‘எலும்புக்கூடுகள்’ சிறுகதையை முன்வைத்து- பீட்டர் பொங்கல்

பீட்டர் பொங்கல்

உண்மையைத் திரிப்பது, கலைப்பது, வெவ்வேறு வரிசைகளில் தொகுத்துக் கொள்வது என்பதைக் கொண்டு வரிசைக்கிரமமாக, அல்லது தர்க்க ஒழுங்கின் பாற்பட்டு நாம் அடையும் புரிதல் சந்தேகத்துக்கு உரியது; அப்படிப்பட்ட ஒரு காலவரிசையையும் அதன் படிப்பினைகளையும் உருவாக்கும் வரலாற்றாசிரியன் சந்தேகத்துக்கு உரியவன்; அவனது குரல் அதிகாரத்தின் குரல், அவன் அறியும் உண்மைகள் அரைகுறையானவை, அவற்றின் வெளிப்பாடுகள் உள்நோக்கங்களால் முறிவுற்றவை, என்ற உணர்வில் படைக்கப்பட்ட இலக்கியம் தன்னைத் தானே கண்ணாடியில் கண்டு ரசிக்கும் ஒரு வகை சுய மெச்சலாகவும், சாதாரண மனிதர்களின் சாதாரண வாழ்க்கையை விவரிப்பதில் அக்கறையற்ற, மானுட உணர்வுகளில் பங்கேற்கும் இதயமற்ற, அறிவுப்பூர்வமான, உலர்ந்த எழுத்தாகவும் பெரும்பாலும் அலட்சியப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. ‘கதைகளை’ தவிர்ப்பதை இயல்பாய்க் கொண்ட இப்படிப்பட்ட எழுத்தில் நாம் காணும் சுவாரசியமின்மை  அலுப்பூட்டுவது உண்மையே. ஆனால் சான்றாவணங்களின் மீது கட்டமைக்கப்படும் தோற்றத்தை அளிப்பதால் வரலாறு அறிவியலுக்குரிய மெய்ம்மை பெற்று சந்தேகத்துக்கு இடமில்லாததாகி,  வெவ்வேறு தரப்பினருக்கும் மிகுந்த பயன்மதிப்பு கொண்ட கருவி நிலையை எட்டி, அவற்றை எடுத்துரைக்கும் வரலாற்றாசிரியர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நடுநிலை என்று ஓரிடத்தில் இருக்க இடமில்லாமல் ஏதோ ஒரு பக்கம் கொண்டு செல்லப்பட்டு கட்சி கட்டி நிற்கும்போது வரலாறு மட்டுமல்ல, அறிவியலும்கூட புறவயப்பட்ட உண்மையை உரைக்கும் துறை என்ற உயர்நிலையை இழந்து கவன ஈர்ப்புக்கான சந்தையில் ஒலிக்கும் பல போட்டிக் குரல்கள் கொண்ட கடைச்சரக்காகிறது, எது விலை போகிறது என்பதைக் கொண்டே ஒன்றன் முக்கியத்துவம் நிர்ணயிக்கப்படுகிறது. இந்நிலையில் ‘கதை’ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், அதிலல்ல, அது எப்படி உருவாகிறது, எந்த நோக்கத்தை முன்னிட்டு உருவாகி பல்கிப் பெருகுகிறது, என்பதை அறிவதில்தான் சுவாரசியம் இருக்கிறது. செய்திகளையும் வரலாறுகளையும் செய்பவர்கள் மற்றும் அவற்றின் நுகர்வோர் வெவ்வேறாக இருந்த காலத்தில் குறைவளவு எண்ணிக்கைக் கொண்ட புத்திசாலி எழுத்தாளர்களுக்கும் அறிவுஜீவி பாவனைகள் கொண்ட வாசகர்களுக்கும் மட்டுமே ஆர்வம் எழுப்பியிருக்கக்கூடிய இக்கதைகள், இணையத் தொடர்பினால் ஊடகச் சுவர்கள் உடைக்கப்பட்டு ஒவ்வொரு லைக்கிலும் பார்வர்டிலும் செய்திகளைப் பகிர்ந்து கொள்ளும் நாம் ஒவ்வொருவரும் நுகர்வதோடு உற்பத்தி செய்பவர்களாகவும் இருக்கும் இக்காலத்தில், நம் கதைகளாக இருக்கக்கூடியவை; சாதாரண மனிதர்களுக்கும் அவர் கதைகளுக்கும் இடையிலான தொடர்பு கண்ணிகள் இன்று உருவாகி வருவதால், தன் பாட்டுக்கு கதைகளைப் பற்றிய கதைகள் எழுதிக் கொண்டு, உண்மையின் நம்பகத்தன்மை மீது கேள்விகள் எழுப்பிக் கொண்டு, தோற்றங்களுக்கும் நோக்கங்களுக்கும் உள்ள உறவை விசாரித்துக் கொண்டு, தானுண்டு தன் வேலையுண்டு என்று பரவலான வாசக பரப்புக்கு வெளியே இருந்து கொண்டிருக்கும் சுரேஷ்குமார இந்திரஜித்தின் காலம் வந்து விட்டது.

