நேசக்கரங்கள்

விஜய் விக்கி

மொபைலை எடுத்து செல்பி எடுத்துக்கொண்டேன். என் வாழ்க்கையின் கடைசி செல்பி அது, பொய்யான சிரிப்பு பொங்கி வழிந்தது. அவசரமாக பேஸ்புக்கில் அப்டேட் செய்தேன். அநேகமாக ஐம்பது லைக்குகள் விழக்கூடும். நாளைக்கு என் இறப்பை பகிரப் போகும் நண்பர்களுக்கு என்னால் கொடுக்க முடிந்த நினைவுப்பரிசு இது. “நேத்துதான் பிக்சர் அப்டேட் பண்ணிருந்தான். அழகா சிரிச்சபடி போஸ் கொடுத்திருக்கான் பாரு. ச்ச, இப்டி முடிவெடுத்திட்டானே” என பொருமிக்கொண்டு ஒரு “ஆர்.ஐ.பி” ஸ்டேட்டஸ் போடக்கூடும்.

பர்ஸ்க்குள் புதைந்திருந்த ஆதார் அட்டையை எடுத்து சட்டைப்பைக்குள் திணித்துக்கொண்டேன். ஒருவேளை மாடியிலிருந்து கீழே குதித்து, முகம் சிதைந்து அடையாளம் தெரியாமல் போய்விட்டால் இந்த ஆதார் அட்டை ஒரு அடையாளமாக இருந்துவிட்டுப் போகட்டும். “அடையாளம் தெரியாத வாலிபர் தற்கொலை” என ஏதோ ஒரு டீக்கடை வாசலில் செய்தியாக மனம் ஒப்பவில்லை.

வாழ்வதில்தான் முறையான திட்டமிடல் இல்லாமல் தோற்றுவிட்டேன், இந்த இறப்பிலாவது எல்லாம் முறையாக நடக்கட்டும்.

இனி இருக்கும் பொழுது எனக்கான விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ள. மெல்ல நடந்து அருகிலுள்ள செட்டிநாடு ஹோட்டலை அடைந்தேன்.

வாயிலில் அடுக்கப்பட்டிருக்கும் மெனு புகைப்படங்களை பார்த்தே பலநாட்கள், நாவினில் எச்சில் ஊறியதுண்டு. உள்ளே சென்று அமர்ந்து, விலைப்பட்டியலை ஒரு பொருட்டாகவே மதிக்காமல், இதுநாள் வரை கண்களால் ரசித்த அத்தனை பதார்த்தங்களையும் ஆர்டர் செய்தேன். உணவுப்பட்டியலை எழுதிக்கொண்ட வெய்ட்டர், சற்று விசித்திரமாக பார்த்துவிட்டு நகர்ந்து சென்றார்.

பறவை, நடப்பன, ஊர்வன, நீர் வாழ்வன என ஒரு உயிருக்கும் ஈவு இரக்கம் பார்க்கவில்லை. பிரியாணியின் வாசனை, நாசிக்குள் நுழைந்து சிறுகுடலை ஊடுருவிக்கொண்டிருந்தது. ஆசையோடு அள்ளி ஒரு வாய் வைத்தேன். நாவின் சுவை மொட்டுகளில் பட்டபோது, அப்படியொரு சிலிர்ப்பை உணரமுடிந்தது. ரசித்து ருசித்து மென்று விழுங்கியபோது, “இதுதான் உன் கடைசி சாப்பாடு!” என்று மனம் நினைவூட்டியது. சட்டென உடலுக்குள் ஒரு மாற்றம், இரைப்பைக்குள் எக்கச்சக்கமாய்ச் சுரந்த அமிலங்கள். உடல் முழுக்க வியர்த்து, தொண்டைக்குழியை அடைந்த முதல் வாய் அதற்கு கீழே செல்ல மறுத்து ஸ்தம்பித்து இடைநின்றது. பதற்றம் உச்சந்தலைக்குள் ஊசியாய் குத்த, வாயிலிருக்கும் உணவை சிரமப்பட்டு விழுங்கினேன். மூச்சு இறைத்தது. இதற்குமேல் சாப்பிட மனம் ஒப்பவில்லை. மேசையில் அடுக்கப்பட்டிருந்த உணவுகளை ஏக்கத்தோடு ஏறிட்டபடியே, கைகழுவ சென்றுவிட்டேன்.

