி மனித கலைத்திறனை அழிக்கக்கூடிய ஒன்றே. சார்லி அவரது உரையில் அப்போதிருந்த பெரும் நிறுவனங்களின் தலையீட்டால் உருவாகி வந்த குப்பையான ஆக்கங்களை பற்றிக் கூறுகிறார். இன்று இந்த கருத்துகள் அனைத்தும் மிகவும் பொருந்திப்போவதாக உள்ளது.

ஒட்டுமொத்தமாக ஒரு படைப்பு புறவயமாக “எதற்காக படைக்கப்பட வேண்டும்?”என்பதற்கு சார்லியின் சிந்தனை முறை அளிக்கும் பதில் அல்லது விளக்கம் பலருக்கு தெரிந்ததே. பணத்திற்காகவோ, புகழுக்காகவோ, உடனடி கவன குவிப்புக்காகவோ, மங்கைகளின் காதல்களுக்காகவோ அல்லாமல் செயல்படும் கலைஞனால் மட்டுமே இந்த சிந்தனை முதிர்ச்சியை அடைய முடியும் என்று நினைக்கிறேன். நாம் இயற்றுவதே ஒரு கருத்தை அல்லது சிந்தனையை அல்லது பரிதவிப்பை அல்லது கோபத்தை அல்லது வேறு ஏதோ ஒரு விவரிக்க முடியா உணர்வை பகிர்வதற்காக மட்டுமே. அது வெறும் தற்போதைய காலத்தின் வாசகர்களுக்காக அல்லது பார்வையாளர்களுக்காக மட்டுமல்லாமல் இனிமேல் பிறக்கோப்போகும் ஒரு மனிதனையும் பாதிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். படைப்பின் தரம் அதன் நித்தியத்துவத்தில் உள்ளது என்பதே சார்லி கூறியிருப்பதன் சுருக்கம் என்று நான் கருதுகிறேன். இது மேற்பார்வைக்கு எளிய கருத்தாக தோன்றினாலும் அப்படியானது அல்ல என்றே தோன்றுகிறது. புதிதாக படைக்க முனைந்து வரும் ஒருவன் காலத்தை தாண்டி நிற்கும் படைப்புகளை உருவாக்க உந்தப்படுவான். தன்னுடைய படைப்பை அந்த நித்தியத்துவத்துக்கான ஒன்றாக மாற்றுவான். அவனுடைய நோக்கம் இங்கே அடிப்பட்டு போகிறது. வெறும் வார்த்தையளவில் மட்டுமே இதை புரிந்து வைத்துக்கொண்டிருக்கும் எவரொருவரும் தங்களுடைய படைப்பு பெரிதும் பேசப்பட வேண்டும் என்று நினைப்பர்.

சார்லி இந்த இடத்தில் இந்த சிந்தனையை மிகவும் மாறுப்பட்ட ஒன்றாக அமைக்கிறார். முக்கியமாக படைப்பின் நோக்கத்தை கருதி. ‘தனித்திருப்பவனுக்காக உன் படைப்பைக் கொடு. உன் படைப்பின் மூலமாக உன்னை அறிய செய். இவ்வகையில் உனக்கும் அந்த கண்ணுக்கு தெரியாத அல்லது இன்னும் பிறக்கவே பிறக்காத வாசகனுக்குமான உரையாடலின் தளமாக உன் படைப்பு அமையட்டும்’. இதை இன்னும் புரிந்துகொள்ளும் வகையில் கூற வேண்டுமென்றால், ஒரு படைப்பாளியிடம் இப்படியான கேள்வியை கேட்டுப்பார்க்கலாம். “உன் பெயர் உன்னுடைய படைப்பிலிருந்து அழியப்படும். ஆனால், உன் படைப்பு அனைவரும் மெச்சும் ஒன்றாக மாறும். எதிர் காலத்தில் கூட பெரிதும் பேசப்படும். ஒரு புள்ளியில் வரலாறு திரிபடைந்து, உன் படைப்பை வேறொரு எழுத்தாளரின் பெயருடன் இணைத்து மக்கள் அறிந்துகொள்வர். அதற்கு சம்மதமா?”. இதற்கான பதிலை எத்தனை புதிய கலைஞர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று அறிய எனக்கு நீண்ட நாள் ஆசை. நிச்சயமாக ஒரு கலையின் “மாஸ்டர்” என்று அறியப்படும் ஒருவர். “என் பெயர் இருந்தா என்ன, இல்லைனா என்ன.. என் எழுத்து இருந்தா போதும்.. அது யாரையோ எங்கையோ யோசிக்க வெச்சுட்டு இருந்தா போதும். யாரோ அந்த படைப்போட converse பண்ணிட்டு இருந்தா போதும்” என்றே கூறுவார் என்பது என் அனுமானம்.

  1. Am I not interesting?

“The obvious solution was not to throw my hands up but try to find myself in a situation where I was doing me and not someone else. Do you? It is not easy but it is essential.It’s not easy because there is a lot in the way. In many cases, a major obstacle is your deeply seated belief that “you” is not interesting and since convincing yourself that you are interesting is probably not going to happen..”

“Agree, perhaps I am not interesting but I am the only thing I have to offer and by offering myself in a true way, I am doing a great service to the world… “

“Because it is rare and it will help.”

சார்லி மிகவும் ஆழமான ஒன்றை கூறி கடந்து செல்கிறார். எந்தவொரு புதுக்கலைஞனுக்கும் அவன் படைக்கும் போது ஓரிடத்தில் அவநம்பிக்கை உருவாகுவது இயல்பே. எழுதிக்கொண்டிருக்கும் போதே இந்த ஆக்கம் எந்த விதத்தில் புதுமையானது என்று தனக்குள்ளே கேள்வி கேட்டுக்கொள்வான். அந்த கேள்விக்கான பதிலை வலிந்து தன் ஆக்கத்தில் தேட முனைவான். அவன் தேர்ந்தெடுத்த படைப்பாக்க தளத்திலேயே இதற்கு முன் நன்கு அறிந்த பல ஆக்கங்கள் படைக்கப்பட்டிருக்கும். ஆனால் அதையும் தன்னுள் நம்ப மறுத்து தான் செய்ய தொடங்கியதை முடிக்க முயல்வான். சில நேரங்களில் சுய சந்தேகம் கொண்டு பல படைப்புகள் முடிவு பெறாமல் நின்று போகும். அவ்வப்போதேல்லாம் அவன் தனக்குள் சமாதானம் ஒன்றை சொல்லிக்கொள்வான் “இதெல்லாம் முன்னாடியே எழுதியாச்சு.. இதுல நான் என்ன புதுசா எழுத இருக்கு.. அப்படியே எழுதினாலும் எவன் படிக்க போறான்.. நான் அந்தளவுக்கு சுவாரிசயமா புதுசா எழுதுற ஆளும் கிடையாது” போன்ற எண்ண ஓட்டங்கள் அவனை தாக்காமல் இருக்காது. தாழ்வுணர்ச்சியிலும், Nihilist மனநிலையாலும் பீடிக்கப்பட்ட அவன், அதன் பிறகு எதையுமே எழுத முடியாமலும் போகலாம்.