Image result for skeletal remains mass grave

ஆண்- பெண் உறவு கதைகள் சுரேஷ்குமார இந்திரஜித் கதைகளில் முக்கியமானவை என்றாலும்,  ‘ஆங்கிலப் புத்தகம் படிக்கும் பெண்’, ‘ஒரு திருமணம்’, போன்ற பல கதைகள், கதைகளின் உருவாக்கத்தையும் பேசுகின்றன. அவற்றில், ‘எலும்புக்கூடுகள்’ என்ற கதை வரலாற்றின் பயன்மதிப்பையும் வரலாற்றாசிரியனின் புறவயத்தன்மை சாத்தியமில்லாமல் போவதையும் நேரடியாகவே பேசுகிறது.

‘எலும்புக்கூடுகள்’ கதை இருபதாம் நூற்றாண்டின் துவக்க தசாப்தங்களில் ஆஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள ‘கரெஷியா’ என்ற கற்பனை மண்ணில் நிகழ்கிறது. கதைசொல்லி லூயி பெர்டினாண்ட் பிரஞ்சு நாட்டைச் சேர்ந்த மானுடவியல் ஆய்வாளன், நீக்ரோ-ஆஸ்திரேலிய இனம் குறித்து ஆய்வு மேற்கொள்பவன்.  அந்த இனத்தவர் வாழும் ஆஸ்திரேலியா, கரேஷியா மற்றும் மரேலியா நாடுகள் ஐரோப்பியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றுள்  கரேஷியாவின் பெரும்பான்மை மக்கள் கரேஷியர்கள், மரேலியர்களின் ஆட்சியில் நெடுங்காலம் வாழ்பவர்கள். கரேஷியா பிரிட்டிஷ் காலனியாக மாறியவுடன், மரேலிய மன்னன் அவர்களின் கைப்பாவையாய் ஆட்சி செய்கிறான். பெரும்பான்மை கரேஷியர்கள் சிறுபான்மை மரேலியர்களின் ஆட்சியில் இருந்தாலும் அதிகாரம் பிரிட்டிஷார் கையில் இருக்கிறது.

