காலத்துகள்
போர்ஹெஸ் போல் நிலைக் கண்ணாடிகள் சாட்சியிருக்க என் வயது அதிகரிக்கவில்லை. பதின் பருவத்தில் ஆரம்பித்து, முப்பதுகளின் மத்தி வரை கண்ணாடி முன் எல்லோரையும் போல் நேரம் செலவழித்ததுண்டு, அவ்வளவே. செங்கல்பட்டில் வாழ்ந்த இருபது வருடங்களும் வீட்டிற்கே பொதுவாக இருந்த ஒரு கண்ணாடிதான். பின் கிழக்கு தாம்பரத்திற்கு வந்த போது என் அறைக்கு என்று தனியாக புதிய கண்ணாடி வாங்கி அதையே புதுச்சேரிக்கு குடி பெயர்ந்த பின்னும் உபயோகித்து வருகிறேன். ஆக, கிட்டத்தட்ட நாற்பது வருடங்களில் இரு கண்ணாடிகள்.
சவரம் செய்தபின், தலையிலும் முகத்திலும் அதிகம் தென்பட ஆரம்பித்திருக்கும் வெண்மை குறித்து யோசிக்க ஆரம்பித்தவன், முப்பதுகளிலேயே ஏன் கண்ணாடி முன் அதிக நேரம் செலவிடுவதை நிறுத்தேன் என்று யோசிக்க ஆரம்பித்து, பின் நாற்பதுக்கு பதில், முப்பத்தியந்திலேயே ‘ஒப்பனைகள் கலைந்து’, ‘அன்பின் பதட்டம்’ என் மேல் இறங்கி விட்டதோ என்று பயணித்து, போர்ஹெஸின் கண்ணாடிகள் குறித்து விசாரத்தில் இறங்கினேன். ஏன் இத்தகைய இலக்கிய/ இருத்தலியல்/ வாழ்வியல் விசாரத்தில் இறங்கினேன், என்று மற்றொரு விசாரத்தில் அடுத்து இறங்க முற்பட …..
‘ரீஸன்ட்டா போர்ஹெஸ் வாசிச்சியா’. முற்றுப்புள்ளியின் அறைக்குள் நுழைந்த என்னிடம் அவர் கேட்டார். இரண்டு நாட்களாக இதற்கு மேல் தொடர முடியாமல், பெரியவர் முற்றுப்புள்ளியிடம் இது குறித்து பேசலாம் என்று எப்போதும் போல் முடிவு செய்து, அவருக்கு நான் எழுதியவரை அனுப்பி, சந்திக்க வருகிறேன் என்று கூறியிருந்தேன்.
‘எப்படி ஸார்..’
‘பர்ஸ்ட் வர்ட்டே அவர் பேர். ஸோ அவரை திருப்பி படிச்சிட்டிருக்கேன்னு கெஸ் பண்ண முடியாதான்ன, இதுக்கு ஷெர்லாக் வரணுமா’ என்றவர் தொடர்ந்து
‘உனக்கு இந்த பெடிஷ் ரொம்ப அதிகமா இருக்கு’ என்று கூறினார்.
‘எத ஸார் சொல்றீங்க’
‘யார படிச்சாலும், அவங்க பெயரை உன் ரைட்டிங்ல இன்க்லூட் பண்ண வேண்டியது. பொருந்துதா இல்லையானு யோசிக்கறதே கிடையாது’
‘இங்க பிட் ஆகுதே ஸார். போர்ஹெஸ் மெட்டா-பிக்க்ஷன் நிறைய எழுதினார், இந்த கதையும் அதே மாதிரி ..’
‘ஸோ, இந்த ரெண்டு பாராக்ராப்பை நீ பிக்க்ஷன்னு நம்பற’
‘ஆரம்பம் தான ஸார்.’
‘ஒண்ணுமே இல்லையேயா. ஷேவ் பண்றான், வழக்கம் போல செங்கல்பட்டு புராணம், நரைச்ச முடி, தேவதச்சன் கவிதையை வேற உள்ள கொண்டு வந்திருக்க. வாட் ஆர் யூ ட்ரையிங்?’
