வயதடைதல் (coming of Age) என்பதும், மந்தை திரும்புதல் (Returning to the fold) என்பதும் மனித வாழ்வின் முக்கியமான கட்டங்கள். எப்போது இவை இரண்டும் நிகழ்கிறது என்று குறிப்பிட்டு சொல்லும்படியாக அல்லாமல் ஒரு தொடர் நிகழ்வாக பலரது வாழ்வில் அமைவதுண்டு. ஆனால், சிலர் வாழ்வில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான சம்பவங்கள் இவைக்கு காரணமாக நிகழ்வதுமுண்டு. இவை இரண்டுமே இருபதாம் நூற்றாண்டு நவீன உலகுக்குரிய இளைஞர்களின் பிரச்சினைகளில் முக்கியமானவையாக இருந்தன என்றே சொல்ல வேண்டும்.
சுதந்திர போராட்டத்தின் லட்சியவாத அலை அடங்கி, சுடும் யதார்த்தம் 70களில் பரவியது. சுதந்திர அரசு மரபார்ந்த கல்வி மற்றும் தொழில்முறைகளில் கவனம் செலுத்துவதற்கு மாறாக, தொழில்மயமான ஒரு வலுவான தேசத்தை உருவாக்க முற்பட்டது. ஆனால் தொழில்மயப்பட்ட சமூகத்துக்கு தேவைப்படும் ப்ளூ காலர் பணிகளில் பொருந்தக்கூடிய தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்காமல், காலனிய ஆட்சியின் தொடர்ச்சியான ஒயிட் காலர் பணிகளுக்கு ஆயத்தப்படுத்தும் குமாஸ்தா கல்விமுறையே தொடர்ந்தது. கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்து அவற்றிலிருந்து வெளிவரும் பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. ஆனால் கணக்கு எழுதுவதையும் குறிப்புகள் எடுப்பதையும் தவிர பிற எந்த தொழிலுக்கும் தகுதியில்லாதவர்களாக இவர்கள் இருந்ததால் வேலையில்லாத் திண்டாட்டம் கடுமையானது. அரசே முதன்மையான வேலை வாய்ப்பு தரக்கூடிய அமைப்பாக இருந்த காலகட்டத்தில், அதுவும் நவீன கல்வி உருவாக்கிய அந்நியத்தன்மை வாய்ந்த, (அரசு) வேலைகளின் யந்திரத்தனத்திலும் சலிப்பு, அந்த வேலைகளும் கிடைக்காத இளைஞர்களின் கோபம் ஆகியவை தீவிரமாக வெளிப்படத் தொடங்கின. மேலும், இளைஞர்கள் தங்களது தனித்தன்மை (Individuality) என்பதை நிறுவவும் முனைந்த காலகட்டமாக அது அமைந்தது.
ஆதவனின் புனைவுலகம், எப்போதும் மேலே சொன்ன பிரச்சினைகளைத் தன்னகத்தே கொண்டது. மனிதர்களின் தனித்தன்மையை, அவர்கள் அதனை இழக்க நேரும் பின்னணியை, சோகத்தை, விரிவாகச் சொல்லக்கூடியது. மந்தையில் சேராதிருத்தல், தனித்து நின்று தன் அடையாளத்தை பேணுதல், மரபிலிருந்து விலகி நிற்றல் என்பவை அவரது நிறைய கதாபாத்திரங்களின் பொது அம்சங்கள். வயதடைதல் என்ற நிகழ்வின் போக்குக்கு உதாரண படைப்பாக அவரது “என் பெயர் ராமசேஷன்” நாவலைச் சொல்லலாம் என்றால், மந்தை திரும்புதலை மிகத் துல்லியமாக எழுத்தில் கொண்டுவந்த அவரது சிறுகதை (சற்றே நீளமான) “கார்த்திக்“.
