அஜய். ஆர்

கலவி, வன்முறை, ஒரு அரைநிழற் நிகழ்வு

காலத்துகள்

‘இவரும் செங்கல்பட்டு தான்’ என்றாள் இவனுடைய மனைவி. வார ஆரம்பத்தின் சலிப்பு இப்போதே கவிய ஆரம்பித்திருக்கும் ஞாயிறு மாலையில் வீட்டிற்கு வந்தவர்களிடம் அசிரத்தையாக உரையாடலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவன், தலையசைத்து வைத்தான்.

‘எங்க இருந்தீங்க’ என்று எதிரில் அமர்ந்திருந்தவன் கேட்டான். ரவி என்று தானே பெயரை சொன்னான்? வெள்ளி தான் அடுத்த ப்ளாட்டில் குடிவந்திருந்தான்.

மெயின்டனன்ஸ் செலவு, கரண்ட் பில் குறித்து குறித்து தெரிந்து கொள்ள நேற்று வந்திருக்கலாம். விடுமுறையின் உற்சாகம் வடிந்து விட்ட நேரத்தில் தம்பதியராய் வந்து எரிச்சலேற்றுகிறார்கள். இவளும் ‘எப் ஒன்ல மெயின்டனன்ஸ் கரெக்ட்டா தரவே மாட்டாங்க, எங்க வீட்ல ரெண்டு பேரு தான், என்னோட வாட்டர் பில் பங்கு ஏன் இவ்ளோ இருக்குன்னு ஏதாவது சொல்லிட்டே இருப்பாங்க’, ‘எஸ் போர்ல பதினஞ்சாம் தேதிக்கு மேல தான் தருவாங்க’ என்று அபார்ட்மெண்ட் குறித்த பெருங்கதையாடலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாள்.

‘கோகுலபுரம்’

‘நாங்க அண்ணா நகர். எந்த ஸ்கூல்’, ரவி தான்.

‘ஜோசப்’

‘நானும் அங்க தான், நைன்டி ஸிக்ஸ் பேட்ச்’..

‘நான் நைன்டி பைவ்’. போய்த் தொலையேண்டா.

பள்ளியின் அப்போதிருந்த வாத்தியார்கள், இப்போதைய நிலை குறித்து பேசிய பின் ரவி கிளம்பினான்.

 

‘கொயின்சிடன்ஸ்ல’

‘மாடிக்கு போறேன் வரியா, தலைவலி. டீசன்ஸி வேண்டாம், இப்படியா வந்து டார்ச்சர் பண்ணுவாங்க’

‘உங்களுக்கு யாராவது வீட்டுக்கு வந்தாலே பிடிக்காது’

‘வரட்டும், அதுக்காக சண்டே ஈவ்னிங்கா’

‘நீங்க போங்க, குக்கர் ஏத்திட்டு வரேன்’.

 

எதிர் ப்ளாட் முதியவர் கைகளை பின்னால் கட்டிக் கொண்டு, நெஞ்சையும் வயிற்றையும் புடைத்து நிமிர்த்தி , முதுகை வளைத்து ஏதோ செய்து கொண்டிருந்தார், ஏதாவது யோகாசனமாக இருக்கும். தினமும் குறைந்த பட்சம் ஒரு மணி நேர நடை, யோகா. எண்பது வயதிற்கு வலுவான உடற்கட்டு. அந்த வயதில் என்னால் மாடிக்கு ஏறி வந்து பத்து நிமிடம் நடக்க முடியுமா?

‘என்ன லேட்டா’ என்று கேட்ட பெரியவர் புட்டத்தை தூக்கி சத்தமாக காற்று பிரிக்க, ‘புதுசா வந்திருக்காங்கல்ல, அவங்க பேசிட்டிருந்தாங்க’ என்றபடி விரைவாக நகர்ந்தான். இது கண்டிப்பாக யோகப் பயிற்சியாக இருக்க முடியாது.

தானும் செங்கல்பட்டு தான் என்று அந்த ரவி சொல்வதற்கு முன் எதுவும் தோன்றவில்லை. இப்போது பரிச்சயமானவனாக தெரிகிறான். ஒரே ஊர், பள்ளி என்பதால் வரும் உளமயக்கம். மாடிச் சுவற்றினருகே நின்று தெருவை கவனித்துக் கொண்டிருந்தான். ட்யுஷன் முடித்து சைக்கிளில் மூன்று சிறுவர்கள் வந்து கொண்டிருந்தார்கள், பள்ளி திறக்கவிட்டாலும், ட்யுஷன் நடந்து கொண்டுதானிருக்கிறது. காலை நடைக்கு பதிலாக சைக்கிள் வாங்க வேண்டும் என்று சில மாதங்களாக இவன் யோசித்துக் கொண்டிருக்கிறான். குறைந்த பட்சம் பத்தாயிரம் ரூபாய் என்கிறார்கள். வாங்கி சில நாட்கள் மட்டுமே ஒட்டி, மீண்டும் நடக்க ஆரம்பித்தால் வீணாகிவிடும்.

பள்ளி சைக்கிள் ஸ்டாண்டில் நெரிசல். இரு கைகளையும் இவன் ஆக்ரோஷமாக வீசிக்கொண்டிருக்க , எதிரே உள்ளவனும் இவனை தாக்குகிறான். கன்னத்தில், நெற்றியில் படும் அடிகள். எதிரே உள்ளவன் காலால் உதைக்க, இவன் நிறுத்தியிருந்த சைக்கிளின் மீது விழ , நாலைந்து சைக்கிள்கள் சரிகின்றன. சண்டையை யாரோ தடுக்கிறார்கள். அந்தப் பையன் தன் வண்டியை எடுத்துக் கொண்டு செல்ல, இவனும் கிளம்புகிறான்.

இதுவரை வாழ்வில் இவனுடைய ஒரே கைகலப்பு, அதனாலேயே அவ்வப்போது நினைவுக்கு வரும் நிகழ்வு. முகம் மறந்திருந்த அந்தப் பையன் ரவியா, அதனால் தான் முன்பே பார்த்தது போல் தோன்றுகிறதோ? இல்லை, ரவியை பார்த்திருக்க வாய்ப்புகள் நிறையவே இருந்திருக்கும், காலை இறை வணக்கத்திற்கு செல்லும் போதும், அது முடிந்து திரும்பு போதும் அல்லது உணவு இடைவேளையில் எங்கேனும் பார்த்திருப்பான். பள்ளியில் இல்லாவிட்டாலும், பஜாரில் அல்லது தசரா சந்தையில். இல்லை, அப்படி மட்டுமே எதிர்பட்டிருந்தால் இப்போது நினைவுக்கு வராது, இந்த நிகழ்வோடு அவனை பொருத்திப் பார்க்கத் தோன்றாது. மாடியின் இன்னொரு முனைக்குச் சென்று அடுத்து கட்டிக் கொண்டிருந்த வீட்டை கவனிக்க ஆரம்பித்தான்.

ஸ்டாண்டில் வகுப்புவாரியாகத் தான் சைக்கிள்களை நிறுத்த வேண்டும். அந்தப் பையனுடைய சைக்கிள் இவனுடைய வண்டிக்கு சற்று முன்னால் தான் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அவன் எட்டாம் வகுப்பு மாணவனாகத் தான் இருந்திருக்க வேண்டும், எனவே அவன் ரவியாக இருக்கலாம்.

அருகில் வந்து நின்ற இவன் மனைவி

‘ரவி வைப் சொன்னதை கவனிச்சீங்களா, பார்ட்டி டூ லாக்ஸுக்கு வாங்கிருக்காங்களாம், உள் வேலைக்கு டூ லாக்ஸ் எக்ஸ்ட்ரா’

‘நம்ம வாங்கினப்ப இருந்ததை விட கொஞ்சம் தான் இன்க்ரீஸ் ஆயிருக்கு’

‘நீங்க அவரை பார்த்திருக்க சான்ஸ் இருக்குல’

‘இப்ப எதுவும் ஞாபகம் இல்லை, .. மேபி’

மாடியை சுற்ற ஆரம்பித்தாள். மாலை பதினைந்து, இருபது நிமிடங்கள் நடந்தால் தான் இரவுணவு எடுத்துக் கொள்ள முடிகிறது என்கிறாள். முதியவர் வேட்டியை அவிழ்த்து, உதறி கட்ட, அவர் அணிந்திருக்கும் நீல நிற உள்ளாடை சில நொடிகளுக்கு கண்ணில் படுகிறது. கிழத்திற்கு விவஸ்தையே கிடையாது, நிதானமாக சரி செய்து கொள்கிறார். நல்லவேளையாக இவள் அப்போது தான் அவரைக் கடந்து சென்றிருந்தாள்.

 

ஞாயிறு இரவின் கலவி. அட்டவணை போடவில்லையென்றாலும் வார இறுதியில் மட்டும் முயங்குதல் என்பது எப்படியோ நடைமுறைக்கு வந்துவிட்டது. மதியம், முன்மாலை என்று உடலெங்கும் இச்சை பரவியிருந்த காலம் முடிந்து விட்டது. சலிப்புடன், அசுவாரஸ்யமாக ஈடுபடாமல் அல்லது தலைவலி என்று அவள் தவிர்க்காமல் இருப்பதை எண்ணி தேற்றிக் கொள்ள வேண்டியது தான். சில வார இறுதிகளில் இவன் தான் தவிர்க்க காரணங்கள் தேடி, பின் அப்படிச் செய்தால் பொய்யென்று கண்டுபிடித்து விடுவாள் என்பதால் சமாளிக்க வேண்டியுள்ளது. உடலுறவில் ஈடுபட விருப்பமில்லை என்று ஆண் கூறுவது இழிவில்லையா? ‘ஆண்ட்ரோபாஸாக’ இருக்கலாம், இதற்கு யோகாவில் ஏதாவது உள்ளதா என்று பெரியவரிடம் கேட்கலாமா? இன்று ரவி பிரச்சனை வேறு, அவள் மீது கவிழ்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் போது, ரவியுடன் மனதில் சண்டையிட்டுக் கொண்டிருந்தான். உதட்டருகே இருந்த அவள் கழுத்தை கடிக்க, அவள் முகத்தில் குத்த தோன்றிய உணர்வை கட்டுப்படுத்த செல்ல சிரமப்பட வேண்டியிருந்தது.

பள்ளி சைக்கிள் ஸ்டாண்டில் நெரிசல். இரு கைகளையும் இவன் ஆக்ரோஷமாக வீசிக்கொண்டிருக்க , எதிரே உள்ளவனும் இவனை தாக்குகிறான். கன்னத்தில், நெற்றியில் படும் அடிகள். எதிரே உள்ளவன் காலால் உதைக்க, இவன் நிறுத்தியிருந்த சைக்கிளின் மீது விழ , நாலைந்து சைக்கிள்கள் சரிகின்றன. மங்கலாகிவிட்டிருந்த அந்தப் பையனின் முகம் ரவியின் ஜாடையில் இருப்பதாகத் தான் இப்போது தெளிவுறுகிறது.

