தொடரும் பன்னிரண்டாண்டுகள் – Twelve Years a Slave, திரைக்கு அப்பால்

பாஸ்டன் பாலா

“பன்னிரெண்டு ஆண்டு அடிமை” திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி இன்றும் மனதைப் பிசைகிறது.

கதாநாயகன் சாலமனின் கண்காணிப்பாளராக டிபீட்ஸ் (Tibeats) இருக்கிறான். சாலமனுக்கும் டிபீட்ஸுக்கும் பொதுவான மேற்பார்வையாளராக இன்னொருவர் உண்டு. சாலமனுக்கு வயது நாற்பதுகளில் இருக்கலாம். டிபீட்ஸ்க்கு இருபது கூட ஆகியிருக்காது. சாலமன் கருப்பர். டிபீட்ஸ் வெள்ளை. சிரத்தையாக பல மணி நேரம் வெயிலில் உழைத்து சாலமன் செய்து முடித்த மரவேலையை சின்னாபின்னமாக்கி விடுகிறான் டிபீட்ஸ். அந்த ஆத்திரத்தில் தன்னுடைய அதிகாரியை நோக்கி கை நீட்டி விடுகிறார் சாலமன்.

டிபீட்ஸிற்கு ஆத்திரம் பொங்குகிறது. ‘கருப்பு நீக்ரோ நாய்! எப்படி எதிர்த்து பேசுவாய்!’ என கருவிக் கொண்டு, நாலைந்து பேரோடு திரும்பி வருகிறான். சாலமனை கழுவில் ஏற்றுகிறான். அதைப் பார்த்த சாலமனின் மேற்பாற்வையாளர் உடனே விரைந்தேறி வந்து, தன்னுடைய முதலாளியின் சொத்து பறிபோகாமல் இருப்பதற்காக சாலமனின் உயிரை மீட்கிறான்.

அதாவது கழுத்தில் சுருக்கு நெருக்குகிறது. கால்களோ மண் தரையில் உழலுகிறது. பாதம் தரையில் படாமல் விந்தி விந்தித் தரையைத் தொடுகிறார் சாலமன். சாலமனின் தாம்புக்கயிறை அவிழ்ப்பதற்கு, மேற்பார்வையாளனுக்கு உரிமையில்லை. சாலமனின் கழுத்தில் தொங்கும் தூக்குக் கயிறை நீக்குவதற்கு முதலாளி வர வேண்டும். அது வரை குற்றுயிராய் இருக்கும் சாலமன் தன்னுடைய மூச்சைத் தக்கவைத்துக் கொள்ள குதியங்காலில் நின்று எட்டு மணி நேரம் போராட வேண்டும்.

அவனைச் சுற்றி உலகம் எப்பொழுதும் போலவே இயங்குகிறது. திரையில் அந்தக் காட்சி மூன்று, நான்கு நிமிடங்கள் அப்படியே காட்டப்படுகிறது. எட்டு மணி நேர மூச்சுத் திணறலைக் காண்பிக்க மூன்றே மூன்று நிமிடம் பார்ப்பது கூட மனதைக் கூச வைக்கிறது. சாலமன் உடன் வேலை பார்க்கும் சக அடிமைகள் தங்கள் கடமையை செய்து கொண்டிருக்கிறார்கள். மாடுகள் பாட்டுக்கு மேய்கின்றன. கதிரை அறுக்கிறார்கள். வாளியில் தண்ணீர் கொண்டு போய் தொட்டியில் நிரப்புகிறார்கள். எவருக்கும் ஒரு சக மானிடன் நாக்கு வறண்டு சாவின் விளிம்பில் தத்தளிப்பது பொருட்டாகவே இல்லை.

