கடந்த வாரம் உணவு இடைவேளை நடைக்காக வழக்கமான தேம்ஸ் நதிக்கரையைத் தவிர்த்து கூழாங்கற்கள் பாவித்த சிறுதெருக்கள் வழியாக நடந்துகொண்டிருந்தேன். நடைபாதை ஓரத்தில் வயதான இரு தம்பதியினர் தொலைநோக்கி வழியாக சற்று தொலைவில் தெரிந்த டேட் கலைக்கூடத்தைப் பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்களைக் கடந்து செல்லும்வரை உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தேன். தொலைநோக்கி வழியாகப் பார்ப்பதும், தங்களுக்குள் ஏதோ பார்வையைப் பகிர்ந்து சிரிப்பதுமாய் இருந்தனர். கடந்து செல்லும்போது அவர்களில் மூத்தவராகத் தெரிந்த பாட்டி `ஹாங்` என்று தேக்கிவைத்த சத்து எல்லாத்தையும் வெளிப்படுத்தினார். இருவரும் ஆரவாரமாய்க் கட்டிப்பிடித்துக்கொண்டனர். எனக்கு ஆர்வம் தாங்கவில்லை. யாருமே இல்லாத சாலையில் நின்றபடி அப்படி என்ன யுரேக்கா கண்டுபிடிப்பு எனப்பிடிபடாமல் கேட்டேவிட்டேன்.
`சிட்டி ஃபால்கன் இஸ் ஃபீடிங் தி பேபிஸ்`, என்றார். வல்லூறு ஊட்டிவிடுவதில் என்ன ஆச்சரியம்?
`நகரத்தில் வல்லூறைப் பார்ப்பது கடினம். அப்படியே பார்த்தாலும் அவை கட்டிடங்களுக்கு உயரே தங்கள் குஞ்சுகளைக் காப்பாற்றாது. தேம்ஸ் நதியைச் சுற்றியிருக்கும் பல தீவுகளிலுள்ள மரங்களில் பாதுகாப்பாக வைத்திருக்கும். நான் நாற்பது ஆண்டுகளாகப் பார்த்துவருகிறேன். இப்போது டேட் மாடியில் குஞ்சுகளோடு வருகிறதென்றால் என்ன அர்த்தம்? `
கண் சிமிட்டலோடு பார்த்தவரை, கண்சிமிட்டாமல், `என்ன அர்த்தம்?` எனத் திருப்பிக் கேட்பதைப் போல பார்த்துக்கொண்டிருந்தேன்.
`லண்டன் இஸ் ஹோம் கிவர் நவ். காட்டுயிர்களுக்கும், பறவைகளுக்கும் நாம் புது வீடுகளைக் கொடுக்கும்விதமான நகரக்கசிவுகளைக் குறைக்கத் தொடங்கியுள்ளோம்`, என்றார்.
கூடவே RSPB எனும் ராயல் சொசைட்டி உறுப்பினர் படிவத்தை நீட்டினார். அதில் கொட்டை எழுத்தில், `Give Nature a Home;Nature is Struggling’ எனும் வாக்கியம்.
அடப்பாவிங்களா, என்பதுதான் என் முதல் எதிர்வினை. இயற்கைக்கு இடம்கொடுக்காமல் பேராசைப்பட்டு வம்சவம்சமாக அவற்றோடு விளையாடிவிட்டு, போனாப்போகுது ஒப்புக்குச் சப்பாணியாக சேர்த்துக்கொள்ளலாம் என்பதுபோல Give Nature a Home!
எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மனிதன் அவனது அடாவடித்தனத்தை உணரத்தொடங்கிவிட்டான் எனப் பெருமிதம் கொள்ளமுடியவில்லை. ஆப்ரிக்காவிலும், மத்தியக்கிழக்கிலும் அவனது ஆட்டங்கள் இப்போதுதான் உச்சகட்டத்தை அடைந்திருக்கின்றன. நிரந்தரமாக மாசுப்படுத்தப்பட்ட இயற்கையை தங்கள் சந்ததியினருக்குக் கொடுத்தபின்னர் இவ்வளவு பிலாக்கினம்! நம்மவரின் அலட்சியம் நம்வளங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைத்துக்கொண்டிருக்கிறது.
