பேசுகிற கலப்பை -மலையாளம் மூலம்- பொன்குன்னம் வர்க்கி [ 1910 –2004] ஆங்கிலம் : நாராயண மேனன் தமிழில் : தி. இரா. மீனா

தி. இரா. மீனா

காளை என்று வருகிற போது, அவுசுப் சேட்டன் எல்லாவற்றையுமே மறந்து விடுவார். மற்ற விவசாயிகள் அவரை ’காளை பைத்தியம்’என்று அழைப்பார்கள். கண்ணனைப் பார்த்து அதியசப்படாத ஒரு விவசாயிகூட இல்லை. கண்ணன்தான் அவரது வாழ்க்கை. சாம்பல் நிறம், உறுதியான உடல்கட்டு, குள்ளம், வளைந்த கொம்பு, வடிவான கூனல், விரைப்பான தோல், பெரிய கண்கள், கண்ணனின் நடைகூட விசேஷமானதுதான். நடவு வயல், மற்றும் பிற இடங்களிலும் அவுசுப்பின் மனதில் என்ன இருக்கிறதென்பதைச் சிறிதும் சந்தேகமின்றி கண்ணன் புரிந்து கொள்வான். கருவிப் பட்டறை அல்லது வயல்வெளி என்று எந்த இடமாக இருந்தாலும் அவுசுப்பின் மனதில் என்ன ஓடுகிறதென்பது கண்ணனுக்கு நன்றாகத் தெரியும்.

கண்ணன் மேல் ஒருபோதும் அவுசுப் சாட்டையைப் பயன்படுத்தியதில்லை. அதை லேசாக உயர்த்துவார். மற்ற விவசாயிகளைப் போல, குரலுயர்த்தி தன் காளையை அழைப்பது, அது இது என்றெல்லாம் அவர் செய்ததில்லை. ஒரு சிநேகிதனிடம் பேசுவதைப் போலத்தான் அவர் கண்ணனிடம் பேசுவார். எவ்வளவு காளைகள் இருந்தாலும், அவைகளுக்கு கண்ணன்தான் தலைவன். வயலின் ஒரு பகுதியை உழுத பிறகு, அடுத்த பகுதிக்கான தூண்டுதல் அவனுக்குத் தேவையில்லை. அவை எப்படி, எப்போது செய்யப்பட வேண்டுமென்று அவனுக்குத் தெரியும். சில சமயங்களில், அடுத்த வயலுக்குள் அவன் காலெடுத்து வைக்கும் போது, அவுசுப் அவனிடம் ஓய்வு வேண்டுவார். “ஏய், கொஞ்சம் பொறு. நான் வெற்றிலை போட்டுக் கொள்கிறேன். போட்டு ரொம்ப நேரமாகிவிட்டது.”

அதைக் கேட்டவுடன், கண்ணன் நின்று விடுவான். வெற்றிலை போட்டுக்கொண்ட பிறகு, ’ஹூம்’ என்று அவுசுப் குரல் கொடுக்க,கண்ணன் மீண்டும் வேலையைத் தொடருவான். வயலின் ஒரு பகுதியில் இருந்து அடுத்த பகுதியில் கால் வைக்கும் போது எவ்வளவு கவனமாக அவன் வரப்பைக் கடப்பான்! அவனுடைய குளம்புகள் வரப்புகளில் பதியாது. ஒரு குதியலில் அவைகளை எப்படிக் கடப்பதென்ற கணக்கு அவனுக்குத் தெரியும்.

தன்னிடம் சொல்லப்பட்டவற்றை அவன் நன்றாகப் புரிந்து கொண்டிருப்பதால் அவனைக் கட்டிப் போட வேண்டிய அவசியமில்லை. உழவு வேலை முடிந்த பிறகு, சுதந்திரமாக மேய அவன் அனுமதிக்கப்படுவான். அப்படிச் சுதந்திரமாக விடும்போது அவுசுப், “போய் ஏதாவது சாப்பிட்டு உன் வயிற்றை நிரப்பிக் கொண்டு வா. வாழை மரங்கள் மீது கண் போடாதே,” என்று எச்சரிக்கை செய்வார். கடும் உழைப்போடும் கவனத்தோடும் பயிரிடப்பட்டிருக்கும் வாழை மரங்கள் அல்லது இளம் தென்னங் கன்றுகள் ஆகியவற்றை கண்ணன் ஒரு போதும் தொட மாட்டான். அவற்றை அழிப்பதென்பது, அதைப் பயிரிட்டவர்களை கொம்புகளால் முட்டுவதை விடக் கொடுமையானதென்று அவனுக்குத் தெரியும். அன்றைய உழவு வேலை முடிந்ததும், உடலில் இருக்கும் சேறு போகும்படி அவுசுப் தவறாமல் அவனைக் குளிப்பாட்டுவார்.