1840ல் சாலமன் கழுத்திற்கு தூக்குக் கயிறு மாட்டப்பட்டது ஒரு குறியீடு. வெள்ளையனை எதிர்த்தால், எஜமானனை கை நீட்டிப் பேசினால், கொல்லப்படுவீர்கள் என்று அனைத்து கருப்பு அடிமைகளுக்கும் உணர்த்துவதற்காக சாலமனுக்கு தூக்குக் கயிறு போடப்பட்டு, எட்டு மணி நேரத்திற்கு மேலாக உயிர் ஊசலாட விடப்படுகிறது.

michael brown

பன்னிரெண்டு வருடங்களாக அடிமையாய் இருந்த கதையை நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்னர் சாலமன் நார்த்ரப் (Solomon Northup) தன் சுயசரிதையாக எழுதியிருக்கிறார். சுதந்திர அமெரிக்காவில் பதினெட்டு வயது வரை கருப்பராக வளர்ந்த கதையை எழுத மைக்கேல் பிரவுன் இன்றில்லை. பத்தொன்பதாம் வயதைத் தொடுவதற்குள் சுடப்பட்டு செத்துவிட்டார். முன்னது “12 Years a Slave” — என திரைப்படமாக வெளிவந்து ஆஸ்கார் விருதுகூட வென்றிருக்கிறது. பெர்குசன் நகர தெருவில் நடந்து சென்ற குற்றத்திற்காக கொல்லப்பட்ட மைக்கேல் பிரவுனின் அகால மரணத்திற்கு எதிரான கண்டனப் போராட்டங்களை செய்தித்தாள்களில் படிக்கிறோம்; தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இன்னும் ஒரு வாரத்தில் கல்லூரிக்கு செல்வதற்கு தயாராகிக் கொண்டிருந்திருக்கிறார் பிரவுன். நண்பருடன் காரில் சுற்றிவந்தபோது, காவல்துறையினரால் நிறுத்தப்பட்டிருக்கிறார். அதன்பின் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலமுறை சுடப்பட்டார். நிராயுதபாணியாக இருந்தும் சுடப்பட்டார். இறுதியாக நெற்றிப்பொட்டில் சுடப்பட்டதால் இறந்தார். இறந்தவரின் சடலம், இறந்த இடத்திலேயே தொடுவாரற்று, சீந்துவாரற்று நான்கு மணி நேரத்திற்கு மேலாக நூறு டிகிரி கோடை வெயிலில் அனாதராவாக இருந்திருக்கிறது.

1840களில் சாலமன் அனுபவித்த கொடுமை இன்றும் மைக்கேல் பிரவுன்களுக்குத் தொடர்கிறது. அன்று நடந்ததை திரையில் பார்க்கிறோம். இப்படியும்கூட சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் வாடுதல் கண்டும் காணாத சொரணையற்றவர்கள் இருந்தார்களா என்று வெட்கப்படுகிறோம்.

இன்று 2014. அதே அமெரிக்கா. கருப்பராக இருந்து கொண்டு சாலையில் நடமாடினால் ஆபத்துதான் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்கள். சில மாதம் முன்பு ஃப்ளோரிடா மாநிலத்தில் டிரெவான் மார்டின் என்னும் இளைஞன். சென்ற வாரத்தில் மிஸௌரி மாநிலத்தில் மைக்கேல் பிரௌன். வெள்ளைத்தோல் இல்லாதவர் தைரியமாக நிமிர்ந்து நடந்தால் என்னவாகும் என்பதை பாடம் கற்பிக்க இவர்களை உதாரண புருஷர்கள் ஆக்குகிறார்கள்.

சாதாரணமாக இதற்கு சொல்லப்படும் காரணங்கள், ‘காக்க… காக்க’ போன்ற போலீஸ் திரைப்படங்களில் சொல்லப்படுவதுதான்: “என்கவுண்டர்” என்பது இல்லாவிட்டால் சட்டம் – ஒழுங்கு சீர்குலையும். இவ்வாறு கண்டவுடன் சுடுவதால் மட்டுமே ரவுடிக் கும்பல்களை ஒழிக்கமுடிகிறது. பயங்கரவாதிகள் பெருகிவிட்ட இன்றைய அச்சம் நிறைந்த, துப்பாக்கிகள் எங்கும் எவருக்கும் கிடைக்கும் சூழலில் பாதுகாப்பை நிலைநிறுத்த, இதுபோன்ற வருமுன்காப்போன் தற்காத்தல்களை தவிர்க்க இயலாது – போன்று பற்பல சொல்லப்படுகின்றன.

