காற்றை அளைகின்றன, சூரிய விரல்கள்
கைத்தடி மேல் மண்புழு போன்ற நரம்புகள்
கைகளை ஊன்றி, சுருக்கங்கள் நிறைந்த முகத்துக்குள்
எங்கோ பதுங்கிவிட்ட சிறு கண்களால்
பந்து விளையாடும் குழந்தைகளை உற்றுப் பார்க்கிறார்
கொதிக்கும் மணலின் தீவிரத்தை குறைக்க
அலைகள் பக்கம் சென்ற இளைஞன்
யாரோ வீசிய பந்தைப் பிடிக்க உயரே பறக்கிறான்
புவியீர்ப்பு விதிகளை மீறி, உயரே உயரே பறக்கிறான்
முதுகு பின்பக்கம் வளைய, கண்ணில் ஆகாயம் தெரிய,
பறந்து வரும் சிவப்பு பந்தை
வலது கை நீட்டி பிடிக்கிறான்
பிடித்தவன் செங்குத்தாகக் கீழே விழுகிறான்
விழுந்தவன் ஒளி துண்டங்களாகச் சிதறுகிறான்
முகத்தை வேறு திசையில் திருப்ப,
பந்து கீழ்வானில் நிலவாய் மாறி
மெல்ல மேலெழுந்துக் கொண்டிருக்கிறது
கரங்கள் உள்ளிழுத்துக்கொண்டு மறையும்
சூரியனுடன் அவரும் மறைகிறார்.