யவனிகா ஸ்ரீராம் ஞானகூத்தனை பற்றிய அவரது கட்டுரையில், 80களிலும் 90களிலும் மிக அதிகமாக விமர்சிக்கப்பட்டவரும், அவற்றுக்கு கவிதைகள் வழியாக எதிர்வினையாற்றியவரும் ஞானக்கூத்தன்தான் என குறிப்பிடுகிறார். அதற்கான காரணங்களை நம்மால் விளங்கிக் கொள்ள முடிகிறது.
“நான் காப்பியங்களில் நம்பிக்கை கொண்ட கவிஞன்” என வெளிப்படையாக அறிவித்துகொள்ளும் அவர் “கவிதைன்னு வரும்போது அப்போ திராவிட இயக்கம் உதிக்குது. திராவிட இயக்கத்தின் கொள்கைகள் கிட்டத்தட்ட பிரிட்டீஷ் கொள்கையை ஒட்டி இருந்தன. நம்ம கலை இலக்கியங்கள் மேல நமக்கு மதிப்பு குன்றச் செய்யறது, அவற்றால நமக்குப் பிரயோஜனம் இல்லை, நமக்கு அவமானமே தவிர வேறொண்ணுமில்ல அப்படிங்கற கருத்த அறிமுகம் செய்தது” எனவும், “அதுக்கு தமிழ்லயெல்லாம் ஆர்வம் கிடையாது. திமுக தமிழப் பத்தி பேசுச்சே தவிர தமிழுக்கு உருப்படியான காரியம் எதுவும் செய்தது கிடையாது” எனவும் திராவிட இயக்கங்களை பற்றி தீவிரமாக விமர்சிக்கிறார் (காலச்சுவடு நேர்காணல்).
மற்றொரு கட்டுரையில், புதுமைபித்தன், பிச்சமூர்த்தி, க.நா.சு போன்ற முன்னோடிகளைத் தவிர்த்துவிட்டு புதிய தந்தை வடிவங்களை உருவாக்க இந்த இயக்கங்கள் முனைந்து கொண்டிருந்தன என்றும் சொல்கிறார். மேலும், கல்லூரி பல்கலைக்கழகங்கள் மீதான தீவிர விமர்சனங்களை வைத்தபடிதான் இருக்கிறார்- “தமிழ்த் துறையாளர்கள் பெரும்பான்மையானவர்கள் கலாசாரத்தைப் பாதிப்பில்லாம பாத்துக்கிடணும்னு நெனைக்கிறாங்க”. இதன் காரணமாகவே நவீன தமிழ் இலக்கியம் கல்லூரி பாடத்திட்டங்களில் இடம்பெறுவது சிக்கலாக இருக்கிறது என்றும் சொல்கிறார். சென்ற பகுதியில் சுட்டிகாட்டப்பட்ட எதிர்ரெதிர் உலகங்கள் கவிதை பண்டிதர்களைப் பகடி செய்கிறது.
வானம்பாடிகள் பற்றியும் அவருக்கு பெரிதாக மரியாதை ஒன்றும் இல்லை. “இப்படிப்பட்ட கவிதைகள் வாசகர்களின் கவனத்தை ஈர்க்கும் அளவுக்குப் பிற வகையான கவிதைகளால் முடியாது என்பது போன்ற ஒரு கருத்து உருவாகத் தொடங்கியது. எதற்காகக் கவனம் ஈர்க்கப்படுகின்றது என்பதைவிடக் கவனத்தை ஈர்க்கும் முயற்சியே பாராட்டுக்குரியது என்ற எண்ணம் பரவலாகியது.” இதன் விளைவாக நவீன இலக்கிய உணர்வற்ற தமிழ் விரிவுரையாளர்கள், ஜனரஞ்சக இதழ்களில் எழுதுபவர்கள், மரபுக் கவிதை படைத்தவர்கள் என பலரும் தம்மை வானம்பாடிகள் எனச் சொல்லிக் கொண்டனர் என்கிறார். க.நா.சு அவர்களை முழுமையாக நிராகரித்ததையும் பதிவு செய்கிறார். தீவிர இலக்கியத்திற்கு எதிரான மனப்போக்கு சமூகத்தில் இயங்கிய காலகட்டத்தில் அவர் கறாரான, சமரசமற்ற இலக்கிய ஆளுமையாகத் திகழ்கிறார்.
.