அமெரிக்காவில் வருடந்தோறும் ஆயிரம் பேராவது இப்படி காவல்துறையினரால் சுடப்பட்டு இறக்கிறார்கள். இவர்களில் எவ்வளவு பேர் நிஜமாகவே ஆபத்தானவர்கள், எவ்வளவு பேர் அனாதைகள், எவ்வளவு பேர் மைக்கேல் பிரவுன் போல் சந்தர்ப்பவசத்தால் செத்தவர்கள் என்பதை உள்ளூர் காவல் அமைப்புகள் தெரிவிப்பதில்லை. எனவே, தெளிவான தகவல் கிட்டுவதில்லை. ஆனால், காவல்துறையினாரால் நிறுத்தப்பட்டால், சகல மரியாதையுடன் முன்ஜாக்கிரதையாக, அவர்கள் சொல்லும் ஒவ்வொரு காரியத்தையும் சிரமேற்கொண்டு நிறைவேற்றாவிட்டால், ‘பயங்கரவாதி பிடிபட்டான்’ எனத் தலைப்பு செய்தி ஆகாமல் நாம் தப்பிப்போம்.

1853ல் “பன்னிரெண்டு ஆண்டு அடிமை” புத்தகமாக வெளிவந்தது.

அப்போதைய அமெரிக்காவில் வடக்கு பகுதி – அடிமை முறையை ஆதரிக்கவில்லை. ஆனால், தெற்குப் பகுதிகளில், அடிமை முறை சட்டபூர்வமாக அமலில் இருந்தது. கருப்பராக இருந்தால், விலையாள் அல்ல என்பதை நிரூபிப்பதற்கு பத்திரங்கள் தேவையாக இருந்தன. சுதந்திரம் பெற விரும்பிய ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் நியு யார்க் நகரத்திற்கு தப்பித்து வந்து விட்டாலும், கையில் சரியான சான்றாவணங்கள் இல்லாவிட்டால், மீண்டும் அடிமை சேவகத்திற்கே அனுப்பப்படுவர்.

இந்தக் காலகட்டத்தில் சாலமன் நியு யார்க் மாநிலத்தில் மனைவியுடனும் மகனுடனும் மகளுடனும் வசித்து வருகிறார். அவருக்கு வயலின் வாசிக்க மிகவும் பிடிக்கும். வயலின் வாசிக்க நிறைய சம்பளமும் வாஷிங்டன் வரை ஊர் சுற்றவும் சர்க்கஸ்காரர்கள் அவரை அழைக்கிறார்கள். நிறைய பணம் சம்பாதிக்கும் ஆசையுடனும், தன்னுடைய வயலின் திறமையை ஊர் ஊராகச் சென்று வெளிக்காட்டும் வாய்ப்பும் கிடைத்த சந்தோஷத்தில் சாலமனும் ஒப்புக் கொள்கிறார். ஆனால், சாலமனை போதையேற்றி, அதன் பின் அந்த போதை மயக்கத்திலேயே அடிமையாக்கி விற்று விடுகிறார்கள் அந்த சர்க்கஸ்காரர்கள்.

அமெரிக்க தலைநகரத்தின் புகழ்பெற்ற காங்கிரஸ் கட்டிடமான கேபிட்டல் அப்போது கட்டிமுடிக்கப்படவில்லை. அதாவது, அமெரிக்கா என்னும் நாடு இன்னும் முழுமையாகவில்லை. தன்னுடைய சித்தாந்தமான ‘சுதந்திரம்’ என்பது பிரகடனத்தில் மட்டுமே இருந்த காலம். வெள்ளை ஆண்களுக்கு மட்டுமே முழுச் சுதந்திரம் என்பதை சொல்லாமல் சொல்லி இருந்த விடுதலை சாற்றுரையை குறிக்கும் விதமாக, அந்த ‘கேப்பிடல்’ கட்டிடம் பாதி கட்டி, மீதி தொக்கி நிற்கும் காட்சி திரைப்படத்தில் காட்டப்படுகிறது.

இன்று 2014. அமெரிக்க காங்கிரஸ் கூடும் இடமான ‘கேப்பிடல்’ கட்டிடம் கம்பீரமாக எழுந்து நிற்கிறது. பெண்களும் வாக்களிக்க சட்டத்தில் உரிமை கிடைத்துவிட்டது. அமெரிக்க ஜனாதிபதியாக ஆப்பிரிக்க அமெரிக்கர் பராக் ஒபாமா இருக்கிறார்.