‘மிர்ரர்ஸ் வெச்சு கதை ஸார். டைட்டில், கண்ணாடிக்குள் இருப்பவன். மிர்ரர்லேந்து வேற முகம் கதைசொல்லியை எட்டிப் பார்க்குது, பேசுது, அப்பறம் இந்த கதைசொல்லி, கண்ணாடிக்குள்ள போயிடறான், அந்த முகம் வெளிய வருது. கதைசொல்லிக்கு கண்ணாடிக்குள் கிடைக்கும் அனுபவங்கள், இப்படி கதையை கொண்டு போகலாம்னு நினைக்கறேன் ஸார். பட் சரியா வருமான்னு தெரியல’
‘..’
‘ஸார்’
தலையசைத்தார்.
‘..’
‘நீ ஒரு டிபிகல், ‘பேசும் போது நல்லா பேசு, எழுதும் போது கோட்டை விட்டுடு’ கேஸ்யா. உன் ஐடியா ஓரளவுக்கு ஒகே, பட் உன்னால அதை எழுத்துல கொண்டு வர முடியும்னு எனக்கு தோணலை’
‘ஏன் ஸார்’
‘கண்ணாடிக்குள்ள போயிட்டான்னா, அதை வெச்சு பிலாசபி, மெட்டா-பிஸிக்ஸ் எல்லாம் கதைல வரலாம். ஸ்டோரிக்கு டெப்த், இன்டன்ஸிடி கிடைக்கும், அதே நேரம் மூளையையும், மனசையும் ஸ்டிமுலேட் பண்ணவும் முடியும். பட், போர்ஹெஸ் ஏற்கனவே எழுதியதை மாதிரியே இருக்கவும் கூடாது, உன்னுடைய தனித்துவம் தெரியணும். கேன் யூ டூ இட்’?
‘..’
மீண்டுமொருமுறை நான் எழுதியிருந்ததை படித்த முற்றுப்புள்ளி, ‘பர்ஸ்ட் டைம்மே தோணிச்சு, அதான் இப்ப திருப்பி படிச்சேன். இதே கதையை வேறெங்கேயோ நீயே எழுதியிருக்கல’ என்று கேட்டார்.
கிழத்திற்கு அசாத்திய ஞாபக சக்தி. ஆறேழே வருடங்களுக்கு முன் நான் எழுத ஆரம்பித்த போது செய்த குறுங்கதை முயற்சி தான் இப்போது நான் எழுதிக் கொண்டிருக்கும் புனைவு. நல்ல கரு, அதை இன்னும் விரிவாக எழுதலாம் என்ற எண்ணம். பெரியவர் அந்தச் சிறிய புனைவை ஞாபகம் வைத்திருக்க மாட்டார் என்று எண்ணியது தவறு.
‘ஆமா ஸார். நண்பர் தன் சைட்ல வெளியிட்டார்’
‘இப்ப எதுக்கு பழைய குப்பையை கிளர்ற’
கிழத்துக்கு நக்கல் அதிகம்.
‘எழுத ஆரம்பிச்ச டைம்ல வந்த ஐடியா ஸார், அப்ப ப்ளாஷ் பிக்க்ஷன் மாதிரி தான் எழுத முடிஞ்சுது. வேஸ்ட் பண்ணிட்டேன்னு தோணுது, அதான் இப்ப அதை இன்னும் நல்லா ..’
‘ஸோ, எழுத ஆரம்பிச்சதிலேந்து இப்ப நீ இம்ப்ரூவ் ஆயிட்டேன்னு நினைக்கற’
‘..’
‘ஒகே, தப்பித் தவறி இது பப்ளிஷ் ஆகுதுன்னு வெச்சுப்போம், உன் ப்ரெண்ட் தப்பா எடுத்துக்க மாட்டாரா’
‘இல்ல ஸார். அவர் எப்பவுமே என்னை ஊக்கப் படுத்துவார், ப்ளஸ் இந்த முறை மாற்றி எழுதப் போறேனே. தலைப்பையும் மாத்திட்டேன்’
மீண்டும் கிழத்தின் தலையசைப்பு.
‘ஆனா லிட்ரரி எதிக்ஸ் பிரச்சனை வருமோன்னு ..’
