அம்மா

மாலதி சிவராமகிருஷ்ணன்

அம்மா தன்னுடைய ஐம்பத்திரண்டாம் வயதில் முதன்முதலாக பங்களூருக்கு வந்தாள். அம்மாவுக்கு கன்னடத்தில் தெரிந்த ஒரே வார்த்தை ‘சொப்பு’. கீரையைக் குறிக்கும் சொல் அது. அதைத் தானே எப்படி சாமர்த்தியமாக கண்டு பிடித்தாள் என்பதை அம்மா பெருமிதத்தோடு சொல்லுவாள். பல நாட்களாக சொப்பு சொப்பு என்று கூவிக்கொண்டு போகிறவள் என்னதான் விற்கிறாள் என்ற ஆவலாதி ஒரு நாள் யதேச்சையாக பக்கத்து வீட்டு மாமி சொப்பு விற்கிறவளை அழைத்து வாங்கும் பொழுது அந்த மர்ம முடிச்சு அவிழ்ந்தது, அம்மாவுக்கு பரம சந்தோஷம்.

தனக்குத் தெரிந்த ஒரே கன்னட வார்த்தையை உபயோகப்படுத்துகிற குஷிக்காகவே அம்மா அடிக்கடி என்னிடம் “சொப்பு வாங்கலாமாடி?” என்பாள்.

கையைத் தட்டி “ சொப்பு !” என்று அழைத்துவிட்டு இங்க வா என்பதாக சைகை செய்வாள்.

அவள் வந்தவுடன் “ சொப்பு என்ன விலை? தண்டு நன்னா இளசா இருக்கா?” என்று அம்மா செந்தமிழில் ஆரம்பிக்க அவள் தன் சோழிப் பற்களைக்காட்டிச் சிரித்தபடி “நீவே நோடி தொகள்ரி அம்மா” என்று சொல்ல அம்மா க்ளீன் போல்ட்..

” என்னடி சொல்றா இவ?”

அப்படிப்பட்ட அம்மா நாங்கள் இருந்த மாடி போர்ஷனின் குறுகிய வராந்தாவில் நின்றுகொண்டு எதையோ கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தாள்.

நான் “என்ன அம்மா?” என்றதும் வாயில் விரலை வைத்துப் பேசாதே என்று சமிக்ஞை கொடுத்து எதிர் திசையில் பார் என்பதாக கை காட்டினாள்.

அங்கே எதிரே இருந்த காலி மனையில் பங்களூரின் ஜுலை மாதத்து காலையின் இதமான இள வெயிலில் பக்கத்துப் பள்ளிக்கூடத்தின் பிள்ளைகள் காலை வணக்கத்திற்குக் குழுமியிருந்தனர். கர்னாடக மாநில கீதத்தை அந்தக் குழந்தைகள் அனைவரும் பாடிக்கொண்டிருந்தனர்.

“ஜய பாரத ஜனனீய தனுஜாதே,
ஜயஹே கர்னாடக மாதே”

ரொம்ப அற்புதமான பாட்டு. அருமையான ராகத்தில் அமைந்திருந்தது.

பாரத அன்னையின் மகளாகிய கர்னாடகத்தின் பெருமையைப் பேசுகிற பாடல். கபிலர் ,பதஞ்சலி முதலானவர்களால் புகழப்பட்ட, கர்னாடகம்.சங்கரர், ராமானுஜர், வித்யாரண்யர், பசவேஸ்வரர், மத்வர் முதலானவர்கள் வசித்த காடுகளை உடைய கர்னாடகம், ஹொய்சல , தைலபர்களால் ஆளப்பட்ட கர்னாடகம் என்பதாக அந்தப் பாடல் போய்க்கொண்டிருக்கும்.

அம்மாவுக்கு அந்தப் பாடல் ஒரு வரி கூடப் புரியவில்லை. ஆனால் கண்கள் மின்ன அந்தப் பாடல் முடியும் வரை ரசித்துக்கேட்டவள்“எவ்வளவு நல்ல பாட்டு இல்ல! ரொம்ப நன்னா இருக்கு” என்றாள். கிட்டத்தட்ட முன்னூறு குழந்தைகள் ஒரே குரலாக அந்தப்பாடலை அந்த இளங்காலை வேளையில் பாடும் போது உள்ளுக்குள் ஏதோ ஓரிடத்தை அது மென்மையாக தொட்டுப் புல்லரிக்க வைத்தது.
அன்றிலிருந்து என் வீட்டில் இருந்த நாட்கள் வரைக்கும் அம்மா அந்தப் பாடலை ஒரு நாள் கூடத் தவற விட்டதில்லை.

