‘இரண்டே நிமிஷம்தான் அவகாசம். அதுக்கு மேல ஒரு நொடி கூட நீ உயிரோடு இருக்க முடியாது. இது எங்க ஜின்குலத்து மேல ஆணை’ அப்படின்னு ஒரு சின்னப்பயலப் பாத்து சபதம் போட்ட ஜீனி கத தெரியுமா?
பொலபொலவென விடிஞ்சது போல வெளிச்சம் மேலே வந்து விழுந்ததும் ஜீனிக்கு முழிப்பு தட்டியது. முழிப்புன்னா சாதாரண முழிப்பா… பெரிய யுகமுழிப்புல்ல அது. எம்புட்டு காலம் அந்த அரையாளு உயர ஜாடியில மண்ணுள்ளி பாம்பு மாதிரி சுருண்டு படுத்துகிட்டே கெடந்தது அது. முதல்ல கொஞ்சகாலத்துக்கு நாளு, நேரம்னு கணக்கெல்லாம் மனசுக்குள்ள ஓடிட்டிருந்தாலும் அப்புறம் எல்லாம் மறந்து மரத்துப்போயிட்டது. இப்ப பொசுக்குன்னு யாரோ ஜாடியை திறந்தவிட்ட மாதிரி அம்புட்டு வெளிச்சம் உள்ளாற. மளமளன்னு தன்னோட முழு உருவத்துக்கு வளர்ந்து நிமிர்ந்து நின்ன ஜீனி சுத்துமுத்தும் பாத்துட்டு தடால்னு குனிஞ்சு
‘பேரரசன் சாலமனுக்கு வணக்கம். நீரே எம் அரசர். எம் எஜமானர். ‘ அப்படின்னு சொல்லிகிட்டே ஒரு சுத்து சுத்தி சலாம் போட்டது. ஏன்னா, அது கடைசியா அந்த ஜாடிக்குள்ள அடைபடும்போது பேரரசன் சாலமனும் அவனுடைய வேட்டைபடைகளும் சுத்தி நின்னுட்டிருந்ததுதான் அதன் நினைப்புல இருந்தது. வேட்டைப்படைன்னா சாதாரணமானதா? ஜின்குலத்தை மொத்தமும் வேட்டையாடற அதிபயங்கர வேட்டைப்படை.
‘பேரரசன் சாலமனுக்கு அடிபணிகிறாயா இல்லை தண்டனைக்கு ஆளாகிறாயா’ன்னு ஒரே கேள்வியத்தான் எல்லா ஜீனிகளிடமும் கேட்டாங்க. அப்போ என்னமோ வீரமா ‘அதெல்லாம் முடியாது’ன்னு சவடால் விட்டது எவ்வளவு தப்பாகிப் போச்சு. இம்புட்டு வருசங்களுக்கு அப்புறம் இப்பபதான் தெரியுது அது எவ்வளவு முட்டாள்த்தனம்னு.
ஆனா சுத்திமுத்திப் பாத்தா சாலமன் அரசனோ அவருடைய வீரர்களோ யாரையும் காணல. அப்புறம்தான் அதுக்கு நினப்பு தட்டிச்சு. இதே மாதிரி ஒருதடவ யாரோ ஒரு குசும்புப் பிடிச்ச மீனவன் ஒருத்தன் ஜாடியை தொறந்துவிட்டு வேடிக்க பாத்த சம்பவம். அது சாதாரண சம்பவமா. பெரும் அவமானமாச்சே. அத நினச்சுக் கூட பாக்க விரும்பலன்னாலும் நடந்தது நடந்ததுதானே. ஒருவேள அதே மீனவன்தான் திரும்ப வந்து ஜீனியை வச்சு விளையாட்டு காட்ட நினைக்கிறானோ. ஆனா இந்தவாட்டி எப்படியும் ஏமாந்துடப் படாதுன்னு நினச்சுகிட்டே அம்மாம் உசரத்திலேந்து குனிஞ்சுப் பாத்தா ஒரு பொடிப்பய அதிர்ச்சியோட ஜீனியைப் பாத்துகிட்டு நிக்கிறான் தரையில.