 

ஆனால் எதுவும் ஞாபகம் இருப்பது போல் ரவி காட்டிக் கொள்ளவில்லை. வீட்டிற்குச் சென்றப் பின் அவனுக்கும் நினைவிற்கு வந்திருக்கக் கூடும். ‘என் சீனியர் தான். ஒரு நாள் சண்டை, அடி பின்னிட்டேன்’ என்று மனைவியிடம் கூறியிருப்பான். அவள் இனி ஏளனமாக தான் என்னைப் பார்ப்பாளோ? அபார்ட்மெண்டில் வசிப்பவர்களிடையே சிறு சிறு தற்காலிக மனஸ்தாபங்கள் எழுவதுண்டு, அப்போது ‘என் ஹஸ்பன்ட் கிட்ட ஓத வாங்கினவன் தான் ஒன் புருஷன்’ என்று அவள் கூறி விடலாம். அபத்தம். பேச்சு வாக்கில் சொல்லிவிடவே அதிக வாய்ப்புண்டு. ‘நம்ம ரெண்டு பேர் வீட்டுக்காரங்களும் ஸ்கூல் டேஸ்ல சண்ட போட்டாங்களாம், உங்க ஹஸ்பண்டுக்கு நல்லா அடி பட்டுருச்சாம்’. அதன் பின் இவளிடம் எப்படி முகம் கொடுத்து பேச முடியும், தன்னைக் காக்கக்கூடிய பலமுடையவனையே கற்காலத்திலிருந்து பெண்கள் தேர்வு செய்ய விரும்புவார்கள் என்று கூறுகிறார்கள். நாற்பது வயதுக்கு மேல் அந்த உயிரியல் இச்சை இருக்காதா என்ன? தன்னை விட வயது குறைந்தவனிடம் அடி வாங்கியவன் என்று அபார்ட்மெண்டில் வசிப்பவர்கள் அனைவருக்கும் இந்தச் செய்தி பரவக் கூடும். ஆனால் ரவிக்கு என் வயதிருக்கலாம், நவம்பர், டிசம்பருக்கு பின் பிறந்திருந்தால் ஒரு வருடம் தாமதமாக பள்ளியில் சேர்ந்திருப்பான். பெயிலாயிருந்தால் என்னைவிட பெரியவனாகக் கூட இருக்கக் கூடும். அன்று தாக்கிக் கொள்ளுமளவிற்கு என்ன நடந்தது?

காலை நடந்து முடிந்து திரும்பிக் கொண்டிருந்தவன் மெயின் ரோட்டிலுள்ள பேப்பர் கடையின் வாசலில் ரவி நின்றுகொண்டிருப்பதை கவனித்து வேறு பக்கம் பார்த்தபடி கடந்தான். ‘என்ன ஸார், வாக்கிங்கா’, என்றழைத்தான் ரவி.

‘டெய்லி ஒன் அவர்’

‘உங்களுக்கு யார் பேப்பர் போடறாங்க, நேத்து அதை கேக்க மறந்துட்டேன் ’

‘நம்பர் தரேன்’ நேற்று வெட்டி அரட்டை அடித்து, மாலையை பாழாக்கியதற்கு இதையும் கேட்டுத் தொலைத்திருக்கலாம்.

‘வர்க் ப்ரம் ஹோமா இல்லை ஆபிஸா ஸார்’

‘வீக்லி ஒன்ஸ் போகணும்’

‘நான் மூணு நாள் போகணும்.’

‘கம்பெனி வண்டியா’

‘அதெல்லாம் கிடையாது, பைக் தான்’

‘…’

‘அண்ணா நகர் ஸ்கூல்லேந்து தூரமாச்சே, எப்படி வருவீங்க, சைக்கிளா’ என்று கேட்டானிவன்.

‘ஆமா ஸார், பிப்த் வரைக்கும் வாலாஜாபாத் போற பஸ்ல வருவேன். அப்பறம் சைக்கிள்’

‘ஈவ்னிங் ஸ்டாண்ட்லேந்து வண்டிய எடுக்கறது ரொம்ப கஷ்டம்ல’

‘ஆமா ஸார், மத்த வேண்டிமேல இடிக்காம எடுத்துட்டு வரது ரொம்ப கஷ்டம்’

அபார்ட்மென்ட்டை அடைந்திருந்தார்கள்.

‘மூணு ப்ளோர் ஏற கொஞ்சம் கஷ்டமாத் தான் இருக்கு, மார்னிங்கே பவர் கட்டு ஆகுமா ஸார்’

‘இல்ல, லைன் மாத்தறாங்க போல, அஞ்சு பத்து நிமிசத்துல வந்துடும்.’

 

‘சொல்லு நாயே’ என்றான் சசி.

‘டேய், நான் ஸ்கூல் டேஸ்ல சைக்கிள் ஸ்டான்ட்ல சண்டை போட்டது உனக்கு ஞாபகம் இருக்கா’

‘சண்டையா, என்னது’

‘ஒரு ஈவ்னிங் ஸ்கூல் முடிஞ்சு கிளம்பும் போது , நாம நயனத்ல இருக்கும் போதுன்னு நெனக்கறேன்.’

‘என்னடா சொல்ற, நாம எங்கடா சண்டைலாம் போட்டோம்’

‘நீ இல்லடா, நான் மட்டும் தான். எய்த் ஸ்டான்டார்ட் பையனோட. ஜான், இல்ல பெப்ரவரில இருக்கும்’

‘நோ, அப்படி எதுவும் ஞாபகம் இல்ல’

‘நல்லா யோசிச்சு பாரு நாயே’

‘‘நானே மண்டே மார்னிங் வெறுப்புல இருக்கேன், சண்ட போட்டேனா , குண்ட போட்டேனான்னு சாவடிக்காத’

‘ஸ்டாண்ட்டுக்கு அந்தப் பக்கம் கர்ல்ஸ் ஸ்கூல் க்ரவுண்ட், பாத்ரூம் இருக்குமே, அது ஞாபகம் இருக்குமே’

‘நீ ரொம்ப ஒழுங்கு, நீயும் தானடா எட்டிப் பார்த்த’

‘அத கரெக்ட்டா சொல்லு. ஈவ்னிங் கால் பண்றேன், அதுக்குள்ள ஏதாவது தோணுதா பாரு’

‘இன்னிக்கு சில பல ஆபிஸ் பஞ்சாயத்துக்கள் இருக்கு, கொசுவத்தி கொளுத்தறதுக்குலாம் வாய்ப்பில்ல ராஜா’

‘ரவின்னு நமக்கு அடுத்த பேட்ச்சுல யாரையாவது உனக்குத் தெரியுமா’

‘ஒத்தா, போன வைடா வெண்ண’

 

சசியும் இவனும் ஒன்றாகத் தான் பள்ளிக்கு சென்று வருவார்கள், பின் எப்படி நினைவில்லை என்கிறான். அப்படியொரு சண்டை நடக்கவே இல்லையோ? இல்லை, சசி அன்று பள்ளிக்கு வராமல் இருந்திருக்கலாம். அல்லது இப்படியிருக்கக் கூடும், சண்டை நடந்தது உண்மை, ஆனால் ரவியும் வேறொருவனும் அடித்துக் கொண்டது இவன் மனதில் இப்படி பதிந்திருக்கலாம். இல்லை, இதுவும் சாத்தியமில்லை. அன்று மாலை முகத்தில் தெறித்துக் கொண்டிருந்த வலி உண்மை.

பள்ளி சைக்கிள் ஸ்டாண்டில் நெரிசல். இரு கைகளையும் இவன் ஆக்ரோஷமாக வீசிக்கொண்டிருக்க , ரவியும் இவனை தாக்குகிறான். கன்னத்தில், நெற்றியில் படும் அடிகள். மூக்கில் அடிபட்டு நிறுத்தியிருந்த சைக்கிளின் மீது சாய்ந்து விழுகின்றவனை, ரவி எட்டி உதைக்கிறான்.

எட்டி உதைத்ததெல்லாம் நடக்கவில்லை. முகம் சற்று வீங்கியிருந்ததைத் தவிர அந்த சண்டையில் வேறெந்த அடியும் படவில்லை. மூக்கிலும் எந்த காயமும் இல்லை. முக வீக்கமும் கூட விரைவில் குறைந்து விட்டது. அதனால் தான் வீட்டில் யாரும் எதுவும் கேட்கவில்லை. தவிர, இலக்கில்லாத ஆறேழு கை வீசல்களைத் தவிர வேறெதுவும் ஸ்டாண்டின் மாலை நேர நெரிசலில் நடந்திருக்க முடியாது. அதிகபட்சம் ஒரு நிமிட சண்டை, அதற்குக் குறைவாகக் கூட இருக்கலாம். அதற்குள் தடுத்திருப்பார்கள்.

ரவிக்கு இப்போதே பெரிய தொப்பை, மூன்று மாடி ஏற சிரமப்படுகிறான், இன்னும் சில வருடங்களில் இன்னும் பருத்து விடுவான். அந்தப் பையன் அப்போதே கொஞ்சம் பூசினாற் போல் தான் இருந்தான் என்று தோன்றுகிறது. ஆனால் அப்படியிருந்திருந்தால் அந்த உடம்புடன் எப்படி சண்டை போட்டிருக்க முடியும். அந்தப் பையன் ரவி தானா?

அடுத்த நாள் பள்ளிக்குச் சென்றது நினைவில் உள்ளது. அன்று ரவியை பார்க்கவில்லை, அதன் பின்பும் ஸ்டாண்டில் அவன் எதிர்பட்டது போல் தெரியவில்லை. பள்ளியில் எங்காவது ஒரு சில கணங்களுக்காவது எதிரெதிரே வந்திருக்க வேண்டும். அடி வாங்கிய பயத்தில் ரவி என் முன் வருவதை தவிர்த்திருக்கலாம்.

இரு கைகளையும் குத்துவது போல் இவன் வீசிக்கொண்டிருக்க , ரவியும் இவனை தாக்குகிறான். கன்னத்தில், நெற்றியில் படும் அடிகள். மூக்கு உடைபட்டு சைக்கிளின் மீது சாய்ந்து விழும் ரவியை எட்டி உதைக்கிறான்.

‘ஜன்னலை இப்பவே சாத்திட்டீங்க, ஆபிஸ்ல வீடியோ காலா’ என்று படுக்கையறைக்குள் நுழைந்த மனைவி கேட்க இல்லையென்று தலையசைத்தவன்,

‘அருண் வர ஒன்னாயிடும்ல’ என்றான்.

‘ஆமாம்… இப்பவே ஏஸி வேற போட்டிருக்கீங்க’

அவள் மேல் கவிழ்ந்திருந்தவன் விலகி படுத்தான்.

‘நேத்து நைட்டே உன்ட்ட சொல்லனும்னு நினைச்சேன், மறந்துட்டேன். ரவி வந்திருக்கான்ல அவன் கூட ஒரு வாட்டி சண்ட போட்டேன்’

வலது காலை மடித்தவள் இவனை நோக்கி திரும்பி ‘நீங்களா’ என்றாள்.

‘லைப்ல என்னோட பர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் பைட். ஸ்கூல் சைக்கிள் ஸ்டாண்ட்ல வண்டி எடுக்கறதுல ஏதோ ஆர்க்யுமென்ட். செம அடி அடிச்சுட்டேன். பாவம் கீழ விழுந்தவனை எட்டி வேற ஓதச்சேன். அவன் அப்பவே கொஞ்சம் குண்டாத் தான் இருந்தான். சசி தான் வந்து தடுத்து விட்டான்.’

‘நெஜமாவா’

‘எஸ்’

‘என்னால நீங்க சண்ட போட்டதை இமாஜினே பண்ண முடியலை’

‘ஒரு நிமிஷம் கூட இருக்காது , சினிமா பைட்டான்ன. ரெண்டு அடி அடிச்சவுடன விழுந்துட்டான். மூக்கொடைஞ்சு ரத்தம்’

‘அடிச்சீங்கன்னு சொல்லுங்க, கொஞ்சமாவது நம்பற மாதிரி இருக்கு. அதுக்காக மூக்கலாம் ஓடச்சேன்னு..’

‘நெஜமாத்தான்டி. சில்லுமூக்குன்னு சொல்வாங்கல’

‘சின்ன விஷயத்தால கூட சில்மூக்குல வரும். காலேஜ் டேஸ்ல என் கூட படிச்சவ, மதியம் மூஞ்சி கழுவும் போது, அழுத்தி தேய்ச்சு ரத்தம் வந்துடுச்சு, செம அழுகை, அப்பறம்…’

‘இவனுக்கு நான் அடிச்சு தான் ரத்தம்’

‘ஒகே..’