“தமிழிலக்கிய வரலாற்றிலேயே மரணம் பற்றி அதிகமாகச் சிந்தித்து எழுதியது புதுக்கவிதைதான்,” என்கிறார் ஞானக்கூத்தன். புதுக்கவிதை புனைபவர்கள் மரபுக் கவிதை எழுதுபவர்களைக் குறித்த முக்கியமான விமர்சனம் அவை துதிப் பாடல்களாக மட்டுமே எஞ்சி இருக்கின்றன என்பதுதான். மரபுக் கவிஞர்கள் புதுக்கவிதை மீது வைத்த விமர்சனமும், ‘அது சோகத்தை போற்றுகிறது, அழுமுகமாக இருக்கிறது’ என்பதுதான். “இரண்டு நிலைகளும் உண்மை என்றே சொல்ல வேண்டும். சாவு பற்றி எழுதாத கவிஞர்களே இல்லை என்று சொல்லிவிடலாம்,” என்கிறார் ஞானக்கூத்தன். அவரும் அதற்கு விதிவிலக்கல்ல. நேரடியாக மரணத்தை பற்றியது அல்ல என்றாலும், பிரிவை பற்றி பேசும் சரிவு எனும் கவிதையில் “சூளைச் செங்கல் குவியலிலே..தனிக்கல் ஒன்று சரிகிறது” என எழுதுகிறார். அன்று வேறு கிழமை, காலி போன்ற கவிதைகளிலும் மரணம் பேசபடுகிறது.
ஆனால் மரணமும் சோகமும் மட்டுமல்ல, புதுக்கவிதையில் அங்கதமும் நகைச்சுவையும் பிரமாதமாக வெளிபட்டிருக்கின்றன என்பதும் உண்மையே. சமகாலத்தில் இதற்கு மிகச் சிறந்த உதாரணம் ‘இசை’யின் கவிதைகள். ஞானக்கூத்தன் அவருடைய ஆனந்த கனவு பல காட்டல் எனும் கட்டுரையில் இப்படி பதிவு செய்கிறார் “கடந்த ஐம்பது ஆண்டுகளில் நவீன கவிதை அதிர்ச்சியை சற்றுக் கூடுதலாகப் படைத்துக் காட்டியிருந்தும் அது தன் நகைச்சுவையை இழந்துவிடவில்லை. சொல்லப் போனால் 20ஆம் நூற்றாண்டில்தான் தமிழில் நகைச்சுவை அதிகமாகக் கவிதையில் வெளிப்பட்டிருக்கிறது.” ஞானக்கூத்தனின் பல கவிதைகள் புன்முறுவல் சுமந்து வருகின்றன. இன்னும் சொல்வதானால், இன்றைய நவீன கவிதைகளின் அங்கத தொனி அவரிடமிருந்து வேர்கொண்டதாக தோன்றுகிறது. நவீன கவிதை இருண்மையை, இருத்தலியல் சிக்கலை மட்டும் பேசும் வடிவமாக இருந்த காலத்தில் இது ஒரு பெரும் பாய்ச்சல் என்றே தோன்றுகிறது. “நவீனமான ஒன்றை நவீனம், நவீனம் என்று பரபரப்பாகப் பேசாமல் இயல்பாக்கிக் கொண்டு இயல்பாகப் பேசுவது நவீன கவிதை இயலில் ஒரு கூறு,” என ஒரு கட்டுரையில் எழுதுகிறார்.
ஞானக்கூத்தன் தான் நெருங்கி அறிந்த ஆளுமைகளைப் பற்றியும் எழுதியிருக்கிறார். ம. நவீன் தனது கட்டுரையில் ஆத்மாநாமின் தோற்றம் குறித்து ஞானக்கூத்தனின் கட்டுரையின் வாயிலாக அறிந்துகொண்டதாக சொல்கிறார். நகுலன், க.நா.சு, ஓவியர் ஆதிமூலம் ஆகியவர்களைப் பற்றி அவர் எழுதிய நினைவோடைகள் முக்கியமானவை. கண்ணீரைக் கணக்கிட்டவர் எனும் கட்டுரை க.நா.சுவின் பங்களிப்பு குறித்து பேசும் மிக முக்கியமான கட்டுரை. தனிப்பட்ட நினைவுகள் என்றில்லாமல், அன்றைய இலக்கியச் சூழல், அதன் அரசியல் பிணக்குகள் என பலவற்றிற்கும் சாட்சியாக இருக்கிறது அக்கட்டுரை. மேலும் க.நா.சு எனும் கவிஞர்- விமர்சகரை மதிப்பிடவும் முயல்கிறது.
ஞானக்கூத்தன் மேற்கோள் காட்டிய க.நா.சுவின் கவிதை ஒன்று சட்டென புன்னகையை தருவித்தது.