இருபதாம் நூற்றாண்டின் கடைசி காற்பகுதியில் வாழும் நவீன இளைஞன் கார்த்திக், ஒரே சமயத்தில் மரபில் இருந்து விலகி அறிவார்ந்த நோக்கினால், மரபு தன் மீது சுமத்தும் மூடப்பழக்கங்களை களையவும், அதே சமயத்தில், காதல் வயப்பட்டாலும் தன் தனித்தன்மையை அதில் இழக்காமல் இருக்கவும் விழைபவன். ஒரே சமயத்தில், பெற்றோரின் மரபு அளிக்கும் சுமைகளிலிருந்தும் காதல் மனைவியின் நவீன நோக்கு அளிக்கும் தளையிலிருந்தும் விலகி வாழும் விழைவுடன் தன் தனித்துவத்தைப் பேணுவதில் உறுதியாக இருக்கவும் முனைபவன். தன்னைச் சுற்றியிருக்கும் மற்றவர்களைப் போலாகாமல் இருப்பதில் கவனமாக இருப்பவன். இந்த நிலைப்பாடுகளிலிருந்து மெல்ல நழுவி அவனும் மற்றவர்களை போல, யாரையெல்லாம் தவிர்க்க நினைக்கிறானோ அவர்களை போலவே, ஆவதை விவரிப்பதுதான் ‘கார்த்திக்‘.
என் போன்ற 70கள் 80களில் வளர்ந்த, மரபிலிருந்து துண்டித்துக் கொண்டு சாதி மத அடையாளமற்ற வாழ்க்கையை, அல்லது மிக மேலோட்டமாகவே சாதி மத அடையாளத்தைப் பேணும் வாழ்வை வாழ்பவர்களுக்கு, கார்த்திக் சிறுகதை அடிக்கடி நினைவுக்கு வரும். “கார்த்திக்” சிறுகதையை நினைவுபடுத்தும் சம்பவங்கள் நடந்து கொண்டேயிருக்கும். அண்மையில்கூட குடும்பத்தினரின் பிரார்த்தனையை நிறைவேற்ற ஒரு கோவிலுக்குச் சென்றபோது, ஒரு சாதாரண சடங்குகூட செய்யத் தெரியாமல் தவிக்கையில் கார்த்திக்கை நினைத்துக் கொண்டேன்.
இந்தக் கதையில், கார்த்திக் தன் மந்தைக்குத் திரும்பும் நிகழ்வு, பத்மாவுடனான காதல் திருமணத்துக்குப் பிறகே மெல்லத் தொடங்கிவிட்டாலும், அது தீர்மானகரமான திரும்புதலாக ஆவது அவனது தந்தையின் மரணத்துக்குப் பிறகுதான். அவர் இருந்தவரை கார்த்திக்கின் மகனுக்கு எல்லாமுமாக இருக்கிறார். பூஜை செய்வது, ரேடியோவில் கச்சேரி கேட்கும்போது தாளம் போடுவது என்று அவரைப் பார்த்தே அனைத்தையும் கற்றுக் கொள்கிறான் கார்த்திக்கின் பிள்ளை ரவி. திடீரென்று ஒரு நாள், கார்த்திக்கின் தந்தை இறந்து விடுகிறார். மிகப்பெரிய இழப்பு ரவிக்கு மட்டுமல்ல, கார்த்திக்குக்கும்தான். தன் வித்தியாசங்கள், தனித்தன்மைகள் என்று அவன் எண்ணியிருந்ததெல்லாம் அவர் கரும்பலகையாயிருந்து எடுத்துக் காட்டிய வெள்ளை எழுத்துக்கள்தான் என்று உணர்கிறான். அந்தக் கரும்பலகை இல்லையென்றானபின் அவனது தனித்தன்மைகள் என்னும் வெள்ளை எழுத்துக்கள், பின்னணி ஏதும் இல்லாமல் சோபை இழந்து விடுகின்றன.
