ரிச்சர்ட் சிஸ்மாரின் (Richard Chizmar) ‘சேஸிங் த பூகிமேன்’ (Chasing the Boogeyman) – செமிகோலன்

ரிச்சர்ட் சிஸ்மாரின் (Richard Chizmar) Chasing the Boogeyman நூலில் நான்கு கொலைகள் நிகழ்கின்றன. ஆனால் இது ‘தொடர் கொலைகாரனை’ (serial killer) பற்றிய நூல் அல்ல. எண்பதுகளின் இறுதியில் தான் பிறந்து, வளர்ந்த சிறு நகரில் நடந்த இந்தக் கொலைகளைப் பற்றிய ஆவணப் பாணியில் ரிச்சர்ட் சொல்லப் போவதாக அவர் கூறுவதால், நேர்காணல்கள், குற்றம் நடந்த இடங்களின், பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படங்கள் போன்ற வடிவ யுத்திகள் நூலில் உள்ளதால்  இது ‘I’ll Be Gone in the Dark’ போல் உண்மை குற்ற (True Crime) நூலும் அல்ல. மெட்டா-பிக்க்ஷனும் அல்ல. சிறு நகரப் பின்னணியில் நிகழும் எண்ணற்ற திகில்/குற்றப் புனைவு நாவல்களின் ஒன்றோ, அந்த நிலவியல், அங்கு வசிக்கும் மக்களின் வாழ்வியல் விவரிக்கப் படுவதால் இது ‘பொது’ நாவலோ அல்ல. ரிச்சர்டின் பால்ய/இளமைக் காலத்தை பற்றி பேசுகிறது என்பதாலேயே இது ‘வெறும்’ நினைவுக் குறிப்பும் கூட அல்ல.

1988ஆம் ஆண்டின் கோடையில், இதழியல் பட்டப் படப்பை முடித்து சொந்த ஊரான எட்ஜ்வுட்டிற்கு ரிச்சர்ட் திரும்புவதற்கு சில நாட்களுக்கு முன், அவருடைய வீட்டிற்கு ஓரிரு தெருக்கள் தள்ளி ஒரு பதின் பருவப் பெண் கொல்லப்படுகிறாள். நெருங்கிய தொடர்பில்லையென்றாலும்,  கடையில், தெருவில் பார்த்தால் சிரித்து, ஓரிரு வார்த்தை பேசுவது மட்டுமின்றி, சிறு நகரத்தில் இருபது வருடங்கள் அருகருகே வசித்தால் உருவாகும் பரிச்சயம் அந்தப் பெண்ணின் குடும்பத்துடன் ரிச்சர்ட் மற்றும் அவர் பெற்றோருக்கு உள்ளது. அப்பெண்ணின் சகோதரன், ரிச்சர்டுடன் படித்தவன். துயர நிகழ்வுகள் எப்போதுமே அலைகழிப்பவை என்றாலும், அதனால் பாதிக்கப்பட்டவருடன் கொஞ்சமேனும் பரிச்சயம் இருந்தால் அதன் தாக்கம் இன்னும் அதிகம்.

இதழியல் படித்தவர் என்பதால் மட்டுமே இந்தக் கொடுங்கொலை ரிச்சர்ட்டை கவனத்தை ஈர்த்தது என்று சொல்ல முடியாது. ஏனெனில், ரிச்சர்ட்டின் லட்சியம், அவருடைய வார்த்தைகளிலேயே சொல்வதென்றால்

That’s right, I’m talking about the bane of every real journalist’s existence—the hippy-dippy, Peter Pan world of Make Believe: fiction.

But wait, it’s even worse than that. I’m talking about genre fiction. Crime, mystery, suspense, and that black sheep of them all: horror.

சரி, திகில் புனைவுகள் வாசிப்பதில்/எழுதுவதில் அதி ஆர்வம் கொண்டவர் என்பதால் மட்டுமே இந்தக் குற்றத்தை பற்றிய செய்திகளை சேகரிக்கத் தொடங்குகிறார் என்று சொல்ல முடியுமா? பரிச்சயமான குடும்பத்தில் நேரும் துயரம், இதழியில் பயிற்சி, திகில் ஆர்வம், இத்தகைய நிகழ்வுகளால் ஈர்க்கப்படும் மனித இயல்பு இவை எல்லாமும் சேர்ந்து தான் அவருடைய – அடுத்த சில மாதங்களுக்கான – செயல்களை வடிவமைத்தன என ஆரம்பித்திலேயே புரிய வருகிறது.