சார்லி இவ்விடத்தில் ஒரு படி பின்னே எடுத்து நம்மை யோசிக்க சொல்வதாகவே படுகிறது. வேறு வழியே இல்லை, உன்னை நீ நம்பியே ஆக வேண்டும். நமக்கே நம் எழுத்தின் மீதும், படைப்புகளின் மீதும் அவநம்பிக்கை வளரலாம். அதையும் தாண்டி நம்மை நாம் வெளிப்படுத்தவே வேண்டும். சுயவெளிப்பாடு ஒன்றே குறிக்கோளாக இருக்கும் பட்சத்தில் அனைத்தும் சாத்தியமே என்று விளங்குகிறது.

  1. What’s your wound?

“Let me expose the wound and now step into this area blindly. I do not know what the wound is, I do know that it is old, I do know that there is a hole in my being, I do know it is tender, I do believe it is unknowable or at least in-articulable. I do believe you have a wound too, I do believe it is both specific to you and common to everyone. I do believe this is the thing about you that must be hidden and protected…”

“It is the thing that won’t be interesting to other people if revealed. It is the thing that makes you weak and pathetic. It is the thing that  truly truly truly truly makes loving you impossible. It is your secret even from yourself but it is the thing that wants to live. It is the thing from which your art, your painting, your dance, your composition, your philosophical treatise, your screenplay is born. If you don’t acknowledge this, you will come up here when it is your time and you will give your speech and you will talk about business of screenwriting”

“After you’re done, I will feel lonely and empty and hopeless”

இவ்வுரையில் சார்லி கிட்டத்தட்ட அனைத்தையும் எழுதிவைத்தே படிக்கிறார். மேலே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்கள் கலை தோன்றுவதற்கான முக்கிய கூறுகளாக அவர் காண்கிறார். எழுத்தாளர்களில் பலர் அவர்கள் ஒன்றில் வேலை செய்யும் போது அதிகம் அதை பற்றி பேசாதிருப்பர். அது அவர்களுக்கு அந்தரங்கமான உண்மையை போன்றது. அக்கருவை கூட பிறர் நெருங்கவோ தெரிந்துகொள்ளவோ விருப்பப்பட்ட மாட்டார்கள். அது அவர்களே உண்டாக்கிக்கொண்ட மன அமைப்பு எனலாம். அக்கதைக்கான தர்க்கங்கள் அவர்களுக்கு மட்டுமே விளங்கும். ஒப்பிட்டு பார்க்கையில், எந்தவொரு கலைஞனும் தங்களுடைய கருவை, கதையை மத நம்பிக்கைக்கு இணையாக நம்புபவன். அக்கரு பெரும்பாலும் அவனுடைய அகக் காயத்திலிருந்து மேலெழுபவை. தங்களின் வடிகாலாக கலையை நம்பி வரும் கலைஞர்கள் தங்களது பார்வையாளர்களிடம் தங்களது படைப்பின் மூலம் ஒரு இணைப்புப் புள்ளியை உருவாக்குகின்றனர். இந்த சந்திப்புப் புள்ளியில் ஒரு படைப்பாளியும் வாசகனும்/பார்வையாளனும் ஒன்றே என ஆகின்றனர். திரைப்படங்களைக் கண்ட பின்பு, “நான் நெனச்சத நீங்க எடுத்து வெச்சுருக்கீங்க..” என்று குரல் தழுதழுக்க கூறும் ஒவ்வொரு பார்வையாளனை காணும் கலைஞனும் சற்று பெருமிதப்பட்டுக் கொள்ளும்தோரும் அவன் உள்ளூர ஒரு வெறுமையையும் உணர்வான் என்றே நினைக்கிறேன். தனக்கே உரித்தானதாக நினைத்த கருவோ கதையோ ஒரு சாதாரண பார்வையாளன் கூட உணர்ந்திருக்கிறான். ஆக, தான் ஒன்றும் தனித்தன்மை வாய்ந்த மனிதன் இல்லை என்பது ஒவ்வொரு கலைஞனும் எதிர்கொள்ளவேண்டிய அவசியமான உணர்தல் என்று தோன்றுகிறது. ஒரு சாமானியன் அனைத்து உணர்வுகளையும் உள்வாங்கிக்கொண்டு அடுத்த வேலையை பார்க்க போகிறான். ஒரு கலைஞன் அதனுள்ளேயே உழன்று தன்னை வெளிப்படுத்தி கொள்ள கலையை அணுகுகிறான். இந்த ஒரே ஒரு வித்தியாசத்தில் கலைஞன் – பார்வையாளன்/வாசகன் என்னும் இரு வேறு பிரிவுகள் உண்டாகிறது. மனதில் புதைந்திருக்கும் இந்த ஆழ்மன காயங்களை ஒரு சாதாரணன் எந்நாளும் திரும்பி பார்த்து நினைவுகொள்ள மாட்டான் என்றே எண்ணுகிறேன். ஆனால், ஒரு கலைஞன் அந்த அசௌகரியமான இருண்மை மிகுந்த உண்மையை வெளிக்கொணர்ந்து மக்களை சஞ்சலப்படுத்துகிறான். அந்த சஞ்சலமே ஒரு சாதாரணனை அந்த கலைஞனுடன் தொடர்புப்படுத்துகிறது.

