யாருடைய கனவுக்குள் இருக்கும்
மனிதர்களுடனும் வசிக்க,
தூக்கத்தை பயன்படுத்த முடியாது
அதுதான் விழிப்பின் ரகசியம்
இந்தக் கதையில் சில புள்ளிகள் தளர்வாகவே உள்ளன
சில புள்ளிகள் இடம்மாறி மெதுவாக நகர்கின்றன
”இந்தக் கதை” என்பது வாசிக்கும் ஒவ்வொருவருக்கும்
வேறான, அவர்கள் நினைக்கின்ற கதையாகும்
அந்தக் காட்சியை முறையாக வர்ணித்தால்,
சில நேரங்களில் தூக்கமாகவும்
சில நேரங்களில் விழிப்பாகவும்
மாறி மாறி உருப்பெருகுகின்றன
இதைத் தாண்ட என்ன வழி
எதன் வாசலில் காத்திருக்க வேண்டும்
இப்படிச் சொல்லியே
பல ஆண்டுகளாக நான் தனியாகவே
தூங்கவும் விழித்திருக்கவும் செய்கிறேன்
மனம் திகைத்து உறையும் நேரங்களில்
எதிரே வந்து கனவு பிரகாசிக்கிறது
கனவுக்குள்ளிருந்து வெளியேறி வந்தவர்கள்
புன்னகையுடன் நமக்காக காத்திருக்கின்றனர்
இன்று காலையும் கனவுப் பெட்டியிலிருந்து
வெளியே வந்தேன்
உங்கள் குரல் கேட்டது.
அவரின் கனவுக்குள்ளிருக்கும் சிலருடன்
சண்டையிட வேண்டியிருக்கிறது
அந்த மனிதன் கனவுக்காக
எனது தூக்கத்தைத்தான் திருக்கொள்கிறான்
கனவு கறுப்புப் பெட்டி என்றான்
ஆதாரங்களை அதிலிருந்து
கண்டுபிடித்துவிட முடியுமென்றான்
என்னைப் பற்றி எல்லாம் தெரிந்தவன்போல்
கேலியாகச் சிரித்துவிட்டு
இந்த வரிகளில் நடந்து கடந்து போகிறான்
தயவு செய்து கொஞ்சம் அவனைப் பிடித்துத்தாருங்கள்
ஒருவர்மாறி ஒருவர் படிப்பதே
அவனைப் பிடிக்க கூடிய தந்திரமாகும்
One comment