இயற்கைக்கு நடுவே சமூக வாழ்வை எவ்விதமான பாதகவிளைவும் இல்லாதவாறு அமைத்திருந்த பண்டைய இந்திய வாழ்வு பற்றிய குறிப்புகள் மனதில் நிழலாடியது. பறத்தலில் சுவடு தெரியாமல் சென்று மறையும் பறவைகளும், நீரின் தெளிவு கலங்காதபடி தங்கள் பாதையை உருவாக்கும் மீன்களும் நம் முன்னோர்;மாற்றமுடியாத மாற்றக்கூடாத இயற்கைச் சக்தி.
ஆற்றுப்படலத்தில் கம்பர் இயற்கை மாறாட்டங்களை விதியின் கைகள் என்கிறார். திணைத் திரிபுகளை கண்ணுக்குத்தெரியாமல் நம் வாழ்வை மாற்றும் விதி என்கிறார்.
முல்லையைக் குறிஞ்சி ஆக்கி மருதத்தை முல்லை ஆக்கி
புல்லிய நெய்தல் தன்னைப் பொருஅரு மருதம் ஆக்கி
எல்லைஇல் பொருள்கள் எல்லாம் இடை தடுமாறும் நீரால்
செல்லுறு கதியில் செல்லும் வினைஎனச் சென்றது அன்றே (ஆற்றுப்படலம் – 17)
செல்லுறு கதியில் செல்லும் வினை – என்ன அருமையான விளக்கம். விதியின் திசையைக் கணிக்க முடிந்தவர் ஆரோ?
வெள்ளத்தால் திணை மாறுகிறது. வினை நம் பிறவிகளை அதன் விதிக்கேற்ப மாற்றுவதுபோல. இடை தடுமாறும் நீரால் – இடம் மாறும் நீர் எனப் பொருள்வந்தாலும், தடுமாறும் எனச் சொல்வதன் மூலம், தனது கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்றை நிலைநாட்டுகிறார். இயற்கைக்கு இடம் கொடுப்போம் எனும் ஆணவப்பேச்சுக்கு இடமில்லை. அதன் போக்கில் சுழிந்து செல்லும் இடத்தைத் தவிர மிச்சம் இருப்பதை நாம் தடம் தெரியாமல் பறந்து செல்லும் பறவைப்போல உபயோகப்படுத்துவோம் என்பதே நம் கொள்கை.
ஆற்றுப்படலத்தில் சரயு நதியைப் பலவாறு வருணிக்கிறார் கம்பர். அந்த 20 பாடல்களில் சரயு முலையாகி பால் சொரிகிறது, கிருஷ்ணனாகி ஆயர்குலமகளையும் உடுப்பையும் உணவையும் களவாடுகிறது, வேடர்களின் அம்பை கடத்திச் செல்லும் சேணையாகிறது. பொல்லா வினையாகவும், ஆடற்மகளிராகவும், விலைமகளாகவும் ஆகிறது. சரயு நதி புண்ணியம் செய்த நதி. இரு பெரும் கவிஞர்களாலும் இரு மொழிகளில் அர்ச்சனை செய்யப்பட்டுள்ளது. வான்மீகியின் புகழுரை நாம் அறியோம். தமிழ் கவி வளத்தை முழுவதுமாய் சரயுவின் மீது சொரிகிறான் கம்பன் .
