‘அவரவர் மன வழிகள்’ – சுரேஷ்குமார இந்திரஜித்தின் இரு சிறுகதைகள்- அஜய். ஆர்.

அஜய். ஆர்.

அதியமான், உள்நோயாளியாக சேர்க்கப்பட்டிருக்கும் தன் நண்பர் துரைசாமிக்காக உப்பில்லாத இட்லியும், காபியும் வாங்கிக் கொண்டு வரும் இடைப்பட்ட நேரத்தில் துரைசாமி காலமாகிவிட்டச் செய்தியை நர்ஸ் தெரிவிக்க, துரைசாமி பற்றிய நினைவுகள் ‘ஒரு காதல் கதை’யாக மேலெழும்புகின்றன. ‘ஒரு’ என்று தலைப்பில் இருந்தாலும் உண்மையில் ஆசிரியர் சொல்வது போல் ‘ஒவ்வொரு காலகட்டத்திலும்’ ஒரு பெண்ணை நினைத்து வந்திருக்கிறார், திருமணமாகி பெண் குழந்தை பெற்று அவருக்கு திருமணமும் முடித்து விட்ட, துரைசாமி. பெண்கள் மீது அவருக்கும், பெண்களுக்கு அவர் மீதும் பரஸ்பர ஈர்ப்பு எப்போதும் இருந்துள்ளதால் அவர் இதற்காக எந்த பெரிய பிரயத்தனமும் செய்திருக்க வாய்ப்பில்லை. கல்லூரியில் அவர் படிக்கும்போது ஏற்பட்ட, சொல்லாமலேயே முடிந்துவிட்ட ஒருதலைக் காதலின் வெற்றிடத்தை நிரப்ப பெண்களை நாடி, அவர்களிடம் ஏற்படும் பிரியம், பின் பிரிய நேரிடும்போது பல நாட்கள் நீடிக்கும் துக்கம், மனச்சோர்வு, பின் அடுத்த ஈர்ப்பு என்ற வட்டத்தில் சுழலும் அவர் வாழ்வில், அப்பெண்களில் அந்த முதல் காதலியை தேடுகிறார் என்றாலும், அவர்களை ஒரு பதிலீட்டாக மட்டுமே அணுகவில்லை என்பதையும் உணர முடிகிறது.

Image result for அவரவர் வழி

விலைமாது ஒருவரிடம் ஈர்ப்பு கொண்டு அவரைத் தேடிச் செல்பவர், அப்பெண் காவல்துறையினரிடம் சிக்கி மொட்டை அடிக்கப்பட்டதை பார்த்து, அவருடன் பேசித் திரும்பியபின் மீண்டும் சந்திக்கச் செல்லாததால் துரைசாமிக்கு வெறும் பாலியல் ஈர்ப்பு மட்டுமே இருந்திருக்கிறது என்று வாசகருக்கு தோன்றும். அந்த எண்ணம் குறித்து, திருமணமான மற்றொரு பெண்ணிடம் உறவு வைத்திருந்த துரைசாமி, அப்பெண் புற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கும்போது சென்று பார்த்து வருவதும், அவர் மறைந்தபின் மனச்சோர்வு அடைவதும், சந்தேகம் கொள்ளச் செய்கிறது. பாலியல் ஈர்ப்பு என்று ஒற்றைப்படையாக, பெண்களுடனான துரைசாமியின் உறவுகளை புரிந்து கொள்ள முடியாது.