‘நான் ஏண்டி பொய் சொல்லப்போறேன்’

‘..’

‘எனக்கு நேத்து வரை அவன் ஞாபகமே இல்ல, அவனைப் பத்தி எதுக்கு நான் பொய் சொல்லணும்’

‘சண்ட போட்டீங்க சரி, மூக்க ஓடச்சீங்கன்னே வெச்சுப்போம். ஆனா அந்தப் பையன் ரவி தானா. நிச்சயமா தெரியுமா?’ இடது காலை மடித்துக் கொண்டபடி கேட்டாள். உள் தொடையின் மென் மயிர்கள், ரவி மனைவியின் முழங்கையில் படர்ந்திருந்ததைப் போல.

‘ரவிக்கே கூட ஞாபகம் வந்திருக்கும் போல , அதான் இன்னிக்கு காத்தால வாக்கிங் போயிட்டு வரும்போது அவன பார்த்தப்ப சரியா பேசல. அந்தப் சண்டைக்கப்பறம் கூட அவன் அந்த இடத்துல சைக்கிளை வெக்கவே இல்ல’

‘..’

‘அவனால ஸ்டெப்சே ஏறே முடியல, மூச்சு வாங்குது.’

‘நீங்களும் கொஞ்சம் வெயிட் போட்டுடீங்க’ என்றபடி எழுந்தவள் ‘சண்ட போட்டீங்களோ இல்லையோ, அது ரவியாவே இருந்தாக் கூட, இந்த வயசுல அதெல்லாம் வேண்டாம்’ என்று கூறிவிட்டு கழிவறைக்குச் செல்ல, வயிற்றைத் தடவிப் பார்த்தான். ரவி அளவுக்கு தொப்பை இல்லை, சொஞ்சம் சரித்துள்ளது அவ்வளவு தான், கொஞ்சம் மூச்சை இழுத்துப் பிடித்தால் தட்டையாகிவிடும். இப்போது சண்டையிட்டால் ரவியால் ஒரு அடி கூட அடிக்க முடியாது.

ரவியை வயிற்றிலும், முகத்திலும் குத்தி அவனை வீழ்த்துகிறான். ‘விட்ருங்க’ என்று உரக்க கத்தியபடி இருவருக்கும் இடையில் ரவியின் மனைவி வருகிறாள். வியர்வை படிந்த அவள் முழங்கையில் மயிர்கள் இன்னும் கருமையாக படர்ந்துள்ளன. விலகிச் நிற்கிறான்.

வயிற்றை தடவிக்கொண்டிருந்த கை கீழிறங்கியது.

எழ முயலும் ரவிக்கு அவன் மனைவி உதவுகிறாள். ‘எதுக்கு வீண் சண்ட’ என்று அவனிடம் அவள் கேட்க குறுகி நிற்கும் ரவி.

உள்ளங்கைக்குள் இறுகும் குறி.

எழ முயலும் ரவிக்கு அவன் மனைவி உதவுகிறாள். ‘எதுக்கு வீண் சண்ட’ என்று அவனிடம் அவள் கேட்க குறுகி நிற்கும் ரவி, மீண்டும் இவன் மீது பாய முயற்சிக்க ‘விடுங்க, திருப்பி அவர்கிட்ட அடி வாங்கதீங்க’ என்று அவன் மனைவி தடுக்கிறாள்.

உள்ளங்கையில் பரவும் குறியின் ரத்த ஓட்ட சூடு. கழிவறையிலிருந்து வெளிய வந்து தொடைகளுக்கிடையில் துண்டால் துடைத்துக் கொண்ட பின் படுக்கையிலிருந்த உள்ளாடையை எடுக்க குனிந்தவளின் கைகளைப் பற்றி இழுத்தான்.

குறியீடு அல்லது இலக்கிய சகுனம் – காலத்துகள்

காலத்துகள் 

‘நீ பேசறது உன் எழுத்தை விட கொஞ்சம் பெட்டரா இருக்கும், மாஸ்க்கால மூடிட்டு பேசினா அதுவும் ஒண்ணும் புரியாத மாதிரி ஆயிடுது’ என்றார் பெரியவர் முற்றுப்புள்ளி. பெருந்தொற்று காலத்திலும், இலக்கியம் குறித்தும்,  நான் எழுதவதைப் பற்றியும் அவருடன் உரையாடுவதை எப்போதும் போல் தொடர்ந்து கொண்டிருந்தேன். ஆனால் இன்று அவர் வீட்டிற்கு வந்த காரணம் இலக்கியம் சம்பந்தப்பட்டது மட்டுமேயல்ல. கடந்த மூன்று நான்கு மாதங்களாக நான் எதையும் புதிதாக எழுதவில்லை. ‘ரைட்டர்ஸ் ப்ளாக்’ என்று சொல்ல முடியாது. நான் எழுத்தாளனா என்ற தன் சந்தேகத்தை வெளிப்படையாக முற்றுப்புள்ளி கேட்பார், நான் அதை உள்ளூர என்னை நானே கேட்டுக் கொள்வதுண்டு. இன்று மீண்டும் எழுதத் தோன்றியது.

‘இப்ப சரியா இருக்கா ஸார்’

‘ஏன்யா கத்தற, போன்ல பேசும் போது தான் சில பேர்  இப்படி சத்தம்  போடுவாங்க, நீ எதுத்தாப்ல தான ஒக்காந்திருக்க’

‘சாரி ஸார். ஒரு சின்ன குழப்பம், அதை பத்தி உங்க கிட்ட பேசலாம்னு தான் வந்தேன்’

‘..’

‘ரொம்ப நாளைக்குப்பறம் இன்னிக்கு எழுத ஆரம்பிச்சேன் ஸார்’

‘..’ ‘எதுக்கு’ என்று பெரியவர் வெளிப்படையாக கேட்காதது, நல்ல ஆரம்பம், அவர் மனநிலை மாறுவதற்கு சொல்லி விட வேண்டும்.

‘முதல் வரி  எழுதினேன் ஸார், நான் சொல்றது நம்ப முடியாத மாதிரி இருக்கும், அந்த நொடி போன் வந்தது ஸார். அதுக்கப்பறம் நாள் முழுக்க  கிட்டத்தட்ட மூணு நாலு மணி நேரம் போன்லையே இருந்திருக்கேன். தொடர்ச்சியா கால்ஸ். பர்ஸ்ட் லைனுக்கு பிறகு எதையுமே எழுத முடியலை’

‘என்ன அந்த வரி’

உடலெங்கும் மலம், சிறுநீரின் மணம்.’

குட். நான் கூட நீ என்னமோ ‘இட் வாஸ் தி பெஸ்ட் ஆப் டைம்ஸ், இட் வாஸ் தி வர்ஸ்ட் ஆப் டைம்ஸ்’ மாதிரி ஏதோ எழுதிட்டியோன்னு நினைச்சுட்டேன். ‘

‘அந்த வரி என்னவாயிருந்த என்ன ஸார், கண்டின்யு பண்ண முடியலையே’

‘சரி, இப்ப  என் கிட்ட வந்து பேசிட்டிருக்கிறதுக்கு தொடர்ந்து எழுதியிருக்கலாமே. நானும் ஈவ்னிங்கை உருப்படியா ஸ்பெண்ட் பண்ணிருப்பேன்’ பெரியவரின் இத்தகைய பேச்சுக்களை நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

‘நாள் பூரா அடுத்து எழுத முடியாம போனது தான் எனக்கு குழப்பமா இருக்கு ஸார். இதுல ஏதாவது குறியீடா இருக்குமோ?’

‘குறியீடு எங்க திடீர்னு வருது’

‘இலக்கிய கடவுள்கள் இந்தக் கதையை நீ எழுத வேண்டாம்னு சொல்றாங்களோ’

‘சிம்பாலிக்கா சொல்றாங்களோன்னு கேக்கற? இங்க சிம்பாலிக் யூஸ் பண்ற இடத்தில், குறியீடு பொருந்துமா?’

‘..’

‘குறியீடுலாம், நல்ல மொழி வளம், சிந்தனை உள்ளவங்க உபயோகிக்கிற வார்த்தை. நீ நேரடியா எழுதறேன் பேர்வழின்னு அதையே கந்தரகோலம்  பண்ற ஆளு, உனக்கு எதுக்கு’

‘சரி, குறியீடு வேண்டாம். சகுனம்னு வெச்சுக்குங்க. கதையை ஆரம்பிக்கும் போதே தடங்கல் வருதே, இலக்கிய தெய்வங்கள் தரும் கெட்ட சகுனமா எடுத்துக்கலாமா’

‘உனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இருக்கா’

‘எனக்கு பேய், பிசாசு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை ஸார் , ஆனா பயமாயிருக்கே’

‘அதானே, ஓரு ரைட்டர் நேம் ட்ராப்பிங் பண்ணாம, அவரை க்வோட் பண்ணாம  பத்து நிமிஷம் கூட உன்னால பேச முடியாதே’

‘பேய், பிசாசு குறித்த தன்னுடைய நம்பிக்கை பற்றி இப்படி ஓரு ரைட்டர் சொன்னார்னோ, அவரை பெயரையோ நான்  குறிப்பிடலையே ஸார், நீங்க தான் இட் வாஸ் தி பெஸ்ட் ஆப் டைம்ஸ்ன்னு இன்னொருத்தரை க்வோட் செஞ்சீங்க’

‘ஆனா அவர் தன் நம்பிக்கை குறித்து குறிப்பிட்டதையே தானே நீயும் சொன்ன’

‘நானும் அவர் மரபுல வந்தவன்னு….’  சொல்ல வந்ததை நிறுத்தினேன்

‘…’

பெரியவர் எதுவும் பேசவில்லையென்றாலும் , பல வருடங்களாக அவரிடம் இலக்கிய வசவு வாங்கிக்கொண்டிருக்கும் எனக்கு அவருடைய  மனவோட்டம்  புரிந்தது. இலக்கிய முன்னோடிகளின் மீது அபரிமிதமான பக்தி கொண்டவர் முற்றுப்புள்ளி, அதனாலேயே சாதாரணமாக ஏதாவது கூறினாலும், அவர்களை அது சிறுமைப்படுத்துவதாக  எண்ணிக்கொண்டு பொரிந்து தள்ளிவிடுவார். அதற்கு இடம் தரக் கூடாது.

‘நான் சொன்னதை நீங்க எப்பவும் போல விபரீதமாக புரிஞ்சுக்கிட்டிருக்கீங்க ஸார். அவர் மரபுல வந்தவன்னு, என் எழுத்தின் தரத்தை வெச்சோ, என்னை அவருடன் ஒப்பிட்டோ  சொல்லலை, அமானுஷ்யம் குறித்த அவர் நம்பிக்கை வழி வரேன்னு தான் சொல்றேன்.’

பெரியவரின் இறுக்கம் இளகியது.