தமிழ் மொழியின் தனிச்சிறப்பாக அகவெளி புறவெளி வருணனைகளைச் சொல்வர். சமஸ்கிரத்தில் இது உண்டா எனத் தெரியவில்லை. ஆனால், அகம் புறம் எனும் இரு நேரெதிர் நிலைகளைக் கொண்டு வளப்பமாகியது தமிழ் இலக்கியம் என்றால் அது வியப்பதற்கில்லை. அகத்தை புறத்தில் கொண்டு பேசியும், புறத்தை அகத்தில் அழகுபடுத்தியும் நாம் முடிவில்லா ஊசலாட்டத்தை உண்டாக்கிவைத்திருக்கிறோம். ஆற்றுப்படலத்தில் சரயுவை வருணிக்கும் கம்பர் இவ்விரு எல்லைகளையும் நயமாகக் கையாண்டுள்ளார்.
கல்லிடைப் பிறந்து போந்து கடலிடைக் கலந்த நீத்தம்
எல்லை இல் மறைகளாலும் இயம்ப அரும் பொருள் ஈது என்னத்
தொல்லையில் ஒன்றே ஆகி துறைதொறும் பரந்த சூழ்ச்சிப்
பல் பெருஞ் சமயம் சொல்லும் பொருளும் போல் பரந்தது அன்றே. (ஆற்றுப்படலம் – 19)
தொல்லையில் ஒன்றே ஆகி – பண்டையகாலத்தில் ஒன்றாய் இருந்த சரயு. கற்களுக்கிடையே பிறக்கிறது. கடலில் சென்று கலக்கிறது. இடையில் பரந்த சூழ்ச்சி நடக்கிறதாம்? நீரைப் பிரிக்கும் சூழ்ச்சி. பல சமயங்களைப் பகுத்து உண்டாக்கி ஒன்றான பரம்பொருளை அறியத்தருவதுபோல இது இருக்கிறதாம். இது யாருடைய சூழ்ச்சி எனத் தெரியவில்லை? ஆரியச் சூழ்ச்சி, திராவிடச் சூழ்ச்சி எனச் சொல்லமுடியாத இயற்கையின் சூழ்ச்சி. கல்லிடைப்பிறந்ததும், பிரித்துவிடப்பட்ட இரட்டைக் குழந்தைகளைப் போல எப்போது சேர்வோம் எப்போது சேர்வோம் எனத் தவித்து சூழ்வினை நீங்கி கடலில் கலக்கும் சரயுவை குழந்தையைக் கொஞ்சுவது போல ரசிக்கிறார்.
சமயத்தைக் கொண்டுகூட்டி சரயுவின் கிளைகளாக உவமை சொன்னது போல சமயக்கடவுள்களையும் விடாமல் குறிப்பிடுகிறார். எங்கும் நிறையும் இறை போல,
நீறணிந்த கடவுள் நிறத்தவான்
ஆறணிந்து சென்றார் கலி மேய்ந்தகில்
சேறணிந்த முலைத் திரு மங்கைதன்
வீற நிந்தவன் மேனியின் மீண்டதே (ஆற்றுப்படலம் – 2)
பல செய்திகளை உள்ளடக்கிய அழகான பாடல்.
நீறில்லா நெற்றிப் பாழ் என்பதுபோல, நீரில்லா வான் பாழ் வானம், நீறணிந்த கடவுள் சிவபெருமானைப்போல் உள்ளது. கலி மேய்ந்ததில் – evoporation என்பதற்கு அழகானத் தமிழ் சொல் கலிமேய்தலினால் வெண்மையான மேகம் சேறணிந்த கடவுளை (லஷ்மி) மனதில் நிறுத்த்தியிருக்கும் பெருமாளின் கறு நிறத்தில் ஆனதாம். ஊழி முதல்வன்போல மெய் கறுத்துப் போனதாம்.