கரேலியாவுக்கு 22ஆம் வயதில் வரும் பெர்டினாண்ட் அங்கு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான். அவனது ஆராய்ச்சியில் ஈடுபாடில்லாத அவன் மனைவி குழந்தையை அழைத்துக் கொண்டு தனது தாயகமான இங்கிலாந்து திரும்பி விடுகிறாள். கரேலியாவில் தங்கிவிடும் பெர்டினாண்ட் அங்கு வந்து முப்பத்து மூன்று ஆண்டுகளுக்குப்பின், 1930ல் ஏராளமான எலும்புக்கூடுகளை ‘கம்பக்டி டமரு’ என்ற நகருக்கு வெளியே கண்டெடுக்கிறான்.  பெர்டினாண்டைப் பொறுத்தவரை இத்தனை பேர் ஏன் ஒரே இடத்தில் செத்தார்கள் என்பதற்குத் தடயமில்லை- இயற்கை அழிவாக இருக்கலாம், பாதுகாப்புக்காகக் கூடியிருந்தபோது மாண்டிருக்கலாம், உட்குழுச் சண்டையாக இருக்கலாம், அல்லது சதியால் கூட்டம் கூட்டி கொல்லப்பட்டிருக்கலாம். இந்த எலும்புக்கூடுகள் மரேலியர்கள் கரேஷியாவில் குடியேறிய காலத்துக்கு முற்பட்டவை.

ஆனால் இந்தக் கண்டுபிடிப்பு அவனுக்குப் பிரச்சினையாகிறது. அது குறித்த செய்திகள் பத்திரிக்கைகளில் வரவும், அவன் இராணுவச் செயல் உதவி அலுவலரிடம் அழைத்துச் செல்லப்படுகிறான். அவர், “மரேலியர்களுக்கும் கரேஷியர்களுக்குமான பிளவை ஆழப்படுத்துவதன் மூலம் சச்சரவுகள் ஏற்பட்டு மக்களின் வாழ்வை ஒழுங்கு செய்வதற்கான சக்தி என்ற தேவையில் நாம் ஸ்தாபிதம் பெறலாம்,” என்று வெளிப்படையாகவே சொல்லி, மரேலிய – கரேஷிய பகைமையை வளர்க்கும் வகையில், அத்தனையும் மரேலிய தாக்குதலில் இறந்த கரேஷியர்களின் எலும்புக்கூடுகள் என்று அறிக்கை வெளியிடச் சொல்கிறார். முதளில் மறுக்கும் பெர்டினாண்ட், வன்முறை அச்சுறுத்தலுக்கு பயந்து வெற்றுத் தாள்களில் கையெழுத்திட்டுக் கொடுக்கிறான். அதன் பின் அவன் ராணுவத்தால் வீட்டுக் காவலில் வைக்கப்படுகிறான்.

நான்கு நாட்கள் சென்றபின் அவனுக்குச் செய்தித்தாள்கள் அளிக்கப்படுகின்றன. மரேலியர்கள் கரேஷியாவைக் கைப்பற்றியபோது கொன்றொழித்த கரேஷிய ஆண்கள், பெண்கள், குழந்தைகளின் எலும்புக்கூடுகள் தன்னால் கண்டுபிடிக்கப்பட்ட செய்தியைப் படிக்கிறான். இந்தச் செய்தி வந்ததும் பல நகரங்களில் கலவரம் வெடிக்கிறது, சொத்துச் சேதம் மற்றும் உயிர்ச் சேதம் ஏற்படுகிறது. இரு மக்களும் அமைதி காக்க வேண்டும் என்று அரசு வேண்டுகோள்கள் விடுக்கின்றது. இவ்வாறாக ஒரு போலியான வரலாற்றை இட்டுக் கட்டி இறுதியில் அரசு தன்னை வலுப்படுத்திக் கொள்கிறது. கதை இப்படி முடிகிறது-