மருத்துவமனையில் நர்ஸ் ஒருவர் தன் முதல் காதலியின் சாயலில் இருப்பதாக இறப்பதற்கு முன் அதியமானிடம் சொல்லிக் கொண்டிருந்ததால், நர்ஸ்ஸின் குடும்பம் குறித்த கேள்விகளை அதியமான் அவரிடம் கேட்கிறார். அவர் காதலியின் மகளாகவோ, பேத்தியாகவோ இருந்தால் அது வழமையான, வலிந்து திணிக்கப்படும் மிகையுணர்ச்சியாக இருக்கக்கூடும் (இப்படி ஒரு சந்திப்பு நிகழ்வதற்கு சாத்தியக்கூறு சிறிதளவயாகினும் இருக்கிறது என்பதையும் மறுப்பதற்கு இல்லை), அல்லது நர்ஸ் வேறு குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தால் அதுவும் ஒருவிதத்தில் நமக்கு பரிச்சயமான ‘வெறுமையே’. ஆனால் கதை இந்த முடிச்சைப் பற்றி மட்டுமா அல்லது ‘ஒரு காதல் கதை’ என்று பெயர் வைத்துவிட்டு இத்தனை காதல்களை விவரிப்பதில் இருக்கக்கூடிய பகடியிலா? (அத்தகைய தொனி கதையில் வெளிப்படையாக தெரியவில்லை என்றாலும்). இறக்கும் தருவாய் வரை தன் முதல் காதலியை துரைசாமி மறவாதிருப்பதால் தலைப்பு பொருத்தமான ஒன்றுதான் என்றும் கூற முடியும். இவற்றைத் தவிர இன்னும் இரு கோணங்களில் கதையை அதன் முடிவில் வாசகன் அணுகக்கூடும்.

‘தன் துக்கத்தைப் பகிர்ந்து கொள்ள யாரேனும் ஒருவர் இருந்தால், அதுவும் அருகில் இல்லாவிடினும் தூரத்தில் இருந்தாலும் சரி’ என்று துவங்கும் மனமுருக்கும் பாடல் ‘மேரே அப்னே’ என்ற ஹிந்தி திரைப்படத்தில் உண்டு. துரைசாமிக்கு தன் மனதில் உள்ளவற்றை திறந்து வைப்பதற்கான வடிகாலாக அதியமான் மட்டுமே இருந்துள்ளார் (அதிலும் ஒரு சில விஷயங்களை தன்னுள்ளேயே துரைசாமி வைத்திருந்தார் என்று சுட்டப்படுவதையும் இங்கு நினைவில் கொள்ள வேண்டும், முழுவதுமாக ஒருவர் தன்னை வேறு யாரிடமும் திறந்து காட்ட முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது), எனும்போது அந்த நட்பின் கதை, காதல் கதைக்கு இணையான முக்கியத்துவத்தைப் பெறுகிறது, அந்த வகையில் இப்படி அருகிலேயே தன்னுணர்வுகளை பகிர்ந்து கொள்ள, வாழ்வின் பெரும்பகுதிகூட வந்த நண்பனை கொண்ட துரைசாமி அதிர்ஷ்டசாலிதான். ஆனால் இது ஒரு வழிப் பாதையாக மட்டுமே இருந்திருக்குமா, அதியமான் தன் உள்ளக்கிடக்கைகளை துரைசாமியிடம் பகிர்ந்து கொண்டிருப்பாரா, அல்லது தன் நண்பனின் உணர்ச்சிகளுக்கான சாட்சியாக மட்டுமே இருந்து வந்திருப்பாரா? நண்பனுடன் சேர்ந்து அதியமானும் விலைமாதுவிடம் சென்றிருக்கிறார் எனும் புள்ளியில் தொடங்கினால், கதை துரைசாமியைப் பற்றியதுதான் என்றாலும், அதன் நீட்சியாக அதியமானின் கதையைப் பற்றியும் வாசகன் சிந்திக்க இடமிருக்கிறது.