“இடது காலை இந்தப் பக்கம் உயர்த்து — ஏன் தலையை அசைத்துக் கொண்டேயிருக்கிறாய்? இங்கே பார், உன் கொம்புகள் என்னைத் தொட்டால் என்ன செய்வேன் என்று உனக்குத் தெரியும்! அசையாதே , பேசாமலிரு…”

அவுசுப்பின் ஒவ்வொரு வார்த்தையையும் கண்ணன் புரிந்து கொள்வான். ஆனால் கண்ணனுக்கு குறிப்பாக இந்தப் பேச்சு பிடிக்காது. குளிப்பதை அவன் வெறுத்தான். ஆனால் அவுசுப்பை பிடிக்கும் என்பதாலேயே அவன் பேசாமலிருந்து விடுவான். அன்பாலும் அரவணைப்பாலும் மனங்களை கவரத் தெரியாதவர்கள், “மோசமான எந்தக் காளை மாட்டை அவுசுப்பிடம் விட்டாலும், அவர் கையால் தரும் ஒரு வேளை உணவைச் சாப்பிட்டுவிட்டு, அது ஒரு வித்தியாசமான மாடாகி விடும்.” என்று சொல்வார்கள். அவர் அவைகளிடம் மிக இயல்பாகப் பேசுவார். தன் காளைக்காகத் தீவனம் தேடியலைவதிலேயே நாளின் பெரும்பான்மைப் பொழுது போய்விடும். கால்நடைகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்த தடுப்புச் சட்டம் பற்றிப் பேசினால், அவர் தன் பொறுமையை இழந்து விடுவார். ”கால்நடைகளைக் காப்பாற்றுங்கள், நாம் கால்நடைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று எல்லோரும் வகுப்பெடுக்கின்றனர். எந்தச் சபையிலிருந்தாவது அரசாங்கம் ஒரு பிடி அரிசியையாவது கொடுக்கிறதா? உங்கள் கால்நடைகளை உங்கள் தாடியால் காப்பாற்ற முடியுமா? ” என்று கேட்பார்.

கண்ணனுக்கு தீனி கொடுத்து முடித்த பிறகுதான் அவுசுப்பின் பசி தணியும். கால்நடைகள் பசியோடிருந்தால், குடும்பம் அழிந்து விடும் என்று நம்பினார். மரவள்ளியின் தண்டை கண்ணனுக்குக் கொடுக்கும்போது அதை நன்றாக மசித்த பிறகுதான் கொடுப்பார். அல்லது, அன்னாசி கொத்தைக் கொடுக்கும் போது முட்களை நீக்கி விட்டு, இலைகளைத் துண்டுகளாக்கிக் கொடுப்பார்

வயலில் சுற்றித் திரிந்து விட்டு கண்ணன் காம்பவுண்டிற்குள் நுழைந்த கணத்தில் “ஏ, கண்ணா” என்று குரல் கொடுத்தால், அவரது குரலைக் கேட்ட நொடியில் அங்கேயே நின்று விடும். அவுசுப் தன்னருகே வரும்வரை தலையைத் நிமிர்த்திக் கொண்டு காத்திருக்கும். கை நிறைய பசும்புல் அல்லது இரண்டு மூன்று வாழைப்பழத் தோல் –இப்படி ஏதாவது சின்ன பரிசோடு அவுசுப் அவனருகில் போவார். அன்பாக நீவி விடும் போது கண்ணன் அவரை நக்கத் தொடங்குவான். அந்த உப்பான வியர்வை கண்ணனுக்கு மிகவும் பிடித்தமானது.

எந்தக் கூட்டத்திலிருந்தாலும் அவுசுப்பின் குரல் கண்ணனுக்குக் கேட்டுவிடும். அதைக் கேட்டவுடன் இடியோசை கேட்ட மயிலாய் குதூகலிப்பான். வயலில் அவுசுப்தான் கலப்பை ஓட்ட வேண்டும் என்று விரும்புவான். அவுசுப் தவிர மற்றவர்கள் வந்தால் தன் கைவரிசையைக் காட்டுவான். அதைத் தடுப்பதற்கு, அவுசுப் வந்துதானாக வேண்டும்: “வேண்டாம் கண்ணன், இது நம்முடைய குட்டப்பன்தான். உனக்கு அவனைத் தெரியாதா என்ன?” என்று அவுசுப் சமாதானப்படுத்துவார். வயல்களில் ஓர் ஆலாபனை–வார்த்தைகளோ அல்லது வாக்கியங்களோ இல்லாத ஆலாபனை. அவுசுப் வானத்தை எட்டுமளவிற்கு குரலை உயர்த்தி அழகாகப் பாடுவார் :“ ஹோ… ஓ…ஓ… ஒன்றிரண்டு நிமிடங்கள் அந்த மெல்லிசை மிகத் தெளிவாக நிற்கும். அது, காதல் பாடல்களிலிருக்கும் இன்னிசை போல இருக்கும் குறிப்பாகச் சொல்லப் போனால் அது தெய்வீகமான பாடல் அல்லது ஆயர்பாடி இன்னிசையாக இருக்கும்.அவுசுப் பாடத் தொடங்கும் போது, கண்ணன் தன் நோய், வேதனை, வேலை எல்லாவற்றையும் அந்த இசையில் மறந்து விடுவான்.