ஒரு தரம் வாய்ந்த நேர்மையான படைப்பு என்பது நிம்மதியான ஆத்மாக்களை அல்லலுக்குண்டாக்க வேண்டும், தவித்துக்கொண்டே இருக்கும் ஆத்மாக்களை அமைதி பெற செய்ய வேண்டும். நம்முடைய இருப்பை மன நிலையை எதிர் துருவத்துக்கு தூக்கி வீசுவது மட்டுமே படைப்பின் நோக்கம் எனபது என் கருத்து. அது சார்லி கூறும் “காயங்களை கிளறி எடுத்தல்” மூலமாக நடைபெறுகிறது. மேலே கொடுக்கப்பட்டுள்ள இரண்டாம் பத்தியின் கடைசியில் சார்லி பகடியில் மூழ்குகிறார். உங்களுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் காயங்களை காத்துக்கொள்ளாமல் ஒரு படைப்பை கொடுக்கும் போது அது வெறும் நுகர்பொருளாக மாறி, பார்க்கும் நேரத்தை “கழித்தொதுக்க” மட்டுமே பயன்படும் என்று சார்லி நம்புவதாக படுகிறது. அவ்வாறான கலைஞர்கள் அல்லாத சினிமா அல்லது எழுத்து “தொழில் புரியும் உழைப்பாளிகள்” தாம் கற்ற தொழில் முறையை பின்வரும் “தொழில் புரிய முனைபவர்களுக்கு” கடத்திச்செல்வர். கலைஞர்களாக உருவாக எண்ணும் அனைவரும் அவர்களது ஆழ் மனநிலையில் புதைந்திருக்கும் அனைத்து அசௌகரிய உண்மைகளையும் கலையின் வழியே எடுத்தளிக்க துணிவுகொண்டிருக்க வேண்டும். வெறும் “தொழில் புரிபவர்கள்” அவர்களது பண்டத்தை நம் முன் திணிப்பார்கள். சகிக்கவே முடியாத அவர்களின் ஆக்கங்களை கண்டபின்பு நாம் மறுபடியும் தனியனாகவும், வாழ்வின் இருண்மையை தேடியும் தான் சென்று கொண்டிருப்போம். ஆனால், ஒரு கலைப்படைப்பு என்பது அந்த வாசகன்/பார்வையாளனிடம் ஓர் உரையாடலை எழுப்புகிறது. தங்களின் வாழ்வை மறுபரிசீலனை செய்ய வைக்கிறது. அவனுடனே சில நாட்கள் பயணிக்கவும் செய்கிறது. பல வருடங்களுக்கு பின்பும் அந்த படைப்பிலிருந்து ஏதோவொரு பகுதி அவனை துன்புறுத்துகிறது.

  1. I Will choose what I want to tell/read/write

“I like when people like my things. I mean I am not crazy. I am crazy but I am not that crazy…”

“…. I want to like it. If other people like it, that’s really good and great because it means that something I have said has somehow.. you know resonated with somebody and that’s amazing. I want that but it has to be the thing that I have said”

சில வருடங்களுக்கு முன்பு, என்னை விட வயதில் குறைந்த, நிறைய எழுதிக் கொண்டிருக்கும் ஓரிளம் தமிழ் எழுத்தாளரை புத்தக கண்காட்சியில் காண நேர்ந்தது. உரையாடலின் போது, அவரிடம் வேறொருவர் பரிந்துரைத்ததாக கூறி ஒரு புத்தகத்தை பற்றி பேசத் தொடங்கினேன். அவர் என்னிடம் “ஒரு புத்தகத்த நாமே தேடி கண்டுபுடிச்சதா இருக்கணும்..” என்றார். நான் அக்கருத்திற்கு அந்நாட்களில் மிகப் பெரிய விசிறி இல்லை. நாங்கள் அறிமுகம் ஆகி 5 நிமிடம் கூட ஆகியிருக்காது என்று நினைக்கிறேன். அதற்குள்ளேயே, ஒரு வித கருத்து வேறுபாடு தோன்றுவது போல் இருந்தது. உடனேயே விடை பெற்றுக் கொண்டோம். நீண்ட வருடங்களுக்கு பிறகு நான் அதை உணர்ந்தேன். காதில் விழும் பெயர்களையும், புத்தக பரிந்துரைகளையும் மட்டும் ஒருவன் படிக்க நேர்ந்தால், அவனுக்கான தனித்த தேடல் ஒன்று இல்லாமல் போகும் வாய்ப்பு அதிகம் என்றே நினைக்கிறேன். தன்னை படைப்பாளியாக உணர்கிறவன் என்றுமே ஒரு தனித்த தேடலில் இருக்கிறான். சில காலம் கழித்து, விலகி நின்று பார்க்கும் போது, மற்ற படைப்பாளிகளின் தடத்திலேயே தானும் பயணித்து வந்திருப்பது அவனுக்கு உணர்த்தப்படும். ஆனால், அப்படியான தீர்மானமான வழியை முன்னரே ஒரு கலைஞன் அறிந்துகொள்வது அவனுடைய படைப்பை அணுகும் போது வெளிப்படும் இயல்பான வெகுளித்தன்மையை குறைக்கும் என்றே நம்புகிறேன். சார்லி மேலே குறிப்பிடுவது வாசகனை பற்றியோ பார்வையாளனை பற்றியோ அல்ல. ஒரு படைப்பாளியை பற்றி. சாதாரண வாசகனுக்கே இந்த தனித்தத் தேடல் என்பது மிக முக்கியமாக இருக்கும் பட்சத்தில், ஒரு கலைஞனுக்கு அந்த தேடல் மிகவும் அந்தரங்கமானதாக இருக்கும் என்றே நினைக்கிறேன். தான் எந்த விதத்திலும் மற்றவர் போல் இருக்கலாகாது என்று உறுதியாக நம்பும் வண்ணம் தன் பாதையையும், படைப்பையும் உருவாக்க நினைக்கிறான். அதே நேரத்தில் தான் கூற வருவது, படைப்பது மக்களுக்கு பிடிக்க வேண்டுமென்றும் நினைக்கிறான். தன் படைப்பில் இருக்கும் நுண்மையான இடங்களை அந்நியர் யாரோ ஒருவர் வந்து எடுத்துக்காட்ட வேண்டும் என்று பேரிச்சை கொள்கிறான். யாரோ ஒருவர் கசிந்துருக வேண்டும் என்றும் உள்ளூர ஆசை கொள்கிறான். அதே படைப்பு சிலரால் புரிந்துகொள்ளாமல் போகும் போது, அவர்களை பற்றிய ஒரு கீழ்மையான சித்திரத்தை உருவாக்கிக்கொண்டு அவர்களின் ரசனையுணர்வையும் அனுபவ தளத்தையும் தனக்குள் கேலிசெய்கிறான். ஒரு விதத்தில், அப்படியான மக்கள் கூட்டங்களுக்கு தன்னுடைய படைப்பு புரியப்படாமல் இருப்பதே தன் படைப்புக்கு பெரும் தகுதி என்றும் எண்ணத் தொடங்குகிறான். தான் மேலே நின்று கொண்டிருப்பதாகவும், தன் படைப்பை புரிந்துகொள்ளாதவர்களும், வெறுப்பவர்களும் ஆதி ஆழத்தில் இருப்பதாகவும் கற்பனை செய்து மகிழ்வுறுகிறான். சார்லி மேலே “Crazy ” என்று கூறுவது இந்த அர்த்தத்தில் எடுத்துக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது. இறுதியாக ஒரு படைப்பாளி எதிர் பார்ப்பதென்பது வாசகர்கள் அல்லது பார்வையாளர்கள் “தான்” கூறியதை அதன் முழு அர்த்தம் புரிந்துணர்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதையே. இவ்வகையில் நோக்கும் போது கலைஞனுக்குள் அநேக நேரமும் ஊர்ந்து கொண்டே இருக்கும் தன் முனைப்பு பற்றி எளிதாக விளங்கிக்கொள்ளலாம். ஆம், ஒரு வளர்ந்து வரும் அல்லது உச்சத்தை தொடாத எந்த படைப்பாளியும் தன்னுடைய கருத்துக்கள் பரவலாக பேசப்பட வேண்டும் என்றும், அவை தன்னிலிருந்து மட்டுமே உதித்தவையாக பார்க்கப்பட வேண்டும் என்றும் விரும்புகிறான்.