படுபயங்கர கோபத்தோட ‘டேய், நீ திரும்பி வந்திட்டியா’ன்னு கேட்டபடிக்கு அவன் பக்கமா முகத்தை கொண்டு போனது.
யாரும் இல்லாத அத்துவானத்துல சாலமனுக்கு சலாம் போட்டு சுத்திசுத்தி வந்த ஜீனியைப் பார்த்தபோதே அந்த சின்னப்பயலுக்கு பயமெல்லாம் தெளிஞ்சி சிரிப்பு பொங்கிப் பொங்கி வர ஆரம்பிச்சிருச்சு. அம்மாம்பெரிய ஜீனியைப் பாத்த அதிர்ச்சியில மல்லாக்க விழுந்தவன் ஜிங்னு குதிச்சு எழுந்துட்டான்.
‘நீ நிஜமாவே ஜீனிதானா… கதைல படிச்சப்ப ஏதோ வேடிக்கையான கற்பனைன்னு நினச்சிட்டிருந்தேன்’ அப்படின்னு ஆச்சரியத்தில் வாயப் பொளக்கிறான்.
‘டேய்… இந்த விளையாட்டை எங்கிட்ட வச்சுக்காத. முன்ன ஏதோ அறியாமையால உங்கிட்ட ஏமாந்திட்டேன். பல நூறு வருஷம் ஜாடியில அடைபட்டுக் கெடந்தபோது கூட இவ்ளோ வருத்தப் பட்டதில்ல. ஆனா உங்கிட்ட ஏமாந்து போனத நினச்சு நினச்சு வருத்தப்படாத நாளே இல்ல தெரியுமா’ கோபமாக சொன்னது ஜீனி.
‘அய்யே! நீ யாரயோ நினச்சு என்னப் பாத்து பேசிட்டிருக்க. நான் எங்க உன்ன ஏமாத்தினேன்? இப்பதான் ஒன்ன மொதமொத பாக்குறேன்’ அப்படின்னு சொன்ன சின்னப்பயல் திரும்பவும் அடக்கமாட்டாம சிரிச்சுகிட்டே ‘ஆனா நீ மீனவன்கிட்ட ஏமாந்த கதைய நிறையவாட்டி கேட்டிருக்கேன்’ன்னு சொன்னான்.
ஜீனிக்கு இப்பவும் நல்லா நினைவிருக்கு. அந்தக் கதையத்தான் எல்லாரும் கேள்விப்பட்டிருப்பீங்களே. நிரம்ப பிரபலமான கதையாச்சே அது. அரேபிய அரசனின் புது மனைவியான ஷகர்சதா அவனுக்கு சொன்ன பல கதைகள்ல ஒண்ணு. பல வடிவங்கள்ல பலபேர் சொல்லி பரவின கதை. சாலமன் பேரரசன் ஆண்ட காலத்தில் ஜின் குலத்துகெதிரா பெரிய சண்டையே நடந்தது. எல்லா ஜீனிகளையும் சிறைபிடிச்சு, ஜாடியில அடைச்சு, அதுமேல சாலமன் முத்திரையும் பொறிச்சு, கடலுக்குள்ள வீசிட்டாங்க.
பல காலம் கடலுக்கடியில் கேட்பாரற்று கெடந்தப்ப அந்த ஜீனிக்கு யாராச்சும் வந்து காப்பாத்த மாட்டாங்களான்னு எவ்வளவோ ஏக்கமா இருந்தது. முதல் நூறு வருசம் யார் வந்து தன்னை ஜாடியிலிருந்து விடுதல செஞ்சாலும் அவரை அளப்பரிய பணக்காரனா ஆக்கிறேன்னு சபதம் போட்டுகிட்டது. ஆனா எந்த முட்டாளும் அதைக் காப்பாற்ற வரல.
