சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ்: அறிமுக கட்டுரை- நரோபா

நரோபா

‘தற்செயல் என்பது ஒரு சொகுசு அல்ல, அது விதியின் மறுபக்கம், அதைத் தவிரவும் வேறேதோவும்கூட… மறு எல்லையில் தற்செயல் என்பது பூரண சுதந்திரம். தற்செயல் எந்த விதிகளுக்கும் உட்பட்டதில்லை, ஒருவேளை அப்படியே கட்டுப்பட்டாலும் அவை எவை என்று நாமறிய முடியாது. தற்செயல், இந்த உவமையை பயன்படுத்த நீங்கள் அனுமதித்தால், நமது கோளில் ஒவ்வொரு நொடியும் கடவுளின் இருப்பை பறை சாற்றுவதை போன்றது. நோக்கமற்ற கடவுள் நோக்கமற்ற சமிக்ஞைகளை நோக்கமற்ற ஜீவராசிகளை நோக்கிப் புரிகிறார்.’ – ராபர்டோ போலனோ, 2666

‘எந்தப் போக்கும், வாழ்வினுடைய காலத்தினுடைய சூதாட்டங்களினால் கணிப்பிற்குட்படுவதில்லை. நடந்த காரியத்தின் காரணங்களை ஆராய்ந்து அடுக்குவது சுலபம். வலுவான காரணங்கள் இருக்க, அவற்றிற்கான காரியங்கள் ஏன் நடக்கவில்லை என்பதை எவரும் அறிய முடியாது. நடந்ததை நடக்க விதிக்கப்பட்டதாக நினைத்து ஏற்றுக்கொள்ள, சூதாட்டம் வெற்றிகரமாக ஆட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறது’- மாபெரும் சூதாட்டம், சுரேஷ்குமார இந்திரஜித்

சுரேஷ்குமார இந்திரஜித் தமிழில் தனித்துவமான எழுத்தாளர். தமிழில் உருவாகியுள்ள எந்த படைப்பாளி வரிசையிலும் அவரை அத்தனை சுலபமாக பொருத்த முடியாது. கதைக் களம் மற்றும் கூறுமுறை காரணமாக சிறிய நவீன தமிழ் இலக்கிய பரப்பில்கூட மிகச் சிலர் மட்டுமே அவரை தொடர்ச்சியாக வாசித்தவர்கள். அவர் வாசிக்கப்பட வேண்டியவர், விவாதிக்கப்பட வேண்டியவர், அதற்கொரு தொடக்கமாக பதாகை இந்த எளிய முயற்சியை முன்னெடுப்பதில் பெருமை கொள்கிறது. சிறப்பிதழ் முடிவாகி அது வெளியாவதற்கு ஏறத்தாழ ஆறு மாதங்கள் எடுத்துக்கொண்டோம். தங்கள் கட்டுரைகளை எங்களுக்கு அளித்த படைப்பாளிகளிடம் கால தாமதத்திற்காக மன்னிப்பு கோருகிறோம். படைப்பாளிகளாக இத்தகைய சிறப்பிதழை கொணர்வதில் உள்ள சவால்களை அவர்கள் அறிந்தவர்கள் என்பதால் எங்கள் நிலையை புரிந்து கொள்வார்கள். இன்னும் பல செறிவான கட்டுரைகள் வந்திருக்க வேண்டியது. ஆனால் இனியும் காத்திருந்து காலம் தாழ்த்த முடியாது என்பதால் இப்போது கொணர்ந்துள்ளோம். கட்டுரைகளை அளித்த, அளிக்க எண்ணிய, அத்தனை எழுத்தாளர்களுக்கும் எங்கள் நன்றிகள்.