  1. Be Naked

“This is from Harold Pinter “A writer’s life is almost a naked activity. We don’t have to weep about that. The writer makes the choice and he is stuck with it but it is true to say that you are open to all the winds, some of them I see indeed…..”

“Movies tend to be concrete in their construction of events and characters. It is a tricky medium in which to deal with interior lives but I think it’s really a great medium for it…”

“People turn anxieties, crisis, longing, love, regret and guilt into beautiful rich stories in their dreams”

சில நாட்களுக்கு முன் என் சிறுகதை ஒன்றை தமிழிலக்கிய சூழலில் ஓரளவுக்கு கவனம் பெற்ற ஒரு கவிஞரிடம் பகிர்ந்தேன். அவருடைய கருத்துக்களை எப்போதும் மிகவும் மதித்து கதையில் சில மாற்றங்களை செய்வது என்னுடைய வழக்கம். என்னுடைய அண்மைய கதையில் நான் என்னையே ஒரு கதாப்பாத்திரத்தின் மூலம் முன்வைத்தேன். புனைவில் ஒரு சிக்கலான உறவை வெளிக்கொணர முயற்சி செய்திருந்தேன். கிட்டத் தட்ட அனைத்து படைப்பிலும், படைப்பாளியின் உளவியல் ஏதோ ஒரு கதாபாத்திரத்தில் வெளிப்படுவதை தடுக்க இயலாது. ஆனால், இந்த சிறுகதையில், நான் என்னை முழுமையாக வெளிப்படுத்தினேன். சற்று துணிச்சலாகவும் என்று கூற வேண்டும். மனதின் ஆழத்தில் ஒளிந்துள்ள அழுக்குகள், சஞ்சலங்கள், தாழ்வுணர்ச்சிகள், வன்மங்கள் என்று எனக்கு ஒரு கதையின் மூலம் என்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது.

ஒரு நாளிரவு அக்கதையை படித்த கவிஞர், கதையை பற்றிய நற்கருத்துக்களை கூறினாலும் என் அகத்தை தாங்கிய கதாபாத்திரம் பற்றிய அபிப்பிராயம் அவர் மனதில் எதிர் மறையாக இருந்தது. விளக்கிக் கூற தேவையின்றி அக்கதாபாத்திரம் நான் என்றுணர்ந்த பின்னரும் அவர் நேர்மையாக தன் கருத்துக்களை கூறினார். அவர் அதை வெளிப்படையாக கூறாமல் வெறும் அந்த கதாப்பாத்திரத்தை சாடிக்கொண்டிருந்தார். எனக்கும் தெரிந்துவிட்டது அவர் தெரிந்து தான் கூறிக்கொண்டிருக்கிறார் என்று. உரையாடல் முடிந்து நீண்ட நேரத்திற்குப் பின் என் மனதில் உதித்த ஒன்று, என்னால் ஒரு படைப்பில் என்னை முழுதாக வெளிப்படுத்த முடிகிறது. எவ்வளவு தூரம் என்றால், அடுத்தவர் என்னை கிழித்து நார் நாராக தொங்கப்போடும் வரை. அதே நேரம் இப்படியாக கதாபாத்திரம் மூலம் என்னை வெளிப்படுத்தி காழ்ப்புகளை சம்பாதித்துக் கொள்ள வேண்டுமா என்றும் என் மனதில் சஞ்சலங்கள் உண்டாகாமல் இல்லை. நெருங்கிய நண்பர்களிடம் இக்கதையை படிக்க கொடுத்தால், அவர்கள் என்னை பற்றிய பார்வையை மாற்றிக்கொள்வார்கள் என்றெண்ணினேன். எங்களுக்குள் இருக்கும் நட்பின் வலைப்பின்னல் சற்றே மாறுபடலாம் என்றும் தோன்றியது. ஆனால், அக்கவிஞரே என் மன சஞ்சலங்களை புரிந்து கொண்டது போல் அடுத்த நாள் காலை என்னை அழைத்து “அந்த கதாபாத்திரம் நீங்க தான்னு தெரியும் பிரசன்னா.. அதுக்கெல்லாம் கவலை படாதீங்க.. புனைவுல மட்டும் தான நம்மளால உண்மையா சொல்ல முடியுது..” என்ற ரீதியில் அறிவுரை வழங்கினார். புனைவென்று கூறிவிட்டு அதனுள் பல ஆழ்ந்த உண்மைகளை கூறிக் கொண்டிருக்கிறோம்.

சார்லி மேற்கோள் காட்டும் இவ்வாக்கியம் படித்தவுடன் என் நினைவுக்கு வருவது மேற்சொன்ன சம்பவமே. படைத்தல் என்பது தன்னை தானே எரித்துக்கொள்வதற்கு சமமான ஒரு செயல் என்பதில் எனக்கு எந்த வித மாற்றுக்கருத்தும் இல்லை. சார்லியும் இக்கருத்தில் உடன் படுகிறார், Harold Pinter வழியாக. படைப்பதற்கான தகுதிகளை வளர்த்துக்கொள்வதில் முதல் இடத்தை பிடிக்கிறது நேர்மையும், தைரியமும். அனுபவங்கள், வாழ்க்கை பற்றிய புரிதல்கள், சுற்றத்தில் அரங்கேறும் நிகழ்வுகளை உற்று நோக்குதல், தொழில் நுட்பங்கள் போன்ற அனைத்தும் அதற்கு அடுத்தப்படியே என்று கருதுகிறேன். தைரியமற்ற ஒருவன் படைக்கவே முடியாது என்பதே என் எண்ணம். நம் படைப்பின் மூலம், நம் நண்பர்களை இழக்கலாம், உறவுகளை இழக்கலாம், ஏன், பெற்றோர்களை கூட இழக்கலாம். இக்கருத்தை ஒற்றை வரியில் குறிப்பிட வேண்டுமென்றால், ஒரு படைப்பென்பது முதலில் தனக்காக எழுதப்பட வேண்டும். வாசகர்கள் அல்லது பார்வையாளர்கள் நம் படைப்பின் வழியாக அவர்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு என்பது நம்மை முன் வைக்கும் போது மட்டுமே நடக்கும் மாயம்.