கழுத்தில் இருக்கும் மணிகளும், குளம்புகளும் மண்ணில் புதைந்து தாளத்தை ஏற்படுத்தும். ஒரு நாள் வேடிக்கையான சம்பவம் ஒன்று நடந்தது. லேசான காய்ச்சல் இருந்ததால் அவுசுப் வீட்டில் படுத்திருந்தார். அவுசுப்பின் காளை மாடுகள் இல்லாமல் அண்டை வீட்டு பச்சனால் அன்று தன் வயலில் வேலை செய்ய முடியாது. அதனால் அவுசுப் கண்ணனையும், அவன் துணையையும் அனுப்பியிருந்தார். கண்ணனும், அவன் துணையும் மற்ற காளைகளோடு வயலுக்குள் நுழைந்தனர். பச்சன் ஒரு சுற்று உழுது முடித்துவிட்டான். இரண்டாவது சுற்றை ஆரம்பித்தவுடன் பச்சனுக்கு பாட வேண்டுமென்ற ஒரு வேகம் வந்து விட்டது; கண்ணனின் பின்னாலிருந்து ஒரு ராகத்தின் ஆலாபனையை ஆரம்பித்தான். இசை பற்றியெதுவும் தெரியாத அவனுக்கு ஏன் பாடவேண்டுமென்ற ஆசை வந்தது ?அவனுக்குப் பாடவேண்டும் என்ற ஆசை. அவ்வளவுதான். பரிதாபமாக அந்த இசை தொடங்கியவுடன், கண்ணனுக்கு வெறுப்பு வந்துவிட்டது. தன் எதிர்ப்பைக் காட்டுவதற்காக ,தன் தலையை இரண்டு புறங்களிலும் வேகமாக ஆட்டினான். பச்சன் இதை கவனிக்கவேயில்லை; அவன் தான் நன்றாகப் பாடுவதாக நினைத்துப் பாடிக் கொண்டிருந்தான். இசையைப் பொறுத்தவரை, தாங்கள் எவ்வளவு மோசமாகப் பாடுகிறோம் என்பதைக் கலைஞர்கள் உணர்வதில்லை. வெளிப்படையாகவே கண்ணன் தன் வெறுப்பைத் தொடர்ந்து காட்டிய போதும் பச்சன் பாட்டை நிறுத்தவில்லை. பச்சனின் நண்பர்களைப் பொறுத்தவரை, உலகத்தின் எல்லா ராகங்களும் அவர்களுக்கு ஒன்றுதான். கண்ணனுக்கு எந்த அனுதாபமும் அவர்களிடமிருந்து இல்லை. பச்சன் இசையை அவமதித்து விட்டான், கண்ணன் அவனது இடது காலில் ஓங்கி ஓர் உதை உதைத்தான். மூன்று நாட்கள் அந்தக் கலைஞன் வீட்டிலிந்து ஓய்வெடுக்க வேண்டியதாயிற்று.

பன்னிரண்டு வருடங்கள் கண்ணன் ஓய்வின்றி அவுசுப்பிற்காக உழைத்தான். பல வசந்தங்களும், இலையுதிர் காலங்களும், பனியும், குளிரும் என்று பல பருவங்கள் வந்து போயின. வீராப்புடன் தங்களைக் காட்டிக் கொள்ளும் வகையில் அரசாட்சி செய்தவர்களின் மகுடங்கள் பிரஜைகளின் முன் கீழே விழுந்தன. நம்பமுடியாத மாற்றங்கள் ஏற்பட்டன. அரசின் புதிய அமைப்பில்— மனிதன் மனிதனைச் சுரண்டக்கூடாது –என்பது போன்ற மகிழ்ச்சியான வாசகங்கள் எழுப்பப்பட்டன. ஆனால் தன் அன்புக்குரிய காளைகளை விற்க அவுசுப்பிற்கு சில கட்டுப்பாடுகளிருந்தன. ஏற்கனவே தன் அதிர்ஷ்டத்திற்குரிய நெல் வயலை அவர் அடமானம் வைத்திருந்தார். அதை விருப்பப்பட்டு வைக்கவில்லை. வேறு வழியில்லை, ஒரு தகப்பன். திருமண வயதைக் கடந்து விட்ட மகளின் அன்புத் தந்தை. மாப்பிள்ளை வீட்டார் ஏழையாக இருந்த போதும் மூவாயிரம் ரூபாய் வரதட்சணையாகக் கேட்டனர், தன் வயலை ஆயிரத்து ஐந்நூறு ரூபாய்க்கு அடமானம் வைத்து, வரதட்சணையைச் சமாளித்தார். ஆனால் திருமணச் செலவுகளுக்கு அதிகப் பணம் தேவையாக இருந்தது. அதனால் தனக்கு மிக அருமையானவைகளாக இருந்த காளைகளை விற்பதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லாமல் போனது.