பிடி சாம்பலில் ஈரம் தோன்றுவதைப் போல
நாவல்களிலும் கவிதை ஈரம் தோன்றி
கண்ணீர்த் துளியை வரவழைக்கும்
வித்தை அவளுக்கு கலபமாகக் கை
வந்து விட்டது. நூறு நாவல்களையும் அவன்
அழுது கொண்டேதான் எழுதினாள்.
அக்காலத்து பெண் வெகுஜன எழுத்தாளரை பகடி செய்கிறது.
இக்கட்டுரை பெரும் சோகத்தையும் வருத்தத்தையும் அளிக்கிறது. அவருடைய சமரசமற்ற தன்மைக்காக பலராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளார். எளிய அரசியல் காரணங்களுக்காக அவருக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்கிறார். பிச்சமூர்த்தியைக் காட்டிலும் நவீன கவிதையை அதிகமும் எழுதியவர் கநாசு என்கிறார். ஞானக்கூத்தன் மேற்கோள் காட்டும் கநாசுவின் கவிதைகள் மனதை அழுத்துகின்றன. அவருடைய முன்னோடித் தன்மையை நிலைநிறுத்துவதாக இருக்கின்றன.
“க.நா.சு.வின் கவிதை அவர் வாழ்ந்து வந்த காலத்தைப் பிரதிபலித்தது. தன் கவிதைகளில் எழுத்து வகை பற்றி எழுதினார். தன் நண்பர்களைப் பற்றி எழுதினார். இதில் அவர் சங்ககாலத்துக் கபிலரை நினைவூட்டினார். புதுமைப்பித்தனைப் பற்றி அவர் எழுதியுள்ள கவிதை எளிமையாகத் தொடங்கி, வளர்ந்து, வளர்ச்சி ததும்பி, சோகத்தில் முடிகிறது.” என்கிறார்.
நகுலனைப் பற்றி அவர் எழுதியிருக்கும் ‘தனிமையின் உபாக்கியானம்’ எனும் கட்டுரை நான் வாசித்தவரையில் அவரெழுதிய ஆக சிறந்த கட்டுரைகளில் ஒன்று, மனதிற்கு நெருக்கமானதும் கூட. நகுலனுடனான தனது அனுபவங்களை சொல்லிச் செல்கிறார். தான் அவதானித்த நுண்மையான ஆளுமை கூறுகளைப் பதிவு செய்கிறார். நகுலன் தன்னை failed artist என கருதிக் கொண்டார், அந்த பிம்பத்துடன் தன்னை பொருத்திக்கொள்ள முயன்றார் என்கிறார் ஞானக்கூத்தன். மாபெரும் படைப்பாளிகள் அப்படிப்பட்டவர்களாகவே இருக்க முடியும் என நம்பும் ஒரு சாரார் இருக்கத்தான் செய்கிறார்கள். “நகுலனுக்குக் கவலை இருந்தது. அந்தக் கவலை தமது படைப்புகள் காலத்தை வெல்லுமா என்பது பற்றி அல்ல. அவை வாசகன் மனதில் எப்படிப்பட்ட சலனத்தை ஏற்படுத்துகின்றன என்பதை அறியத்தான் அவர் விரும்பினார்,” என எழுதும்போது ஒரு படைப்பாளியின் நியாயமான எதிர்பார்ப்பு என்றைக்கும் ஒன்றாகவே இருந்திருக்கிறது, அவன் கோருவது செல்வத்தையோ புகழையோ அல்ல, ஒரு அடிப்படை கவனிப்பை என்று தோன்றுகிறது. நகுலன் புத்தகங்கள் அன்று விற்கவில்லை. பதிப்பக அரசியல் காரணமாக எவரும் பதிப்பிக்கவும் முன்வரவில்லை என ஞானக்கூத்தன் எழுதுகிறார். நகுலன் புத்தக வெளியீட்டை சூதாட்டத்துடன் ஒப்பிடுவதை கவனிக்க வேண்டும் என்கிறார்.