‘குறியீடு, சகுனம் பத்திலாம் நீ கவலைப் படாத. நான் பல வருஷமா  உன்கிட்ட நேரடியாவே மூர்க்கத்தனமா  உன் எழுத்து மோசம்னு சொல்லிட்டு வரேன், அதையே நீ கண்டுக்காம எழுத்திட்டிருக்க. ஸோ நீ எழுத ஆரம்பிக்கும் போது, பூனையென்ன, புலி, பாம்பை நடுல சகுனமா விட்டால்  கூட நீ  மாறப் போறதில்லைன்னு  லிடரரி காட்ஸுக்கு  தெரியாதா என்ன. நீ வழக்கம் போல, எப்பவும் கொட்டற எழுத்துக்  குப்பையை கொட்டு’

‘ ‘ப’னாக்கு ‘ப’னான்னு நீங்க பாம்பு, புலின்னு சொல்லியிருந்தாக் கூட, எனக்கு அதுலயும் ஒரு ஐடியா கிடைச்சிருக்கு ஸார். பாம்புகள் மேல் எனக்கிருக்கிற சரிசமான ஈர்ப்பும், பீதியும் பற்றியும், என் கனவுகளில் அவை அடிக்கடி வருவதும் உங்களுக்கு தெரியும். இன்னிக்கு எழுத ஆரம்பிச்ச கதையுடன் சர்ப்பம், எழுத்து, இரண்டையும் இணைக்கும் உளவியல் சிக்கல்னு இன்னொரு புனைவும் எழுதிடலாம்னு நினைக்கிறேன் ஸார். முடிஞ்சா இன்றைய தடங்கல்களையே கூட கதையா மாத்திடலாம். மூன்று புனைவுகள். வாட் டூ யு திங்க்?’

‘..’

‘ஸார்’

‘என்னை ஏன் கேக்கற’

‘என் ஐடியா பத்தி நீங்க என்ன நினைக்கறீங்கன்னு…’

‘நீ எப்படியும் எழுதத் தான் போற. ஒரேயடியா மூன்று கதைகளை நான் படிச்சுத் தொலைக்கணும். அதனால வரும் பாதிப்பை தடுக்க ஏதாவது தடுப்பூசியை இலக்கிய கடவுள்கள் தருவாங்களா, அவங்க கிட்டகூட உன் எழுத்திலிருந்து காப்பாற்றும் மருந்து இருக்காதே’

 

பிற முற்றுப்புள்ளி கதைகள்

போர்ஹெஸின் கொடுங்கனவு – காலத்துகள் குறுங்கதை

முற்றுப்புள்ளியுடன் முயல் வளைக்குள் ஒரு பயணம்- காலத்துகள் சிறுகதை

எஃகு தகடு அல்லது மெல்லிய இதழ் – காலத்துகள் சிறுகதை

குற்றமும் தண்டனையும் – காலத்துகள் சிறுகதை

எ ஸ்காண்டல் இன் போஹீமியாவை நுவாராக பிரதியெடுத்தல் – காலத்துகள் சிறுகதை

‘ஸார் எனக்கு கலர் ப்ளைண்ட்னஸ் வந்திருச்சு போல, எல்லாம் ப்ளாக் அன்ட் வைட்ட்டா தெரியுது’ என்று கான்ஸ்டபிள் வய் கத்த

‘பயப்படாதயா, இது நுவார் புலனாய்வு புனைவு, அதுக்கு அந்த பேக்டிராப் தான் பொருந்தும், ஸோ ரைட்டர் அது மாதிரி ஆக்கிட்டார்’ என்றார் இன்ஸ்பெக்டர் எக்ஸ்.

‘எதுக்கு ஸார் இதெல்லாம், வாசகர்களுக்கு நாம கருப்பு வெள்ளைல இருக்கோம்னு தெரியவாப் போகுது, இதென்ன சினிமாவா’

‘அதான் உன்னை கத்த வெச்சு, கதையோட ஆரம்பித்திலேயே சொல்லிட்டாரே, இனிமே அவங்களே தங்களோட அகக்கண்ணில் கருப்பு வெள்ளையா பாத்துப்பாங்க. நுவார்னு சொல்லியிருந்தாக் கூடப் போதும், அவங்க அகக்கண் திறந்திருக்கும், இப்படி நீ பயப்படற மாதிரி எழுத வேணாம், ஆனா நம்மாளுக்கு நம்மாளுக்கு மினிமலிஸம், ‘ஷோ, டோண்ட் டெல்’1 பத்திலாம் ஒரு எழவும் தெரியாது, எல்லாத்தையும் நம்மள பேச வெச்சு நீட்டி முழக்க வேண்டியது”

‘அகக்கண்ணா? கண்ணவிஞ்சு போகாம இருந்தா சரி. ஆனா இப்படிலாம் பயமுறுத்த சொல்லாதீங்க ரைட்டரை. கொரோனா காலம் வேற, ஹார்ட் அட்டாக்கே வந்துடும் போல’

‘கொரோனாக்கும் கலர் ப்ளைண்ட்னஸுக்கும் என்னையா தொடர்பு’

‘இந்த வைரஸால அபெக்ட் ஆனா ருசி, வாசனை எல்லாம் போயிடும்னு சொல்றாங்க, பார்வை மட்டும் அபெக்ட் ஆகாதுன்னு சொல்ல முடியுமா ஸார்’

‘ஓகே ரிலாக்ஸ். அரை பக்கம் ஒப்பேத்தியாச்சு, வி ஹேவ் டு ஸ்டார்ட் தி கேஸ் நவ்’

‘அதுக்கு முன்னாடி, கதையோட காலகட்டத்தை கொரோனாக்கு முன்னாடி கொண்டு போயிடலாமான்னு ரைட்டர கேளுங்க, மாஸ்க் போட்டுக்கிட்டு பேச முடியல, மூச்சு வாங்குது’

‘கொரோனா பத்தி குறிப்பிட்டாத்தான், ‘சயிட்கய்ஸ்ட்’2 பத்தி பேசறோம்னு வாசகர்களுக்கு தெரியும். சமகால சூழலை புனைவுல கொண்டு வராம எப்படி படைப்பை உருவாக்க முடியும். கலை கலைக்காகன்னு சொல்றதெல்லாம் தப்பு, சமூக பார்வையில்லாத எந்த படைப்பும் வீண்’

‘அப்ப கொரோனா சார்ந்த நுவார் குற்றப் புனைவா ஸார் இது’

‘… அப்படி சொல்ல முடியாது’

‘ஸோ அது பற்றிய குறிப்பு இனிமே ஒன்றிரண்டு முறை வந்தாலே அதிகம் இல்லையா, சயிட்கய்ஸ்ட்டுக்கு அது போதுமா ஸார்’

‘ரொம்ப யோசிக்க ஆரம்பிச்சுட்ட. கேரக்டர்ஸ் அவங்க எல்லைக்குள்ள தான் இருக்கணும், அப்பறம் ‘இசட்’ன்னு வேற கான்ஸ்டபிளை கொண்டு வந்திருவார் ரைட்டர்’

‘ஸாரி சார், இனிமே இப்படி கேட்க மாட்டேன். எனக்கு கெடச்சிருக்கும் இலக்கிய அமரத்துவ வாய்ப்பை மிஸ் பண்ண விரும்பலை. என்ன ‘கெஸ்ட்டா’ இருந்தாலும், அட்ஜஸ்ட் பண்ணிக்கறேன். இந்த முறை என்ன கேஸ் ஸார்’

‘இது அன்னபிஷியல்.’ என்ற எக்ஸ் நகரின் முக்கிய புள்ளியின் பெயரை கூறி ‘அவர் சன்னுக்கு ப்ராப்ளம், அதை சால்வ் பண்ண சொல்லியிருக்காங்க’

‘என்ன பிரச்சனை ஸார்’

‘யூஷுவல் ஸ்டப், அப்பேர். அப்பா பையனுக்கு கல்யாணம் பண்ண முடிவு செஞ்சிருக்கார், சன்னுக்கும் ஓகே, பட் சில காம்ப்ரமைஸிங் போட்டோஸ் அவன் லவர் கிட்ட இருக்காம். அவ அத யூஸ் பண்ணமாட்டான்னு நாம அஸ்யுரன்ஸ் குடுக்கணுமாம். அந்த லேடி வீடு ரெட்டியார்பாளையத்துல இருக்கு, இப்ப அங்க தான் போறோம்.’

‘அப்ப பேரழகு, மர்மப் பெண்ணை சந்திக்கப் போறோம்னு சொல்லுங்க. ‘பெம் பெட்டல்’3 இல்லாம நுவாரே கிடையாதே, இந்த உச்சரிப்பு சரிதானே ஸார்’

‘எனக்கு தெரியாதுயா. ‘போர்வோ’ உச்சரிப்பு தளத்துல பத்திருபது முறை கேட்டு எழுதியிருக்கார், கரெக்ட்டுன்னு நினைக்கறேன்.’

‘நாம இந்த விசாரணையை செய்யணுமா ஸார், கட்டப் பஞ்சாயத்து செய்யப் போற மாதிரி இருக்கே, கேவலமாயில்லையா?. ஏற்கனவே நம்ம டிபார்ட்மென்ட் மேல மரியாதை இப்ப குறைஞ்சிருக்கு, இந்தக் கேஸை பாலோ பண்ற வாசகாஸ் இன்னும் கடுப்பாயிடப் போறாங்க’

‘அந்த லேடியை மிரட்டலாம் போறதில்லையா. அந்தாள் ஒரு கம்ப்ளைண்ட் கொடுத்திருக்கார், அதை அன்னபிஷியலா இன்வெஸ்டிகேட் பண்ணப் போறோம், அவ்ளோ தான். இன்னொரு விஷயம் இதை ரொம்ப கேவலமா நினைக்காத’

‘ஏன் ஸார்’

‘ஷெர்லாக் ஹோம்சே இப்படியொரு கேஸை4 எடுத்திருக்கார். அவருடைய ஒரு சில தோல்விகளில் அதுவும் ஒண்ணு. இப்ப நாம ஜெயிச்சா அது எவ்ளோ பெரிய விஷயம்’

‘என்ன கேஸ் ஸார் அது’

‘வாசகர்களுக்காக முந்தைய வரில ஹைபர்லிங்க் குடுத்திருக்கேன்’

ரெட்டியார்பாளையத்தை அடைந்தவுடன் ‘பொன் நகர் செகண்ட் க்ராஸ்’ என்றார் எக்ஸ். அழைப்பு மணியை அழுத்தி விட்டு காத்திருந்தார்கள். வலது புற கதவு விரலளவு திறக்க, கண் மட்டும் தெரிந்தது. ‘போலீஸ்’ என்று எக்ஸ் சொல்ல உள்ளே அனுமதிக்கப் பட்டார்கள். கணுக்கால் வரை நீளும் ஸ்கர்ட், டாப்ஸ் அணிந்த பெண் இவர்களை அமரும் படி சைகை செய்ய வய் சோபாவின் அருகே சென்றார்.

‘இருயா, நின்னுட்டே பேசுவோம்.’ என்று அவரிடம் மெல்லிய குரலில் சொன்ன எக்ஸ் ‘நோ தேங்க்ஸ்’ என்று அப்பெண்ணிடம் கூற தலையசைத்தபடி நாற்காலியில் அமர்ந்தார் அவர்.

‘ஏன் ஸார்’

‘முடிஞ்சவரைக்கும் காண்டாக்ட்ட அவாய்ட் பண்ணனும்யா, எங்க எந்த வைரஸ் ஒட்டியிருக்கோ’

‘பீதிய கிளப்பாதீங்க ஸார்’

‘ரைட்டர் கொரோனாவை கொண்டு வந்துட்டார் பாத்தியா, இது தான் சயிட்கய்ஸ்ட்’

நாற்காலியில் அமர்ந்த பெண் எதுவும் பேசாமலிருந்தார். மாஸ்க் அணிந்திருந்தாலும், ஆங்கிலோ இந்தியன் என்பது தெரிந்தது.

‘மேடம் உங்க நேம்’

‘அது கூட தெரியாமையா வந்தீங்க’ உச்சரிப்பில் எந்த பிசிறுமில்லை, அவர் புன்னகைப்பது மாஸ்க் விரிவதிலிருந்து தெரிந்தது.

‘..’

‘ஐரீன்’

‘..’