எனது வாசிப்பின் எல்லையில் சுரேஷ்குமார இந்திரஜித் கதைகளை முழுக்க பின்நவீனத்துவமாக அடையாளப்படுத்த முடியுமா என்று தெரியவில்லை. நவீனத்துவத்தின் பேசுபொருளையே புதிய கதைசொல்லல் உத்தியில் கொண்டு சேர்த்தவர் என்று சொல்லலாம். சொற்சிக்கனமும் மொழி மற்றும் கதைகள் குறித்தும் தீவிர பிரக்ஞை உடையவர். இவைகூட நவீனத்துவ எழுத்தின் முக்கிய தன்மைகளில் ஒன்று. இந்த பிரக்ஞையே நாவல்கள் எழுத முடியாததற்கு காரணம் என்று அவரே ஒரு நேர்காணலில் குறிப்பிடுகிறார். அவ்வகையில் இது அவருடைய தனித்துவமும் எல்லையும் ஆகிறது. அவருடைய கதைகளில் சூழல் விவரணை என்பது அறவே இல்லை. புறத்திணை மறைந்து அகத்திணை மட்டுமே உள்ளது. இந்த தன்மையில்கூட காஃப்கா பாணியை அவர் கைகொள்ளவில்லை. காஃப்கா அளிக்கும் பீதி உணர்வை, நம்பிக்கையின்மையை சுரேஷ்குமார இந்திரஜித் கதைகள் அளிப்பதில்லை. மாறாக பெரும்பாலான கதைகள் உணர்வு நீக்கம் செய்யப்பட்டுள்ளன. சில மெல்லிய கோடுகள் மட்டுமே தீட்டப்படுகின்றன. வாசகனே முழு உருவையும், விழைவையும் கற்பனை செய்து கொள்ள வேண்டும். உணர்வுகளின் தீவிரத்தை அடைய வேண்டிய பொறுப்பும் அவனைச் சார்ந்ததே.

அவருடைய கதைகள் நுட்பங்கள் புதைந்த ‘புதையல் வேட்டை’ விளையாட்டை ஒத்தது. வாசகன் சிறு சிறு குறிப்புகளைக் கொண்டு கதையை தன் மனதில் பின்னியபடி வருகிறான். நுட்பங்களின் சங்கிலிப் பிணைப்பு இதில் முக்கியம். நுட்பங்களைத் தவறவிட தவறவிட கதை அவனுக்கு பிடிபடாமல் ஆகிறது. இறுதியில் அவன் இலக்கை அடையும்போது அது கதாசிரியர் உத்தேசித்த இலக்காக இருக்க வேண்டியதில்லை. இன்னும் சொல்வதானால் எழுத்தாளன் எந்த இலக்கையுமே உத்தேசிக்கவில்லை என்பதே உண்மை. ஜெயமோகன் ‘இடப்பக்க மூக்குத்தி’ தொகுப்பின் வெளியீட்டின்போது சுரேஷ்குமார இந்திரஜித் வரைபடம் மட்டுமே அளிக்கிறார், வாசகரே பயணித்து தங்களது இலக்குகளை அடைய வேண்டும், என்று கூறினார். அவருடைய கதைகளின் ஒன்றிற்கு தலைப்பே அவருடைய கதைகளின் இந்தத் தன்மையை சுட்டுகிறது. ‘ஓர் இடத்திற்குப் பல வரைபடங்கள் ஒரு காலத்திற்குப் பல சரித்திரங்கள்’ (மாபெரும் சூதாட்டம் தொகுப்பு). தமிழில் வாசக சுதந்திரத்தை அதிகமாக அளிக்கும் எழுத்துக்கள் என்று சுரேஷ்குமார இந்திரஜித் மற்றும் யுவன் சந்திரசேகரின் எழுத்துக்களை கூறலாம். நாம் எண்ணுவது போல் வாழ்க்கையோ காலமோ நேர்க்கோட்டில் இல்லை. எத்தனையோ தளங்கள் உள்ளன. இணை வரலாறுகள் இயங்குகின்றன. ’மறைந்து திரியும் கிழவன்’, சமூரியா கதைகள், போன்றவை அப்படி அவர் உருவாக்க முனையும் இணை வரலாறின் பிரதிகள். நியதிகள் அற்ற அல்லது நியதிகள் பிடிபடாத இந்தச் சிடுக்குகள் மிகுந்த பேரியக்கத்தின் குறுக்குவெட்டு தோற்றத்தை காணும்போது ஏற்படும் பிரமிப்பை சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகள் வாசகருக்கு கடத்த முயல்கின்றன.

