அண்மையில், “உங்கள் கவிதைகள் எத்தகைய எதார்த்தத்தில் வேரூன்றி, எத்தகைய எதார்த்தத்தை நோக்கி விரிகிறது?” என்று என்னிடம் கேள்வி கேட்டிருந்தார் ஒரு நண்பர்.. “போட்டு வாங்குவோம்”, என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்ட நண்பர் கேள்விகளைத் தூண்டில்களாக பாவிப்பதால், கவிதை எழுதாத என் திசையிலும் அது விழுந்து பலி கொள்ளாமல் விலகியது.
கவிதை ஏதாவது ஓர் இடத்தில் வேரைப் பற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. அங்கேயே கிடக்காமல், எதையோ எட்டிப்பிடிக்கும் ஒரு தாவலையும் அது காட்ட வேண்டியுள்ளது. இந்த இரு நிலைகளையும் ரத்தினச்சுருக்கமாகவும் சொல்ல வேண்டியிருக்கிறது. அதே சமயம், இவற்றுக்கிடையேயான தூரமும் இரு துருவங்களுக்கிடையேயானதாக இருக்கவேண்டும். இதை ஒரு கவிதையை மட்டும் கணக்கிட்டுச் சொல்ல முடியாது.
ஆயுட்காலத்தில் ஒரு கவிஞன் எழுதும் சொல்வெளி தொடர்பற்ற அவனது சிந்தனைகளின் தொகை. ஆனால் அவன் அறியாமல் அவற்றினூடாக தறி போல ஓரிழை எல்லாவற்றையும் இணைக்கிறது. அவ்விழையை அவனது வாழ்க்கைப்பார்வை எனக்கொள்ளலாமா? அவன் பார்த்து அனுபவித்து அறிந்த காட்சியைக்கொண்டு நூலேணியை ஒரு திசை நோக்கி எறிகிறான். அவனது அனுபவம் என்பது கைக்கிளை. கவிதை புனையும் தருணம் வரை அதன் மறு கரையை அவன் அறிவதில்லை. அனுபவம் அவன் பற்றியிருக்கும் வேர். அங்கிருந்து எந்த நூலேணியைப் பிடித்து எங்கு செல்லும் என்பதை அவனது அறிதல் அவனுக்குப் புகட்டாது. கற்பனையும், பித்து உணர்வு நிலையும் அத்திசைக்காட்டிகள்.
`எங்கே எங்கே என
எத்திசையும் கைநீட்டு ஏமாந்த மரத்தின்
மார்பிலேயே பூத்திருந்தது கனி`
எனும் தேவதேவன் வரியைப் போல, கவிஞனின் அனுபவம் முழுமை அடைய அவன் அறிந்ததிலிருந்து வேறொன்றுக்கு தாவ வேண்டியுள்ளது. அதற்கு அவனுக்குத் துணையாக உருவகம் உள்ளது.
கம்பராமாயணம் காப்பியத்தைத் தாண்டி ஓர் உருவகத் தொகைநூல் எனச் சொல்கிறார்கள். ஒவ்வொரு பாடலிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட உருவகங்கள். ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குத் தாவியபடி உள்ளன. கம்பனுக்கு எந்தளவு நாட்டுத்திணை அனுபவம் இருக்கிறதோ அந்தளவு மொழி அழகியலில் அவற்றைப் படம்பிடிக்கும் ஆற்றலும் உள்ளது. பல்வேறு வகைப்பட்ட துறைசார் அனுபவங்களை இடமாற்றியதில் வேறொரு தளத்துக்கு அவற்றை எடுத்துச் செல்கிறது.
யாழ் நறை அடுத்த அசுண நன் மாச் செவிப்
பறை அடுத்தது போலும்-என் பாஅரோ. (அவையடக்கம் – 7)
நொய்தின் நொய்ய சொல் நூற்கல் உற்றேன் (அவையடக்கம் -1) எனப் பேசுபவரின் சொற்பிரயோகம் இது. `யாழ் நறை` என்பதை யாழைப்போன்ற இனிமையான தேன் என புது பொருள் மயக்கத்தைக் கொடுக்க முடிகிறது. நறம் – தேன் இனிமையானது. செவிச்சுவையான யாழிசையும் வாசிப்போர் வாசிக்கக் கேட்டால் இனிமையானதாக இருக்கும். அசுணா எனும் விலங்கின் செவியில் பறை அடிப்பது போல எனது பாடல் என்கிறார் கம்பர். அசுணா பற்றி பல சுவாரஸ்யமான செய்திகள் கிடைக்கின்றன. அது பறவையா அல்லது மிருகமா எனத் தெரியாவிட்டாலும், அது குறிஞ்சி நிலப்பாணர்களால் பாடப்பட்டதால் மலையும் மலை சார்ந்த இடத்தில் இருந்திருக்கலாம். யாழ் வாசித்தால் அருகே வருமென்றும் பின்னர் பறை வாசித்ததும் இறந்துவிடும்/மயங்கிவிடும். இந்தச் சுட்டியில் அசுணா பற்றி பல சுவையான செய்திகள் உள்ளன.