“என்ன சார் சாப்பாடு ஏதும் சரியில்லையா?” குற்ற உணர்வோடு குரல் தணித்து வினவினான் ஊழியன்.

“இல்லப்பா. கொஞ்சம் உடம்பு சரியில்ல.”

“வேணும்னா பார்சல் பண்ணிடவா?”

“இல்ல. பரவால்ல. பில் கொடுங்க, போதும்!” சற்று ஆசுவாசமாக அமர்ந்துகொண்டேன். குவளையில் ஊற்றப்பட்டிருந்த தண்ணீரை எடுத்து குடித்துக்கொண்டேன். ஏனோ அழவேண்டும் போல இருக்கிறது. அக்கம்பக்கம் திரும்பிப் பார்த்தேன். குடும்பத்தோடு மகிழ்ச்சியாக சாப்பிட்டுக்கொண்டிருக்கும் சக மனிதர்கள். என் அழுகை அந்த இடத்துச் சூழலின் ரம்மியத்தை கெடுத்துவிடக்கூடும். எச்சிலோடு என் அழுகையையும் சேர்த்தே விழுங்கிக்கொண்டு அங்கிருந்து எழுந்துவிட்டேன்.

பில்லை கையில் கொடுத்துவிட்டு, ஒருவித கழிவிரக்கத்தோடு என்னை பார்த்துக்கொண்டிருந்தான் அந்த ஊழியன். முகம் அறியாத, முன்பின் தெரியாத சக மனிதர்கள் மீது ஒரு இனம்புரியாத இரக்கத்தினை இப்படி அதிசயமான சிலரிடம் மட்டும்தான் பார்க்க முடிகிறது.

எண்ணூற்று நாற்பது ரூபாய் மொத்தம். ஆயிரம் ரூபாய் தாளினை எடுத்து வைத்தேன். “சேஞ்ச் வேணாம்!” என அங்கிருந்து கடந்து சென்றேன்.

அந்திவெயில் நெற்றியை சுளீறிட்டது. உணவகத்திலிருந்து வெளியே வந்ததும், கால் போன போக்கில் நடக்கத்தொடங்கினேன். எங்கே போவது? ஒரு யோசனையும் இல்லை. நினைவு முழுக்க நெருங்கிக்கொண்டிருக்கும் பத்து மணியை ஒட்டியே ஓடிக்கொண்டிருந்தது.

“பீச் போறியா சார்?” ஷேர் ஆட்டோ ஒன்று நகர்ந்தபடியே வினவிக்கொண்டு வந்தது.

கடற்கரை. அதுவும் தோதான இடம்தான். பலதரப்பட்ட மனிதர்களை, பரபரப்பற்ற சூழலில் எதிர்கொள்வது அத்துனை அலாதியான அனுபவம்தான். ஏறிக்கொண்டேன்.

கண்ணகி சிலையருகே இறங்கிக்கொண்டேன். யாருக்காகவோ நீதி கேட்க இன்னமும் கையில் சிலம்போடு காத்துக்கொண்டிருக்கிறாள் அந்த கற்புக்கரசி. ஆற்றாமையோடு அவளை கடந்து கடற்கரை மணலில் கால் பதித்து நடக்கத்தொடங்கினேன். உப்புக்காற்று முகத்தில் படிந்து பிசுபிசுப்பாகியது. இன்னும் எவ்வளவு தூரம் நடக்கப்போகிறேன்? இருக்கப்போகும் ஒருசில மணிகளையும் இப்படி நடந்தே கடப்பதாய் உத்தேசமா? அதிகமாய் ஆட்கள் நடமாட்டமில்லாத ஒரு மையத்தில் அமர்ந்தேன். மணலில் பந்து எறிந்து விளையாடும் குழந்தைகள், அதிதீவிரமாக விரல்களை வருடிக்கொண்டே கதைத்துக்கொண்டிருக்கும் காதலர்கள், ‘இருட்டத்தொடங்கிவிட்டதே, இன்னும் போனியாகவில்லையே,” என ஏக்கத்தோடு ‘கடலை, கடலை’ என கதறிக்கொண்டிருக்கும் பதின்வயது இளைஞன். இந்த உலகத்தில் வேடிக்கை பார்த்திடத்தான் எத்தனை எத்தனை ரசனை நிரம்பிய விஷயங்கள்.  அதோ அங்கு கையில் ஏதோ குச்சியோடு என்னை நோக்கிவரும் மஞ்சள் அப்பிய பெண்மணி கூட ரசிக்கத்தக்கவள்தான்.