‘ஸார், நீங்க கொடுத்திருந்த லிங்க் படிச்சேன், அதே..’ என்று வய் சொல்லிக் கொண்டிருக்கும் போதே

‘என்னோட கொள்ளுப் பாட்டி ஞாபகமா வெச்சாங்க’

‘அவங்க…’

‘ஷி லிவ்ட் இன் லண்டன். சின்ன பிரச்சனை, உலகப் புகழ் பெற்ற துப்பறிவாளரோட மோத வேண்டிய சூழல், ஜெயிச்சிருப்பாங்க, ஆனா அந்த காலத்துல ஓரு வுமன் எப்படி… ஸோ அவங்க தோல்வியடைஞ்சதா புனையப்பட்டது. எனிவே, அவங்க இந்தியா வந்து இங்க பாண்டிச்சேரில செட்டிலாயிட்டாங்க’

‘..’

‘இது எப்படி ஸார் சாத்தியம்?’ மெல்லிய குரலில் வய் கேட்டார்.

‘நீ நிஜ உலகின் தர்க்கங்களை இங்க பொருத்திப் பார்க்கற, இது புனைவுலகம், இங்க இதெல்லாம் சகஜம்’

‘நம்ம கதைகள் ரியலிஸ்டிக்கா இருக்கறதால நாமளும் உண்மை மனிதர்கள்னு நினைக்க ஆரம்பிச்சுட்டேன் ஸார்’

‘நாம நிஜம் தான்யா. வீ எக்ஸிஸ்ட், யார் இல்லைன்னு சொன்னது. ஆனா நம்முடைய இருப்பு புனைவுலகில், புரியுதா’

‘இருத்தயலியத்தை கொண்டு வரப்போறீங்களா, பயமாருக்கு’

இருவரும் தங்களுக்குள் பேசிக்கொள்வதை மௌனமாக ஐரீன் கவனித்துக் கொண்டிருந்ததை பார்த்த எக்ஸ்

‘ஒன்ன மாதிரி வாட்ஸன் வாய்ச்சது என்னோட தலையெழுத்து, அப்பறம் எக்ஸ்ப்ளைன் பண்றேன்’ என்று வய்யிடம் கூறிவிட்டு

‘மேடம் ஐரீன், நாங்க இங்க வந்திருக்கறதுக்கு ..’ ஆரம்பிக்க

‘ஐ நோ. எதிர்பார்த்துக்கிட்டுருந்தேன்’ என்ற ஐரீன் பெயரொன்றை சொல்லி ‘நான் அவன ப்ளாக்மெயில் பண்றேன்னு சொன்னானா’ என்று கேட்டார்.

‘இல்ல மேடம், பயப்படறான்.’

‘வை?’

‘போட்டோஸ், விடியோ’

‘அரசனையே தூக்கி எறிஞ்சவங்க என் கொள்ளுப்பாட்டி, அதை பார்க்கும் போது ஹி இஸ் நத்திங்’

‘..’

‘எனக்கு அவன் கிட்டேந்து எதுவும் வேண்டாம்’

‘அப்ப உங்க கிட்ட இருக்கற..’

‘அது முடியாது. தந்துட்டேன்னா என் உயிருக்கு உத்திரவாதம் கிடையாது’

‘அப்படியெல்லாம் எதுவும் நடக்காது மேடம்’

‘இருபத்தி நாலு மணி நேர செக்யுரிட்டி தரப் போறீங்களா?’

‘..’

‘வேற எதுவும் இல்லைனா …’

‘மேடம், நீங்க சொல்றது ஓகே, பட் நீங்க குடுத்துட்டீங்கன்னா எல்லாரும் நிம்மதியா இருக்கலாம். இல்லைனா இது இன்னும் பெருசாகும்’ என்று எக்ஸ் சொன்னதற்கு உரக்க சிரித்த ஐரீன்

‘என்ன பண்ணுவீங்க, அதெல்லாம் எங்க இருக்குன்னு சர்ச் பண்ணுவீங்களா, வாரண்ட் இருக்கா? இருக்காது, நீங்களே அன்னபிஷியலாத் தான் வந்திருப்பீங்க’

‘..’

‘போட்டோவை எங்க ஒளிச்சு வெச்சிருக்கேன்னு கண்டுபிடிக்க, வீட்ல நெருப்பு பத்திகிச்சுன்னு டைவர்ஷனை உண்டாக்கி, நான் தன்னிச்சையா அந்த போட்டோ இருக்கற எடத்துக்கு போய் அதை எடுக்க, நீங்க தெரிஞ்சுக்கலாம்னு ப்ளான் வெச்சிருக்கீங்களோ’

‘…’

‘ஸோ க்ளிஷேட். நூறு, நூத்தியம்பது வருஷம் முன்னாடி இப்படி ஏமாத்த முடியும்.’

‘மேடம் ..’

‘எல்லாம் க்ளவுட்ல இருக்கு. ஆன்லைன் ஸ்டோரேஜ்.’ என்ற ஐரீன் தன் அலைபேசியை உள்ளங்கையில் வைத்து அசைத்தபடி ‘ஜஸ்ட் எ சிங்கிள் க்ளிக், மொபைலேந்து என்னோட எப்.பி, ட்விட்டர், வாட்ஸாப், இன்ஸ்டா காண்டாக்ட்ஸுக்கு போயிடும். ஆட்டோ போஸ்டிங் ஷெட்யுல் பண்ணியிருக்கேன், தினமும் நான் தான் டிஆக்டிவேட் பண்ண முடியும், இல்லன்னா …’

‘..’

‘நான் அந்த போட்டோஸை வெச்சு ஒண்ணும் செய்ய மாட்டேன், யு கேன் பி ஷூர் ஆப் தட், அவன் கிட்டயும் சொல்லுங்க’ என்றபடி ஐரீன் எழ, எதுவும் பேசாமல் எக்ஸும், வய்யும் வெளியேறினார்கள்.

‘இப்படியொரு அரதப் பழசான கேஸை எடுத்திருக்கவே வேண்டாம் ஸார்,’ என்றார் வய்.

‘டான் க்யுஹோட்டேவை மொழியாக்கம் செய்யறவன் புதுசா ஒரு புனைவை படைக்கறான்னு போர்ஹெஸ் சொல்லியிருக்கார், அது மாதிரி ரைட்டர் அவர் படிச்ச சிறுகதையை புதுப் பிரதியா உருவாக்கியிருக்கார்’

‘அது ட்ரான்ஸ்லேஷன் பத்தி சொன்னது ஸார். சரி, புதுப் பிரதியாவே இருக்கட்டும், தோல்வில முடிஞ்சிருச்சே..அதான் ..’

‘இந்த கேஸ்ல  ஷெர்லாக் ஹோம்சே தோத்திருக்கார்ன்னு சொன்னேனேயா, அந்த லேடி பேரை கூட அவர் சொல்லமாட்டாராம், அவ்வளவு மரியாதை. நாம எம்மாத்திரம். நமக்கும் இது தானே பர்ஸ்ட் டிபீட், விடு’

‘நமக்கு இது முதல் தோல்வி ஸார், ஆனா நா அதை பற்றி குறிப்பிடலை. எழுத்தாளர் ஒவ்வொரு முறையும் ஏதோ ட்ரை பண்றார், ஆனா ஜெயிக்கவே மாட்டேங்கறாரே அதைத் தான் …..’

பின்குறிப்பு:

  1. ‘ஷோ, டோண்ட் டெல்’ –  If a writer of prose knows enough of what he is writing about he may omit things that he knows and the reader, if the writer is writing truly enough, will have a feeling of those things as strongly as though the writer had stated them. The dignity of movement of an iceberg is due to only one-eighth of it being above water. – ஹெம்மிங்வேவின் ‘Iceberg Theory’
  2. சயிட்கய்ஸ்ட் – Zeitgeist
  3. பெம் பெட்டல் – Femme Fatale
  4. ஷெர்லாக் ஹோம்ஸ் புனைவுலகின் தவிர்க்க முடியாத பாத்திரமாக உள்ள ‘ஐரீன் அட்லர்’ தோன்றும் ஒரே சிறுகதை.

 

சாத்தியமற்ற குற்றம் – காலத்துகள் சிறுகதை

‘பூட்டின ரூம்ல கொலை ஸார்!’

‘என்னய்யா, பல்ப் நாவல் தலைப்பு மாதிரி சொல்லற?’ என்றார் இன்ஸ்பெக்டர் எக்ஸ்.

‘அப்படித்தான் ஸார் நடந்திருக்கு. இந்த வீட்லதான்,’ என்று ஏட்டையா வய் கூற, ‘வீடா, பங்களான்னு சொல்லுயா, வைட் டவுன்ல மூணு ப்ளோர்ல இவ்ளோ பெருசா கட்டணும்னா… பீச் வ்யு வேற, கொஞ்சம் பழசோ…’ என்று எக்ஸ் கேட்க, ‘எஸ் ஸார், முப்பது முப்பத்தஞ்சு வருஷம் இருக்கும், வாங்க,’ என்றார் வய்.

‘யார் ஓனர்?’

‘கிஷோர், அவர் தான் விக்டிம். துணிக்கடை வெச்சிருக்கார், ப்ளஸ் ரெண்டு ஹை எண்ட் பேஷன் போட்டிக். இந்த ஏரியாலையே மூணு வீடு வாடகைக்கு விட்டிருக்கார்… விட்டிருந்தார்.’

ஹாலில் கட்டப்பட்டிருந்த லாப்ரடாரைப் பார்த்த எக்ஸ், ‘இது நைட் குலைக்கலையா?’ என்று கேட்க, ‘அது ஷெர்லாக் ஹோல்ம்ஸ் காலத்து க்ளூ ஸார், நூறு வருஷத்துக்கு மேல ஆயிடுச்சு. அடுத்து சிகரெட் துண்டு, மண்ணுல ஷூ அச்சுன்னு துப்பறியப் போறாரா எழுத்தாளர்? இது டிஜிட்டல் புட்ப்ரிண்ட் காலம், அரதப் பழசா யோசிக்கறதை விட்டுட்டு புதுசா ட்ரை பண்ண சொல்லுங்க.’ என்றார் வய்.

‘என்னயா ரொம்ப சலிச்சுக்கற?’

‘ஹார்ட் பாயில்ட் க்ரைம் இன்வெஸ்டிகேஷன் பண்ணனும்னு ரொம்ப நாளா ஆசை, ஸார்.’

‘அந்த ழானர் மட்டுமென்ன புதுசா, ஆரம்பிச்சு அறுபது எழுபது வருஷமாச்சேயா, தவிர அந்த உலகம் ப்ரைவேட் டிடெக்டிவ்களுடையது, நம்மள மாதிரி போலிஸ்காரங்களுக்கு வாய்ச்சது இது மாதிரி சாதாரண மனிதர்களா இருக்கறது, இல்ல ஸ்காண்டிநேவியன் குற்றப் புனைவுலகில் வரவங்க மாதிரி மிதமிஞ்சிய குடி, டைவர்ஸ்னு அல்லாடறது, ரெண்டுதான், எது பெட்டர்?’

‘நாயர்ன்னு என்னமோ சொல்றாங்களே அதை ட்ரை பண்ணலாம்ல ஸார்?’

