சென்ற மாதம் மறைந்த எழுத்தாளர் வில்லியம் ட்ரெவர் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெறுவார் என்று பல ஆண்டுகளாகப் பேசப்பட்டு ஏமாற்றத்தில் முடிந்தது. சிறுகதை வடிவத்தை மிகச் சிறந்த வகையில் கையாண்ட ட்ரெவர் குறித்து இனி ஆர். அஜய் எதுவும் எழுதினால்தான் உண்டு. மற்றபடி அவர் பெயர் தமிழில் பேசப்படும் வாய்ப்புகள் குறைவு.
பாரிஸ் ரிவ்யூ தள நேர்முகம் ஒன்றில் அவரிடம் சிறுகதையின் வரையறை என்ன என்று கேட்கப்படுகிறது. அதற்கு பதிலளிக்கும் ட்ரெவர், அது ஒரு கண்ணுறு கலை என்று சொல்கிறார் (‘art of the glimpse‘). அதைத் தொடர்ந்து, சிறுகதையின் உண்மை வெடித்துத் தெறிக்க வேண்டும் என்று அவர் சொல்வதை, அதன் மிகச் சிறிய வடிவத்தில் மிகப் பெரிய ஆற்றல் பொதிந்திருக்க வேண்டுமென்பதாய் புரிந்து கொள்கிறேன். அது எதைச் சொல்லாமல் விடுகிறதோ, அதுதான் சிறுகதையின் பலம் என்கிறார் அவர். அர்த்தப்படுத்துதல்தான் அதன் நோக்கம் – வில்லியம் ட்ரெவரின் சொற்களில், ‘It is concerned with the total exclusion of meaninglessness‘. வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் வகையில் நாவல் வடிவம் பெரும்பாலும் பொருளற்றதாகவும் அலைவுகள் கொண்டதாகவும் இருக்கலாம், ஆனால் சிறுகதை வடிவம் கலையின் சாரம் என்று அவர் வரையறை செய்கிறார் (‘It is essential art‘). நாவல்கள் ரத்தமும் சதையும் கொண்ட மனிதர்களைக் காட்டினால் சிறுகதை மனித வாழ்வின் ஆதார எலும்புகளை தொட்டுக் காட்டுகிறது.
oOo
466 சொற்களே கொண்ட நரோபாவின் ‘திருமிகு. பரிசுத்தம்‘ குறுங்கதையாய் வாசிக்கப்படும் என்று நினைக்கிறேன். குறுகிய வடிவம் கொண்டது என்பதால் சிறுகதை செய்யும் வேலையை குறுங்கதை இன்னும் வேகமாய்ச் செய்ய வேண்டும், அதன் சொற்கள் இன்னும் கனம் கொண்டிருக்க வேண்டும். ஆனால், ஒரு குறுங்கதை கண்ணுறும் காட்சி கணப்பொழுது என்பதால் அது விவரிக்கும் காலம் யுகங்களாய் இருக்க முடியாது என்றில்லை.
திருமிகு. பரிசுத்தம் கதை மிக எளிய, இலகுவான மொழியில் சொல்லப்படுகிறது. நரோபாவின் ஆரம்ப கால கதைகளைப் படித்தவர்களுக்கு இங்கு அவர் கடந்து வந்திருக்கும் தொலைவு ஆச்சரியப்படுத்துவது. பெருமூச்சுகளோடு சொல்லி வந்த கதைகளை அவர் இப்போது ஒரு புன்னகையுடன் சொல்கிறார். மிகச் சாதாரணமான தொனியில், “ஒவ்வொரு முறையும் இது இப்படிதான் நிகழ்கிறது,” என்று, காவியங்கள் மற்றும் காலமின்மைகளைப் பற்றிய கவலைகள் இல்லாமல் கதை துவங்குகிறது. அடுத்த வரியிலேயே, ‘எப்போது வரிசையில் நின்றாலும், எங்கிருந்தோ வரும் நபர் அவருக்கு முன் உரிமையுடன் வந்து நிற்பார்,‘ என்று கதைக்குரியவரின் பிரச்சனை சொல்லப்பட்டு விடுகிறது. அதற்கு அடுத்து,
“பதவி உயர்வு கிடைக்காததற்கும், கார் வாங்காததற்கும், மனைவியுடன் சேர்ந்து மாமனாரின் சொத்துக்கு மல்லுக்கு நிற்காததற்கும் என்ன காரணமிருக்க முடியும் என ஆராய்ந்து பார்த்ததில் அவருக்கு ‘வெல்லும் விசை’ இல்லை எனக் கண்டறிந்து சொன்னார் உளவியல் நிபுணர். ஆகவே ‘வெல்லும் விசை பெருக்கி ஆலோசகர்’ திருமிகு. பரிசுத்தத்தை அவரது அலுவலகத்தில் சந்திக்க வந்தார்கள்.”