கம்ப இராமாயணத்தில் ‘கண்ணிழந்தான் பெற்றிழந்தான் எனவுழந்தான் கடுந்துயரம் காவவேலான்’ என்னும் பிரயோகம் வெகு பிரசித்தமானது. ஏற்கனவே கண் பார்வையற்ற ஒருவன், தன்னுடைய பார்வையைப் பெறுகிறான். உலகத்தின் ஒவ்வொரு அதிசயத்தையும் பார்க்கிறான். சூரியன் உதிக்கும் காலையையும், பறவைக் கூட்டத்தின் ஒருங்கையும், நாணல்களின் அலையோரத்து அசைவையும் ரசிக்கிறான். பின், கண்பார்வை பறிபோகிறது.

சேவகம் மட்டுமே செய்து வாழ்ந்த வம்சாவழியில் வந்த சாலமன் விடுதலை பெற்று சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறான். தன் குழந்தைகளுக்கு நல்ல வாழ்வு, தன்னுடைய விருப்பமான துறையில் ஈடுபாடு என நினைத்தபடி வாழமுடிகிறது. பின் அதை இழக்கிறான்.

இழந்ததை எவர் கண்டுகொண்டார்கள்? சாலமன் இவ்வாறு விலையாள் ஆகிப்போனது யாருக்கு தெரியும்?

ப்ரூகல் வரைந்த இகாரஸின் வீழ்ச்சி ஓவியம் நினைவிற்கு வருகிறது. நம்முடைய அனுமான் போல் இகாரஸும் அசகாய சூரர். சூரியனைத் தொட்டுவிட நினைக்கிறார். ஆனால், இறக்கைகள் இல்லை. அதனால் என்ன! கோந்து போட்டு பிரும்மாண்டமான இறக்கைகளை ஒட்டிக் கொள்கிறார். அப்பாவின் அறிவுரையைக் கேட்காமல், பகலவனை நோக்கிப் பறக்கிறார். கதிரோன் ஒளியின் வெபந்த்தில் மெழுகு கரைகிறது. ஐகாரஸ் கடலில் வீழ்கிறான்.

ஐகாரஸின் கால்களை மட்டும் கடலில் காண்கிறோம். அதுவும் உன்னிப்பாக பார்த்தால் மட்டுமே தெரியும். ஓவியத்தின் முகப்பில் குதிரை உழவர் தெரிகிறார். கொஞ்சம் போல் சென்றால் வானத்தைப் பார்க்கும் மேய்ப்பன் புலப்படுகிறார். யாருடைய கால்களோ, தண்ணீரில் தத்தளிப்பது அதன் பின் தெரிய வரலாம். அண்டை வீட்டாரும் உற்றாரும் உயிர் வாடுவது நமக்குத் தெரிவதேயில்லை. நம் வாழ்க்கையின் அர்த்தமற்ற தருணங்களிலேயே நாம் லயித்து மூழ்கிவிடும்போது, மைக்கேல் பிரவுன்கள் சுடப்படுவதை நாம் கண்டுகொள்வதேயில்லை.

அமெரிக்கப் பள்ளிக்கூடங்களில் பாடப்புத்தகங்களாகவோ, பதின்ம வயதினருக்கான புத்தகப் பரிந்துரையாகவோ, அடிமை வாழ்விற்கு உதாரணமாக – இரு புத்தகங்களை முன்வைக்கிறார்கள்: Narrative of the Life of Frederick Douglass, and, The Interesting Narrative of the Life of Olaudah Equiano.

இந்தப் புத்தகங்கள் எல்லாமே மொழியாளுமையையும் அறிவுக்கூர்மையையும் முன்னிறுத்துகின்றன. படிப்பினால் முன்னேறலாம். வாசிப்பை விசாலமாக்கினால் பதவி கிடைக்கும். அதன் மூலம் சுயத்தை அடையாளம் காணலாம். அதனால் அடிமைத் தளைகள் அறுகின்றன.

