பதாகை – கற்பனைக்கும் மொழிக்கும் உள்ள உறவின் இயல்பு என்ன?
றியாஸ் குரானா – மேலோட்டமாகப் பார்த்தால் இது சாதாரணமான கேள்விபோலதான் தோன்றும். ஆனால், உண்மையில் இது சற்றுக்கடினமான கேள்வியே. இந்தக் கேள்வியை பொருட்படுத்தி பதில் சொல்லுவதெனில், முதலில் ஒரு விசயத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். கற்பனைக்கும் மொழிக்குமிடையில் உறவு இருக்கிறது என்பதுதான் அந்த விசயம். இப்படி ஏற்றுக்கொள்ளுவது என்னுடைய புரிதல் நிலைப்பாட்டில் பெரும் மாற்றங்களை கோரும் ஒன்று. ஆனால், பொதுவாக மொழிக்கும் கற்பனைக்கும் ஒரு உறவு உண்டென்று நம்பப்படுகிறது. அந்த உறவின் இயல்பு எப்படியானது என்பதில்தான், பல வகையான கருத்துக்கள் இருக்கிறது என்றும் நம்பப்படுகிறது. அடிப்படையில் இது குறித்து வேறு கருத்துக்ளைக் கொண்டவன் நான். ஆக, இந்தக் கேள்விக்கான பதிலை நான் எப்படி சொல்ல வேண்டும் என்பதை ஆரம்பத்திலிருந்து தொடங்க வேண்டியுள்ளது.
மொழி என்பதே ஒரு கற்பனைதான் எனச் சொல்ல வேண்டியிருக்கிறது. இப்படிச் சொல்லுவதால், அடிப்படையில் மொழிக்கும் கற்பனைக்குமான உறவை மறுக்கிறேன். அப்படியானால், அதற்கிடையிலான உறவு குறித்து பேச எதுவுமில்லை. கற்பனையால் உற்பத்தி செய்யப்பட்ட மொழியே, மீண்டும் கற்பனையைப் பெருக்குவதற்கு தேவையான, மிக ஆற்றல் மிக்க உள்ளடக்கங்களையும், இயங்கு முறையையும் கொண்டிருப்பதால், இரண்டாம் நிலையில் மொழிக்கும் கற்பனைக்குமான உறவு உருவாகிவிடுகிறது. இந்த இடத்தில்- மொழிக்கும் கற்பனைக்குமான உறவின் இயல்பு என்ன என்பதை கற்பனை செய்யவும், உருவாக்கவும் முடிந்துவிடுகிறது என்பதும் ஒரு மர்மமான விசயம்தான்.
கற்பனை என்பது உண்மையில் தன்னைப் பெருக்கவும், புதுப்பிக்கவும், இயக்கத்தில் வைக்கவும் இவைகளைவிட முக்கியமாக சிந்திப்பதற்கும் ஏதுவான ஒன்றாக மொழியை உருவாக்கியிருக்கிறது. திரும்பத் திரும்ப நிகழுவதாகவும், அதேநேரம் திரும்ப ஒருபோதும் நிகழாமலும் இருக்கும்படி செயற்படுவதினாடாகவே மொழி இந்த உறவை தக்கவைக்கிறது. முற்றிலும் முரண்பட்ட இருவிசயங்களால் தன்னை இயக்கத்தில் வைத்திருக்கிறது மொழி. இந்த இயக்கம்தான் இவை இரண்டுக்குமிடையிலான உறவின் இயல்பு. ஆற்றில் ஒரேமாதிரி இரண்டுமுறை கால்களை நனைக்க முடியாது என்ற மிகப் புகழ்பெற்ற வாக்கியத்தை அறிவீர்கள். அதுபோல, முன்பு நிகழ்ந்ததுபோல் மீண்டும் நிகழும் சாத்தியமிருப்பதே குறித்த நிகழ்வு இருக்கிறது என்ற வாக்கியத்தையும் அறிவீர்கள். ஆனால், இந்த இரண்டு வாக்கியங்களும் அதாவது சிந்தனைகளும் ஒருசேர இருக்கின்ற இடம்தான் மொழி. மாறாமல் இருப்பதைக் கொண்டு மாறக்கூடியவைகளை உற்பத்தி செய்தல். செயல்குறிப்பான மொழி மற்றும் நிலைக்குறிப்பான மொழி என மொழியின் இரு பெரும் தன்மைகளை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஒன்று உள்ளதை உள்ளவாறு சித்தரிப்பதாகவும், மீண்டும் அதை நிகழ்த்துவதாகவும் இருக்க, மற்றையது அணியிலக்கணச் செயற்பாடுகளாகவும், கற்பனைச் செயற்பாடுகளாகவும் இருக்கிறது. இந்த இடத்தில் கற்பனை என்பது மொழியின் இருபெரும் செயற்பாடுகளில் ஒன்றாக சுருங்கிவிடுகிறது. ஆனால், அந்த இரு பெரும் செயற்பாடுகளும் இணைந்தே மொழியாகிறது. அதே நேரம் மொழி கற்பனையின் உற்பத்தி. இதை இப்படிப் புரிந்து கொண்டால் இலகுவாக இருக்கலாம். கற்பனை மொழியை உருவாக்குகிற அதே நேரம் மொழியின் ஒரு பகுதியாகவும் செயற்படுகிறது. என்பதே இதன் பொருள். உண்மையில் அப்படி அல்ல என்பதுதான் விசயம். ஆனால், மொழியில் அமையும் ஒரு நிகழ்வுக்கு பொருளுருவாக்க வேண்டுமெனில், மொழியின் ஒரு பகுதியாகவே கற்பனை இயங்குகிறது. மொழி என்பது கற்பனையானது அல்ல என எடுத்துக்கொள்ள வேண்டி வரும்.
