இன்று ஒரே பெஞ்சில் அவர்களால் அமர முடிந்தது
தினமும் அவர்களுடன் வரும் ஒருவர் இன்று இல்லை
நடை பழகாமல் மெளனமாக உட்கார்ந்திருக்கிறார்கள்
தினமும் உரக்க சிரிப்பவரின் பார்வை வானத்தில்
எங்கோ பதிந்திருக்கிறந்து
கைத்தடியில் கைகள் ஊன்றி இன்னொருவர்
தரையை பார்க்கிறார்
மறையும் சூரியனின் ஒளி பட்டு மாமரத்தின் நிழல்
அவர்கள் மேல் மட்டும் படர்கிறது
நடப்பவர்கள் சுற்றிச் சுற்றி வருகிறார்கள்
அரை நிஜார் மனிதர் தனியாக ஓடிக்கொண்டிருக்கிறார்
எதிர் பெஞ்சில் சிரித்து பேசும் காதல் ஜோடி
பக்கத்து பெஞ்சில் குடும்ப விஷயம் பேசும் மாமிகள்
மெயின் ரோட்டில் வேகமாக பறக்கும் வாகனங்கள்
கேட்டுக்கு வெளியே ஆப்பிள் விற்கும் வண்டிக்காரன்
சிலைகள் போல் அவர்கள்