இத்தகையை புனைவுகளின் இரு போது அம்சங்களை உணரலாம். ஒன்று, தொடர் கொலைகளைப் புரிபவன், தான் எண்ணியதை துல்லியமாக நிறைவேற்றுபவனாக, காவல்துறையினரை முட்டாள்கள் போல் எண்ண வைப்பவனாக, மற்றவர்கள் நெருங்க முடியாத அதி மானுடனாக, அவனைக் குறித்த சித்திரம் உருவாவது. இறுதியில் அவன் பிடிபட்டாலும், இத்தகைய கோணம் உருவாவது -ஆசிரியர் அப்படி யோசித்திருக்காவிட்டாலும் – தவிர்க்க இயலாததாகி விடுகிறது. அடுத்தது, அவனுக்கு பலியானவர்கள், பிறசேர்க்கையாக, அவனுடைய தீய மேதமையை வாசகன் உணர மட்டுமே உதவுபவர்களாக மட்டுமே தங்கி விடும் அபாயமும் உள்ளது.

இந்த இரு அம்சங்களையும் முற்றிலும் தவிர்த்து விடும் ரிச்சர்ட், பலியாகும் நான்கு பெண்களை தன் கதையாடலின் மையத்தில் வைக்கிறார். அந்தப் பெண்களின் இயல்புகளை, கனவுகளை விரிவாக பதிவு செய்கிறார். தன் நெருங்கிய தோழியுடன் ஒரே கல்லூரியில் கால்நடை மருத்தவப் படிப்பு படித்து, ஐந்து வருடங்கள் வேலை செய்த பின், சொந்த க்ளினிக் தொடங்கும் கனவுடன் ஒருத்தி, சிறு வருடங்களுக்கு முன் போதை பழக்கம், வீட்டை விட்டு ஓடுதல் என்றிருந்த தன் வாழ்க்கையை முயற்சி செய்து சரிபடுத்தி, கல்லூரியில் சேர்வதை எதிர்நோக்கியிருந்த மற்றொருத்தி. பலியானவர்கள் மட்டுமா? கணவனை இழந்தப் பின் தனியாக இரு பெண்களை வளர்க்கும் தாய், தன் மூத்த மகளை இழக்கும் போது அனுபவிக்கும் வலி. இவர்களனைவரின் கனவுகளை சிதைத்தவனை தன்னிச்சையாக கூட வியக்க முடியாது இல்லையா.

ஆம், இதிலும், அடுத்து என்ன நடக்கும் என யூகிக்க வைக்கும், பதற்றப்படச் செய்யும் நிகழ்வுகள், கணங்கள் உள்ளன. ஆனால் அவை ஒரு சிறு நகரின், அதில் வசிப்பவர்களின், ரிச்சர்ட்டின் உணர்வுகளாக உள்ளனவேயன்றி வாசகன் கொலைகாரனை கண்டுபிடிக்க தன் மனதில் நிகழ்த்திக் கொண்டிருக்கும் ஆடுபுலியாட்டமாக இல்லை.  

ஒரு நிகழ்வு. ஓரிரவு ரிச்சர்ட் வீட்டு கழிவுகளை, தெருவின் குப்பைக் கூளத்தில் போட வெளியே வருகிறார். அங்கு வைத்த பின் திரும்ப எத்தினிப்பவருக்கு தன்னை யாரோ கவனித்துக் கொண்டிருப்பது போல் தோன்றுகிறது. எந்த வாகனமும் செல்லாத, சன்னமான தெரு விளக்குகளின் ஒளி மட்டுமே உள்ள இருள், அதனூடே உற்றுப் பார்க்கப் படுவது. ரிச்சர்டால் திரும்ப முடியவில்லை, இப்போது இருளில் ஒளிந்து கொண்டிருப்பவன் நினைத்தால் அருகில் வந்து என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். இப்படி எவ்வளவு நேரம் அசைவற்று இருந்தார் ரிச்சர்ட்? சில நொடிகளாக இருக்கலாம் அல்லது பல நிமிடங்களாக இருக்கக் கூடும். தெருவை கடக்கும் வாகனத்தின் முகப்பு விளக்கொளி அவரை மீட்கிறது. வீட்டிற்குள் ஓடிச் செல்கிறார். எந்த உயர் திகில், குற்றப் புனைவிலும் காணக் கூடிய ‘இருக்கையின் நுனியில் உட்கார வைக்கும்’ கணம் இது. ஆனால் இதனூடே நான் உணர்வது ரிச்சர்டின் பயத்தை மட்டுமல்ல, ஒட்டு மொத்த எட்ஜ்வுட்டின் மனநிலையையும் தான்.