‘நிறுத்துயா…அந்தக் கதையை இங்க கொண்டு வந்துடாத.. இம்சையா உன்னோட, நாய் எலும்புத்துண்ட கடிச்சிட்டே இருக்கற மாதிரி, ஒரே கதைய திருப்பி திருப்பி…’
‘..’
‘அந்த ப்ரெண்ட்ட சொல்லணும். அன்னிக்கு இந்த குறுங்கதைய வெளியிடாம இருந்திருந்தா நீ நாவல், தொகுப்புனு போயிருக்க மாட்ட..’
பெரியவர் முணுமுணுத்தது என் காதில் விழுந்ததாக நான் காட்டிக் கொள்ளவில்லை. விமர்சனங்களை, அவை தனி மனித தாக்குதலாக இருந்தாலும், கோபப்படாமல் எதிர்கொள்வதே இலக்கியவாதியின் பண்பு என்பது என் எண்ணம். தவிர கிழத்திடம் எனக்கு இந்த புனைவின் பொருட்டு ஒரு காரியம் ஆகவேண்டும்.
‘வேற எப்படி ஸார் இதை கொண்டுட்டுப் போகலாம், அத பத்தி உங்க கிட்ட டிஸ்கஸ் பண்ணலாம்னு தான் வந்தேன்’
‘உனக்கு சிறுகதைலாம் வராத விஷயம், இனிமே உனக்கு அந்த சூட்சமம் புரிய வாய்ப்பில்லை. பேசாம எப்பவும் போல கதை எழுதிய கதை பாணில குறுங்கதையா மாத்திடலாம். அது தான் உனக்கு சரி வரும்’
‘அதை எப்படி ..’
‘ஒரு பாராக்ராப் இருந்தா கூட இந்தக் கதையை முடிச்சுடலாம்’
‘..’
‘ஏதாவது சஜெஸ்ஷென்ஸ் தர முடியுமா ஸார்’
‘…’
எத்தனை நேரம் முற்றுப்புள்ளி அமைதியாக இருந்தார் என்று என்னால் சொல்ல முடியாது. ‘சில நிமிடங்கள் அமைதி’ என்று புனைவுகளில் வருவது எனக்கு நம்ப இயலாத ஒன்றாக உள்ளது, இருவர் மட்டுமே உள்ள இடத்தில், சில, பல நிமிடங்கள் பேசாமல் இருப்பார்களா என்ன? ‘சில நொடிகள் மௌனம்’ என்று சொல்வது மிகவும் குறைவான காலகட்டமாக தோன்றுகிறது. ஒரு நிமிடத்திற்கு குறைவாக, முற்றுப்புள்ளி சிந்தித்திருப்பார் என்று மட்டும் என்னால் கூற முடியும். தன் கை விரல்களை பார்த்துக் கொண்டிருந்தவர் நிமிர்ந்து
‘ஓகே, இப்படி பினிஷ் பண்ணிடலாம்’ என்று கூறினார்.
‘சும்மா சும்மா நீ அப்பப்ப காத்து வாக்குல கேட்ட வார்த்தைகளை யூஸ் பண்ணாத, அப்பறம் போர்ஹெஸ்ஸோட புலியை ஏவி விட்டுடுவேன். ஒரு வேளை அது சிறுத்தையோ?- சரி ஏதோ ஒரு மிருகம், அதை விடு. உன்ன பத்தியே நினைச்சுக்கிட்டு இவ்வளவு புலம்பறியே, உன் மூஞ்சியையே இத்தன வருஷம் பாத்திட்டிருக்கற என் நிலைமையை பத்தி ஒரு செகண்ட்டாவது யோசிச்சிருக்கியா? செல்பிஷ் ஃபெல்லோ உன்னைப் பாத்துப் பாத்தே என் ரசம் எல்லாம் தீர்ந்து போய், கிழடு தட்டிடுச்சு’ என்று பழிப்பு காட்டிவிட்டு நிலைக் கண்ணாடி முகத்தை திருப்பிக் கொண்டது.
குறிப்பு:
முற்றுப்புள்ளிக்கும் எனக்கும் இடையேயுள்ள உள்ள நட்பைக் குறித்து இங்கே விரிவாக அறிந்து கொள்ளலாம்.
.Interesting story line….