அடுத்த நூறு வருசம் இன்னமும் ஆவலோடு தன்னை ஜாடியிலிருந்து விடுதல செய்யறவனுக்கு உலகத்தின் அத்தனை செல்வங்களையும் கொடுப்பேன்னு சபதம் போட்டது. பெரிய பணக்காரங்கிறத விட உலகின் ஒரே பணக்காரங்கிறது பிரமாதமான விஷயமாச்சே. ஆனா, அம்மாம் பெரிய கடல்ல அவ்ளோ சின்ன ஜாடி யாரோட கண்லயாவது சிக்கறது சுலபமான விஷயமா என்ன. ஒண்ணும் நடக்கல. அடுத்து நூறுவருசத்துக்கு, யார் தன்னை இந்த ஜாடியிலிருந்து விடுவித்தாலும் அவங்களுக்கு, தினமும் மூணு வரம் கொடுப்பேன்னு புதுமையா ஒரு சபதம் போட்டது. ஒரேயடியா அம்புட்டு செல்வத்தையும் கொண்டு கொடுக்கிறதுக்கு பதிலா தினமும் வேணுங்கிறத கேட்டு வாங்கிக்கலாமே. அப்பவும் ஒருத்தனும் ஜீனியை காப்பாத்த வரல.
எரிச்சலான ஜீனி ‘இனிமேலே யாராவது வந்து என்னை ஜாடியிலிருந்து விடுவிக்கட்டும், அவனை ஒரேயடியா கொன்னுடறேன்’ அப்படின்னு ஒரே போடா போட்டுட்டது. பின்ன… மனுசப்பயகளே உக்கார சிரமமான ஜாடியில அம்புட்டு பெரிய ஜீனி எம்புட்டு வருசம்தான் சுருண்டு கெடக்க. ஒரு நியாயம் தர்மம் வேணாம்… கோவம் வரத்தான செய்யும்.
அவ்வளவு எரிச்சலோட இருக்கிறப்பதான் அந்த மீனவன் வலையில் இந்த ஜீனியோட ஜாடி மாட்டிகிட்டது. அந்த மீனவனும் ஏதோ புதையல்தான்னு ஜாடிய திறந்து ஜீனியை வெளியேவிட்டுட்டான். நிரம்பவும் கௌரவமான முறையில் அவன்கிட்ட,
‘இந்தாப்பா என்னைக் காப்பாத்தினதுக்கு நன்றி. நான் போட்டுகிட்ட சபதப்படி உன்ன நான் கொன்னுதான் ஆகனும்னு வருத்தமா சொல்லிக்கிறேன். நீ எப்படி சாக விரும்பறேன்னு சொல்லு. அதே முறையில் உன்னை சாகடிக்கிறேன்.’ அப்படின்னு கேட்டுகிட்டது.
அந்த படுபாவி மீனவனோ மகா குசும்புப் பிடிச்சவன். ‘இம்மாம் பெரிய ஜீனியான நீ எப்படி இந்த சின்ன ஜாடிக்குள்ள அடைஞ்சி கெடந்தன்னு நம்ப முடியலயே’ன்னு ஒரு கேள்வியக் கேட்டு ஜீனிய குழப்பிவிட்டுட்டான்.
ஒருத்தன சாகடிக்கிறதுக்கு முன்னாடி அவன்கிட்ட தான் நிஜமாகவே ஜீனிதான்டாப்பான்னு நிரூபிக்க வேண்டிய அவசியம் இருக்கேன்னு ஜீனியும் நினச்சது. அதொன்னும் அவ்வளவு கடினமான வேலை இல்லயே. தானே ஜாடிக்குள்ள போய் உக்காந்துகிட்டு ‘இப்படித்தான்பா நான் நினச்ச மாதிரி என் உருவத்தை மாத்திக்கும் சக்தி வாய்ந்தவன். இப்பவாச்சும் நீ நம்புறியா’னு கேட்டது.