என்று விஷயத்துக்கு வந்து விடுகிறார் நரோபா. ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னிருந்த நரோபா இந்த இடத்துக்கு வர இரண்டு பக்கங்கள் எடுத்துக் கொண்டிருக்கலாம்.
அதன் பின்,
“திருமிகு. பரிசுத்தம் எழுதிய “வெறுப்பெனும் ஏணியில் ஏறி வெற்றிக்கனியை ருசி” எனும் புத்தகம் மாண்டரின், பைசாசிகம், ப்ராக்ருதம், பாலி, மைதிலி, சமஸ்க்ருதம், போஜ்புரி, உருது உட்பட 82 உலக மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.”
என்ற அறிமுகத்தில் திருமிகு பரிசுத்தம் யார் என்பதும் இந்தக் கதையின் மிகைகளும் நிறுவப்பட்டு விடுகின்றன.
அதற்கு அடுத்த இரு பத்திகளில் கதைக்குரியவர் இங்கும் ஒரு மிதியடியாய் இருப்பதைக் காட்டியபின் கதை திருமிகு. பரிசுத்தத்தின் அறைக்குள் நுழைகிறது. அங்கு நாம் அவரது வெல்லும் விசையை நன்றாகவே அறிந்து கொள்கிறோம். ‘கார்ல் மார்க்ஸ், மாஜினி, முசோலினி…‘ முதலான கனவான்களோடு திருமிகு பரிசுத்தம் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் போதாதென்று, ‘பனிமலையில் வைகிங் உடையில் ஒரு மாமூத்தின் தலை மீது அவரும் அவருடைய சகாவும் கால் வைத்தபடி நின்றிருந்த புகைப்படம் அவருடைய நாற்காலிக்கு நேர் பின்னே‘ மாட்டப்பட்டிருக்கிறது. இதையடுத்து ஒரு அபத்த உரையாடல் நிகழ்கிறது. சமூகம் ஒரு டார்வினிய சோதனைக்கூடம், அதில் வெல்லும் விசை கோபத்தால் அருளப்படுவது என்பதுபோல் திருமிகு பரிசுத்தம் மேற்கொள்ளும் விசாரணை தொடர்கிறது, ஆனாலும் பயனில்லை.
““பேஸ்புக்ல உண்டோ?”
“இருக்கேன்”
முகம் பிரகாசமானது.
“என்ன செய்வீங்க?”
“தினமும் பூ படம், இல்லைன்னா அழகான குழந்தைங்க படம் போட்ட குட் மார்னிங், குட் நைட் மெசேஜ் போடுறதோட சரி”
திருமிகு. பரிசுத்தத்தின் முகத்தில் எரிச்சலின் ரேகை படர்ந்தது”,
என்று தொடரும் உரையாடலின் முடிவு கதைக்குரியவர் எதற்கும் கோபப்படாதவர் என்று உணரும் இடத்துக்கு வந்து சேர்ந்ததும், ஒரு தேர்ந்த சிறுகதைக்குரிய திருப்பம் நிகழ்கிறது.
‘அந்நொடியில் அறையிலிருந்த செவ்வொளி மறைந்து எங்கும் நீல நிறம் சூழ்ந்தது. திருமிகு. பரிசுத்தம் சட்டென ஒரு அழகிய பெண்ணாக உருமாறினார். “ஆதிமூலமே பரம சோதியே, உலகிற்கெல்லாம் காரணப்பொருளாய் இருப்பவனே… தீர்ந்தது எமது சாபம்,” என்று கூறிவிட்டு சாளரத்தின் வழியே…’
பறந்து செல்கிறார். ஒரு காலத்தில் அவர் இந்திரனாக இருந்திருக்கக்கூடும்.
கதையின் முடிவு, இவ்வுலகம் சபிக்கப்பட்ட ஒன்றாகவும், இங்கு வெற்றி பெற்றவர்கள் சபிக்கப்பட்டவர்களாகவும் இதன் நோய்மையால் பீடிக்கப்பட்டவர்கள் குழப்பத்தில் தவிக்கும் புண்ணியாத்மாக்களாவும் இருப்பதாய் நினைக்க வைக்கும் வகையில் கதையைப் புரட்டிப் போடுகிறது. திருமிகு பரிசுத்தம் யார் என்ற கேள்வி எழாமலே நாம் அதற்கான விடையை உணர்கிறோம்.
One comment