Throwing the weight around என்பதுபோல் கம்பராமாயணம் மொத்தத்துக்கும் ஒரு அதிபதி என்றால் ஒவ்வொரு படலத்துக்கும் ஒவ்வோர் அதிபதிகள். ஆற்றுப்படலத்தில் – நீர், கடல், புனையாறு, வெள்ளிவீழிடைத் தாரைகள், நீத்தம், புனல், வெள்ளம் எனப் பலப் பெயர்களால் அழைப்படும் சரயு நதி. வெவ்வேறு கணங்களில் முகத்தில் தோன்றும் பலவகை உணர்ச்சிகளைப் போல, சரயு நதிக்குத்தான் எத்தனை முகங்கள்? தாய் முலை, உக்கிர வெள்ளம், அலையாடும் நீத்தம், ஆர்பரித்துச் செல்லும் நதி, கலிமேய்தலினால் கறுத்த மழையிலிருந்து பெய்யும் வெள்ளித்தாரைகள்!!
சரயு நதி விலைமாதரைப் போன்றது. தலைமுதல்கால் வரைத் தடவி, சிற்றின்பத்துக்காக பெரும் செல்வத்தை இழக்க நேரிடும் விலைமாதரைப் போல, மலையின் உச்சி, இடை, அடி என முழுவதும் தழுவி, அங்கு கிடக்கும் இயற்கைச் செல்வங்களையெல்லாம் அள்ளிக்கொண்டு சரயுவில் சேர்க்கிறது.இறை நின்றது போல – சிறிதே நின்றது போல.
அப்படி என்னென்ன செல்வங்களை எடுத்துச் செல்கிறது நதி? அப்படி எடுத்துச் செல்வங்களுக்கும் RSPBக்காரர்கள் வீடு கட்டித்தருவார்களா?
மணியும் பொன்னு மயில் தழைப் பீலியும்
அணியு மானைவெண் கோடு மகிலுந்த தன்
இணையி லாரமு மின்னகொண் டேகலான்
வணிக மாக்களை ஒத்ததவ் வாரியே (ஆற்றுப்படலம் -9)
வணிகர்களைப் போல பொன்னும் மணியுல் மயில் பீலியும் யானைத் தந்தமும் அகிற்கட்டையும் எடுத்துக்கொண்டு ஓடு வருகிறது. எத்தனை வாசனையான நதி!
பணைமு கக்களி யானைபன் மாக்களோடு (ஆற்றுப்படலம் – 11)
என அடுத்த பாடலில் சரயு நதி போருக்குச் செல்வது போல காலாட்படை, யானைப்படை, குதிரைப்படை போல இருக்கிறது. போருக்குச் செல்லும் சரயு!
இன்னொரு முக்கியமான பாடல், ஆற்றுப்படலம் -3.
பம்பி மேகம் பரந்தது பானுவால்
நம்பன் மாதுலன் வெம்மையை நண்ணினான்
அம்பி நாற்றுது மென்றகன் குன்றின்மேல்
இம்பர் வாரி வெழுந்தது போன்றதே (ஆ-3)
ஆறுகள் கடலில் கலப்பதால் மலை மாமனாகிறது கடலுக்கு. கைலாசமலையிலிருக்கும் மானச மடுவிலிருந்து தோன்றிய நதி சரயு. “நம்பன் மாதுலனால்”, அதாவது சூரியனால் கைலாசமலை சூடேற்றப்படுகிறதல்லவா… மாமனின் சூட்டைத் தணிக்க, அவன் மகளான சரயுவை மணந்த கடல் எண்ணுகிறதாம். ‘அம்பின் ஆகட்டும்’ என்று, அதாவது ‘நாம் குளிப்பாட்டுவோமே’ என்று மேகமாகி மழையாகப் பெய்து, மாமனைக் குளிர்விக்கிறது.
செறிநறுந்தயிரும் பாலும் வெண்ணெயுந்தெளிந்த நெய்யும்
உறியொடு வாரி யுண்டு குருந்தொடு மருத முந்தி (ஆற்றுப்படலம் – 15)
பாலும் வெண்ணையும் நெய்யும், உறியோடு ஆற்றில் செல்கிறதாம். அப்பானைகள் ஆட்டம் கண்டுபோவதைப் பார்த்தால் பாம்பு மேல் ஆடும் புனிதன் (கண்ணனை) போல் உள்ளது.