‘இது உங்க சொந்த அனுபவமா’, ‘இது நிஜமாக நடந்ததா’ போன்ற கேள்விகளை க்ரிஸ்டியோ அல்லது வேறு எந்த குற்றப் புனைவு/திகில் எழுத்தாளரோ எதிர்கொண்டிருக்க வாய்ப்பு குறைப்பு. ஆனால் இவை ரிச்சர்டை நோக்கி கேட்கப் படும் வாய்ப்புள்ளது. இதற்கு நூலின் வடிவம் சார்ந்த கட்டமைப்பு -நேர்காணல்கள், புகைப்படங்கள் – மட்டும் காரணமல்ல. அவருடைய நினைவோடை பாணியும் இந்த சந்தேகத்தை எழுப்பக் கூடும். ஒருவர் தன் கடந்த காலத்தை பற்றி, தான் வளர்ந்த நிலவியல், வசித்த மக்கள் பற்றி எழுதினால், ‘என்ன நடந்ததோ’ அதை எப்போது அப்படியே அவர் பிரதி எடுக்கிறார் என்று புரிந்து கொள்ள வேண்டியதோ, ‘நடந்ததை எழுதுதல்’ என்ற, நாம் உருவாக்கியிருக்கும்  அரக்கனை/Boogeymanஐ தேட வேண்டுமென்றோ கட்டாயமில்லை.  உண்மையில் புனைவில் எந்தளவுக்கு உண்மையுள்ளது என்பதை, எந்தளவிற்கு வாசகனை உள்நுழைய அனுமதித்துள்ளார் என்பதை எழுத்தாளர் மட்டுமே அறிவார். இந்த நூலிலும், ரிச்சர்டின் பால்யத்தின் சில பகுதிகளை – பகுதிகளாக அவர் முன்வைப்பதை – நான் அறிகிறோம், நூலின் காலகட்டமான 1988ன் பதிவுகளும் – அவருடைய சிறுவயது நகரத்தில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மாற்றங்கள்- உள்ளன. இவை ‘நிஜத்தில்’ நடந்தவையா என்பது இங்கு அலசப்பட வேண்டியது அல்ல,   அந்த சில மாதங்களின் கொடுநிகழ்வுகளுக்கு, மனித முகத்தை அளிக்கின்றன என்பது தான் முக்கியம். கடந்த கால நிஜம், கடந்த கால புனைவு இரண்டிற்கும் இடையிலான இலக்கிய ஊசலாட்டமாக, அது இயங்கக் கூடிய, வெளிப்படக் கூடிய விதங்களைப் பற்றிய சிந்தனைகளாக இந்த நினைவுக் குறிப்பு யுத்தியை பார்க்கலாம்.

பலியாகும் பெண்கள், அவர்களின் குடும்பம் தவிர நாம் சந்திக்கும் முக்கியமான மனித முகங்கள்,நிருபராக வேலை பார்க்கும் ரிச்சர்டின் தோழி கார்லி, தொடர் கொலைகளை விசாரிக்க அனுப்பப்படும் காவல்துறை அதிகாரி ஹார்ப்பர், ரிச்சர்டின் பெற்றோர் ஆகியோர்.