  1. Art vs Craft – Cliché but relevant

“A screenplay is an exploration and it is about the thing you don’t know to step into the abyss. It is necessarily start somewhere, anywhere. There is a starting point but the rest is undetermined. It is a secret even from you. There is no template for a screenplay or there shouldn’t be…. we have been conned into thinking that there is a pre-established form..”

“I think craft is a dangerous thing”

“I think there was an amazing amount of craft and skill on the part of the filmmakers in this movie and yet it was the same shit”

“I think the danger of craft is that it needs to be in second position to what it is that you’re doing and it’s seductive to put in a first position…”

சில நாட்களுக்கு முன் இணைய வழி Play writing workshop இல் பங்கு பெரும் வாய்ப்பு கிடைத்தது. வகுப்பெடுத்தவர் விருதுகள் வாங்கிய எழுத்தாளர். Act 1, Act 2, Act 3, character development, conflict, emotional make up போன்ற நாடகம் மற்றும் திரைப்பட தொழில் நுட்ப வார்த்தைகளை விளக்கி கூறிக்கொண்டிருந்தார். என்னால் அந்த வகுப்புகளில் சரியாக கவனம் செலுத்த முடியாததை உணர்ந்தேன். இணையம் வழி உரையாடல் என்பதால், அவ்வப்போது வெளியே சென்று விடுவேன். ஏதோ ஒரு வகையில் இது போன்ற நுட்பங்கள், கதைக்கான கட்டுமானங்கள், தொழில் பயிற்சியை ஒத்திருக்கும் மூளை செயல்பாடுகள் கலையில் தேவையா என்ற கேள்வி மிகவும் தொந்தரவு செய்து கொண்டே இருந்தது. ஒரு கதை முழுதாக வாசகர்கள் அல்லது பார்வையாளர்களை சேர வேண்டும் என்ற தவிப்பு அனைத்து படைப்பாளிகளிடமும் இருந்து கொண்டே இருக்கும். அவன் அதற்கு மெனக்கெட நேரும் போது அவன் கூற வந்த உண்மையான கதை உருமாறி வலிந்து செருகப்பட்ட பல அத்தியாயங்கள் தேவையே அன்றி கதையின் போக்குகளில் இடையூறு செய்து மொத்த கதையுமே குறையுள்ளதாக ஆக்கிவிடும். ஒரு தேர்ந்த கதைசொல்லியாக துடிக்கும் கலைஞர்கள் இவ்வாறாக தொழில் முறை பயிற்சியை அவசியம் பெற வேண்டுமா என்று தெரியவில்லை. நாம் மற்ற எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு அதை மூளை செயல்பாடாக்கி ஒரு நுகர்வு பொருளை வழங்குவது போல் ஆகிவிடாதா மொத்த கலை செயல்பாடும்? கலை என்பதே உணர்வெழுச்சியின், சிந்தனையின், சுய தேடலின், மன அழுத்தங்களின் வெளிப்பாடாக இருக்க வேண்டும் என்ற அடிப்படை நோக்கமே இது போன்ற பயிற்சிகள் கெடுத்து விடுவதாகவே எண்ணுகிறேன். Craft என்றுமே ஒரு கதையை நேர்த்தியாக சொல்வதற்கு பயிற்றுவிக்க படுவதாக கூறிவிட்டு ஒரு இளைய படைப்பாளியின் சிந்தனைகளை கட்டுப்படுத்திடுவதாக கருதுகிறேன். ஆக, Craft என்ற ஒன்று தேவையே இல்லை என்று கூற முடியுமா? அதுவும் இல்லை தான். ஆனால், மூத்தோர்கள் கூறுவது போல். கலை சார்ந்த விஷயங்கள் அனைத்தையும் செய்து பார்த்து தெரிந்துகொள்வது மேல் என்று படுகிறது. நம் நோக்கம் நம்முள் முளைத்தெழுந்த கதையை தெளிந்து புரிந்து கொண்டு craft ஐ வெறும் நேர்த்தியான கதைசொல்லலுக்கான உத்தியாக மட்டுமே உருவகித்தல் நல்லது. வெறும் Craft மட்டும் அறிந்தவன் கலைஞன் அல்ல. பொருள் விற்பவன். என்னுடைய தனிப்பட்ட நம்பிக்கை என்னவெனில், தன் முனைப்போடு மிக இயல்பாக கதை கூற வரும் ஒருவன் இந்த வடிவ ஒழுங்கு, பாத்திர வடிவமைப்பு… இவை பற்றியெல்லாம் எந்த வித கவலையுமின்றி படைக்கத் தொடங்கும் போது அதுவாகவே தானாக கூடி வரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அந்த கூடி வருதலும் நீண்ட கால செயலனுபவம் மூலமே என்பதை மறுக்கவியலாது. Craft என்று கூறும் இவ்வனைத்தும் மாஸ்டர்கள் செய்து செய்து பார்த்து நமக்கு விட்டு சென்றிருக்கும் அனுப பகிர்தல்கள். அதை நாம் முழுதாக உணர வெறுமனே அதை படித்து அதன் வழி நம்முடைய கதையை கூறுவதென்பது கலை ஆக்கத்தில் சலிப்பான செயல். நாம் நேர்மையாக கூறும் கதைகளில், நமக்கே அப்படியான craft கூடி வரும், வந்தே ஆக வேண்டும். ஏனென்றால், ஒரு கதையை நாம் தேர்ந்தெடுக்கவில்லை, நம்மை அது தேர்ந்தெடுத்திருக்கிறது என்று யார் சொன்னதாகவோ கேள்விப்பட்டதை நான் முழுதாக உணர்கிறேன்.

  1. Ever wanting machine

“The speaker stands on the stage. He looks out at the audience. He doesn’t really know why he is here, not really…….”

“He knows that the reason crumbles to dust under investigation. What he wants to change is who he is… Each challenge he accepts. He accepts in order to move to next level of truthfulness. Each time he goes out hoping, he will come out as a real person….”

 

“Sweat forms on his brow, how did I know. It’s amazing. You know, I wrote this a week ago….”

“He is lonely is the truth. He feels trapped under burdens so immense. The history he carries, ,the thwarted relationships, the compromised relationships… “

“He is a wanting machine, ever wanting. He looks out at the audience, they don’t know what to make of him.”