அம்மா தன்னுடைய சின்ன வயதில் தன்னுடைய தாத்தா வீட்டில் , நாகப்பட்டினத்தில் தன் அத்தைகளுடன் வளர்ந்தாள்.அம்மா வசித்த குக்கிராமத்தை விட நாகப்பட்டினம் அந்த நாட்களிலேயே கொஞ்சம் டவுன் என்று கருதும்படியாக இருந்தது. டவுனில் கிடைக்கக்கூடிய கல்வி மற்றும் கலைக்கான வசதி வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு அம்மா அங்கு இருந்தாள் என்று நினைக்கிறேன். தவிர அம்மாவின் கடைசி இரண்டு அத்தைகள் அம்மாவைக்காட்டிலும் நாலைந்து வருடங்களே மூத்தவர்கள் என்பதால் தனிக்குழந்தையாக இருந்த அம்மாவுக்கு சஹோதரிகளாவும் , தனிமையைப் போக்குகிறவர்களாகவும் இருந்திருக்கிறார்கள் என்றும் ஊகிக்கிறேன் .

தன் நாகப்பட்டின நாட்களைப்பற்றிக் குறிப்பிடும்பொழுது அம்மா முக்கியமாக ஒரு விஷயத்தைக் குறிப்பிடுவாள். அது அம்மாவின் சங்கீதப் பயிற்சி. சங்கீதத்திற்கும் சமையலுக்கும் பேர்போன அந்த காலத்து தஞ்சாவூர் ஜில்லாவாயிற்றே! எனவே அந்த வழக்கப்படி அம்மாவுக்கும் அவள் அத்தைகளுக்கும் சங்கீதம் கற்றுத் தந்தார்கள். அந்த காலத்தில் வானொலியில் சங்கீத கச்சேரிகள் அடிக்கடி வைப்பார்கள்.ரேடியோவைச் சுற்றிக் குழுமி இருந்து குடும்பத்தினர் கச்சேரிகளைக் கேட்பது ஒரு சடங்கு போலத் தவறாது நடை பெறும்.

பாடகர் பாட்டை ஆரம்பித்ததும் தாத்தா தன் வெண்கலக் குரலில் தன் பெண்களிடம் என்ன ராகம் என்று கேட்பது வழக்கம். தாத்தா அந்தக் காலத்தில் நாகப் பட்டினத்தில் பெரிய வக்கீலாக இருந்தவர். வீட்டிலும் அந்த கெத்து இருந்தது. குரலும் கொஞ்சம் அதட்டுகிற தோரணையிலேயே இருக்கும். அவர் வீட்டில் இருக்கிறார் என்றாலே எல்லாருக்கும் சிம்ம சொப்பனமாக இருக்கும் என்பாள் அம்மா.
அவர் எந்த கேள்வி கேட்டாலும் பயமாகவே இருக்கிற குழந்தைகளுக்கு சங்கீதத்தைப் பற்றிக் கேட்டதும் கொஞ்சம் ஜுரம் அடிக்கறது போலவே இருக்கும். குரலே எழும்பாது. திக்கித் திணறி ஒருத்தியை ஒருத்தி இடித்து நீ சொல்லு நீ சொல்லு என்ற பாவனையில் திண்டாட அவர் “ம்….” என்று உறுமுவார். முக்காலே மூணு வீசம் தடவை குழந்தைகள் தரும் பதில் தப்பாக இருக்கும். அதுவும் அவர் யாரைக்கேட்கிறாரோ அவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.. கடைசியில் அம்மாவைக் கேட்பார். ஒரு முறை கூடத் தவறாமல் அம்மாவின் விடை சரியாகவே இருக்கும். அதற்கு போனஸ் மாதிரி அடுத்த முறை பாடகர் ஆலாபனையை ஆரம்பித்த உடனேயே கேட்பார். அம்மாவின் விடை அடுத்த நொடியே! அம்மாவின் தாத்தா சொல்லுவாராம், “உங்களுக்கெல்லாம் பாட்டு சொல்லிக் கொடுத்து என்ன பிரயோஜனம் ? அவளைப் பாரு, ஆலாபனை ஆரமிச்ச உடனே டக் டக்னு கரெக்டா சொல்றா, நீங்களும் இருக்கேளே “

அனேகமாக அம்மாவுக்குக் கிடைத்த மிக சொற்பமான பாராட்டுதல்களில் அது முக்கியமானது, அதுவும் கண்டிப்பும் கறாருமான தாத்தாவிடமிருந்து என்பதால் அம்மா அதை வெகு நாட்கள் வரை, பெட்டியில் பாதுகாத்து வைத்திருக்கிற அபூர்வமான பட்டுப் புடவையைத் தொட்டுத் தொட்டுப் பார்த்து மகிழ்வது போல, பொக்கிஷமாக வைத்துக்கொண்டிருந்தாள்.

