அவன் கால்களை பாம்பு சுற்றிக்கொண்டது
அதை உதறிவிட்டு மூச்சிரைக்க ஓடினான்
(பயப்பட வேண்டாம்,
அந்த கவிதையை இங்கு எழுதப்போவதில்லை)
வீட்டுக்குச் சென்று இருட்டில் ஒளிந்துகொண்டான்
ஏதோ ஊர்ந்து வருவது போல் தெரிந்தது
மறுபடியும் கால்களைச் சுற்றி அதே பாம்பு
கையால் அதை பிடுங்கி தூரே வீசிவிட்டு
மறுபடியும் ஓடினான், இம்முறை மூச்சை அடக்கி
கிணற்றுக்குள் ஒளிந்துகொண்டான்
விடாது கருப்பு போல் பாம்பு அங்கும் வந்தது
தன் கால்களை அது சுற்றிக் கொள்ளும்முன்
வெளியேறி மரத்தின் மேல் ஏறினான்
அவனுக்கு மேலே இருந்த ஒரு கிளையிலிருந்து
பாம்பு அவனை நோக்கி இறங்கியது
பீதியுடம் கீழே இறங்கி கோவில் வாசலில்
உட்கார்ந்து கொண்டிருந்த சாமியாரிடம் சென்று
“நான் எங்கு சென்றாலும் அந்த பாம்பு என்னை
எப்படி கண்டுபிடிக்கிறது?” என்று கேட்டான்
அவன் கைரேகையை பார்த்த சாமியார்
உரக்கச் சிரித்துவிட்டு சொன்னார்
“உனக்கு தெரியாதா, பாம்பறியும் பாம்பின் கால்”
ஒளிப்பட உதவி – freedesignfile.com