அவருடைய ‘புனைவுகளின் உரையாடல்’ கதையில் கதைசொல்லி ஒரு கதையை சொல்லிக்கொண்டே வருகிறார், அந்தக் கதை முடிவதற்குமுன் இப்படி எழுதுகிறார்- “நடந்த சம்பவமாக நான் கூறியது அனைத்தும் புனைவு என்று கூறினேன். நண்பர் சிகரெட்டை இழுத்து புகையை விட்டார். ‘உண்மையைச் சொல்லிவிட்டுப் புனைவு என்று ஏமாற்றுகிறீர்களா?’ என்றார். ‘இல்லை; புனைவை உண்மை போலச் சொன்னேன்’ என்றேன். நண்பர் மௌனமாக சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார்”’. இது சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகளை புரிந்துகொள்ள உதவும் மிக முக்கியமான பகுதி. நம்பகமற்ற கதைசொல்லி நம்முடன் விளையாடுகிறான் எனும் பிரக்ஞை வந்துவிடுகிறது. ‘நள்ளிரவில் சூரியன்’, ‘ஆங்கிலப் புத்தகம் வாசிக்கும் பெண்’ இப்படி பல கதைகளை இதற்கு உதாரணம் அளிக்கலாம். நேர்காணலில் அவரே தனக்கு ‘ரீல்’ விடுவது பிடிக்கும் என்று சொல்கிறார். புனைவு உண்மையை சொல்லவில்லை என்றாலும் உண்மையின் சாரத்தை வெளிப்படுத்துகிறது என்பது பரவலான கூற்று. ஆனால் சுரேஷ்குமார இந்திரஜித் உண்மை, பொய், புனைவு, எனும் பிரிவினையை அழித்து வாசகனுடன் விளையாடுகிறார். இதை உணர்ந்து தானும் விளையாட்டில் பங்கு பெரும் வாசகனுக்கு அவர் கதைகள் அளிக்கும் வாசிப்பின்பம் வேறு வகையானது. ஒரு வகையில் நவீனத்துவ எழுத்துக்களின் சத்தியம், தரிசனம் போன்றவற்றின் பகடி என இவற்றைச் சொல்லலாம். இத்தன்மை காரணமாகவே அவரது எழுத்து பிற நவீனத்துவ எழுத்துக்களில் இருந்து பெரிதும் வேறுபடுகிறது. உண்மைக்கும் பொய்க்குமான இடைவெளிகள் மறைந்து, அவரவர் அவரவருக்கான உண்மையை உற்பத்தி செய்துகொள்ளும் இந்த காலகட்டத்தில் சுரேஷ்குமார இந்திரஜித்தை தமிழின் பின்னை வாய்மைக்கால எழுத்தாளர் என்று அடையாளப்படுத்தலாமா என்பதை நாம் பரிசீலிக்க வேண்டும்.

பதாகை சிறப்பிதழின் தனித்துவம் என்பது எழுத்தாளரின் விரிவான நேர்காணல்தான். ‘பாரிஸ் ரிவ்யு’ நேர்காணலை லட்சியமாகக் கொண்டு எழுத்தாளரின் படைப்பு விசையை வெளிக்கொணர்வதே விரிவான நேர்காணலின் நோக்கம். அவ்வகையில் இந்த நேர்காணல் மிகுந்த நிறைவை அளித்தது. கதைகளின் பின்னணி, அவற்றின் நுட்பங்கள் பற்றி விரிவாக உரையாடியுள்ளார். ராமேஸ்வர வாழ்க்கை, அவருடைய பணிச்சூழல், அவர் வாசித்த எழுத்தாளர்கள் என அவர் எழுத்தை பாதித்த, உருவாக்கிய அம்சங்களை அடையாளம் காண முடியும். “நான் எழுதும்போது மிக கவனமாகத்தான் எழுதுவேன், வாக்கியங்கள் சரியாக அமைகிறதா, என்று பார்ப்பேன். செண்டன்ஸ் சரியா அமையுதா, என்னன்னு. அப்படியும் பிரசுரம் ஆன பிறகு வாக்கியங்களை மாற்றிப் போட்டிருக்கலாமோ என்று நினைப்பேன். அதில மிகவும் பிரக்ஞைபூர்வமாகத்தான் இருப்பேன். எனக்கு வளவள என்று சொல்வது ஒத்து வராது. ஒரு விஷயத்தைச் சுருக்கமாக சொல்ல வேண்டும் என பார்ப்பேன். எதற்காக வளவள என்று இழுக்க வேண்டும்? சுருக்கமாகச் சொல்லுங்கள்,” என்று நேர்காணலில் தனது மொழியைப் பற்றி சொல்கிறார். “என்னுடைய எழுத்து மற்றும் பாணி கொஞ்சம் அறிவார்ந்த எழுத்தாளர்கள், அறிவார்ந்த வாசகர்களுக்குதான் பிடிக்கும் எனும் எண்ணம் எனக்குண்டு. பெரிய பரப்பை என்னால் அடைய முடியாது எனும் எண்ணமும் உண்டு. இதுதான் தலை எழுத்து என்று ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான்,.” என்று தனது விசனத்தைப் பதிவு செய்கிறார். அவருடைய படைப்புலகின் அலகுகளை அவரே ஒட்டுமொத்தமாக இப்படி சாராம்சப்படுத்தியிருக்கிறார்- “பழைய சமூக மதிப்பீடுகளைக் கலைப்பதிலும், மாயத்தன்மை வாய்ந்த பாணியினால் பல வழிகளைத் திறப்பதிலும், தர்க்கத்திற்கு புலப்படாத வாழ்வின் அபத்த திருப்பங்களைக் கூறுவதிலும், பிடிபடாத வாழ்வின் மர்மங்களைக் காண்பிப்பதிலும் நான் ஈடுபாடாக இருந்தேன்.”