“அலுவலர் ஒரு மாந்திரீகவாதியாக மாறி என்னை அச்சுறுத்திக் கொண்டேயிருந்தார். என் செயல், என் மனம், மாந்திரீகவாதியின் கட்டளைக்கு உட்பட்டது என்று தோன்றியது. மாந்திரீகவாதி கட்டிலுக்குக் கீழே படு என்று உத்தரவிட்டதும், நான் அவ்வாறே கட்டிலுக்குக் கீழே படுத்தேன். காகிதங்களைத் தின்ன உத்தரவிட்டதும் காகிதங்களைத் தின்ன ஆரம்பித்தேன். தலைகீழாக நிற்க உத்தரவிட்டதும் நான் அவ்வாறு நிற்க இயலாமல், உத்தரவிற்குப் பணிய வேண்டும் என்ற நினைப்பில் பலமுறை மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, கீழே விழுந்து கொண்டிருந்தேன். வார்த்தைகள் உருவாகி என்னைக் குழப்பிக் கொண்டிருந்த நேரத்தில் மாந்திரீகவாதி என்னை வார்த்தைகளை விழுங்க உத்தரவிட, அவ்வாறே நான் செய்ய ஆரம்பித்தேன். எப்போது நான் இல்லாமல் போனேன் என்பது என் நினைவில் இல்லை”

ஜார்ஜ் புஷ், பெரியவர், அவருடைய அரசின் பிரதம ஆலோசகர்களில் முக்கியமான ஒருவராக இருந்த கார்ல் ரோவ் பத்திரிக்கையாளர் ரான் சுஸ்கைண்டிடம் கூறியதாகச் சொல்லப்படும் ஒரு மேற்கோள் மிகப் பிரபலமானது. “மெய்ம்மையை அடிப்படையாய்க் கொண்ட சமூகத்தில்” உள்ளவர்களாய் தம்மை நினைத்துக் கொள்ளும் பத்திரிக்கையாளர்கள், “புலப்படக்கூடிய மெய்ம்மையைக் கவனமாக ஆய்வு செய்கையில் தீர்வுகள் தோன்றும் என்று நம்புகிறார்கள்,” என்று கூறிய ரோவ், அது தவறான எண்ணம் என்கிறார். “உண்மையில் உலகம் இப்போதெல்லாம் அப்படி இயங்குவதில்லை.  இப்போது பேரரசாகி விட்டோம், நாம் செயல்படும்போது, நமக்குரிய மெய்ம்மையை உருவாக்குகிறோம். நீங்கள் அந்த மெய்ம்மையை ஆய்வு செய்து கொண்டிருக்கும்போது- வேண்டுமென்றால், கவனமாக ஆய்வு செய்யும்போது என்று சொல்வதாய் வைத்துக் கொள்ளுங்கள்-, நாங்கள் மீண்டும் செயல்படுகிறோம், இப்போது வேறு புதிய மெய்ம்மைகளை உருவாக்குகிறோம், நீங்கள் அதையும் ஆய்வு செய்யலாம், இப்படிதான் விஷயங்கள் தீர்வடைகின்றன. நாங்கள் வரலாற்றை நிகழ்த்திக் காட்டுபவர்கள்… நீங்கள், நீங்கள் எல்லாரும்… நாங்கள் செய்வதை ஆய்வு செய்து கொண்டிருப்பது மட்டும்தான் உங்களுக்கு விட்டு வைக்கப்பட்டிருக்கிறது”.