துரைசாமியின் மனைவி குறித்து வாசகனுக்கு பெரிதாக தெரிவதில்லை என்றாலும், மேலோட்டமாகவேனும் சுமூகமான மணவாழ்வு வந்திருக்கிறார்கள் என்று யூகிக்க முடியும். தன் நண்பன் மட்டுமே அறிந்திருந்த மற்றொரு வாழ்வை துரைசாமி வாழ்ந்ததை போல் அவர் மனைவிக்கும் தனி அக வாழ்க்கை இருந்திருக்குமா என்ற கேள்வி எழுமெனின் ‘மாய யதார்த்தம்’ சிறுகதையை படிக்க வேண்டியிருக்கும். அதில் வரும் சூர்யகுமாரி வேற்று மதத்தவரை காதலிக்கும் தன் மகளின் திருமணத்தை நடத்தி வைக்கும் முயற்சியின்போது கிறிஸ்டோபர் தம்பிதுரையைச் சந்திக்கிறாள். அவர் உதவியுடன் திருமணம் நடக்கிறது. சூர்யகுமாரியும் தம்பிதுரையும் ஒருவர்பால் ஒருவர் ஈர்க்கப்படுகிறார்கள், சில நேர்/அலைபேசி பேச்சுக்கள், அவரை நினைக்கையிலேயே உருவாகும் உள்ளூர படபடப்பு என்ற அளவிலேயே இந்த உறவு இருக்க, கணவர் மகாராஜனுடன் இல்லற வாழ்வு மறுபுறம் எப்போதும் போல். கணவர், தம்பிதுரை இருவருடனும் காரில் செல்வது போன்ற கனவொன்றில் விபத்து ஏற்பட்டு கணவர் அங்கேயே இறக்க, தம்பிதுரையை காரிலிருந்து தள்ளிவிட்டு சூர்யகுமாரி தனியே நிற்கிறாள். சில காலம் கழித்து நிஜ விபத்தொன்றில் சிக்கி மகாராஜனும், மருமகனும் இறந்து விடுகிறார்கள். சூர்யகுமாரிதான் இப்போது குடும்பத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். தம்பிதுரையின் அழைப்பை இப்போதெல்லாம் அவள் ஏற்பதில்லை, இனி பேச வேண்டாம் என்று அவரிடம் கூறி விடுகிறாள். அவள் கனவை இந்த முடிவுடன் எப்படி பொருத்திப் பார்த்து புரிந்து கொள்ள? (அது தேவையா?). கனவில் கணவன் இறக்க, மனம் விரும்புகின்றவனை தள்ளிவிட்டு அவள் தனியே நிற்பது நடக்கப்போவதை முன்கூட்டியே சொல்வதாக (foreshadowing உத்தி) எடுத்துக் கொள்ளலாமா, அதுதான் இங்கு மாய யதார்த்தமா? அல்லது இன்னொரு வகையில் அணுகவும் கூடுமா?

மகாராஜன் உயிருடன் இருந்திருந்தால் சூர்யகுமாரி, தம்பிதுரை உறவு இன்னும் உறுதிப்பட்டிருக்கும் என்று எண்ணுவது முற்றிலும் தவறாக இருக்காது, கணவனின் இறப்பே தம்பிதுரையின் அனைத்து தொடர்பையும் அவள் முறித்துக் கொள்ள காரணமாகிறது (கனவு குறித்த குற்றவுணர்ச்சி காரணமா என்றும் யோசிக்கலாம்). இருவருக்கிடையேயான உறவில், அது அடைந்திருக்கக்கூடிய பரிணாமத்தில், மகாராஜன் உயிருடன் இருப்பதைவிட அவருடைய இறப்பே விரிசலை ஏற்படுத்துகிறது என்பதில் உள்ள ‘நடைமுறை யதார்த்தம் சார்ந்த’ நகைமுரணை ‘மாய யதார்த்தமாக’ கொள்ளலாமா? துரைசாமியின் மனைவிக்கும் இப்படி ஒரு அகவாழ்வு இருந்திருக்கக்கூடுமோ என்று சூர்யகுமாரியிடமிருந்து அவருக்கு ஒரு இணைப்பை உருவாக்கிக் கொள்ளலாம்.