நேர்காணலுக்காக அவரைச் சந்தித்து வந்த அனுபவத்தை ஒரு கட்டுரையாக எழுதி இருக்கிறேன். “மதுரை புறநகர் பகுதிகளில் ஆட்டோ மேடு பள்ளங்களில் ஏறி இறங்கியது. வாசல் கம்பி கேட்டின் ஒரு எல்லையில் என். ஆர். சுரேஷ் குமார், தாசில்தார், எனும் சிறிய பெயர்ப்பலகை தொங்கியது, மறு எல்லையில் சுரேஷ்குமார இந்திரஜித் என்று மற்றொரு பெயர்ப்பலகை தொங்கியது. தனது கல்வி, பூர்வீகம், பதவி எல்லாவற்றையும் துறந்து நவீன எழுத்தாளராக இரட்டை வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறார் என எண்ணிக் கொண்டேன்.” அவருடைய ஆளுமையின் சில அம்சங்களை அதில்கொண்டு வர முடிந்தது.

மொழியாக்கங்கள் பிற மொழியிலிருந்து தமிழுக்கு வருகின்ற அளவில் தமிழிலிருந்து பிற மொழிகளுக்கு மொழியாக்கம் செய்யப்படுவதில்லை எனும் குறை நெடுங்காலமாகவே உள்ளதுதான். இம்முறை சிறப்பிதழுடன் தேர்ந்தெடுத்த கதையை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யலாம் என்று ஒரு எண்ணம் வந்தது. இச்சிறப்பிதழில் முதன் முதலில் தயாரானது ‘விரித்த கூந்தல்’ மொழியாக்கமே. மொழியாக்கத்தில் மிகுந்த தேர்ச்சியும் மொழிவளமும் கொண்ட நண்பர் நகுல் வசன் (Nakul Vāc) இக்கதையை மொழியாக்கம் செய்துள்ளார்.

நண்பர் வெங்கடேஷ் ஸ்ரீனிவாசகம் ”இயல்பான காமத்தை காலந்தோறும் விதம் விதமாய் இலக்கியம் பதிவு செய்துகொண்டுதானிருக்கிறது. காதலும், அழகின் தரிசன மனவெழுச்சியும் எந்த மென் புள்ளியில்/கோட்டிற்கு அப்பால், காமத்தைத் தொடுகிறது என்பது இன்னும் பலரும் அறியாத புதிராகத் தானிருக்கிறது,” என்று அவருடைய நினைவுகளுடன் தொடர்புபடுத்தி ‘விரித்த கூந்தல்’ கதையை பற்றிய தனது வாசிப்பையும் எழுதி இருக்கிறார்.