ஞானக்கூத்தன் நகுலனின் வினோதமான நடத்தையை பதிவு செய்கிறார். நகுலன் தன் தோல்வி உணர்வுக்கு ஒருவகையில் தனது தனிமைதான் காரணம் என்று நம்பினார். அவரைச் சுற்றி ஒரு சிறு குழு உருவாகியிருந்தது. “தனக்குப் பிடித்த கவிஞர்களில், இவர்களில் ஒருவரைக் குறிப்பிடுவார். தன் கவிதையின் செல்வாக்கு மற்றவர் கவிதையில் இருப்பதாகக் காணும் படைப்பாளியின் வழக்கத்துக்கு மாறாக மற்றவர் கவிதைகளின் சாயல் தனது கவிதையில் இருப்பதாகக் கூறிக்கொண்டார். இப்படிக் கூறியதால் சம்பந்தப்பட்ட கவிஞர்களை மகிழ்விக்க முயன்றார் என்றே சொல்ல வேண்டும். ஆனால், நகுலன் கவிதையில் யாருடைய சாயலும் கிடையாது என்பதுதான் உண்மை. நகுலன் அப்படிக் கூறியது தனக்கு நெருக்கமான வாசகர்களை உருவாக்கிக்கொள்ளத்தான். இதை நான் தவறாகக் குறிப்பிட விரும்பவில்லை. நகுலன் வாய் திறந்து சொல்லாததை உரத்துச் சொன்னவர்கள் உண்டு.”
ஆதிமூலம் பற்றி அவர் எழுதிய கட்டுரையும் முக்கியமானதே. அவருடைய ஓவியத் திறனை மெச்சும்போது, “அவர் ஓவியம் வரைந்திருக்கிற பக்கத்தில் கவிதைகளை வெளியிடுவது கஷ்டம். அவர் ஓவியத்தில் காட்டியிருக்கிற வெளிப்பாட்டிற்கு இணையான கவிதையாக அது இருக்க வேண்டும்,” என எழுதுகிறார். இறுதிக் காலங்களில், ‘உருவங்களிலிருந்து உருவமற்ற ஓவியங்களுக்கு ஆதிமூலம் பயணம் மேற்கொண்டார்’ என்கிறார் ஞானக்கூத்தன். இந்நிலையை முன்வைத்து கலையை பற்றி அவர் எழுப்பும் கேள்வி முக்கியமானது.
“என்னுடைய இலக்கியம் சர்வதேசத்தன்மை உடையதாக இருக்கலாம். ஒரு ஆசிரியன் என்கிற முறையில் என்னுடைய தேசத்தைப் பற்றித்தானே நான் எழுத முடியும். என்னுடைய நாடு அதில் தெரிய வேண்டும் இல்லையா? நாடு கடந்து போனால் வெறும் நீலமயமான ஆகாயமும் கடலும்தான். இயற்கைதான். அந்த விதமான இயற்கை எந்த அளவுக்கு நவீன ஓவியங்களில் பதிவாகியிருக்கிறது? இந்தக் கேள்விகள் எல்லாம் ஒரு புறமிருந்தாலும் அந்தப் பாதையில் பயணம் போய் அதில் ஒருவிதமான வசீகரத்தன்மை இருப்பதைக் கண்டுபிடித்தார். நமக்கும் உருவமற்ற ஓவியங்களைப் பார்க்கிற அனுபவத்தை அவரால் கொடுக்க முடிந்தது. அது அவருக்குக் கிடைத்த வெற்றி.” என ஆதிமூலம் கட்டுரையை முடிக்கிறார்.
ந.பிச்சமூர்த்தி எழுத்து பத்திரிக்கைக்கு அளித்த நேர்காணலில் சொல் ஓய்ந்து மவுனத்திற்கு போனாலும் கூட நான் மகிழ்வேன் என சொன்னது நினைவுக்கு வருகிறது.
தேன்மொழியின் திணை புனம் எனும் கட்டுரையில் சங்க இலக்கியத்தை பற்றி அவர் சொல்வது கவனிக்கத்தக்கதாக இருக்கிறது. “சங்க இலக்கியம் தமிழர்கள் பெருமைப்படத் தகுந்த கவிதைக் களஞ்சியம் என்பதிலிருந்து அது நவீனக் கவிதைக்குப் பயன்படும் உருவகமாகவும் மாறிவிட்டிருக்கிறது..இதற்குச் சான்றாக அவருடைய பல கட்டுரைகளையே சொல்லலாம். மரபு நம் ஆழத்தில் பதிந்துள்ளது அது மீறப்படும் போதும் மாற்றபடும்போதும் இருதரப்பும் அதற்கு எதிராக கிளர்ந்தெழும். அது கவிதைகளில் வெளிப்படத்தான் செய்யும்,” என்கிறார் அவர்.
நேர்காணல் ஒன்றில், “பழமைய மறுதலிச்சு உருவாகறது தான் புதுக்கவிதையோட சித்தாந்தமே. பொலிடிக்கலா பார்த்தா அவைதீகம் அதாவது மரபை மீறுதல்தான் க.நா.சுக்குப் பிடிச்சது. நீங்க பழமைய மறுக்கறவரா மீறுகிறவரா இருக்கும்போதுதான் உங்க படைப்புச் செயல்பாட்டுல ஜீவன் இருக்கும்,” என்கிறார்.