இருபது வருடங்களாக கடுமையாக உழைத்த, நன்கறியப்பட்ட விவசாயி. ஆனால் என்ன பயன்? முடி நரைத்து விட்டது. கண் பார்வை மங்கிவிட்டது. எந்தக் கத்தியும் சதையைத் துளைக்க முடியாத அளவிற்கு அவர் கைகள் உழைப்பால் உரமேறியிருந்தன. சுருக்கங்கள். வாத நோய் சார்ந்த தொல்லைகள். அவரால் என்ன செய்யமுடியும்? ஐயாயிரம் ஆண்டு பழமையான நிலத்தில் அவர் உழைத்துக் கொண்டிருந்தார். மண் வளம் இழந்து விட்டது. எந்த உரமுமில்லை. கடைசியில் அவுசுப் ரிக் வேத பாடல்களின் நிலைப்பாட்டை நாடினார். தன் நிலத்தைக் காக்குமாறு மேகம், தண்ணீர், மலை, காற்று என்று எல்லா கடவுளரையும் வேண்டினார். பயனற்றுப் போன அந்த நீண்ட கால வழிபாடுகளிலிருந்து அவர் இன்னும் மீட்சி அடையவில்லை. ஆனால் கடைகள் அதிகரித்ததால் சுரண்டல்களின் வழியும் பலவாயின. இவ்வாறு அவரை அவமதிக்கும் நிகழ்வுகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே போனது.

கண்ணனை விற்ற போது அவுசுப் அந்த இடத்தில் இல்லை . விலைப் பத்திரத்திற்கான கட்டணத்தைப் பெறவேண்டியிருந்த போதிலும் அவர் கண்ணீரோடு அந்த இடத்தை விட்டுப் போய்விட்டார். எவ்வளவு பணம் தந்தாலும் நிறுத்த முடியாத அழுகை அது. அந்த இடத்தை விட்டுப் போவதையே கண்ணன் வெறுத்தான். தன் தலையைத் தூக்கி தன் எஜமானன், தன் வாழ்க்கையின் வாழ்க்கையானவன் அங்கிருக்கிறானா என்று சுற்றிலும் பார்த்தான். ஏதோ தவறாக இருக்கிறதென்னும் பாவனையில் ஒன்றிரண்டு முறை தலையைக் குனிந்து கொண்டான். அந்த நேரத்தில் பலா மரத்தினடியில் நின்று, அவுசுப் அமைதியாக வார்த்தைகளின்றி தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்தார். வார்த்தைகளையும், செயல் விளக்கங்களையும் அன்பு எதிர்பார்ப்பதில்லை. அன்பு, மனதின் துக்கம் என்பதை அவுசுப், கண்ணன் என்ற இருவர் போல யாரும் உணரமுடியாது. அவர்கள் தங்களின் துயரங்களை ஒருவரிடம் ஒருவர் சொல்லிக் கொள்ளவில்லை. அதனால் இரண்டு இதயங்களுக்குமே வலி மிக அதிகமாக இருந்தது.

தன்னுடைய சொந்த முகாமிலேயே ஆதரவற்றும், அவமதிப்பு செய்யவும் படுகிற ஒரு சிப்பாய் சில சமயங்களில் எதிரியைப் பார்க்க நேரிடலாம். தன் கிராமத்திலேயே கையற்றும் மதிப்பற்றும் போன சில விவசாயிகள் அறியாத, கேட்டிராத வயநாடு’ நிலங்களைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தனர். உறவினர்களையும், நண்பர்களையும் அணுக முடியாத நிலை. மலேரியா தன் கொடுமையைப் பரப்பிக் கொண்டிருந்த நேரம். “இவற்றை எல்லாம் தெரிந்து கொண்ட பின்பும், உன்னை அங்கே போக நாங்கள் அனுமதிப்போமா அவுசுப்?” என்று கேட்டார் பக்கத்து வீட்டுக்காரரான கிட்டு சார். மலபாரைப் பற்றியும் அவுசுப் விசாரித்துக் கொண்டிருந்தார்.

“நான் என்ன செய்வேன் கிட்டு சார்? உயிரோட்டமான ஒரு சிறு நிலத்தை எனக்குத் தாருங்கள். மண்ணின் மணத்தை என்னால் சுவாசிக்க முடியாதெனில் ,என் மனம் சாம்பலாகிவிடும்,” என்றார்.