அடுத்த சில வாக்கியங்கள் சார்லி Adaptation படத்தில் வருவது போல் தற்காலத்தை, இந்த நொடியை பதிவு செய்து கொண்டே போகிறார். இருத்தலியலில் உள்ள ஒரு விளையாட்டு இது. தனி பட்ட முறையில், மனம் சூம்பிப் போகும் தருணங்களில், வாழ்வின் அர்த்தங்கள் கேள்விக்குறியாகும் நிலையில், என்னை நானே பல முறை சல்லடை போட்டு பார்த்துக் கொள்வதுண்டு. என்ன செய்து கொண்டிருக்கிறேன்? பணத்திற்காக ஒரு வேலை, கலையை நோக்கி எப்போதுமே அலைந்து திரிந்து கொண்டிருக்கும் சலன மனம், பாராட்டுக்கும், நித்யத்துவத்திற்கும் கனவு காணும் ஆன்மா என வெவ்வேறு திசைகளில் மனம் அலைந்து கொண்டே இருக்கும். இது போன்ற உள விசாரணைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும் போது, ஒரு வித சலிப்பும் வந்துவிடுவதுண்டு. சட்டென்று அனைத்தையும் விட்டு விலகிவிட மனதில் தோன்றும். புகழுக்கும், நித்யத்துவத்திற்கும், பறந்து செல்லும் கனவிற்கும் நான் உள்ளூர ஏங்குகிறேன் என்று என்னால் உணர முடிகிறது. அது மட்டும் தான் நானா? சார்லியின் சுய விசாரணை கேள்விகள் அனைத்தும் இது போன்ற துயருண்மைகளை நோக்கியே பயணிக்கிறது. மனிதனுக்கு தன்னுடைய உண்மையான அற்ப பக்கங்களை காண என்றுமே விழைய மாட்டான். ஆனால், அதை நேருக்கு நேர் சந்தித்தே ஆக வேண்டிய கட்டாயம் ஒரு கலைஞனுக்கு உண்டு. அதன் வழியே கலை பிறக்கும் என்பது சூத்திரம். ஏனெனில் கலை என்பது நம்முடைய நேர்மையின், உன்னதத்தின் வெளிப்பாடு. இவ்வாறு சல்லடை போட்டு முடிந்த பின் கலைஞனுக்கு எஞ்சுவது மறுபடியும் தனிமையே. ஆனால் அத்தனிமை நிறைவான தனிமையாக இருக்குமென்று எண்ணுகிறேன். சார்லியின் இந்த psychoanalysis போன்ற சுய விசாரணைகள் அநேக நேரங்களில் ஒரு Nihilist மன நிலைக்கு இட்டுச்செல்வதையும் தடுக்க முடியாது. அனைத்தையும் சுய பரிசோதனைக்கு உட்படுத்தும் ஒருவனுக்குள், “பிறப்பும் இறப்பும் எதற்கு? நடுவே வாழ்ந்தே தீர வேண்டிய இந்த கட்டாய வாழ்வு எதற்கு?” என்ற கேள்விகள் வருவதை அவனால் தடுக்க இயலாது. ஆனால், அக்கலைஞன், ஏதோ ஒரு உந்துதலில் தன்னை மீட்டெடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. கலைஞனுக்கு கலை, சம்சாரிகளுக்கு குடும்பம் மற்றும் குழந்தைகள், தொழிலதிபர்களுக்கு பணம் ஈட்டும் முனைப்பு, சமூக சேவகர்களுக்கு பொது மக்கள்.

மனிதன் தனிமையை கண்டு அஞ்சுகிறான். எதையோ பிடித்துத் தொங்கி கொண்டிருக்க எண்ணுகிறான். அதில் தன் முழு ஆன்மாவையும் கரைக்க முற்படுகிறான். அதிலேயே கரைந்து கொள்ள துணிகிறான். அனைத்துமே ஒரு வித விளையாட்டு போல சிருஷ்டித்தவனுக்கு தோணலாம்.

  1. The only GOAL

“Our culture is marketing and this is what we do and what is marketing? Trying to get people to do what you want them to. It’s what drives our consumer culture. It’s what drives our politics. It’s what drives our art…..”

“I don’t want to teach how to write screenplay… I don’t want to tell you how to fit into the existing system. I want to tell you that I have a hope that there is another way to be in this world and I believe with courage and vulnerability and honesty that the stuff we put into the world can serve a better purpose”

 “I will try not to use whatever access I have to the public sphere to sell things including myself”

நுகர்வு கலாச்சாரத்தை தத்துவார்த்த அளவில் பார்க்கும் இவ்வரிகள், ஒவ்வொரு முழு கலைஞனும் ஆழ உணர்ந்ததே. கலையினால் உந்தப்பட்டு வரும் அனைத்து இளைய படைப்பாளிகளும் எந்த தருணத்திலோ இந்த நுகர்வின் மீது மையம் கொள்கிறார்கள். “எவ்வளவு பேரு பார்ப்பாங்க?” என்ற ஒற்றைக் கேள்வி ஒரு கலைஞனின் ஆன்மாவை அழிக்க வல்லது. நுகர்வோரை மனதில் கொள்ளாமல் படைக்கப் படும் ஆக்கம் என்பது கலைஞனுக்கு சற்றே ஒரு பயத்தை கொடுக்கும். முழு நேர கலைஞர்கள் அவர்களின் படைப்புகள் தொடர்ந்து நுகரப்பட்டால் மட்டுமே அடுத்தடுத்து அவர்களுக்கான வாய்ப்புகளும், பொருளாதார முன்னேற்றமும் அமையும். லௌகீக வாழ்க்கையை நடத்துவதற்கு கலைஞன் ஏதோ ஒரு வகையில் தன் கலையையே விற்றாக வேண்டியிருக்கிறது. எழுதும் போதும், நடிக்கும் போதும், நடனம் ஆடும் போதும், இன்ன பிற அனைத்துக் கலை செயல்களில் மூழ்கும் போதும் தன்னை கரைத்துக் கொள்ளாமல், வாசகர்களின்/பார்வையாளர்களின் எண்ணிக்கை அவன் மனதில் நிழலாட தொடங்கும். நுகர்வு கலாச்சாரத்தின் மூலம் அமைந்த கலைக்கு கிடைத்த சாபம் அது எனலாம். ஒரு தொழில் தொடங்குவோரோ அல்லது நாட்டை ஆள்பவரோ, சமூக சேவையில் ஈடுபடுவோரோ அந்த நுகர்வு மன நிலையை கொண்டிருத்தல் தவறே இல்லை. ஏனெனில், கலையை தவிர ஏனைய பிற அனைத்தும் தற்கால உயிரினங்களுக்கோ, வருங்கால உயிரினங்களுக்கோ லௌகீக வாழ்வின் தரத்தை மேம்படுத்த எண்ணியே இயங்குகின்றன. பயன் என்ற வரையறைக்குள் அவர்களின் செயலின் தன்மை அமையும்.