சுரேஷ்குமார இந்திரஜித்தின் மானுடவியல் ஆய்வாளன் பெர்டினாண்ட் உண்மையை உருவாக்குபவனாகத் தன்னை நினைத்துக் கொள்பவனல்ல-  வரலாற்றை நிகழ்த்துபவன் என்று நினைத்துக் கொள்வதைவிட தன்னை வரலாற்றின் குறிப்புகளை வாசிப்பவன் என்று நினைத்துக் கொள்ளவே வாய்ப்புகள் அதிகம். ஆனால் வாசிப்பதற்கும் நிகழ்த்துவதற்கும் தொலைவு அதிகமில்லை, வாசிப்பே நிகழ்வாவதும் உண்டு. பெர்டினாண்ட் ஆய்வு செய்து அடைந்த முடிவுகள் குறித்த செய்தி, மானுட இயல், புவியியல் ஆதாரங்களுடன் வெளிவந்ததும், “… பத்திரிகைகளில் பல நகரங்களில் மரேலியர்களுக்கும் கரேஷியர்களுக்கு ஏற்பட்ட மோதல்கள், சொத்துச் சேதங்கள், மற்றும் உயிர் அழிவு பற்றிய விரிவான செய்திகளும் அரசு அமைதியையும், சட்டத்தையும், ஒழுங்கையும் ஏற்படுத்துமாறு விடப்பட்ட அறிக்கைகளும் இருந்தன. மோதலினால் ஏற்பட்ட மனித அழிவுகள் துக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்தன. கற்பழிக்கப்பட்ட பெண்கள் மற்றும் கொலை செய்யப்பட்ட குழந்தைகள் ஆகியோரின் எண்ணிக்கை மோதலில் தாட்சண்யமற்ற தன்மை அதிகரித்துக் கொண்டே போவதைக் காட்டிக் கொண்டிருந்தன”. இதுவே பெர்டினாண்ட்  நொறுங்கவும் காரணமாகின்றது- “நான் சந்தித்த அந்த அலுவலர் ஒரு மாந்திரீகவாதியாக மாறி வாளால் சரித்திரத்தில் காயங்கள் ஏற்படுத்திக் கொண்டிருப்பதாக ஒரு எண்ணம் எல்லா நேரங்களிலும் அச்சுறுத்திக் கொண்டிருந்தது. சரித்திரம் அலற, மக்கள் கூட்டம் கூட்டமாகத் தங்களுக்குள் தாட்சண்யமற்று சண்டையிட்டு மடிவது எங்கோ பார்த்த ஓவிய அல்லது படக்காட்சி போல் தோன்றிக் கொண்டிருந்தது,” என்று கோயாவிய கொடுங்கனவு மனநிலையில் அவன் மனம் சிதைகிறது. இந்த நிலையடைந்த பின்னரே அவன் தன் வார்த்தைகளை விழுங்கி, இறுதியில் காணாமல் போகிறான்.

அதிகாரச் சமநிலையின் தீவிரத்தை எப்போதும் யார் மெய்ம்மையைத் தீர்மானிப்பது என்ற கேள்விக்கான விடையில் காண இயலும். சர்வாதிகாரிகள் தம் அதிகாரத்தின் எல்லையைச் சோதிப்பது வன்முறையால் அல்ல- தாம் நிர்ணயிக்கும் உண்மையை யார் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதைக் கொண்டுதான். அதன் பின்னரே ஆயுதங்கள் வெளியில் வருகின்றன. துவக்கத்திலேயே அவர்களை எதிர்க்கத் தவறும் பெர்டினாண்ட்கள் கொண்ட “மெய்ம்மை அடிப்படையிலான சமூகம்” தன் வார்த்தைகளை விழுங்கிக் காணாமல் போக வேண்டியதுதான். சுரேஷ்குமார இந்திரஜித்தின் ‘எலும்புக்கூடுகள்’ சிறுகதை, உண்மையைத் திரித்து பயன்படுத்திக் கொள்வது, பிரித்தாளும் சூழ்ச்சியால் அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்வது, போன்ற அரசியல் மற்றும் ஆதிக்க உத்திகளை எடுத்துரைப்பதாய் கொள்ளலாம். ஆனால், அதனுடன், உண்மையைத் தீர்மானிக்கும் உரிமையை அரசும் அதிகாரமும் பறித்துக் கொள்வதை அனுமதிக்கும் சமூகம் தலைகீழாக நிற்பதில் ஆரம்பித்து தன் குரலை மட்டுமல்ல, இருப்பையும் இறுதியில் இழக்கிறது என்ற எச்சரிக்கை கொண்ட நேரடியான, இலக்கிய நுட்பங்களுக்கு அதிக மதிப்பு கொடுக்காத, நீதிக்கதையாய் முக்கியத்துவமடைகிறது.  இங்கு பெர்டினாண்ட் எதை பிரதிநிதிப்படுத்துகிறான் என்ற புரிதல் உள்ள அளவில் அதன் கலை வெளிப்படுகிறது.

 

One comment

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.