இவ்வளவு பொறுப்பா தன்னோட கேள்விக்கு பதில் சொல்லுதேங்கிற நன்றியுணர்ச்சிக் கூட இல்லாத அந்த மீனவன், ஜாடியை ‘டபால்’னு மூடி சாலமன் அரசனோட இலச்சினையையும் சேர்த்து இறுக்கி திருப்பி கடலுக்குள்ள வீசிட்டுப் போயிட்டான்.
எப்பேர்ப்பட்ட அவமானம். சாலமன் அரசனையே எதிர்த்து நின்ன புரட்சி ஜீனியை ஒரு சாதாரண மீனவன் ஏமாத்திட்டு போயிட்டானே. இவ்வளவுகாலமும் ஜாடிக்குள்ளயே புழுங்கி தவிச்சிட்டிருந்த ஜீனிக்கு இன்னிக்குத்தான் மறுபடியும் விடிவுகாலம் பொறந்திருக்கு. தன்னை ஏதோ கோமாளியா நினச்சு சிரிச்சிட்டிருக்கிற சிறுவனை உத்துப் பாத்தது.
‘நீ ரொம்ப சின்னப்பயலா தெரியற. இந்த ஜாடி உசரம் கூட இல்லயே. நீ அந்த ஜகஜ்ஜால மீனவனா இருக்க வாய்ப்பில்ல’ என்று சொல்லிவிட்டு பெருமூச்சு விட்டது. அந்த மீனவன் மட்டும் இப்ப சிக்கியிருந்தான்னா அவனோட விருப்பத்தை எல்லாம் கேக்காமலே ‘லபக்’னு விழுங்கியிருக்கலாம். ஆனாலும், ஜீனியா இருக்கிறதுக்குன்னு சில கட்டுபாடுகள் இருந்துதானே தொலைக்குது.
‘சரி சரி. என்னை ஜாடியிலிருந்து வெளியில் விட்டதுக்கு மிக்க நன்றி. ஆனா, என் சபதப்படி உன்னைக் கொன்னுதான் ஆகனும். சீக்கிரம் உன் விருப்பத்தை சொல்லு. எப்படி சாக விரும்பற நீ? இந்தமுறை ஒருவிஷயத்தை நல்லா மனசில வச்சிக்க. முன்ன ஏமாந்து போனது போல நான் இப்ப ஏமாற மாட்டேன். அந்தக் கதை உனக்கும் தெரியும்கிறதாலதான் சொல்றேன். இப்ப நான் ரொம்ப உஷார். நீ என்ன திட்டம் போட்டாலும் என்கிட்டேர்ந்து தப்ப முடியாது. நல்லாக் கேட்டுக்க’ கொஞ்சம் இடைவெளி விட்டுட்டு திரும்பவும் அழுத்தமா சொல்லுது.
‘உனக்கு இரண்டு நிமிட நேர அவகாசம்தான். அதுக்குள்ள நீ எந்த மாதிரி சாக விரும்பறேன்னு மட்டும் சொல்லு. வேற எந்தப் பேச்சுவார்த்தயும் நமக்குள்ள கிடயாது. இரண்டு நிமிசத்துல நீ எதுவும் சொல்லலன்னா உன்னை அப்படியே தூக்கி அலேக்கா சாப்பிட்டுட்டு போயிட்டே இருப்பேன்.’ அப்படின்னு சொல்லிட்டு விறைப்பா கையைத் தொங்கவிட்டுக்கிட்டு நிக்குது.
அப்பத்தான் முதல்ல சொன்ன சபதத்த போட்டது.
‘இரண்டே நிமிஷம்தான் அவகாசம். அதுக்கு மேல ஒரு நொடி கூட நீ உயிரோடு இருக்க முடியாது. இது எங்க ஜின்குலத்து மேல ஆணை’ அப்படின்னு ஒரேபோடா போட்டுடுச்சு.