எழுத்தாளர் சுகுமாரன் எண்பதுகளின் தமிழ் இலக்கிய சூழலில் சுரேஷ்குமார இந்திரஜித் எழுத வந்ததில் இருந்து தனது அவதானிப்புகளை துவங்குகிறார். மௌனியின் தொடர்ச்சியாகவும், அவரிடமிருந்து வேறு பார்வையை தேர்ந்தவராகவும் சுரேஷ்குமார இந்திரஜித்தை அடையாளம் காண்கிறார். “’முன்னோடிகளின் பாதிப்பில்லாத தடம்’ என்ற வாசகமே என்னை சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைவழியைத் தேடத் தூண்டியது. அப்படி ஒரு தடம் இலக்கியத்தில் சாத்தியமில்லை என்ற நம்பிக்கையே தூண்டுதலுக்கு முகாந்திரம். மௌனி எழுத்தின் நேர் பாதிப்பு சுரேஷ்குமார இந்திரஜித்துக்கு இல்லாமல் இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் அவர் இயங்கும் மொழியில் ஓட்டத்தில் அவர் மேற்கொண்ட தேர்வில் மறைமுகமாக நிகழச் சாத்தியங்கள் அதிகம். இது ஒரு பொருளில் மொழியின் வலு. இன்னொரு பொருளில் படைப்பாக்கத்தின் தவிர்க்கவியலாமை. இந்த்த் தொடர்ச்சிதான் இலக்கியத்தை நிலைநிறுத்தவும் செய்கிறது.”

எழுத்தாளர் கே. என். செந்தில் ஏறத்தாழ சுகுமாரன் முன்வைத்த அதே கருத்தை எழுதுகிறார். சுகுமாரன் அடையாளம் காட்டியது போல் இவரும் குலசேகரன் மற்றும் எஸ். செந்தில்குமார் ஆகியோரை சுரேஷ்குமார இந்திரஜித்தின் நீட்சியாக காண்கிறார். ‘நடன மங்கை’ தொகுப்பை முன்வைத்து எழுதிய கட்டுரையில் “வர்ணணைகளையும் அலங்காரங்களையும் தவிர்த்து விட்டு நேரடியான சித்தரிப்புகளின் வழி உருக்கொள்ளும் காட்சிகளிலிருந்து விரிபவை சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகள். அந்தக் காட்சிகளிலிருந்து திரண்டு வரும் ஏதேனுமொன்று (அது சேதனமாகவோ அசேதனமாகவோ இருக்கலாம்) படிமமாக ஆகி அந்த மொத்தக் கதையையும் குவியாடி போல பிரதிபலிக்கச் செய்கின்றது. அவரது புகழ் பெற்ற ‘விரிந்த கூந்தல்’ முதல் இத்தொகுதியிலுள்ள ‘நடன மங்கை’ வரை இதைக் காணலாம்,” என்று எழுதுகிறார். மேலும் “மெளனியும் சா.கந்தசாமியும் இணையும் புள்ளி என இவ்வுலகை தோராயமாக வரையறுக்கத் தோன்றுகிறது. ஏன் ‘தோராயமாக’ என்றால் அதிலிருந்து விலகி கிளை பிரிந்து தன் பிரத்யேக கூறுமுறை நோக்கி சுரேஷ் சென்றுவிடுவதே காரணம்,” என சுரேஷ்குமார இந்திரஜித்தை தமிழ் இலக்கிய மரபில் பொருத்திப் பார்க்கிறார்.

எழுத்தாளர் சுரேஷ் பிரதீப் தமிழ் இலக்கிய வரலாற்றின் சித்திரத்தை அளித்துவிட்டு அதில் சுரேஷ்குமார இந்திரஜித்தை அவருடைய ‘நானும் ஒருவன்’ தொகுப்பைக் கொண்டு வரையறை செய்ய முயல்கிறார். “மனம் கொள்ளும் நுட்பமான சஞ்சலங்களை இக்கதைகள் காட்சிப்படுத்துகின்றன. எளிமையின் மூலமாகவே நமக்குள் நுழையும் தன்மை கொண்டிருக்கின்றன. தமிழ்ச் சிறுகதை மரபின் வலுவான பின்னணியில் தன் குரலை மென்மையாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்கின்றார் சுரேஷ்குமார இந்திரஜித்,” என்று சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகளில் உள்ள உளவியல் நுட்பங்களை அடையாளப்படுத்துகிறார்.