அம்மாவைப் பெண் பார்க்க அப்பா தன் உறவினர் பட்டாளம் சகிதம் வந்த பொழுது, அப்பா பக்கத்து உறவினர் பெண்மணி ஒருவர் “பொண்ணுக்குப் பாடத் தெரியுமா? தெரிஞ்சா ஒரு பாட்டு சொல்லு குழந்தை!” என்றாளாம்.

உடனே கோரஸாக பல குரல்கள் “பரவாயில்லை! பரவாயில்லை!, அதெல்லாம் சிரமப் படுத்த வேண்டாம் “ ஏக காலத்தில் பாடச் சொன்ன மாமியைப் பார்த்து பல கண் உருட்டல்களும் , முறைத்தல்களும். அம்மாவின் பெரிய அத்தை அதைக் கவனித்துவிட்டு அவர்கள் போன பிறகு சொல்லி இடி இடியென்று சிரித்தாளாம்.

அம்மா அப்பாவைப் பார்த்துக்கொண்டே விளையாட்டாக சொல்லுவாள், “அப்பவே நா முழிச்சுண்டிருக்கணும், தப்பு பண்ணிட்டேன்”

ஆனால் அப்பா ஒன்றும் ஔரங்கசீப் அல்ல. அவருக்கு எம். கே. தியாகராஜபாகவதர் , டி. ஆர். மஹாலிங்கம் பாடல்களென்றால் உயிர். ஞானக்கண் ஒன்று இருந்திடும் போதினிலே, மன்மத லீலையை வென்றார் உண்டோ, இந்தப் பாடல்களை கண்ணை மூடிக்கொண்டு ரசித்துப் பாடுவார். ஓரளவு நன்றாகவே பாடுவார்.

அதுவும் ,’ மன்மத லீலையை…….’ பாட்டின் இடையில் வரும் “ரம்பா” என்கிற அழைப்பை எம்.கே.டி குரலில் காதலாக, “ஸ்வாமி!” என்கிற பதிலை டி. ஆர்.ராஜகுமாரி குரலில் குழைவாக சொல்லுவார்.
நின் மதி வதனமும் நீள் விழியும் கண்டு என்னும் இடத்தில் அந்த ணகரத்தை ழ் என்கிற ஒலி வருகிற மாதிரி ‘கழ்ண்டு’ என்று எம்.கே.டி பாடியிருப்பார், அது போலவே அப்பாவும் பாடுவார். அப்புறம் டி. ஆர். மஹாலிங்கத்தின் ”சம்போ மஹாதே….. வா, சாம்ப சதா …. ஆ சிவா…” பாடலைப் பாடும் பொழுது மஹாலிங்கத்தின் தொண்டையில் “மஹா. தே……..வா” என்கிற இடத்தில் உருண்ட ரவையில் அப்பாவின் தொண்டையில் நிச்சயம் பாதியாவது உருளும். ஆனால் அப்பாவுடைய ஆல் டைம் ஃபேவரைட் மஹாலிங்கத்தின் “காயாத கானகத்தே…” பாடல்தான்.

அப்படி இருந்தும் அவரோ அவர் வீட்டினர் யாருமோ அம்மாவின் பாடலை அவ்வளவாக ஏன் ஊக்குவிக்கவில்லை என சில சமயம் யோசிப்பேன்.

அப்புறம் கேட்டேன் “நீ பொண்ணு பாக்கும் போது பாடினயாம்மா? என்ன பாட்டு?”
“ம்.. பாடினேன்!”

“என்ன பாட்டு?”

“சீதம்ம மாயம்ம… பாட்டு பாடினேன்”

“ஏன் அந்த பாட்டு செலக்ட் பண்ணினே?”

“அது வசந்தா ராக பாட்டு! அதான்” என்றாள்.

அம்மா பெயர் வசந்தா. அதை அப்பா வீட்டுப் பேர் யாரும் கவனிக்கவில்லை என்பது எனக்கு ரொம்ப நாளைக்கு வருத்தமாக இருந்தது.