கலையும் மனிதனுக்கு பயன்படும் ஒன்று தான். நிகழ் காலமோ, வருங்காலமோ அதற்கு பொருட்டில்லை. ஆனால், இரண்டு கூறுகளில் கலையின் அம்சம் மேற்சொன்ன துறைகள் அனைத்திலிருந்தும் மாறுபடுகிறது. ஒன்று, செயலின் மையமாக அமையப்பெறுவது, தன்னை வெளிப்படுத்திக் கொள்ள, தன்னுள் கொதித்துக் கொண்டிருக்கும் ஒன்றை வெளிப்படுத்த என அதை வகை படுத்தலாம். இரண்டு, லௌகீக பயனை தவிர்த்து மனிதனுக்கான ஆன்ம முன்னேற்றத்திற்கு கலை பெரிதும் உதவுவதாக இருக்கிறது. சார்லி, இந்த சிந்தனையில் முக்கியமாக ஒன்றை கூறுகிறார். எக்காரணம் கொண்டும் நீ ஒன்றை விற்கலாகாது. பிற தொழில்களின் மூல கூறே தன்னை விற்பனைக்கு வைத்தல். ஆம், கலைஞன் தன்னையும் விற்க கூடாது. கலைஞன், வெறும் பகிர்பவன் மட்டுமே. அனைவரிடமும் தன்னுள் இருக்கு உணர்வுகளை, சிந்தனைகளை, கேள்விகளை, அவ்வப்போது கண்டடையும் ஒன்றை பகிர்பவன் மட்டுமே. அந்த பகிர்தலின் நோக்கம் என்பது முகம் தெரியா, நேரில் பார்க்க முடியா, உலகின் எந்த மூலையிலும் இருக்கும் ஏதோ ஒரு மனிதனிடம் உரையாடுவதற்காக மட்டுமே. அவ்வுரையாடல், ஒவ்வொரு மனிதனும் மேற்கொள்ள வேண்டிய ஒன்று. தேர்ந்த கலைஞர்கள் தங்களை முழுதாக, நேர்மையாக வெளிப்படுத்துவதில் வல்லமை பெற்றவர்கள். அவர்களுடனான உரையாடல் என்பது பல லௌகீக மனிதர்களுக்கு வரம். வாழ்வின் சில வெளிச்ச பகுதிகளையும், நம்பிக்கையையும், கோரமான முகங்களையும், மனம் போடும் அனைத்து நாடகங்களையும் உணர்ந்து கொள்ள நமக்கு கலைஞனின் படைப்பு முக்கியமாகிறது. கலையின் அதி முக்கிய நோக்கம் அதுவாக மட்டுமே இருக்க முடியும். பணமும், புகழும், பாராட்டும், எதிர்பார்ப்பும் அதில் சேர்கையில் கலை படைப்பு ஏதோ ஒரு வகையில் புனிதம் அழிந்து போகிறது.

  1. If we can’t break the ice, how about we drown it?

“Allow your screenplay to grow as you work on it. You will discover things as you work. You must not put these things aside even if they are inconvenient. Let’s not disregard all the little voices to simplify. Do not simplify. Let’s not worry about what it looks like”

“Don’t compartmentalize to make things simpler than they are”

“You’re thinking about it whether you realize or not. Letting the unconscious take over brings in freedom and surprise and removes judgement”

ஒரு சிறுகதையோ, நாவலோ, நாடகமோ, நடனமோ, ஓவியமோ எதை தொடங்கும் போதும் அதற்கான முதல் புள்ளி தோன்றும் விதம் ஒவ்வொரு கலைஞனுக்கும் மாறுபடும். சிலருக்கு ஒரு படிமம் போதும், மாபெரும் நாவலை எழுதிவிடலாம். சிலருக்கு முழு கட்டமைப்பும், கதை போக்கும் முன்னரே தெரிந்திருக்க வேண்டும். ஆனால், ஒன்று மட்டும் உறுதி. எந்தவொரு சிறந்த கலைப்படைப்பும், நாம் முடிவு செய்து இயற்றி விட முடியாது. இதை கலையின் தந்திரம் என்றும் கூறலாம். கலைச்செயலில் மூழ்கும் போது கலவியின் இன்பத்திற்கு நிகராக அடையும் உச்சத்தின் போது கலைஞனுக்கு அவன் பிரக்ஞையின்றி  வெளிவரும் அற்புத கணங்கள் நிகழும். சில சமயம் தான் தொடவே கூடாது என்று நினைத்த பகுதிகளும் அவனிடமிருந்து வெளிவரும். எந்த வித சல்லடைகளும் இன்றி அதை முழுதாக ஒரு கலைஞன் வெளிப்படுத்துவதே அவனுக்கான குறிக்கோளாக இருக்க வேண்டும். அதையும் மீறி அவன் கை எதையோ கட்டுப்படுத்த முனைந்தால், அவனின் அச்சம் கலையில் பள்ளிளித்துக் கொண்டிருக்கும். மனதை கட்டிபோடுதல் போன்ற அ-நேர்மையான ஒன்று கலையில் இருக்க முடியாது. கீழ்மைகள், கோர எண்ணங்கள், உன்னதங்கள், லௌகீக மக்களுக்கு தேவையற்றவை என்று சலித்து போன உண்மைகள் என அனைத்தும் அங்கு நிகழும். அந்நிகழ்வுக்காகவே கலைஞன் காத்திருக்கிறான். அப்படியான நேர்மையின் பிரதி பலன் என்ன? அவனுடைய ஆன்மா ஒரு படி முன்னேறுகிறது. சில கலைஞர்கள் கனிந்து விடுகிறார்கள். சில கலைஞர்கள் தனிமையை  அடைந்துவிடுகிறார்கள். சில கலைஞர்கள் தன்னுள் இருக்கும் மிருகத்தை கண்டு கொள்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு வெளிச்சம் வந்து விட்டு செல்கிறது. அப்படியான நிகழ்தலை அதன் போக்கில் விட்டு விடுவதே கலைஞன் கலைக்கு செல்லும் மரியாதையாக இருக்க வேண்டும். அவ்வெளிப்பாடு சிக்கலாக மட்டுமே இருக்க முடியும். எளிமைப்படுத்துதல் என்பது சிந்தனையின் தொடர்ச்சியான முயற்சியினால் நடைபெறுவது. கலை நிகழும் தருணத்திலிருந்து வெளி நின்று அதை நோக்கி, மற்ற அனைத்தையும் ஒப்பிட்டு பார்த்து எளிய வகையில் புரிந்து கொள்வது. ஆனால், கலைக்கு அப்படியான எளிய சூத்திரங்களோ, எளிமை படுத்தும் தேவையோ இருக்கக் கூடாது. சிக்கலான ஒன்றை அப்படியே கொடுத்து விடுவது மட்டுமே ஒரு கலைஞன் செய்யக்கூடியது. அவ்வாறான புதிய சாத்தியங்களை சிக்கலின் வழியே அடைய முடியும். Chaos என்பது கலைக்கு மிகவும் முக்கியமான ஒன்று.