கொலைகளை தடுக்க முடியாத இயலாமை, அது உருவாக்ககூடிய உளைச்சல், அதன் நீட்சியான மனச்சோர்வை ஒரு புறம் ஒதுக்கி வைத்து விசாரணை செய்து வந்த, இந்த நிகழ்வுகள் நின்று பல்லாண்டுகள் ஆன பின்பும், ஓய்வு பெரும் வரை அதை மனதிலிருந்து நீக்க முடியாத ஹார்ப்பர் ஒரு புறமென்றால், ‘கறுப்பின அதிகாரி தலைமையில் விசாரணை, மூன்று வெள்ளையினப் பெண்கள் கொலை, வேறென்ன எதிர்பார்க்க முடியும்’ என்று ஹார்ப்பரின் நிறத்தை வைத்து அவருடைய திறமையை, நேர்மையை முடிவு செய்யும் வெள்ளையின நகரவாசியொருவன் மற்றொரு புறம். எட்ஜ்வுட்டின் மற்றொரு முகத்தை காட்டும் நிகழ்வு.

கார்லி, ரிச்சர்ட் இருவரும்  கொலைகள் குறித்து தகவல்கள் திரட்டி, அதன் வழியாக ஏதேனும் கண்டறிய முடியுமா என்று முயற்சிக்கிறார்கள். ஆனால், காவல்துறை கோட்டை விட, தொழில்முறையில்லாத துப்பறியும் ஆசாமிகள் உண்மையை பிடிப்பது போல் எதுவும் நடப்பதில்லை. காவல்துறை அறியாத ஏதேனும் தடயம் இவர்களிடம் கிடைத்ததா என்று கூட உறுதியாக கூற முடியாது. ரிச்சர்ட் வீட்டிற்கு அடிக்கடி தொலைபேசி அழைப்பு விடுத்து, எதுவும் பேசாமல், பலமாக மூச்சை மட்டும் விட்டு வைத்து விடுபவன் தான் கொலைகாரனா அல்லது ரிச்சர்டின் ஆர்வத்தை அறிந்து அவனை பயமுறுத்த, கிண்டல் செய்ய விரும்பும் ஏதேனும் ஆசாமியா. கார்லி வீட்டின் வாசலில் சாத்தானின் குறியீடான 666ஐ எழுதி வைத்தவன் யார்? இவர்களுடைய இணை விசாரணையின் பலன்/பலனின்மை, ரிச்சர்டின் அதீத ஆர்வம் வாசகனுக்குள் எழுப்பும் கேள்விகள் – துயர நிகழ்வை தனதாக்கிக் கொள்ளும் சுயநல விழைவோ? – நூலின் கதைசொல்லலுக்கு இன்னும் நம்பகத்தன்மையை அளிக்கிறது.

இதழியல் படித்த மகனின் ‘எழுத்தாளர்’ லட்சியத்தை சிறுமைப்படுத்தாத, அவன் இந்தக் கொலைகள் மீது அதீத ஆர்வம் கட்டுவது அச்சுறித்தனாலும், அதை தடை செய்ய முயற்சிக்காத ரிச்சர்டின் பெற்றோர்

குற்றவாளி பல்லாண்டுகளுக்குப் பின் கண்டுபிடிக்கப்படுகிறான். ஆனால் அது, மகளை இழந்தவர்களின் குடும்பத்திற்கும், ரிச்சர்டிற்கும், ஏதேனும் வகையில் 1988-89ஆம் ஆண்டுகளை முடிவுக்கு கொண்டு வரும் (closure) என்று கூற முடியாது. அவர்களுக்கும், வாசகனுக்கும் தெரிய வருவது ‘தீமையின் அற்பத்தன்மையை’ (banality of evil) தான் நினைவுறுத்துகிறது. கூடவே இந்த அற்பத்தன்மை, அழியாதது, வேறு வேறு உருவத்தில்  எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம் என்ற அயற்சியையும்.

பல ழானர் எழுத்தின் கூறுகளை கொண்டிருந்தாலும், Chasing the Boogeyman முற்றிலும் தனித்தன்மையுடைய ஆக்கம். நல்லெழுத்து, ழானர் எல்லைகளை கடந்து தனக்கான இருப்பை உருவாக்கி, தனக்கான இடத்தை நிறுவிக் கொள்ளும் என்பதை இந்த நூலின் மூலம் மீண்டும் உறுதி செய்கிறார் ரிச்சர்ட்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.