டெபோரா ஐஸன்பெர்க்கின் ‘அதிநாயகர்களின் அந்திப்பொழுது’ (Twilight of the Superheroes) தொகுப்பில் உள்ள “வடிவமைப்பில் உள்ள குறை” (‘The Flaw in the design’) கதையில் குடும்பமொன்றின் இரவு நேர உரையாடல்தான் களன். புரட்சி செய்ய விரும்பும், தான் பெற்றிருக்கும் வசதிகள் குறித்த குற்றவுணர்வு கொண்ட, அதே நேரம் அவற்றை விட மனமில்லாத பதின்பருவ மகன் மற்றும் கணவனுடன் நாயகி பேசிக் கொண்டிருக்கிறாள். அன்றாட உரையாடல்கள்தான். அவற்றுக்கிடையே வாசகன், அப்பெண் அன்று ஒரு அன்னியனுடன் பொழுதைக் கழித்துவிட்டு வந்திருக்கிறாள் என்று தெரிந்து கொள்கிறான் (அவன் அன்னியன் என்பது ஒரு யூகமே, இது பல காலமாக தொடரும் உறவாகக்கூட இருக்கலாம்). அன்று நடந்ததை ஒரு மூலையில் ஒதுக்கி வைத்துவிட்டு அன்றாட வாழ்க்கையை எந்த சிக்கலும் இல்லாமல் கொண்டு செல்லும் இவருக்கும், துரைசாமிக்கும், சூரியகுமாரிக்கும், வாழ்க்கைச் சூழல், பொருளாதார வளம், சமூக பின்புலம் போன்ற வேறுபாடுகள் இருந்தாலும் அகத்தளவில் ஒற்றுமையையும் காண முடிகிறது. இல்லறத்திற்கு வெளியே உருவாகும் முதல்/ ஒரே உறவைக் குறித்தே கிளர்ச்சியும், சந்தேகமும், இறுதியில் குற்றவுணர்வும் கொண்டிருந்தாலும் அது தன் இல்லற வாழ்வை பாதிக்காதவாறு சூர்யகுமாரி நடந்து கொள்கிறார். துரைசாமிக்கு குற்றவுணர்வு எதுவும் இருந்தது போல் தெரிவதில்லை, ஒரு வேளை அதியமானிடம்கூட அதை அவர் சொல்லாமல் மறைத்திருக்கலாம், எப்படி இருப்பினும் அவருடைய இல்வாழ்வு பெருமளவு வெற்றிகரமான ஒன்றே என்றுதான் அவரைத் தெரிந்தவர்கள் கூறுவார்கள். அதியமானிடமும், சூர்யகுமாரி/ துரைசாமி இருவரின் வாழ்க்கைத்துணையிடம்கூட இந்த ஒற்றுமை காணக் கிடைக்கக்கூடும்.

இந்த மூன்று பேருக்கு மிகவும் நெருக்கமானவர்கள் (அல்லது அப்படி நம்பிக் கொண்டிருப்பவர்கள்) கூட தாங்கள் தெரிந்து வைத்திருக்கும், இவர்களின் வாழ்க்கை பயணத்திற்கு இணையாக வேறு அக பாதைகளில் தன் நண்பர்/தோழி/மனைவி பயணிப்பதை அறிந்திருக்க மாட்டார்கள். வாழ்வின் இறுதி வரை யாருமறியாத அல்லது ஓரிருவர் மட்டுமே அனுமதிக்கப்படும் இணை பிரயாணத்தை மேற்கொள்வது இந்த மூவர் மட்டுமல்ல நாமாக கூட இருக்கலாம். ஏதேனும் காரணத்தால் அந்த அகப் பாதை முட்டுச் சந்தில் முடிந்தாலோ அல்லது கிளை பிரிந்தாலோ, மற்றொரு வழித்தடத்தை உருவாக்கி, எந்நேரத்திலும் தங்களுடைய புற வாழ்வின் பாதையுடன் சேராதபடி தொடர்ந்து நீளும் பயணத்தை அவரவர் மனவழிகள் வழியே மேற்கொண்டிருக்கிறோம்.

2 comments

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.