மொழி கற்பனையானது என்பதையும், மொழியின் ஒரு பகுதியில் கற்பனை செயற்படுகிறது என்பதையும் இணைத்த ஒரு புள்ளியில் சிந்திப்பது கடினமான ஒன்றே. இலக்கியம் என்ற குடும்பத்திற்குள் நாம் சுட்டி விளிக்கும் பிரதிகளை உருவாக்கும்போதோ அல்லது அப்பிரதிகளுடன் வினை புரிய நெருங்கும்போதோ தவிர்க்க முடியாமல், மொழி என்பது கற்பனையாலானது என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். இப்படி எடுத்துக்கொள்ளாத நிலையில் நாம் உருவாக்கும் இலக்கியப் பிரதி இலக்கியமாக அமைந்துவிடும் சாத்தியங்களை குறைவாகவே கொண்டிருக்கும். அதுபோல, நாம் சந்திக்கும் இலக்கியப் பிரதி என நம்பும் பிரதிகள் பொருள் விளக்கத்திற்கு கற்பனையை எடுத்துக்கொள்ளாது, கற்பனையற்ற ஒன்றை அதாவது உண்மைகளை தேடி சலிப்படைந்துவிடவும் கூடும்.
இன்னும் சற்று விரிவாக இதைச் சொல்லுவதெனில், ”மரம்” என்ற சொல் கற்பனையான ஒன்றுதான். மரம் என்பது எதைக் குறிக்கிறதோ அதை ” தஜம்” என பெயரிட்டிருந்தால் அது தஜமென்றே அழைக்கப்பட்டிருக்கும். ஆக, இது குறித்த ஒன்றைச் சுட்டுவதற்கு உருவான கற்பனையான சொல்தான் ”மரம்“ என்பது இங்கு முடிவாகிறது. இப்போது பாருங்கள், ”மேகம் ஒரு மரம்” என்ற வாக்கியத்தை உருவாக்குகிறோம். இங்கு ஒரு விசயம் மேலெழுகிறது. அதாவது, இது உண்மையல்ல கற்பனையான ஒரு கூற்று என உடனடியாக யாரும் சொல்லிவிடுவர். மரம் என்பதுதான் உண்மையானது. மேகம் மரமல்ல. அது ஒரு கற்பனை. இப்போது மரம் உண்மையான ஒன்றாக மாறிவிடுகிறது. அதுவும் கற்பனையான ஒரு பெயரிடலே என்பது மறைந்துவிடுகிறது.
அதே நேரம் இந்தக் கூற்று ஒரு அர்த்தத்தை தருவதற்கு இடந்தர வேண்டுமென்றால், மரம் உண்மையானது என்று எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். மரம் என நம்பும் ஒன்றுபோல் மேகம் இல்லை என்று கருத – இப்படி இருந்தால்தான் அது மரம் என்ற உண்மை ஒன்று அங்கு அவசியமாகிவிடுகிறது. அப்படி ஒரு உண்மை அவசியமாவதினாடாகத்தான் இந்தக் கூற்று கற்பனையானது என்ற ஒரு விசயமும் இயக்கத்திற்கு வருகிறது.
இங்கு சிறு இடையீடு, காட்சி (ஓவியம்) மற்றும் சப்தங்கள் போன்றவை கற்பனையின் ஆரம்ப வெளிப்பாட்டு முயற்சிகள். மொழிதான் அதன் கடைசி வெளிப்பாட்டிற்கான உருவாக்கம். ஓவியம் மற்றும் சப்தங்களுக்கில்லா பிரத்தியேக ஒரு பண்பு மொழிக்கு உண்டு. அது கற்பனையைப் பெருக்குவதும்,மேலும் மேலும் சிந்திப்பதற்கு இடந்தருவதுமாகும்.
ஆக, கற்பனைக்கும் மொழிக்குமிடையிலான உறவு என்பது, கற்பனையே மொழியை உருவாக்கியது என்பதும், மொழி தன்னை இயக்கத்தில் வைத்திருப்பதற்கு கற்பனையே தேவை என்பதுமாகும். அந்த உறவின் இயல்பு என்பது, ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் உண்மையாகவும் கற்பனையாகவும் தன்னை வெளிப்படுத்துவதுமாகும். இதற்கு அப்பால் நாம் ஒரு கள்ள உறவை உருவாக்கி வைத்திருக்கிறோம். இலக்கியக் குடும்பத்திற்குள் (அப்படி நம்பி) பிரித்து வைத்திருப்பவைகள் கற்பனையானது என்றும், அது தவிர்ந்தவை உண்மையானது என்றும். அதிக சந்தர்ப்பத்தில் இலக்கியம் என நம்பும் பிரதிகளிலும் உண்மையைத் தேடி அப்பிரதிகளை கஸ்டப்படுத்துகிறோம். இதைவிட ஆச்சரியம் என்னவெனில், இலக்கியப் பிரதிகள் உண்மையற்றவை என நாம் பல சந்தர்ப்பங்களில் ஒதுக்கிவிடுவதுதான். ஆனால், இவைகளுக்கு மாற்றமாக இந்த இலக்கியப் பிரதிகள் என்பவை நமது உண்மைகளைவிட அதிகம் ஆர்வமூட்டுவதுதான்.
One comment