அவுசுப்பின் வாழ்க்கை, வேதனையான ஒரு வாழ்க்கை, சலித்துப் போன சிறகாய் நகர்கிறது. அவருடைய மலபார் பயணம் தினமும் தடைப்படுகிறது. அது மட்டுமில்லை, தன்னிடம் இப்போது இருக்கிற ஏழு சென்ட் நிலத்தையும் நல்ல விலைக்கு விற்க விரும்புகிறார். இன்னொரு பிரச்னை, அவுசுப்பின் மகள் கேத்ரி கர்ப்பிணியாயிருக்கிறாள். தன் முதல் பேரக் குழந்தையையும், அதன் பிஞ்சு முகத்தையும் பார்க்க அவர் ஏங்குகிறார். ஈஸ்டரும் வரப்போகிறது. ஏழ்மையான கிறிஸ்தவர்களின் வீடுகளில் கூட இந்த நாள் மிக மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். ஒவ்வொரு அடுப்படியிலிருந்தும் சமைக்கப்பட்ட கறியின் அருமையான மணம் வெளிப்படும் நாள் இது. வாணலியில் பொரியும் அப்பங்கள், மயக்கம் தரும் வாசனையை எங்கும் பரப்பும். தேங்காய், கறிவேப்பிலை சேர்க்கப்பட்ட சூடான புழுக்கல் கறியின் மணம் எங்கும். இதுதான் மகிழ்ச்சி. இந்த நாளில் இவை இல்லாமல் கூட சில வீடுகள் இருக்கும். ஆனால் அவுசுப் எதற்காகவோ ஏங்கி அங்கே உட்கார்ந்திருந்தார். அருகிலுள்ள வயலில் யாரோ உழுது கொண்டிருந்தனர். உழவனின் அருமையான குரலையும் அவரால் கேட்க முடிந்தது. அது அவரது மனதை, ஒரு விவசாயியின் மனதை வருத்துவதாக இருந்தது. ஒட்டடை படிந்திருந்த, உயரத்தில் மாட்டியிருந்த தனது கலப்பையைப் பார்த்த போது நெஞ்சு கனத்தது. கண்ணனைப் போன்ற ஜோடிக் காளைகள், ஐந்தாறு ஏக்கர் நல்ல நிலம், இந்தக் கலப்பையின் பயன்பாடு இனி வாழ்க்கையில் அவருக்கு இன்னொரு முறை கிடைக்குமா ?அந்த மாதிரியான அதிர்ஷ்டமான நாள் தனக்குக் கிடைக்குமா என்று நினைத்தார்.

“எவ்வளவு நேரம் இப்படி இருக்கப் போகிறீர்கள்? நடந்தது நடந்து விட்டது. கோட்டயத்திற்குப் போகவேண்டாமா? மகளை அனுப்பி வைக்க வேண்டாமா? அப்பாவாக அதையெல்லாம் செய்ய வேண்டுமல்லவா?” மனைவி மரியா கேட்டாள்.

அடுத்த நாள் மகளை கணவன் வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும். அவளுக்குக் கொடுக்க வேண்டிய புது உடைகளை இன்னும் அவர் கொடுக்கவில்லை. கொடுக்க வேண்டாமென்பதில்லை; கையில் பணமில்லை. அவளுடைய மாமியாரும் நாத்தனார்களும் அவளைக் கிண்டலாகப் பேசுவார்கள். மகள்தான் தாயிடம் இதையெல்லாம் சொன்னாள். தாய் வீட்டிலிருந்து மூன்று துண்டு ஆடைகள், பாடிகள் அவளுக்குத் தர வேண்டும். மற்றவைகளை அவர் விட்டு விடலாம். அது பற்றி யோசிக்க வேண்டியதில்லை. அதற்காக கவலைப்பட்டுக் கொண்டிருந்த போது அதிர்ஷ்டம் ஒரு கோடாக அவர் பக்கம் வந்தது. மரியா தான் போட்டிருந்த இருபது ரூபாய் சீட்டோடு வந்தாள். அந்த சீட்டைக் கட்டுவதற்காக அவர்கள் ஒவ்வொரு அரிசியையும் மிக கவனமாகப் பயன்படுத்தி, தங்கள் வயிற்றைக் கட்டி வந்திருக்கின்றனர். மரியா அந்தப் பணத்தோடு அவரருகில் வந்தாள்.

அவரால் அதைச் செய்திருக்க முடியாது, ஆனால் அதை அவள் சாத்தியப்படுத்திவிட்டாள். கடைக்குப் போவதற்காக அவர் எழுந்தபோது, “அப்பா, ரவிக்கைத் துணி கொஞ்சம் கனமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்,” கேத்ரி எச்சரித்தாள்.

“நாம் இன்னும் நில வரி கட்டவில்லை. அதையும் கட்டி விடுங்கள்,” என்றாள் மரியா.

“நீ அரசாட்சியே செய்ய நினைப்பாய்,இதை வைத்துக் கொண்டு.” என்றார் அவுசுப்.

“நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், எனக்கு ஒரு துண்டு உடை வேண்டும். இடுப்பாடை கிழிந்து விட்டது,” என்றாள் மரியா.

“ஒன்று செய். நீயே போய் விட்டுவா. நான் அடுப்படியைக் கவனித்துக் கொள்கிறேன்.”

“அப்படியானால் உங்கள் தாடியையும் கொடுத்து விடுங்கள்,” என்று மரியா சொன்னாள்.

“ஆமாம், எனக்கு தாடி இருக்கிறது. ஆனால் கடன் தரும்படியான விவகாரம் எனக்குத் தேவையில்லை. உனக்கு தாடியிருந்தால், திருச்சபையில் நீ ஒரு ஆணைக் கூட விட்டு வைத்திருக்க மாட்டாய்,” என்று உறுமினார்.

குடையை கக்கத்துக்குள் வைத்து, தோளில் துண்டைப் போட்டுக் கொண்டு, இடுப்பில் வெற்றிலையைச் சொருகியபடி அவர் கிளம்பினார். ஈஸ்டர் கொண்டாட்டத்தின் உற்சாகமும், கலகலப்பும் கோட்டயத்தில் சிறிதும் குறைந்ததாயில்லை. கிறிஸ்தவக் கடைகள் எதுவும் திறந்திருக்கவில்லை. ஆனால் நிறைய துணிக் கடைகளிருந்தன. ஒன்றிரண்டு கடைகளுக்குள் போய் துணிகளின் தரத்தையும், விலையையும் விசாரித்தார்.

“கடவுளே ,என்ன விலை!” ஆடைகளின் மிக அதிகமான விலையைப் பார்த்த ஒரு முதியவரின் அபிப்பிராயம் இது. “எதுவாக இருந்தாலும் இரண்டு மூன்று கடைகளில் விசாரிக்கிறேன். ஓரணா குறைவு என்றாலும் அது எந்தக் கடையில் என்று யாருக்கும் தெரியாது,” என்று சொல்லிக்கொண்டே மற்ற கடைகளைப் பார்த்து நடந்து, மாநகராட்சிக் கட்டிடத்தின் கேட்டை அடைந்தார். அங்கே, கிணற்றுக்கு அருகே பல காளைகள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. அவற்றின் உடலிலுள்ள ஒவ்வொரு எலும்பையும் எண்ணி விடலாம். வாழ்வின் இறுதிக்கு வந்து விட்ட முதிய காளைகள்; முறிந்த வாலோடு சில ; பல வருடங்கள் கழுத்தில் வண்டியைச் சுமந்திருந்ததால் அந்த அடையாளங்களோடு சில; மிக வளைந்து விட்ட கொம்புகளுடன் சில; மனிதனின் அன்பை வாழும் உயிர்களிடம் வெளிப்படுத்தத் தெரிந்தவை சில- இம்மாதிரி இயல்புடைய காளைகள் இருந்ததை நம்மால் பார்க்கமுடியும். மாநகராட்சியின் கருப்பு முத்திரை ஒவ்வொன்றின் உடம்பிலும் சாவின் அடையாளத்தைக் காட்டுவதற்காக குத்தப்பட்டிருந்தது. அவைகளிடம் மிஞ்சியிருக்கிறவைதான் ஈஸ்டர் விழாவிற்கு கறியாகப் போகிறவை. முத்திரை குத்தப்படாத விலங்கைக் கொல்பவர்கள் மீது மாநகராட்சி கடும் நடவடிக்கை எடுத்தது.

எல்லாவற்றிற்கும் தலைமையான மாநகராட்சி பொது மக்களின் உடல்நலம் குறித்து கவனம் எடுத்துக் கொண்டதால் இந்தச் சோதனை கட்டாயமானதாக இருந்தது. இந்தச் சோதனையில் மனிதனுக்கு அபாயம் விளைவிக்கும் எந்த விலங்கையும் இரக்கமின்றி கசாப்புக் கடைக்காரர்கள் வெட்டித் தள்ளினார்கள். இந்த விஷயத்தில் அவுசுப் மாநராட்சிக்கு ஆதரவு தருபவர். துன்பத்திலிருந்து அவைகளை விடுவிப்பதான இந்தச் சாவு பெரும்பாலான காளைகளுக்கு மிகப் பெரிய நிம்மதி. அவைகளால் முடிந்தபோது நேரம் காலமின்றி உழைத்தன. பலவீனமாகும்போது, கொடூரமாகவும், முறைகேடாகவும் அவற்றின் விதி அமைகிறது. கொடுமைக்கும் , அவமதிப்புக்கும் ஆளாவதற்கு முன்னால் சாவு எவ்வளவு உயர்வானது! அங்கு நின்று அவைகளைச் சிறிது நேரம் பார்த்தபோது மனம் வலித்தது. மொத்தமாக நாற்பது தலைகள் இருந்தன, தர அடையாளத்திற்காக இன்னும் பல காளைகளை விவசாயிகள் கொண்டு வந்துள்ளனர். அவைகளை வேதனையோடு பார்த்துவிட்டு அவர் புறப்பட்டார்.