என் எதிரே சம்மணமிட்டு அமர்ந்தபோதுதான், அந்த ரசனையையும் தாண்டி அவளுக்குள் ஒரு செயற்கையான தெய்வீக ஒப்பனை அப்பிக்கொண்டிருப்பதை கவனித்தேன். ஒரு ரூபாய் நாணயத்தின் அளவிலான குங்குமப்பொட்டும், “ரேகை ஜோசியம் பாக்குறியா சார்?” என்ற கொச்சைத்தமிழும் முரண்கள் நிறைந்த அழகாகத்தான் தெரிகிறது.

வழக்கம்போல ‘’வேண்டாம்!’ என மறுக்க மனமில்லை. நம்பிக்கைக்காக இல்லையென்றாலும், ஓரிரு நிமிடங்கள் மரண பயத்திலிருந்து சற்று விலகி பொழுதுபோக்கலாம் என்கிற நப்பாசை.

“சூரிய ரேகை, சுக்கிரன் ரேகை, புதன் ரேகையல்லாம் பின்னிபினைஞ்சு திக்குக்கு ஒண்ணா கெடக்கு சாமி. இன்னதுதான் கஷ்டமுன்னு இல்லாம, இருக்குறதெல்லாம் சிக்கலா நெறஞ்சிருக்கு. ஆயுள் ரேகை அந்தரத்துல தொங்கிகிட்டு இருக்கு சாமி”

படாரென கையை இழுத்துக்கொண்டேன். இதென்ன மாயாஜாலம்? அப்படியே நேரில் பார்த்ததைப்போல பட்டவர்த்தனமாக சொல்கிறாளே!.

“ஒன்னும் பயப்பட வேணாம் சாமி. கெரகம்னு ஒன்னு இருந்தா, பரிகாரம்னு ஒன்னும் இருக்கும். நெறைஞ்ச பவுர்ணமி நாளுல, காளி கோயில்ல வெளக்கேத்தி, நாலு சுமங்கலி பொண்ணுகளுக்கு தானம் பண்ணு சாமி. உன்னப்புடிச்ச கெரகமெல்லாம் விலகும்!” கண்களை மூடிக்கொண்டு ஒருவித மந்திரக்குரலில் சொல்கிறாள்.

மனதிற்குள் படாரென ஒரு ‘ப்ளாஷ்’. ஒருவேளை இவள் சொல்வதைப்போல செய்து பார்க்கலாமா? மனது காளி கோவிலை நோக்கி பயணிக்கத்தொடங்கியது. இதென்ன முட்டாள்த்தனம்? சாவின் விளிம்பில் நின்றுகொண்டு, மூடத்தனத்துக்கு முட்டுக்கொடுப்பதேன்? அவசரமாக அப்பெண்ணின் கையில் ஒரு நூறு ரூபாய் தாளினை திணித்துவிட்டு, அங்கிருந்து நகர்ந்தேன். வாழும்போதுதான் எடுத்த முடிவுகள் அத்தனையும் குழப்பங்களின் உச்சம் என்றால், இறப்பிலும் அந்த தெளிவை இழக்க விரும்பவில்லை.