‘அது நுவார்யா. நம்பூதிரி, குறுப்புன்னு ஆரம்பிக்காத. நமக்குன்னு ஆசை, சுய சிந்தனை இருக்கக் கூடாதுயா, ரைட்டர் சொல்றதுதான். மொதல்ல இதை கண்டுபிடிப்போம், அப்பறம் பாக்கலாம், எனக்கும் சேஞ்ச் வேண்டியிருக்கு’

ஹாலிலிருந்த படிக்கட்டுக்கள் வழியாக முதல் தளத்தை அடைந்தார்கள். ‘இந்த ரூம்தான் ஸார்.’ கதவுகள் திறந்திருந்த அறைக்குள் நுழைந்தார்கள். படுக்கையிலிருந்த உடலின் நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் ரத்தம் உறைந்திருந்த காயங்கள். ‘மர்டர் வெபன்?’ என்று எக்ஸ் கேட்க, ‘பெட் மேல இந்த கத்தி இருந்தது ஸார்,’ என்று ப்ளாஸ்டிக் உறையில் சீல் செய்யப்பட்டிருந்த கத்தியைக் காட்டினார் வய். ‘ப்ளட் எதுவும் இல்ல?’, ‘ஆமா ஸார், சுத்தமா தொடச்சிருக்கு, அதுக்கு யூஸ் பண்ணின துணி பெட்டுக்கு கீழ இருந்தது. கலெக்ட் பண்ணிருக்கோம்’ என்றபடி வய் நீட்டிய மற்றொரு ப்ளாஸ்டிக் உறையில் ரத்த தீற்றல்களுடன் கர்சீப். அதை வாங்கிப் பார்த்து விட்டு திரும்பித் தந்த எக்ஸ், அறையிலிருந்த ஜன்னலருகே சென்று ‘இதுவும் மூடியிருந்ததா’ என்றார்.

‘ஆமா ஸார், செக் பண்ணிட்டோம், க்ரில்ஸ் எதுவும் உடையல’ என்றபடி அதைத் திறந்தார் வய். கம்பிகளை பிடித்துப் பார்த்தபடி ‘ஹூடுனி மாதிரி யாரவது வேணும்னா இதை வளைச்சு வெளியேறி கம்பிகளை திருப்பி செட் பண்ணிருக்கலாம்’ என்ற எக்ஸ் மீண்டும் படுக்கைக்கு அருகே வந்தார். ‘இந்த ரூம்ல ஏதாவது சீக்ரட் பாசேஜ் இருக்கலாம் ஸார்’ என்று வய் சொல்ல ‘அதெல்லாம் காதிக் பிக்க்ஷன்ல தான்யா, நம்மளது நவீனத்துவ உலகம்யா,.. இல்ல போஸ்ட் மாடர்னிஸமா, எனக்கு ரெண்டும் புரிஞ்சதே இல்லை’ என்றார் எக்ஸ்.

‘அப்ப எப்படி ஸார் கில்லர் வெளியே போனான், அமானுஷ்ய வேலையாயிருக்குமோ’

அந்த கேஸ் முடிஞ்சு போச்சுயா, இது வேற. யார் பாடியை மொதல்ல பார்த்தது?’

‘வீட்ல வேலை செய்யறவங்க ரூம் கதவை தட்டியிருக்காங்க, திறக்கலைனதும் ஓபன் பண்ண ட்ரை பண்ணிருக்காங்க, முடியலை, உள் பக்கம் தாப்பா போட்டிருந்திருக்கு. அப்பறம் வீட்ல இருக்கறவங்களை கூப்பிட, ரெண்டு பேரா கதவை ஒடைச்சிருக்காங்க.’

‘யாரெல்லாம் இந்த வீட்ல இருக்காங்க?’

‘கிஷோருக்கு கல்யாணமாகலை. அவர் எல்டர் ப்ரதர் பசங்க மூணு பேர் இவரோட இங்க ஸ்டே பண்றாங்க.’

‘எல்டர் ப்ரதர் உயிரோட இல்லையா?’

‘இவங்க சின்னப் பசங்களா இருக்கும்போதே பேரெண்ட்ஸ் இறந்துட்டாங்க, கிஷோர்தான் வளர்த்திருக்கார்.’

‘கடை இரண்டு ப்ரதர்ஸுக்கும் சொந்தமா இருந்திருக்கும் இல்லையா?’

‘செக் பண்ணனும் ஸார், பட் நீங்க ஹிண்ட் பண்ற மாதிரி மோடிவ் இருந்திருந்தாலும், பூட்டின ரூம்ல யாரு, எப்படி…’ என்ற வய் தொடர்ந்து ‘இன்னொரு விஷயம் ஸார், போன வாரம் வீட்லேந்து பத்தாயிரம் ரூபாய் காணாம போயிருக்கு, கிஷோர் வீட்ல வேலை செய்யறவங்களை சந்தேகப்பட்டார்னு அந்த பசங்க சொல்றாங்க’ என்றார்.

‘இன்ட்ரஸ்டிங். வேலை செய்யறவங்களை வரச் சொல்லுங்க,’ என்றபடி அறைக்கு வெளியே சென்றார் எக்ஸ்.

‘உங்க பேரென்னம்மா, என்ன நடந்துச்சு?’

‘ஜெயா, ஸார். வழக்கம் போல ஆறரை மணிக்கு வேலைக்கு வந்துட்டேன். ஹாலைப் பெருக்கி முடிச்சுட்டு இந்த ரூமுக்கு வந்தேன். அந்நேரத்துக்கு எப்பவும் தொறந்து தானிருக்கும், இன்னிக்கு மூடியிருந்தது. தட்டினேன், கூப்ட்டேன், யாரும் வரலை, நானே தொறக்க பார்த்தேன் முடியலை.’

‘உள்ள ஏதாவது சத்தம், சின்னதாகக்கூட… கேட்டுதா?’

‘இல்லைங்க.’

‘அப்பறம்?’

‘இவங்களைக் கூப்பிட்டேன்,’ என்று அங்கு நின்றிருந்த மூன்று இளைஞர்களில் இருவரைச் சுட்டினார் ஜெயா.

‘உங்க பேரென்ன?’ என்று எக்ஸ் கேட்க,’நான் மாதவ், இது சோனு. நாங்க செகண்ட் ப்ளோர்ல எங்க ரூம்ல இருந்தோம், இவங்க சத்தம் கேட்டு வந்தோம்.’

‘உள்ள லாக் ஆகியிருந்ததுன்னு நிச்சயமா தெரியுமா?’

‘ஆமா ஸார், ரெண்டு பேரும் புல் போர்ஸ் போட்டப்பறம் தான் தொரந்துச்சு’

‘இன்னொரு ப்ரதரா?’ என்று சற்று தள்ளி நின்றுகொண்டிருந்த மற்றொரு இளைஞனை பார்த்து எக்ஸ் கேட்க, ‘ஆமா ஸார், ராகேஷ்,’ என்று மாதவ் சொல்ல, அவன் அருகே வந்தான்.

‘நீ எங்க இருந்த?’

‘நேத்து நைட் செம தலைவலி ஸார், மாத்திரை போட்டு தூங்கிட்டேன்.’

‘எப்ப கீழ வந்த?’

‘ நான் வந்தப்ப இவங்க கதவ ஒடைச்சுக்கிட்டு இருந்தாங்க’

‘இவர் சொல்றது கரெக்டா?’ என்று மாதவ்விடம் எக்ஸ் கேட்க, ‘ஆமா, நான் பெட் கிட்ட போய் பார்த்துட்டு பயந்து திரும்பறேன், இவன் ரூம் வாசல்ல நிக்கறான்,’ என்றான் அவன்.

‘ஓகே. உங்க சித்தப்பாவை கொலை செய்யற அளவுக்கு யாருக்கு வெறுப்பு இருக்க முடியும்னு நினைக்கறீங்க?’ என்று எக்ஸ் கேட்டதற்கு மூவரும் இல்லையென்று தலையசைத்தனர்.

‘சரி, நீங்க மூணு பேரும் ஹால்லயே இருங்க, வீட்டை விட்டு இப்போதைக்கு போகக் கூடாது.’

அவர்கள் சென்ற பின் ஜெயாவிடம், ‘போன வாரம் வீட்ல பணம் காணாம போச்சாமே’ என்று கேட்டார் எக்ஸ்.

‘ஆமா ஸார், பத்தாயிரம் ரூபாய்’

‘கிஷோர் அது பத்தி உங்க கிட்ட ஏதாவது கேட்டாரா’

‘இல்லைங்க, யாரோ திருடிட்டாங்கன்னு சொன்னார் அவ்ளோ தான்’

‘அதை நீங்க எடுத்ததா…’

‘ஐயோ அபாண்டங்க, நான் ஏங்க எடுக்கறேன், நல்ல சம்பளம் குடுத்தாருங்க, மத்தவங்க காசு எனக்கெதுக்கு’

‘கிஷோருக்கு உங்க மேல தான் சந்தேகம்ன்னு இந்த பசங்க ..’ என்ற எக்ஸை இடைமறித்து ‘ராகேஷ் தான் திருடிருப்பான்னு என் கிட்ட அவர் சொன்னார் ஸார்’ என்று உரத்த குரலில் ஜெயா கூறினார்.

‘அப்ப ஏன் மொதல்ல யாரோ திருடிட்டாங்கன்னு சொன்னதா சொன்ன’

‘அது அவங்க குடும்ப விஷயம்ங்க, நான் எதுக்குன்னு..’

‘ஆனா காணாம போன பணம் இன்னும் கிடைக்கலையே, அப்ப அந்த பசங்க சொல்றதை பத்தி யோசிக்க வேண்டியிருக்கே’

‘ஸார், ஐயாக்கும் இந்தப் பசங்களுக்கும் நாலஞ்சு மாசமா அடிக்கடி சண்டை நடக்குது, அதை விசாரிங்க.’

‘என்ன சண்டை?’

‘சொத்து ஸார், பிசினஸ் பண்ண பணம் கேட்டாங்க, அவங்க அப்பா மூலமா வர வேண்டிய பங்குன்னு எதுவுமில்லைனு ஐயா சொன்னார், அதான் பிரச்சனை.’

‘மூணு பேருமே பிசினஸா?’

‘மொதோ ரெண்டு பசங்க ஸார், ராகேஷ் இப்பத்தான் காலேஜ் முடிச்சிருக்கான், அதுலயும் நெறய பெயில் போலிருக்கு, ஐயா திட்டிட்டிருப்பாரு.’

‘சரி, நீங்க கதவை தட்டும் போது ரூம் உள்ள பூட்டியிருந்துதுன்னு ஷ்யுரா சொல்ல முடியுமா உங்களால?’

‘நிச்சயமா ஸார், நானே கதவை தொறக்க பாத்தேன், முடியலை. ரெண்டு பேர் சேர்ந்து தள்ளினப்பறம்தான் தொறந்தது.’

‘சரி நீங்களும் கீழ வெயிட் பண்ணுங்க.’

‘என்ன ஸார், நீங்க கெஸ் பண்ணின மாதிரி மோடிவ் இருக்கு, ஆனா எப்படி செஞ்சிருக்க முடியும், தவிர இவங்க சொல்றதை எந்தளவுக்கு நம்பறது?’

‘எவிடன்ஸ் கலெக்ட் பண்றவங்க இன்னும் கிளம்பலையில்ல?’

‘இங்கதான் ஸார் இருக்காங்க’

‘வரச் சொல்லுங்க’.

வந்தவர்களிடம், ‘ரெண்டு கதவு பக்கத்துலயும் இன்னும் மைன்யுட்டா செக் பண்ணுங்க,’ என்றவர் தொடர்ந்து மெல்லிய குரலில் ஏதோ சொல்ல,

‘ஏதாவது ஐடியா கிடைச்சிருக்கா ஸார்?’ என்று கேட்டார் வய்.

‘சால்வே பண்ணிட்டேன்.’

‘எப்டி ஸார்?’

‘ஒரு க்ளூ தரேன், ஜான் டிக்ஸன் கார்.’

வய் தன் அலைபேசியில் தேட ஆரம்பிக்க, அறையை ஒரு முறை சுற்றியபின் அறைவாசலுக்குச் சென்றார் எக்ஸ்.

‘என்னய்யா கண்டுபிடிச்சியா?’