தன் சுதந்திரத்தை இழந்து அடிமையாய் விற்கப்பட்ட சாலமன் நார்திரப் வளைந்து கொடுக்கத் தெரிந்தவர். சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தவர். அவசரமாக ஆத்திரத்தில் முடிவெடுக்காமல், பொறுமை காத்தவர். அவர் எழுதிய புத்தகத்திலேயேகூட பருத்தியை எவ்வாறு பறிப்பது என்பது குறித்தும், கறும்பு சாகுபடியை எவ்வாறு அதிகரிப்பது என்பது குறித்தும் விலாவாரியாக அத்தியாயம் அத்தியாயமாக அனுபவித்து எழுதியிருக்கிறார். நாயைப் போல் நடத்தப்பட்டாலும், நல்ல காலம் என்றாவது பிறக்கும் என்னும் நம்பிக்கையைக் கைவிடாதவர்.

அவருக்கு எழுத்துக் கூட்டி பாலபாடம் படித்து, அதன் பிறகு பெரிய பெரிய நூல்கள் வாசித்து முன்னேற வேண்டிய நிலை இல்லை. ஆனால், தன்னுடைய வாசிப்பறிவை பகிரங்கமாக்கினால், சவுக்கடி மட்டுமே மிஞ்சும். எனவே, பட்டறிவை சொல்லாமல் நடிக்க வேண்டிய சூழ்நிலை.

பன்னிரெண்டு ஆண்டுகள் அடிமையாக இருந்து மீண்டும் சுதந்திரம் பெற்ற சாலமன் நார்த்ரப்பிற்கும் பெர்கூசன் நகரத்தில் சுடப்பட்ட மைக்கேல் பிரவுனுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் உண்டு.

மைக்கேல் பிரவுன் ஃபிரான்சிஸ்கோ கோயாவின் ‘மே மூன்றாம் தேதி, 1808′ ஓவியத்தின் நாயகன் போல் நிராயுதபாணியாக துணிந்து எதிர்த்து நின்றவர். தான் சுடப்படலாம் என்பதைத் தெரிந்து இருந்தாலும், பயப்படாமல் நெஞ்சை நிமிர்த்தியவர்.

“பன்னிரெண்டு ஆண்டு அடிமை” திரைப்படத்தில் வரும் இன்னொரு மிக முக்கியமான பாத்திரம் பாட்ஸி (Patsey). சாலமனைப் போலவே பாட்ஸியும் இன்னொரு கலைஞர். இவர் சின்னக் குழந்தை. பதின்மூன்று வயது இருக்கும். அந்த வயதிற்கேயுரிய அழகும் குறும்பும் உற்சாகமும் ததும்புகிறது. சோளக்கொல்லை பொம்மைகளை விதவிதமாக செய்கிறார்.

காலை முழுவதும் பருத்தியை பறிப்பது. மாலையில் எஜமானனின் தாசியாக இருப்பது. வன்சிறை என்பதால் தாசிகளுக்குக் கிடைக்கும் சன்மானமும் கிடைக்காது. எஜமானனின் விருப்பத்திற்குரியவராக இருப்பதால், எஜமானியிடமிருந்து அடியும் வதையும் வன்மத்துடன் கொடுக்கப்படுகிறது. சாலமனைப் போல், ‘என்றாவது விடுதலை கிட்டும்! குடும்பத்தோடு இணைவோம்,’ என்னும் நம்பிக்கை ஆதாரமும் கிடையவே கிடையாது.

பாட்ஸியின் கதையைப் படித்தால் தலைமுறை தலைமுறையாக அடிமைப்பட்டிருக்கும் கதை தெரியவரும். வாழ்க்கை வருங்காலம் இருட்டு குகையாக மட்டுமே தெரிவதை உணரமுடியும். உயிரைவிட முடியாத அவலமும் இரண வேதனையை தினமும் அனுபவிக்கும் சவுக்கடியும் சித்திரவதை பயமும் நிறைந்த இருட்டுகள் புலப்படும்.

இந்தக் கீழ்மையை எதிர்த்துதான் கோயாவின் The Third of May 1808 மைக்கேல் பிரவுன் நிற்கிறான். செத்து பிழைத்தது போதும் என்று நெஞ்சை உயர்த்துகிறான்.

ஒளிப்பட உதவி –

Deadline cnn,   Alexander Jablokov ,   wikipedia,  http://hikeghosttowns.com/bookeditions.htm, wikipedia 

2 comments

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.