பொங்கிவரும் கடல் அலைகளில் கால் பதித்தவாறே நடக்கத்தொடங்கினேன். குதூகலமாக தண்ணீரினில் விளையாடிக்கொண்டிருக்கும் சிறார்களை பார்த்தபோது பால்ய நினைவுகள் அரும்பத்தொடங்கின. பசும்பொன் போன்ற பொய்மை கலக்காத சிரிப்புகள் அவை. முந்தையநாள் அப்பாவிடம் வாங்கிய அடியின் சுவடும் இல்லாது, மறுநாள் எழுதப்போகும் தேர்வு பற்றிய பதற்றமும் இல்லாது, அந்த நிமிடங்களை ரசித்து வாழ்ந்த காலங்கள் அவை. அத்தகைய ஜென் நிலையை இப்போதெல்லாம் யோசித்துப்பார்த்திடவே முடியவில்லை. சுற்றிலும் பாம்புகள் சீறிக்கொண்டிருக்க, பறந்துவரும் பட்டாம்பூச்சியை ரசிப்பதற்கு பெயர்தான் ஜென் நிலையா? ஒருபுறம் அது முட்டாள்த்தனமாக தெரிந்தாலும், மறுபுறம் வாழ்க்கையை வாழ்வதற்கு அத்தகைய வித்தையை கற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

 “சார். உங்களைத்தான்.” யாரோ பின்னாலிருந்து அழைக்கிறார்கள். திரும்பிப்பார்த்தேன், இளம்பெண் ஒருத்தி. வெகுநேரமாக என்னை அழைத்திருக்கக்கூடும், நான் ஒருவழியாய் திரும்பிப்பார்த்துவிட்டதன் மனநிறைவு அவள் கண்களுக்குள்.

“சொல்லுங்க.” திரும்பினேன்.

“டைம் என்ன சார்?”

“எட்டு ஆகப்போகுது.”

“தாங்க்ஸ்” சிரித்துக்கொண்டே சொன்னாள். அப்போதுதான் அவளை கொஞ்சம் உற்று நோக்கினேன். சிவப்பு ஜிகினா சேலை, தலை நிரம்பிய மல்லிகை, உதட்டை மீறிய லிப்ஸ்டிக் ஒப்பனை. எதையும் கவனிக்காததை போல அவசரமாக கடலை நோக்கி திரும்பிவிட்டேன். அவள் இன்னும் என்னையே பார்த்துக்கொண்டிருக்கிறாள், மெல்ல என்னருகே நகர்ந்து வருகிறாள். இந்தச் சூழலை எப்படி எதிர்கொள்வது என்று புரியாமல் தடுமாறியபடிதான் நின்றேன்.

“பக்கத்துல ரூம் இருக்கு, ஆயிரம் ரூபாய்தான் சார்.” காதருகே கிசுகிசுத்தாள். பதற்றத்தில் வியர்த்து வழியத்தொடங்கியது. சட்டைப்பைக்குள் இருக்கும் ரூபாய்களை தேற்றி எப்படியும் ஆயிரம் ரூபாய் கொடுத்துவிடமுடியும்தான்.

அந்த தருணத்தில் மனதிற்கு இதமான ஒரு அனுசரணை தேவைப்படுகிறதுதான். பற்றி எரிந்துகொண்டிருக்கும் வைக்கோல்போரில் அள்ளி வீசவேண்டிய தண்ணீரைப்போல.

அவள் பின்னே நடக்கத் தொடங்கினேன். நான்கைந்து சந்துபொந்துகளை கடந்து, நாய்களின் ஊளைச்சத்தம் மங்கியிருந்த அந்த அழுக்கு படிந்த மாடிப்படிகளில் ஏறினோம். சற்றே சிதிலமடைந்துபோன ஒரு அறைக்குள் நுழைந்தபோது, மரண பயத்தையும் மீறிய ஒருவித பதற்றம் தொற்றிக்கொண்டது.

விளக்கை போட்டுவிட்டு, கதவில் உள்தாழ்ப்பாளையும் போட்டுவிட்டாள். அருகிலிருந்த தொலைக்காட்சிப்பெட்டியை ‘ஆன்’ செய்துவிட்டு, அதன் சத்தத்தை அதிகப்படுத்தினாள். கட்டிலில் சிதறிக்கிடந்த துணிகளை ஓரமாக அள்ளிவைத்துவிட்டு, என்னெதிரே செயற்கை சிரிப்புடன் வந்து நிற்கிறாள்.