  1. Know your medium

“You have to know why it’s a movie. If it doesn’t have to be a movie, you shouldn’t make it because it is very important what you do is very specific to the medium in which you’re doing it and that you utilize what’s specific about that medium to do that work”

ஒரு காட்சி கண்களில் தென்பட்ட உடன் உடனேய அதை திரையில் கொண்டு வர முடியுமா என்று எந்த ஒரு சினிமா பித்தனும் எண்ணிக் கொண்டே இருப்பான். சிறு சம்பவம் போதும் அதிலிருந்து எதையோ எடுத்துக் கொண்டு அதை ஒரு சட்டகத்தில் அடைத்து, கோர்வையாக ஒரு கதையை சொல்ல முனைவான் சிறுகதை எழுத்தாளன். இப்படியாக கலைஞர்கள் அவர்களுக்கான ஊன்றுகோலை தாங்கள் எங்கு சென்றாலும் எந்தவொரு காட்சியையும், எப்படிப்பட்ட மனிதனையும் தன் கலையினுள் புகுத்திக் கொள்ள எத்தனிப்பார்கள். வாழ்வின் சுவடுகள் மனதில் பதியும் முன்னே அதை தன் கைவசம் இருக்கும் கலையின் துணையோடு அதிலேற்றி பார்க்க துடித்துக் கொண்டிருப்போம். அது ஒரு அபாயச் சிந்தனைச் சுழல் என்றே எனக்கு இப்போது விளங்குகிறது. சுழலிலிருந்து வெளிவருவது அவ்வளவு எளிதானது அல்ல. எந்தவொரு சம்பவமும், காட்சியும், கருவும் நம்முள் வளர நாம் அனுமதிப்பதே இல்லை. அதே போல், அது நம் கலையில் உச்ச பட்ச சாத்தியங்களை அடைய முடியுமா என்றும் நினைத்து பார்ப்பதில்லை. எப்படியோ கையில் கிடைத்த ஒன்றை அலங்காரம் பூசி மற்றவருக்கு தன் திறனை காண்பித்து விட துடிக்கும் கலைஞர்களின் ஆக்கங்கள் பெரும்பாலும் உடனடி சலசலப்பை தாண்டி ‘நின்று’ பேசுவதில்லை. ஒவ்வொரு நிகழ்ச்சியும் மனதின் உள்ளே சென்று நாம் முழுதுணற அதற்கான அவகாசத்தை கொடுத்த பின்பே அதை கலையில் கொண்டு வருவதை பற்றி யோசிக்க வேண்டும்.

அதே சமயம், காலம் கடந்து கரு மனதை விட்டு ஒழுகி செல்லுதலும் உண்டு. அது கலைஞனுக்கு விரக்தியும், உளைச்சலையும் கொடுக்கும். தக்க உந்துதல் தோன்றிய போதே அதை படைத்திருக்கலாம் என்று எண்ணி எண்ணி சலிப்படைவான். சார்லி, மேலுள்ள வாக்கியங்களில் ஒரு கலைக் கருவியை நாம் முழுதாக அறிந்திருக்க வேண்டும் என்ற அர்த்தத்திலேயே முன் வைக்கிறார். கலைக் கருவிகளுக்கென்றிருக்கும் கூறுகளை நாம் நன்குணர வாய்ப்பமையாவிட்டால், அதுவே நம் திறனை உறிஞ்சுவிடும். கலையில் தொடர்ந்து ஈடு படுவதே எதை கலையாக மாற்றவேண்டுமென்ற தெளிவை கொடுக்கும் என்று நினைக்கிறேன். கவிதையாக வேண்டிய தருணத்தை, கதையாக்கி அந்த தருணத்தின் உன்னதத்தை இழக்க நேர்ந்த எண்ணற்ற எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். சினிமா என்று சொல்லிக் கொண்டு கதை முழுக்க கதாபாத்திரத்தின் பின்னணி குரலை கொண்டே கதையை நகர்த்தும் இயக்குனர்களும் உண்டு. ஒரு கருவியின் அதன் முழு சாத்தியப்பாடுகளை உணர்ந்த கலைஞன் தன் படைப்பை மற்றவருக்கு முன்னாள் சிறப்பாக கொடுக்கிறான்.

  1. Offer yourself

“I can’t tell anyone on how to write a screenplay because the truth is that anything of value you might do comes from you the way I work is not the way that you work and the whole point of any creative work is that”

“What I have to offer is, me. What you have to offer is you and if you offer yourself with authenticity and generosity, I will be moved”

இறுதியாக, நீயும் நானும் வேறு. நம் ரசனைகள் வேறு, நாம் வாழும் வீடு வேறு, உலகம் வேறு, நம் வழிகள் வேறு, நம் சிந்தனைகள் வேறு, நம் தடங்கல்கள் வேறு, நம் ஆன்மா வேறு. ஆனால், இவ்வனைத்தும் வேறுப்பட்டாலும் நம்மிருவருக்கும் ஏதோ ஒன்று ஒத்திசைந்து போகிறது. அந்த ஒத்திசைந்து போகும் ஒன்றை முன் வைத்து விட்டு நீ கிளம்பு. அதனுடன் நான் உரையாடிக் கொள்கிறேன். நீ உன்னை, உன் சிந்தனைகளை, உன் அழகியலை, உன் கவிதையை, உன் கதையை அதிலுள்ள உன் பார்வையை, உன் வழிகளை, உன் அழுகைகளை, உன் கீழ்மைகைளை, உன் ஞானத்தை நீ தேர்ந்தெடுத்த கலையெனும் கருவியின் மூலம் தெரியப்படுத்து. அதனுடன் உரையாடி எனக்கு தேவையான வற்றை நான் பெற்றுக்கொள்கிறேன். நீ உன்னை வெளிப்படுத்து, நான் என்னை வெளிப்படுத்துகிறேன். கலையின் மூலம் நம்மை நாம் வெளிக்கொணர்ந்து வெளிப்படுத்திக்கொண்டே இருப்போம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.