விஞரும் விமர்சகருமான க. மோகனரங்கன் மதுரை வட்டார எழுத்தாளர்கள் பற்றிய கருத்தரங்கில் சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகள் பற்றி வாசித்த கட்டுரையை இச்சிறப்பிதழுக்காக பயன்படுத்திக்கொள்ள அனுமதித்துள்ளார். ஒட்டுமொத்தமாக அவருடைய புனைவுலகைப் பற்றிய பருந்துப் பார்வை அளிக்கும் முக்கியமான கட்டுரை. “தமிழில் பெரும்போக்கிலான யதார்த்தவாத கதைகளுக்கே உரிய நாடகீயமான திருப்பங்களோ, கதாபாத்திரங்களின் உள் மனமோதல்களோ, சூழல் வர்ணனைகளோ அதிகம் இல்லாத இவர் கதைகள் கடல் மீது மிதக்கும் தனிப் பாறைகளை ஒத்தவை. கண்ணுக்கு புலனாகும் அளவை விடவும் நீரில் மறைந்திருக்கும் பகுதி கூடுதலாக இருக்கும். அவற்றைப் போலவே இவர் கதைகளிலும் தட்டுப்படுவதைக் காட்டிலும் மறைந்திருப்பன அதிகம் எனலாம். சொல்லும் விஷயத்தினால் அல்ல, சொல்லிய விதத்தாலேயே தம்மை கதைகளாக ஒருங்கிணைத்துக் கொள்ளும் தன்மை கொண்ட இக்கதைகள் சமகால நடப்புகளின் மீதான விமர்சனத்தையும் உட்கிடையாக கொண்டவை என்பதே இவற்றின் சிறப்பு,” என்று அவருடைய புனைவுலகின் தனித்தன்மையை சுட்டிக்காட்டுகிறார்.

இணையமோ நவீன தொழில்நுட்பமோ அண்டாத மாறுபட்ட கவிஞர் ந. ஜயபாஸ்கரன். அவரிடம் கட்டுரை கேட்டு அவருடைய மதுரை கடைக்கு தொலைபேசி செய்யும்போதும் பின்னர் அவரே அழைக்கும்போதும் அவருடைய குரலில் உள்ள தயக்கமும் மென்மையும் என்னை வியப்பில் ஆழ்த்தின. அவருடைய கட்டுரையும் கவிஞருக்கு உரிய அடங்கிய தொனியில், அதே வேளை கவித்துவமாக, சுரேஷ்குமார இந்திரஜித்தின் ஆளுமையையும் அவருடைய படைப்புலகையும் நுட்பமாக இணைக்கிறது. ‘பகலில் மட்டும் தெரியும் வாண வேடிக்கை’ எனும் கவித்துவமான தலைப்புள்ள கட்டுரையில் சுரேஷ்குமார இந்திரஜித்தின் மொழியைப் பற்றி இப்படி சொல்கிறார் “குறைச் சொல் மூலமே வெற்றி கண்டவர்” என்று கு.ப.ரா.வைப் பற்றி சிட்டி செய்திருக்கும் மதிப்பீடு, சுரேஷ்குமாருக்கும் பொருந்தும் என்றே தோன்றுகிறது. எந்தக் கணத்திலும் சொற்கள் தன்னை மீறிச் செல்வதை சுரேஷ்குமார் அனுமதிப்பதில்லை- ஒரு கறாரான அதிகாரியைப் போல எந்த இடத்திலும் அவர் சொற்களை அழுத்துவது இல்லை; திருகுவதும் இல்லை. உணர்ச்சி அதிகம் கலக்காத சிறிய சொற்கள்; சிறிய தொடர்கள்; சிறிய அசைவுகள்- இவற்றின் மூலமே ஒரு புதிரான அக உலகத்தை சிருஷ்டிக்க அவரால் முடிந்திருக்கிறது.