‘கொஞ்சம் டைம் குடுங்க ஸார்.’

‘நேரமில்லை, வேற வேலையிருக்கு.’

‘இன்னொரு கேஸா ஸார்?’

‘நமக்கு என்ன நேரப் பிரச்சனை, அடுத்த கதை, கேஸ் வர நாலஞ்சு மாசம்கூட ஆகும், வாசகர்களை பத்தி யோசி. இது ட்விட்டர் பிக்க்ஷன் காலம், நொடிக் கதைகளை படிக்கவே நேரமில்லைன்னு சொல்றாங்க, ஸோ ஏன் கேஸை நீட்டி முழக்கணும். இப்பவே முடிச்சுட்டா வாசகர்கள் இன்னொரு புனைவுலகிற்குள் நுழையலாம்ல. ஹாலுக்கு போலாம்.’

‘நேத்து ஈவ்னிங்லேந்து மார்னிங் வரைக்கும் நீங்க எங்க இருந்தீங்கன்னு சொல்லுங்க.’

‘மதியம் நாலரை மணிக்கு வந்து, எப்பவும் போல ஆறு மணிக்கு கிளம்பிட்டேன் ஸார், அதுக்கப்பறம் வீட்ல தான் இருந்தேன்,’ என்றார் ஜெயா.

‘நானும் சோனுவும் பத்தரை மணி வரை நாங்க ப்ளான் பண்ணிருக்கற பிசினஸ் பத்தி பேசிட்டு எங்க ரூமுக்கு தூங்கப் போயிட்டோம்.’

‘எனக்கு தலைவலின்னு சொன்னேனே ஸார், நான் ஒன்பது மணிக்கெல்லாம் படுத்துட்டேன்.’

‘நாங்க தூங்கப் போனப்போ இவன ஈவ்னிங் முழுக்க பார்க்கலையேன்னு இவன் ரூமுக்கு போனேன், லைட் எரியலை, போன் ட்ரை பண்ணினேன் லைன் கிடைக்கலை.’

‘சார்ஜ் இல்லை ஸார், டயர்டா இருந்ததால அப்படியே தூங்கிட்டேன்.’

‘உங்க சித்தப்பாவை கடைசியா எப்ப பார்த்தீங்க?’

‘டின்னர்போது ஸார், ஒன்பது, ஒன்பதேகால் இருக்கும்.’

‘நீ அதுக்கு முன்னடியே வீட்டுக்கு வந்து படுத்துட்ட?’

‘ஆமா ஸார்.’

‘உங்க பிஸ்னஸுக்கு பணம் கேட்டு சித்தப்பாவோட சண்டை போடுவீங்களாமே?’

‘…’

‘நான் சொல்றது பொய்யா?’

‘இல்ல ஸார்…’

‘அப்பறம்?’

‘எங்கப்பா பங்கைதான் நாங்க கேட்டோம், அதை தர மாட்டேன்னார், அதான் சண்டை ஸார், ஆனா கொலைலாம்… ‘

‘…’

‘வீட்ல போன வாரம் பத்தாயிரம் ரூபாவை காணும் ஸார், சித்தப்பாக்கு ஜெயா மேல…’ என்று சோனு ஆரம்பிக்க ‘ஐயோ பொய் ஸார், அவருக்கு ..’ என்ற ஜெயாவை ‘நீங்க பேசாம இருங்க’ என்ற எக்ஸ்

‘ம்ம். எல்லாரும் போன் நம்பர்ஸ் குடுங்க, தேவைப்படலாம். ராகேஷ் மொபைலை சார்ஜ் பண்ணிட்டீங்களா?’ என்று அவனிடம் கேட்டார்.

‘காத்தாலேந்து டென்ஷன் ஸார், மறந்துட்டேன்.’

‘உங்ககிட்டதான் இருக்கு போலிருக்கு?’ என்று எக்ஸ் கேட்டவுடன் சட்டை பாக்கெட்டிலிருந்து அதை ராகேஷ் எடுக்க, அவனிடமிருந்து வாங்கி அதை இயக்கினார்.

‘சார்ஜ் இல்லைனீங்க, எய்ட்டி போர் பர்சென்ட் இருக்கு, அப்பறம் ஏன் ஆப் ஆகியிருக்கு, நீங்களே ஆப் பண்ணிட்டீங்களா?’

‘இல்ல ஸார்… சரியா கவனிக்கலை போலிருக்கு.’

‘இப்பலாம் போன் எந்த நேரத்துல எந்த லொகேஷன்ல இருந்துதுன்னு கண்டு பிடிச்சிடலாம், பார் எக்ஸாம்பிள் நீங்க ஒன்பது மணிக்கு வீட்டுக்கு வந்துட்டீங்கன்னா உங்க மொபைல் லொகேஷன் இந்த வீட்டை தான் அந்த நேரத்துக்கு காட்டும்.’

‘இதுதான் ஸ்விட்ச் ஆகியிருந்ததே ஸார்?’

‘ஸோ லொகேஷன் ட்ராக்கிங் பண்ண முடியாதுன்னு சொல்றீங்க, ஓகே,’ என்ற எக்ஸ் மாதவ்விடம், ‘நீங்க பாடியை பார்த்தவுடனேயே ராகேஷும் ரூமுக்கு வந்துட்டார் இல்லையா?’ என்று கேட்க, ‘ஆமா ஸார்.’

‘என்ன ட்ரெஸ்ல இருந்தார்?’

‘இதே பேன்ட் ஷர்ட்தான் ஸார்.’

‘ராகேஷ், உங்க தலைவலில ட்ரெஸ்கூட மாத்தாம தூங்கிட்டீங்களோ?’

‘…’

‘ஒருவேளை ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு கீழ வந்தீங்களா?’

‘இல்ல ஸார், அப்படியே தூங்கிட்டேன்.’

‘சத்தம் கேட்டு வேகமா ஓடி வந்திருப்பீங்கல்ல?’

‘எஸ் ஸார்.’

‘அவர் ஓடி வந்த சத்தம் உங்க யாருக்காவது கேட்டுதா?’

‘இல்லை ஸார், ஆனா நாங்க பதட்டத்துல இருந்தோம் ஸார், எதையும் கவனிக்கற நிலைமைல இல்ல.’

‘நீங்க ஏன் உள்ள வராம வாசல்ல நின்னீங்க?’

‘…’

‘என்ன நடந்துன்னு தெரியாம பயத்துல நின்னுருப்பீங்களோ?’

‘…’

‘உள்ளேந்து வாசல் வரைக்கும் போனாப் போதும் இல்லையா உங்களுக்கு?’

‘என்ன ஸார் சொல்றீங்க?’ என மாதவ் கேட்க, முதல் தளத்திலிருந்து இறங்கி ஹாலுக்கு வந்த போலீஸ்காரர் இன்ஸ்பெக்டரிடம் மெலிதாக ஏதோ கூறிச் சென்றார்.

‘உங்க சித்தப்பா ரூமுக்குள்ள டோர்கிட்ட ரெண்டு மூணு தலை முடி கிடைச்சிருக்கு, டி.என்.ஏ டெஸ்ட் அது யாருதுன்னு சொல்லும்,’ என்று இன்ஸ்பெக்டர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே எழுந்து ஓட ஆரம்பித்த ராகேஷைப் பிடித்தார் ஏட்டையா.

‘எப்படி ஸார் கண்டுபிடிச்சீங்க!’

‘அதான் சொன்னேனே, ஜான் டிக்ஸன் கார்.’

‘எனக்கு இன்னும் பிடிபடலை ஸார்.’

‘லாக்ட் ரூம் மர்டர்ஸ்னு குற்றப் புனைவுல ஒரு வகைமை இருக்குயா, இம்பாசிபிள் க்ரைம்ஸ்னும் சொல்வாங்க, அதுல அவர்தான் பெஸ்ட், நிறைய நாவல் எழுதியிருக்கார். அதுல ஒண்ணுல துப்பறிகிறவர் பூட்டின அறைல கொலை எப்படியெல்லாம் நடக்கக்கூடும்னு பத்து பண்ணண்டு வழிகளை சொல்வார். அதை பேஸா வெச்சுகிட்டு மூணு பாய்ண்டஸை கொஞ்சம் சேஞ்ச் பண்ணினா நம்ம கேஸுக்கு  செட் ஆகக்கூடும்னு முதல்லையே தெரிஞ்சுது.’

‘எதெல்லாம் ஸார்?’

‘பர்ஸ்ட், கதவு உட்பக்கம் தாழ்ப்பாள் போடப்படாமல் இருந்திருக்கலாம். தட் இஸ், மாதவ், சோனு ரெண்டு பேரும் நைட்டே கிஷோரை கொலை செஞ்சிருக்கலாம். அப்பறம் மார்னிங், ரூம் உள்பக்கமா பூட்டியிருந்த மாதிரி நடிச்சிருக்கலாம், ஆனா வீட்டு வேலை செய்யறவங்க லாக் ஆகியிருந்ததுன்னு கன்பர்ம் பண்ணிட்டாங்க. ஸோ அதை விட்டுடலாம்.

‘ரெண்டாவது, இதுலயும் ரூம் பூட்டப்படாம இருந்திருக்கலாம், ஆனா உள்ள இருக்கறவர் செத்திருக்கணும்னு கட்டாயமில்லை. இவங்க ரெண்டு பேரும், கிஷோருக்கு நேத்து நைட் ஏதாவது செடேடிவ் குடுத்திருக்கலாம். அப்பறம் ஜெயா சத்தம் போட்டவுடன், கதவை உடைக்கற மாதிரி நடிச்சு, உள்ள நுழைஞ்சு அவரை குத்தியிருக்கலாம். ஆனா முதல் பாயின்ட் தப்புன்னு தெரிஞ்சவுடனேயே, அதாவது ரூம் லாக் ஆகியிருந்தது உண்மைன்னா, இதுவும் பொருந்தாம போயிடுது  இல்லையா. தவிர ஜெயா கூடவே இருந்ததால் கொலை செய்வதற்கு டைமோ, சான்ஸோ அவங்க கிட்ட இல்லை.’

‘ஜெயாவும் இதுல இன்வால்வ் ஆகியிருக்கலாமே ஸார்?’

‘பாசிபிள், ஆனா அவங்ககூட பேசினத வெச்சு ஷி இஸ் இன்னொசன்ட்ன்னு எனக்குப் பட்டது.’

‘பணம் காணாம போன விஷயம்?’

‘சோனு சொன்ன மாதிரி ஜெயா பணத்தை எடுத்திருந்தா, கிஷோர் ஏன் போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணலை, பெரிய அமவுண்ட்டாச்சே. ஜெயாவை அட்லீஸ்ட் வேலையை விட்டாவது எடுத்திருக்கலாமே. ஸோ வீட்ல இருக்கற ஒருத்தர் தான் திருடியிருக்கணும்னு கிஷோர் நினைச்சிருக்கணும். தவிர மூணாவது பாயின்ட் இந்த கேஸுக்கு பிட் ஆகற மாதிரி இருந்தது.’

‘அது என்னது ஸார்?’