வி.சி. பி என்று அழைக்கப்பட்ட வீடியோ காசட் ப்ளேயர் புதிதாக வந்திருந்த காலகட்டம் அது. வீடியோ காசட் என்பது ஒரு தடிமனான புஸ்தக சைஸில் பெரிதாக இருக்கும்.( அதைப் பார்த்திராத தலைமுறைக்காக இந்த விளக்கம்) எங்கள் வீட்டுக்கு அருகில் அந்த காசட்டுகளை வாடகைக்கு கொடுக்கிற ஒரு காசட் லைப்ரரி இருந்தது. அந்த கடையை அப்படித்தான் அந்த காலத்தில் அழைத்தார்கள். என்னுடைய பத்து வயது பையன் போய் அந்த காசட்டுகளை எடுத்து வருவான். அந்த கடைக்காரர், அவனுக்கு உதவும் முகமாக, தான் நல்ல படங்கள் என்று கருதுகிற படங்களைத் தானே தேர்ந்தெடுத்துத் தருவார்.

அவர் தேர்ந்தெடுத்து தந்த பட வரிசையைக் கேட்டால் யாராயிருந்தாலும் அசந்து போய்விடுவார்கள். தேன் நிலவு, நீலகிரி எஃஸ்பிரஸ், குலேபகாவலி, வா அருகில் வா, சீறும் சிங்கங்கள், அமிதாப் பச்சன் நடித்த அஜூபா, ஹிட்ச்காக்கின் சைகோ……. அப்புறம் எஸ்.வி சேகரின் வண்ணக் கோலங்கள்……… இப்படி எந்த விதத்திலும் ஒருங்கிணைக்க முடியாத வினோதமான கலந்துகட்டியாக படங்களை அவர் தேர்ந்தெடுத்துத் தருவார். தன் கடைக்கு வருகிற எல்லா வாடிக்கையாளர்களின் ரசனையின் மீப்பெரு பொதுக் காரணியை வைத்து இந்தத் தேர்வை அவர் செய்தார் என்று நினைக்கிறேன்.

ஒருமுறை என் பையன் “ இந்த தடவை அவர் ஆட்டுக்கல்லுனு ஒரு படம் தந்தார்மா” என்றான்.

“என்ன? ஆட்டுக்கல்லுன்னு ஒரு படமா?, வினோதமா இருக்கே , கேள்விப்பட்டதில்லையே “ என்றேன்.

வண்ணதாசனின் ஒரு கதை நினைவுக்கு வந்தது. வாழ்க்கையில் ஏழ்மை தசையில் இருக்கிற ஒரு குடும்பத்தைப் பற்றிய கதையில் அந்த வீட்டுப் பெண் ஓட்டல்களுக்கு இட்லி, தோசை ,வடை இவற்றை அரைத்து தருகிற வேலை செய்வாள். அவர்கள் வீட்டில் காலையிலிருந்து இரவு வரை ஆட்டுக்கல் அரைக்கற கட கட சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். வண்ணதாசன் எழுதுவார்,”அந்த பெண்ணை கண்ணுக்குத் தெரியாத சங்கிலி ஒன்றால் அந்த ஆட்டுக்கல்லோடு கட்டியிருக்கிறார்களோ என்று தோன்றும்” என்று.

அந்த மாதிரியான கதையாக இருக்குமோ என்று யோசித்துக்கொண்டிருக்கையில், “இல்லம்மா! தப்பா சொல்லிட்டேன். அது பேரு ‘அந்த ஏழு ஆட்டுக்கல்லு’. ரொம்ப நல்லா இருக்கும்னு அந்த கடைக்கார அங்கிள் சொன்னார்மா” என்றான்.

ஏழு பெண்கள் வரிசையாக உட்கார்ந்து ஆட்டுக்கல்லில் அரைக்கிற சித்திரம் கொஞ்சம் விசித்ரமாகத் தோன்றியது.
பையில் இருந்து எடுத்தான் . அது ஒய்.ஜி. மஹேந்திரனின் “அந்த ஏழு ஆட்கள்” என்கிற மேடை நாடகத்தின் ஒளிப்பதிவு. கன்னடக் காரரான அந்தக் கடைக்காரர், ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த தலைப்பை அப்படிப் படித்திருக்கிறார்.

அம்மாவும் இந்தப் படங்களில் சாமி படங்களை மட்டும் எங்களோடு உட்கார்ந்து பார்ப்பாள். அம்மா ஊருக்குப் போவதற்கு முதல் வாரம் . என் பையன் இரண்டு படங்கள் எடுத்துக்கொண்டு வந்திருந்தான்.
த்ரிதேவ் என்ற படம். நஸ்ருதீன் ஷா வணிகப் பட ஹீரோவாக தன்னைக் காட்டிக்கொள்ள முயற்சித்த படம். அப்பறம் “ஹம் தோனோ” என்கிற தேவ் ஆனந்த் நடித்த படம் .