‘நான் ரெடி, இனிமே நீதான் தொடங்கணும்!’ வார்த்தைகளில் அல்லாது, மெளனமாக உணரவைத்தாள். ஆனால் நான் எப்படி தொடங்குவது? முன்பின் அனுபவம் இருந்திருந்தால்கூட யோசிக்காமல் தொடங்கியிருப்பேன். நான் யோசித்துக்கொண்டிருப்பதன் உள்ளர்த்தம் உணர்ந்தவள் போல, என் சட்டை பொத்தான்களை அவளே கழற்றத் தொடங்கினாள். தன் சேலையையும் விலக்கிவிட்டு, என் வலதுகையை எடுத்து அவள் தோள் மீது வைத்தாள். கிளிப்பிள்ளைக்கு பாடம் சொல்லிக்கொடுப்பதை போல செய்துகொண்டிருக்கிறாள். இதற்குமேலும் மௌனசாமியாராய் நின்றிருந்தால், என் ஆண்மையின் மீதல்லவா சந்தேகம் கொண்டுவிடுவாள்.

அவளை வாரி அணைத்து உடைகளை களையத்தொடங்கினேன். அரை மயக்கத்தில் உச்சந்தலைக்குள் உணர்வுகள் கொப்பளிப்பதை உணர்ந்தேன். இப்படியும்கூட ஒருவித இன்பம் உடலுக்குள் ஏற்படுமா என்று எண்ணம் தோன்றிய மறுநொடியே எங்கிருந்தோ ஒருவித கவலை என்னையும் மீறி பீறிட்டு வழிந்தது. இன்னும் சில நிமிடங்களில் எழுதப்போகும் எனக்கான மரண சாசனம் பற்றியதான கவலை அது.

சாகப்போகும் தருணத்திலும் பாவக்கணக்கினை அதிகமாக்கிக்கொள்ள மனம் ஒப்பவில்லை. சட்டென விலகிக்கொண்டேன். வேகமாய் சட்டையை அணிந்துகொண்டு உடையினை சரிசெய்துகொண்டேன். விசித்திரமாக என்னை ஏறிட்டுப்பார்த்தவள், என்னை மேற்கொண்டு “என்ன? ஏன்?” என கேட்பதற்குள், அங்கிருந்து அவசரமாக வெளியேறினேன். நான் படிகளில் கீழே இறங்கியபோது, அவள் வாசல் வரை வந்து என்னை அதிசயமாக வெறித்துக் கொண்டிருப்பதை கண்டும் காணாமல் வேகமாய் அவள் கண்களை விட்டு மறைந்தேன்.

ஆள் அரவமற்ற அந்த அரைகுறை கட்டிடத்தை அடைந்தபோது நேரம் ஒன்பதரை மணிகடந்திருந்தது. எதிர்பார்த்ததை போலவே மனித நடமாட்டம் எதுவுமில்லாது, என் இறப்பை ஏற்றுக்கொள்ளும்விதமாய் தயாராக நிற்கிறது அந்த கட்டிடம். லிப்ட் எதுவும் இல்லை, அத்தனை மாடிகளையும் ஏறித்தான் கடக்கவேண்டும். கிடுகிடுவென படிகளில் தாவியேறினேன்.

மூச்சிரைக்க பதினான்காவது மாடியை அடைந்தபோது, இதயம் இடியென இடித்துக்கொண்டிருந்தது. வியர்வை உடலை குளிப்பாட்டியிருந்தது. கண்கள் இருட்டிக்கொண்டு வந்ததால், படிகளில் சாய்ந்து அமர்ந்துகொண்டேன். நேரம் பத்தை தொட இன்னும் ஐந்து நிமிடங்கள் மீதமிருந்தது. அலைபேசியை எடுத்து அனிச்சையாகவே அம்மாவின் எண்ணுக்கு அழைத்தது எனது விரல்கள்.

“என்னப்பா?. நல்லாருக்கியா?”

“இருக்கேன்மா..”

“சாப்டியா?..”