‘கொலைகாரன் ரூமை பூட்டிட்டு உள்ளேயே, கதவு பக்கத்துல, இல்லை, வேற மறைவான இடத்துல இருப்பான். கதவை ஒடச்சுகிட்டு வரவங்களோட போகஸ் டெட் பாடி மேலத்தான் இருக்கும், பர்ஸ்ட் ப்யு செகண்ட்ஸ் ரூமை யாரும் கவனிக்க மாட்டாங்க, அந்த டைம்ல மர்டரர் வெளில போய்டுவான், இல்ல அப்பத்தான் ரூமுக்குள்ள நுழையற மாதிரி நடிப்பான். இங்க இன்னொரு விஷயத்தை நீங்க கவனிக்கணும். பூட்டிய ரூமுக்குள்ள கொலை செஞ்சுட்டு வெளில போக முடிஞ்சவனுக்கு, கத்தியை எடுத்துட்டு போக முடியாதா என்ன? ஸோ, மர்டரர் ரூம்லதான் இருந்திருக்கணும்னு கெஸ் பண்ணினேன். ராகேஷ்தான் கடைசியா வந்திருக்கான். அப்பறம் அவன் போன் ஸ்விட்ச் ஆப் ஆகியிருந்ததுன்னு தெரிய வந்தது, நைட் கால் வரும்னு அணைச்சு வெச்சிருக்கான். அவன் ட்ரஸ் பத்தி கேட்டப்ப அதை மாத்தலைன்னு சொன்னான், கத்தியை பேண்ட், சட்டைல ஒளிச்சு வைக்க அவனுக்கு பயம், அதான் ரூம்லயே விட்டுட்டான்.’

‘எல்லாம் சரி ஸார், ஆனா பிஸிகல் எவிடன்ஸ் எதுவும் கிடைக்கலையே, அவனோட தலைமுடி கிடைச்சாக்கூட அது எப்ப வேணா அங்க வந்திருக்கலாம்னு ஆர்க்யு பண்ணலாமே?’

‘தலைமுடி கூட கிடைக்கலைய்யா, அது அவன ட்ரிக்கர் பண்ண நான் பண்ணின ஏற்பாடு.’

‘…’

‘அரதப் பழசை விடுங்கன்னு சொன்ன, கடைசில பாரு, கோல்டன் ஏஜ் க்ரைம்தான் இதுவும், ஈஸியா கண்டுபிடிச்சுட்டோம்.’

‘என்னதான் வாசகர் மன நலம் கருதி கேஸை இவ்ளோ சீக்கிரம் சால்வ் பண்ணினாலும், இதெல்லாம் நம்பற மாதிரியே இல்லை ஸார்.’

‘கோல்டன் ஏஜ் க்ரைம் பிக்க்ஷன் இப்படித்தானேய்யா, கடைசில எல்லாரையும் கூப்பிட்டு வெச்சு, குற்றம் எப்படி நடந்ததுன்னு சொன்னா, குற்றவாளி ஒத்துப்பான், அவ்ளோதான். தவிர இவன் ஒன்னும் பெரிய ப்ளான் பண்ணிலாம் கிஷோரை கொலை பண்ணலை. நேத்து நைட், இவன் படிப்பு சம்பந்தமா ஆர்க்யு பண்ணிருக்காங்க. நீதான் பணத்தை எடுத்திருக்க, இனிமே உன் செலவுக்கு எதுவும் தரமாட்டேன்னு கிஷோர் சொல்லிருக்கார். அந்த கோவத்துல இவன் அவரை குத்திருக்கான். அப்பறம் இப்படி இம்பரவைஸ் செஞ்சிருக்கான். பட் அவன் என்ன மொரியார்ட்டியா, கொஞ்சமா ப்ரஷர் அப்பளை பண்ணினவுடனே ஒத்துக்கிட்டான்’

‘…’

‘என்னய்யா, நீ இன்னும் கன்வின்ஸ் ஆகலையா?’

‘அவன் மொரியார்ட்டி மாதிரி அதிபுத்திசாலி கிரிமினல் கிடையாதுன்னா பூட்டின ரூம்ல கொலை நடந்தா மாதிரி எப்படி செட்டப் பண்ண முடிஞ்சுது, இதுலயும் லாஜிக் இல்லையே ஸார்?’

‘ட்ரூத் இஸ் ஸ்ட்ரேஞ்சர் தான் பிக்க்ஷன்யா, அத ஒத்துக்கறல?’

‘எனக்கு அந்த டவுட் இல்லை ஸார்.’

‘பின்ன?’

‘இது பிக்க்ஷனாங்கறதே…’

புத்தக கண்காட்சி 2020 – பதாகை பதிப்பக வெளியீடுகள்

ஒரு நாவல், இரண்டு சிறுகதை தொகுப்புகள், ஒரு கதம்ப படைப்பு மற்றும் ஒரு கட்டுரை தொகுப்பு என  பதாகை யாவரும் பதிப்பகத்துடன் இணைந்து இந்த ஆண்டு புத்தக கண்காட்சிக்கு ஐந்து நூல்களை கொண்டு வருவதில் பெருமிதம் கொள்கிறது.

கத்திக்காரன்- ஸ்ரீதர் நாராயணன் – சிறுகதைகள். 

ஸ்ரீதர் நெடுநாட்களாக இணைய உலகில் இயங்கி வருபவர். பதாகையின் தோற்றுனர்களில் ஒருவர். அமெரிக்காவில் வசிக்கிறார்.பூர்வீகம் மதுரை. ‘கத்திக்காரன்’ முழுக்க அமெரிக்க பின்புலத்தில் உருவான கதைகள். ‘வானவில்’ அமெரிக்க இந்திய  பதின்மரின் வாழ்வை பற்றி நுண்ணிய சித்திரத்தை அளிப்பது. பியாரி பாபு ஹோரஸ் அலெக்சாண்டர் பற்றிய நினைவுகளை சொல்லும் கதை. ஸ்ரீதரின் கதைகூறும் முறை பிசிறற்ற தெள்ளிய முறை என சொல்லலாம். இரா.முருகன் ஒரு நல்ல முன்னுரையை அளித்திருக்கிறார்.இந்த ஆண்டு ஸ்ரீதரின் தொகுப்பு நன்கு கவனிக்கப்படும் என்று நம்புகிறேன்.

ஒளி – சுசித்ரா – சிறுகதைகள்

சுசித்ரா, சுவிட்சர்லாந்தில் வசிப்பவர். உயிரியல் துறையில் ஆய்வு செய்து வருகிறார். இவரும் மதுரையை பூர்வீகமாக கொண்டவர். ஆங்கிலத்தில் வலுவான வாசிப்புடையவர். அண்மையில் சொல்வனம் இணைய இதழில் வெளிவந்த அவருடைய ‘ஒளி’ முன்னோடி எழுத்தாளர்கள் பலரால் கவனிக்கப்பட்டு பாராட்டப்பட்டது. தொகுதியில் வெளிவந்துள்ள ‘தேள்’ ஒரு நல்ல டிஸ்டோபிய கதை. இரண்டு அறிவியல்புனைவுகளும் வாழ்க்கையின் அடிப்படை வினாக்கள் மீது கட்டி எழுப்பப்பட்டவை. ‘ஹைட்ரா’ எனக்கு பிடித்த கதை. இந்த ஆண்டு மிகவும் பேசப்படும் தொகுதிகளில் ஒன்றாக இது இருக்கும் என நம்புகிறேன். படைப்பூக்கம் கொண்ட எழுத்து. வருங்காலத்தில் முக்கிய எழுத்தாளராக அறியப்படுவார்.

வீடும் வெளியும் – அனுகிரஹா – கதம்ப படைப்பு

அனுகிரஹா  சொல்வனம்  மற்றும் பதாகை ஆசிரியர் குழுவில் இருப்பவர். சேலத்தை பூர்வீகமாக கொண்டவர். பெங்களூரில் வசிக்கிறார். அவருடைய ‘வீடும் வெளியும்’ நூலை படைப்பு கதம்பம் என்றே சொல்ல வேண்டும். தமிழுக்கு இப்படியான வடிவம் முன்மாதிரி அற்றது என எண்ணுகிறேன். நான்கு தலைப்புகளில் கவிதைகள், சிறுகதைகள் மற்றும் அவரே வரைந்த ஓவியங்கள் என படைப்பின் எல்லா பரிணாமங்களும் கொண்ட நூல். அனுவின் கவிதைகள் மிக முக்கியமானவை. புதிய கோணங்களை திறப்பவை. அவை இவ்வாண்டு பேசப்படும் என்று நம்புகிறேன்.

இயர் ஜீரோ – காலத்துகள் – நாவல்

‘காலத்துகள்’ பதாகை வழி உருவாகி வந்த எழுத்தாளர். அவருடைய சிறுகதை தொகுப்பும் அடுத்து வர இருக்கிறது. ‘இயர் ஜீரோ’ செங்கல்பட்டில் தொண்ணூறுகளின் மத்தியில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி அடைந்த ஒரு மாணவனின் கதை. நினைவுகளின் ஊடாக ஒரு தெறிப்பை காலத்துகள் இந்நாவலில் நிகழ்த்துகிறார். ஒரு தலைமுறையே அவருடைய கதையோடு தங்கள் நினைவுகளை பொருத்திப் பார்க்க முடியும். ஆத்மார்த்தமாக தன்னை கண்டடையும் நோக்கில், தன நினைவுகளை கிளறி எழுத்தாக்கும்போது அதன் நேர்மையின் ஆற்றலால் அப்படைப்பு நம்மை வசீகரிக்கிறது. தமிழில் வந்துள்ள சிறந்த ‘coming off age’ வகையிலான நாவல்களில் ஒன்று காலத்துகளின் ‘இயர் ஜீரோவை’ சொல்லலாம்.

பாண்டியாட்டம் – நம்பி கிருஷ்ணன் – மேலை இலக்கிய கட்டுரைகள்

நம்பி கிருஷ்ணன், அமெரிக்காவில் வசிக்கிறார். சொல்வனத்தில் தொடர்ச்சியாக உலக இலக்கியங்களை அறிமுகப்படுத்தி கட்டுரைகளை எழுதி வருகிறார். அரூ அறிவியல் புனைவு போட்டியில் அவருடைய கடவுளும் கேண்டியும் மூன்றாவது பரிசு பெற்றது. அவர் எழுதிய Ecco homo எனக்கு பிடித்த காந்தி கதைகளில் ஒன்று. தமிழிலிருந்து ஆங்கிலத்தில் செறிவான மொழியாக்கங்களை செய்திருக்கிறார். தமிழில் அவர் அளவுக்கு அயல் இலக்கிய வாசிப்பு உரியவர்கள் மிகக் குறைவு என்பது என் கணிப்பு. ‘பாண்டியாட்டம்’ உண்மையில் அப்படி பிரதிகளின் மீது அவர் தாவித்தாவி செல்லும் கட்டுரைகளின் தொகுப்புதான். பெருமைக்குரிய மிக முக்கியமான அறிமுகம் என நம்பியின் இந்த கட்டுரை நூலை கருதுகிறேன். ஓவியர் ஜீவானந்தத்தின் கோட்டுச் சித்திரங்களோடு நூல் தயாராகிக் கொண்டிருக்கிறது, கண்காட்சி முடிவதற்குள் வந்துவிடும்  என நம்புகிறேன்.

பதாகை இணைய தளம் தொடர்ந்து செயல்பட காரணமாக இருக்கும் வாசகர்கள், எழுத்தாளர்கள் அனைவருக்கும் நன்றி. பதிப்பகமாக மலர்ந்திருக்கும் பதாகையையும் ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

முந்தைய ஆண்டு பதாகை- யாவரும் கூட்டாக வெளியிட்ட

1. பாகேஸ்ரீ- எஸ்.சுரேஷ்- சிறுகதைகள்

2. வெளிச்சமும் வெயிலும் – சிவா கிருஷ்ணமூர்த்தி – – சிறுகதைகள்

3. வளரொளி- நேர்காணல்கள், மதிப்புரைகள்- சுனில் கிருஷ்ணன்

ஆகியவையும் விற்பனைக்கு உள்ளன.

இந்த நூல்கள் புத்தக கண்காட்சியில் யாவரும் அரங்கில் (189 & 190) கிடைக்கும். ஆன்லைனில் பெற http://www.be4books.com or Whatsapp no.9042461472யை தொடர்புக் கொள்ளலாம்.