“சுரேஷ்குமார இந்திரஜித் யதார்த்த உலகில், யதார்த்த சமூகத்தில், உறவுகளுக்குள் இருக்கும் சிடுக்குகளை, மாயம் காட்டும் அகவுலக யதார்த்தங்களை, அதன் பிரதிபலிப்புகளை, புனைவு வெளியில் நிகழ்த்துகிறார்… உளவியல் ரீதியாக அலசுதல், புரிந்துகொள்ள முயலுதல், அற விழுமியங்களற்ற வாழ்வின் ஒழுங்கின்மையின் ஒழுங்கை, நித்தனத்துடன் ஒருவித விலைகளோடு அவதானித்து முன்வைப்பவையாக இவரது படைப்புகள் உள்ளன,” என்று தன் அவதானிப்புகளையும் சில விமர்சனங்களையும் கவிஞர் பாலா கருப்பசாமி தனது கட்டுரையில் எழுதுகிறார். சுரேஷ்குமார இந்திரஜித்தின் மூன்று தொகுதிகளை வாசித்து இக்கட்டுரையை எழுதி இருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.

ஈழ எழுத்தாளர் ஜிஃப்ரி ஹாசன் எழுதிய கட்டுரையில், “இவரது கதைகளில் நவீன, பின்-நவீனத்தன்மைகள் ஒருசேர கலந்திருப்பதைக் காண முடியும். ஒரு படைப்பின் கோட்பாட்டுத் தனித்துவத்தை மீறினாலும் கலைப் படைப்பு எனும் நிலையில் அது ஒரு வெற்றியாகும். ஒரு வகையில் பார்த்தால் அது கோட்பாட்டு வரையறைகளை மீறி மனிதர்களை, நிகழ்வுகளை, இலக்கியத்தைப் பார்க்கும் ஒரு செயல்பாடு. ஒன்றை முழுமையாகப் புறக்கணித்து இன்னொன்றில் முழுமையாக அமிழ்ந்து செல்லும் போக்கைப் புறக்கணித்த ஒரு தனித்துவமான போக்கு. தமிழ் படைப்புலகை மேலும் முன்கொண்டு செல்லும் முயற்சி இது,” என சுரேஷ்குமார இந்திரஜித்தின் தனித்துவத்தை, அவரது எழுத்து கோட்பாட்டு புட்டியில் அடைபடாததை சுட்டிக் காட்டுகிறார்.

வளரும் எழுத்தாளர் அரிசங்கர் ஒரு வாசகராக தான் முதன்முதலாக வாசித்த ‘அவரவர் வழி’ தொகுப்பை முன்வைத்து தனது பார்வையை இப்படி எழுதி இருக்கிறார். “பல நேரங்களில் என்ன இது இவ்வளவு சீக்கிரம் முடிந்துவிட்டதே என ஏங்க வைக்கும். திரும்பத் திரும்ப அதை நோக்கியே நம்மை இழுக்கும். அப்படிப்பட்ட ஒரு நடனத்தைத்தான் சுரேஷ்குமார இந்திரஜித் தன் கதைகளின் மூலமாக நிகழ்த்தியிருக்கிறார்.”

நண்பர் ஆர். அஜய் சுரேஷ்குமார இந்திரஜித்தின் ‘மாய யதார்த்தம்’ மற்றும் ‘ஒரு காதல் கதை’ ஆகிய இரண்டு கதைகளை மட்டும் எடுத்துக்கொண்டு சுரேஷ்குமார இந்திரஜித் கதைகளில் உள்ள ஆண் பெண் உறவு, பாலியல் சிடுக்குகள் குறித்து தனது அவதானிப்புகளை கட்டுரையாக்கியிருக்கிறார்.

“சர்வாதிகாரிகள் தம் அதிகாரத்தின் எல்லையைச் சோதிப்பது வன்முறையால் அல்ல- தாம் நிர்ணயிக்கும் உண்மையை யார் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதைக் கொண்டுதான்,” என்று பீட்டர் பொங்கல் ‘எலும்புக்கூடுகள்’ கதை குறித்து தனது பார்வையை எழுதியிருக்கிறார்.

நேர்காணலும், ஒரு மொழியாக்கமும், பனிரெண்டு கட்டுரைகளும் கொண்ட காத்திரமான தொகுப்பாக இச்சிறப்பிதழ் மலர்ந்திருக்கிறது. சிறப்பிதழைக் கொண்டு வருவதற்கு ஒத்துழைத்த சக பதாகை நண்பர்களுக்கு நன்றி. தங்கள் கட்டுரைகளை அளித்த படைப்பாளிகளுக்கும், விரிவான நேர்காணல் அளித்து சிறப்பிதழுக்கு மதிப்பளித்த எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களுக்கும் எனது நன்றிகள்.

3 comments

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.