இவ்வளவு காலமும் ‘நான் அந்த வரம் தருவேன். நான் இந்த வரம் தருவேன்’னு சபதம் போட்டுகிட்டிருந்த ஜீனி இப்படி ஒரேயடியா மொத்த ஜின் குலத்து மேலேயும் ஆணையிட்டு சபதம் போட்டது இதான் முதல்முறை. அதுவும் இரண்டே நிமிஷம்தான் அவனுக்கு உயிர்வாழும் அவகாசமாம்.
அந்த சின்னப்பயல் இதைக் கொஞ்சமும் எதிர்பாக்கல. அவனுக்கு அந்த ஜீனி கதையைக் கேட்டதிலிருந்து அதுமேல ஒரு தனிப்பாசம்தான். அது எப்படியிருக்கும், எப்படிப் பேசும், எப்படி அவ்வளவு வருசங்க பொறுமையா தண்டன அனுபவிச்சிருக்கு அப்படின்னு ஏகத்துக்கு நினப்பு. இதேக் கதைய விதவிதமான முடிவுகளோட அவன் கேட்டிருந்தாலும், விடுதலையான ஜீனி திரும்பவும் ஜாடிக்குள்ள போய் அடைபட்டுக் கிடந்ததுதான் அவன் மனசில் தங்கிட்டது. அத பாத்திடனும்னு ஆசப்பட்டானேத் தவிர அது நிஜமாகவே நடக்கும்னு நினைச்சிருக்கல அவன். இப்பப் பாத்தா கினறு வெட்ட பூதம் கெளம்பின கதையா ஆகிடுச்சு. இனி அந்த ஜீனியை தாஜா பண்ணி ஜாடிக்குள்ள அடைச்சிடலாம்னா அந்த உபாயமும் அதுக்கு தெரிஞ்சுப் போச்சு. இனி அத எப்படி ஏமாத்தி தப்பிக்கிறது? நேரமும் அதிகமில்லயே.
மொதல்ல பயமாகவும், அப்புறம் ஆச்சரியமாகவும் பாத்திட்டிருந்தவன் இப்ப சிரிச்சுகிட்டே ஜீனியைப் பாக்கிறான். இருக்காதா பின்ன… எவ்ளோ சக்திவாய்ந்த ஜீனி. ஆனா எப்படி தத்தியா மீனவன்கிட்ட ஏமாந்து மாட்டிகிட்டுதேன்னு ஒரே சிரிப்பு.
‘டேய், நான் சொன்னது விளங்கலயா உனக்கு?’ அவனோட சிரிப்புன்னால லேசா எரிச்சலான ஜீனி மிரட்டல் குரல்ல கேக்குது.
‘நீ என்ன புரியாத மொழியிலயா சொன்னே. வெளங்காம இருக்க’ன்னு சொல்லிட்டு இன்னமும் சிரிக்கிறான். அவனுக்கு இப்ப சுத்தமா பயமேயில்ல. ஜீனிக்கு அவனப் பாத்தா கொஞ்சம் பரிதாபமாவும் இருக்கு. சின்னப்பயலா வேற இருக்கான். ஒரு தட்டு இனிப்பு பண்டங்களை வரவச்சு கொடுத்தா இன்னமும் சந்தோஷமா சாப்பிட்டுகிட்டே சிரிப்பானா இருக்கும். ஆனா, இதுக்கு முன்னாடி பட்ட அவமானம் நினப்புல மீண்டும் வந்து மனசைக் கல்லாக்கிகிட்டது.
‘அதென்ன ஜின் குலத்து மேல ஆணை?’ன்னு சந்தேகம் வேற கேக்கறான் அவன்.