பல இனக்குழு மக்கள் புழங்கிய சரயு நதிப்படுகை பற்றிய விவரிப்பு உண்மையில் தமிழர் வாழ் பகுதிகளா அல்லது அக்கால சரயு நதிப்பகுதியினரா எனக் கேள்வி கேட்க வைக்கிறது. சமயத்தில் நாம் சரயு நதி என்பதையே மறந்துவிடுகிறோம். காவிரி நதியைப் பற்றிய பாடலாக அத்தனை நெருக்கமாக நம்மோடு இயைந்துபோகிறது. கம்பருக்குப் பல்லாண்டு வருடங்களுக்கு முன் வாழ்ந்த ஒரு சமூகத்தைப் பற்றியும் வடக்கே இருக்கும் நதியைப் பற்றியும் சொல்வதுபோல இல்லை. ராமன் முங்கி இறந்த அதே காலத்தில் எழுதப்பட்ட பாடல்கள் போல சரயுவிற்கு எத்தனை உயிர்ப்பு. தமிழ்க்கவியின் சொல் வனப்பு.
கொடிச்சிய ரிடித்த சுண்ணங் குங்குமங் கோட்ட மேலம்
நடுக்குறு சாந்தஞ்சிந்தூ ரத்தொடு நரத்த நாகம்
கடுக்கைநாள் வேங்கை கோங்கு பச்சிலை கண்டில் வெண்ணெய்
அடுக்கலி நடுத்த தீந்தேனகிலொடு நாறு மன்றே
இன்றைய நாற்றத்தையும் சேர்க்காவிட்டாலும், நமது நதிகளில் பலவித மலர் வாடைகளும், நிறச்சேர்க்கைகளும் நிகழ்ந்தவண்ணம் இருப்பது இன்றும் நாம் பார்க்கும் ஒன்றுதான்.
கொடிச்சியர் (குறிஞ்சி நிலத்து மகளிர்), ஆயர் குல மகளிர், மள்ளர் (உழவர்கள்), எயினர் (வேடற்குழுக்கள்) எனப் பலக்குழுக்கள் பற்றிய செய்திகளைப் படிக்கிறோம். சரயு நதிக்கு புது இடம் கொடுப்போம் எனும் தொனி எங்கும் ஒலிப்பதில்லை. ஆறு தடுப்பைக் கடக்கிறதா இடம் பெயர்வோம், ஆறு எங்கள் செல்வங்களை எடுத்துச் செல்கிறதா நீலக்கண்ணனாய் காண்போம், ஆறு எங்கள் குலச் சின்னங்களை எடுத்துச் செல்கிறதா அதன் வீரத்துக்கு ஆர்ப்பரிப்போம், எங்கள் சாந்து சந்தனத்தை அள்ளிப்பூசிக்கொள்கிறதா அதன் விளையாட்டை மெய்மறந்து காண்போம்.
தாதுகு சோலை தோறுஞ் சண்பகக் காடு தோறும்
போதவிழ் பொய்கை தோறும் புதுமணத் தடங்க தோறும்
மாதவி வேலிப் பூக வனந்தொறும் வயல்கதோறும்
ஓதிய உடம்பு தோறூம் உயிரன உலாயதன்றே (ஆற்றுப்படலம் -20)
ஓடும் உடம்பில் உயிர் உலாவுவதைப் போல எங்கள் சோலை, காடு, பொய்கை, தடாகங்கள் முழுவதும் சரயுவின் உயிர் உலாத்திக்கொண்டிருக்கும். ஏனென்றால் இது எங்கள் நாயகன் விளையாடப்போகும் நதி. அவனது மூச்சு பிறந்து கலந்த நதி. சரயு நதி. சரயுவைச் சுற்றிக் கிடக்கும் செல்வங்களில் அவன் உறைந்திருப்பான். அவன் விளையாடும் இடம்போக எஞ்சியுள்ளதில் நாங்கள் குடியிருப்போம்.