‘மராமர மேழ் தொளை’ எனும் சொற்றொடர் பற்றி எனது கம்பராமாயண ஆசிரியர் சொன்ன குறிப்பு ஒன்று சுவாரஸ்யமானது. இது சமஸ்கிரத்திலும் உபயோகப்படுத்தப்படும் சொற்றொடர். ஏழு என்பது கிட்டத்தட்ட கணக்கில்லா (infinity) எனும் அர்த்தத்தில் இந்திய இலக்கியத்தில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளதாம். ஏழு மரத்தைத் தொளை போடக்கூடிய அளவுக்கு வில் எய்தும் ராமன் எனும் வரி கணக்கில்லா மரத்தைத் தொளை போடும் அளவிடமுடியாத ஆற்றலைக் குறிக்கிறது. `ஏழேழேழு பிறவிக்கும் உந்தன்னோடு உறவு ஒழிக்க இயலாது`, `எழுமையும் ஏமாப்பு உடைத்து` என கணக்குக்கு உட்பட்ட வகையிலும், கணக்கில்லாதவாறும் ஏழு எனும் எண் உபயோகப்பட்டிருக்கிறது.
`ஒரு பூசை முற்றவும் நக்குபு புக்கு என` அவையடக்கத்தின் உச்சகட்டமாகத் தோன்றும் பாடலில் ஒரு ஆச்சர்யம் ஆசை பற்றி அறையல் உற்றேன். இதில் அறையல் (சொல்லல்). பேராசை பற்றிக்கொண்டதால் சொல்லத்தொடங்கிய பாடல்தான் கம்பராமாயணம். சொல்லத் தொடங்குவதுகூட அதிகமாகத் தோன்றியிருக்க வேண்டும் கம்பருக்கு. உத்தமக் கவிகளுக்கு ஒன்று கூறிக்கொள்வேன் என அரசவைக் கவிகளுக்குச் சொல்கிறார், `பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும் பத்தர் சொன்னவும் பன்னப் பெறுமோ`. என்னைப் போன்ற பைத்தியக்காரர், அறிவிலி, பக்திப்பயித்தியங்கள் சொல்பவற்றை யாராவது நம்புவார்களா? நான் பாடுவதற்கெல்லாம் ஒரு மதிப்பு உண்டா என்கிறார். அந்த காலத்திலேயே கவிதைப் பாடுபவர்களில் உத்தமக் கவிஞர்கள், பித்துக்கவிஞர்கள் என இரு வகையினர் இருந்திருக்கிறார்கள் எனத் தோன்றுகிறது. அக்கப்போர்களுக்குக் குறைவிருந்திருக்காது. வெண்ணெய்நல்லூரில் சடையப்ப வள்ளலின் தயவில் புனையப்பட்ட கவிதைகள் இறையும் ஞானமும் இல்லாது புனையப்பட்டன என்கிறார். கடவுள் வாழ்த்து, அவையடக்கம், காப்பியம் பிறந்த கதை எனச் சொல்லிவிட்டுப் பால காண்டத்துக்குள் புகுவது காப்பியங்களில் இயல்பு எனத் தோன்றுகிறது.
கம்பர் எப்படிப்பட்ட நூலேணிகளைப் பிடித்து நம் கவிதை அனுபவத்தை எங்கு கொண்டு செல்கிறார்? கம்பனிடம் நாம் என்ன எதிர்பார்க்க முடியும்? நவீன கவிதையைப் போல ஒரு திறப்பைக்கொடுக்க முடியுமா? பல நூற்றாண்டுகள் இடைவெளியைத் தாண்டி கம்பன் காட்டும் யதார்த்ததுக்கு மதிப்பு என்ன? வால்மீகி இயற்றிய ராமாயணத்தைப் பற்றிக்கொண்டு தமிழ் மரபுக்கேற்ப கவிதை புனைந்துள்ளார். அவர் காலத்தில் அமைந்திருந்த நூல்நெறி யதார்த்தமும் இன்றைய யதார்த்தமும் விலகி நிற்கும் இடங்களைப் பார்ப்பது நமது நோக்கம் அல்ல, ஆனால் சங்க கால தமிழர் வாழ்வும், தமிழ் மரபின் காப்பியச் செழுமையையும் கம்பராமாயணம் வழி பார்க்க முடியும்.