‘ஹ! உன்னோட பால்வடியற முகத்தப் பாத்து எனக்கிந்த பச்சாதாபம்லாம் வந்திடக்கூடாதுன்னுதான். இனிமே உன்னக் கொல்லாம விட்டா எனக்கு மட்டுமில்ல… ஒட்டுமொத்த ஜின்குலத்துக்கே அவமானம்லா…. சின்னப்பயல தப்பிக்க விட்டுட்ட ஜீனின்னு என் மேல பழி வந்தாலும் பரவால்லன்னு விட்டிருப்பேன். ஆனா ஜின் குலம் மேல அப்படி ஒரு பழி வரலாமா? அதுக்கு அப்புறமா இந்த உலகத்தில் ஒரு ஜீனியாவது தலைநிமிர்ந்து நடமாட முடியுமா? மொத்தமா காத்தோட காத்தா கரைஞ்சு காணாமப் போயிட வேண்டிதான். அதெல்லாம் கிடக்கட்டும். உனக்கான அவகாசம் போயிட்டிருக்கு. எப்படி சாக ஆசப்படற? வலியே தெரியாம செத்துப் போறதுக்குன்னு சில வழிகள் இருக்கு’ன்னு கருணையோட சொல்ல ஆரம்பிச்சது.
அந்த சின்னப்பயலும் இப்ப சிரிப்ப நிறுத்திட்டு பச்சாதாபம் நிறஞ்ச குரல்ல சொல்றான். ‘நீ என்னக் கொல்லப் போறேன்னு தெரிஞ்சாலும் எனக்கென்னவோ உன்னப் பாத்தா பாசமாத்தான் வருது. உன்ன மாதிரி எத்தன ஜீனிகள் இப்படி ஜாடிக்குள்ளயே கெடந்து தவிக்கிறீங்களோ.’
‘அது இருக்கும் ஏராளம். உன்ன லபக்கிட்டு அடுத்த நொடியில் அத்தன ஜீனிகள் அடைபட்டிருக்கும் ஜாடிகளையும் இங்கே கொண்டு வந்துருவேன். அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீ வெட்டிப் பேச்சுப் பேசாம ஏதாச்சும் பிரார்த்தனை செய்துக்கனும்னா இப்பவே செய்துக்கோ. இனிப்புகள் ஏதும் சாப்பிடுறியா? இப்பவே ஒரு நிமிசம் ஆயிட்டுது’ அப்படின்னு அவனை விரைவுபடுத்துது ஜீனி.
‘சாப்பிடறதுலயே இரு. ஜாடிகளை கொண்டு வந்தா மட்டும் போதுமா? அத திறக்க வேணாமா? அதுமேலதான் சாலமன் முத்திரை இருக்குமே’ அப்படிக் கேட்டான்.
இந்தக் கேள்விய ஜீனி எதிர்பாக்கல. இப்படி பல நூற்றாண்டு காலமா ஜாடியிலயே அடைஞ்சு கெடக்கறதுக்கு காரணம் அந்த சாலமன் முத்திரதானே. அத திறக்க முடிஞ்சிருந்தா எப்பவோ விடுதல ஆயிருப்போம். அந்த சாலமன் முத்திரைய ஜீனிக்கள் தொடக்கூட முடியாது. இந்த மனுசப்பயலுக மட்டும் எப்படியோ பொசுக்கு பொசுக்குன்னு திறந்து திறந்து மூடிடறானுங்க. எப்படித்தான் செய்யறாங்களோ. இப்படி தோணினதும் அதுக்கு சோகமா ஆயிட்டுத்து.
அதேசமயம் இந்த சின்னப்பயலும் இவனோட மூதாதையன் போல ஏதோ திட்டம் போட்டு வச்சிருக்கானோன்னு ஒரு சம்சயம்.
‘நீ என்ன சாமர்த்திய பேச்சு பேசினாலும் நான் அந்த ஜாடிக்குள் திரும்பிப் போறதுக்கான வாய்ப்புகளே இல்லடாப் பயலே. உன்ன லபக்கிவிட்டுத்தான் மத்ததெல்லாம் யோசிப்பேன். நீ என்ன தந்திரம் செய்தாலும் என்னை ஏமாத்த முடியாது’
அப்படின்னு சொல்லிட்டு வேற பக்கமா திரும்பிப் பாத்து நின்னுக்குச்சு. மனசுக்குள்ள ஒருபுறம், இவ்ளோ பாசமா பேசறவன உயிரோட வச்சுகிட்டா எல்லா ஜீனி ஜாடிகளையும் திறந்து கொடுப்பானோன்னு ஒரு யோசன. சேச்சே! இவனக் கொல்லாம விட்டா அவமானம்.