ஒரு படிமம் சங்ககாலத்தில் இருந்து நவீன யுகம் வரை எப்படியெல்லாம் உருமாறி வருகிறது எனும் ஆராய்ச்சி அவருக்கு உவப்பானது. மற்றொரு கட்டுரையான ‘நடைவரை சென்ற நாடிய பாதங்களில்’ நகுலனின் ‘மூன்று’ எனும் கவிதையை பற்றி எழுதுகிறார். “நகுலனின் ‘மூன்று’ என்ற கவிதை ஜாடைமாடையாகக் கூறப்பட்ட சுய சரிதையோ? தொடர்ந்து சீதைக்காக நடக்கும் இராம இராவண யுத்தத்துடன் சுசீலாவுக்காக நாயகன் யாருடன் போராடினான்?” எனும் ஐயத்துடன் முடிகிறது. குக்கூ என்றது கோழி கட்டுரை களவியல், கற்பியல் குறித்து பேசுகிறது. ‘ஆனந்த கனவு பல காட்டல்’ எனும் கட்டுரை சி.சு.செல்லப்பாவிற்கும் க.நா.சு விற்கும் இடையில் புதுக்கவிதை குறித்து நிகழ்ந்த விவாதங்களை பேசுகிறது. உள்ளடக்க புதுமை என்று செல்லப்பா சொல்ல, உருவத்திலும் புதுமை எனும் கருத்தை க.நா.சு முன்வைத்தார். ஒரு கவிதை ஒருபோதும் முடிக்கப்படுவதில்லை’ என்று போல் வலேரி சொன்ன கருத்தையும் இங்கு குறிப்பிட வேணும், எனச் சொல்லி கவிதையின் அமைப்பை பற்றி, அதன் தன்மையை பற்றி விரிவாக பேசுகிறார் ஞானக்கூத்தன்.
கலை பற்றிய ஞானக்கூத்தனின் சொற்கள் ஆழமானவை. “கலை யதார்த்த – நிஜ உலகப் பொருள்களின் அளவை மாற்றி அமைத்துக்கொள்கிறது. பொருள்களை அவற்றின் அளவிலிருந்து விடுவிப்பதே கலையின் பிரதான நோக்கம் போல் காண்கிறது. ஒரு பொருளின் துல்லியத்தை பொருளிலிருந்து அகற்றினால் பொருளிடத்தில் நமக்கிருந்த பரிச்சயம் பாதிக்கிறது. பொருளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் புதிய அளவு மருட்சியை விளைவிக்கிறது. எனவேதான் புதுமையின் விளைவுகளில் ஒன்றாக மருட்சியைக் கூறுகிறார் தொல்காப்பியர்,” என்று எழுதுகிறார் அவர்.
மற்றொரு தருணத்தில் “கலை என்றாலே ஒருவித அழைப்புதான். ஒருவர் பாடினால் தாங்கள் அழைக்கப்பட்டது போல மக்கள் கூடுகிறார்கள். கலை அழைத்தால் அங்கே மக்கள் கூட்டமாகப் போகிறார்கள். ஓவிய, நாடகக் கலைகளும் அப்படித்தான்,” என்கிறார் ஞானக்கூத்தன், அகவல் எனும் சொல்லை விளக்கும் பொருட்டு நிசி அகவல் கவிதை தொகுப்பில்.
இறுதியாக, ஒரு கவிஞன் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அவருக்கு சில எதிர்பார்ப்புகள் இருந்தன. “தமிழ் மொழியோட ஆத்மா இருக்கே அது எப்போதும் ‘தளதளதள’ன்னு இருக்கும். ரொம்பத் துடிப்பு உள்ள சின்னக் குழந்தை மாதிரி. அதக் கண்டுபிடிச்சு அதன் அழகைப் பிரதிபலிக்கிறதுதான் அந்தந்தக் காலத்துக் கவிஞனோட கடமை.”
‘அப்படி எனக்கும் தமிழ்தான் மூச்சு, ஆனால் அடுத்தவர் மேல் அதை விட மாட்டேன்…’ என சொல்ல துணிந்த, தன் காலத்தை பிரதிபலித்த, தன் காலத்திற்கு அப்பாலும் ஒலிக்கும் கவிஞர் ஞானக்கூத்தனுக்கு இவ்வாண்டு விஷ்ணுபுரம் விருதுக்காக வாழ்த்துக்கள்.
-நிறைவு-