பக்கத்து அறையில் உட்கார்ந்து கொண்டிருந்த அம்மா “ஹம் தோனோ” படப் பாடல்களின் போது மட்டும் சட்டென்று எழுந்து ஹாலுக்கு வந்தாள்.

“இந்த படத்தோட பாட்டெல்லாம் ரொம்ப நன்னா இருக்கே! இந்த பாட்டை இன்னொரு தடவைப் போட முடியுமா?”என்றாள். அந்த பாடல் “மே ஜிந்தகி கா சாத் நிபாதா.. சலா கயா” அதுவும் “மனானா ஃபுஸூலுகா.. என்கிற வரியை மூன்று முறை இழைந்து இழைந்து பாடியதை மிகவும் ரசித்துக்
கேட்டாள்.

அந்தப் பாடலும் காட்சியும் உண்மையிலேயே அவ்வளவு அழகாக இருக்கும். இளங்குருத்து முகத்தில் இளமை பாலாக வழிகிற தேவ் ஆனந்த், உதட்டின் நுனியில் மிக லேசாகத் தொற்றிக்கொண்டிருக்கிற சிகரெட்டும்,இளமைக்கே உரிய, உல்லாசமும், சுதந்திரமும், அக்கறையின்மையும் கலந்த ஒரு நடையுமாக. அந்தப் பாடல் முழுக்க ஓர் இனிய இளமையான அசைவு அவர் உடலில் தொடந்துகொண்டே இருக்கும்.

கர்னாடக சங்கீதம் மட்டுமே கேட்டு வளர்ந்த அம்மாவுக்கு அந்தப் பாடல் பிடித்தது எனக்கு ஆச்சரியமென்றால்,. த்ரிதேவ் படப் பாடலான “கஸர்னே கியா ஹை இஷாரா”. பாடல் அம்மாவுக்குப் பிடித்தது என்பது என்னுடைய விவரணைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது . ஏனென்றால் ஹம் தோனோ பாடலில் முகமது ரஃபியின் குரலின் இனிமையும் , பட்டுப்போன்ற மென்மையும், அதன் நெஞ்சைத் தொட்டு அசைக்கிற ராகமும் அம்மாவை இளக்கியதையாவது புரிந்துகொள்ள முடிந்தது. “கஸர்னே கியா ஹை இஷாரா”. பாடல் மூன்று கதாநாயகிகளும் வில்லன்களின் கொட்டாரத்தில் ஆடிப்பாடுகிற மாதிரியான கொஞ்சம் களேபரமான பாடல் அது. அவர்களின் உடையும் கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும்.

அதெல்லாவற்றையும் தாண்டி அந்தப் பாடலில் இருக்கிற இசையின் கூறை அம்மாவினால் உணர முடிந்தது, ரசிக்க முடிந்தது என்பதை நினைக்க நினைக்க ஏதோ ஒன்று புரிபடுகிற மாதிரியும் , விடுபடுகிற மாதிரியும் இருந்தது. ஏதோ ஒரு சின்ன கிராமத்தில்கட்டுபெட்டியான குடும்ப சூழலில் வளர்ந்து, அவ்வளவாக வெளியுலகையே பார்க்காத அம்மாவிடம் இருந்த ஒரு திறந்த மனப்பான்மையுடன் விஷயங்களை அணுகக்கூடிய அசாதாரணத் தன்மையை அப்பா மட்டுமல்ல, நாங்களும் புரிந்து கொள்ளவில்லை என்பதை நினைக்க துக்கமாக இருந்தது.

அம்மா ஊருக்குப்போனவுடன் இன்னொன்றும் தோன்றியது,”அடடா! அம்மாவைப் பாடச் சொல்லிக் கேட்க வேண்டுமென்று எனக்கு எப்பவுமே ஒரு முறை கூடத் தோன்றவில்லையே”. அதற்கான சந்தர்ப்பம் , அப்புறம் வாய்க்கவில்லை.

 

 

One comment

  1. நாம் தினசரி வாழ்வில், நடக்க கூடிய சாதரணமாக நடக்கும் விஷயங்கள். ஆசிரியர் மாலதி , எத்தனை நுட்பமாக சுற்றி நடப்பவைகளை கூர்ந்து கவனித்திருக்கிறார்; அதை மிக இலகுவாக தன் கதாபாத்திரங்களோடு இணைத்து விடுகிறார்……
    மீண்டும் மீண்டும் படிக்கும்படியாக சுவாரசியமாகவே இருந்தது….
    நம் பக்கத்து வீட்டில் நடப்பதை பார்ப்பது போன்ற உணர்வு. வாழ்த்துக்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.