“ஹ்ம்ம் சாப்ட்டேன்.” வழக்கமாக இந்த பேச்சோடு அழைப்பினை துண்டித்துவிடும் நான், இன்று ஏனோ அமைதியாக காத்திருப்பது அம்மாவுக்கு சற்று விசித்திரமாக தெரிந்திருக்கக்கூடும்.

“எதுவும் பிரச்சினையாப்பா?. பணம் காசு எதுவும் வேணுமா?”

“அதல்லாம் ஒண்ணுமில்லம்மா. நீ நல்லா இருக்கியா?. உடம்ப பார்த்துக்கோ, நேரா நேரத்துக்கு சாப்பிடு.”

ஓரிரு வினாடிகள் மௌனத்துக்கு பிறகு, “என்னய்யா உடம்பு கிடம்பு சரியில்லையா?” கேள்விக்குறியோடு சந்தேகக்கணையும் சேர்ந்தே வந்தது.

அவசரமாக அழைப்பை துண்டித்தேன்.

யோசிக்கவெல்லாம் மனதிற்கு அவகாசம் கொடுத்திடாமல் சட்டென எழுந்து, மாடியின் விளிம்பில் நின்று கீழே எட்டிப்பார்த்தேன்.. வெகு அரிதாகவே வாகன போக்குவரத்து தென்படுகிறது. குறைவுயிராய் கிடக்கையில், அனுதாபத்தோடு ஆம்புலன்ஸ்’ஐ அணுகும் நிதானம் அங்கு தென்படவில்லை என்பது சற்று ஆறுதல் அளித்தது.

சரி குதித்துவிடலாம் என்கிற தீர்மானத்தோடு இன்னும் விளிம்பினை நோக்கி நகர்ந்து வந்தேன். கால் கிடுகிடுத்தது, உடல் முழுவதும் ரத்த ஓட்டம் அமிலமாய் எரியத்தொடங்கியது. அழுகை என்னையும் மீறி. ததும்பி வழிந்தது.

எவன் சொன்னது தற்கொலை என்பது கோழைத்தனம் என்று?  இதோ. இந்த நிமிடத்தில் இங்கிருந்து நான் குதிப்பதற்கு ஒரு அனாயச துணிச்சல் வேண்டும். வாழ்வதற்கான துணிச்சலை காட்டிலும், சிலபல கிலோக்கள் கூடுதல் துணிச்சல் அவசியம்.

ஆறு முறை எத்தனித்தும் இன்னும் குதித்திட முடியாமல் தடுமாறி நிற்கிறேன். கடவுளே, என்ன இது சோதனை? இவ்வளவு நேரமாய் மனதை சாவிற்கு ஆயத்தப்படுத்தியிருந்தும், கடைசி புள்ளியில் இப்படி தடுமாறுகிறதே. கண்களை மூடி, மூச்சினை உள்வாங்கி, இதுவரை பட்ட கஷ்டங்களிலேயே உச்சபட்ச கவலையை மனதில் நிலை நிறுத்தினேன். கால் இடறுகிறது. ஐயோ.

தடுமாறிவிட்டேன். காற்றில் மிதக்கிறேன், உடல் முழுவதும் மின்சாரம் பாய்வதை போல உணர்கிறேன். இன்னும் சில கணப்பொழுதில் தரையில் மோதி சிதறப்போகிறேன். இடையில் ஏதோ கேபிள் ஒயரில் சிக்கிக் கொள்கிறேன். அதுவும் அறுந்து விழுகிறேன்.

“ஐயோ.. யாரோ கீழ விழுந்துட்டாங்க” குரல் எங்கிருந்தோ ஒலிக்க, நினைவு மெல்ல அஸ்தமித்தது.

கண்களை திறக்க முடியவில்லை. ஏதோ பீப் சத்தங்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. நினைவு தத்தித்தடுமாறி மெல்ல சிதறியபடியே மீண்டது.