திடீரென அவுசுப்புக்கு நடுக்கமேற்பட்டது. நம்பமுடியவில்லை. தன் கண்பார்வைக் குறைவு தன்னை ஏமாற்றுகிறதோ என நினைத்தார். எலும்பும், தோலுமாக ஒரு விலங்கைப் பார்த்தவுடன் மனம் நலிந்து, கண் முன்னால் எல்லாம் இருட்டாய்த் தெரிந்தது. ஆமாம், அது கண்ணன்தான். நடுங்கிப் போனார்.

“கண்ணன்!” அடி நெஞ்சிலிருந்து கத்தினார். ஒரே குதியலாக அதனருகில் ஓடினார். ஆறுதலையும் அன்பையும் தருவதாக இருந்த குரல்.. அந்தப் பெரிய கட்டிடத்தின் முன்னால் கண்ணன் தலை குனிந்து நின்றிருந்தான். வாழ்வின் நடப்பு நிகழ்வு அவன் காதுகளில் எதிரொலித்தது. தலையைத் தூக்கிச் சுற்றுமுற்றும் பார்த்தான். “உனக்கு என்னை அடையாளம் தெரிகிறதா மகனே? நான் இப்படியான நிலையில் உன்னைப் பார்க்க வேண்டுமா?” அவுசுப் கண்ணனைத் தழுவி, அதன் உச்சியை நீவினார். அந்தக் கைகளின் ஸ்பரிசம் பட்டதும் அது வாலை உயர்த்தியது. வாயால் அழாமல், மனதால் அழுதது. கண்ணனின் உடலில் தர அடையாள விவரமிருக்கிறதா என்று பார்க்க விரும்பினார். ஆமாம், அதன் முன்னங்காலில், அது இருந்தது. அதை அழித்து விட விரும்பினார்.
ஆனால் நகராட்சியின் கருப்பு அடையாளத்தை அவ்வளவு சீக்கிரமாக அழித்து விட முடியாது.

வயிற்றுப் பகுதியில் சீழ் பிடித்த காயமிருந்தது. அதைச் சுற்றி ஈக்கள் மொய்த்தன.

“ஒரு காலத்தில் இந்தக் காளை உங்களுடையதாக இருந்ததல்லவா?’ கசாப்பு கடைக்காரர்களில் ஒருவர் கேட்டார்.

“நீங்கள்தான் அவனை இங்கு அழைத்து வந்தீர்களா ”அவுசுப் கேட்டார்.

“ஆமாம்.”

கண்ணன் தன் எஜமானனின் வியர்வை நிறைந்த உடலை நக்கினான். வாழ்வின் பெரும் பகுதியில் அந்த வியர்வையை அவன் குளிர வைத்திருக்கிறான். தனது கடைசி நேரத்திலும் அவன் வியர்வையை நக்குவான். அது அவனுக்குச் சுவையானது என்பதோடு மட்டுமல்லாமல் அவன் வாழ்வின் ஓர் அங்கமுமாகும். அந்த முதிய விவசாயியின் சூடான கண்ணீர் கண்ணனின் முகத்தில் விழுந்தது.

“நாம் போகலாம். நேரமாகி விட்டது. நான் இந்த இறைச்சியை கடையில் கொடுத்தாக வேண்டும்,” கடைக்காரர் மற்றொருவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அவர்களில் ஒருவர், கண்ணனோடு சேர்த்து இரண்டு ,மூன்று காளைகளை கூட்டிச் சென்று விடுவார். ஆமாம், இன்னும் ஓரிரு மணி நேரத்தில் கண்ணன் ஈஸ்டர் விருந்துக்கு கறியாகி விடுவான்.

இருட்டிக் கொண்டிருந்தது. “விளக்கை ஏற்றுவதற்கு முன்னால் இந்த இடத்தைச் சுத்தம் செய்து விடு,“ என்று மரியா தன் மகளிடம் சொன்னாள். அவர்கள் அவுசுப்பின் வரவிற்காக காத்திருந்தனர்.

“அப்பா வர ஏன் இவ்வளவு நேரமாகிறது ?”மகள் கேட்டாள்.

“வேலையை முடித்துக் கொண்டு வருவார். வரட்டும்,” மரியா மகளை அமைதிப்படுத்தினாள்.

“அவர் கோட்டயத்திற்குப் போயிருந்தால் இதற்குள் திரும்பியிருக்க வேண்டும்,“ தனது புத்தாடைகளுக்காக காத்திருந்த மகள் பொறுமையின்றி பேசினாள். அவள் கண்கள் சாலையின் மேலேயே பதிந்திருந்தன. மரியாவின் கண்களும்தான். அவுசுப் வருவதாகத் தெரியவில்லை. விளக்கை ஏற்றினர்.