‘அவ்ளோ ஒண்ணும் கஷ்டமில்ல. நல்லா பாத்துக்க. இதோ… இப்பவே உனக்கு அந்த சாலமன் முத்திரைய எப்படி உடைக்கிறதுன்னு சொல்லித்தர்றேன். இனிமேலாவது நீ ஏமாறாத’ன்னு ஆரம்பிக்கிறான்.
இந்த பாச நாடகத்துக்கெல்லாம் பலியாகிவிடக் கூடாதுன்னு ஜீனி தீர்மானமா நினச்சுக்கிட்டது. கொஞ்சம் இணக்கம் காட்டினாலும் பேசிப்பேசியே ஏய்ச்சிருவாய்ங்க இந்த மனுசப்பசங்க. ஜின் குலத்தின் மீது வேற ஆணையிட்டிருக்கிறோம். ஜாக்கிரதையா இருப்போம்னு நினச்சுக்கிட்டது.
‘இங்கேப் பார். வெகு எளிசான வேலை இது. இப்படி ஒரு அழுத்து அழுத்தி இப்படி ஒரு தள்ளுதள்ளனும். இப்படித்தான்… பாத்துக்கிட்டியா… ‘ இப்படி வரிசையா செஞ்சுகாட்டறான். நேரம் போயிட்டிருக்கிற அவசரம் அவன் குரலிலும் தெரியுது.
இதையெல்லாம் சொல்லிக் கொடுத்திட்டு செத்துப் போவோம்னு நினைக்கிறான் பார்னு ஜீனிக்கும் ஒரே நெகிழ்ச்சி.
‘இப்ப நீயே முயற்சி செஞ்சுப் பார்க்கிறாயா?’ அந்தப் பயல் ஜீனிக்கிட்ட கேக்கறான்.
அவன் பக்கமே திரும்பக் கூடாதுன்னு வேறபக்கம் பார்த்துக் கொண்டு நொடிகளை எண்ணிக் கொண்டிருந்தது ஜீனி. ‘கிளாங்’ ன்னு சத்தத்தோட சாலமன் முத்திரை ஜாடியை மூடற சத்தம் கேக்குது.
‘அதெல்லாம் ஒரு மண்ணும் வேணாம். உனக்குக் கொடுத்த அவகாசம் முடிய இன்னும் அஞ்சு நொடிகள்தான் இருக்கு. இந்த நாடகமெல்லாம் இனி ஒண்ணும் வேலைக்காகாது’ன்னு சொல்லிகிட்டே திரும்பிப் பாத்தா, அங்கே அந்த ஜாடி மட்டும் மூடியபடிக்கு இருக்கு. சின்னப்பயலக் காணல. அந்த அத்துவானக் கடற்கரையில அவனெங்கப் போயிருப்பான்னு சுத்துமுத்தும் பரபரப்பா தேடிப்பாக்குது ஜீனி. பாய்ஞ்சுப் போய் ஜாடியத் தொடலாம்னா மூடிமேல சாலமன் முத்திரை முழிச்சுகிட்டு நிக்குது.
‘டேய்…. எங்கடா போயிட்டே’ அப்படின்னு அது கோபமா கத்துனது மட்டும் காத்தோட காத்தா கரைய, ஜீனி சொன்ன இரண்டு நிமிடமும் முடிஞ்சிட்டது. அப்புறம் அந்த அத்துவான கடற்கரையில் அந்த ஜாடியைத் தவிர யாருமே காணல.
எல்லா களேபரமும் அடங்கி சில நிமிடங்கள் கழித்து, ஜாடிக்குள்ளிருந்து மூடிய திறந்துகிட்டு அந்த சின்னப்பயல் வெளில குதிக்கிறான்.