மூக்கிலும், வாயிலும் ஏதோ குழாய்கள் சொருகப்பட்டு, பலவண்ண ஒயர்கள் உடல் முழுக்க இணைக்கப்பட்டு படுக்கையில் கிடக்கிறேன். ஐசியூ’வில்தான் இருக்கிறேன் போலும், மருந்து நெடி சுவாசத்தோடு கலந்துவிட்டது. எப்படி பிழைத்தேன்? அந்த பாழாய்ப்போன கேபிள் ஒயரில் சிக்கியிருக்கக்கூடாது, இப்படி குற்றுயிராய் கிடக்கவைத்துவிட்டது.

கண் பார்வை அரைகுறை தெளிவோடுதான் தெரிகிறது. இப்போதுதான் உணர்வுகளும் மெல்ல மேலெழுகிறது. உடல் முழுக்க வலி தெறிக்கிறது அழக்கூட திராணியற்றுக் கிடக்கிறேன். வாயில் சொருகியிருக்கும் குழாய், குமட்டிக்கொண்டு வருகிறது. எல்லாவற்றையும் பிய்த்து எறிந்துவிட்டு எழுந்து ஓடவேண்டும் போல தோன்றுகிறது.

மங்கலான பார்வையில் என் கட்டிலருகே வெகுநேரமாக நின்றுகொண்டிருக்கும் ஒரு உருவத்தை அப்போதுதான் கவனிக்கிறேன் அம்மா.. அம்மாவேதான்.. சேலையின் முனையில் வாய்பொத்தி அழுதுகொண்டு நிற்கிறாள். உணர்வற்ற என் கால்களை ஒரு கையால் பிடித்தபடி நிற்கிறாள்.

செவிலிப்பெண் ஒருத்திவந்து, அழுதுகொண்டிருக்கும் அம்மாவை கண்டிக்கிறாள். அங்கிருந்து வெளியேற்ற முற்படுகிறாள். விடாப்பிடியாக அங்கு நின்றபடி நகர மறுக்கிறாள் அம்மா ஐயோ.. நான் இறந்துபோனால், என் கஷ்டங்களையும் சேர்த்து அம்மாவின் தலையிலல்லவா சுமைகளாக ஏற்றிவிடுவேன். துடித்துப்போய்விடுவாளே. பெற்ற பிள்ளையின் இறப்பை, எதிர்கொண்டு வாழும் கொடும் சூழலை நினைத்தாலே குலைநடுங்குகிறது. எழுந்துசென்று அவள் கண்களை துடைத்துவிட்டு அழவேண்டும் போல இருக்கிறது. உயிர் வாழும் வரையில் வாழ்வது மட்டும்தான் சுமையாக தெரிந்தது, மரணத்தின் விளிம்பில் நிற்கும்போதுதான் வாழ்விற்கு பின்னால் நடப்பவற்றை யோசிக்க மனம் தூண்டுகிறது.

ஐயோ நான் சாகக்கூடாது. எப்படியாவது உயிர்பிழைத்து, வாழவேண்டும் ஏதோ ஒரு அதிசயம் நிகழ்ந்து குணமாகிவிடவேண்டும். ஐயோ.. என்ன இது? கண் பார்வை மெல்ல மங்கிக்கொண்டு வருகிறது.

மூச்சுவிட அதிகம் சிரமமாக இருக்கிறது.. நினைவுகள் முன்னும் பின்னுமாய் தடுமாறுகிறது.

ஏதோ அவசர பீப் சத்தம் ஒன்று விடாமல் ஒலிக்க, என்னை நோக்கி வேகமாய் ஓடிவருகிறார்கள் செவிலிப்பெண்கள்யாரோ ஒரு மருத்துவர் என் நெஞ்சின்மீது கைகளை வைத்து அழுத்துகிறார், என்னைச் சுற்றி எத்தனை பேர், என்னைப் பற்றும் கரங்கள் எத்தனை. அவசரமாக பல ஊசிகள் ஏற்றப்படுகின்றன.

கடவுளே.. எவ்வளவுபெரிய பிழையை செய்துவிட்டேன், எப்படியாவது இதிலிருந்து மீளவேண்டும் நான் சாகக்கூடாது…  நான் சாகக்கூடாது…

 

3 comments

  1. கதை மனதை தொட்டது. எழுதிய விதம் தெளிந்த நீரோடைபோல் இருந்தது. பாராட்டுக்கள் சார்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.