மகள் பார்த்து விட்டாள். “அப்பா, ஆமாம், அப்பாதான்,” மகள் உற்சாகமாகச் சொன்னாள். தான்தான் அப்பாவை முதலில் பார்த்தோம் என்று மகிழ்ந்தாள். அம்மாவும், பெண்ணும் ஒரே சிந்தனையில் நின்றனர்.

“அது அவுசுப்பா?” பக்கத்து வீட்டுக்காரரான மாத்யூ கேட்டார். அவர் ஒரு தையல்காரர். இன்றிரவிற்குள் மூன்று ரவிக்கைகளைத் தைத்தாக வேண்டும். கேத்ரி காலையில் கிளம்புகிறாள். எல்லாவற்றையும் இரவில் முடித்து விடவேண்டுமென்பதால் மாத்யூவும் தயாராக இருந்தார்.

தனது புத்தாடைகளைப் பார்க்க வேண்டுமென்று காத்திருந்த அந்தக் கண்கள் அவுசுப் கண்ணனோடு நுழைவதைப் பார்த்தன.

“ஆ.. அது கண்ணன்தான்,” கேத்ரி வியப்பாகச் சொன்னாள்.

“எங்கே புதுத்துணி? இதுதான் நீங்கள் வாங்கி வந்ததா?”மரியா கேட்டாள். கண்ணன் தனது பழைய இடத்திற்குப் போய் நின்றான்.

அவர்கள் பல கேள்விகள் கேட்டனர், குரல்கள் உயர்ந்து கொண்டே போயின. தாடையில் கை வைத்தபடி அமைதியாக அவுசுப் உட்கார்ந்திருந்தார்.மரியா விரக்தியோடு தலையை ஆட்டினாள். கேத்ரி துக்கம் தாங்க முடியாமல் அழுதாள். அவுசுப் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அவர் உடல் வியர்வைக் குளமானது.

“அப்பா, நீங்கள் இப்படிச் செய்வீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை,” கேத்ரி அழுதுகொண்டே சொன்னாள்.

“மகளே,” குரல் தழுதழுக்க, “கண்ணனும் நீயும் எனக்கு ஒன்றுதான். கசாப்புக் கடைக்காரர்…” துண்டால் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டார். அந்த வாக்கியத்தை முடிக்க முடியவில்லை.

அந்த இரவு கொடியதான ஓர் இரவு. தூங்காமலே அவர்கள் இரவைக் கழித்தனர்.

பொழுது விடிந்தது. கண்ணனின் வயிற்றுப் பகுதியிலிருக்கும் சீழ் புண்ணிற்குத் தானே தயாரித்த மருந்தை எடுத்துக் கொண்டு அவுசுப் மாட்டுக் கொட்டகைக்குப் போனார். காளைகளுக்கான வியாதிகளுக்கு அது மிக நல்ல மருந்து. “உன் கால்களை நீட்டு, தலையைத் தூக்கு,” என்று படுத்துக் கொண்டிருந்த கண்ணனிடம் சொன்னார்.

“கண்ணன்!” கூப்பிட்டார். கண்ணன் இனி எழுந்திருக்கவே மாட்டான் . அவுசுப்பின் மனம் கரைந்தது. அவுசுப்பின் குடும்பம் அவரைக் காயப்படுத்துவதை அவனால் பொறுக்க முடியாமல் போயிருக்கலாம். இந்த உலகை விட்டு அவன் போக அது காரணமாக இருந்திருக்கலாம். கண்ணனின் உடல் ,நொறுங்கிப் போன அவுசுப்பின் மனம்… மேலே ஒட்டடை படிந்து கிடந்த கலப்பையின் மேலிருந்த ஒரு சிறிய பல்லி சோகமாக குரல் கொடுத்தது.
—————————————————————-

நன்றி : Contemporary Indian Short Stories Series 1,Sahitya Akademi

கவிதை, சிறுகதை,நாடகம், கட்டுரை திரைப்படம் என்று பல துறைகளில் பங்களிப்புச் செய்திருக்கும் பொன்குன்னம் வர்க்கி மலையாள இலக்கிய உலகின் மிகச் சிறந்த படைப்பாளியாக மதிப்பிடப்படுகிறார். சமூக அக்கறை, சமூக அநீதிக்கு எதிரான சமரசமற்ற எழுத்து இவருடையது என் விமர்சகர்கள் மதிப்பிடுகின்றனர். வள்ளத்தோள், எழுத்தச்சன், லலிதாம்பிகா மற்றும் முட்டத்து வர்க்கி விருதுகளைப் பெற்றவர். நிவேதனம், தாகம், வெளியில் எனக்கு ஸ்தலமில்லை, பேசுகிற கலப்பை உள்ளிட்ட சிறந்த சிறுகதைகளை எழுதியவர்.
———————————————————————

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.