ஆனால் உடனடியாக அவன் சமாளித்தாக வேண்டியது தன் மகனின் தனிமையை. தாத்தாவின் மறைவுக்குப் பின் அவர் அவனுடன் ஆடிய விளையாட்டுக்கள், பூஜை, கச்சேரி, புராணக் கதை சொல்லுதல் போன்றவைகளுக்கு அவனுக்கு ஆள் இல்லை. கார்த்திக் வேறு வழியில்லாமல் தன் தந்தையின் பாத்திரத்தை ஏற்று நடிக்க வேண்டியதாகிறது. பூஜை செய்கிறான், புராணக்கதைகளைத் தேடிப் படித்து மகனுக்குச் சொல்கிறான், கச்சேரி கேட்கிறான். கொஞ்சம் கொஞ்சமாக தான் யாராக இல்லாமல் இருக்க விழைந்தானோ அவராகவே மாறுகிறான்.
சிலகாலம் கழித்து, சுற்றியிருக்கும் பகுதிகளில் இருக்கும் ரவியின் நண்பர்களான சிறுவர்கள், கார்த்திக்கை கார்த்திக் மாமா என்று அழைக்கின்றனர். ஒருநாள், ரவிக்காக பூஜை அறையில் உட்கார்ந்து ரவியை அழைக்கும்போது தெரிகிறது, ரவி அவனையொத்த பையன்களுடன் வெளியே விளையாடப் போயிருப்பது. மனைவி பத்மா அவனை அழைத்து வரட்டுமா என்கிறாள். வெளியே வந்து எட்டிப்பார்க்கும் கார்த்திக், ரவியில் கார்த்திக்கைப் பார்க்கிறான். திரும்பி வந்து பத்மாவிடம், அவனைக் கூப்பிட வேண்டாம், அவன் விளையாடட்டும், நாம் செய்வோம் பூஜையை என்கிறான் கார்த்திக்- இல்லை, கார்த்திக் மாமா. பக்கத்தில் பாந்தமான பத்மா மாமி. இப்போது ரவிதான் கார்த்திக். கார்த்திக்கின் மந்தை திரும்புதல் முழுமையடைகிறது.
ஒரு பார்வையில், பெற்றோரின் மரபான வாழ்க்கையுடன் முரண்பட்டு பின் அத்தகைய ஒரு வாழ்க்கைக்கே திரும்புவதே கதையின் முக்கிய பேசுபொருள் என்றாலும், கார்த்திக்கின் தனித்தன்மை சார்ந்த தன்னுணர்வு அவனது யுகம் சார்ந்த நவீனப் பெண்ணான அவன் மனைவியுடனும்கூட முழுவதுமாக ஒத்துப்போக முடியாத சூழலை உருவாக்குகிறது. அவளுடைய முற்போக்கு அவனை சங்கடத்துக்குள்ளாக்குகிறது. மனைவி, இவனது பெற்றோருடன் மரபார்ந்த விஷயங்களில் கொள்ளும் நெருக்கம் கார்த்திக்கை அந்நியப்படுத்துகிறது. அதே சமயம் அவள் கார்த்திக்குடன் நெருங்கிக் கொள்ள உதவும நவீன உலகு சார்ந்த கருத்துக்களும் அவனது தனித்தன்மையை குலைத்து பத்திரமற்ற மனநிலையை உருவாக்குவதையும் ஆதவன் வெகு அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார். இப்படி இரண்டு தளங்களில் பிரயாணிக்கிறது கதை.
நவீன வாழ்க்கை உருவாக்கும் அடையாளச் சிக்கல் மிகுந்த, முன்னே போவதா, பின்னே போவதா, இருந்த நிலையில் இருப்பதா என்ற குழப்பமான ஆண்-மனநிலைக்கு ஒரு மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்வது ஆதவனின் “கார்த்திக்‘ – கார்த்திக் மாமா என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும்.
2 comments